Sunday, August 4, 2013

பாரதியும் பாவேந்தரும் -பகுதி 2

மனித நேயம் மிக்கவன். தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில், ஜெகத் தினை  அழித்திடுவோம் என்றான். அனைத்து இயற்கையையும் நேசித்தான்.
சாதி என்ற உணர்வுக்கு அப்பாற்பட்டவன். அவன் பிறந்தது பார்ப்பனர் குலம். ஆனால், இவன் பிராமண சாதியில் பிறந்து, பிராமண குலத்துக்கே கேடு செய்து விட்டான் என்று அவனைப் புறக்கணித்தார்கள். வாழ்நாளெல்லாம் இரு தரப்பிலும் தீண்டாமைக்கு ஆளானவன் முண்டாசுக் கவிஞன்.அந்தக் குறை யைப் போக்குவதற்குத்தான், எங்கள் திராவிடத்தின் தேசியக் கவிஞன் கனக
சுப்புரத்தினம், பாரதி மறைந்ததற்குப் பிறகுதான், தன் பெயரை ‘கே.எஸ். பாரதி தாசன்’ என்று முதன்முதலாகக் குறிப்பிட்டு, பத்திரிகைக்கு எழுதி அனுப்பி னார். பாரதியின் உணர்வோடு தன்னுடைய கவிதைகளைப் படைத்தார். ‘ஒரு
மனிதன் தேவைக்கே இத்தேசம் உண்டென்றால்,அத்தேசம் ஒழிதல் நன்றாம்’ என்றார்.
பாரதி, காக்கை குருவிகளையும் நேசித்தான் அல்லவா, வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்தவன் பாரதி. பசியோடுதான் அவனும், செல்லம்மாவும் வாழ்ந்தார்கள். அந்நாள்களில் இருந்த பால்ய விவாகம் என்ற நடைமுறையில்,
அவன் செல்லம்மாளைச் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டு இருந் தாலும், அவரை உயிராக நேசித்துப் பூசித்தான். இருவரும் காதல் வாழ்க்கை வாழ்ந்தனர். ஜல் ஜல் என்ற சலங்கையின் ஒலி கேட்க, இரட்டைக் காளைகள்
பூட்டப்பட்ட வண்டியினுடைய வண்ணத்திரைகள் மூடி இருக்க, ஒரு முகமதி யர்தான் வருகிறார் என்று சொன்னவுடன், மனம் துணுக்குற்றுக் கிடந்த செல் லம்மா, சுப்பையா வந்து விட்டாயாடா என்ற வாறு குடும்பத்தினர் அவனை அள்ளி அணைத்துக் கொண்டு இருந்ததைப் பார்த்த போது, அவள் நெஞ்சிலே தேனாறு பாய்ந்தது என்று நான் படிக்கின்றேன்.

எத்தனையோ துன்பங்களுக்கு மத்தியிலும் அவர்கள் இன்பமாக வாழ்ந்தார்கள். உலையிலே போட அரிசி இல்லை. கடன் வாங்கிக் கடையில் அவள் அரிசி பெற்றுக் கொண்டு வருகின்றாள்.அந்த வேளையில் குருவிகள் சத்தமிட்டுக்
கொண்டு அங்கே வருகின்றன. அதைப் பார்த்தவுடன், அவைகளுக்குப் பசிக் குமே? அவற்றின் பசியைப் போக்க வேண்டாமா? என்று கருதினான். அந்த அரிசியை, குருவிகளுக்குப் போட்டு மகிழ்கிறான் பாரதி. கருணையைப் பற்றி
அவன் பேசியது மட்டும் அல்ல, வாய்ச்சொல் வீரன் அல்ல, கருணை உள்ளத் தோடு வாழ்ந்து காட்டியவன். அதனால்தான், அந்தத் தானியங்களை, அரிசி மணிகளைக் குருவிக்குப் போட்டு மகிழ்ந்தான்.

ஒருமுறை அவன் சொல்லுகிறான். தினந்தோறும் ஒரே உணவைத்தான் சாப் பிட வேண்டியது இருக்கின்றது. கீரைக் கடைசலும், கீரைக் குழம்பும்தான். என வே, ஒரு நாள் பட்டினி கிடந்தால், மறுநாள் அதுவே கொஞ்சம் சுவையாக
இருக்கும் அல்லவா? அதனால் பட்டினி நோன்பு என்கிறான்.

உடனே பாரதி தாசன் சொல்லுகிறார்: ஆமாம்; என்ன இருந்தாலும், ஒரே மாதிரி யான காய்கறிகளைத்தானே நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம்; தெவிட்டிப் போகிறதே? எனவே, தெவிட்டாத ஒரு காய்கறியை நாமே கண்டு
பிடித்தால் என்ன? என்று.

பாரதி சொல்லுகிறான்: தெவிட்டாததா? ஞானி களுக்கு, அவர்கள் வழிபடும் ஆண்டவன் உணர்வு தெவிட்டாதது; எனக்கு, செல்லம்மாதான் தெவிட்டாதது.

இதைக் கேட்டுக் கொண்டு இருந்த செல்லம்மா சொல்லுகிறாள், நானும் பட் டினி நோன்பு இருக்கிறேன். எனக்கு இரண்டு வகையில் லாபம்.ஒன்று, உண வுக்கான செலவு மிச்சம்; இன்னொன்று, சமையல் வேலை மிச்சம்.

உடனே இவன் சொல்லுகிறான், பட்டினி நோன்பு தொடங்கியாச்சா? இங்கே நான் தொடங்கி விட்டேன்.

செல்லம்மா பதிலுக்குக் குரல் கொடுக்கிறார்: கொடி கட்டியாகி விட்டது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த பாரதிதாசன் எழுதுகிறார்: மார்க் சும், ஜென்னியும் போல வாழ்ந்தார்கள் என்று.



கவிஞர் வாலி கூறியதாக, என்னுடைய நண்பர் மை.பா. நாராயணன் என்னிடம் தெரிவித்தார்.பாரதியார் மறைந்து விட்டார். திருச்சிக்குச் செல்லுகிறார் பாரதி தாசன். அங்கே செல்லம்மாள் இருக்கிறார்கள். அவரைப் பார்க்கச் செல்லு கி றார்.அது அக்கிரஹாரம்; அங்கே நாம் ஏன் போக வேண்டும்? என்று அவரு டை ய தோழர்கள் சிலர் சொல்லுகிறார்கள். பாரதியின் வாழ்வாகவே,அவரது நினை வாகவே திகழுகின்ற செல்லம்மாளைக் காண வேண்டும் என்று சொல்லி, அங்கே போகிறார்கள். செல்லம்மாளைப் பார்த்தவுடன், அவரது காலில் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கினார் சுயமரியாதை இயக்கத்தின்
வேங்கையாகத் திகழ்ந்த பாரதி தாசன்.

உடன் சென்று இருந்த தோழர்கள் திரும்பி வருகின்றபோது, என்ன இப்படிச் செய்து விட்டீர்கள்? என்று குறைபட்டுக் கொள்கிறார்கள்.நீங்கள் போய் அவர் காலில் விழலாமா? என்று கேட்கிறார்கள்.

போங்கடா; மகாகவி பாரதியை முழுதாகக் கண்டவளும், உணர்ந்து கொண்ட வளும் அவள் ஒருத்திதான் என்றார் பாரதி தாசன். இதை, கவிஞர் வாலி பதிவு செய்கிறார். அப்படிப்பட்ட வாழ்க்கையை நடத்திய அந்தக் கவினுக்கு, போராட் டங்களே நிறைந்த, துன்பங்களும், துயரங்களும், வறுமையும் வாட்டிக் கொண்டு இருந்த நிலையிலும், இந்த மொழியின் உயர்வுக் காகப் பாடல்களை இயற்றினான். இயற்கையை வர்ணிக்கிறான். உரிமைக்காகக் குரல் கொடுக் கிறான்.

அவனுடைய வாழ்க்கையின் இறுதிக் கட்டம். 1921 ஆம் ஆண்டு ஜூன் மாதம். வழக்கம்போல, திருவல்லிக்கேணி கோவில் வேழத்துக்கு வாழைப்பழத்தைக் கொடுக்கச் சென்றபோது, அந்த யானை தன் துதிக்கையால் தாக்குகிறது. காய முற்றுக் கீழே விழுகிறார். சிகிச்சைபெறுகிறார். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் உடல் நலம் பெற்று விடுகிறார். தேறிவிட்டதாகச் சொல்லுகிறார். புதுவையில் இருந்து பாரதிதாசன் கவலையோடு, பாரதியின் உடல் நலத்தை அறிய விழைந்து மடல் எழுதுகிறார். நான் தேறி விட்டேன் என்று இவர் கூறியதை அவர் நம்பவில்லை. எனவே, நான் நம்ப மாட்டேன்.நீங்கள் நன்றாகத்தேறிவிட் டீர்கள் என்றால், ஒரு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என்கிறார். அதற்காக பாரதி, இந்த அண்ணாமலை மன்றம் அமைந்து இருக்கின்ற இந்த பிராட்வே பகுதிக்கு வருகிறார். ரத்னா ஸ்டுடியோவுக்குப் போகிறார்.தலையில் முண்டா சு கட்டிக்கொண்டு ஒரு புகைப்படம் எடுக்கிறார். நாம் இன்றைக்குப் பார்த்துக் கொண்டு இருப்பது, அந்தப் படத்தைத் தான். பாரதி தாசனுக்கு அனுப்புவதற் காக, பாரதி எடுத்துக் கொண்ட படம் அது. அனுப்பி வைக்கிறார்.

செப்டெம்பர் ஒன்றாம் தேதி வயிற்றுக்கடுப்பு,வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலும், ஈரோட்டுக்குப் பக்கத்தில் கருங்கல்பாளையத்துக்கு உரை ஆற்றச் செல்லுகிறார். அந்தப் பேச்சின் தலைப்பு விசித்திரமாக இருக்கின்றது. ஆம்; மனிதனுக்கு மரணம் இல்லை என்ற தலைப்பில்தான், பாரதி தமது இறுதி உரையை ஆற்றினார்.

வ.வே.சு. அய்யர், வழக்கு தொடர்பாக, பாரதியைப் பார்க்க வருகிறார். என்ன பாரதி, நீ மருந்தே சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே?; இல்லை, நான் சாப்பிடு கிறேன் என்கிறார்.

பரலி சு. நெல்லையப்பர் வருகிறார்: பாரதியைச் சந்தித்ததைப் பற்றித் தமது குறிப்பு ஏட்டில் எழுதி வைத்து இருக்கின்றார். “நான் பாரதியைக் காணச்சென்று இருந்தேன். அவர் என்னிடம், நான் 12 ஆம் தேதி, சுதேசமித்திரன் அலுவலகத் துக்குப் போவேன். ஆப்கானிஸ்தான் மன்னர் அமானுல்லா கானைப் பற்றி, பிரிட்டிஷ் சர்க்கார் கறுவிக் கொண்டு இருக்கின்றது. அதைக் கண்டித்து ஒரு
கட்டுரை எழுதி, அதைப் போடச் சொல்லு வதற்காகச் செல்ல இருக்கிறேன்’ என்று சொன்னார் எனக் குறிப்பிடுகிறார். 11 ஆம் தேதி, மிக உடல் நலிவுற்ற நிலையில், மின்விசிறி கூட இல்லாத அந்த அறைக்கு உள்ளே, மங்கலான விளக்கு வெளிச்சத்தில், கிழித்துப் போட்ட நாராகக் கிடக்கின்றான் கவிஞன்.

அன்றைய நாளைப் பற்றி, அவரது இளைய மகள் சகுந்தலா, கண்ணீரோடு பதிவு செய்து இருக்கிறார்.அப்பாவுக்கு மிகவும் உடல் நலம் குன்றி விட்டது.
அம்மா என்னை அழைத்து, மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறார், நீ போய்க் கொடுத்தால்,அப்பா சாப்பிடுவார் என்றார். அதை வாங்கிக் கொண்டு அப்பா வுக்கு அருகில் சென்றேன். டம்ளரில் ஊற்றி, அப்பா சாப்பிடுங்கப்பா என்று
கொடுத்தேன். அதை வாங்கி ஒரு மடக்கு குடித்து விட்டு, அம்மா அது மருந்து அல்ல, கஞ்சி; வேண்டாம் என்று சொல்லிக் கையை அசைத்து விட்டு, கண் களை மூடிக் கொண்டார். அவர் தூங்கட்டும் என்று கருதி, நான் வெளித்
திண்ணைக்கு வந்து விட்டேன். அன்று இரவு ஒன்றரை மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. நடுநிசி கடந்து விட்டது.

மறுநாள், பாரதியின் உயிர் அற்ற சடலத்தைத் தூக்கிச் சென்றவர்கள் மொத்த மே பதினோரு பேர்கள்தாம். ஆனால், ஆயிரமாயிரம் ஆண்டு களுக்கு, காலத் தை வென்று நிற்கக்கூடிய கவிதை களைத் தந்து இருக்கிறார்.

இயற்கையை எப்படி வருணிக்கின்றான் தெரியுமா? வானத்து நட்சத்திரங் களைப் பார்க்கின்றபோது, அவனது மனதுக்கு உள்ளே எத்தகைய எண்ணங்கள் ஏற்படுகின்றன? தன் செல்லம் மாவை நினைத்துக் கொண்டே, கண்ணம்மா வைப் பாடுகிறான்.

சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா,
சூரிய சந்திரரோ?

உன் விழிச்சுடர் என்பது, அனலாக வெயிலைத் தருகின்ற பகலவனா? அல்லது, தண்ணொளி பரப்புகின்ற நிலவா? 

வட்டக் கரியவிழி கண்ணம்மா 
வானக் கருமை கொல்லோ? 

உன் கண்ணின் கருமையை, இருண்டு கிடக்கின்ற வானத்தில் பார்க்கின்றேன்.

பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல்வயிரம் 

அந்தக் காலத்தில், பட்டுச் சேலை எடுக்கச் சென்றால், நல்ல கருநீலப் பட்டுப் புடவையில்,ஜரிகை போட்ட சேலையை விரும்புவார்கள்.அப்படி, பட்டுக் கரு நீலப் புடவையில் பதித்த நல் வைரம், நட்டநடுநிசியில் தெரியும் நட்சத்திரங்
களடி என்கிறான்.

