Sunday, August 11, 2013

‘புலித்தடம் தேடி‘

‘புலித்தடம் தேடி‘ ரத்த ஈழத்தில் 25 நாட்கள் என்று மகா.தமிழ்ப் பிரபாகரன் எழுதிய இலங்கைப் பயணத்தை பற்றிய புத்தகத்தின் அறிமுக கூட்டம் கடந்த சனிக்கிழமை(ஆகஸ்ட் 10) மாலை 6 மணிக்கு மதிமுக தலைமை அலுவலக மான தாயகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வைகோ, ஓவியர்.புகழேந்தி, இயக்குநர்.வ.கௌதமன்,திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்று புத்தகத்தை பற்றி கருத்துரையாற்றினர்.

இதன் போது பேசிய வைகோ,‘இந்த நூலில் இதயத்தை வேதனையில் வாட்டுகிற பல செய்திகள் இருக்கின்றன, கனத்த இதயத்தோடு தான் இதை படித்து முடித்தேன். இந்நூல் தொடராக வெளிவந்த போது படித்ததை விட புத்தகமாக தொடர்ந்து படிக்கிற போது ஒரு தாங்கமுடியாத சோகம் மனதை கப்பிக் கொண்டது. மகா துணிச்சல் வேண்டும். உயிரோடு திரும்ப முடியாது என்ற ஆபத்தை எதிர்கொண்டு போயிருக்கிறார்,இந்த இளைஞர். கொழும்பு விமான நிலையத்தில் இறங்கி அவர் பயணத்தை தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே ராணுவம் விசாரித்ததும் போலீஸ் விசாரித்ததும் அடுத்து என்ன நடக்கும் என்ற விதத்தில் அபாயம் அவரை சூழ்ந்ததும் எச்சரிக்கை யோடு மிகுந்த கவனத்தோடு ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நிலைமையை பதிவு செய்திருக்கிறார். பரந்தனிலே கிளிநொச்சியிலே முல்லைத்தீவிலே யாழ்நகரிலே வல்வெட்டித்துறையிலே நந்திக்கடலிலே முள்ளிவாய்க் காலிலே புதுக்குடியிருப்பிலே புதுமாத்தளனிலே அந்த மரண ஓலம் ஒலித்து கொண்டிருந்த பகுதியிலே மகா.தமிழ்ப் பிரபாகரன் சென்று வந்திருக்கிறார்‘ என்று தன் உரையை புத்தகத்தின் ஆய்வுரையாகவே எடுத்து வைத்தார்.

மேலும் தன் உரையில் வைகோ ‘காமன்வெல்த் மாநாடு அங்கு நடந்தேறி விட்டால் கொக்கரிக்கும் சிங்கள தேசம் ‘தமிழன்‘ என்ற இனத்தையே இல்லாமல் ஆக்கிவிடும்‘ என இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை பற்றிய எச்சரிக்கையோடு ‘புலித்தடம் தேடி‘ புத்தக அறிமுகக் கூட்டம் நிறைவுப் பெற்றது.


No comments:

Post a Comment