Wednesday, August 28, 2013

எனக்கு சிறை பிடிக்கும் -வைகோ

எனக்கு சிறை பிடிக்கும் - #வைகோ

சொந்தக் கிராமமான கலிங்கப்பட்டிக்குப் போவதைப்போலவே சிரித்துக் கொண்டே செல்லும் இன்னோர் இடம்... சிறைச்சாலைகள். இதுவரை 28 தடவைகள் -சுமார் நான்காண்டு காலம், மாநிலத்தில் இருக்கும் பெரும்பாலான
மத்தியச் சிறைகளில் அவரது மூச்சுக்காற்று சுற்றி வந்திருக்கிறது. நிகழ்காலத் தலைவர்களில் அதிக காலம் உள்ளே இருந்த சிறைப்பறவை!
நெடுநாட்கள் நீ பஞ்சணையில் புரண்டாய்...
இப்போது காட்டுத் தரையில் படுத்துப் பார்!
கொதிக்கும் மணலில் உருளவும்
குளிர்ந்த நீரில் மூழ்கவும் கற்றுக்கொள்!
எத்தனை நாள்தான்
குளிர்சோலையில் வாழ்வாய்?
மலையின் உச்சியில் ஒரு கூடுகட்டு!
வாழ்க்கைப் போராட்டத்துக்கு
உன்னைப் பழக்கு!
உன் உடலையும் ஆன்மாவையும்
போட்டெடுக்கப் பழகிக்கொள்!

என்ற கவிஞன் இக்பாலின் வரிகளைப் படித்தவன், பழகியும் கொண்டவன் நான்.‘துயரப்படுபவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதல் அடைவார்கள்’ என்கிறது விவிலியம். ஆம்! நான் பாக்கியவான்.

சிறைகள் கம்பீரமானவை. வீரமானவை.உன்னதமானவை. அதேநேரம் கண் ணீர் வரவழைப்பவை. இதில் வந்துபோனவர் நிறைய.குற்றவாளிகளாக வந்து நல்லவர்களாக ஞானம் பெற்றவர் தொகையே அதிகம். மனிதனை ரசவாதம் செய்யும் செயலைச் சிறைகளை விட்டால் யாரால் செய்யமுடியும்? அந்தச்
சிறைகள்தான் என்னையும் செதுக்கின.பாளையங்கோட்டை, சேலம், வேலூர்,
சென்னை, திருச்சி மத்திய சிறைகள் என்னை பார்த்தவை.

1976, ஜனவரி 30 ஆம் தேதி தி.மு.க.அரசு,பிரதமர் இந்திரா காந்தியால் கலைக்கப் பட்டது.அதற்கு மறுநாள் காலையில் நெல்லை மாவட்டத்தில் கைது செய்யப் பட்ட முதல் ஆள் நான் தான். என் மகன் துரை வையாபுரிக்கு மூன்றரை வயது. மகள் ராஜலட்சுமிக்கு ஒரு வயது இருக்கும். அப்போது டி.ஐ.ஜியாக இருந்த
ராதாகிருஷ்ணராஜா என்னைக் கைது செய்வதாகச் சொன்னார். நான் அதிர்ச்சி யே அடையவில்லை. உள்ளே போனவன் டைரியை எடுத்து, ‘என்னைக் கைது செய்து கொண்டு செல்கிறார்கள்’ என்று எழுதிவிட்டுக் கைதானேன். பாளை சிறையில் உள்ள மரண தண்டனைக் கொட்டடியில் கொண்டுபோய் போட்டார் கள். கம்பி வாழ்க்கை அன்று ஆரம்பமானதுதான்.

ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த எனக்கு,தி.மு.க.வினர் கறுப்பு சிவப்பு மோதிரம் போட்டிருந்தனர். சிறை விதிப்படி அதைக் கழற்றச் சொன்னார்கள். அன்று முதல் இன்று வரை நான் மோதிரமே அணிவதில்லை.

சிறை வாழ்க்கையை எப்படிக் கழிப்பது என்று நினைத்தபோது கண்டுபிடித்த வழிதான் வாலிபால். கல்லூரிக் காலம் முழுவதும் நான் வாலிபால் வீரன். காலையில் வாலிபால் ஆடுவோம். மாலையில் பட்டிமன்றங்கள் நடத்து வோம். டி.வி., ரேடியோ இல்லாத காலம். எனவே, வெளியே மைக்கட்டி பாட்டுப் போட்டால் தான் எங்களுக்குச் சந்தோஷ நாட்கள்.‘மச்சானைப் பாத் தீங்களா.... மலை வாழைத் தோப்புக்குள்ளே..’ ‘செந்தாழம் பூவில் வந்தாடும்
தென்றல் உன் மீது மோதுதம்மா’பாட்டை எல்லாம் முதல் தடவையாக சிறைக் குள் வைத்துத்தான் கேட்டேன்.

என்னைப் பார்க்க எங்கள் அம்மா வந்திருந்தார்.‘மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொ டுத்தால், உன்னை விட்டுவிடுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், என் மகன்
தப்பு பண்ணிட்டு சிறைக்கு வரலை. அதனால அவனை எத்தனை வருஷம் உள்ளே வைக்கிறாங்கன்னு பார்க்கிறேன்’ என்று தான் சொன்னதாகச் சொன் னார் என் தாய்.

இவர் வயிற்றில் பிறந்ததற்காகப் பெருமைப்பட்ட தினம் அது. நாங்கள் என்ன பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று புலனாய்வு அதிகாரிகள் பின்னால் நின்று
கவனித்து இருக்கிறார்கள். தி.மு.க.வினர் இப்படித் தங்கள் குடும்பங்களையும் கொள்கையுடன் வைத்திருப்பதால் தான் அந்தக் கட்சி வலிமையாக இருக் கிறது’ என்று சொன்னார்களாம். ஓராண்டு காலச் சிறைவாசத்துக்குப் பிறகு தான் மிசா எங்களை வெளியேவிட்டது.

அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கொளுத்தியபோராட்டத்தில் சிறைக்குள் அடைக்கப்பட்ட எனக்கு செய்தித்தாள் தரமறுத்தார்கள். அதைக் கண்டித்து ஐந்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். சிறைகள் எனக்குக் கற்றுத்தந் தவை அதிகம். அது பலரை அடையாளம் காட்டியது. அப்படி ஒரு சிறைநாளில் தான் நாஞ்சில் சம்பத் என்ற பேச்சாளனை நான் இனம் காணும் வாய்ப்பும் கிடைத்தது. இப்படி சிறை கொடுத்தது அதிகம்!

‘பொடா’ சிறைவாசம் என்னை 19 மாதங்கள் வதைத்தது.வேலூர் சிறைக்கு என்னைக் கொண்டு போய்க்கொண்டு இருந்தபோதே அத்தனை பத்திரிகை களிலும் செய்திகள் வந்தன. அதில் ஒன்று வைகோ அசைவ உணவுகளை அதிகமாக விரும்பிச் சாப்பிடுவார் என்று இருந்தது. சிறையில் மூன்று நாட்கள் அசைவம் உண்டு என்றாலும், நான் சிறைக்காலம் முழுவதும் சைவம் சாப்பிடு வது என்று முடிவெடுத்தேன். எனக்கு மின்விசிறி கொடுத் தார்கள். அதையும் மறுத்தேன். மறுபடியும் வாலி பால் ஆரம்பிக்கலாம் என்று முடி வெடுத்தேன்.
வயதாகி விட்டதே முன்பு போல் ஆடமுடியுமா என்று யோசித்தேன்.

ஆறு அணிகளைத் தயாரித்து, ஐந்து டோர்ன மென்ட் நடத்தினேன். காவிரிப் பிரச்சனைக்காக என் பேச்சைக்கேட்டு 2300 கைதிகளும் உண்ணாவிரதம் இருந் தார்கள்.கண்ணதாசனா? பட்டுக்கோட்டையா? காதல் திருமணமா? பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமா? என்று பட்டிமன்றங்கள் நடத்தினேன். இரவு, பகல் பாராமல் படித்தேன்.மொத்தம் 2,300 புத்தகங்கள் வேலூர் சிறைக்குள் எனக்கு வந்தன. 18 ஆயிரம் கடிதங்கள் வந்தன. நாள்தோறும் 30 கடிதங்கள்
வீதம் நான் எழுதினேன். சுமார் 15 ஆயிரம் கடிதங்கள் எழுதியிருப்பேன்.

சிறைகளுக்கு வேண்டிவிரும்பி நாங்கள் செல்வது இல்லை. ஆனால், சிறைக்
கொட்டடியில் தள்ளுவோம் என்பது அதிகார வர்க்கத்தின் நோக்கமாக இருக்கு மானால் அதை உதாசீனப்படுத்துவார்கள் போராட்டக் காரர்கள். ‘வாழ்க்கை என்பது கடல்; புயல் இல்லாத கடல் இல்லை, வாழ்க்கை என்பது வேள்வி; தீயில்லாத வேள்வி இல்லை.வாழ்க்கை என்பது போராட்டம்; புண் இல்லாத
போராட்டம் இல்லை’ என்ற காண்டேகரின் வார்த்தைகளைக் கல்லூரிக் காலத் தில் படித்தவன் நான்.

சுதந்திரம், விடுதலை என்ற வார்த்தைகளுக்கு இணையானது சிறைச்சாலை. ‘இந்த நாட்டின் கெளரவம் நீதான்’ என்று தாகூரால் பாராட்டப்பட்ட நேதாஜியும். எந்தப் பெயரைச் சொன்னால் இந்திய இளைஞர்களின் ரத்தம் கொதிக்குமோ, அந்த பகத்சிங்கும் வாழ்ந்த கோயில் அல்லவா சிறைகள்! தலைவர்களை
இன்னும் பெரிய தலைவர்களாகத் தந்த இடம் சிறைகள்தான்.

பாசிச முசோலினியின் இத்தாலியச் சர்வாதிகாரத்தைக் கிழவனாக இருந்தும்
கேள்வி கேட்டார் உமர்முக்தார் ‘நீ என்ன எனக்கு மரணதண்டனை தருவது? உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் மரண தண்டனை என்பது கடவுளின் தீர்ப்பு’ என்று தூக்கு மேடையேறினார் உமர். அடுத்த சில ஆண்டுகளில் சுட்டுக் கொல்லப்பட்ட முசோலினியின் தோலை உரித்து நடுவீதியில் தொங்கப்போட் டார்கள். சிறைக் கொட்டடியில் கட்டிவைத்து சவுக்கால் அடிக்கும் போதும்
அதிகாரி முகத்தில் உமிழ்ந்தான் கரிபால்டி.

சான்டியாகோவின் கிழக்குப் பகுதியில் இருந்த மான்கடா இராணுவத்தைத் தாக்கிய ஃபிடெல் காஸ்ட்ரோவைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தினார் கள். ‘எனக்குத் தண்டனை கொடுங்கள். அது எனக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால், வரலாறு என்னை விடுதலை செய்யும்.’ என்று பிளிறினான். இப்படிப் பட்ட இரும்புத் தலைவர்களை அடையாளம் காட்டியவை சிறைகள்தான்.

‘இனிமை விளையும் - ஏற்படும் இன்னல் களால்’ என்பது ஷேக்ஸ்பியரின் வார்த்தைகள். நானும் “சிறைவாழ்க்கையில் நேரத்தைச் செலவழிக்கவில்லை. வாழ்க்கையை வரவு வைக்கிறேன்!”

- ஆனந்த விகடன், 14.10.2009

No comments:

Post a Comment