நிலவூறித் ததும்புகின்ற விழிகள் என்கிறான்.குன்றென நிமிர்ந்து நில் என, புதிய ஆத்தி சூடி தருகிறான். அவ்வையார் ஒரு ஆத்தி சூடி சொன்னார். பாரதி தாசன் அதற்கு மாறுபட்டுச் சிலவற்றைச் சொல்லுகிறார்.

மீதூண் விரும்பு;
மானம் போற்று;
குன்றென நிமிர்ந்து நில்;
தோல்வியில் கலங்கேல்;

இந்தச் சொற்களை எல்லாம் தருகின்றவனாக,இப்படிப்பட்ட பாடல் வரிகளை யெல்லாம் பாடுகின்றவராக, இதையெல்லாம் பாரதி எழுதிக்கொண்டு வருகின் றானே, அதே உணர்வோடு தான், பாரதி தாசனும் பார்க்கிறார்.

அவரும் வானத்தைப்பார்க்கிறார்.தாரகைகள் கண்ணுக்குப்படுகின்றன.உடனே உழைக்கும் பாட்டாளித் தோழர்களின் நினைவு அவருக்கு வருகிறது.

மண்மீதில் உழைப்பாரெல்லாம் வறியராம்; ஆம்; உழைப்பவர்கள் எல்லாம் வறுமையோடு போராடு கிறார்கள். உழைக்கின்ற கரங்கள், வறுமையோடு
போராடுகின்றன.

புண் மீதில் அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம்;
இதைத் தன் கண் மீது பகலில் கண்டு, அந்திக்குப்பின்
விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி,
கவிஞன்,ஒரு தாய், குழந்தைக்குச் சோறு ஊட்டுகிறாள். வெள்ளித்தட்டில் சோற்றுப் பருக்கைகளை வைத்துக் கொண்டு குழந்தைக்கு ஊட்டுகின்றாள்; அந்தக் குழந்தை தன் பிஞ்சுக் காலால் எட்டி உதைத்ததால், அந்த வெள்ளித்
தட்டு தூர விழுந்தது. பருக்கைகள் சிதறின. அந்த வெள்ளித்தட்டு நிலவாகத் தெரிந்தன; அதில் கிடந்த பருக்கைகள் நட்சத்திரங்களாகத் தெரிந்தன என்று ஒரு கவிஞன் வருணித்தான்.

இங்கே பாரதிதாசன் சொல்லுகிறார்: உழைக்கின்ற மக்களோடு நிலவை ஒப் பிடுகிறார். அவர்கள் உடலில் ஏற்பட்ட கொப்புளங்கள்தான், இந்த விண்மீன்கள் என்கிறார்.

1946 ஆம் ஆண்டு, திருச்சி வானொலி நிலையத்தார், ஐந்தாவது நாள் பாரதி விழாவில், கவியரங்கத்துக்கு பாரதி தாசனைத் தலைமை தாங்கச் சொல்லு கிறார்கள். புதுநெறிப் புலவன் பாரதி என்ற தலைப்பில், பாரதியின் வாழ்க்கை
வரலாற்றையே கவிதையாகச் சொல்லுகிறார்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர், தமிழ்நாட்டைப் பற்றி ஒரு சிறந்த பாடல் எழுதி னால் பரிசு தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். பாரதி அவர்களே, நீங்கள்
அந்தப் பாட்டை எழுதுங்கள் என்றபோது, நான் எழுதினால், சர்க்காருக்குப் பயந்து அதைப் புண் கவிதை என்று போட்டு விடுவார்கள். உங்களுக்காக எழுது கிறேன் என்று தீட்டிய பாடல்தான், 

செந்தமிழ் நாடெனும் போதினிலே,
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

என்ற பாட்டு.

இதைச் சொல்லத் தொடங்கி, பாரதிக்கு நிகரான கவிஞன் யார்? என்று கேட் கிறார். ஞான ரதத்தை இன்னொருவன் எழுதிட முடியுமா? கண்ணன் பாட்டைத் தந்திட முடியுமா? புது நெறி பாஞ்சாலி சபதத்தைப் படைத்திட முடியுமா? சீச்சீ...சிறிய செய்கை செய்தான் என்று நாடு வைத்து இழந்த தருமனைப் பற்றிச் சொன்னாரே?

புள்ளிச் சிறுமான் புலியைப் போய்ப் பாய்வது போல்,
பிள்ளைத் தவளை, பெரும்பாம்பை மோதுதல் போல்
ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய்
தெய்வத் தவத்தியைச் சீர்குலையைப் பேசுகிறாய்
நின்னுடைய நன்மைக்கின் நீதியெலாஞ்
சொல்லுகிறேன்
என்னுடைய செல்வே றெவர் பொருட்டு மில்லையடா
பாண்டவர்தாம் நாளைப் பழியிதனைத் தீர்த்திடுவார்
மாண்டு தரைமேல், மகனே, கிடப்பாய் நீ

என்று விதுரன் சொன்னதாக எழுதுகிறார்.

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ; சிந்துக்குத் தந்தை
குவிக்கும் கவிதைக்குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு!
நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
திறம் பாட வந்த மறவன், புதிய
அறம் பாட வந்த அறிஞன் நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!

இது பாரதியாரைப் பற்றி, பாரதிதாசன் தருகின்ற படப்பிடிப்பு.

பாரதி பிறந்தது பார்ப்பனர் குலத்தில். பாரதி தாசன் சொல்லுகிறார்: மேலோர் கீழோர் என்றுமேலுக்குச் சொல்லாமல், நான்கு தெருக்கள் கூடும் இடத்தில்,
நான்காயிரம் பேர் திரண்டு இருந்து பார்க்க, உடம்பில் இருக்கின்ற தோலின் நிறத்தைக் கொண்டு மேலோர், கீழோர் என்று சொல்லப்பட்ட அந்தத் தோழர் சமைக்கும் உணவை அருந்துவார்; அவர் வாழும் சேரியில் போய் வாழ்வார் என்று பாரதியைப் பற்றிச் சொல்லி, சாதிப் படைக்கு மருந்து என்கிறார்.

அது மட்டும் அல்ல; சாதி என்பது,தமிழர் வாழ்வை அழித்து விடும். எனவே, சாதி வேர்களைப் பொசுக்குங்கள் என்றான் பாரதி. காதலுக்குப் பெருமை சேர்த்தான். அதைப்பற்றித்தான் குயில் பாட்டு எழுதினான். கயிறு என, உருவகமாக ஒரு
வசன கவிதை எழுதுகிறான். அதில் காதலைச் சொல்லுகிறான்.

இன்றைக்கு,சாதி என்கின்ற நெருப்பிலே எரிகின்றன இளைய உள்ளங்கள்.எரிந் து போயிற்று இளவரசன் நெஞ்சம். மடிந்து போயிற்று அவன் உயிர். நொறுங் கிக் கிடக்கின்றது திவ்யாவின் நெஞ்சம். எப்போது? இந்த 2013 இல்.

இருந்து இங்கே அநீதியிடை வாழ வேண்டாம்
இறப்புலகில் இடையறா இன்பம் கொள்வோம்

என்றார் பாரதி தாசன். பருந்தும், நரியும் கொத்தித் தின்னுகின்ற பலி பீடங்கள் நிறைந்த இந்த உலகில் வாழ வேண்டாம். இந்த சாதி நெருப்பு வளர்ந்து கொண்டு இருக்கின்ற இந்த உலகில் நாம் வாழ முடியாது என்றான்.

எண்ணிப் பாருங்கள். பாரதி, இன்றைக்கும் தேவைப்படுகிறான். பாரதி தாசன் தேவைப்படுகிறார்;

உணர்வுகளோடு கவிதா மண்டலத்தில் அவர்கள் சஞ்சரிக்கின்ற நேரத்தில், சாதி மத வேற்றுமைகளை அடியோடு களைந்து எறிந்து, தமிழ்க் குலத்துக்கு, தமிழ்ச் சாதிக்கு, தமிழ் நாட்டுக்கு என்ன தேவை என்பதைச் சொன்னார்கள். இந்த மொழிக்கு நிகரான மொழி வேறு இல்லை என்று சொன்னார்கள்.

வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே
வானம் அறிந்தது அனைத்தும் அறிந்திடும்
வளர்மொழி வாழியவே

என்று பாரதி சொன்னான். வள்ளுவனைப் போல, இளங்கோவைப் போல உல கில் வேறு எங்கும் கண்டது இல்லை என்று சொன்னான். 

கொன்றிடல் போலொரு வார்த்தை 
கொடுஞ்சொல் ஒன்று என் செவியில் விழுந்தது,
துடித்துப் போனேனடா
மக்காள், என் அருமை மக்காள்
மெல்லத் தமிழ் இனிச் சாகும்; அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்;
என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ
இந்த வசைஎனக்கு எய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்

என்றான்.

அந்த வேதனையைக் கொட்டித் தங்கை அருள்மொழி இங்கே பேசினார். இந்தப் புவியில் இருக்கின்ற அனைத்து மொழிகளிலும் எங்கள் கவிதைகள் வரட்டும் என்று சொன்னார்.

தாயெழில் தமிழை என்றன்
தமிழரின் கவிதை தன்னை
ஆயிரம் மொழியிற் காண இப்புவி அவாவிற்றென்றே
தோயுறும் மதுவின் ஆறு
தொடர்ந்தென்றன் செவியில் வந்து
பாயும் நாள் எந்த நாளோ?
யார் இதைப் பகர்வார் இங்கே?
என்றான் பாரதி தாசன்.
பார்த்தொழில் அனைத்தும் கொண்ட
பயன்தரும் ஆலைக் கூட்டம்
ஆர்த்திடக் கேட்பதென்றோ?
அணி பெறத் தமிழர் கூட்டம்
போர்த்தொழில் பயில்வதெண்ணிப்
புவியெல்லாம் நடுங்கிற்று என்ற
வார்த்தையைக் கேட்டு நெஞ்சு
மகிழ்ந்து கூத்தாடல் என்றோ?

என்றார்.

நான் என் நெஞ்சத்தால் பூசிக்கின்ற தலைவர் பிரபாகரன் காலத்தில் பாரதி தாசன் இருந்தால், இதைத்தானே அவர் அன்றைக்குக் கேட்டார்.

உலக மொழிகளில் எல்லாம் நம்முடைய கருத்துகள் போய்ச் சேர வேண்டும் என்று சொன்னாரே? அப்படிப்பட்ட தமிழர்கள், பிஜித் தீவுகளில் கரும்புத் தோட் டங்களில் வாடுகிறார்கள் எனக் கேட்டு மனம் உடைந்தார். இராமானுசரை
ஈந்த தமிழகத்தில், திராவிட இயக்கத்தில், பகுத்தறிவு இயக்கத்தில் இருந்து பாரதி தாசன் சொல்லுகிறார்: தீண்டாமைக் கொடுமையைத்தூக்கி எறிவதற்கு, ஆன்மிக உலகத்தில் துணிச்சலாகக் குரல் கொடுத்த காரணத்தினால்,இராமா னுசரை ஈன்ற தமிழகத்தில், வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளைத் தந்த
தமிழகத்தில், எது போல? லெனினை ஈன்ற ருஷ்ய தேசம் போல, விக்டர் ஹ்யூ கோவை ஈன்ற பிரெஞ்சு தேசம் போல, இந்தத் தமிழர்கள் கண்மூடித் தலை தாழ்ந்து கிடக்கின்ற நேரத்தில், இதில் இருந்து மீட்பதற்கு ஒரு தலைவன் வர
மாட்டானா? என்று ஏங்கியபோது வந்தவன்தான் பெரும்புலவன் பாரதி என் கிறார் பாரதி தாசன்.

அத்தகைய உணர்வுகளைச்சொல்லுகின்ற வேளையில்,உலகமெலாம் சென்று இருக்கின்ற தமிழர்களைக் குறித்து,

மண்வெட்டிக் கூலி தின்னலாச்சே
நம் வாள் வலியும் தோள் வலியும் போச்சே

என்று கவலையுற்றான். கரும்புத் தோட்டங்களில்,வர்கள் கைகளும், கால் களும் சோர்ந்து விழுகின்ற நிலையில், ஏ காற்றே, அவர்கள் அழுகின்ற குரலை
நீ கேட்டாயா ? எங்கள் பெண்கள் அழுத கதையைக் கேட்டுச் சொல்வாயா? துன்பக் கேணிகளுக்கு உள்ளே எங்கள் பெண்கள் என நெஞ்சம் குமுறுகிறார்.

நெஞ்சங் குமுறுகிறார் -கற்பு
நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே யந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் -துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே - அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ?

என்று கேட்கிறார்.

எண்ணிப் பாருங்கள். அந்தக் காலகட்டத்தில், அவருடைய இதயத்தில் இந்த வேதனைகள் எழுந்த காலகட்டத்தில், பாவேந்தர் எத்தகைய உணர்ச்சியை ஏற்படுத்தினார்?

எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே

இந்த வரிகளை, எத்தனை இலட்சம் தடவையேனும் கேட்கலாம். அந்நாள் களில், அண்ணன் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், மேடைகள் தோறும் இந்தப் பாடலைச் சொல்லுவார்.விவிலியத்தை வாசிக்கின்றவன், நேற்று
வாசித்தோம் என்பதற்காக, இன்று வாசிக்காமல் இருப்பது இல்லையே? இது ரமலான் நோன்பு தொடங்குகின்ற காலம். திருக்குர் ஆனின் சொற்களைத் தானே கோடி முறை திரும்பத் திரும்பச் சொல்லுகிறார்கள்? கீதையில் நம்பிக்கை உடையவர்கள், அதை வாசிக்கின்றார்கள். எல்லை களைக் கடந்து உலகத்துக்கே பொதுமறை தந்தானே தமிழனின் மூதாதை திருவள்ளுவர்?
அதைப்போல, சில பாடல்கள், தேசியப் பாடல்கள்.ஒவ்வொரு நாட்டிலும், நாள் தோறும் எதற்காக தேசிய கீதம் இசைக்கின்றார்கள்? ஒவ்வொரு நிகழ்வு தோறும் இசைக்கின்றார்களே? இது நேற்றைக்குப் பாடிய பாடல்தானே என்று
இன்றைக்குப் பாடாமல் விட்டு விடுகின்றார்களா? அது எங்கள் தேசத்தின் உணர்ச்சியை ஒற்றுமையை வெளிக்காட்டுகிறது என்கிறார்களே?

கால்பந்து விளையாட்டில் இருநாடுகள் மோதுகின்றன. வீரர்கள் வரிசையாக நிற்கிறார்கள்.அவர்கள் நாட்டின் தேசிய கீதத்தை இசைக்கின்றார்கள். இவர் களும் சேர்ந்து பாடுகிறார்கள். எங்கள் மண்; எங்கள் நாடு என்ற உணர்வோடு
பாடுகிறார்கள். அதுபோல, இந்த மண்ணில் பாவேந்தருடைய எங்கள் வாழ் வும், எங்கள் வளமும் என்ற பாடல்தான் எங்கள் தேசிய கீதம்.

திங்களொடும் செழும்பரிதி தன்னொடும்
விண்ணொடும் முடுக்களொடும்
மங்குல் கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
ஆண்மைச் சிங்கத்தின் கூட்டம் என்று சிறியோர்க்கு
ஞாபகம் செய்
முழங்கு சங்கே
சிங்களஞ் சேர் தீராதி தீரர்
எங்கள் தென்னாட்டு மக்கள் என்று ஊதூது சங்கே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு
கங்கை போல் காவிரி போல்
கருத்துகள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்கொடுமைச் சாக்காட்டில்
விளையாடும் தோள் எங்கள் வெற்றித் தோள்கள்
வெங்குருதி தனில் கமழ்ந்து வீரம் செய் தமிழ்
எங்கள் மூச்சாம்

என்று பாடினாரே, அவருக்கு மரணம் இல்லை.கவிஞர்களுக்கு என்றைக்கும் மரணம் இல்லை.

இத்தகைய உணர்வுகளைத்தான், பாரதியும், பாரதி தாசனும் தந்தார்கள்.

அந்த நாள்களில் ஏற்படாத துயரம், இப்போது ஏற்பட்டது தமிழ்க் குலத்துக்கு. நம் நெஞ்சை விட்டு அகலாது, நிரந்தரமாக எண்ணங்களில் வீற்று இருக்கின் றார்களே தியாகிகள், தமிழ் ஈழத்துக்காகத் தங்கள் உயிர்களை மரணத் தீக்குத்
தந்து விட்டு மடிந்தும், நம் எண்ணங்களில் மடியாமல் இருக்கின்றார்களே, 2009 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள், நுங்கம்பாக்கம் சாஸ்திரி வளாகத்துக்கு உள்ளே, தன் உடலில் நெருப்புக் கொளுத்திக் கொண்டு தமிழ்க்குலத்துக்கு
சாட்டையால் அடித்து, இன்னுமாடா உனக்கு உறக்கம்? உன் இனம் அழிகிற தடா? இந்திய அரசு ஆயுதம் கொடுக்கின்றது, சிங்களவன் அழிக்கிறான் என்று சொன்னானே முத்துக்குமார்?

விதியே விதியே என் தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாயோ? என்று தொடங்கித்தானே தனது மரண வாக்குமூலத்தை எழுதினான். இவை,பாரதி யின் வரிகள். தமிழச் சாதி என்றுதான் பாரதி சொன்னான்.

அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?

என்று கேள்வி கேட்கிறான்.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

என்ற திருக்குறளின் வான்சிறப்புப் பாடலுக்கு, அருமையான விளக்கத்தை, அறிவியல்பூர்வமான விளக்கத்தைத் தங்கை அருள்மொழி இங்கே சொன்னார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என் மூதாதை வள்ளுவன் தந்த பாடலுக்கு
விளக்கத்தைத் தந்தார்.

அழியாத கடலா தமிழர் வாழ்வு? அல்லது, அணியும் மலர்த் தடமா? மலர்கள் வாடி விடும்; பூக்கள் வாடி விடும். இன்று மலர்ந்து நாளை இல்லாமல் போய் விடுமா? அல்லது, ஊழுழிக்காலமாக அலைவீசி நிற்கின்ற கடலைப் போல இருக்குமா? 

மாளிகை விளக்கோ? வானுறு மீனோ?

விண்ணில் மின்னுகின்ற நட்சத்திரங்கள் நிரந்தரமாக இருக்கின்றன. மாளிகை விளக்கோ அணைந்து போகும். நம் வாழ்வு எப்படிப்பட்டது?மாளிகை விளக்கா? வானுறு மீனா?

கற்பகத் தருவா? அல்லது காட்டிடை மரமா?

புராணங்களில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, கற்பகத் தரு எல்லாவற்றையும் தரக்கூடியது.காட்டிடை மரம் எரிந்து போகக்கூடியது.

எனவே, கற்பத் தருவா? அல்லது காட்டிடை மரமா? என்பதன் மெய் எனக்கு உணர்த்துவாய்.

முன்பு நான்,

சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்
திருக்குறள் உறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
எல்லையொன் றின்மை எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிகளால் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும், முன்பு நான் தமிழ்ச்
சாதியை அமரத் தன்மைவாய்ந் தது என்று
உறுதிகொண் டிருந்தேன்.

ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை அடுத்த தீவுகள் பலவினும்
பூமிப்பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவியிவ் எளிய
தமிழச் சாதி தடியுதை உண்டும்
காலுதை உண்டும், கயிற்றடி உண்டும்
வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும்,
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடும் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளால் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்;

என் இதயம் வெடிக்கவில்லையே?
விதியே விதியே
என்செய நினைத்தாயோ என் தமிழச் சாதியை?

அன்றைக்குக் காற்றோடு கலந்து வந்ததே, பெண்களின் கண்ணீர்க் குரல்கள். அப்படி இசைப் பிரியாவைப் போல எத்தனைக் குலக்கொடிகளின் குரல் அலை கடலைத்தாண்டி ஈழத்தில் இருந்து வந்தது?

ஏ... பாரதியே! நீ ஏற்றி வைத்த அந்த நெருப்பு எங்கள் நெஞ்சில் எழவில்லையா? பாரதிதாசனே, இந்த இனம், இந்த மொழி, இந்தக் குரல், தரணி போற்ற வாழ்ந்த தமிழ் இனத்தின் மொழி, புட்பகத்தில், சாவகத்தில் கொடி உயர்த்தினான் உன் பிள்ளை என்றெல்லாம் சொல்லிவிட்டு,இந்த நிலையா இன்று அவனுக்கு என் று கேட்டார்களே,அதைவிடத் துயர நிலைக்கு இன்று ஆளாகி  விட்டோமே?

மானத்தை, பண்பை, கற்பை, ஒழுக்கத்தை, தமிழர் நெறிகளைப் பாதுகாக்கும் ஒரு தமிழ் ஈழ பிரபாகரன் அரசை உருவாக்கி வைத்து இருந்ததை, இந்திய அரசு ஆயுதங்களை அள்ளிக்கொடுத்து,ஏழு அணு ஆயுத வல்லரசுகளின் உதவியைப்
பெற்று, அவர்களைப் போர்க்களத்தில் அழிக்க நினைத்ததால், இலட்சக்கணக் கான மக்கள் மடிய நேர்ந்ததே?

பாரதி தாசன் கேட்கிறான்:

செந்தமிழை, செந்தமிழ் நாட்டைச் சிறை மீட்க
எந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்தது என்று
குந்திக் குரல் எடுத்துக் கூவாய் கருங்குயிலே
ஆம்; வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்தது முத்துக்குமார் உள்ளத்திலே. அதை, பாரதி இன்னொரு விதத்தில் சொன்னான்:

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

இப்படி நம்பிக்கை ஊட்டுகிறான் வசன கவிதைகளில். சாதல் இனிது என்றான். அவன் இதோ நம்பிக்கை ஊட்டுவதற்கு மின்னலை அழைக்கின்றான்.

மழை பெய்கின்றது; காற்று வீசுகின்றது;
இடி குமுறுகின்றது; மின்னல் வெட்டுகிறது;
ஓ புலவர்களே வாருங்கள்; மின்னலைப் பாட
வாருங்கள்.
மின்னல், ஒளி தேவதையின் ஒரு லீலை
மின்னல், ஒளி தேவதையின் ஒரு சாட்சியம்
மின்னலைத் தொழுகின்றோம்
மேகக் குழந்தைகள், மின்னல் பூக்களைச் சொரிகின்றன
கருங்கல்லிலே வெண்மணலிலே
பச்சை இலையிலே செம்மலரிலே
நீல மேகத்திலே வரையிலே காற்றிலே
மின்னல் பொதிந்து கிடக்கிறதே
அந்த மின்னல்,
எங்கள் நெஞ்சிலே பாய்க
அந்த மின்னல்,
எங்கள் விழிகளிலே பிறந்திடுக
அந்த மின்னல்
எங்கள் கரங்களிலே வலிமையைக் கொடுப்பதாக
அந்த மின்னல்
எங்களுக்கு நெஞ்சிலே உரத்தை ஊட்டுவதாக
அந்த மின்னலின் மின்சக்தி உறைந்து கிடக்கின்றது
எங்கள் இதயங்களில், எங்கள் கரங்களில்,
எங்கள் உள்ளங்களில் திண்மை ஊட்டுவதாக

என்று சொன்னானே, அந்தத் திண்மையைப் பெறுவோம்.

பாட்டுக்கு ஒரு புலவன் காட்டிய பாதையில், பாவேந்தர் வளர்த்த அந்த மான உணர்வை, இந்தத் தமிழ்க்குலத்தின் வளரும் இளைய தலைமுறை பெற்றிட, இந்த மணவழகர் மன்றத்தில் உரை ஆற்றும் வாய்ப்புக்கு அடியேனின் நன்றி.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment