Thursday, August 29, 2013

செம்மொழி!

செம்மொழி பற்றி அறிந்து கொள்வதற்கு முன் செம்மை என்ற சொல்லிற்கான
சொற்பொருள் விளக்கத்தைத் தெரிந்து கொள்ளல் வேண்டும். சுல் என்னும்
சிவத்தற் கருத்து வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது செம்மை என்னும் சொல். ஒரு வேர்ச் சொல் எவ்வளவு பொருள் குறித்த சொற்களை உருவாக்குகிறது என்பதை எண்ணிப் பார்த்தால் அறியுந்தொறும் வியப்பும், சுவையுந்தரும்.

சுல் - சுல்லம் - செம்பு - செம்பு ஒரு உலோகம். மலையாளத்தில் செம்பிற்கு சுல் லம் என்று பெயர். சுல் - சுல்லம் - செம்பு “சுல்லத்தா னமைந்த நெடுங்களத்தின்
(சேது புராணம்)” நெருப்பின் நிறம் சிவப்பாதலால், நெருப்புக் கருத்தினின்று
சிவத்தற் கருத்து தோன்றிற்று. ஒப்புநோக்கு : எரி - நெருப்பு - சிவப்பு - எரிமலர் - 1.சிவந்த முருக்க மலர், 2. செந்தாமரை.

சுல் - செல் - சேல் - சிவந்த நிறங்கொண்ட கெண்டை மீன், சேல் விழி சிவந்த மீனைப் போன்ற கண்.

தீயின் நிறமாகிய செம்மைக் கருத்தினின்றுதூய்மை, நேர்மைக் கருத்தும் அத னினின்று நிறைவுக் கருத்தும் கிளைத்தன.

செம்மை - நேர்மையான - செங்கோலாட்சி, நடுநிலையான - (செம்மனத்தான்
நளவெண்பா) இலக்கணம் பிறழாத -செந்தமிழ். முதிர்ந்த காய் - செங்காய்.மேற் காட்டிய எடுத்துக் காட்டுகளால் செம்மை என்ற சொல் நேர்மை, நடுநிலைமை, இலக்கண முடைமை, முதிர்ச்சியுடைமை என்னும் பொருள்கள் தருவதாகும். செம்மொழி என்றால் நேர்மை,நடுவு நிலைமை இலக்கணமுடைமை, முதிர்ச்சி உடைமையான மொழி என்பதாகும்.

ஒரு மொழி செம்மொழி என்பதற்கு மொழியியல் அறிஞர்கள் பதினோரு அடிப் படைப் பண்புகளை வரையறை செய்துள்ளனர். அவை

1.தொன்மை,

2.தனித்தன்மை, 

3.பொதுமைப் பண்பு, 

4.நடுவு நிலைமை 

5. தூய்மை,

6. பண்பாடு கலை பட்டறிவு வெளிப்பாடு, 

7. பிறமொழித் தாக்கமில்லாத் தன்மை, 

8. இலக்கிய வளம், 

9. உயர் சிந்தனை, 

10.கலை இலக்கியத் தனித்தன்மை, 

11. மொழிக் கோட்பாடு ஆகியனவாகும்.

இனி நம் தமிழுக்கு உள்ள இத்தகுதிகளைப் பார்ப்போம்.

1. தொன்மை : ஒரு மொழி இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மை உடையதாக இருத்தல் வேண்டும். உலகின் மிகப்பழமையான நிலப்பகுதியென்று தமிழ் வர லாற்றால் அறியப்பட்டதும், நில நூல், கடல் நூல், உயிர் நூல் ஆராய்ச்சியாள ரால் உணரப்பட்டதும், மாந்தன் பிறந்தகம் என்று மாந்த நூலாரால் கண்டுபிடிக் கப்பட்டதும் தெற்கே இந்து (மாவாரியில்) கடலில் மூழ்கிப்போன குமரிக் கண்ட மாகும்.அதை உறுதிப்படுத்தும் வகையில் இளங்கோ அடிகள் தம் சிலப்பதிகா ரத்தில் “பஃறுளி ஆற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங் கடல் கொள்ள” எனப் பாடி உள்ளார்.

