இதயத்தில் விழுந்த இடி அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு
#வைகோ இரங்கல்
திராவிட இயக்கத்தின் கருத்துக் களஞ்சியக் கருவூலமான, என் ஆருயிர்ச் சகோதரர் அப்துல்லாஹ் பெரியார்தாசன், என்னையும், இயக்கத்தோழர் களை யும் கண்ணீரில் துடிக்க வைத்து மறைந்து விட்டார்.
தந்தை பெரியார் அவர்களை, மாணவப் பருவத்தில் தலைவராக ஏற்றுக் கொண்டு, சுயமரியாதை வீரராக, பகுத்தறிவு நெறியை மக்களிடம் பரப்ப, எழுத்தாலும், பேச்சாலும், அவர் ஆற்றிய பணிகள், ஈடு இணையற்றவை ஆகும்.
பச்சையப்பன் கல்லூரியில், பொருளியல் இளங்கலை, தத்துவ இயல் முது கலை பட்டங்களைப் பெற்று, இலண்டன் ஆக்Þஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உளவியல் பயின்று, முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவின் கலிஃபோர்னி யா பல்கலைக்கழகத்தில், ஆறு ஆண்டுகள் பேராசிரியராகப் பணி ஆற்றி, 34 ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில், மெய்ப்பொருள் இயல் பேராசிரிய ராகப் பணி ஆற்றினார்.
அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய, அனைத்து நூல்களையும் பழுதறக் கற்று, ஆய்ந்து அறிந்து, அதில் அவர் பெற்ற பாண்டித்யத்துக்கு நிகராக இன்னொருவரைச் சொல்ல முடியாது. அதைப்போலவே, தந்தை பெரியாரின் எழுத்துகளையும், உரைகளையும், முழுமையாகக் கற்று உணர்ந்தவர்; அறிவாசானின் நம்பிக்கையையும், அன்பையும் பெற்று, திராவிடர் கழகத்தில் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இயங்கியவர்.

தமிழ் ஈழ விடுதலைக்காக அரும்பாடுபட்டவர். மூன்று தமிழர்களின் உயிர் களை, தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்க, நான் போராடிய காலத்தில், தாமாக முன்வந்து, தன்னை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கழகத்தை மக்கள் மன்றத்தில் வலுப்படுத்திட, மேடை முழக்கத்தின் மூலமாக, அவர் ஆற்றி உள்ள பணிகள் அளப்பரியதாகும்.
புத்தரின் போதனைகளைப் பயில்வதற்காக, இலங்கைக்குச் சென்று, பாலி மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 56 நூல்களைத் தந்து உள்ள பெரியார் தாசன், அம்பேத்கர் தொகுத்த புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலை, தமிழில் மொழி ஆக்கம் செய்தார். அந்தநூல், தைவான் நாட்டில் மூன்று இலட்சம் படிகள் அச்சிடப்பட்டு, உலகெங்கும் பரப்பப்பட்டன.
அவர் உடல் நலம் குன்றியபோது, ஜூலைத் திங்களில் அவரது இல்லம் சென்று சந்தித்து, பல மணி நேரம் உரையாடிக் கொண்டு இருந்தேன். இரண்டு நாள்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 16 ஆம் நாள், குளோபல் மருத்துவமனையில் அவரைச் சந்தித்தேன். மூன்று மணி நேரம் அவர் என்னிடம் மனம்விட்டுப் பேசிக்கொண்டு இருந்தார். அதுதான், அவர் கடைசியாகப் பேசியது என்று, அவரது பிள்ளைகள், நேற்று என்னிடம் தெரிவித்தனர்.
பேரறிஞர் அண்ணாவைக் கொத்திச் சென்ற புற்று நோய்தான், பெரியார் தாச னையும் நம்மிடம் இருந்து பறித்து விட்டது.
‘தான் இறந்தபிறகு, விழிகளை சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குத் தந்து விடுங்கள்; உடலை எரியூட்டவும் வேண்டாம்; புதைக்கவும் வேண்டாம்; உட லை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களது ஆராய்ச்சி படிப்புக்காகக் கொடுத்து விடுங்கள்’ என்று குடும்பத்தாரிடம் கூறியதற்கு ஏற்ப, அவ்விதமே அவரது உடல், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்படுகிறது.
இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இனத்துக் கும் அருந்தொண்டு ஆற்ற இருந்த, எங்கள் கொள்கை வைரத்தை, சாவு கொடூ ரமாகக் கொண்டு போய் விட்டதே என்ற வேதனையில் தவிக்கிறேன். அவரை இழந்து ஆற்றொணாத் துயரத்தில் வாடும், அவரது குடும்பத்தினருக்கும், உற் றார் உறவினர்க்கும் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள் கின்றேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச்செயலாளர்
19.08.2013 மறுமலர்ச்சி தி.மு.க.
No comments:
Post a Comment