Monday, August 12, 2013

சிறுபான்மை மக்களுக்கு அரண்

எந்த நிலையிலும், சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்போம்!  #வைகோ

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், புனித ரமலான்( இஃப்தார் ) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, 3.8.2013 அன்று சென்னையில், கழக அமைப்புச் செய லாளர் சீமா பஷீர் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.அவரது உரை யில் இருந்து....

இந்த வாடாமலர்! சூடா மலர்
வாசமுள்ள தீண்டா மலர்
வாழ்வில் இல்லையென்றால்
புல்புல் பறவையின் பாட்டும்
செவிகளில் விழாமலே போயிருக்கும்
பூமிப் பூங்காவின் பூக்களின்
மொட்டுகளின் புன்சிரிப்பும்
காணாது புதையுண்டு போயிருக்கும்
வானம் என்னும் ஆகாயப் பந்தலை
ஞானமுள்ள இந்தப்பெயர்
வாகாகப் பற்றி வரலாறு படைக்கிறது
ஆவேச நெருப்பாய் அணையாமல் எழுகிறது

என்று, மகா கவிஞன் அல்லாமா இக்பால் போற்றிய,முகமது முஸ்தபா ஸல் லல்லாஹூ அலைஹூவ ஸல்லம் பெருமானார் நபிகள் நாயகம் அவர் களுடைய பெருமையை, புகழை, அவர் காட்டிய மார்க்கத்தை, அகிலத்தில் இஸ்லாத்தைச் சமயமாக ஏற்காதவர்களும்கூட, ஒப்புக் கொள்ளக் கூடிய உன்னத நெறிகளைப் போற்றுகிறது இஸ்லாம்.

‘மனிதத்தையும், மனித நேயத்தையும்,மனிதாபிமானத்தையும், இந்த மனித குலத்துக்கு இஸ்லாம் தருவதாலே, நான் அதன்பால் நெஞ்சம் கவரப்பட்டு இருக்கின்றேன்’ என்று, 1957 ஆம் ஆண்டு, அக்டோபர் 12 ஆம் நாள், பேரறிஞர்
அண்ணா அவர்கள், மீலாது விழாவில் குறிப்பிட்டார். ‘இஸ்லாம் ஒரு அழகிய முன்மாதிரி’என்று சொன்னார். அந்த அண்ணாவின் கொள்கை வழியில், அவ ரது இயக்கத்தில் வார்ப்பிக்கப் பட்டவர்கள் நாங்கள்.


நல்ல மனம் வாழ்க!

கண்ணியம் மிக்க காயிதே மில்லத், அறிவாசான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய பெருமக்கள் ஓரணியில் நின்று, இந்தியத் துணைக்கண்டத் துக்கே முன்மாதிரியாக ஒரு மத நல்லிணக்கத்தை, சகோதரத்துவத்தை இந்தத்
தமிழகத்தில் நிலைநாட்டினர். அந்த வழியில், இன்றைக்கு ஆயிரக்கணக்கான இஸ்லாமியச் சகோதரர்களை, நோன்பாளிகளை, அவர்களது திருமுகங் களைக் காணக்கூடிய அளப்பரிய பேற்றினை எனக்கு அள்ளி வழங்கி இருக் கின்ற, எங்களின் கண்ணியத்துக்குரிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர், கட்சிகளைக் கடந்து இந்த அரங்கத்தில்
இருக்கின்ற பெருமக்களும், இந்த மண்ணடித் தெருவில் மட்டும் அல்ல, இந்தத் துறைமுகம் பகுதியில் வாழுகின்ற இஸ்லாமியப் பெருங்குடி மக்களும், இவன் நம் வீட்டுக் கண்மணி, நாம்  அரவணைக்க வேண்டிய கண்மணி என்று, நான்
குறிப்பிட்டு விளித்த அத்தனைப் பெருமக்களுடைய நல்லாதரவினாலே,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்த இயக்கம், இருட்குகை யில் அழிந்து போய்விடாது; அது என்றைக்கும் ஒரு ஒளிச்சுடராக மின்னிக் கொண்டு இருக்கும் என்று, சீமா பசீர் அவர்களை சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுத்துக் கொடுத்த, அன்பு உள்ளம் கொண்டவர்கள் எல்லாம் இங்கே வருகை தந்து இருக்கின்றார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் அவரே; அமுது படைப்பவரும் அவரே; அறுசுவை பிரியாணியைத் தருபவரும் அவரே; வினாடி தவறாமல் சரியான வேளையில் நோன்பு திறக்கின்றபோது, பேரீச்சம்பழங்களும், பழ வகைகளும், அருமையான சுவையான கஞ்சியும் வழங்கியதும் அவரே;

இந்த நிகழ்ச்சிக்காகக் கொடி கட்டுவதற்குத் தோழர்களை ஏற்பாடு செய்ததும், இந்த மண்டபத்தில் இந்த நிகழ்ச்சியைத் தருவதும் அவர்தான். எல்லாவற் றை யும் அவர் செய்து விட்டு, இந்த எளியவனுக்குப் பெரிய பெயரைக் கொடுப்ப தற்காக, நான் நடத்துவதைப் போலக் காட்டுகின்ற அந்த மனம், எல்லோருக் கும் வராது. அத்தகு குணக்குன்றான, என் நெஞ்சம் எல்லாம் நிறைந்து இருக் கின்ற அருமை மாமா சீமா பசீர் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கு கின்றார்கள்.

எங்கள் அழைப்பை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரிய உரை தனைத் தந்த, மனிதநேய மக்கள் கட்சியின் முன்னணித் தலைவர், நான் பெரி தும் மதிக்கின்ற மாமா ஜனாப் ஹைதர் அலி அவர்களுடைய கர்ஜனை இன் னும் நெடுநேரம் கேட்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கையில், தன் உரையை முடித்துக்கொண்டு, வைகோ பேசட்டும் என்று அழைத்து அமர்ந்து விட்டார்கள்.

என் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர்,ஈழத்தமிழருக்காக அண்ணன் நெடு மாறன் அவர்களோடும் என்னோடும் போராட்டக் களத்தில் நின்று, சிறைச் சாலை யில் அடைபட்டவர்.எங்கிருந்தாலும் வைகோ, இஸ்லாமிய மக்களு டைய உரிமைக் குரலாகத் திகழ்வான் என்பதை உணர்ந்தவர், இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழகத் தலைவர், கண்ணியத்துக்குரிய மாமா பசீர் அகமது அவர்கள் இங்கே கருத்துகளை எடுத்து உரைத்தார்கள்.அந்தக் கட்சியின் சார் பில் இங்கே பேசிய அன்புக்குரிய பைரோஸ் அகமது அவர்கள், இடிமுழக்கமாக முழங்கினார்கள்.

அனைவரையும் வாயிலில் நின்று வரவேற்று,அடுத்து விருந்து பரிமாறுகின்ற கடமையையும் செய்பவர்கள் நமது மலுக்காமலி, குரோம்பேட்டை நாசர், மக ரூப், வழக்கறிஞர் ஜனாப் எச்.எம்.முஸ்தபா, நன்றி உரை ஆற்றிய மண்ணடி ரஃபி ஆகியோருக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின் றேன். இசைமுரசின் எதிரொலியாக இங்கே இஸ்லாமியப் பாடல்களை இசைத் தார் தம்பி நெல்லை அபுபக்கர்.

பச்சைத் தண்ணீர் கொடுத்தால் போதும்

பெருமானார் அவர்கள் தம்முடைய சஹபாக் களுடன் உரையாடிக் கொண்டு இருந்தபொழுது, ‘ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கின்ற நோன்பாளிகளுக்கு, இஸ்லாமியப் பெருமக்களின் ஐம்பெருங் கடமைகளுள் ஒன்றாகிய இந்த ரம லான் நோன்பை மேற்கொள்கின்றவர்களுக்கு, நோன்பு திறக்கின்ற இஃதாருக் கு எவர் ஏற்பாடு செய்கின்றாரோ, அவர் இறைவனிடத்தில் மன்னிப்பையும், நரகம் எனும் பெருநெருப்பில் இருந்து விடுதலையும் பெறுவார்கள்’என்று கூறி னார்கள்.

ஏழை எளிய மக்கள், ஏதும் அற்றவர்கள் அப்படி நோன்பாளிகளுக்கு என்ன ஏற் பாட்டைச் செய்ய முடியும்? என்று இயற்கையாக எழுகின்ற வினாவைச் சிலர் தொடுத்தபொழுது, ‘தண்ணீரும், பேரீச்சம்பழமும் தருபவர்கள், அல்லது அது வும் தருவதற்குச் சக்தி அற்றவர்கள், வசதி அற்றவர்கள், நோன்பாளிகளின் நாடி நரம்புகளில் ஊடுருவுகின்ற விதத்தில் கொடுக்கின்ற பச்சைத் தண்ணீர் கூட, நோன்பு திறப்பதற்கான ஏற்பாடாகவே அமைந்து விடும்’ என்று பெரு மானார் அவர்கள் விளக்கம் அளித்தார்கள்.

இந்த நோன்புக் காலத்தில்,இச்சைகளை,புலன்களைக் கட்டுப்படுத்திக் கொண் டு நோன்பு இருக்கின்றீர்கள். முப்பது நாள்கள். விண்ணிலே பிறை தெரிகின்ற நாளைக் கணக்கிட்டு, மீண்டும் பிறை தெரிகின்ற அந்த நாள் வரையிலும், பசியை, தாகத்தைப் பொறுத்துக் கொள்கின்றீர்கள்.

ஆயிரம் மாதங்களை விட உயர்ந்த லைலத்துல் கத்ர்

அப்படிப்பட்ட உன்னதமான இரவுகளில், ஹிரா குகையில் திருக்குர் ஆன் இறக் கப்பட்டது என்று சொல்லப்படுகின்ற லைலத்துல் கத்ர் என்கின்ற இரவு எப் பொழுது வருகிறது? என்ற ஐயப்பாடு சஹபாக்கள் இடையே உலவிய காலத் தில், அண்ணலார் அவர்கள், அதற்கு அழகாக பதில் சொல்லுகிறார்கள்: ‘இந்த நோன்புக் காலத்தில் கடைசி பத்து நாள்களில், ஒற்றைப் படை நாள்களில், எந்த நாளிலும் அந்த லைலத்துல் கத்ர் வரலாம்; அது எந்த நாளாகவும் இருக்க லாம்’ என்றார்கள்.

இன்று, நோன்பின் 25 ஆவது நாள். ஒருவேளை, இந்த இரவாகக் கூட இருக்க லாம். எந்த இரவு என்று சொல்ல முடியாது. அந்த லைலத்துல் கத்ர் என்பது,
எத்தனையோ இரவுகளை விட உயர்ந்தது. ஆம் ஆயிரம் மாதங்களை விட உயர்ந்தது; அதாவது, 83 ஆண்டுகள், 4 நான்கு மாதங்களை உள்ளடக்கிய இரவு களை விட உயர்ந்தது லைலத்துல் கத்ர்.

கலங்காதே; கூர்மைப்படுத்திக் கொள்

நம்முடைய சீமா பசீர் அவர்கள், இந்த நிகழ்ச்சி குறித்து என்னிடம் கலந்து ஆலோசித்தார்கள். இஸ்லாமிய மக்கள் பங்கு ஏற்பதற்கு வாய்ப்பாக, ஒரு முன் னிரவுப் பொழுதினில் ஏற்பாடு செய்தார்கள். இந்த நிகழ்வில், இஃப்தாரைத் திறந் ததற்குப் பிறகு, உங்கள் இடையே உரை ஆற்றுகின்ற நல்லதோர் வாய்ப்பி னைப் பெற்று நிற்கின்றேன். இது எவ்வளவு பெரிய வாய்ப்பு? உங்கள் பொன் னான நேரத்தை ஒதுக்கிக் கொண்டு, இங்கே வந்து சிறப்பித்து இருக்கின்றீர் களே, அது சீமா பசீர் அவர்களிடம் நீங்கள் கொண்டு இருக்கின்ற அன்பைக்
காட்டுகின்றது. அதற்காக, உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

‘எதற்கும் அஞ்சாதே; வலிமையோடு போராடு’ என்று இங்கே நமது ஹைதர்
அலி அவர்கள் முழங்கினார்கள்.அதைத்தான் சொல்லுகிறது இஸ்லாம்.

‘பகை வர்களுடைய காலடிச் சத்தமோ, எதிரிகள் ஆரோகணித்து வருகின்ற குதிரை களின் கணைப்புச் சத்தமோ குளம்படிச் சத்தமோ கேட்டு நீ கலங்காதே; கூர் மைப்படுத்திக் கொள். நீ உன்னுடைய வாளைக் கூர் தீட்டி வைத்துக் கொள். உயர்ந்த சிகரங்களின் மீது அமைந்து உள்ள ராஜாளிப் பறவையின் கூடுகளைப்
போல இருப்பவன் நீ. உன் மீது வாள் ஏந்துவதற்கு எவர் முயற்சித்தாலும் எதிர்த்து நில். அச்சத்தைத் தூக்கி எறிந்தவனுக்கு, அலைகடல் ஒரு பந்தய மைதானம்’ என்றார்கள்.

அத்தகைய நெஞ்சுறுதியோடு எத்தனையோ போர்க்களங்களை எதிர்கொண் டார்கள். கடந்த ஆண்டு இங்கே நான் உரை ஆற்றிய நாள், பத்ருப் போர்க்களத் தை நினைவூட்டுகின்ற நாள் என்பதால், அன்றைக்கு அதுகுறித்து விரிவாகப்
பேசினேன்.

நான் ஒரு போராளி

அருமைத் தோழர்களே,இந்த இஃப்தார் விழாவில் கலந்து கொண்டு பேசுவதற்கு நான் ஓரளவு தகுதி பெற்று இருக்கின்றேன். அரசியலில் நான் என்ன நிலையை மேற்கொள்ளப் போகின்றேன்? என்று இங்கே பேசினார்கள். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லுகிறேன். என் வாழ்நாள் எல்லாம் போராடிக் கொண்டே வருகிறேன். என் சுயமரியாதையையும்,தன்மானத்தையும் சமரசம் செய்து கொள்ளாமல்,கடைசி வரை போராளியாகவே இருப்பேன். (பலத்த கைதட்டல்). பசீர் அழைக்கிறார் என்பதால், அரசியல் வேற்றுமைகளை மறந்து விட்டு நீங் கள் இங்கே வந்து இருக்கின்றீர்கள்.என்னுடைய சில அரசியல் நிலைப்பாடு கள் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.

பல மலர்கள் பூத்துக் குலுங்குவதுதான் ஒரு பூந்தோட்டம். அங்கே ஒரேயொரு மலர்தான் பூக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதுபோல அரசியல் என்பது, பல்வேறு கட்சிகளின் கருத்துகள் உலவுகின்ற ஒரு மேடை. ஆனால், அரசியலில் நேர்மை தவறாதவனாக, நாணயம் குறையாதவனாக, ஒழுக்கம் சிதையாதவனாக,பிறரது கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்கின்ற எண் ணத்தில் சிறிதும் பழுது ஏற்படாதவனாக வாழ்கிறேன்; மனிதநேயம் மிக்க மனிதன் என்ற அந்த உணர்வோடு போராடிக் கொண்டு இருக்கின்றேன்.

சாலை விபத்து

எத்தனையோ நிகழ்வுகள். ஒரு அதிகாலைப் பொழுதில், புதுவையை நோக்கிச் சென்று கொண்டு இருந்தேன். வழியில் ஒரு கார் விபத்துக்கு உள்ளாகிக் கிடந் தது. இரத்தத் துளிகள் சிதறிக் கிடந்தன. இன்னமும் காயவில்லை.சற்று நேரத் துக்கு முன்புதான் அந்த விபத்து நடந்து இருக்கின்றது. அந்த விபத்தில் சிக்கிய வர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் எம்பிஏ துறையின் தலைமைப் பேராசிரியர். அவரது துணைவியாரும் இறந்து விட்டார். அவர்கள் இஸ்லாமி யக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு பிள்ளையும் இறந்து விட்டான். மற் றொரு பிள்ளையின் உயிர் ஊசலாடிக் கொண்டு இருந்தது.முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்து இருக்கின்றார்கள் என்பதை,
அங்கே இருந்த காவலர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

உடனே, கழகத்தின் பொருளாளர், திண்டிவனம் டாக்டர் மாசிலாமணி அவர் களைத் தொடர்பு கொண்டு விவரத்தைச் சொன்னேன். ‘முண்டியம் பாக்கம் மருத்துவமனையில் வசதிகள் குறைவு; எனவே, சென்னை அப்பல்லோ மருத் துவ மனைக்குக் கொண்டு செல்வோம்’ எனக்கூறி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். அங்கே கொண்டு போய்ச் சேர்த்தோம். நான் போய்ப் பார்த்தேன். 48 மணி நேரம் கழித்துத்தான், இந்தப் பிள்ளையின் உயிருக்கு உத்தரவாதம் தர முடியும் என்றார்கள். இரண்டு நாள்களில் ஆபத்து நீங்கியது. அந்தப் பிள்ளை பிழைத்துக் கொண்டான்.

பஹ்ரைன் நாட்டின் பாரதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வல்லம் பசீர் அவர்கள் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்கள். அவ ரது மனைவியின் உடன்பிறந்த சகோதரிதான் விபத்திலே இறந்த பெண்மணி; பேராசிரியரின் துணைவியார். பசீர் சொன்னார்: “விபத்து நடந்த சிறிது நேரத் தில் பேராசிரியரின் துணைவியார், தன் மாமியாரோடு பேசி இருக்கின்றார். ‘விபத்து நடந்து விட்டது;எனக்குத் தண்ணீர் தாகமாக இருக்கின்றது.

ஆனால், வழியில் போகின்ற ஒருவரும் வண்டியை நிறுத்தவில்லை’ என்று கூறி இருக்கின்றார். சற்று நேரத்துக்கெல்லாம் அவரது உயிரும் பிரிந்து விட் டது. மாமா, ஒருவேளை நீங்கள் சற்று நேரத்துக்கு முன்பு அங்கே போயிருந் தால், மகனைக் காப்பாற்றியது போல், அவரது உயிரையும் காப்பாற்றி இருப்பீர் கள்’ என்றார். இதுதான் மனிதநேயம்.

போர்க்களத்தில் மனிதநேயம்

இஸ்லாமியர்களின் வரலாற்றில் பல போர்க்களங்களைப்பற்றி நீங்கள் படித்து
இருப்பீர்கள். சாகக் கிடக்கின்ற ஒருவருக்குக் குடுவையில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கின்றார்கள். அவர் அதைப் பருக மறுத்து, ‘பக்கத்தில் கிடப்ப வரைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறி மடிகின்றார். அடுத்தவருக்குப் புகட்ட
முனைகிறார்கள். அவரும் பருக மறுத்து, மற்றொருவரைக் காப்பாற்றும்படி கை காட்டி விட்டு இறக்கின்றார். இதுதான் இஸ்லாம் புகட்டும் மனிதநேயம்.

இதைத்தான் பாரதி, ‘சாதிகள் இரண்டொழிய வேறு இல்லை; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்று சொன்ன பாரதி, ‘கருணை’ என்ற ‘கருணை’
தலைப்பில், சென்னை மாநிலக் கல்லூரியில் நிகழ்த்திய தன்னுடைய முதலா வது உரையில் குறிப்பிட்டுப் பேசி இருக்கின்றார்.

இன்றைக்குத் தமிழகத்தில் மனிதநேயம் பட்டுப் போவதற்கு என்ன காரணம்? நம்மைச் சுற்றிலும் மது எனும் கொடிய நரக நெருப்பு வளையம் சூழ்ந்து இருக் கின்றது. அதனால்,கற்பனை செய்ய முடியாத பாலியல் கொடுமைகள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. சின்னஞ்சிறு பெண் குழந்தை களுக்கும் பாதுகாப்பு இல்லை. தாயின் காலடியே சொர்க்கம் என்றார் பெருமானார்.

ஆனால், அந்தத் தாயிடமே மிருகத்தனமாக நடக்கச் செய்கின்றது மது. ஒவ் வொரு நாளும் ஏடுகளில் வருகின்ற செய்தியைப்  பாருங்கள். இதயத்தைப் பிளக்கின்ற கொடுமைகள் அனைத்துக்கும் பின்னணியில், வேராக இருப்பது
மது. இந்தக் கொடுமையில் இருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டும் என்ப தற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். அதற்காக, நான்கு நடைப் பயணங் களை மேற்கொண்டு, கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பிரச்சாரம் செய்து இருக்கின்றேன்.

நம்முடைய கண்ணியம்மிக்க ஹைதர் அலி அவர்கள்,பொள்ளாச்சிக்கு வந்து வாழ்த்தி அனுப்பினார்கள். உவரியில் கிறித்துவப் பெரு மக்கள் வாழ்த்தி அனுப் பினார்கள். கோவளத்தில் தர்காவில் இருந்து இஸ்லாமியப் பெரியவர்கள்
வாழ்த்தினார்கள். நான்மாடக் கூடலில், சைவ சமயக் குரவர்கள் வந்து வாழ்த்தி னார்கள்.அறிவாசான் தந்தை பெரியாரின் படையினர் வந்து வாழ்த்தினார்கள்.

சமூக நல்லிணக்கம்

‘தென்னிந்தியாவின் போர்வாள்’ என வரலாறு வருணிக்கின்ற மாவீரன் திப்பு சுல்தான்,இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவன். மதுவை தனது அரசில் அறவே ஒழித்த சாதனையாளன். ஆனால்,தன்னுடைய சீரங்கப்பட்டணம் அரண்மனை யின் ஒரு பகுதியில் இந்துக்கள் வழிபட இடம் கொடுத்து இருந்தான். அவனது தந்தை ஹைதர் அலி,சிவகங்கை ராணி வேலு நாச்சியாருக்கு  துப்பாக்கிகள், பீரங்கிகள், போர்வீரர்களை அனுப்பி உதவினான். அவற்றைத் திப்பு சுல்தான் கொண்டு வந்து கொடுத்தான். அந்த வேலுத்தாயின் வரலாறை நாடகமாக நான் அரங்கேற்றினேன்.

அதில் மத நல்லிணக்கத்துக்கான செய்தி இருக்கின்றது. அன்றைக்கு மக்கா வில் ஹசரத் பிலால், ஒரு கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் பாங்கு ஒலித்தார். அதைப்போல, அந்த நாட்டிய நாடகத்தில், தம்பி நெல்லை அபுபக்கர் அற்புத மான குரலில் பாங்கு ஓதினார். அமெரிக்காவிலும் அந்த நாடகம் அரங்கேறி யது. மக்கள் மனதில் சமூக நல்லிணக்கம் வளர வேண்டும் என விரும்பு கிறோம்.

இஸ்லாமியப் பெருமக்கள் உறுதி கொண்டு போராடக்கூடியவர்கள். அமைதி யின் வடிவமான கலீபா அபுபக்கர், நேர்மையின் சிகரமான கலிமா உமர், எளி மையின் பெட்டகமான கலிமா உதுமான், வீரத்தின் விளைநிலமாக உயர்ந்து நின்ற கலீபா மாவீரர் அலி. அனைவரும், நேர்மையாக,நாணயமாக, ஒழுக்க மாக ஆட்சி நடத்தினார்கள்.புவி எங்கும் வாழுகின்ற மக்களுக்கு வழிகாட்டி யாகத் திகழ்ந்தார்கள்.

பொது வாழ்க்கை என்பது, தூய்மையாக இருக்க வேண்டும்; தன்னலம் அற்ற தாக அமைய வேண்டும். அதை நிலைநாட்டிக் காட்டிய கலீபாக்களின் வரலா றைப் படியுங்கள். சமய நல்லிணக்கம் நாட்டுக்கு மிகமிகத் தேவை.

சிறுபான்மையினர் நலன் காப்போம்

விருந்தோம்பலில் சிறந்த இஸ்லாமியப் பெருமக்களே, இன்றைய இரவுப் பொழுதில் உங்களைச் சந்திப்பதிலே நான் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த இரு பது ஆண்டுகளாக, நேர்மையாக, நாணயமாக அரசியல் களத்தில் இயங்கி வரு கின்றோம்.

அரசியலில் கூட்டணி தொடர்பாக சில மாறுபட்ட நிலைப்பாடுகளை மேற் கொண்ட போதிலும்,பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்தபோதும்கூட, சிறு பான்மை மக்களின் நலன் காக்கப் போராடி இருக்கின்றோம். பொது சிவில் சட்டம் கொண்டு வர முனைந்தபோது, நாடாளுமன்றத்தில் அதை எதிர்த்து வாக்கு அளித்தோம். ஷரி அத் சட்டத்தை ஆதரித்து வாக்கு அளித்தோம். அடிப் படை இலட்சியங்களில் இம்மி அளவும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

துளி நீரும் பருகாமல், உமிழ்நீரைக் கூடத் தவிர்த்து, நோன்பு மேற்கொள்கின் றீர்கள். உங்களுடைய இல்லங்களில் மகிழ்ச்சி நிலவட்டும்.தொழில்களில் முன்னேற்றம் காண வாழ்த்துகிறேன். நீங்கள் உயர்ந்தால், இந்தத் தமிழகமும் சிறப்புப் பெறும். உங்கள் அனைவருக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், புனித ரமலான்,இஃப்தார் வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள் கின்றேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment