Monday, August 26, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 31

மாநில உரிமைகளைப் பறிக்கும் பஞ்சாயத்து ராஜ் சட்டம்!

உலகின் உயர்ந்த ஜனநாயக நாடு என்கிற பெருமை இந்தியாவுக்கு உண்டு.
ஆனால், இங்கே ஜனநாயகம் படும்பாடு இந்நாட்டிற்கு மதிப்பைப் பெற்றுத் தந் திருக்கின்றதா என்றால் இல்லை.

தேர்தல் முறை என்பது சாமான்ய மக்களின் இதயதாகத்தை வெளிப்படுத்துவ தாகவும், அவர்களது உரிமையை நிலை நாட் டுவதாகவும் இருக்க வேண்டும். அந்த நோக்கத்தில்தான் அரசியல் அமைப் புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் வாக்குரிமைக்கு முக்கியத்துவம் தந்தார்கள்.

ஆனால், இன்றைக்கு பணபலமும்,ஆள்பலமும்,தோள்பலமும் தேர்தல் முடிவு களை நிர்ணயிக்கக்கூடிய அளவுக்கு ஜனநாயகம் சீரழிந்துவிட்டது. இதற்கான முன்னுரிமையை எழுதிய புண்ணியவான்கள் காங்கிரஸ்காரர்கள்தான் என்ப தை இருபது ஆண்டுகளுக்கு முன்னரே நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திக்
கண்டனம் செய்தவர் தலைவர் வைகோ அவர்கள் ஆவார்.

1992, மார்ச் 11 ஆம் நாள் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிய விவாதத்தில் பங்கு கொண்டு வைகோ ஆற்றிய கருத்துரை வருமாறு:

தேர்தலில் வன்முறை அராஜகம் ஒழிக்கப்பட வேண்டும்

வைகோ : வாக்குப்பதிவுக்கு முன்னர் சுயேச்சை வேட்பாளர்கள் இறந்து
போனால், தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற
அவசர சட்டத்தின் மீது இங்கே விவாதம் நடக்கிறது. தேர்தல் சீர்திருத்தங்கள்
முழுமையாக அமுல்படுத்துவதற்காக தேசிய முன்னணி அரசு பொறுப்பில்
இருந்தபோது, அன்றைய பிரதமர் வி.பி.சிங் இதுபற்றி முடிவு எடுக்க, 1990 ஜனவரி 9 ஆம் நாள், அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை டெல்லியில்
நடத்தினார்.

நீண்ட நெடிய விவாதங்களுக்குப் பின்னர், தேர்தல் சீர்திருத்தங்களை வரை யறுக்க அறிஞர்களும், அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகளும் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.அந்தக் குழு தந்த அறிக்கையின் பேரில், தேசிய முன் னணி அரசு தேர்தல் சீர்திருத்தம் குறித்த விரிவான மசோதா ஒன்றை நாடாளு மன்றத்தில் கொண்டு வந்தது.

அந்த மசோதாவை அப்போதே நிறைவேற்றவிடாமல், காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போட்டதால், மசோதா தேர்வுக் குழுவுக்கு அனுப்பப் பட் டது.மக்கள் சபை கலைக்கப்பட்டதால் தேர்வுக் குழு காலாவதியாகிவிட்டது. 

ஆனால், அந்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்னமும் உயிர்பெற்று இருப்ப தால், உடனடியாக இரண்டு அவை உறுப்பினர்களும் கொண்ட புதிய தேர்வுக் குழு ஒன்றை அமைத்து, மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

தேர்தல்களில் வன்முறையும் பலாத்காரமும் தலைவிரித்தாடுவது குறித்தும், வாக்குச்சாவடிகளை குண்டர்கள் கைப்பற்றுவது குறித்தும் இன்றைய விவா தத்தில் உறுப்பினர்கள் பேசினார்கள்.

“தாம் விரும்புகிற நோக்கம் நிறைவேற எத்தகைய அநீதிகளையும் கையாள லாம். நாச வழிகளைப் பின்பற்றியாவது வெற்றியைத் தேடிக்கொள்ளலாம்” என்ற மாக்கியவல்லியின் கொள்கையை ஜெர்மனியிலும், இத்தாலியிலும் இருந்தசர்வாதிகாரிகள் தங்களின் வேதப்புத்தகமாகக் கருதினார்கள்.

அதே பாதையை காங்கிரஸ் கட்சி இந்தியாவில் தேர்ந்தெடுத்துள்ளது.தேர்தல் வெற்றிக்காக வன்முறை,பலாத்காரம், குண்டர்களின் அதிரடித் தாக்குதல், வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல் ஆகிய அனைத்து வழிகளையும் காங் கிரஸ் கட்சியினர் பின்பற்றினார்கள்.

மேற்கு வங்கத்தில் 1972 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வன்முறை யைக் கட்டவிழ்த்து விட்டது. தனது சொந்தத் தொகுதியில், ஜோதிபாசு வாக்குச் சாவடிக்குள் செல்ல முடியாமல்,தேர்தலை விட்டே மார்க்சிஸ்ட் கட்சி வில கிக் கொள்கிறது என அவர் அறிவிக்கும் அளவுக்கு வன்முறை நடைபெற்றது.

வி.நாராயணசாமி (இ.காங்): இது உண்மை அல்ல; வீண் பழி சுமத்துகிறார்.

காங்கிரஸ் வன்முறைகள்

வைகோ : காங்கிரஸ் நடத்திய வன்முறைக்கு பட்டியல் போடட்டுமா? 1983 இல் அசாமில் காங்கிரஸ் ஒரு ரணகளமே நடத்தியது.ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு காங்கிரஸ் வென்றதாக அறிவிக்கப்பட்டது. 1986 இல் காஷ்மீரத் தில் வன்முறை மூலம் தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்தது.

(இ.காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சல், குறுக்கீடுகள்)

வைகோ : உங்கள் சித்து வேலைகள் இந்தியாவோடு நின்றுவிடவில்லை.
கடலுக்கு அப்பால் இலங்கையிலும், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஒரு
பித்தலாட்டத் தேர்தலை நடத்தி, ஒரு பொம்மை சர்க்காரை ஏற்படுத்தினீர்கள்.

அரசு இயந்திரங்களைத் தேர்தலுக்கு பயன் படுத்துவது அறவே தடுக்கப்பட வேண்டும்.

1971 இல் நாடாளுமன்றத் தேர்தலில் நடந்தது என்ன? ரேபரேலி தொகுதியில்
அதிகார துஷ்பிரயோகம் நடை பெற்றதால், அத்தேர்தல் செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் விளைவாக இந்தியாவின் அரசி யல் சரித்திரமே மாறியது.

பணபலத்தை செலுத்திய காங்கிரஸ்

நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு, இலட்சக்கணக்கானோர் இருண்ட சிறையில் வாட நேர்ந்தது.தேர்தல்களில் பணபலத்தின் ஆதிக்கத்தை தடுப்பது குறித்து இங்கு பேசினார்கள். பெரும் முதலாளிகளிடம் கோடி கோடியாக பணம் பெற்று,தேர்தலில் ஆதிக்கம் செலுத்துவதே காங்கிரஸ் கட்சிதான்.

(காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் கூச்சல்)

ஏன் வீணாகக் கூச்சல் போடுகிறீர்கள்? உங்கள் கட்சிக்கு இந்திய முதலாளிகள்
மட்டுமா பணத்தைக் குவிக்கிறார்கள்? சுவீடனிலிருந்தும் அல்லவா பணம்
வருகிறது? போபர்ஸ் கம்பெனியிடமிருந்தும் அல்லவா கோடி, கோடியாகக் கிடைக்கிறது.

வி.நாராயணசாமி (இ.காங்) : போபர்ஸ் பிரச்சினையைச் சொல்லி, 1989 தேர் தலில் மக்களுக்கு தவறான பாதையைக் காட்டினீர்கள்.

வைகோ : போபர்ஸ் ஊழல் 1987 இல் வெளியே தெரிந்ததால் அப் பிரச்சினை யில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப இலங்கை ஒப்பந்தத்தில் கை யெழுத்திட்டீர்கள்.கட்சித்தாவலை தடுப்பதற்கு ராஜீவ்காந்தி சட்டம் கொண்டு வந்தார். ஆனால், வேடிக்கை என்னவெனில் கட்சித்தாவலை ஊக்குவித்து
வளர்த்ததே காங்கிரஸ் கட்சிதான். முதல் பொதுத்தேர்தலில் 1952 இல் அன் றைய சென்னை ராஜ்யத்தில் கட்சித் தாவலைப் பயன்படுத்திதான் காங்கிரஸ்
பொறுப்புக்கே வந்தது.கடைசியாக 54 கட்சி மாறிகளான எம்.பிக்களை கொண்ட ஒரு குழு இந்தியாவையே ஆட்சி புரிய காங்கிரஸ் ஏற்பாடு செய்தது.தேர்தல் சீர்திருத்தம் குறித்துப் பேச காங்கிரசுக்கு அருகதையே கிடையாது.

காங்கேயமும் தேர்தல் அதிகாரியும்

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர் தல் நடைபெற்றது. காங்கேயம் தொகுதியில் இன்றைய தமிழக அமைச்சர் வீரப்பன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் குறித்த நேரத் தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தும் கூட, தாமதமாக தரப்பட்டது என்று அந்தத் தேர்தல் அதிகாரி வேட்புமனுவைத்தள்ளுபடி செய்தார்.காரணம் ஆளும் கட்சியின் உத்தரவு. அதிமுக அரசின் உத்தரவு. அதனால் தேர்தல் அதிகாரியே அந்த அநீதியைச் செய்தார்.

அதுமட்டுமல்ல, அந்தத்தேர்தலில் பல்லாயிரக்கணக்கில் ஆளும் கட்சியினர்
கள்ள ஓட்டுபோட்டனர்.அதற்காகவே தொலைதூரத்தில் உள்ள புதுக்கோட்டை
மாவட்டத்திலிருந்து பல்லாயிரக் கணக்கானோர் லாரிகளில் கொண்டு வரப் பட்டு கள்ள ஓட்டு போட்டனர்.புதுக்கோட்டை மாவட்ட வாக்காளர்கள் காங் கேயத்தில் ஓட்டு போட்ட வேடிக்கையை பத்திரிகைகளில் வெளியான புகைப் படங்களே காட்டிக் கொடுத்தன.

அந்த இடைத்தேர்தலில் மூன்று இடங்களில் போட்டியிட்ட திமுக, 2 இடங்க ளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், அதிமுக உடன்பாடு இருந்தும் மத்திய, மாநில அமைச்சர்கள் தொகுதிகளில் முகாமிட்டு திமுகவைத் தோற்கடிக்க
வரிந்துகட்டி வேலை செய்தும் கூட தங்களின் பணபலம் படைபலம் அனைத் தையும் அவர்கள் பயன்படுத்தியும் கூட திமுகவைத் தோற்கடிக்க முடியவில்லை.

கடந்த பொதுத்தேர்தலில் ராஜீவ்காந்தி கொலை குறித்து திமுகவின் மீது வீண் பழி சுமத்தி காங்கிரஸ் - அதிமுக கட்டவிழ்த்து விட்ட கோயபல்ஸ் பிரச்சார மும், வன்முறை வெறியாட்டமும்தான் அத் தேர்தலில் திமுகவுக்குத் தொல்வி யைத் தந்தன.

(இ.காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்கள் எழுந்து, திமுகவை மக்கள் நிராகரித்து
விட்டனர் என்று கூச்சலிட்டனர்)

வைகோ : ஏன் ஆத்திரப்படுகிறீர்கள்? எங்களுக்கு செல்வாக்கு இல்லை என் றால் உள்ளாட்சித்தேர்தலை நடத்த ஏன் பயப்படுகிறீர்கள்? ஏன் தயக்கம்? உள் ளாட்சித் தேர்தலை நடத்தத் தயாரா? நடத்தினால் திமுக அனைத்து இடங்களி லும் வெற்றி வாகை சூடும். 

தமிழகத்தில் இன்று ஒரு பாசிச அரசு நடக்கிறது. மீண்டும் எழ முடியாத வகை யில் எதிர்காலத்தில் அதிமுகவை மக்கள் தூக்கி எறிவார்கள். தேர்தல் காலங் களில் அரசாங்க விமானங்களைப் பயன்படுத்திய தால் பல கோடி ரூபாயை அரசு கஜானாவுக்கு செலுத்த வேண்டிய முன்னாள் பிரதமர்கள் செலுத்தப் போவதில்லை.

பிரதமராயினும், முதலமைச்சராயினும் எவராயிருப்பினும் தேர்தல் பிரச்சாரத் துக்கு அவர்களுக்கென்று எந்தத் தனிச் சலுகைகளும் அவர்களுக்கு வழங்கக் கூடாது. அப்போதுதான் தேர்தல்கள் நேர்மையாக நடைபெறும்”.
...........................

மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் ராஜீவ்காந்தி பிரத மராக இருந்தபோது, இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர முயன்றார். 72 ஆவது திருத்தம் “பஞ்சாயத்து ராஜ்“ என்ற பெயரிலும், 73 ஆவது திருத்தம் “நகர்பாலிகா” என்ற பெயரிலும் அரசியல் சட்டத் திருத்தங்கள் நாடா ளுமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டன. ‘பஞ்சாயத்து ராஜ்‘ சட்டம் மாநில உரிமைகளைப் பறிக்கும் என்பதால், அறிமுக நிலையிலேயே மாநிலங்கள் அவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து தலைவர் வைகோ எடுத்து வைத்த வாதங்கள் தெளிவானவை; உள்ளாட்சி நிர்வாகங்கள் குறித்து மிகத் துல்லிய மான கருத்துகள் நிறைந்தவை ஆகும்.

1992, டிசம்பர் 22 ஆம் நாளன்று, நாடாளுமன்றத்தில் “பஞ்சாயத்து ராஜ்“ மசோ தாக்களின் மீது தலைவர் வைகோ எழுப்பிய அடுக்கடுக்கான வாதங்கள் வரு மாறு:

மத்திய அரசு அத்துமீறல்

வைகோ : கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைக்கின்ற அரசியல் சட்டத் திருத்த 72, 73 ஆவது மசோதாக்களை திமுகழகத்தின் சார்பில் நான் கடுமை யாக எதிர்க்கிறேன்.இந்தியாவின் ஒருமைப் பாட்டையும், ஒற்றுமையையும் கூட்டாட்சித் தத்துவம் தான் காக்க முடியும்.

சுதந்திரத்திற்கு முன்னர் காங்கிரஸ் கட்சி தனது தீர்மானங்களில், மாகாணங் களில் சுயாட்சியை வலியுறுத்தியது. பண்டித நேரு இதனை பலமாக ஆதரித் தார். ஆனால், விடுதலை பெற்ற இந்தியாவில் காங்கிரஸ் தனது சுருதியை மாற்றிக் கொண்டது. பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் தரப்போகிறோம் என்று
சொல்லிக்கொண்டு மாநிலங்களின் அதிகார எல்லைக்குள் அத்துமீறி பிரவே சித்து குழப்பம் ஏற்படுத்தும் போக்கில் இந்த இரண்டு மசோதாக்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

1989 ஆகஸ்டு 16 இல் இந்த இரண்டு உள்ளாட்சி மசோதாக்களும் இதே சபை யில் தோற்கடிக்கப்பட்டன. அன்றைய விவாதத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் முரசொலிமாறன் மசோதாக்களை எதிர்த்து மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியதும், எப்படியாவது வாக்கெடுப்பில் வெற்றி பெற்று விடலாம் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு காணப்பட்டதும், அதற்காக வராந்தாவில் காங்கிரஸ் சில பேரங்கள் நடத்தியதும், கடைசியாக அந்த வாக்கெடுப்பு நடந்த போது பஞ்சாயத்து மசோதாக்கள் தோற்கடிக்கப்பட்டதும், காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி உட்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் முகத்தை
தொங்கப்போட்டுக் கொண்டு சென்றதும் நினைவுக்கு வருகிறது.

ஏஜெண்டு வேலை

இப்போது மீண்டும் அதே மசோதாக்களை நரசிம்மராவ் அரசு தாக்கல் செய்து, மக்கள் சபையில் நிறைவேறி, மாநிலங்களவையில் விவாதித்துக் கொண் டி ருக்கிறோம். அரசியல் சட்ட 72 ஆவது திருத்த மசோதாவில் பஞ்சாயத்து நிர் வாக அமைப்பு மாநிலங்களில் மூன்றடுக்கு முறையாக செயல்படும் எனக்
கூறப்பட்டுள்ளது.

முதலில் கிராம அளவில் ஊராட்சி மன்றங்கள், அதற்கடுத்து இரண்டாவது
அடுக்கில் ஊராட்சி ஒன்றியங்கள்; மூன்றாவது அடுக்கில் ஜில்லா போர்டுகள்.

இந்த மூன்றடுக்கு முறையை நான் எதிர்க்கிறேன். ஜில்லா போர்டு அமைப்பு கள் பிரிட்டிஷ்காரன் காலத்தில் கொண்டுவரப்பட்டன. வெள்ளைக் காரனுக்கு ஏஜெண்டு வேலை பார்ப்பவையாக ஜில்லா போர்டுகள் செயல்பட்டன.

தமிழ்நாட்டில் காமராஜர் முதலமைச்சர் ஆன பிறகு இந்த ஜில்லா போர்டுகள்
ஒழிக்கப்பட்டன. தற்போது தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சி மன்றங்கள் வெறும் ஆலோசனை தரும் மன்றங்களாக, ஒன்றியப் பெருந்தலைவர்கள்,
நகர்மன்றத் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை உறுப்பி னர்களாகவும், மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராகவும் கொண்டு செயல் படுகின்றன.

ஆனால், இந்த மசோதா நிறைவேறுமானால் காமராஜர் ஒழித்துக்கட்டிய அதே ஜில்லா போர்டுகள் மீண்டும் உருவாக்கப்படும். இத்தேர்தலில் சாதியும் பணமும் விளையாடும்.

ஒரு மாநிலத்தில் நடைபெறும் அமைச்சர் அவை நிர்வாகத்திற்கு போட்டியாக,
மாவட்ட நிர்வாகம் மாவட்டங்களில் செயல்படும் விபரீதங்கள் உருவாகும்.
சீமான்கள், பெரும் பணக்காரர்கள்,ஆள்,அம்பு,அடியாள் பலமிக்கவர்கள், ஜாதிச் செல்வாக்குப் பெற்றவர்கள், அரசியல் கட்சி எல்லைகளைக் கடந்து ஜில்லா போர்டு தலைவர்களாக வெற்றிபெற வாய்ப்பு ஏற்படும்.

ஆள் தூக்கும் படலம் நடக்கும்

காங்கிரஸ் தலைவர் காமராஜர், இந்த முறை அறவே கூடாது என்று ஒழித்தார்.
இப்பொழுது மாநிலங்களின் மீது திணிக்கிறீர்கள். மூன்றடுக்கு முறையை சில மாநிலங்கள் வேண்டுமென்று விரும்பினால் அந்த மாநிலங்களின் அரசுகளும் சட்டமன்றங்களும் தாராளமாக வைத்துக்கொள்ளட்டும்.இதனைத் தீர்மானிக் கிற அதிகாரத்தையும், உரிமையையும் அம்மாநிலத்திற்கே விட்டுவிட வேண் டும். ஆனால், இந்த மசோதாக்களின் மூலம் இந்தியா பூராவும் மூன்றடுக்கு உள்ளாட்சி முறையை கட்டாயமாக்கிவிட்டீர்கள். ஜில்லா போர்டு தலைவர் தேர்தலில் ஆள் தூக்கும் படலம் நடக்கும். ஏனெனில் உள்ளாட்சித் தேர்தலில் ஆள்தூக்கும் படலம் நடக்கும்.

ஊராட்சி ஒன்றியத் தலைவர்களும், ஊராட்சி மன்றத் தலைவர்களும் ஓட்டு
போட்டு ஜில்லா போர்டு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.ஜனநாயகத்துக்கு விரோதமான எல்லா தில்லுமுல்லுகளும் இத்தேர்தலில் நடக்க வாய்ப்பு உண்டு.

காமராஜர் ஆட்சியை நிறுவுவோம் என்று தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர்
சமீபகாலமாக குரல் எழுப்புகின்றனர்.நான் தமிழ்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர் களைக் கேட்கிறேன்? காமராஜர் எதை ஒழித்தாரோ அதை மீண்டும் புகுத்துவது தான் காமராஜருக்கு காட்டுகிற மரியாதையா?

காமராஜரை அவமதித்த காங்கிரஸ்

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி காமராஜரை எப்படி அலட்சியப் படுத்தியது அவமானப்படுத்தியது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். காங்கிரஸ் கட்சி தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியபோது, அவ்விழா மலரில்
காமராஜர் படம் இடம் பெறவில்லை. இதைவிட காமராஜருக்கு வேறு என்ன
அவமானம் விளைவிக்க முடியும்.

எஸ்.கே.டி.ராமச்சந்திரன் (இ.காங்) : கோபால்சாமி அவைக்கு தவறான 
தகவல் தருகிறார். காங்கிரஸ் நூற்றாண்டு விழாவில் காமராஜரை யாரும்
மறக்கவில்லை.

காமராஜர் பிறந்தநாளில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் நூற்றாண்டு விழா கொண் டாடப்பட்டது. அவரது புகைப்படங்கள் பெரும் அளவில் விழாக்களை அலங் கரித்தன.

வைகோ : தமிழ்நாட்டில் சில காங்கிரஸ் தலைவர்கள் விழா நடத்தியிருக் கலாம். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி பம்பாயில் காங் கிரஸ் நூற்றாண்டு விழா கொண்டாடியபோது, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வெளியிட்ட நூற்றாண்டு விழா மலரில் காமராஜர் பெயர் இல்லை. பட்டாபி சீதாராமையா புகைப்படத்தைப் போட்டு அதற்கு கீழே காமராஜ் நாடார் என்று பெயரிட்டு மலர் வெளிவந்தது.

தமிழ்நாட்டில் பிறந்த காமராஜரை அவமதித்து வெளியான விழா மலரை தெரு முனையில் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று இந்த நாடாளுமன்றத்தில் சொன்னவன் நான்.

எஸ்.கே.டி.ராமச்சந்திரன் (இ.காங்) : மலரில் நேர்ந்துவிட்ட எழுத்துப் பிழை யை கோபால்சாமி பெரிதுபடுத்துகிறார்.

வைகோ : அப்படியானால் மகாத்மாகாந்தி பெயருக்குப் பதிலாக கோட்சே பெயர் இடம் பெற்றால் அதனையும் எழுத்துப்பிழைதான் என்று ஏற்றுக்கொள் வீர்களா? எனது குற்றச்சாட்டு எல்லாம் காமராஜர் தூக்கி எறிந்த ஜில்லா போர்டுகளை இப்போது காங்கிரஸ் தோளில் தூக்கிகொண்டு ஆடுகிறது என்பதுதான்.

ஜனநாயக விரோதம்

நான் இந்த மசோதாவை கடுமையாகக் கண்டனம் செய்வதற்கு இன்னொரு
காரணம், ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் தேர்தலை மறைமுகத் தேர்த லாக்கி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஓட்டு போடுகிற தேர்தல் முறையாக மத்திய அரசு கட்டாயப்படுத்துவதுதான்.

நேரடித் தேர்தல் என்றால் அரசியல் கட்சிகள் வேட்பாளரையும் சின்னத்தை யும் அறிவித்தவுடன், அந்த அடிப்படையில் மக்களே ஓட்டுப் போட்டு தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.

இதற்கு மாறாக மறைமுகத்தேர்தல் என்றால் இங்கும் ஆள் தூக்கும் படலம்
ஆரம்பம் ஆகும். சாதியும் பணமும் தனது சித்து விளையாட்டுகளைச் செய்யும்.
மறைமுகத்தேர்தல் மூலம்தான் பெருந்தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இம்மசோதாக்களின் மூலம் மத்திய அரசு கட்டாயப்படுத்துவது முற்றி லும் ஜனநாயக விரோதச் செயலாகும்.

தமிழ்நாட்டில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தற்போதுள்ள முறைப்படி மக்களே ஓட்டு போடுகிற நேரடி மக்கள் தேர்தல். ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் கள் எந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அந்தந்த மாநிலங் கள்தான் தீர்மானிக்க வேண்டும். அந்த அதிகாரமும் உரிமையும் மாநிலங்க ளுக்குத்தான் இருக்க வேண்டும். மாநிலங்களுக்கு ஏற்கனவே போதிய அதிகா ரங்கள் இல்லை.

இருக்கிற அற்பசொற்ப அதிகாரங் களையும் பறிக்கிற சதிகார நடவடிக்கையை நான் திமுகழகத்தின் சார்பில் மிகக்கடுமையாக கண்டனம் செய்கிறேன்.மாநில சுயாட்சிக்கு முற்றிலும் விரோதமாக மத்திய அரசு மேற் கொண்டுள்ள படு மோசமான இந்தப் போக்கை எதிர்க்கிறேன்.

அ.தி.மு.க. எங்கே?

அதிமுக உறுப்பினர்களுக்கு இன்றைக்கு என்னாயிற்று? அதிமுக உறுப்பினர் கள் ஒருவரும் இச்சபையின் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை; காணாமல் போய் விட்டார்கள். அதிமுக வட்டாரம் கடந்த சில நாட்களாக கடும் பீதியில் இருக் கிறது. காக்கிச் சட்டை அணிந்தவர்களைக் கண்டு அதிமுக நடுங்குகிறது.

கடந்த நான்கு நாட்களாக நள்ளிரவு நேரத்திலும் தமிழ்நாட்டிலிருந்து தொலை பேசியில் பலரும் அதிமுக அரசு டிஸ்மிஸ் ஆகிவிட்டதா? என்று கேட்ட வண் ணம் இருக்கிறார்கள். நான் அவர்களிடம் தொலைபேசியில் நீங்கள் தவறான எண்ணைச் சுழற்றுகிறீர்கள்.

உள்துறை அமைச்சர் சவான் தொலைபேசி எண்ணையும், ராஜாங்க அமைச்சர் ஜேக்கப் தொலைபேசி எண்ணையும் தருகிறேன். அந்த எண்களைச் சுழற்றி நிலைமையைத் தெரிந்து கொள்ளுங்கள் என்றேன்.

இந்த மசோதாக்களை இந்தக் கூட்டத்தொடரில் விவாதிக்கக்கூடாது. அடுத்த கூட்டத்தொடரில்தான் விவாதிக்க வேண்டும். அவை முடியப்போகிற இந்தக் கடைசிநாளில் திடீரென்று கொண்டுவந்து அவசர அவசரமாக நிறைவேற்றிட காங்கிரஸ் முயற்சிக்கிறது என நான் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கடு மையாக எதிர்த்தேன். அப்போது மன்றத்தின் தலைவரும், உள்துறை அமைச் சருமான சவானும் நாடாளுமன்ற அமைச்சர் ஜேக்கப்பும் விவாதத்தில் காங் கிரஸ் உறுப்பினர்களின் நேரத்தைக் குறைத்துக் கொள்வோம் என்றும் நான் பேசுவதற்கு எவ்வளவு நேரமும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் உறுதி
அளிக்கப்பட்டது.

இப்போது ஏன் என்னை நிறுத்தச் சொல்லி மணி அடிக்கிறீர்கள்?

எஸ்.எஸ்.அலுலாலியா (இ.காங் கொறடா) எவ்வளவு நேரம் வேண்டுமானா லும் கோபால்சாமி பேசட்டும்.

வைகோ : இந்த மசோதாக்களின் மீது நான் ஆறு திருத்தங்களைக் கொடுத்து
இருக்கிறேன். எனது திருத்தங்கள் வாக்கு எடுப்பில் தோற்கடிக்கப்படும். பெரும் பான்மையுடன் மசோதாக்களை இன்று நிறைவேற்றிவிடுவீர்கள் என் பதை அறிவேன்.

மாநில சுயாட்சிக் கொள்கைக்கு விரோதமாக காங்கிரஸ் அரசு எடுத்த நடவடிக் கைகளை திமுக கழகம்தான் முழு மூச்சுடன் எதிர்த்தது என்பதை அரசியல் மாணாக்கர்களும், எதிர்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டும் என் பதற்காகத்தான் எனது வாதங்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து வைக் கிறேன்.

உள்ளாட்சி நிர்வாகத்தில் ஜனநயக முறையை இந்தியாவிலேயே பல நூறு
ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் தமிழ்மன்னர்கள் பின்பற்றி நடத்திக் காட்டி னார்கள் என்பது சரித்திரம்.

ஏமாற்று வித்தை

சிறைச்சாலையிலிருந்து தனது பிரிய மகளுக்கு எழுதிய கடிதங்களில் பண்டித நேரு வெகுவாக பாராட்டி சோழர்களின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கிராம நிர்வாகத்தைப் புகழ்ந்துள்ளார்.

ஆனால், இப்போது மத்திய அரசு, மாநில அரசுகளை கையைக்கட்டிப் போட்டு
விட்டு, மாநில அரசுகளிடம் இருக்கின்ற அதிகாரங்களையும் கையில் எடுத்துக்
கொண்டு உள்ளாட்சி நிறுவனங்களுக்கு அதிகாரம் தருவதாக ஏமாற்றுவித்தை
காட்டி இதுவரை இல்லாத புதிய குழப்பங்களை உருவாக்கவே இம் மசோதாக் களைக் கொண்டுவந்துள்ளது.

மாநிலத்துக்கு மாநிலம் உள்ளாட்சி நிர்வாகமுறை மாறுபடுகிறது.தங்கள் மாநி லங்களின் கடந்த கால அனுபவங்கள், பின்பற்றப்பட்டு வந்துள்ள அமைப்பு முறைகள் அடிப்படையில் ஒரு மாநிலத்துக்கு ஒரு மாநிலம் வேறுபடுகிறது.

எந்த முறை சிலாக்கியமானது என்பதை அந்தந்த மாநிலங்களின் சட்டமன்றங் கள் முடிவு செய்யட்டும்.

மத்திய அரசும், நாடாளுமன்றமும் இவற்றில் தலையிடுவது டெல்லியின் எதேச்சதிகார நடவடிக்கையாகவே கருதுகிறேன். 72, 73 ஆவது சட்டத் திருத்தத் திலும் மத்திய அரசு நரித்தந்திரத்தோடு தனது விஷமத்தைக் காட்டியிருப்பதன் அடையாளம்தான் அரசியல் சட்டத்தில் 11, 12 ஆவது அட்டவணை என்று பஞ்சாயத்துக்கும், நகரசபைக்கும் அதிகாரப்பட்டியலில் அட்டவணைகளாக சேர்த்துள்ளார்கள்.

மாநிலங்களுக்கு நிர்பந்தம்

அரசியல் சட்டத்தில் ஏற்கனவே இருக்கிற 7 ஆவது அட்டவணையில் மத்திய அரசு அதிகாரப்பட்டியல், மாநில அரசுப்பட்டியல், பொதுப்பட்டியல் என்று
மூன்று பட்டியல்கள் உள்ளன. மாநில அரசுப்பட்டியலில் மிகச் சொற்ப அதிகா ரங்களே உள்ளன. அதிலும்கூட மத்திய அரசும், நாடாளுமன்றமும் இஷ்டப்படி தலையிடுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

நிலைமை இப்படியிருக்க பஞ்சாயத்துப் பட்டியல், நகரசபைப்பட்டியல் என்று
அரசியல் சட்டத்தில் புதிதாக 11 ஆவது அட்டவணை, 12 ஆவது அட்டவணை
என்று ஏற்படுத்தி, மாநில அரசுகளுக்கு சில நிர்பந்தங்களையும் சங்கடங் களை யும் இதன் மூலம் டெல்லி ஏற்படுத்துகிறது எனக்குற்றம் சாட்டுகிறேன்.

மத்திய அரசு தலையீடு

பஞ்சாயத்துகளும், நகரசபைகளும் எந்தெந்தப் பிரச்சினைகளில் அதிகாரம்
செலுத்த வேண்டும் என்பதை மாநில அரசுகளும், சட்டமன்றங்களும்தான் தீர் மானிக்க வேண்டும். அரசியல் சட்டத்தின் 73 ஆவது அட்டவணையில் வரிசை எண் 5 இல் நகராட்சி மன்றங்கள், ஊராட்சி மன்றங்கள், உள்ளாட்சி அமைப்பு கள் இவை இயங்கும் விதம் குறித்தும், அதிகாரங்கள் குறித்தும், வரையறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் பெயரளவுக்குதான்.

உலகில் பல கூட்டாட்சி அரசுகளில் எஞ்சிய அதிகாரங்கள் எல்லாம் மாநிலங் களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளன.ஆனால், இந்தியாவில் எஞ்சிய அதிகாரங்களும் மத்திய அரசுக்கு தரப்பட்டுள்ளன.

நெருக்கடி நிலை காலத்தில்,மாநிலப்பட்டியலில் இருந்த கல்வித்துறை பொதுத் துறைக்கு மாற்றப்படது. இப்போது 11 ஆவது, 12 ஆவது அட்டவணை களைத் திணிப்பது மாநிலங்களின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவதா கும் என குற்றம் சாட்டுகிறேன்.

இட ஒதுக்கீட்டை வரவேற்கிறேன்

பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது தி.மு.கழகத்தின் கொள்கை ஆகும்.எனவே இதனை வரவேற்கிறேன். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சித்தேர்தல் நடைபெற வேண்டும் என்பதையும் வரவேற்கிறேன்.

அனுமந்தப்பா (இ.காங்) : இவற்றை வரவேற்கிற நீங்கள் ஏன் இந்த மசோதாக் களை எதிர்க்கிறீர்கள்?

வைகோ : இனிப்பை தடவிவிட்டு அதற்குள் கடும் விஷத்தைத் தந்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதுபோல மாநில சுயாட்சியை குழி தோண்டிப் புதைக்க ஏற்பாடு செய்யும் இந்த மசோதாக்களை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் நீண்ட காலம் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப் படவில்லை. தற்போது நடைபெறுகிற அ.தி.மு.க அரசும் உள்ளாட்சித் தேர்தல் களை நடத்தத் தயாராக இல்லை. கேரளத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி நடந்தபோது முதல் அமைச்சர் நாயனார் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் வழங்கி பாராட்டத்தக்க நடவடிக்கை களை எடுத்தார்.

ஆனால், காங்கிரசின் கருணாகரமேனன் ஆட்சிக்கு வந்தவுடன் நாயனார் எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டன. கர்நாடகத்திலும் ராம கிருஷ்ண ஹெக்டே உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கிய அதிகாரங்களை காங்கிரஸ் அரசு ரத்து செய்தது.

திருத்தம் ஏற்க வேண்டும்

இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கு பாரதிய ஜனதா வட்டாரத்திலிருந்து
பேரபாயம் நேர்ந்துள்ளது. கூட்டாட்சித் தத்துவத்தையே வேரோடு சாய்க்கும்
முயற்சிகளில் இன்னொரு பக்கத்தில் காங்கிரஸ் அரசு ஈடுபட்டுள்ளது.

எனவே இந்தியாவின் ஜனநாயகத்தையும் ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் நான் தி.மு.கழகத்தின் சார்பில் முன் வைத்துள்ள திருத்தங்களை இம்மன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும் வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என
வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஜெயபால் ரெட்டி (ஜனதா தளம்) :அ.தி.மு.க சபையிலேயே இல்லை. தமிழ் நாடு மக்களுக்கு நிலைமையைத் தெளிவுபடுத்தத்தான் கோபால்சாமி, தான் கொடுத்த திருத்தங்களை திரும்பப்பெறாமல் வாக்கெடுப்புக்கு விடச் சொல் கிறார் எனக் கருதுகிறேன்.

வாக்கெடுப்பு

விவாதத்திற்குப் பிறகு இந்த இரண்டு மசோதாக்களும் வாக்கெடுப்புக்கு விடப் பட்டன. தி.மு.க. எம்.பிக்கள் வைகோ, பசும்பொன் தா.கிருஷ்ணன்,திண்டிவனம் வெங்கட்ராமன், ஜே.எஸ்.ராஜூ, முகமது சகி, கே.கே.வீரப்பன், மிசா கணேசன்
ஆகியோர் முன்மொழிந்த ஆறு திருத்தங்களும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன.

வாக்கெடுப்புக்கு விடுவதற்கு முன்பு இந்தத் திருத்தங்களை திரும்பப் பெரு மாறு வைகோ அவர்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் வெங்கடசாமியும், காங்கிரஸ் உறுப்பினர்களும் கேட்டுக்கொண்டனர்.

அதனை வைகோ ஏற்கவில்லை.வாக்குப்பதிவில் மசோதாக்களுக்கு எதிராக வும் வைகோவின் திருத்தங்களுக்கு ஆதரவாக 6 வாக்குகளும், மசோதாக்க ளுக்கு 152 வாக்குகளும் கிடைத்தன.

உங்களுக்கு வெறும் ஆறு வாக்குகள் தான் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள்
வைகோவைப் பார்த்து குரல் எழுப்பினர். 

அதற்கு பதிலடித்தந்த வைகோ, ‘1989 இல் இந்த மசோதாக்களை எதிர்த்து என்ன நிலையை மேற்கொண்டோமோ, அதே நிலையில் இன்றைக்கும் நாங்கள் உறுதி யாக இருக்கிறோம். அதில் பெருமிதம் கொள்கிறோம்” என்றார்.

தொடரும்....

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment