Monday, August 5, 2013

காதலுக்கு தீண்டாமை வைத்த தீ !

தர்மபுரி மாவட்டம், நத்தம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த இளங்கோவன் - அம்சவேணி இவர்களின் மகன் கல்லூரி மாணவன் இளவரசன். செல்லங் கொட்டாய் கிராமம் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த நாகராஜ் - தேன்மொழி இவர்களின் மகள் திவ்யா, செவிலியர் கல்லூரியில் பயிலும் மாணவி. இரு வரும் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஒருவரை ஒருவர் சந்தித்து பழகி வந்த னர், சந்திப்பு நட்பாக,நட்பு காதலாக மாறியது. இதன் விளைவு இருவரும் வெவ் வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம் பியது. இதனால் காதல் ஜோடிகள் இருவரும் சாதிய சமுதாய கட்டமைப் பை உடைத்து சுதந்திர பறவைகளாக பறக்க எண்ணி 9.10.2012 அன்று வீட்டை
விட்டு வெளியேறி 10.10.2012 அன்று கோவிலில் தாலிகட்டி திருமணம் செய்து
கொள்கிறார்கள்.

இந்த காதல், சாதி மறுப்பு திருமணத்தை அங்கீகரிக்க சாதி வெறி மறுக்கிறது.
காதல் ஜோடிகளை பிரிப்பதற்கு ஒருமாதமாக எடுக்கப்பட்ட முயற்சி தோல்வி யுற்றதால் சாதிய நிர்பந்தங்களின் காரணமாக மனம் உடைந்த திவ்யாவின் தந்தை நாகராஜ் 7.11.2012 அன்று தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் ஆத்திரமுற்ற சாதிவெறியர்கள் ஆதிதிராவிடர்கள் வாழும், நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம் பட்டி கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடு களை, சூறையாடி தீக்கிரையாக்கி பொருளாதார இழப்பை ஏற்படுத்தினர். இத னால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிட மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் தலைவர் வைகோஅவர்களின் பிரதிநிதிகளாக 12.11.12 அன்று நானும், (மல்லை சி.ஏ.சத்யா) கழகப் பொருளாளர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் மாசிலாமணி அவர்களும் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்
கூறிவிட்டு, பின் களத்தில் கண்ட கேட்டறிந்தவற்றை சம்பவ இடத்தில் இருந்த பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினரிடம் இது ஆண்டாண்டு காலமாக சமுதா யத் தில் புரையோடிப் போய் உள்ள தீண்டாமை காதலுக்கு வைத்த தீ.நாகரிக சமு தாயத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோமா, இந்த சாதிய ஏற்றத் தாழ்வு சமுதாயத்தைத் திருத்த முடியாதா என்று சொன்னேன். தர்மபுரியில் நிலவும் அசாதாரண சூழலை தலைவர் வைகோ அவர்களிடம் விவரித்தோம்.

தலைவர் வைகோ அவர்களும்,தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ சாதிய நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், சகோதர நேயத்தைப் பேணிப்பாதுகாக்க வும் வேண்டி தமிழக மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்து 3.12.12 அன்று அறிக்கை வெளியிட்டார்.தொடர்ந்து தலைவர் வைகோ அவர்கள் இளவரசன் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டியும், துயரும்
பெற்றோருக்கும் திவ்யாவிற்கும் ஆறுதல் கூறி அமைதி நிலவ வேண்டுகோள் விடுத்து 6.7.2013 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சென்னையில் தாகம் இதழின் ஆசிரியர் இளம் படைப் பாளி தோழர் செங்குட்டுவனிடம் தருமபுரி சம்பவத்தை எடுத்துச்சொல்லி வேத னைப்பட்டேன். இளவரசன் திவ்யா காதல், அதனைத் தொடர்ந்து அரங்கேற் றப் பட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் வரலாற்றில் கல்வெட்டாகிப் போன காதல், இவற்றைத் தொகுத்து கட்டுரையாகத் தருமாறு கூறினார்.அதனை தாகம் மாத இதழில் தொடராக வெளியிட்டார். அதே போன்று தனித்தமிழ் நடையில் வெளி வரும் சகோதரர் பரணிபாவலன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட புகழ் செல்வி மாத இதழிலும் வெளியிட்டனர்.

இந்தக் கட்டுரை எழுத கருவாக இருந்த இளவரசன். இக்கட்டுரை தொடர்  முடி கின்ற போது அவன் தன்னுடைய காதல் மனைவி திவ்யாவின் பிரிவை தாங் கிக்கொள்ள முடியாமல் துடித்த இளைஞர் 4.7.2013 வியாழக்கிழமை தொடர் வண்டிப் பாதை அருகில் சடலமாகக் கிடக்கிறான்.

அழிந்து போகும் அந்தஸ்திற்காக, அழியாத காதலை சமாதியாக்க, சம்மட்டி
எடுத்தவர்களின் சாதி வெறி, நாடக அரசியல் வாதிகளின் வேடத்தைக் கலைத் துவிட்டான் இளவரசன்.திவ்யாவுடனான தன் காதல் நாடக காதல் அல்ல, அது புனிதமானது, சாதி வெறி அரசியல் நாடகத்திற்கு சாவு மணி அடித்துள்ளான் அந்த வீர வாலிபன் இளவசரன். இளவரசனின் மரணம் ஒரு வேளை தற் கொ லை யாக இருந்தாலும்,அந்த நிலைக்கு தள்ளியவர்கள் கொலையாளிகளே.

பொதுவாக தற்கொலை செய்து கொள்பவர்கள், கோழைகள் என்ற எண்ணம் உடையவன் நான். ஆனால் இன்னும் சில நிமிடங்களில் தன் உடற்கூட்டில் இருந்து உயிர் சிறகடித்துப் பறக்கப் போகிறது என்ற நிலையிலும் அச்சம் துளி யும் இல்லாமல் தங்களின் உயர்ந்த லட்சியம் வெல்ல மரணத்துடன் சமரச உடன்படிக்கை செய்துகொண்டு உயிர்த்தியாகம் செய்வது மகத்தானது. அந்த விதத்தில் சாதி வெறி அரசியல் வாதிகளின் முகத்தில் தன் மரணத்தின் மூலம்
கரியைப் பூசியிருக்கும் இளவரசன் மாவீரன், அவனுக்கு வீர வணக்கம்.

காதல் ஜோடிகள் இளவசரன் - திவ்யா நல்ல கல்வி கற்றவர்கள், அவர்களின்
பெற்றோர் மதிக்கத்தக்க கெளரவமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்.
அழகில் ஒருவருக்கு ஒருவர் என்று சகல லட்சணத்துடன் இருந்தனர். அறி வில், அழகில், அந்தஸ்தில் நிகராக இருந்தவர்கள் சாதியில் வேறுபட்டு இருந் ததால் சாதிய பிழைப்பு வாதிகள் சதிவலை பின்னி சதுரங்கம் ஆடி தமிழர் களின் பெருமையை உலக அளவில் தலைகுனிய வைத்து விட்டனர். இதில் சாதி வெறி அரசியல் வெற்றி பெற்றிருந்தாலும், அவர்கள் கூர் தீட்டிய நாடக காதல் விஷமப் பிரச்சாரம், இளவரசனின் மரணத்தின் மூலம் முனை முறிந்து மூளியாகி முகாரி ராகம் பாடுகின்றது. (மீண்டும்) இவர்களின் சாதி சடங்கு களை உடைத்து மனம் ஒன்றி காதலிப்பவர்களை மோப்பம் பிடித்து சாதி சனி யன்கள் பின் தொடர்ந்து ஆந்தை கண் கொண்டு அலறித்துடிக்க காத்திருக்கும், சாதி, மதங்களிடமும், சாதிய மதவெறியர்களிடமும் காதலர்கள் எச்சரிக்கை யாக இருங்கள்.

Be aware Of caste and religion

இதற்கு சரியான சட்டம் பாதுகாப்பு இல்லாவிட்டால் காதல் இளவரசர்களின்,
இளவரசிகளின் மரணம் தொடரும்.பொது அமைதி கெடும், இங்கு தேவை மீண் டும் ஒரு பெரியார், அம்பேத்கர்,காரல் மார்க்ஸ்கள் சமூகத்தைத் திருத்திப் பண் படுத்த.

இவர்கள் இருவேறு சாதி காதல் திருமணங்களை மட்டும் எதிர்க்க வில்லை. ஒரே சாதியாக இருந்தாலும், ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்கிறார்கள். அதையும் மீறி திருமணம் செய்ய முயன்றால் ஏழ்மை நிலையில் உள்ள பெற் றோரை அடிப்பது,அச்சுறுத்துவது, சாதிய நிர்பந்தங்கள் கொடுப்பது இங்கே இளவசரன்-திவ்யா காதலுக்கு பெற்றோர் சம்மதம் இல்லாவிடினும் சாதிய கட்டுமானத்தால் நெருக்குதலுக்கு உள்ளான திவ்யாவின் தந்தை நாகராஜ் மனவேதனை அடைகிறார்.

மகள் திவ்யா வேறு சாதி இளைஞனுடன் காதல் வயப்பட்டு 9.10.2012 அன்று
வீட்டைவிட்டு வெளியேறி 10.10.2012 அன்று திருமணம் செய்துகொள்ளும்
நிலையில் என்றாவது ஒரு நாள் மகள் பிறந்த வீட்டிலிருந்து வேறு வீட்டிற்கு
செல்லப் போகிறவள் என்ற நிலையில் சமாதானம் அடைந்திருந்தாலும், சாதி
வெறி அரசியல் நிர்பந்தம் காரணமாக, நாகராஜ் தொடர்ந்து அவமானப் படுத்தப்
பட்டதால் மனம் உடைந்த நிலையில் 7.11.2012 அன்று உயிரற்ற சடலமாகக்
கிடக்கிறார். இதற்கு சாதிய நிர்பந்தமே காரணம். கடந்த மூன்று ஆண்டுகளில்
மட்டும் தமிழகத்தில் 1,789 பேர் கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளனர். சாதி
வெறிக்கு இரையாகி உள்ளனர்.

காதலுக்காக பெற்றோரை இழக்க தயாராகி காதலனுடன் சென்றதால் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.இதனால் தனிமைப்படுத்தப்பட்ட தாயையும் தம்பியையும் நினைத்து துயருற்ற திவ்யா குடும்ப உறவுகளுக்காகவும், சாதிய நிர்பந்தத்திற்காகவும், காதல் கணவன் இளவசரனை இழந்து இளம் கைம் பெண் ணாக மாறி உள்ளாள்.இதற்கு இந்த சமுதாய கட்டமைப்பே காரணம்.

திவ்யா ஒவ்வொரு முறை நீதிமன்றம் அழைத்து வந்த போதெல்லாம் கடைசி யாக 3.7.2013 அன்று பத்திரிக்கையாளர்களிடமும் ஊடகவிலாளரிடமும் பேசும் போது இளவசரனுடனான தன் காதல் பரிசுத்தமானது, தான் விரும்பியே இளவ ரசனை திருமணம் செய்து கொண்டேன், இதில் எந்த நிர்பந்தமும் அச்சுறுத்த லும் இல்லை என்று கடுமையான கட்டுப்பாடு காவலுக்கு மத்தியிலும், சாதிய நிர்பந்தத்திற்கு மத்தியிலும் மனம் திறந்து ஊருக்கும் உலகுக்கும் தங்களின் காதல் நாடக காதல் அல்ல உயிர் உள்ள உண்மை காதல் என்றே திவ்யா சொல்லி வந்தார்.

காதலர்கள் இளவரசன்-திவ்யா இருவேறு சாதிகளை சேர்ந்ததனால் தான் இப் பிரச்சனை கொழுந்துவிட்டு எரிகிறது. ஒருவேளை இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்து இருந்தால் ஒருவரின் விருப்பத்தின் பேரில் எந்த மதத்திலும் சேர்ந்து கொள்ளலாம் என்ற நிலை, மதம் மாறலாம், சாதி மாற முடியாதே.

எந்த சாதியில் பிறந்தோமோ அந்த சாதியில் தான் இறக்க முடியும் என்பது
நமது சாதிய கட்டமைப்பு. இதை உடைத்தெறியத் தான் அண்ணல் அம்பேத்கார் அவர்கள் இந்து மதத்தில் உள்ள சாதிய ஏற்றத் தாழ்வால் தனக்கு ஏற்பட்ட கசப் பான அனுபவங்கள் காரணமாக நான் இந்துவாக பிறந்திருந்தாலும் சாகும் போது இந்துவாக இறக்க மாட்டேன் என்று மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில்
பெளத்த மதத்தைத் தழுவினார்.

சாதிய மறுப்பு காதல் திருமணத்திற்கு ஆதிக்க சாதி வெறியர்களால் ஏற்பட்ட
நிர்பந்தம், கொலை மிரட்டல் அனைத்தையும் அறிந்தவர்கள் காதலர்கள் இளவ ரசனும் திவ்யாவும், இளவசரன் மரணத்தை தழுவிவிட்டான். பிணம் பேசாது. ஆனால் திவ்யா பேசக் கூடியவர். பிணத்தை போல் பேசாமல் இருந்து விடக் கூடாது. திவ்யாவின் இரண்டு சிறகுகளும் சாதி வெறி வேட்டைக்காரர்களால் வெட்டி வீழ்த்தப் பட்டுவிட்டது. மனதளவில் ஊனமாக்கப்பட்டு முடமாக்கப் பட்டு விட்டது.மெளனத்தை கலைத்து சமுதாய நலன் கருதி சமூக விரோதி களின் முகத்திரையை கிழிக்க வேண்டும் அதுதான் இளவசரன் மீது திவ்யா வைத்திருக்கும்மாறாத காதலுக்கு மரியாதை.

தர்மபுரி

தர்மபுரி என்றால் அறம் சார்ந்த நெறி சார்ந்த தர்மகுணமும் தயாள உள்ளமும்
எல்லா உயிரையும் தன் உயிராக நேசிக்கும் அறச் சான்றோர்கள் வாழும் பகுதி என்பர்.

தமிழ் மூதாட்டி ஒளவைக்கு நெல்லிக் கனி தந்த தர்மபுரியை தலைநகராக
கொண்ட தகடூர் வள்ளல் அதியமானுக்கும், தொண்டை மானுக்கும் நடக்க இருந்த யுத்தத்தை, தூதுவனாகச் சென்று தடுத்து நிறுத்திய ஒளவை உலவிய பூமி, ஒளவையின் நல்வழி பாடல் 2 இல் 

சாதி இரண்டொழிய வேறில்லை
சாற்றுங்கால்
நீதி வழுவா நெறி முறையின் -மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதவர்
இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி

என்ற மூதுரைத்த தமிழ்நாடு

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தரவாரா
என்ற கணியன் பூங்குன்றன் வாழ்ந்த மண்

ஜாதிகள் இல்லையடி பாப்பா
குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல்பாவம்
என்ற பாரதியார்

வாழ்ந்த பெருமை பேசும் தமிழ்நாட்டில்

ஆண்டாண்டு காலமாக சமுதாயத்தில் புரையோடிப் போய் உள்ள தீண்டாமை
நோய் வைத்த தீ. நாகரிக சமூகத்தில் தமிழர்களுக்கு தலைகுனிவை உரு
வாக்கி உள்ளது.தர்மபுரி மாவட்டத்தில் நத்தம்,அண்ணாநகர், கொண்டாம்பட்டி
ஆதிதிராவிட கிராம மக்களுக்கு சாதி வெறியர்களால் இழைக்கப்பட்ட கொடு மை என்பது ஒரு காதலால் ஏற்பட்ட அவமானத்தால் பெண்ணின் தந்தை தற் கொலை செய்து கொண்டார் என்பதற்காக இந்த கொலைவெறி தாக்குதல் அரங்கேற்றப் பட்டிருக்கிறது என்பதை உளவியல் ரீதியாக பார்த்தால் காதல் மட்டும் காரணமாக இருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. காத லுக்கு மேலாக, ஆண்டாண்டு காலமாக சமுதாயத்தில் புரையோடி போய் உள்ள மேல் சாதி,கீழ் சாதி,ஆண்டான், அடிமை முறை போன்றவையே, காதல், கலப்பு மணத்திற்கு எதிராக தீ பந்தத்தை ஏந்த வைத்துள்ளது.

இந்த காதலில் சம்மந்தப்பட்ட ஆண் இளவசரன், ஆதிதிராவிட வகுப்பை சார்ந் தவர், பெண் திவ்யா வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த பெண். ஆனால் இதில் எந்த விதத்திலும் சம்மந்தப்படாத அப்பாவி ஆதிதிராவிட மக்கள் தங்கள் உழைப்பினால் ஓரளவு வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்கள்.
தங்களின் சுயமுயற்சியால் குருவியை போன்று சிறுக சிறுக சேர்த்து சிறிய
அளவிலான நிலம், தங்க நகைகள், இருசக்கர வாகனங்கள், சேமிப்பு பணங் கள், கல்வி கற்ற சான்றிதழ்கள், இவைகளை கொள்ளையடிக்கும் நோக்கிலே இத்தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்பது களத்தில் நாம் கண்ட காட்சிகள்.

ஏதோ இருவேறு சமூகத்து இளைஞர்கள் காதலித்ததால் ஏற்பட்ட கோபம் என் றால் சிறிய கை கலப்புடன் முடிந்திருக்க வேண்டும். காவல் நிலையத்தில்
பெண்ணின் தகப்பனார் அவமானப் படுத்தப்பட்டதால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்றால் அதற்க்கு காரணம் சம்மந்தப்பட்ட காவல்துறை.

ஆனால் நிராயுதபாணிகளான இதில் எந்த விதத்திலும் சம்மந்தப்படாத ஆதி திராவிட மக்கள் மீது, அவர்களின் வளர்ச்சியின் மீது காழ்ப்புணர்வு கொண்ட தன் விளைவே மனசாட்சியே இல்லாத பெரிய மனிதர்களின் ஆதரவுடன் திட்டமிட்டு கூடி ஆலோசனை செய்து அதற்கு ஒத்திகை பார்த்து உடனடி உத் தரவு போடுவதற்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஊரில் இல்லாத நாளை தேர்வு செய்து இக்கொள்ளை, தீ வைப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறிப்பிட்ட ஆதி திராவிடர் பகுதி மக்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு வெளி யில் இருந்து யாரும் எளிதில் வந்துவிடாத வண்ணம் சாலையின் இரண்டு பக் கங்களிலும் ஐந்து கிலோ மீட்டர் தூரம் மரங்களை வெட்டி தடுப்பினை ஏற் படுத்தி 35 கிராமங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு மது போதையுடன் விருந்து வைத்து தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் ஆயிரத்திற்கும் மேற் பட்டவர்கள் கையில் ஆயுதங்களுடன் 7.11.2012 அன்று மாலை 4 மணி அளவில் ஆதிதிராவிட மக்கள் வாழும் பகுதியைச் சுற்றி வளைத்து ஒவ்வொருவர் வீட் டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளையும்,
பணத்தையும்,கொள்ளை அடித்து விட்டு,நிலத்தின் ஆவணங்களையும், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள், உணவு உடைமைகளை சூறையாடி, பெட்ரோல் குண்டு வீசி, வீட்டை தீக்கரையாக்கி 63 இருசக்கர வாகனங்களை கடப் பாரையால் குத்தி தீ வைத்து கோர தாண்டவம் ஆடி தரங்கெட்ட நடவடிக்கையை அரங் கேற்றி உள்ளனர்.

ஏறக்குறைய மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை, 5 மணி நேரத் திற்கு மேலாக இச்சம்பவம் நடைபெற்றும் காவல்துறையும், உளவுப் பிரிவும், அரசும், வேடிக்கை பார்த்துக்கொண்டு மெளன பார்வையாளர்களாக இருந்துள் ளனர். ஏதோ பகை நாடுகளின் படையெடுப்பால் தீக்கிரையாகி நாசமான ஊரைப் போன்று நிராயுத பாணிகளான தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆயுதம் தாங்கி வன்கொடுமை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் சம்மந்தப்பட்ட திவ்யா கட்டாயப்படுத்தி கடத்தப்பட்டதாக எழுந்த  குற் றச்சாட்டுக்கு நீதிமன்றத்தில் 27.3.13 அன்று நீதிபதி முன் ஆஜர்படுத்திய போது தன் பிரமாண வாக்குமூலத்தில் தன்னுடைய விருப்பத்தின் பேரிலேயே காத லன் இளவரசனுடன் சென்றதாக கூறிய போது அதற்கு நீதிபதி இப்பொழுது யார் வீடடிற்கு செல்லப் போகிறாய் என்று கேட்டதற்கு தன் காதல் கணவன்
இளவரசன் வீட்டிற்கு செல்ல விரும்புவதாக சொன்னாள். இங்கே சாதி தற் கொலை செய்துகொள்ள வேண்டும்.பெண்ணுக்கு மட்டுமே தெரியும் சாதி
என்று ஒன்றில்லை என்பது.

எனவே தான் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பாதி அளவு உள்ள பெண் சமு தாயம் தங்கள் பெயர்களுக்கு பின்னால் சாதியை சேர்ப்பதில்லை.ஆண்ஆதிக்க சித்தனை உள்ளவர்கள் மட்டுமே பெயருக்கு பின் சாதி சேர்த்துக் கொள்வது. இந்த ஆண் ஆதிக்க சமூகம் தான் தாழ்த்தப்பட்டவர்களையும், பெண்களையும் ஆலயம் செல்லக் கூடாது பொது மன்றங்களில் வரக் கூடாது கல்வி கற்கக் கூடாது உயர் பதவி வகிக்க கூடாது என்று ஒதுக்கி வைக்கிறார்கள். இங்கே தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பெயருக்கு பின்னால் சாதியை சேர்க்காமல் தமிழர்கள் என்ற உணர்வோடு வாழ்ந்து வருகிறார்கள்.

முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் என்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில் சாதி வெறியை தூண்டுவதற்கும் அதனால் ஒரு சிலர்
ஆதாயம் பெறுவதற்கும் சாதிய சங்கங்கள், அமைப்புகள்.

இதை நியாயப்படுத்தி காரணம் கற்பித்தும் வக்காலத்து வாங்கி பேசும் வெட் கம் கெட்ட பெரிய மனிதர்கள், விஞ்ஞான உலகில் நிலவில் காலடி எடுத்து வைத்த பின்பும் கொடிய மனம் கொண்டோர் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இது சமூகத்தின் பால் உண்மையான அக்கறை கொண்டவர்கள் ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம்.எதிர்காலம் நம்முகத் தில் காரி துப்பப் போகிறது தர்மபுரி சம்பவத்திற்கு.

ஒளவை உலவிய மண்ணில் சான்றோர்கள் இல்லையா,அறம் சார்ந்த அரசி யல் வாதிகள் இல்லையா, கேடு விளைவிக்க போடப்பட்ட திட்டத்தை உடைக் கும் சமுதாய நல்லிணக்க தூதுவர்கள் இல்லையா.

தர்மபுரியில் மூண்டெழுந்த ஜாதி தீ உருவாக்கிய வடு மறைவதற்கு எத்தனை தலைமுறையாகும்.

அடிக்கப்படும் போது பந்தும் 
வளைக்கப்படும் போது வில்லும் 
பாய்வதற்கு முன் புலியும் -

சக்தியை சேகரித்துக்கொள்ளும் இது தாக்கு தலுக்குள்ளாகும் எல்லா சமுதா யத்திற்கும் பொருந்தும் என்பதை ஏன் சம்மந்தப்பட்டவர்கள் யோசிக்க வில் லை . சங்கிலி தொடர்போல் இது போன்ற சம்பவங்கள் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம். இனி அரசுகளை நம்பி பயன் இல்லை தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள இளைய தலைமுறை ஆயுதம் ஏந்தினால் விளைவு களுக்கு முடிவு ஏது.

கீழ் வெண்மணி

தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மணியில் 1968 ஆம் ஆண்டு ஆதிக்க சாதிய அடக்கு முறைக்கு உள்ளான தாழ்த்தப் பட்ட மக்கள் இடதுசாரி அமைப்புகளு டன் இணைந்து கூலி உயர்வு கேட்டு போராடியதன் விளைவு பண்ணை அடி யாட்களால் அடித்து விரட்டப்பட்டனர். உயிர்காக்க ஓடி ஒரு குடிசையில் சென்று தாழிட்டுக்கொண்டு இருந்த போது கதவின் வெளியே பூட்டி குடிசைக்கு தீ வைத்ததன் காரணமாக 44 பேர் ஒட்டுமொத்தமாக எரிக்கப்பட்டு இறந்து போனார்கள்.

ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு கல்லறை எழுப்பப்பட்டது. இதற்கு கார ணமானவர்கள் சமுதாய அந்தஸ்தை காரணம் காட்டி நீதிமன்றத்தால் விடு விக்கப்பட்டனர்.அதற்குபின் அரசை,நீதிமன்றத்தை நம்பி பயன் இல்லை என்று முடிவெடுத்த இளைஞர்கள் பழிக்குப்பழி என்று பழி தீர்த்து சம்பந்தப்பட்டவரின் இரத்தத் தால் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை நனைத்தார்கள். எனவே தர்மபுரி நடந்துவிட்ட பேரவலம் தேசிய பேரவமானம் இதை செய்தவர் கள், செய்யத் தூண்டியவர்கள், தீவினையை தடுக்கத் தவறியவர்கள் சமூகத் தில் வாழத் தகுதியற்றவர்கள்.

உடன்கட்டை என்னும் சதி மறைந்த மண்ணில் சாதியும் மறைய வேண்டும்.
ஏற்றத் தாழ்வில்லாத சமத்துவ சமுதாயம் மலர தேசபிதா காந்தியின் சிந்தனை யில் உருவானது சமபந்தி விருந்து இதனால் சாதிய ஆதிக்க எண்ணம் மறை யாது என்று இந்தியாவின் அரசியல் சாசனத்தை வடித்தெடுத்த சிற்பி புரட்சி யாளர் அண்ணல் அம்பேத்கர் சிந்தனையில் உதயமானது சாதிய ஏற்றத்தாழ்வு மறைந்து ஆதிக்கமற்ற சமத்துவ சமுதாயம் மலர ஒரே தீர்வு, சாதிய மறுப்பு காதல் திருமணங்களே தவிர சமபந்தி விருந்தல்ல.

அதை பின்பற்றி தான் தந்தை பெரியாரின் வேண்டுகோளை ஏற்று, பேரறிஞர் அண்ணா சாதிய மறுப்பு சுயமரியாதைத் திருமணங்களை சட்டமாக்கினார். சாதி வேற்றுமையை, மத வேற்றுமையை விரட்டும் சக்தி காதலுக்கு உண்டு. எனவே தான் சாதிய மறுப்பு, மத மறுப்பு திருமணங்கள் ஊக்குவிக்கப்படுகிறது. இதை காரல் மார்க்சை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரை, தந்தை பெரி யா ரை நெஞ்சில் தாங்குவோர் உணர்வார்கள்.

காரல் மார்க்ஸ்

பொது உடமை சித்தாந்தத்தின் பிதாமகன் காரல் மார்க்ஸ், ஜெர்மன் நாட்டில் யூத குலத்தில் பிறந்தவர். அதே ஜெர்மனியில் செல்வ செழிப்பு நிறைந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த பேரழகி ஜென்னி இருவரும் காதல் வயப்பட்டு விரும்பி திருமணம் செய்து கொண்டு இன்பத்திலும், துன்பத்திலும் லட்சிய தம்பதிகளாக வாழ்ந்தார்கள் என்பதை சாதி அரசியல் நடந்துபவர்கள் அறியவில்லை.

தந்தை பெரியார்

இருவேறு சமூகத்து ஆணும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள் வதை கலப்புத் திருமணம் என்றழைத்த போது பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், அதை மறுத்து மனிதருக்குள் நடக்கும் திருமணம் எப்படி கலப்பு திரு மண மாகும்? மனிதனுக்கும் விலங்குக்கும் திருமணம் நடந்தால் அல்லவா அது கலப்பு திருமணம். இருவேறு சாதிப்பிரிவை சார்ந்த ஆணும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டால் சாதிய மறுப்பு திருமணம் என்றார், அறிவாசான் தந்தைபெரியார். இதை பெரியாரின் பாதை எங்கள் அரசியல் பாதை என்போர் ஏன் அறிந்து கொள்ளவில்லை. எனவே தான் சாதிய மறுப்பு, காதல் திருமணங்களை ஊக்கப்படுத்தாமல் அதை கொச்சைப்படுத்தும் நிலை.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

என்றான் வள்ளுவன்,

தர்மபுரி மாவட்டம் - நத்தம்,அண்ணாநகர், கொண்டாம்பட்டியில் நிர்கதியாய் ஒதுங்குவதற்கு நிழல் கூட இல்லாமல் தவிக்கும் தாய்மார்களின் கண்ணீருக்கு வலிமையும், சக்தியும் உண்டு என்பதை உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

தன் தாயின் வயிற்றில் பிறக்காமல்,சிற்றன்னையின் வயிற்றிலும் பிறக்கா மல் கானகம் சென்ற போது அப்பழுக்கற்ற  அன்பைப் பொழிந்த படகோட்டி
குகனுடன் சேர்ந்து இனி நாம் ஐவர் ஆனோம் என்றார் இராமன். இதிகாசம்
ஆனாலும், அன்பின் வலிமையைக் காட்டும் செய்தி.

உயிர்காக்கும் மருத்துவ உலகில் நன்குபடித்து அனுபவம் பெற்றவர்கள் சொல் வது எவ்வளவு பெரிய மதவாதி யானாலும், சாதி தலைவர் ஆனாலும் அவசர சிகிச்சைக்கு இரத்தம் தேவைப் படும். அப்போது இந்த மதத்தின் ரத்தம், இந்த சாதி ரத்தம் தேவை என்று கேட்டு அடம்பிடிக்க முடியாது. அறிவியல் ரீதியாக நோய் குணமாக யு குரூப், டீ குரூப் என்ற ரத்த வகை தான் கேட்பார்கள்.

தொடரும்....
நன்றிகள் 

கட்டுரையாளர் :- 
மல்லை சத்யா

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment