Saturday, August 24, 2013

வாராது வந்த மாமணியே

வாராது வந்த மாமணியை,
கருத்துக் கருவூலக் களஞ்சியத்தை,
இயற்கை பறித்துச் சென்றதே!

அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு; #வைகோ இரங்கல் உரை

திராவிட இயக்கம் ஈடு இணையற்ற கருத்துக்கருவூலக் களஞ்சியத்தை இழந்து விட்டது; 

தமிழ் இனம் எழுத்தாலும், பேச்சாலும், தனக்கு அரண் அமைத்துத் தருகின்ற வலிய  படைக்கருவியை இழந்து விட்டது;

நட்புச் சுற்றம் நெஞ்சால் உயர்வாக நேசித்த ஒரு நண்பனை இழந்து விட்டது;
வெயிலாகிலும் நிழலாகிலும்,எதுவாகிலும் எங்களைச் சேதப் படுத்தாமல் பாது காத்த, எங்கள் குடும்பத்தலைவனை இழந்துவிட்டோம் என்று அந்தக் குடும்பம்
கண்ணீரில் தவிக்கின்றது;

வாராது வந்த மாமணி போல் கிடைத்து, அந்த வேகத்திலேயே எங்களிடம் இருந்து இயற்கை பறித்துச் சென்றுவிட்டதே என்ற வேதனையில்,நானும், மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும், இழப்பினுடைய பலத்த அடியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் துடித்துக் கொண்டு இருக்கின்றோம்.

இல்லத்தில் சந்திப்பு

என் மனதை மிகவும் ஈர்த்து வசீகரித்த ஆருயிர்ச் சகோதரர் அப்துல்லாஹ்
பெரியார்தாசன் அவர்களை, இதே இல்லத்தில் மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர், டி.ஆர்.ஆர். செங்குட் டுவன் அவர்களோடு சந்தித்த அந்த நிகழ்வு என் நெஞ்சில் நிழலாடுகிறது.

அண்மையில் ஒருநாள், அருமைச் சகோதரர் அழகுசுந்தரம் என்னைத் தொலை பேசியில் அழைத்து,அண்ணன் பெரியார்தாசன் அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்று இருப்பதாகக் கேள்விப் படுகிறேன் என்று கூறியவுடன்,
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நான் பெரியார்தாசனோடு பேசினேன்.

‘அண்ணே,மருத்துவமனைக்குச்செல்லுகின்ற அளவுக்கு என்ன பாதிப்பு?’என்று கேட்டேன். அவர் எப்படி நிகழ்ச்சிகளிலே இலகுவாக செய்திகளைச் சொல்லு வாரோ, அதேபோல, ‘ஈரல் முழுமையாகப் பழுது அடைந்து விட்டது; இனி
அதைப் பழுதுபார்க்க முடியாது என்று மருத்துவர்கள் கூறி விட்டனர்;இப்போது நான் வீட்டுக்குப் போய்க் கொண்டு இருக்கிறேன்’ என்று சொன்னார்.

எனக்கு மூச்சு நின்று விடுவது போல இருந்தது. தலையில் இடி விழுந்தது போன்ற செய்தியை, இப்படி எளிதாகச் சொல்லுகிறாரே என்று பதைபதைத்த
வனாகத்தான் நான் அன்றைக்கு அவரது வீட்டுக்கு வந்தேன்.

அப்போது நான் இந்தத் தோற்றத்தில் வரவில்லை. என்னைப் பார்த்த மாத்திரத் தில், ஆவலோடு எழுந்து வந்து, என் கைகளைப் பற்றிக் கொண்டு,‘மிக மகிழ்ச்சி யாக இருக்கின்றது; ஆனால் நீங்கள் வழக்கமாக அணிந்து வருகின்ற அந்தக்
கருப்புச் சால்வை அணிந்து கொண்டு வரவில்லையே?’ என்றார்.

இப்போது, நான் ஒரு மருத்துவ மனைக்குச் சென்று, அங்கே சிகிச்சை பெற்று வருகின்ற ஒருவரைச் சந்தித்து நலம் விசாரித்தேன். இது போன்ற சந்திப்பு களுக்கு, பிறரது கவனத்துக்கு ஆளாகாமல் செல்வேன்; அங்கிருந்து நேராக இங்கே வருகிறேன். இந்தப் பகுதியில் உள்ள தோழர்கள் யாரிடமும் சொல்ல வில்லை; மாவட்டச் செயலாளரை மட்டும் அழைத்துக் கொண்டு வந்தேன்’ என்றேன்.

நான் உள்ளே நுழைந்தவுடன் முதல் வேலையாக, நீங்கள் கழகத்துக்குத் தேர் தல் நிதி திரட்டுகிறீர்கள்;இந்த நிதியை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள் என்று பத்தாயிரம் ரூபாயை அவர் கொடுத்தபோது, நான் வெலவெலத்துப் போய்விட் டேன்.‘எண்ணண்ணே நீங்கள் நிதி தருகிறீர்கள்?’ என்றேன்.

‘நான் தாயகத்துக்கு வந்து கொடுக்க எண்ணி இருந்தேன். நீங்கள் இங்கே வரு வதாக,சற்று நேரத்துக்கு முன்பு தான், மாவட்டச் செயலாளர் கூறினார்’ என் றார்.

அன்றைக்கு மிக மகிழ்ச்சியாக என்னோடு சுமார் மூன்றரை மணி நேரம் உரை யாடிக் கொண்டு இருந்தார்.

தனது பேத்திகளை அழைத்து, என்னுடன் படம் எடுத்துக் கொள்ளச் சொன்னார். தொலைக்காட்சியில் பார்த்த தோற்றத்துக்கும், நேரில் பார்ப்பதற்கும் வேறு பாடு இருப்பதைப் பார்த்து, அவர்கள் சற்றே திகைத்தனர். ‘இது நம்ம வைகோ தான்’ என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லி,அவ்வளவு மகிழ்ச்சியாக என் னோடு உரையாடிக் கொண்டு இருந்தார்.

அவரது துணைவியாரும், இளைய மகன் சுரதாவும், பல நாள்களுக்குப் பிறகு, இன்றைக்குத்தான் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றார்; கவலை இன்றிக் கலகலப்பாகப் பேசிக் கொண்டு இருக்கின்றார் என்றனர்.அப்போது அவர், ‘இன் றைக்கு எனக்கு ஒரு புத்துணர்ச்சியும் தெம்பும் வந்து இருக்கிறது; இனி என் உடல் நலம் சீராகி விடும்’ என்றார்.

இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து,இந்தத் தமிழ் இனத்துக்கு ஒளி சிந்த வேண் டிய பேரறிஞர் அண்ணா அவர்களைப் புற்றுநோய் கொத்திக் கொண்டு போன தைப் போல, பெரியார் தாசனின் ஈரக்குலையில் புற்று நோய் நுழைந்து வி ட் டது; தம்பி வளவன் சொன்னதைப் போல, முதல் ஆய்விலேயே ஓரளவு எச் சரிக்கை செய்து இருக்கின்றார்கள். அதை அலட்சியப் படுத்திவிட்டார். அதற் குப் பிறகு, ஐரோப்பிய மண்டலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு வந்தார்.

தனிப்பெரும் சொற்பொழிவாளர்

அவர் எத்தனை ஆண்டுகள் தமிழகத்தில் பணி ஆற்றி இருக்கின்றார் என்பதை எல்லாம்,இங்கே உரை ஆற்றியவர்கள் விரிவாகச் சொன்னார்கள். அண்ணன்
சிலம்பொலியார், அவருடைய மேடைக்கலையைப் பற்றிச் சொன்னார். கானக் குரலில் பாடுகின்ற சாரீரத்தைச் சொன்னார். திரைப் படங்களில் இடைவேளை
விடுவதைப் போல, மேடையில் உரை ஆற்றிக் கொண்டு இருக்கும்போது, ‘இப் போது இடைவேளை; எல்லோரும் தேநீர் பருகி விட்டு வாருங்கள்’ என்று அறி வித்து, பத்து நிமிடங்கள் இடைவேளை விடுவாராம். அப்படி ஒரு பழக்கத்தை, மேடைகளில் எனக்குத்தெரிய எந்தச் சொற்பொழி வாளரும் கடைப்பிடித்ததாக, இதுவரை நான் அறிந்தது இல்லை. அத்தகைய ஆற்றல் அவரிடம் இருந்தது என்பதை, நமது கவிஞர் அறிவுமதி அவர்கள், ஈழ விடுதலைக்கும், இன விடு தலைக்கும், அணையாத கனலாக கவிதைகளைக் தந்து கொண்டு இருக்கின்ற உணர் வோடு, இங்கே குறிப்பிட்டார்கள்.

இந்தத் துக்க நிகழ்வில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர், மதிப்புக்குரிய சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் உள்ளிட்டவர்கள், தங்கள் துயரத்தை வெளிப்படுத் தி னார்கள். தன்னுடைய தந்தையைப் பற்றி, தம்பி வளவன் இங்கே பேசினார். 48 நாள்கள்தான், எங்கள் தந்தையோடு நெருக்கமாக இருக்கக்கூடிய நிலை ஏற் பட்டது என்று சொன்னார்.பொதுவாழ்வில் தன்னலம் இன்றிப் பணி ஆற்று கின்ற பலரது குடும்பங்களிலும் இதுதான் நிலைமை. அவர்கள், தங்களது பிஞ்சுக் குழந்தைகளின் மழலை மொழியைக் கேட்கின்ற காலங்கள் வாய்த்து
இருக்காது. அதற்குத் தங்கள் நேரத்தைச் செலவழித்து, அவர்களை மடியிலே போட்டுக் கொஞ்சி மகிழ்ந்து,அந்தக் குழந்தைகள் வளருகின்ற பருவத்தில் தங்கள் நேரத்தைச் செலவழிக்கின்ற வாய்ப்புகள் அமைந்து இருக்காது.

குளோபல் மருத்துவமனையில்..

நோய் முற்றிய நிலையில், குளோபல் மருத்துவமனைக்கு நமது தங்கத்தைக்
கொண்டு போய்ச் சேர்த்து இருக்கின்றார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், அன்று இரவு புதுவையில் இருந்த நான், மறுநாள் ஆகஸ்டு 16 ஆம் தேதி பகல் 12 மணி அளவில் அங்கே போய்ச் சந்தித்தேன்.அவர் எழுந்து அமர்வதற்கு முயன்றார்.நன்கு பேசினார். அப்போது அவரது பிள்ளைகள், அப்பா பேச முடி யாமல் இருந்தார்; உங்களைப் பார்த்தவுடன் தான் அருமையாகப் பேசுகிறார் என்று சொன்னார்கள்; அன்றைக்கும் அவர் மூன்று மணி நேரம் என்னோடு
பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, அவரது கைகளைப் பற்றியவாறே, அவ ரது படுக்கைக்குப் பக்கத்திலேயே அமர்ந்து இருந்தேன். அவரது உடற் கூட்டை விட்டு உயிர் போகப் போகிறது என்பதை,அப்போதே நான் புரிந்து கொண்டேன்.

அங்கே சிசிக்சை தருகின்ற மருத்துவர் உலகப் புகழ் பெற்றவர். அதிலும் குறிப் பாக, ஈரல் நோய்க்கு சிறப்பு மருத்துவர். அப்போது அவர் வெளிநாட்டில் இருந் தார். அவருக்குத் துணையாக இருக்கின்ற மருத்துவர் விவேகானந்தன் அந்த அறைக்கு உள்ளே வந்தார். அவரோடு நான் சற்று நேரம் தனியாகப் பேசினேன். என்ன நிலைமை? என்று கேட்டேன்.

‘அவரது ஈரலில் புற்று நோய் முற்றி விட்டது; இனி ஒன்றும் செய்ய முடியாது. சில நாள்கள்தான்; வலி இல்லாமல் பார்த்துக் கொள்கின்ற வைத்தியம் தான் இப்போது நாங்கள் செய்துகொண்டு இருக்கின்றோம்’ என்றார். மேலும் அந்த நோய் குறித்து நீண்ட விளக்கங்களைத் தந்தார். நான் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

அடுத்து அண்ணன் பெரியார்தாசன் அவர்கள் அருகில் சென்றேன். ‘என்ன டாக் டரும் நீங்களும் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டு இருந்தீர்கள்?’ என்று கேட் டார். அதற்கு மருத்துவர், உங்கள் நோயைப் பற்றி மட்டும் அல்ல; பொதுவாக இந்த மருத்துவமனை பற்றியும், சிகிச்சை முறைகள் பற்றியும் பேசிக்கொண்டு இருந்தோம் என்றார்.

பெரியார்தாசன் அவர்களுடைய உடலில் பல குழாய்கள் சொருகப் பட்டு இருந் தன. சிறுநீர் கழிக்க இயலாத நிலை. அப்போது மருத்துவர், ‘அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் நேற்று மாலைக்குப் பிறகு, செயல் இழந்து விட்டன’
என்றார். சிறுநீர் கழிப்பதற்காகப் பொருத்தப்பட்டு இருந்த குழாயைப் பார்த் தேன். சொட்டுச் சொட்டாக வெளியேறிக் கொண்டு இருந்தது.அதுவும் இரத்தம் கலந்த நிறத்தில் இருந்தது.

அவர் பேசிக்கொண்டே இருந்தார்;நிறையப் பேசினார். நான் கேட்டுக் கொண் டே இருந்தேன். குழாய் வழியாக திரவ உணவைச் செலுத்த முயன்றபோது, சற்றே அவரை நிமிர்த்தி உட்கார வைக்க முயன்றார்கள். அப்போது வலி தாங்க
முடியாமல், ‘ஐயோ’ என்றார். அடுத்து கட்டிலை விட்டுக் கீழே இறங்கி, நாற் காலியில் உட்கார்ந்தார். நானும் மற்றொரு நாற்காலியில் உட்கார்ந்தேன். இப் போது, மூக்கில் சொருகி இருந்த குழாய் வழியாக இரத்தம் வந்தது. மனதுக்கு எவ்வளவு துன்பமான நிலைமை?

பக்கத்தில் மல்லை சத்யா இருந்தார்; மற்றும் என்னோடு வந்தவர்களை எல் லாம் வாங்க வாங்க என்று அழைத்தார். ‘சத்யா உங்கள் உடல் எடை எவ் வளவு?’ என்று கேட்டார். ‘80 கிலோ’ என்றார். அப்படியா, உங்கள் கையில் முழு பலத்தையும் செலுத்தி,என் கையை மடக்கிப் பாருங்கள் என்றார். அப்படியே சத்யா மடக்கிப் பார்த்தார். முடியவில்லை.

அப்போது சொன்னார்: ‘திராவிடர் கழகத்தில் ஒரு கட்டத்தில் எதிரிகள் தாக்கு கின்ற சூழ்நிலை வந்தது. இனி தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ள வேண் டும் என்று கருதி, ஜப்பானுக்குப் போய் கராத்தே, ஜூடோ கலைகளில் நான் பயிற்சி பெற்றேன்’ என்று சொன்னார். ஒரு டன் எடை அல்ல,அதற்கும் மேலே என்னால் தூக்கிக் காட்ட முடியும்; அத்தகைய பயிற்சிகளைப் பெற்று இருக் கிறேன்’என்று சொன்னார். பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், உடற்கல்வி
ஆசிரியராகப் பயிற்சி கொடுப்பதைப் பற்றிச் சொன்னார். அவரோடு ஓடித்
திரிந்த நாள்களைக் கேலியாகக் குறிப்பிட்டார். ‘அந்தப் பிள்ளை என்னுடைய வீட்டுக்கு அடிக்கடி வந்து போகும்’ என்றதுடன், பேரறிவாளனைக் கைது செய் வதற்கு முன்பு இருந்த நிலைமையைச் சொன்னார்.அருமையான பிள்ளை என்று கூறி வேதனைப்பட்டார்.



கலிங்கப்பட்டியில் பெரியார்தாசன்

‘பெரியார்தாசன்’ என்ற பெயரைக் கேட்டாலே, ஒரு எரிமலையின் சீற்றம்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். 2012 ஆம் ஆண்டு, தைப்பொங்கல் திரு நாளை ஒட்டி, எங்கள் கிராமத்தில், திருவள்ளுவர் கழக விழாவில் பட்டிமன்றத் துக்கு நடுவராகத் தலைமை தாங்கி உரை ஆற்ற அழைத்துச் சென்று இருந் தேன்.அன்று அவர் ஆற்றிய உரையில், அனைவரையும் விலா நோகச் சிரிக்க
வைத்து, சிந்திக்க வைத்தார். அவரது குரல் அவ்வளவு தெளிவாக இருந்தது.
பாடல்களை அருமையாகப் பாடினார்.இன்பத்துப் பாலைப் பற்றி அவர் தந்த
தெளிவுரையை, இங்கே பேராசிரியர் செல்வகணபதி அவர்கள் குறிப்பிட்டார் கள். அதில் ஒரு பாடலை வைத்துக் கொண்டு, நெடுநேரம் பேசினார். அதற்கு உரிய பல விளக்கங்களைத் தந்தார். பல மேற்கோள்களைக் காட்டினர். எதற் காக வள்ளுவர் இந்தச் சொற்களைப் பயன் படுத்தினார்? என்பதற்கான விளக் கங்களைத் தந்தார்; அதைக் கேட்டு நான் வியந்து போனேன்.

பச்சையப்பன் கல்லூரியில் பொருளியல் இளங்கலை படித்தவர்.தத்துவத் துறையில் மெய்ப்பொருள் இயல் முதுகலை படித்தவர். பின்னர் இலண்டன் சென்று, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உளவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், உளவியல்
துறையில் வருகைதரு பேராசிரியராக சிறப்புப் பெற்று இருக்கின்றார். தாயகம்
திரும்பிய பின்னர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவ இயல் துறைப் பேராசிரியராகவே,ஏறத்தாழ 34 ஆண்டுகள் பணி ஆற்றி இருக்கின்றார். உளவியல் பிரச்சினை களில் சிக்கித் தவிப்போருக்குச் சிகிச்சை தருகின்ற ஆலோசனை மருத்துவராகவும் அவர் இயங்கினார்.

தந்தை பெரியாரின் அனைத்து நூல்களையும் முழுமையாகப் படித்தவர். அப்படி ஒருவரை இனி நாம் பார்க்க முடியாது. தந்தை பெரியாரைப் பற்றியோ, திரா விட இயக்கத்தைப் பற்றியோ, யாராவது விமர்சிப்பார் களானால், அவற்றை எதிர்கொண்டு,சரியான சம்மட்டி அடி கொடுக்கக் கூடிய ஞானம் அவருக்கு இருந்தது.அவருக்கே உரிய வாதத்திறமையோடு கருத்துகளை எடுத்து வைப் பார். பாபா சாகேப் அண்ணல் டாக்டர் அம்பேத் கருடைய அனைத்துப் படைப்பு
களையும் ஆய்ந்து கற்று இருக்கின்றார்.

நான் கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள், கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் அழைப்பின்பேரில்,அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் பற்றி உரை ஆற்றி னேன். அதற்காக அண்ணன் பெரியார்தாசன் அவர் களுடன் கலந்து உரையாடி னேன்.சுமார் நான்கு மணி நேரம் விளக்கங்கள் தந்தார். அதைக்கேட்டு நான் வியந்து போனேன். இப்போது தோழர்கள் முழக்கங்கள் எழுப்புகின்றார்களே,
அவை எதனால் எழுப்பப்பட்டது? எந்தக் கட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் அதைச் சொன்னார்? என்று அம்பேத்கருடைய பன்முகப் பரிமாணத்தை அவர் விளக்கி னார். அப்படிப்பட்ட ஆற்றல் நிறைந்த ஒரு கருத்துக் களஞ்சியம்.

அப்துல்லாஹ் பெரியார்தாசன் என்ற பெயரோடு தன்னைப் பதிப்பித்துக்கொண் ட, நம்முடைய மானமிகு பெரியார்தாசன் அவர்கள், ‘சித்தார்த்தன்’ என்ற பெய ரில், புத்தரும் அவரது தம்மமும், என்ற புத்தரும் அவரது தம்மமும்,தலைப்பில் அம்பேத்கர் எழுதிய நூலை, தமிழ் ஆக்கம் செய்து தந்து இருக்கின்ற நூல், மூன்று இலட்சம் படிகள் தைவான் நாட்டில் அச்சிடப் பட்டு, உலகின் பல பகுதி களுக்கும் இலவசமாகவே அனுப்பப்பட்டு இருக்கின்றது. அதைப் பற்றி என் னிடம் அவர் கூறினார்.

ம.தி.மு.க.வில் பெரியார்தாசன்

சோதனையான காலத்தில் எங்களுக்குத் தோள் கொடுக்க வந்தார். பேரறிவா ளன், சாந்தன், முருகனுடைய தூக்குத்தண்டனை, 2011 ஆம் ஆண்டு செப்டெம் பர் 9 ஆம் நாள் நிறைவேற்றப்படும் என்று வந்த செய்தியால், கோடானுகோடித்
தமிழர்கள் மனம் பதைபதைத்து இருந்த வேளையில், ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம் ஜெத்மலானி அவர்கள் எடுத்து வைத்த அற்புதமான வாதங்களால்,அதற்குத் தடை ஆணை கிடைத்தது.நீதிமன்றத்தை விட்டு வெளியே வருகின்ற வேளையில் அவரைச் சூழ்ந்துகொண்ட செய்தியா ளர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தபோது, ‘எனக்கு நன்றி சொல்லாதீர்கள்;
வைகோவுக்கு நன்றி சொல்லுங்கள்’என்று கூறினார். நான் ஒரு அஞ்சலைக்
கொண்டு போய்ச்சேர்க்கின்ற வேலையைச்செய்தேன் அவ்வளவு தான். அன்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மையாரும்,ஜெத்மலானி அவர்கள் தங்கி இருந்த இடத்துக்கு வந்து நன்றி தெரிவித்தார்கள்.

மறுநாள் காலையில், நம்முடைய சோமு,சத்யா என்னிடம் பேசினார்கள்.‘பெரி யார்தாசன் அவர்கள், நம்முடைய இயக்கத்தில் சேர விழைகிறார்’ என்று தெரி வித்தார்கள். என் காதுகளில் இன்பத் தேனாறு பாய்ந்தது. எவ்வளவு பெரிய ஆற்றலாளர், அறிவுச் சுரங்கம்,சுயமரியாதை வீரர், தனக்காக எதையும் நாடா தவர், அவர் நம் இயக்கத்தில் சேருகிறார் என்றால், ஒரு பத்து ஆயிரம் யானை பலம் வந்து சேருகிறது என்று நான் அகமகிழ்ந்தேன்.

நான் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கை பரப்புச்செய லாளனாகப் பணி ஆற்றி இருக்கின்றேன்; அவருடைய அன்பைப் பெற்று இருக் கின்றேன்.நான் எதையும் எதிர்பார்த்து வரவில்லை;எனக்கு இயக்கத்தில் எந்தப் பதவியும் வேண்டாம் என்றார்.மூவர் தூக்கு விசயத்தில் அவருக்கு ஏற்பட்ட சில அனுபவங்களைச் சொன்னார். ‘உங்களுக்குப் பக்கத்தில் உங்களுடன் இருந்து பணி ஆற்ற வேண்டும் என்று நான் விரும்பினேன்’ என்று குறிப்பிட் டார். அவ்விதமே எங்கள் இயக்கத்தில் சேர்ந்து பணி ஆற்றினார். எண்ணற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 2011 செப்டெம்பர் 15 ஆம் நாள், நெல்லை யில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் ஆற்றிய உரையும், கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற மாநாட்டில், தந்தை பெரியார் அவர்களு டைய திரு உருவப் படத்தைத் திறந்து வைத்து அவர் ஆற்றிய உரையும், வர லாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய உரைகள் ஆகும்.

விருதுநகர் மாநாட்டுக்கு வருவேன்

இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டியவர். கடந்த ஆண்டு, இஃப்தார் நிகழ்ச்சி யில், சீமா பசீர் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவுக்கு வந்து சிறப்பாக உரை ஆற்றினார்.இந்த ஆண்டு உடல்நலக்குறைவால் அவரால் வர முடியவில்லை. இவ்வளவு விரைவில் நம்மை விட்டுப் போய்விடுவார் என்று நான் நினைக்க
வில்லை. குளோபல் மருத்துவ மனையில் அவரைச் சந்தித்தபோது கூட, ‘அண்ணே விருதுநகர் மாநாட்டில், நடேசனார், நாயர்,தியாகராயர் ஆகிய மூன்று தலைவர்களது படங்களையும் சேர்த்து நீங்கள்தான் திறக்கின்றீர்கள்’
என்றேன். கடந்தவாரம் சங்கொலியில் அறிவிப்பும் வெளிவந்து இருக்கின்றது.
‘காரில் வந்து விடுகிறேன்; அல்லது விமானத்திலாவது வந்து விடுகிறேன்’
என்று சொன்னார்.

சுயமரியாதை வீரர்

அவர் ஒரு சுயமரியாதைக்காரர். ஏன்? எதனால்? எப்படி? என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டு, அந்தக் கேள்விகளுக்கு விடை கண்டவர்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும்,அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்ற விதத்தில் தன்னை வளர்த்துக் கொண்டவர். எவருக்கும் அஞ்சாது கருத் துகளைச் சொன்னவர். இந்தத் தமிழ்க் குலம் தழைக்க வேண்டும் என்று பாடு பட்டவர். தந்தை பெரியாரை நெஞ்சில் போற்றியவர்; திராவிட இயக்கத்தின் தன்மான வீரராக உலவியவர். ‘நான் மாணவர்களுக்குப் பயிற்றுவித்துக் கொண்டு இருந்த ஒரு பேராசிரியர்; என் மரணத்துக்குப் பிறகும் என் உயிர் அற்ற சடலம் அந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்படு கிறேன்; எந்தத் தடைகள் வந்தாலும், என் உடலை சென்னை மருத்துவக் கல் லூரி மருத்துவ மனையில் ஒப்படைத்து விடுங்கள் என்று தன் பிள்ளைகளிடம்
சொன்னார். சாவைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை, அச்சமும்
இல்லை என்று கூறி இருக்கின்றார்.

மரணத்தை வென்ற ஒரு மாமனிதனாக,இந்தக் கண்ணாடிப் பேழைக்கு உள்ளே, புன்சிரிப்போடு படுத்து இருக்கின்றார். அவரது விருப்பப்படி, அவரது விழிகள் சங்கர நேத்ராலயாவில் ஒப்படைக்கப்பட்டு விட்டன. உடல், சென்னை மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்படுகிறது. அவரது மருத்துவ சிகிச்சைக்கு, நடமாடும் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த நாவலர் நெடுஞ் செழியன் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த மருத்துவர் மனோரமா அவர்கள் உதவியாக இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இஸ்லாத்தில் இணைந்தார்

பெரியார்தாசன் தமது விருப்பப்படி, பெளத்த நெறியைப் பின்பற்றினார்; இஸ் லாத்தில் சேருவது பற்றி, இங்கே எவருக்கும் தெரிவிக்கவில்லை. தாமே
விரும்பி, மெக்காவுக்குச் சென்று இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்தார்.
இலட்சக்கணக்கான மக்கள் திரளுகின்ற அந்த இடத்தில்,தலைமை இமாம் உரை ஆற்றியதற்குப் பிறகு, நமது அப்துல்லாஹ் பெரியார் தாசன் அவர்கள், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு ஆற்றிய உரையை, அல் ஜசீரா தொலைக்காட்சி அகிலமெங்கும் ஒளிபரப்பியது. அது அவர் தேர்ந்து எடுத்துக் கொண்ட வழி.உலமாக்கள்,இஸ்லாமியப் பெரியவர்கள் வந்து எங்களிடம் பேசி னார்கள். ‘அவர் விரும்பியபடி உடலை மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படை யுங் கள். அதற்கு முன்பாக,அண்ணா நகர் பெரிய பள்ளிவாசலில் ஒரு தொழுகை நடத்தி விடுகிறோம்’என்றார்கள்.

பெரியார்தாசன் தமது எழுத்துகளால் நம்மிடையே வாழ்வார். அவருக்கு உயர்ந்த புகழ் அஞ்சலி விழா நடத்த வேண்டும் என்று, நமது பாவலர் அறிவுமதி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அவரது வாழ்க்கை வரலாற்றை நந்தா நூலாகத் தீட்டி இருக்கின்றார். அது வெளிவர வேண்டும் என்று பிள்ளைகள் கேட்டுக் கொண்டார்கள். நீங்கள் எடுக்கின்ற அனைத்து முயற்சி களுக்கும்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையாகத் தோள் கொடுத்துத் துணை நிற்கும். அவர் எங்கள் மனங்களில் வாழ்கிறார்.

தன்னுடைய பேச்சால், எழுத்துகளால்,தமிழகத்தின் இலட்சோபலட்சம் மக்க ளை ஈர்த்தவர். குடிசைவாழ் பாமரனும் புரிந்து கொள்கின்ற வகையில் பேசிய வர்; பேரறிவாளர்கள் இருக்கக்கூடிய ஒரு சிந்தனைச் சோலையிலும் உலவு வார். அத்தகைய ஆற்றல் அவரிடம் பொதிந்து கிடந்தது.

அவர் என்னை எப்படி நேசித்தார் என்று எனக்குத் தெரியவில்லை. மாணவர் நகலகம் அருணாசலம் அவர்கள் நடத்திய இசைவிழாவில், அண்ணா மலை மன்றத்தில் தமிழ் இசை குறித்து நான் ஆற்றிய உரையைக் கேட்டு, பேசி முடித் தவுடன் ஓடி வந்து என்னைக் கட்டித்தழுவிக் கொண்டு பாராட்டினார்.

அவர் கடைசியாக என்னிடம் பேசியவற்றை எல்லாம் இங்கே குறிப்பிட விரும் பவில்லை. ‘ஆனால், நாம் ஐம்பது ஆண்டுகள் பின்னே போய் விட்டோம்; இனி வருகிற காலம் துன்பமானதாக இருக்கும்; பெரும் பழிக்கு ஆளாகி இருக் கி றோம்;திராவிட இயக்கம் பழிக்கும், பலரது விமர்சனக் கணைகளுக்கும் உள் ளாக்கப்பட்டு விட்டது’ என்று தன் வேதனையைக் கொட்டினார். ஈழத்தைப் பற்றிச் சொல்லும்போது, ‘அவர்களை அழிக்க முடியாது; மீண்டும் வருவார்கள்; சுதந்திர வேட்கையை யாரும் ஒடுக்க முடியாது’ என்றார்.

புகழால் வாழ்கிறார்

சிகாகோவில் எந்த அரங்கத்தில் வீரத்துறவி விவேகானந்தர் உரை ஆற்றிப் பெருமை பெற்றாரோ, அதே அரங்கத்தில் உரை ஆற்றிய பெருமைக்குரியவர் நம் பெரியார்தாசன். சொல்லாற்றல் எழுத்தாற்றல் நிறைந்த ஒரு பேரறிஞனை இழந்து விட்டோம். பார்வை இல்லாதவனுக்கு இடையில் பார்வை கிடைத்து மீண்டும் பறிபோனதைப் போன்ற வேதனையில் நாங்கள் இருக்கின்றோம். ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமற் போயிற்றே?’ என்று கிராமங்களில் ஒரு
பழமொழி சொல்லுவார்கள்.அத்தகைய உணர்வோடு இருக்கின்றோம். உல கெங்கும் வாழுகின்ற தமிழர்களின் உள்ளங்களில் துயர் மண்டி விட்டது. வேதனைத் தணல் எரிகிறது. ஆயினும், அவரது எழுத்தும்,பதிவு செய்யப்பட்ட அவரது உரைகளும் நம்மிடையே வாழும்.அப்துல்லாஹ் பெரியார் தாசன் புகழால் வாழ்கிறார்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment