Tuesday, August 6, 2013

சூழ்ச்சியும் சூதும் கேடும்

சூழ்ச்சியும் சூதும் கேடும் நிறைந்த உணவுப் பாதுகாப்புத் திட்டம்!

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு, ரயில்வே அமைச்சரின் உறவினர் செய்த ஊழல், நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை கூறுபோட்டு விற் பனை செய்யும் முயற்சி போன்ற மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை களுக்கு எதிராக, நாடு தழுவிய அளவில் கண்டனமும், வெறுப்பும் காட்டுத் தீயாய்ப் பரவி வருகிறது.

இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளவும்,எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலின்
வாக்குகளைக் குறிவைத்தும், உணவுப் பாதுகாப்பு மசோதா என்ற நீண்ட நெடுங்கால வாக்குறுதியை தூசிதட்டி எடுத்து வைத்துக்கொண்டு, மக்களை
ஏமாற்றும் முயற்சியில் காங்கிரசு அரசு காரியமாற்றி வருகிறது!
ஆட்சிக்கு வந்து நூறே நாளில் ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள
இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்போம், விலைவாசியைக் குறைத்துக்
காட்டுவோம் என்றெல்லாம பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்த வழக்கமான
வாக்குறுதிகளில் ஒன்றுதான் இந்த உணவுப் பாதுகாப்பு மசோதா!

பிரசவ வைராக்கியம்போல, சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல் வைராக்கிய
மாய் காங்கிரசுக்கு திடீர் ஞானோதயம் ஏற்பட்டு, மக்களின் உணவுப்பிரச்சினை
குறித்து அக்கறை காட்டுவதாக நாடகமாடுகிறது.

நாட்டில் உள்ள மூன்றில் இரண்டு பகுதி மக்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ
உணவு தானியங்களை, அரிசி, கோதுமை, சிறுதானியங்களை முறையே 3 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய் விலையில் கொடுக்கப்படுவதாக நம் காதில் பூ
சுற்று கிறது காங்கிரஸ் அரசு. மத்திய அரசின் இந்தத் திட்டத்தில் ஏராளமான
முரண்பாடுகள் உள்ளன. இதைப் பற்றியெல்லாம் நாடாளுமன்றத்தில் விவா திக்கும் வாய்ப்பினை மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் எதேச்சதிகார முறையும் வறுமைக் கோடு என்ற அளவு முறை கொண்டு பொது விநியோக முறையைச் சிதைத்து
சின்னாபின்ன மாக்கும் சீரழிவும் இந்த மசோதாவில் அடங்கி உள்ளது.

எனவேதான் இதனை எதிர்த்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பீகார் முதல்வர்
நிதீஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் போர்க்கொடி
உயர்த்தி உள்ளனர். உத்திரப்பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களும் எதிர்க் கின்றன. மத்திய அரசின் ஆதரவுக் கட்சியான சமாஜ்வாதிக் கட்சியும், பொது
உடைமைக்கட்சிகளும், பாரதியஜனதா கட்சியும் இந்த மசோதாவைக் கண்டிக்
கின்றன.

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் படாமல், குடி அரசுத் தலைவரின் கையொப் பம் பெற்று, அவசர சட்டத்தின் மூலம் நடைமுறைக்கு கொண்டு வரும் ஜன நாயகப் படுகொலையை மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் அவர் களே ஏற்கவில்லை. மத்திய அரசின் உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ்
அவர்கள் உணவுப் பாதுகாப்பு மசோதாவில் 81 திருத்தங்கள் செய்யப்பட்டிருப்ப தாகக் கூறியிருப்பதை கவனிக்கும் போது காங்கிரசு அரசின் முரட்டுத்தனம் முழு அளவில் நமக்கு விளங்குகிறது.

உத்திரப்பிரதேச மாநில உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கும் துறை
அமைச்சர் ராஜேந்திர செளத்ரி அவர்கள் விவசாயிகளின் விளைபொருளை
குறைந்த விலைக்கு விற்க வேண்டி உள்ளதால், இத்திட்டம் விவசாயிகளின்
நலனுக்கு எதிரானது என்ற கருத்துத் தெரிவித்துள்ளார். திட்டம் முழுவதற்கு மான நிதியையும் மத்திய அரசு அளித்தால்தான் இத்திட்டத்தினை செயல் படுத்த இயலும் என பீகார் மாநில அரசு நிபந்தனை விதித்துள்ளது.

தேசிய ஆலோசனை கவுன்சிலில் இருந்து இந்த மசோதா தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாகவே பொருளாதார நிபுணர் ஜி.என்.டிரிசி அவர்கள் கவுன் சிலில் இருந்து வெளியேறியுள்ளார்.

விவசாய நிலை நிர்ணய குழுவின் தலைவரான அசோக் குலாத்தி அவர்கள்,
பல்வேறு ஓட்டைகளின் மீது தான் மத்திய அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 இன் கீழ் அரிசி, கோதுமை மற்றும் உணவு தானியங்களை வழங்க ஆண்டு தோறும் ரூ.1.23 இலட்சம் கோடி செலவிட உள்ளது. இது 40 சதவீதம் ஒழுகும் வாளியில் மேலும் மேலும் தண்ணீர் நிரப்பும் அறிவிலி செயலுக்கு
இணையானது என சுட்டிக்காட்டி உள்ளார்.

இத்திட்டத்தினால் ராஜஸ்தான் மாநில அரசுக்கு 850 கோடி ரூபாயும், பஞ்சாப்
மாநில அரசுக்கு 350 கோடி ரூபாயும், பீகார் மாநில அரசுக்கு 550 கோடி ரூபாயும் சத்தீஸ்கர் மாநில அரசுக்கு 2500 கோடி ரூபாயும், கேரள மாநில அரசுக்கு 655 கோடி ரூபாயும், தமிழக அரசுக்கு 1588 கோடி ரூபாயும், ஆந்திரப் பிரதேச மாநில அரசுக்கு 10,260 கோடி ரூபாயும், மத்தியப் பிரதேச அரசுக்கு 1,000 கோடி ரூபாயும் ஆண்டுதோறும் மானியச்சுமை கூடுதலாகி புதிய சிக்கலை உருவாக்குவதால், ஏற்கனவே மானியச் சுமைகளால் திணறும் இம்மாநில அரசுகள், விழி பிதுங் கிய நிலையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

இந்தத் திட்டத்தால் மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்படக்கூடும் என்று பிரதமர் தெரி வித்த ஆட்சேபனையை மீறி, சோனியா காந்தியின் அரசியல் கணக்குகள் வெற்றி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது என்று உண்மையை அம்பலப்படுத் திய இந்தியா டுடே (ஜூலை 24, 2013) ஏடு உணவுப் பாதுகாப்பு என்ற பெயரில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வரி செலுத்துவோருக்கு கூடுதல் சுமை யை உருவாக்குகிறது. மோசமான பொருளாதாரம். அரசியல் ஆதாயம் தருமா? என்று வினாக்களை தொடுத்துள்ளது.

இந்தியாவில் பயிரிடக்கூடிய 6,38,000 கிராமங்களில் தற்பொழுது 5,50,000 கிரா மங்களில் மட்டுமே பயிரிடப் படுகிறது. தவிரவும் பில்டர்ஸ், நில மாபியா கும் பல்கள் ஆக்கிரமித்துள்ள நிலம் 220 இலட்சம் ஹெக்டேர். சுரங்கம் மற்றும் தொழில் துறை என்ற பெயரில் அரசு தாரைவார்த்துள்ள நிலம் 220 இலட்சம் ஹெட்டேர்.

பெருமுதலாளி களுக்கு இப்படி இலட்சக் கணக்கான ஏக்கர் நிலங்களை அரசு
வழங்கி வருகிறது. இந்த கார்ப்பரேட் விவசாயிகள் பாமர மக்களின் தேவைக்
கான உணவு தானியத்தை உற்பத்தி செய்யப்போவதில்லை என்ற மின்கதிர்
(சூலை 2013) இதழின் கட்டுரை விவசாயிகளின் அவல நிலையைப் படம்பிடித் துக் காட்டுகிறது.

2004 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டுக்குள் விவசாயத்திலிருந்துவெளி யேறியவர்கள் 1.45 இலட்சம் பேர் என்றும் வறுமையாலும், கடன்  தொல்லை யாலும் விவசாய கூலிகளாக மாறிய நிலச்சுவான்தாரர்களின் எண்ணிக்கை 33 இலட்சம் என்றும் அரசே புள்ளிவிவரம் தருகிறது. 

ஏற்கனவே, விவசாயிகள் வாழ முடியாமல், செத்துக்கொண்டு இருக்கிறார்கள். 6 கோடியே 70 இலட்சம் ஏக்கர் தரிசு நிலம் திருத்தப்படாமல் பாழாகிக் கொண்டி ருக்கிறது. விவசாயம் பொய்த்துப் போனதால், விளைநிலங்கள் ரியல் எஸ் டேட்டுகளால் கட்டிடங்களாக உருமாறி வருகிறது. எஞ்சியுள்ள விளை நிலங் களையும் பெருமுதலாளிகள் தங்கள் தொழில் வளர்ச்சிக்கு கபளீகரம் செய்து வருகிறார்கள்.

2010-2011 நிதி ஆண்டில் பெரு முதலாளிகளுக்கு 5 இலட்சம் கோடி வரிச்சலுகை செய்யும் மன்மோகன் அரசு,விவசாயிகளுக்கு உதவித்தொகை என்றால், கண் டிப்பு காட்டி ஈட்டிக்காரனாக மாறுகிறது. விவசாய வளர்ச்சிக்கு வருவாயில் 2 சதவிகிதம் தொகைக்கு மேல் செலவழிக்க முடியாது என கண்டிப்பு காட்டு கிறார் பிரதமர். இந்த விவசாயக் கடனையும் முகேஷ் அம்பானி போன்ற ஏழை
விவசாயிகளும்(?) விட்டுவைக்க வில்லை. சொகுசு கார் வாங்குவதற்கு 7 சத விதம் வட்டியில் கடன் வழங்கும் தேசிய வங்கிகள், விவசாயிகள் டிராக்டர்
வாங்குவதற்கு 14 சதவிகித வட்டியினை அநியாயமாக வசூலிக்கின்றன.

உரம், பூச்சி மருந்து முதலான இடு பொருட்களின் விலையோ இறக்கை கட்டிக் கொண்டு பறக்கின்றது. விளை பொருளுக்கு உரிய விலை இல்லை. வாங்கிய கடனை செலுத்த முடிய வில்லை. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிச்சமில்லை என்ற பழமொழி சாகாவரம் பெற்று துரத்துகிறது.இதனைத்தாங்க
முடியாமல் கடந்த 15 ஆண்டுகளில் 2,84,694 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆய்வுக்கழகமே புள்ளிவிவரம் தருகிறது.

கிராமப்புறங்களில் 75.5 விழுக்காடு மக்களும், நகர்ப் புறங்களில் 73 விழுக்காடு மக்களும் ஊட்டச்சத்து குறைவான உணவை உண்ணுவதால் நோயில் விழு கிறார்கள். ஊட்டச்சத்து கிடைக்காத குழந்தைகள் இங்கே 49 விழுக்காடு உள்ள னர். உலக அளவில் பிறக்கும் குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைவு காரண மாக செத்து மடியும் குழந்தைகள் இந்தியாவில் 29 விழுக்காடு என்பது மட்டு மல்ல, கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்தின்றி நோஞ்சான்களாக வேதனைப்படுவதில் இந்தியத் திருநாடு முன்னிலை வகிக் கிறது.

உலக அளவில் பட்டினியால் பரிதவிக்கும் பஞ்சை பராரிகள் உள்ள 84 நாடு களின் பட்டியலில் 68 ஆவது இடத்தில் இந்தியத் திருநாடு பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறது.இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெறவே இல்லை. ஆனால், பாரத மணித் திருநாட்டை காங்கிரசு தேசபக்த திலகங்கள் நிறுத்தி வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இதையெல்லாம் கவனிக்க வேண்டிய வேலையைச் செய்யாமல், உணவைப்
பாதுகாக்க என்ற முகமூடியில் வாக்கு வேட்டைக்கு காங்கிரசுக் கட்சி கிளம்பி
விட்டது. கண்ணீரையும் செந்நீரையும் சிந்தி, அண்டாகுண்டானை அடகு
வைத்து நிலத்தையும் அடமானம் வைத்து கடன் தொல்லையில் கண்ணீர் சிந்தி ஏழை விவசாயி உற்பத்தி செய்த விளை பொருளை சேமித்து வைக்க
கிடங்குகள் இல்லை என்பது தேசிய அவமானம் அல்லவா? 2009 ஆம் ஆண்டில் மட்டும் 230 இலட்சம் டன் உணவு தானியங்களும், 120 இலட்சம் டன் பழங் களும் இதன் காரணமாக பாழாய்ப் போயின. விளை நிலத்தில் இருந்து எடுத்து வரும் வழியிலேயே 210 இலடசம் டன் காய்கறிகள் அழுகியும் கருகியும் வீணாய்ப் போயின.

இது தொடர்பாக தொடரப்பட்ட பொது நல வழக்கில், 12-8-2010 அன்று தீர்ப்ப ளித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு சேமிக்க இயலாமல் பாழாகும் உணவுப் பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கொடுக்குமாறு ஆணை யிட்டது.

கடந்த ஆண்டு சூன் திங்களில் எல்லோருக்கும் உணவு வழங்கும் உணவுப்பாது காப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பு, கொள்முதல் செய்யப்பட்ட
கோதுமையை வீணாக்காமல், பாதுகாப்பு செய்ய வழி தேடுங்கள் என்று மத் திய அரசின் ஆடிட்டர் ஜெனரல் கன்னத்தில் அறைவதைப்போல கண்டிப்புடன்
அறிவுறுத்தினார். செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருந்ததே தவிர, மத் திய அரசு அசைந்துகூட கொடுக்க வில்லை.

உணவுப் பாதுகாப்பு மசோதா நடைமுறைக்கு வருவதற்கு இந்திய உணவு நிறுவனத்திற்கு (Food Corporation of India)  கூடுதல் சேமிப்புக் கிடங்குகள் தேவை. இந்தியாவின் விளை பொருட்களில் 20 சதவிகித உணவுப்பொருட்கள் மட்டுமே இந்திய உணவு நிறுவன கட்டிடங்களில் சேமிக்கப்படுகின்றன. எஞ்சிய உண வுப்பொருட்கள் வாடகை கட்டிடங்களிலும்,திறந்த வெளியிலும் தான் வைத் து சேமிக்கப்படுகின்றன என்று பொருளாதார அறிஞர் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் 3.7.2013 அன்று லண்டன் பி.பி.சி. செய்தியாளர் கேட்ட கேள்விக்கு விடை அளித்தார்.பொருளாதார மந்தம் நிலவும் சூழலில் 20 விழுக்காடு கிடங்கு களே உள்ள சூழலில் இந்தத் திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றுவது என்று அவர் கேட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் சொல்லவில்லையே!

உணவு தானிய பொது விநியோக முறை இந்தியா முழுதும் சீரான நிலையில்
இல்லை. மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. மத்தியப் பிரதேசம், இமா லச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இந்தத் துறையே
செயலிழந்து கிடக்கிறது. மகாராட்டிரம், அரியானா, உத்திரப்பிரதேசம் முத லான மாநிலங்களிலும் இதே நிலை தான்.ஆனால், தமிழகத்தில் நிலைமை வேறாக உள்ளது. இங்கே அரிசி கடத்தப் படுகிறது.

ஆளும் கட்சியின் தலையீடு இருக்கிறது.ஊழல் நடவடிக்கைகள் உண்டு. அத னையும் தாண்டி பொது விநியோக முறை சிறப்பாக இயங்கிக்கொண்டு இருக் கிறது. 31.3.2010 அன்று எடுத்த கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் ஒரு கோடியே 97 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த அட்டைதாரர்கள் பயன்பெறு கிறார்கள். இவர்களில் 1,84,43,227 பேர் அரிசி உள்ளிட்ட பொருள்களைப் பெறும் பச்சை அட்டைதாரர்கள்.59,460, பேர் காவல்துறையினரின் குடும்பத்தைச் சேர்ந்த காக்கி அட்டைதாரர்கள். அரிசி தவிர, பிற பொருட்களைப் பெறும் வெள்ளை
அட்டை தாரர்களின் எண்ணிக்கை 10,67,821 எந்தப் பொருளையும் பெற்றுக் கொள்ளாமல், இருப்பிட முகவரிச் சான்றுக்கு. 62,447 பேர்.

இவர்களைத் தவிர, முதியோர் உதவித் தொகை, நலிந்தோர் உதவித் தொகை
மூலம் மலிவு விலையில் மாதம் 35 கிலோ அரிசி பெறுபவர்கள், 19 இலட்சம் பேர். இவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கும் நல்ல திட்டத்தில், வறுமைக் கோடுக்கு மேலே உள்ளவர் களை நிர்ணயம் செய்து அவர்களை பயனாளி
களாக்காமல் வெளியேற்றும் அநியாய திட்டம்தான் மன்மோகன் அரசின் புதிய
திட்டம்.

எனவே தான் தமிழகத்தை உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரவே வேண்டாம் என்று தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பல மாநில அரசுகள் மத்திய அரசின் இத்திட்டத்தை ஏற்க மறுக்கின்றன.

ஆனால், எதைப்பற்றியும் கவலைப் படாமல், டெல்லி, மத்தியப் பிரதேசம்,
ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோராம் மாநில சட்டமன்றத் தேர்தலையும், நாடா ளுமன்றத் தேர்தலையும் குறி வைத்து இந்தத் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது. ராஜீவ் பிறந்த நாளில் திட்டம் நடைமுறைக்கு வரு கிறது என்றும், இதனை விளக்கி மக்களிடம் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

நாமும் மக்களிடம் செல்வோம். மாநில அரசுகளை ஓரங்கட்டிவிட்டு, மத்திய
அரசு தனது ஆக்டோபஸ் கரங்களால் ஆதிக்கம் செலுத்தி,கட்சி அரசியல் லாபம் தேடும் விதத்தில் கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்று நம் இலட்சியத் தலைவர் வைகோ தெளிவுறுத்திய கருத்துகளை மக்கள் மன்றத்தின் முன் வைப்போம்.

ஏற்கனவே கல்வித் துறையை மாநிலங்களிடம் இருந்து பறித்துக் கொண்டது காங்கிரசு தலைமை தாங்கும் மத்திய அரசு. மாநில அரசின் வசமுள்ள ஆறு களை தனியாருக்கு ஏலம் விட்டுப் பிழைப்பு நடத்த தேசிய நீர்க் கொள்கை
என்ற பெயரில் அணைகள் பாதுகாப்பு சட்டத்தையும் கொண்டுவந்துள்ளது.
மாநில அரசின் ஒப்புதல் இன்றி வழக்கு களை பதிவு செய்யும் பயங்கரவாத
சட்டத்தையும் நிறைவேற்றி தன் ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது.

மாநில அரசுகளை புறக்கணித்துவிட்டு, அரசின் மானியங்களை நேரடியாக
வங்கிக் கணக்கில் போடும் முறையையும் நடைமுறைப்படுத்த துடியாய்த் துடிக்கிறது. பெரும்பான்மை அதிகாரங்களை மாநிலங்களிடமிருந்து கைப் பற்றி, அதிகார குவியலை உருவாக்கி மாநில அரசுகளை எடுபிடிகளாக நடத் தும் மத்திய காங்கிரசு அரசின் தொடர் நடவடிக்கைகளில் ஒன்றான உணவு பாதுகாப்புத் திட்டம் என்ற முகமூடியைக் கிழத்து, உண்மை உருவை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டும் பணியில் முனைப்புடன் ஈடுபடுவோம். மக் கள் விரோத காங்கிரசு கட்சியின் சூழ்ச்சியை சூதுமதியை முறியடிப்போம்

நன்றிகள்

கட்டுரையாளர் :- ஆ.வந்தியத்தேவன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment