Tuesday, August 6, 2013

மாவீரர்களை நினைவு கூர்கின்றோம்;

மாவீரர் நாள் பொதுக்கூட்டம், 27.11.2012 அன்று, சென்னை தியாகராயர் நகரில்
பேரெழுச்சியுடன் நடைபெற்றது.கழகப் பொதுச் செயலாளர்வைகோ சிறப்புரை ஆற்றினார்.அவரது உரையில் இருந்து...

தீபங்களின் திருநாளாகிய இன்று,தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் எல்லாம், குன்றுதோறாடும் குமரனை வழிபடுகின்ற மக்கள் எல்லாம் கொண்டாடித் திளைக்கின்றார்கள்.

இது கார்த்திகை தீபத் திருநாள்.

தமிழ் ஈழ விடியலை நெஞ்சில் தாங்கி இருப்பவர்களுக்கு, இது மாவீரர் நாள்.
இதில் ஒரு ஒற்றுமை இருக்கின்றது. தமிழ் ஈழ மக்கள், கார்த்திகைப்பூக்களைக் கைகளில் ஏந்தித்தான், மடிந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகின்றார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், இதே நவம்பர் 27 ஆம் நாள், ஒரு மக்கள்
கடலுக்கு முன்னால், மாவீரர் நாள் உரை ஆற்றக்கூடிய பேற்றினை நான்
பெற்றேன்.
அது, நவம்பர் 27, 2008. லண்டன் மாநகரத்தில், எக்செல் அரங்கம். ஐரோப்பியக் கண்டத்திலேயே அவ்வளவு பெரிய அரங்கம் வேறு எங்கும் கிடையாது. அதிலே நிறைவு உரை ஆற்றக்கூடிய வாய்ப்பினை,தமிழ் ஈழ உறவுகள் எனக்கு
விருப்பத்தோடு வழங்கினார்கள்.

காலை 10 மணி அளவில், தொடக்க நிகழ்ச்சியாக அனைவரும், கார்த்திகைப் பூக்களை, செங்காந்தள் மலர்களைத் தூவிய பின்னர், திரண்டு இருந்த அனை வருடைய கைகளிலும் தரப்பட்ட கிண்ணங்களில் மெழுகுச் சுடரை ஏற்றி, உயர்த்திப் பிடித்தனர்.


நம் நெஞ்சங்களை நிரந்தரமாக ஆளுமை செய்கின்ற, தமிழர்களின் வரலாற் றில், இருபதாம் நூற்றாண்டின் நிறைவுப் பருவத்தில், தரணிக்கெல்லாம் தமி ழர்களின் வீரத்தை, மானத்தை அறியச் செய்த, மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களுடைய உரை, அந்த அரங்கத்திலே ஒளிபரப்பப்பட்டது.

அதற்குப் பிறகு, நிகழ்வுகள் தொடர்ந்தன.

என் நெஞ்சம் பாறையாகக் கனக்கின்றது. ஆயிரமாயிரம் வேதனைகள், உள் ளத்தில் அலைமோதுகின்றன.அன்று அந்த உரையில், மாவீரர் திலகம் பிரபா கரன் குறிப்பிட்டார்:

“இன்று எமது தமிழ் ஈழ தேசம்,ஒரு பாரிய யுத்தத்தை எதிர் கொண்டு நிற்கின் றது. சிங்கள இனவாத அரசு ஏவி விட்டுள்ள ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்த்து,
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள், வீராவேசத்தோடு யுத்தம் செய்து  கொண்டு இருக்கின்றார்கள். உலகத்தின் பல்வேறு வல்லாண்மை அரசுகள்,தமிழர் இன அழிப்பு யுத்தத்துக்கு முண்டு கொடுத்து சிங்களவர்களுக்குத் துணையாக இருக்க, நாங்கள் விடுதலைப்புலிகள் தன்னந்தனியாக, எமது மக்களின் தார்மீக
பலத்தை மட்டுமே துணையாகக் கொண்டு, நாங்கள் களத்திலே போராடிக் கொண்டு இருக்கின்றோம். எத்தனை சவால்கள் எழுந்தாலும், அவற்றை நாங் கள் எதிர்கொள்ள நேர்ந்தாலும், எத்தனைத் துன்பங்கள் எங்களை முற்றுகை இட்டுத் தாக்கினாலும், சத்திய வேள்வியில் தங்களை அழித்துக் கொண்ட மாவீரர்களின் வழியிலே இந்த யுத்தத்தை நாங்கள் நடத்திச் சென்று,களத்திலே எங்கள் இலட்சியத்தை வென்று எடுப்போம்.”

என்று, அந்த உரையிலே அவர் குறிப்பிட்டார்.

இதோ, இந்த மேடைக்கு எதிரே தழல் எரிகின்றது. தமிழகம் எங்கும் குமரனை
வழிபடுகின்ற மக்களும், நெடுங் காலமாகக் கார்த்திகைத் திங்களில் விழா எடுக்கின்ற தமிழ்ப் பெரு மக்களும், இன்று தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வைத்து இருக்கின்றார்கள்.

பிரபாகரன் அவர்கள், ஒரு மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டார்கள்:

“இந்த மாவீரர்கள், வணக்கத்துக்கு உரியவர்கள். ஆயிரமாயிரம் வீரர்கள், எங் கள் தாயக விடுதலை வேள்வியில், தமிழ் ஈழ விடுதலைக் கோவிலில், சுடர் களாக ஒளி வீசிக் கொண்டு இருக்கின்றார்களே, அவர்களுக்கு நாங்கள் இன்று வீர வணக்கம் செலுத்துகிறோம். எங்கள் மண்ணின் வீர மார்பைப் பிளந்து, அவர்களைப் புதைத்தோம். அவர்கள், வீறு கொண்ட விருட்சங் களாக, விடு தலை இலட்சியத்தைத் தரித்தவர்களாக எழுந்து நிற்கின்றார்கள். அவர்கள், எங்கள் விடுதலை இயக்கத்தின் அடித்தளக் கற்கள். அவர்கள்தான், எங்கள் சுவாசம்.”

என்றார்.

இன்று இந்த மாவீரர் நாள் நிகழ்வை வெகு சிறப்பாக நாம் நடத்திக் கொண்டு இருக்கின்றோம். எங்களிடம் ஒன்றும் அதிகாரம் இல்லை; பணபலம் இல்லை. ஏடுகள், தொலைக்காட்சி ஊடகங்களின் பலத்த ஆதரவும் எங்களுக்கு இல்லை. ஆனால், ஆண்டகட்சியோ, ஆளுங்கட்சியோ நடத்த முடியாத அளவுக்கு, இலட்சியத்துக்காக ஒரு நிகழ்ச்சியை நடத்தக்கூடிய ஆற்றலை என் சகோதரர் கள் பெற்று இருக்கின்றார்கள்.

இந்த மேடையின் அமைப்பைப் பாருங்கள். சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தின் விடு தலை நாள் விழா நடைபெறுகின்றபோது, எப்படியெல்லாம் ஈழம் அதைக் கொண்டாடும் என்பதை எடுத்துக் காட்டுகின்ற வகையில், இந்த மணிமண்ட பத்தை, மணிமாறன் அமைத்து இருக்கின்றார்.அவரை என் சகோதரனாகப் பெற்றதற்காக, நான் பெருமைப் படுகின்றேன்.இது வெறும் வார்த்தை அல்ல.

நேற்று நள்ளிரவில், டெல்லி மாநகரில் இருந்து நான் அவரைத் தொலைபேசி யில் அழைத்தேன். நான் மேடை அமைக்கின்ற பணியில் இருக்கின்றேன் என் றார். அப்படி இரவெல்லாம் தூங்காமல், பகலிலும் அந்தப் பணிகளைத் தொடர்ந்து, நாள்கள் பலவாகத் திட்டமிட்டு, இந்த நிகழ்ச்சியை அவர் சித்தரித்து
இருக்கின்ற பாங்கைப் பாருங்கள்.இங்கே என் படங்களை வைத்து இருக்கின் றார். அது கூடாது என்று நான் சொன்னால், இதற்காக அவர் எத்தனை பாடு பட்டு இருப்பார்? அவரது உள்ளம் எப்படி வேதனைப் படும் என்பதால், நான் குறை சொல்லவில்லை. சாஞ்சி நிகழ்ச்சியைத் தொகுத்து இருக்கின்றார்.

இது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடத்தப்படுகின்ற பொதுக்கூட்டம்.இங்கே, தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் இலச்சினை பொறிக் கப்பட்டு இருக்கின்றது. இது, உறுதியின் உறைவிடம். இது, அழுவதற்காக
அமைக்கப்பட்ட கல்லறை அல்ல. இது, மாவீரர்கள் துயில்கின்ற இடம் என் பதை அடையாளப்படுத்துகின்ற ஆயுதங்கள் இங்கே தீட்டி வைக்கப் பட்டு இருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு மணிமாறன் எடுத்துக் கொண்ட முயற்சிகள், அவருடன் இணைந்து பணி ஆற்றிய தோழர்களைப் பார்க்கிறேன்.அவர்களுக் கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இங்கே, பல்லாயிரக்கணக் கில் தமிழ்ப்பெருமக்கள் திரண்டு இருக் கின்றார்கள். என் ஆருயிர்ச் சகோதரன்
வேளச்சேரி மணிமாறன் தலைமை தாங்கிக் கொண்டு இருக்கின்றார்.

மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களுடைய நம்பிக்கையை, நேசத்தைப்பெற்று, அவர் பிறந்த மண்ணில், விடுதலைப்புலிகளுடைய பயிற்சிப்பாசறையை அமைத்து, அந்தப் போராளிகள், புலிகள் பயிற்சி எடுத்துச்செல்லத் தன் தோட் டத்தைத் தந்து,ஏன், அலைகடல் தாண்டியும் ஈழத்துக்குச் சென்று, தலைவர்
பிரபாகரன் அவர்களோடு அளவளாவி, கருத்துகளைப் பரிமாறி, எத்தனை
ஆண்டுகளாக, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு அவர் ஆற்றி இருக்கின்ற
சேவை, ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைபட்டுக் கிடந்தவர்;எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள மாட்டார். அவர், அறிவா சான் தந்தை பெரியாரின் வார்ப்பு. தன்மான உணர்வின் வார்ப்பு. திராவிடர்
விடுதலைக் கழகத்தின் தலைவர், என் ஆருயிர்ச் சகோதரர் கொளத்தூர் மணி
அவர்கள் இங்கே உரை ஆற்றினார்கள்.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும், தமிழ் ஈழத்துக்கும், தமிழ் ஈழ விடு தலைப்புலிகளுக்காகவும்,தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பாடு பட்டுக் கொண்டு இருக்கின்ற ஆருயிர் அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் இங்கே உரை ஆற்றினார்கள்.

உச்சிதனை முகர்ந்தால் என்ற உயிர்க்காவியத்தைத் தந்தது மட்டும் அல்ல, எங் கெல்லாம் ஈழத்தமிழர்களுக்குக் கேடு நேர்கின்றதோ, அதைக் கணப்பொழுதில் அறிந்து, அனைவருக்கும் தகவலைத் தந்து, அதைத் தடுப்பதற்குப் போராடிக்
கொண்டு இருக்கின்ற, என் ஆருயிர்ச் சகோதரர், இயக்குநர் புகழேந்தி தங்கராசு அவர்களும் இங்கே உரை ஆற்றினார்கள்.

ஈழத்தில் இனக்கொலை; இதயத்தில் இரத்தம் என்ற தலைப்பில் நான் தயாரித்த குறுந்தட்டினை, என் ஆருயிர்ச் சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி அவர்கள்,139 நாடுகளின் தூதர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பித்தார் கள்.இப்போது, இந்தி மொழியில் விளக்க எழுத்துகளோடு, நேற்றைய தினம்,
முன்னிரவுப் பொழுதில், தலைநகர் தில்லியில் வெளியிட்டு இருக்கின்றோம்.

இந்தி எதிர்ப்பு மொழிப்போர்க்களத்தில் அரசியல் வாழ்வைத் தொடங்கியவன்
நான்; என் வாழ்நாளில் இந்தியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை. ஆனால், இந்தக் குறுந்தகட்டில், நாங்கள் இந்தி எழுத்துகளில் விளக் கம் அளித்து இருக்கின்றோம். ஆங்கிலத் திரைப் படங்களின் உரையாடல்கள் எழுத்து வடிவமாகவும் காண்பிக்கப்படுகின்றன.அதைப்போல நாங்கள் இந்த
முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றோம்.

அடுத்து, மராட்டி மொழியில் தயாராகிக் கொண்டு இருக்கின்றது; வங்க மொழி யிலும், பஞ்சாபி, உருது ஆகிய மொழிகளிலும் தயாரித்துக் கொண்டு இருக்கின் றோம். ஜலந்தர், ஸ்ரீ நகர்,கொல்கத்தா, பாட்னா ஆகிய நகரங்களிலும் வெளி யீட்டு விழாக்களை நடத்த இருக்கின்றோம். அதற்குப்பிறகு, விந்திய சாத்புரா மலைகளுக்குத் தெற்கே, தக்காணப் பீடபூமிக்கு, தென் மாநிலங்களுக்கு நாங் கள் வருவோம்.

என்ன காரணம் தெரியுமா? சாஞ்சி அறப்போர்க்களத்துக்குச் செல்லுகின்ற வழி யில்,பட்சி சோலை கிராமத்தில் பெற்ற அனுபவம்தான்,இந்த முயற்சிகளுக்குக் காரணம்.மத்தியப்பிரதேச மாநிலம்,அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு  வலுப்பெற்று உள்ள இடம்; பாரதிய ஜனதா ஆட்சி நடத்துகின்ற மாநிலம்.அந்த பட்சி சோலை உள்ளாட்சி நிர்வாகமும் அவர்கள் கையில்தான்.அவர்களை எதிர்த்து நாங்கள்
போராடச் சென்று இருக்கின்றோம்.

கொலைகாரன் ராஜபக்சேயை அனுமதிக்கக்கூடாது; மனிதநேயத்தை உலகுக் கு எடுத்துச் சொல்லிக்கொண்டு இருக்கின்ற புத்தரின் மண்ணில், கொலை காரனுக்கு என்ன வேலை? எங்கள் தமிழர்களின் இரத்தம் தோய்ந்த கரங்களோ டு வருகின்ற வனை, மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு உள்ளே அனுமதிக்காதீர் கள்; அப்படி அனுமதித் தால்,அதைத் தடுப்பதற்கு, நாங்கள் தமிழகத்தில் இருந்து புறப்பட்டு வருவோம் என்று, இங்கே இருந்து நாங்கள் புறப்பட்டுச்
சென்றோம்.

வழியில் தாக்குதல்கள் நேரலாம்;ஆபத்துகள் வரலாம். ஆனால், எதுநேர்ந்தா லும் அதை எதிர்கொள்வது என்ற மன உறுதியோடுதான், நானும்,என் தோழர்க ளும் அங்கே சென்றோம்.கொதிக்கின்ற வெயிலில், தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து இருந்தோம். என் தோழர்கள் உறுதியாக இருந்தார்கள். காரணம், அவர் களது நெஞ்சிலே எரிகின்ற இலட்சிய நெருப்பு. ஆம்; முத்துக் குமாரை எரித்த நெருப்பு, எங்கள் நெஞ்சிலும் எரிகின்றது. அறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்த நாளில் தான், நாங்கள் இங்கிருந்து புறப்பட்டோம். அண்ணா பிறந்த
நாளில், கரூர் மாநாட்டில் பிரகடனம் செய்தோம். அந்த அண்ணனின் கல்லறை யில் கூடி, உறுதி எடுத்துக் கொண்டு புறப்பட்டோம். அங்கே உரை ஆற்றக் கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று ஒருபோதும் நான் கருதியது இல்லை. ஒலி பெருக்கிக்கு அங்கே அனுமதி கிடையாது. ஆருயிர்த்தம்பி ஜீவன் அருமை யான ஏற்பாடுகள் செய்து இருந்தார். 1200 தம்பிமார்கள் முன்னிலையில், என் நெஞ்சைப் பிளக்கின்ற உணர்வுகளைக் கொட்டிப் பேசினேன். அப்பொழுது சொன்னேன்: நான் பேசவில்லை; அண்ணா என்னைப் பேச வைக்கிறார்; அவர் தான் என்னை இயக்குகிறார்’ என்று சொன்னேன்.

சாஞ்சிக்குப் புறப்பட்டுச் சென்றோம்.மத்தியப் பிரதேச மாநிலத்தின் எல்லை யில், பட்சி சோலை என்ற இடத்தில் எங்களை காவல்துறையினர் வழிமறித் துத் தடுத்து நிறுத்தினார்கள்.அப்போது அவர்களிடம் நான் சொன்னேன்: நாங் கள் வன்முறையாளர்கள் அல்ல; எங்களைப் பற்றித் தமிழகக் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நாங்கள் இந்த இடத் திலேயே அமர்வோம். எங்களை இங்கிருந்து அகற்ற முயன்றால், விளைவு களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். எங்கள் மீது வன்முறையை நீங்கள் ஏவி னால், அதற்கு அஞ்சி நடுங்கி ஓடி விட மாட்டோம் என்று எச்சரித்தேன்.

அந்த இடத்திலேயே, நெடுஞ்சாலையில் அமர்ந்தோம்; இங்கே இருக்கின்ற என் சகோதரிகள் உள்ளிட்ட 1200 தோழர்களும், சாலையின் இருபுறங்களிலும் கிடந்த மனிதக் கழிவுகளுக்கு நடுவே அமர்ந்தோம்.

அதனுடைய விளைவு என்ன ஆயிற்று தெரியுமா? அந்த மக்கள்,பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கின்ற மக்கள், ஒட்டுமொத்தமாகத் திரண்டு, தங்கள் பிள்ளை குட்டிகளை உடன் அழைத்துக் கொண்டு வந்து, சாரை சாரையாக வந்து எங்க ளுக்கு வாழ்த்துச் சொன்னார்கள். மாலைகள் சூட்டினார்கள். எங்களைக் காவல்
துறையினர் கைது செய்தபொழுது, எங்களையும் கைது செய்யுங்கள் என்று சொல்லிப் போராட முன் வந்தார்கள்.

காரணம், நாங்கள் அங்கே வைத்து இருந்த விளம்பரத் தட்டிகளில், ஈழத்தமிழர் கள் படுகொலைக் காட்சிகளைச் சித்தரித்து இருந்தோம். அப்பொழுது தான் நான் எண்ணினேன்: இந்தியாஎன்கின்ற அமைப்புக்கு உள்ளே இருக்கின்ற பல்வேறு தேசிய இன மக்களுக்கு, இந்தப் பிரச்சினையைக்கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்;

உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுகின்ற பணி ஒருபக்கம் நடக்கட்டும்; ஆனால், அதைவிட இந்தியத் துணைக்கண்டத்துமக்களின் ஆதரவைத் திரட்டு வதும் முக்கியம். இந்திய அரசு செய்த துரோகத்தைத் தோல் உரித்துக்காட்டு வோம்; அதன் முகத்திரையைக் கிழித்து எறிவோம் என்று தீர்மானித்தேன். இன் றைக்கு இந்தத் தியாகராய நகரில் உறுதி எடுத்துக்கொண்டு நான் சொல்லு கிறேன். யுத்தம் முடிந்து விட்டதாக,சிங்களவன் நினைக்க வேண்டாம்; ராஜ பக்சே நினைக்க வேண்டாம். அது புதிய வடிவம் எடுத்து வரும். (பலத்த கை தட்டல்) ஆம்; இன்றைக்கு உலக அரங்கத்தில் பல்வேறு நாடுகளின் மனசாட்சி விழித்துக் கொள்ளத்தொடங்கி விட்டது. ஈழத்தமிழர்களின் விடுதலை இயக்கம் எடுத்துக்கொண்ட இலட்சியத்தை வெற்றி பெறச் செய்வதற்கு, இந்திய அரசு போடுகின்ற முட்டுக்கட்டைகளை உடைத்து எறிவதற்கு உரிய நிலையை,
இந்தியாவில் உருவாக்க வேண்டும்.அதற்காக நாங்கள் பாடுபடுவோம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

No comments:

Post a Comment