கி.மு. பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்பு தோன்றிய தலைச் சங்கக் காலத்தில் இருந்தே இசையும், நாடகமும் இயற்றமிழோடு சேர்க்கப்பட்டு, இலக்கியத் தமிழ் முத்தமிழ் என வழங்கி வந்திருக்கிறது. அதனால் முதல் இரு சங்கங் களிலும் வழங்கிய இலக்கண நூல்கள் முத்தமிழும் பற்றியனவாகவே இருந்த தாகத் தெரிகிறது. இங்‡னம் வேறு ஒரு மொழியிலும் இல்லாத வழக்கிற்கு,
இசையும் நடிப்பும் பேச்சொடு இயல்பாகக் கலந்திருப்பதோடு பண்டைத் தமி ழரின் இசை நாடகக் கலைத் தேர்ச்சியும், பண்டைத் தமிழ் இலக்கியம் முற்றும் செய்யுள் வடிவில் இருந்தமையும் காரணமாகும்.

2. தனித்தன்மை : தன்னில் இருந்து பல மொழிகளைக் கிளைத்திடச் செய்த தமிழ் அவற்றின் தாயாகவும், அவற்றினும் மேம்பட்டதாகவும் மற்றை மொழி களின் உதவியின்றி தனித்து இயங்கும் ஆற்றலுடையது. தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக் களையக் களைய தமிழ் தூய்மை பெறும். தெலுங்கு கன்னடம் போன்ற தமிழின் கிளைமொழிகளில் உள்ள தமிழ்ச் சொற்களைக்
களைந்தால் அவை இயக்கமின்றிப் போகும்.

இலக்கியங் கண்டதற்கிலக்கண மியம்பலென்னும் முறையில் அக்காலத்து வரையறுக்கப்பட்ட முதலிடை, கடை எழுத்து வரம்புகளே இக்காலத்திலக்கண நூல்களும் ஏற்றுக் கூறுகின்றன.தமிழினின்று திரிந்த திராவிடம் உட்படப் பிற மொழிகளில் இத்தகைய வரம்பில்லை

“எண்பெயர் முறைபிறப் புருவம் மாத்திரை

முதலீ றடைநிலை போலி யென்று

பதம் புணர்ப் பெனப்பன் னிருபாற் றதுவே”

என்னும் நன்னூல் நூற்பாவிற் குறிக்கப்பட்டுள்ள எழுத்திலக்கணம் பன்னிரண் டனுள் முதல் ஈறு, இடைநிலை என்னும் மூன்றும் தமிழுக்கே சிறப்பாக உரிய னவாம். பிற மொழிகளில் எந்த எழுத்தும் எந்த இடத்திலும் வரலாம். தமிழில் அங்ஙனம் வரமுடியாது. ஹ, ஷ போன்ற மூச்சொலிகள் தமிழில் இல்லை. எடுப்பொலிகூட தமிழின் மெல்லெழுத்தை அடுத்தேவரும் ங்க - சங்கம், ண்ட - கண்டனம் எனவரும்.

வல்லின எழுத்தில் க.ச.த.ப. என்னும் நான்கெழுத்துகளும்,மெல்லினத்தில் ஞ. ந.ம. என்னும் மூன்றெழுத்துகளும்,இடையினத்தில் ய.வ. என்னும் இரண்டெ ழுத்துகளும் உயிரெழுத்துகள் பன்னிரண்டுமாகிய இருபத்தோரெழுத்துகள்
மட்டுமே ஒரு சொல்லின் முதலெழுத்தாக வரும்.எடுத்துக்காட்டு - கன்னம், சங்கம், தமிழ், பழம், ஞாயிறு,நண்பன், மருதம், யானை, வண்டி இவற்றை யொத்த மற்ற உயிர் மெய்யெழுத்துகளையும் கண்டுகொள்க. உயிரெழுத்து களும் அவ்வாறே.இந்த ஒழுங்கு முறை பிற மொழிகளுக்கில்லை.

இவ்வாறு தமிழ் பெரும்பாலும் மெல்லோசை மொழியாயிருப்பதனால் அது உலக முதன் மொழியாய்த்தோன்றியும் இறந்துபடாமல் இன்னும் இளமையாக
இருந்து வருகிறது. பா.வே. மாணிக்க நாயக்கர் ஒருமுறை உலகப் பெருமொழி களுள் ஒவ்வொன்றிலும் அளவைக்கருவி கொண்டு அளந்து பார்த்ததில் சமஸ் கிருதத்திற்கு மூச்சொலி மிகுந்தும் தமிழுக்குக் குறைந்தும் இருப்பதாகக் கண் டார். இவ்வுண்மையை மறைமலை அடிகள் க்ருதம், த்ருஷ்டி,த்வரிதம், ச்ருஷ் டி, ஹ்ருதய என்னும் வடசொற்களோடு இழுது, பார்வை, விரைவு, படைப்பு, நெஞ்சம் என்னும் தமிழ்ச்சொற்களொடு ஒப்புநோக்கி எளிதாக விளக்கி உள் ளார். மேற்கண்டவாறு தமிழ்த் தனித்தன்மை வாய்ந்ததாகும்.

3. பொதுமைப் பண்பு : உலக மொழிகளில் எந்த மொழிக்கும் இல்லாத இலக்க ணக் கட்டமைப்பும் தமிழின் இலக்கணப் பொதுமைப் பண்பும் திராவிட மொழிக்
குடும்பம் முழுமைக்கும் பயனுறும் வகையில் அமைந்துள்ளது. மற்றெல்லா மொழி இலக்கணங்களும் எழுத்தும்,சொல்லும்,சொற்றொடரும், யாப்பும் அணி யும் ஆகிய ஐந்தையே கூற, தமிழ் இலக்கணம்மட்டும் அவற்றொடு செய்யுட் கும்,  நூற்கும் உள்ள பொருளையுஞ் சேர்த்து ஆறுகூறுகளாகக் கூறுகிறது. அகம், புறம் என்னும் இருவகைப் பாகுபாட்டுள் எல்லாப் பொருள்களும் அடக் கப்பட்டுவிட்டன. புறப்பொருள் பற்றிய எழுதிணைகளுள் முதலைந்தும் அரச னைக் குறித்ததாயினும், வாகை, பாடாண் இருதிணையும் மற்றெல்லா மக்க ளையும் தழுவி நின்றன.

பகுத்தறிவுள்ள மக்களையே உயர்வாகவும் மற்றெல்லாவற்றையும் தாழ்வாக வும் மக்களே தமிழ்மொழியை அமைத்து விட்டதனால் உயர்திணை, அஃறி ணைக் குறியீடுகளை மட்டும் ஆசிரியர் இட்டுள்ளனர். பெயற்கு முதன் முத லாக எட்டுவேற்றுமைகளை வகுத்துக் கூறியது தமிழ் இலக்கணமே. அதைப் பின்பற்றியதே வடமொழி இலக்கணமாகும்.

4. நடுவுநிலைமை : இலக்கணவிதிகள் வேறெதனுடனும் சேராது நடுவுநிலை யுடன் இயங்குவது. தமிழில் இடுகுறிச்சொல்லே இல்லை. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது தொல்காப்பிய நூற்பா 640.ஒருமை பன்மை யன்றி ஒருமை, இருமை, பன்மை என்று வடமொழிபோல் தமிழில் எண்ணுவ தில்லை.செய்யுள்களில் ஒரு நாட்டை வருணிக்கும்போது உள்ள பொருளை யும் உள்ள நிகழ்ச்சிகளையும் வருணிக்கப்படுமேயன்றி இல்லாத பொருளை
வருணிப்பதில்லை. செய்யுளணிகள் எல்லாம் இயற்கையாக அமைந்தன வே யன்றி செயற்கையாக அமைந்ததில்லை.

5. தூய்மைப் பண்பு : பெற்றோரைக் குறிக்கும் அம்மை,அப்பன் என்னும் தமிழ்ச் சொற்கள் ஆரியம் உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து
வழங்கி வருகின்றன. நூன், நூம் என்னும் பண்டைத் தமிழ் முன்னிலைப் பெயர் கள் இந்தியில் து, தும் என்றும், இலத்தீனில், து என்றும் கிரேக்கத்தில் தூ சூ என்றும்,ஆங்கிலத்தில் யூ என்றும் வடமொழியில் த்வம், யூயம் என்றும் திரிந்து வழங்குகின்றன.

மேலை மொழிகளில் உள்ள தென் சொல் லொத்த சொற்களுக்கு எல்லாம் மூலம் தமிழிலேயே இருக்கின்றன.

மூலம்-தமிழ்-அயற்சொல் -பிறமொழி

மன், மனை, மன்னாஸ் - இலத்தீன்

மொத்து, மத்திகை, மஸ்திகோஸ் - கிரேக்கம்

கோவன், கோன், கான் - துருக்கி

கள், கரு, கொரோ - துருக்கி

தமிழின் சொல்வளத்தைக் குறிக்கவந்த கால்டுவெல் அவர்கள் வீடு என்னும் சொல்லைச் சிறப்பாகப் பெற்றுள்ள தமிழ் இல் என்னும் சொல்லைத் தெலுங் கிற்கும் மனை என்னும் சொல்லை கன்னடத்திற்கும் குடி என்னும் சொல்லை
வடமொழிக்கும் பின்னிய மொழிக்கும் வழங்கி உள்ளது என்று கூறியுள்ளார்.

6. பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவு வெளிப்பாடு :அகத்திணை புறத்தி ணைக் கோட்பாடுகள் தமிழரின் பண்பாட்டுக் கலையறிவை வெளிப்படுத்து வது மட்டுமல்லாமல் மெய்யியல் அறவழிக் கோட்பாடுகள் தமிழில் உள்ளள விற்கு வேறு எந்த மொழிப்படைப்பிலும் இல்லை. தமிழ் இலக்கணம் எழுத்து,
சொல், பொருள் என்று மொழி இலக்கணம் சொன்னதொடு நில்லாமல் அகம், புறம் என்று தமிழரின் வாழ்வியல் பண்பாட்டையும் விளக்குகிறது.அகத்திணை யில் களவு, கற்பு எனும் காதல் வாழ்க்கையையும் இல்லற வாழ்க்கையையும் விளக்கி உள்ளது.

புறத்திணையில் மறவாழ்க்கையையும்,அறவாழ்க்கையையும் விளக்கி உள் ளது.மேற்கண்ட வாழ்க்கை முறைகளை மக்களுக்குக் கற்பிக்கும் நோக்கொடு
இசை, நாடகம், கூத்து என்னும் கலைகள் தமிழில் சிறந்து விளங்குகின்றன.
திருக்குறள், நாலடியார், சங்க இலக்கியங்கள் மெய்யியலையும், அறவியலை யும் விளக்கும் சிறந்த நூல்களாயமைந்து உள்ளன. ‘யாதும் ஊரே யாவருங் கேளிர்’ என்னும் புறநானூற்றின் பாடற் கருத்து கூறும் மெய்யியல் நமக்கு போதிப்பதைப் பாருங்கள். “எந்த ஊரும் நம்முடைய ஊர்தான். எல்லோரும் நம்
உறவினர்தான், நன்மையுந் தீமையும் பிறரால் நமக்கு வருவதில்லை, நாம்
தேடிக்கொண்டவைதான், துன்பம் வருவதும் அது நீங்குவதும் அதுபோலவே தான், சாவு என்பது புதிதல்ல, வாழ்க்கை இனிமை தருகிறதென்று மகிழ்ந்திட வும் வேண்டாம், துன்பமானதென்று சோர்வடையவும் வேண்டாம். மலையில்
பெய்யும் மழைநீரானது ஆறாகப் பெருகி ஓடும் பெரிய ஆற்றின் நீரோடும் வழி யில் படகு மிதந்து செல்வதுபோல நம் உயிர்வாழ்க்கையும் இயற்கையிட்ட வழியிற் செல்லும். அதனால் தன் நலங்கருதிப் பெரியோரை பாராட்டவும்
வேண்டாம், சிறியோரை இகழவும் வேண்டாம்,” என மெய்யியல் கோட்பாட்டி னை மிகத்தெளிவாக விளக்கிக் கூறுகிறது. இது சிறந்த பட்டறிவின் வெளிப் பாடாகும்.

7. பிறமொழித் தாக்கமின்மை : மக்கட்பெருக்கம், வணிகம், பிற மொழியாளர் களின் கூட்டுறவு கலாச்சாரப் பரிமாற்றம் ஆகியவற்றால் ஒரு மொழியில் பிற மொழிச் சொற்கள் கலப்பதும் தன்சொற்களின் வழக்கொழிவதும் பிற மொழித் தாக்கமாகும்.(3000) மூவாயிரம் ஆண்டுகள் வடமொழித் தாக்கத்தாலும் வணி கப் பரிமாற்றத்தாலும் ஐநூறாண்டு இசுலாமியப் படையெடுப்பாலும் தமிழில்
வடசொற்களும், மேலையாரியச் சொற்களும் அரபி உருதுச் சொற்களும் வழக் கேறியிருப்பினும் அவற்றின் தாக்கத்திற்கு உள்ளாகாமல் தனித் தியங்கும் ஆற்றல் தமிழுக்கு உள்ளது. 

எடுத்துக்காட்டு

வடமொழி - நமஸ்காரம், உருது - சலாம், ஆங்கிலம் - குட்மார்னிங், தமிழ் -
வணக்கம்.

சன்னல் என்னும் போர்த்துக்கீசியச் சொல் வழங்கினாலும் சாளரம், பலகணி என்னும் தமிழ்ச் சொற்களும் வழக்கில் உள்ளன.புதிய சொற்களை உருவாக்கு வதற்கேற்ற வேற் சொல் வளமுள்ளது தமிழ்.கணக்கை மூலமாகக் கொண்டு
இயங்குவது கம்யூட்டர். அதற்கேற்ற கணினி என்னும் சொல் தமிழில் உரு வாக்கம் பெற்றுள்ளது. இது போன்ற சொல் வளமமும் சொல்லாக்கமுங் கொண்டிருப்பதனால் தமிழ் பிறமொழித்தாக்கமின்றி இயங்குகிறது.

8. இலக்கிய வளம் : ஒரு இன மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்ளும் காலக் கண்ணாடி அவ்வின மக்களின் இலக்கியங்களாகும். இலக்கியத் திறன்,
மொழியமைப்பு வாழ்வியல் கோட்பாடுகளை சிறக்க எடுத்துக்காட்டுபவை சங்க இலக்கியங்களாகும். பிற்காலத்தில் புதிய படைப்புகள் உருவாகின. காலந்தொறும் புத்திலக்கியங்கள் பல வடிவங்களிலும் வளர்ந்த வண்ண முள் ளன. எனினும், பண்டைய இலக்கியங்கள் காலத்தால் அழிக்கெவொண்ணாது பயன்தந்து கொண்டே உள்ளன. புதிய இலக்கியங்கள் தோன்றுவதற்கு முன் னோட்டமாகத் திகழ்கின்றன. இவ்வாறு இலக்கிய வளமிக்கது தமிழ்.

9. உயர்சிந்தனை : யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற கணியன் பூங்குன்ற னாரின் உயர் சிந்தனை உலகில் வேறெவர்க்கும் தோன்றாத காலத்தில் தோன் றியதாகும்.அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற வள்ளுவரின் கூற்று. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் பேருள் ளம். அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதும் உரைசால் பத்தினியை
உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுதும் என்ற இளங்கோ அடிகள் கூற்றும் தமிழ் உயர் சிந்தனையுள்ள மொழி என்பதற்குச் சான்றாகும்.

10. கலை இலக்கியத் தனித்தன்மை இசைக்கலை, ஆடற்கலை, நாட்டியக்
கலை, நாடகக் கலை, போர்க் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, கட்டடக்
கலை என்று பல்வகைக் கலைகள் தமிழர் வாழ்வில் சிறந்து விளங்குவதைக்
காட்டும் இலக்கண, இலக்கியங்கள் தமிழில் உள்ளன. இடைச்சங்க இசைத் தமிழ் நூல்களான பெருநாரை,பெருங்குருகு, இசை நுணுக்கம் தாளவோத்து முதலியனவும் : பரதம், அகத்தியம், முருவல், சயந்தம், குணநூல்,செயிற்றியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், கூத்த நூல் என்ற நாடகத் தமிழ் நூல்கள் எல் லாம் மறைந்து போனாலும் ஐம்பெருங் காப்பியங்கள் இன்னும் தமிழுக்கு அணி செய்கின்றன. தமிழின் தனித்தன்மையைக் காத்து நிற்கின்றன.

11. மொழிக்கோட்பாடு : மொழியில் உருவான இலக்கிய இலக்கணங்களை
ஆய்வு செய்யும் போது அம்மொழிக்குரிய மக்கள் வாழ்ந்த காலம், வாழ்க்கை முறை அதன் சூழல் தற்போது அவர்கள் வாழ்ந்துவரும் வாழ்க்கைமுறை சூழல்
இவற்றை அறிந்து கொள்ளவும் அம்மக்கள் சமூகத்தின் மரபு சார்ந்த பண்பு நலன்களையும் வெளிப்படுத்தல் வேண்டும். தமிழில் உள்ள பண்டைய இலக் கியங்கள் இன்றைய இலக்கியங்கள் நமக்கு தெளியக் காட்டுகின்றன.

இன்றைய மொழியியல் அறிஞர்கள் வகுத்த மேற்கண்ட பதினோரு தகுதிப்
பாடுகளும் தமிழுக்கு மட்டுமே பொருந்துவனவாக உள்ளன.சமஸ்கிருதத்திற் கு ஏழு தகுதிப் பாடுகளே பொருந்துகின்றன. இலத்தீனுக்கும்,கிரேக்கத்திற்கும் எட்டுத் தகுதிப் பாடுகள் பொருந்துகின்றன.

இன்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்பே தமிழ் அறிஞர் பரிதிமாற் கலைஞர் தமிழ் செம்மொழி என அறிவித்து அவர் சில தகுதிப் பாடுகளைக் காட்டிச் சென் றுள்ளார். அவைவருமாறு : அவர் நடையிலேயே தரப்படுகிறது.

“வடமொழி, இலத்தீன், கிரீக்கு முதலியன போலத் தமிழ் மொழியும் உயர் தனிச் செம்மொழியாமாறு சிறிது காட்டுவாம் தான் வழங்கும் நாட்டின்கண் உள்ள பல மொழிகட்குந் தலைமையும் அவற்றினும் மிக்க மேதகவுண்டைமையுமுள்ள மொழியே உயர்மொழி இவ்விலக்கணத்தான் ஆராயுமிடத்துத் தமிழ் தெலுங்கு
முதலியவற்றுக் கெல்லாந் தலைமையும், அவற்றினுமிக்க மேதகவும் உடை மையால் தானும் உயர் மொழியே என்க. தான் வழங்கும் நாட்டிற் பயிலும் மற் றைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல ஆற்றல் சான்றதே
தனிமொழி எனப்படும்.தான் பிறமொழி கட்குச்செய்யும் உதவி மிகுந்தும் அவை
தனக்குச் செய்யும் உதவி குறைந்தும் இருத்தலே வழக்காறு. தமிழ்மொழியின்
உதவிகளையப்படின் தெலுங்கு இயங்குதலொல்லா;

மற்றுத் தமிழ்மொழி அவற்றினுதவி யில்லாமலே சிறிதும் இடர்ப்படுதலின்றித்
தனித்து இனிமையின் இயங்கவல்லது இஃது இந்திய மொழி நூற்புலவர்கள்
பலர்க்கும் ஒப்ப முடிந்ததாதலின் தமிழ் தனி மொழியே என்க.

இனிச் செம்மொழியாவது யாது?

திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும்,பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழி யாம் என்பது இலக்கணம்.தமிழ்மொழியின் கண்ணும் அமைந்திருத்தல் தேற் றும் என்ன? இடர்ப்பட்ட சொன்முடிபுகளும், பொருண் முடிவுகளுமின்றிச் சொற்றான் கருதிய பொருளைக் கேட்டான் தெள்ளிதினுணர வல்லதாய்ப் பழையன கழிந்து புதியன புகுந்து திருத்தமெய்தி நிற்றலே திருந்திய பண் பெனப் படுவது இது தமிழ்மொழியின் கட் முற்றும் அமைந்திருத்தல் காண்க.

நாட்டின் நாகரிக முதிர்ச்சிக்கேற்பச்சொற்களும் ஏற்பட்டு மொழிக்கும் நாகரிக
நலம் விளைத்தல் வேண்டும். அவ்வாறு சொற்களேற்படுமிடத்துப் பிறமொழிச்
சொற்களன்றித் தன் சொற்களே மிகுதல் வேண்டும். இவையும் உயர் தனித்
தமிழ்மொழிக்குப் பொருந்துவனவாம்.ஆகவே, தமிழ் தூயமொழியுமாம். எனவே
தமிழ் செம்மொழி என்பது திண்ணம்.

இதுபற்றியன்றே தொன்று தொட்டுத் தமிழ் மொழி செந்தமிழ் என நல்லிசைப்
புலவரால் நவின்ரோதப் பெருவதாயிற்று.ஆகவே, தென்னாட்டின்கட் சிறந் தொளிரா நின்ற அமிழ்தினுமினிய தமிழ் மொழி எல்லாவற்றான் ஆராய்ந்த
வழியும் உயர்தனிச் செம்மொழியேயாம் என்பது நிச்சயம்.

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களும் மேற்கண்ட தகுதிப்பாடு களை முன்மை, மென்மை,தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இயற்கை வளர்ச்சி, இலக்கண நிறைவு,செயுட் சிறப்பு, அணிச் சிறப்பு, நூற் சிறப்பு என்று பதினோரு தகுதிப்பாடுகளைக் கூறி தமிழ் செம்மொழி என நிறுவி உள்ளார்.

ஏழு நூறாண்டுகளுக்கு முன்பே,நன்னூலை இயற்றிய பவணந்தி முனிவர் செந் தமிழ் சேர் பன்னிரு நிலத்தினும் -ஒன்பதிற்றிரண்டில் தமிழ் மொழி நிலத்தினும் - தங்குறிப்பினவே திசைச்சொல் என்ப. (நூற்பா 273) என்று திசைச் சொல்லுக்கு இலக்கணங் கூற வந்த பவணந்தி முனிவர் தமிழை செந்தமிழ் எனக்கூறி உள்ளார்.

இரண்டாயிரத்து எழு நூறாண்டுகட்கு முன்பு, தொல்காப்பியத்தை இயற்றிய
தொல்காப்பியர் செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் - தங்குறிப்பினவே திசைச் சொற்கிளவி (நூற்பா 400) என்று திசைச்சொற்கு இலக்கணங்கூற வந்த
தொல்காப்பியர் தமிழை செந்தமிழ் என்றார்.

மொழியியல் அறிஞர்கள், உலக மொழிகள் 6760 என்றும், அவற்றில் இந்திய மொழிகள் 1652 என்றும் கணக்கிட்டுள்ளனர். அவற்றில் செம்மொழி தகுதிப்பாடு டையவை எட்டு.அவை தமிழ், சமஸ்கிருதம், இலத்தீன், கிரேக்கம், பாரசீகம், அரபு, எபிரேயம்,சீனம் என்பனவாகும்.

இதுகாறுங் கூறியவற்றுள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் செம் மொழி என்றாகி விட்டது. இன்றைய மொழியியல் அறிஞர்களும் அதை உறுதி செய்து விட்டனர்.

இந்தநிலையில், கோவணமின்றி அலைந்தவனுக்கு பட்டுவேட்டி வாங்கிக்
கொடுத்து உடுத்திக் கொள்ளச் செய்ததுபோலக் கருணாநிதிதான் தமிழுக்குச் செம்மொழித் தகுதியை வாங்கிக் கொடுத்தார் என்று வணிகப் புலவர்கள் வாய் கிழியப் பேச ஒரு மாநாடாம்.

தகுதியென்பது இயல்பாக அமைந்த ஒன்றாகும். அது விலைப்பொருளல்ல.
அதை யாரும் வாங்கிக் கொடுத்து விட முடியாது. கி.மு. பத்தாயிரமாண்டுக ளுக்கு முன்பே தமிழ் செம்மொழித் தகுதி பெற்றுவிட்ட மொழியாகும்.

கட்டுரையாளர் :- புலவர் க.முருகேசன்

No comments:

Post a Comment