Friday, August 9, 2013

ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவில் வைகோ

பசுமைத் தீர்ப்பு ஆயம் அறிவித்து உள்ளபடி, 
ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவில் பங்கு ஏற்பேன்!

ஆலையை அகற்றுவதற்கான போராட்டம் தொடரும்!

#வைகோ அறிக்கை

தூத்துக்குடியில் சுற்றுச் சூழலை நச்சுமயமாக்கி நாசமாக்கி வருகின்ற, ஸ்டெர் லைட் தாமிர உருக்கு ஆலை தொடர்ந்து செயல்படலாம் என்று, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம் இறுதி ஆணையைப் பிறப்பித்து இருக்கின் றது.

இத்தீர்ப்பு ஆயத்தின் தலைவர், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதேந்திர குமார் தலைமையிலான அமர்வு தந்த தீர்ப்பு, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் தருகிறது.

தூத்துக்குடி மாநகரம், சுற்று வட்டார பொது மக்களின் நலனைப் பாதுகாக்க, ஸ்டெர்லைட்டை எதிர்த்து, கடந்த 17 ஆண்டுகளாக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடி வருகிறேன்.

கடந்த மார்ச் 23 ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப் புகையால், தூத்துக்குடி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். மக்கள் போராட்டம் வெடித்தது. அதனால், ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி, தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மார்ச் 29 ஆம் தேதி ஆணை பிறப்பித்தது.
ஆனால், ஏப்ரல் 2 ஆம் தேதி, ‘ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கலாம்’ என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து இருக்கிறேன்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆணையை எதிர்த்து, பசுமைத் தீர்ப்பு
ஆயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. சென்னையில் விசாரணை நடைபெற்ற நிலையில், அந்த வழக்கு டெல்லியில் தீர்ப்பு ஆயத் தின் தலைமை அமர்வுக்கு மாற்றப்பட்டது. அங்கும் நான் வழக்குத் தொடுத்து வாதாடினேன். ‘ஆலையைத் தொடர்ந்து இயக்கலாம்’ என்று, தீர்ப்பு ஆயம் இடைக்கால ஆணை பிறப்பித்து இருந்தது. தற்போது, இறுதி ஆணையும் தந்து உள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடுப்பேன்.

பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தீர்ப்பில், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சிப்காட் தொழிற்சாலை அமைந்து உள்ள சுற்று வட்டாரங்களில், பெண்களுக்கு ஏற்படு கின்ற உடல் நலக் கேடுகள், பொதுமக்களுக்குக் கண் எரிச்சல், மூச்சு முட்டு தல், அதற்கான காரணங்களை ஆய்வு செய்ய,ஒரு சிறப்புக் குழுவை அமைத்து உள்ளது.

அந்தச் சிறப்புக் குழு ஆய்வு செய்து, அதன் அறிக்கையை, ஆறு மாத காலத்துக் குள் பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.
அந்தக் குழுவில், தமிழ்நாடு அரசு நல்வாழ்வுத்துறைச் செயலாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர், நல்வாழ்வுத்துறை தலைமை இயக்குநர், மத்திய அரசின் சுற்றுச்சுழல், நல்வாழ்வுத் துறைகளில் இருந்து இரண்டு நிபுணர்களுடன், என்னையும் அந்தக் குழுவில் ஒரு உறுப்பினராக அறிவித்து உள்ளது.

தூத்துக்குடியிலும், சுற்று வட்டாரத்திலும் உள்ள மக்களின் உடல் நலனுக்குப் பெருந்தீங்கினை, புற்று நோய் உள்ளிட்ட, உயிர் ஆபத்தான நோய்களை ஸ்டெர்லைட் ஆலைதான் ஏற்படுத்துகிறது என்பது, பல்வேறு ஆதாரங் களு டன் அறியப்பட்டு உள்ள உண்மை ஆகும்.

எனவே, இந்தக் குழு நடத்துகின்ற ஆய்வுப் பணிகளில் நானும் பங்கு ஏற்பேன். அதேநேரத்தில், ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவதற்கான எனது போராட் டம் நீதிமன்றத்தில் தொடரும்!

‘தாயகம்’                                                                                                 வைகோ
சென்னை - 8                                                                             பொதுச்செயலாளர்
09.08.2013                                                                                     மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment