Saturday, August 24, 2013

நேர்மையின் இமயம்! பகுதி 4

சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையாகப் பேசுகிறபோது, அவர்கள் ஒவ்வொரு வரும் இன்றைக்கு எங்கள் தொகுதியில்,இப்பொழுது இருக்கிற நிலைமையில் 3 மருத்துவ மனைகள் திறக்க வேண்டும்; 15 நியாயவிலைக் கடைகள் திறக்க வேண்டும்;10 கஞ்சித் தொட்டிகள் திறக்க வேண்டும் என்கிறார்கள். இன்னொரு எம்.எல்.ஏ.வருகிறார். இல்லை எங்கள் தொகுதியில் 4 மருத்துவமனை கட்ட வேண்டும். 3 நியாய விலைக்கடைகள் வேண்டும் என்று வரிசையாகப் பேசு கிறார்கள்.

முதலமைச்சர் ராஜாஜி முகம்சுளிக்கிறார்.அவர் சொல்கிறார்: இன்று விவாதத் தில் பேசிய ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தங்கள் தொகுதிக்கு அது வேண்டும்,இது வேண்டும் என்றே பேசிக்கொண்டு இருந்தார்கள்.இது வருந்தத்தக்க நிலைமை. தொகுதி கண்ணோட்டம் மட்டுமே இவர்களுக்கு இருக்கிறது. எம்.எல்.ஏ.க்க ளுக்கு பரந்து விரிந்த இந்த மாகாணத்தைப் பற்றிய கண்ணோட்டம் இல்லா மல்போயிற்றே’ என்று குறைபட்டுக் கொள்கிறார்.எம்.எல்.ஏ.க்களுக்கு வருத் தம். அன்றைய சட்டசபைக்கூட்டம் முடிந்து விட்டது.

மறுநாள் கூட்டம் தொடர்கிறது. ஜீவா பேச எழுகிறார்.

‘நேற்றைக்கு மாட்சிமை தங்கிய நமது முதல் அமைச்சர் அவர்கள், எம்.எல்.ஏக் களுக்கு எல்லாம் தொகுதி கண்ணோட்டம் தான் இருக்கிறது, மாகாணத்தைப் பற்றிய கண்ணோட்டம் இல்லை என்று ரொம்ப வருத்தப்பட்டார். அவர் வருத் தப்படத்தான் செய்வார். ஏனென்றால்,இங்கே பேசிய ஒவ்வொருவருக்கும் ஒரு தொகுதி இருக்கிறது. அந்தத் தொகுதியில் ஓட்டு வாங்கி வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக வந்து இருக்கிறார்கள்.

அவர்கள் அந்தத் தொகுதி மக்களுக்குக் கடமையாற்ற வேண்டிய பணிசெய்ய வேண்டிய கடமை இருக்கிறது.ஆக, ஒவ்வொரு தொகுதியிலும் தேர்ந்து எடுக் கப் பட்டவர்கள் தங்களுடைய தொகுதிகளுக்காகத்தான் பேசுவார்கள். ஆனால், பாவம் நமது முதலமைச்சருக்கு தொகுதியே கிடையாது. அவர் எந்தத் தொகுதி யிலும் வெற்றி பெற்று வரவில்லை. மக்களிடம் ஓட்டு வாங்கி வரவில்லை. பரிதாபத்துக்கு உரியவர். அவருக்கே தொகுதி இல்லை. அதனால் தொகுதி கண் ணோட்டத்தை நாம் அவரிடம் எதிர்பார்க்க முடியாது’ என்று சொன்னவுடன், சபையில் அனைவரும் கைதட்டியது மட்டுமல்ல. முதலமைச்சர் ராஜாஜியும்
மேஜையைத் தட்டினாராம்.

இப்படி அவருடைய பேச்சு சாதுர்யம் என்பது,எதிராளியை மனம்நோகச் செய் யாமலேகூட வாழைப் பழத்தில் ஊசியைச் செலுத்துவது என்பதைப்போல,
அதைச்சொல்லக்கூடிய ஆற்றல் அவருக்கு இருந்தது.அப்படிப்பட்ட அனைத் துத் திறமைகளையும் பெற்று இருந்த ஜீவா அவர்களின் வாழ்க்கை முழுமை யும் வறுமைதான்.

ஜீவாவை அனைவரும் போற்றினார்கள். காமராஜர் போற்றினார் - அவர் எப் படிப் போற்றினார் என்பதை நான் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கிறேன்.ஒருகட்டத்தில், சென்னையில் தாம்பரம் பகுதியில் குடிசை வீட் டில்தான் வசித்தார். அந்த வீட்டில் மழை பெய்தால் குடிசை ஒழுகும். உள்ளே சேறும் சகதியுமாக இருக்கும்.அப்படிப்பட்ட குடிசையில்தான் அவர் வாழ்ந்தார்.

அப்படி ஒருகட்டத்தில்,அவர் கடுமையாகக் காங்கிரசை விமர்சித்துக் கொண்டு இருந்தார். காமராசர் முதலமைச்சர். அங்கே இருக்கின்ற ஒளவை ஆரம்பப்
பாடசாலை ஆண்டு விழாவுக்கு வருகிறார். ஜீவா வசித்த குடிசை வீட்டுக்குப் பக்கத்தில்தான் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளியே ஜீவா தொடங்கிய பள்ளிக் கூடம்தான்.ஆனால்,ஆண்டு விழாவுக்கு ஜீவாவுக்கு அழைப்பு இல்லை.வருடம் 1961. காமராசர் விழாவுக்கு வருகிறார்.அப்பொழுது சென்னை கலெக்டராக இருந்த திரவியமும் அங்கே வருகிறார். அவரும் சுதந்திரப் போராட்டத்தில்
ஈடுபட்டவர்தான்.

விழாவுக்கு வந்தவுடன் காமராசர் திடீரென்று ஓரிடத்தில் இறங்கி, தெருவில் நடக்க ஆரம்பிக்கிறார். நடந்தவர் ஓரிடத்தில் நின்று, இங்கே ஜீவானந்தம் வீடு எங்கே இருக்கிறது?என்கிறார்.இதில் ஆச்சர்யம் என்ன வென்றால்,அவர் நின்று கேட்கின்ற இடம் ஜீவாவின் குடிசை வீட்டு வாசல்தான். இங்கேதான் ஜீவா னந்தம் இருக்கிறார் என்கிறார்கள். உள்ளே நுழைகிறார்.

வெளியூர் சுற்றுப்பயணம் சென்றுவிட்டு வந்து,எண்ணெய் தேய்த்துக் கொண்டு குளிக்க வேண்டும் என்று இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு இருக் கிறார் ஜீவா. அரவம் கேட்டு, யாரது? என்கிறார்.காமராசரை பார்க்கிறார். என்ன விஷயமாக நீங்கள் இங்கே வந்து இருக்கிறீர்கள்? என்கிறார். என்ன ஜீவா, ஒளவை பள்ளிக்கூடம் ஆண்டு விழா. நீங்கள் வரவில்லையா? என்கிறார் காம ராசர்.

‘எனக்குத் தெரியாதே’ என்கிறார் ஜீவா. காமராசர் ஒருபார்வை பார்க்கிறார். சட்டையைப் போட்டு விட்டு வாருங்கள் என்று அழைத்துக் கொண்டுசெல்ல,
காமராசருக்குப் போடப்பட்ட நாற்காலியில் ஜீவாவை அமர வைத்தார் காம ராசர்.

அதைவிட வேதனை என்ன தெரியுமா? மீண்டும் இன்னொருமுறை வருகிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டு வருகிறார். அந்தக்
குடிசையின் நிலைமையைப் பார்க்கிறார்.மழை கொட்டினால் உள்ளே தண்ணீர் பெருகிவிடும்.அண்ணாந்து பார்த்தால் அந்த ஓட்டைக்குடிசை வழியாக வானத் தைப் பார்க்கலாம்.என்ன ஜீவா நீங்கள் இந்தக் குடிசையில் இருக்கிறீர்கள். நான் ஒரு வீடு ஒதுக்க ஏற்பாடு செய்கிறேன். வருகிறீர்களா? என்கிறார் காமராசர்.

அதற்கு ஜீவாவோ, ‘இல்லை. இந்த நாட்டிலே வசிக்கின்ற எல்லா மக்களும் மாடி வீடு கட்டி வாழும்போது அடியேனும் அப்படிப்பட்ட வீட்டுக்கு வருவேன்.’ என்றாராம்.

‘தூக்குமேடைச் சிங்கம்’ என்று கவிதையில் ஜீவா எழுதுவார். காமராசர் சொல் கிறார், சிங்கமடா, அவர் பேச்சைக் கேட்க வேண்டுமே, எரிமலை வெடிப்பதைப் போல இருக்கும். அதுவும் கம்ப இராமாயணத்தை அவர் பேசக் கேட்க வேண் டுமே, எப்பேர்ப்பட்ட தலைவர்! தொழிலாளிகளுக்காகவே போராடி வாழ்ந்து, குடிசை வாழ் மக்களுக்காகவே போராடிக் கொண்டு இருக்கின்ற அந்த மனு ஷன், இப்படி வந்து குடிசையில் கிடக்கிறாரே என்று காரில் திரும்பிச் செல்லும் போது காமராசர் தமது உள் ஆதங்கத்தைச் சொல்லிக்கொண்டே போனாராம்.

இப்படி வாழ்ந்த ஒரு மனிதன், நேர்மையின் நெருப்பாக வாழ்ந்த ஜீவா, இந்தப் பூதப்பாண்டி மண்ணில் பிறந்தவர்.

ஏழ்மை வறுமை இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், எதையும் தேடிக் கொள்ளாமல் வாழ்ந்தவர். அவருடைய வாழ்க்கையே போராட்ட வாழ்க்கை தான்.

1932 இல் சிறைக்குப் போய்விட்டு வந்து மீரட் சதி வழக்கில் இருந்த கம்யூனி ஸ்ட் தோழர்களோடு பழகித்தான், பொதுவுடைமை இயக்கத்தின் தாக்கம்
எனக்கு வந்தது’ என்கிறார். 1943 இல் விடுதலை பெற்று வந்ததற்குப்பிறகு தோழர் ராமமூர்த்திக்கு எழுதிய கடிதத்தில் சொல்கிறார்.நானும், இளங்கோவும் விடுதலை பெற்று வந்தோம்.ஆனால், ஊரைவிட்டு வெளியிலும் போகக் கூடாது.பேசக்கூடாது, வாய்ப்பூட்டுச் சட்டம். இந்த பூதப் பாண்டியை விட்டு எங்கேயும் போகக்கூடாது.அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிடுகிற இளங்கோ தான், என்னுடைய அருமைத் தம்பி இலக்குமணனின் தந்தை என்கிறபோது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!

அதுமட்டும் அல்ல. இலக்குமணனின் தந்தை இளங்கோவின் உண்மையான பெயர் கிருஷ்ணன் பிள்ளை. அவரைத்தான், இளங்கோ என்று ஜீவா அழைக் கிறார். அதைப்போலத்தான் நடராஜனை,மணிமொழி என்கிறார். நாகலட்சுமி யை, கிளிமொழி என்கிறார். ராமசாமியை, தொல்காப்பியன் என்கிறார். இப்படி ஒவ்வொருவருக்கும் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுகிறார்.

அப்படிப்பட்ட ஜீவா அவர்கள், சிறையில் எவ்வளவோ துன்ப துயரங்களை ஏற்றுக் கொண்டு, பொதுநல வாழ்வுக்காகவே இருந்தவர்.

1948 ஆம் ஆண்டில் பத்மாவதி என்கின்ற மாதரசியை மணந்து அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள், ஸ்டாலின் மணிக்குமார் தலைப்பிள்ளை. உஷா தேவி, உமா தேவி என இரண்டு பெண் பிள்ளைகள். இந்த ஸ்டாலின் மணிக்குமார் அவர்கள், நம்மி டையே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

அருமைத் தோழர்களே, ஜீவாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. 1963 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி ஏறத்தாழ பொங்கல் திருநாள் சமீபத்தில் கம்யூ னிஸ்ட் கட்சி கூட்டத்தில் பேசுகிறபோது, ‘சாவு என்னை நெருங்கி வந்தாலும் விரட்டி அடிப்பேன். நான் ஏற்றுக்கொண்டு இருக்கிற இலட்சியத்தை, ஏந்தி இருக்கிற செங்கொடியை, நான் சார்ந்து இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சியை, வாகை சூடவைத்து விட்டுத்தான் நான் மடிவேன். சாவையும் விரட்டி அடிப் பேன்’ என்று ஜனவரி 14 ஆம் தேதி பேசுகிறார்.

அவரது மனைவி பத்மாவதி அம்மையார் அவர்கள் சமூகநலத்துறையில் பணி யாற்றிக் கொண்டு இருக்கிறார்.அவரிடமிருந்து கடிதம் வருகிறது. மகள் பூப் படைந்துவிட்டாள். பூப்புனித நீராட்ட வேண்டும். 19 ஆம் தேதி ஏற்பாடு செய்து இருக்கிறோம். நீங்கள் வராமல் இருந்து விடாதீர்கள் என்று கடிதம் வருகிறது.
மகிழ்ச்சியோடு நான் அந்த நிகழ்ச்சிக்குப் போகப்போகிறேன் என்று உணர் வோடு இருக்கிறார்.

இதற்கு நடுவே, 16 ஆம் தேதி நடந்து வந்து கொண்டு இருக்கும்போதே திடீ ரென்று மயக்கம் ஏற்படுகிறது.அப்படியே உட்காருகிறார். அவருடைய மகள்
குமுதாவிடத்தில் தாம்பரத்தில் சொல்கிறார்: ‘நீ கவலைப்பட வேண்டாம். சென் னைக்குச் சென்றுவிடு,கோவிந்தனிடம் தகவல்சொல்லிவிடு. நான் கடையில்
போய் இருந்து கொள்கிறேன்’ என்று கோவிந்தன் கடையில் மதியம் இருக் கிறார்.

அதன்பிறகு, சென்னைக்குப் போய் தாமரை அலுவலகத்துக்குச் சென்று, தாம ரை மலருக்கான ஆலோசனைகளைச் சொல்லிவிட்டு பூமிதான் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டுத்தான் தாம்பரத்துக்கு வருகிறார் அதைப் பற்றிச்சொல் கிறார். அப்பொழுது குமுதா,‘அம்மாவுக்குக் கடிதம் எழுதி விடலாமே, பயமாக
இருக்கிறது’ என்றவுடன், நான்தான் நன்றாக இருக்கிறேனே, நேராக என்னைப் பார்க்கிற நீயே இப்படிப் பயந்து கவலைப்பட்டால் கடிதத்தில் எழுதினால், அவள் எவ்வளவு பயப்படுவாள்? நாம்தான் வெள்ளிக்கிழமை 18 ஆம் தேதிதான் அங்கே சென்று விடுவோமே,அதற்கு மத்தியில் என்ன நடந்துவிடப் போகிறது? என்கிறார்.

நடந்து விட்டதே? 17 ஆம் தேதி அன்று இரவு அவரது உடல்நலம் மீண்டும் கெடு கிறது. மயக்கம் ஏற்படுகிறது.அவருடைய அண்ணன் மகன் மோகன் காந்தி ராமனுக்குத் தகவல் கொடுத்து வரவழைக்கிறார்கள். அவர் வந்து அழைத்துச் செல்கிறார்.எங்கே போக வேண்டும்? என்றபோது, எந்த மருத்துவரிடமாவது கூட்டிச்செல் என்கிறார்.

போய்க்கொண்டு இருக்கும்போதே, எங்கேயப்பா இருக்கிறோம்? என்று கேட் கிறார். ‘கிண்டி வந்தாயிற்று’ என்கின்றனர். அதன்பிறகு மயிலாப்பூர் சென்று
பத்மநாபனை அழைத்துக்கொண்டு, பொது மருத்துவ மனைக்குச் செல்கிறார் கள். சிகிச்சை தரப்படுகிறது.பிராண வாயு செலுத்தப்படுகிறது. சிறிதுநேரம் நன்கு தூங்குகிறார்.

ஆனால், 18 ஆம் தேதி விடியற்காலை 6 மணிக்கு, அந்த மாமனிதன் உயிர் பிரிந்தது.

ஜீவா என்கின்ற மாமனிதனின் உயிரற்ற சடலத்தைத் தூக்கிச் செல்கிறபோது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அந்த ஊர்வலத்தில் நடந்து வருகிறார். ம.பொ.சி.
வருகிறார். டி.கே.சண்முகம் வருகிறார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் வருகிறார் கள். இறுதிச்சடங்குகள் நிறைவேற்றப்படுகிற வேளையில் தான் டி.கே.சண் முகம் அங்கே பாடுகிறார்.

சரித்திரப் பிரசித்திப் பெற்ற ஜீவாவின் சரித்திரத்தில் இடம்பெற்ற பாடலைப் பாடுகிறார்.

காலுக்குச் செருப்பு மில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாழுக் குழைத்தோ மடா - என் தோழனே
பசையற்றுப் போனோ மடா
நோய்நொடிகள் வெம்புலிபோல்
நூறுவிதம் சீறு வதால்
தாய்தந்தையர் பெண்டுபிள்ளை - என் தோழனே
சாய்ந்து விழக் கண்டோமடா

என்ற பாடலை டி.கே.சண்முகம் அழுதுகொண்டே பாடுகிறார்.

பாலின்றிப் பிள்ளை அழும்
பட்டினியால் தாயழுவாள்
வேலையின்றி நாம் அழுவோம் - தோழனே
வீடுமுச் சூடும் அழும்

என்று டி.கே.சண்முகம் பாடிக்கொண்டே அழுகிறார்,அழுதுகொண்டே பாடு கிறார். ஜீவாவின் உடலுக்கு முன்னே திரண்டு இருந்த அனைவரும் அழுதார் கள்.

அன்பிற்குரியவர்களே,

அந்த ஜீவாவுக்கு சிலை எழுப்ப வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு கருத்து வந்தபோது, அப்படி சிலைவைக்கும் பழக்கம் நமது இயக்கத்தில் இல்லை, அது தனிமனித வழிபாடு போன்றது என்று ஒரு கருத்தை ஒரு சிலர் சொல்லலாம். கருத்துச் சுதந்திரம் எல்லாக் கட்சியிலும் உண்டு. ஆனால், தோழர் பாலதண்டாயுதம் மறுக்கிறார். ஏன் நீங்கள் பல நாடுகளுக்குச் சென்று விட்டுத் திரும்புகிறபோது மார்க்ஸ் சிலையையும், லெனின் சிலையையும் நீங்கள் தூக்கிவரவில்லையா? ஏன் ஜீவாவுக்குச் சிலை வைக்கக்கூடாது? என்று கேட்கிறார்.

அப்படியானால், ஜீவா சிலைக்கு நிதி திரட்ட வேண்டும் என்ற போது, காலில் கிடந்த கொலுசுகளைக் கழற்றித் தருகிறார்கள் மாதர்கள், பொது உடைமை இயக்கச் சகோதரிகள். தங்களுடைய கைகளில் அணிந்து இருக்கின்ற நகை களைக்கூடத் தருகிறார்கள். சரி பெருந்தொகை வேண்டுமே? மக்கள் திலகம் அள்ளித் தருகின்றவர் எம்.ஜி.ஆரிடத்தில் போகலாம் என்றபோது முதலில் பாலதண்டாயுதம் மறுக்கிறார். தொடக்கத்தில் அவரைப்பற்றி உயர்ந்த அபிப் பிராயம் வைத்து இருக்கவில்லை. அதெல்லாம் சொல்வார், செய்யமாட்டார் என்று கருதினார்.

ஆனால்,தோழர் தா.பாண்டியன் அவர்கள் நாம் அவசியம் அணுகுவோம். அதில் என்ன தவறு? என்கிறார்.அப்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் படப் பிடிப்பில் இருக்கிறார். தொடர்பு கொள்கிறார்கள்.நாளைக்கு ஏ.வி.எம். ஸ்டூடி யோ வுக்கு வந்து விடுங்கள் என்கிறார்.

ஸ்டூடியோ வாசலிலேயே சைக்கிளில் ஒரு தோழன் தயாராகக் காத்துக் கொண்டு இருக்கிறான். ஐயா நீங்கள் இன்னாரா? என்று கேட்கிறான். பால தண்டாயுதமும் தா.பாண்டியனும் செல்கிறார்கள்.பின்னாலேயே கார் வரட்டும் என்று சைக்கிளில் போகிறான். அவனைப் பார்த்து விட்டு, எம்.ஜி.ஆர். சூட்டிங் நடந்து கொண்டு இருந்த இடத்தில் இருந்து ஓடிவருகிறார்.

“பாலன், உங்களைச் சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி, எனக்கு ரொம்பப் பெருமை” என்று அழைத்து அமரவைத்து, அவரே சிற்றுண்டி எல்லாம் பரிமாறுகிறார். மற்ற பணியாளர்களை எல்லாம் வெளியே போகச் சொல்லிவிட்டு அவரே பரிமாறுகிறார்.

சூட்டிங்குக்குக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்ற தகவல் வந்த போது, கோபப்பட்டு அதட்டுகிறார். ‘நான் யாரிடம் பேசுகிறேன் என்று தெரியும் அல் லவா? நான் வருகிறபோது வருவேன்’ என்கிறார்.

‘ஜீவாவுக்குச் சிலை வைக்க வேண்டும்’ என்று இவர்கள் கேட்டவுடன், துள்ளிக் குதித்துக் கட்டி அணைத்துக் கொண்டாராம். “ஒரு மாபெரும் தலைவர். நன் றாகச் செய்யுங்கள் என்று சொன்னதுடன், இவர்கள் கேட்காமலேயே, அந்தச் சிலைக்கு எவ்வளவு செலவு ஆகிறதோ, அதை நானே தருகிறேன்; பீடம் அமைப்பது மற்றும் விழாச் செலவுகளை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்’ என் றாராம். அப்படிச் சொன்னது மட்டுமல்ல, 5000 ரூபாய் பணத்தையும் தருகிறார்
எம்.ஜி.ஆர்.

இன்னொன்றையும் நான் குறிப்பிட வேண்டும்.ஜீவாவின் குடிசையில் தண்ணீர் ஒழுகிக் கொண்டு இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா? ஒரு நாள் மழை
பெய்கிறது. குடிசைக்குள் முழுவதும் தண்ணீர் புகுந்து விட்டது. தண்ணீரை இறைத்து இறைத்து வெளியே ஊற்ற வேண்டும். இவ்வளவு கஷ்டமாக இருக் கிறதே, இதற்கு ஏதாவது செய்ய வேண்டாமா? என்று ஜீவாவிடம் பத்மாவதி அவர்கள் கேட்டதாகவும், ஏன் நின்று கொண்டே இருக்கிறாய்? உட்கார்’ என்று இவர் சொன்னபோது, அந்த அம்மா கோபமாகப் பார்த்தார்களாம்.

ஏன் கோபப்படுகிறாய்? வருத்தப்படுகிறாய்?மலை மாதிரி நான் இருக்கிறேனே? என்றவுடன் பத்மாவதி அம்மையார் சிரித்துவிட்டாராம். ஏன் என்றால் இவர்
உடம்பு இப்படி இருக்கிறது அல்லவா. இப்படித் துன்பம் வளைத்த போது கூட அதைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு இயங்கக்கூடிய வழக்கம் அவரிடம்
இருந்தது.

ஜீவாவின் அண்ணன் மகன் மோகன் காந்திராமன் சொல்கிறார். ஒருநாள் ஜீவா கூப்பிட்டாராம். “மோகன் இங்கே வா. உன்னிடம் ஒரு சிறிய உதவி கேட்பேன்”
என்ற உடன் “கேளுங்கப்பா” என்றாராம். ‘ஒரு 200 நூறு ரூபாய் கொடு. பத்மா வதி சம்பளம் வாங்கிய வுடன் எடுத்துக் கொடுக்கிறேன்’ என்றாராம்.

உடனே மோகன் காந்திராமன் அழ ஆரம்பித்து விட்டாராம். என்ன அழவாண்டி? இப்ப நான் என்ன கேட்டு விட்டேன்? எதற்கப்பா அழுகிறாய்? இப்ப நான் கேட்ட தில் தவறா? என்று இவர் கொஞ்சம் கோபமாகக் கேட்டாராம். திரும்பவும் மோகன் காந்தி ராமன் அழுது இருக்கிறார்.

நீங்கள் ஒரு விரல் அசைத்தால் கொண்டு வந்து கொட்டுவதற்கு எவ்வளவோ பேர் இருக்கிறார்களே,யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் என்னிடம் போய்
இந்த இருநூறு ரூபாயைக் கேட்டீர்களே என்றாராம்.

இப்படி வாழ்ந்த மனிதர் ஜீவா. அவர் குடிசைவீட்டில் அவதிப்படுவதை அறிந்து வெளியே யாருக்கும் தெரியாமல் அவருடைய துணைவியார் அவருடைய
சம்பாத்தியத்தில் அவர் பி.எப்.பை வைத்துக் கடன் வாங்கி அறை கட்டும் பொழுதே இன்னொரு அறையும் சேர்ந்தே கணவனுக்குத் தெரியாமல் கட்டிய தாகவும், வெளியில் தெரியாமல் 3000 ரூபாயை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்கள் அனுப்பி அது ஜீவாவுக்குத் தெரியவே கூடாது என்று அனுப்பி வைத் ததாகவும், இதை அவர் பிள்ளை மணிக் குமார் மூலமாகவே அறிந்து கொண்டு நான் பேசுகிறேன்.

நேர்மையின் இமயமாக வாழ்ந்த ஜீவா அவர்கள் மறைந்தாலும் நம்மிடையே இன்றைக்கும் வாழ்கிறார்.

நான் சொன்னேன் அல்லவா? அவர் இலக்கியத்தில் வாழ்கிறார், சேவையில் வாழ்கிறார் என்று. இப்பொழுது இந்த நேரத்தில் மழைபொழியவில்லை. இயற் கை ஒத்துழைத்து இருக்கிறது பூதப்பாண்டியில்.ஜீவாவைப்பற்றிப் பேசுவதற்கு அடியேன் வந்து இருக்கிறேன். இந்த ஊர் மக்களிடம் பேசுவதற்கு ஒரு மாமனி தனின், மேருமலையென இமயமலையென உயர்ந்து வாழ்ந்த ஒரு உத்தமனின் சத்தியவந்தனின் பெருமையைப் பற்றிப் பேசுவதற்கு வந்து இருக்கிறேன்.

ஆனால், தோழர்களே அன்புத் தாய்மார்களே, மழை பெய்தால் சகோதரிகளே சற்றுநேரம் நீங்கள் நனையலாம். நான் பேசும்போது மழை வந்தால் எவ்வளவு நேரமானாலும் நனைந்துகொண்டுதான் பேச வேண்டும். அதை மகிழ்ச்சியோடு செய்வேன். ஆனால், சின்னக் குழந்தைகளுக்கு ஜலதோசம் பிடித்துவிடக் கூடாதே? மழையில் நனைந்தால் ஏதாவது நோய் நொடி வந்துவிடக் கூடாதே? அதுவும் எப்படிப்பட்ட நோய்கள் எல்லாம் தாக்குகிறது என்று மக்கள் கவலைப் பட்டுக்கொண்டு இருக்கிற நேரத்தில்,பலவிதமான அவதாரங்களோடு நோய் கள் படைஎடுத்து வருகிற நேரத்தில், நமது பிள்ளையைக் கூப்பிட்டுக் கொண்டு வீட்டுக்கு ஓடிவிடுவோம் அல்லவா?

மாலை ஆறு மணிக்கெல்லாம் நீங்கள் வந்து விட்டீர்கள்.ஜீவா விழா அல்ல வா? கலை நிகழ்ச்சிகள் வேறு அருமையாக நடத்தினார்கள். பலர் சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள். வீட்டுக்குப்போன உடன் சாப்பிடுவதற்கு ஏதாவது இருக் கும். இதற்குப் பின்னரும் நாடகம் இருக்கிறது. அப்படி அதிக நேரமாகி வீட்டுக் குப் போனாலும் மாவு இருக்கும். காலை இட்லிக்குத் தயாராகின்ற மாவு இருந் தால், அதை இப்பொழுதே தோசை போட்டுச் சாப்பிட்டு விடலாம்.

வசதி இல்லாத வீடாக இருந்தாலும்,பழைய சோற்றை எடுத்து, அதில் தயிரை யோ மோரையோ ஊற்றி,மிளகாயோ வெங்காயமோ இருந்தால் கடித்துச் சாப்பிட்டு விடலாம். இந்தக் குழந்தைகளை மழையில் நனைய விடாமல் வீடு களில் பார்த்துக் கொள்ளலாம்.

எனது அருமைத் தாய்மார்களே!இதோ,கடலுக்கு அப்பால், ஓலமிடும் கடலுக்கு
அப்பால், மூன்று இலட்சம் தமிழர்கள் -பெண்கள், குழந்தைகள், மழையில் -
வெள்ளத்தில் நடுங்கி நரக வேதனையில் இருக்கிறார்களே, அவர்கள் எங்கே
செல்வது?

அப்படிப்பட்ட கொடுமையான துயரத்துக்கு ஆளாகி இருக்கின்ற மக்கள் எங்கே செல்லமுடியும்? பச்சிளம் குழந்தைகள் பால் இன்றி அழும் என்றாரே ஜீவா, ஜீவா இப்பொழுது நீங்கள் உயிரோடு இருப்பீர்களானால் நீங்கள் என்ன பாடி இருப்பீர்கள், எங்கள் ஈழத்துப் பிள்ளைகளைப் பற்றி?

பாலின்றிப் பிள்ளை அழும், பட்டினியால்தாய் அழுவாள் என்றீர்களே, அங்கே
மரணத்தின் மடியில் எத்தனை பிள்ளைகள் சாகிறார்கள்?பசியால் சாகிறார்கள். நோயால் சாகிறார்கள். நரக வேதனையில் உழலுகிறார்கள். வீடு இல்லை, வாசல் இல்லை. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த தங்கள் பூர்வீக மண்ணைவிட்டு விரட்டப் பட்டு, சிங்களக் கொடியோரால் தாக்கப் பட்டு, கொலைக்களத்தில் மடிந்து,இன்றைக்கு மூன்று இலட்சம் மக்கள் வதைபடு கிறார்களே, நோய்கள் தாக்கு கிறதே, பசி தாக்குகிறதே. கண்ணீரிலும் இரத்தத் திலும் துடிக்கிறார்களே,சின்னஞ்சிறு இளம் பெண்களைக் கற்பழித்து நாச மாக்கு கிறானே, கற்பை உயிரினும் மேலாகப் போற்றுகிற அந்த பெண்பிள்ளை கள் நாசமாக்கப் படுகிறார்களே, இளைஞர்களை இவர்கள் எல்லாம் எதிர் காலத்தில் மீண்டும் புலிகளாகி விடக்கூடாது என்று காட்டுக்குள் இழுத்துச் சென்று சுட்டுக் கொல்லு கிறார்களே,இவ்வளவு கொடுமைகளும் வேறு எங்கே நடக்கிறது என்று சொல்லுங்கள். இந்த உலகத்தின் மனசாட்சி செத்துவிட்டதா?

நான் பேசிக் கொண்டு இருக்கும் இதேநேரத்தில், மூன்று இலட்சம் மக்கள் படு கின்ற அவதியை கண நேரம் உங்கள் மனக் கண்முன்னால் கொண்டு வந்து பாருங்கள். நாதியற்றுப் போய் விட்டதா நானிலத்தில் தமிழ் இனம்? பாராண்ட இனம், பார் போற்ற வாழ்ந்த இனம். உலகத்திற்கு கலையை கலாச்சாரத்தை, நாகரிகத்தைப் பண்பாட்டைக் கற்றுக் கொடுத்த இனம்.

உலகத்தில் தோன்றிய முதல் மொழிக்குச் சொந்தக்காரனா இவன்.கடல் கடந்த
நாடுகளுக்கு வணிகம் நடத்திய இனம்.படை எடுத்துச் சென்ற இனம். இன்றைக் கு நாயினும் கேவலமாக, சிங்களவன் காலடியில் கொல்லப்பட்டு, அவர்கள் மண்ணில் உரிமையோடு வாழமுடியாமல் அடிமைகளாக்கப்பட்டு விட்டார் கள்.

நாட்டரசன் கோட்டையில் கம்பன் விழாவில் பேசினார் ஜீவா. செஞ்சோற்றுக் கடனாற்றிய கும்பகர்ணன் என்று பேசினார். பாஸ்கரத் தொண்டைமான் கட்டிப் பிடித்துக் கொண்டு சொன்னார். நீங்கள் இலக்கியப் பணியாற்ற வாருங்கள் ஜீவா என்றார்.அந்தக் கூட்டத்தில் அந்தப் பேச்சைக் கேட்டவர் கள், கும்பகர் ணனே வந்து ஜீவாவைக் கட்டிப்பிடித்து வாழ்த்துவான் என்று சொன்னார்கள்.

கும்பகர்ணனைப் பற்றிப் பேசினார்.

ஒரு அண்ணனுக்காக உயிர் விட்டவனை செஞ்சோற்றுக் கடன் ஆற்றினான் என்று நாட்டரசன் கோட்டையில் ஜீவா எழுப்பிய முழக்கம், அங்கே இருந்தவர் களது இதயங்களை வருடியது.

அப்படிப்பட்ட ஜீவா, வாழ் நாள் முழுவதும் இலக்கியத்துக்கு தொண்டு ஆற்றி, தமிழுக்குத் தொண்டு ஆற்றி,தமிழ் இனத்துக்குத் தொண்டு ஆற்றி, ஒரு மாசு மருவற்ற பத்தரை மாற்றுத் தங்கமாக ஜொலித்த அந்த மாமனிதன் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டும்.

வயது 56 தானே? இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டுமே? மறைந்து விட்டாரே? மறைந்தாலும், நம் மனங்களில் வாழ்கிறார். ஜீவா மறைந் தபின் அண்ணா முதல்வரான பின்னர் ஜீவாவின் மூத்த மகளுக்கு பெரியார்
வீட்டில் திருமணம் அண்ணா வாழ்த்துகிறார். அப்போது அறிவிக்கிறார்.

“ஜீவாவின் ஆசையை நிறைவேற்று வேன் என்றார். சுயமரியாதைத் திரும ணத்தை சட்டமாக்கிக் கொடுக்கிறேன். இதுதான் இந்த மணமக்களுக்கு நான் தரும் பரிசு. இனி தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர் களுக்குச் சட்ட பூர்வமான குடும்ப அந்தஸ்து உண்டு. இதைச் சட்டமாக தமிழ கச் சட்டமன்றத் திலே நிறைவேற்றுவேன் - இந்த உறுதியை மணமக்களுக்குப் பரிசாகத் தருகிறேன் என்றார் அறிஞர் அண்ணா.

ஜீவாவுக்கு இப்படிப்பட்ட புகழ்க் கிரீடம் அண்ணா அவர்களால்தான் சூட்ட இயலும்.

பூதப்பாண்டி என்கின்ற பெருமைமிகு பழந்தமிழர் ஊரிலே பிறந்த மாமனிதன்
ஜீவா புகழ் வாழ்க!

அந்த ஜீவா எந்த உணர்வுகளுக்காக வாழ்ந்தாரோ, அந்த உணர்வுகளின் அடிப் படையிலே தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும், தமிழ் இனத்துக்கும் தொண்டு செய்யச் சூளுரைப்போம்!

ஜீவாவின் புகழ் மீது ஆணையிட்டுச் சூளுரைப்போம்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படுத்துவிட்டு வரலாமே.

1 comment:

  1. இந்த மாமனிதனின் பெயரில் தான் எங்கள் நிறுவனம் (ஜீவா புத்தகாலயம்), http://www.noolulagam.com என்கின்ற தமிழ் புத்தக நிலையத்தை நடத்தி வருகிறது என்பதில் எங்களுக்கு உள்ளபடியே மகிழ்ச்சி.

    ReplyDelete