Tuesday, August 20, 2013

உ.பா.ச மக்களுக்கா? நிறுவனங்களுக்கா?

உணவுப் பாதுகாப்பு அவசர சட்டம்;

மக்களுக்கா? வர்த்தக கார்பரேட் நிறுவனங்களுக்கா?

என் பெயரே “சைக்கிள்” சித்தார்த்தன்.நான் சைக்கிளிலேயே சென்னையை வலம் வந்ததால் எனது தோழர்கள், நண்பர்கள் எனக்கு சூட்டிய பட்டம் இந்த
“சைக்கிள்”. சமீபத்தில்தான் 25 ஆண்டு பழசான எனது பிரியமான ஹெர்குலிஸ்
சைக்கிளை எவரோ “தள்ளிக்” கொண்டு போய்விட்டார்கள். அன்றைய நாளில்
நான் அடைந்த துக்கம் எனக்குத்தான் தெரியும்.

நல்லவேளை. நான் 25 ஆண்டுகளாக சைக்கிள் வைத்திருந்தது திட்டக்கமிஷ னுக்குத் தெரியாது. தெரிந்து இருந்தால் எனது குடும்பத்தை வறுமைக் கோட் டிற்கு கீழானவர் என்கிற தகுதியிலிருந்து “பொதுவானவர்” பட்டியலில் சேர்த்து எமது குடும்ப பொதுவிநியோக அட்டையைப் பறித்து இருப்பார்கள்.
சென்னையில் மொத்தத்தில் 80 இலட்சம் பேர்கள். இதில் 50 இலட்சம் பேர்கள்
ஒற்றையறை குடித்தன வாசிகள். நானும் இந்தப் பெருங்கூட்டத்தில் ஒருவன்.
இதில் 5 ஆயிரம் குடும்பங்கள் எனக்கு நன்கு அறிமுகமான குடும்பங்கள். எங் கள் எல்லோருக்குமே பொது விநியோக பங்கீட்டு அடையாள அட்டைஉள்ளது. எங்களில் எவருக்காவது பொது அடையாள அட்டையிலே அல்லது உணவுப் பொருள் பெறுவதில் சிக்கல் என்றாலோ என் தலையைப் பிடித்து உலுக்கிவிடு வார்கள். ஏனெனில் பொது விநியோகத்தின் மூலமாக எங்களுக்கு கிடைத்து வருகிற அரிசி உள்ளிட்ட மற்ற அத்யாவசியப் பொருட்கள் மிக மிக முக்கியத் துவம் வாய்ந்தவை.

மூன்று பேர்கள் கொண்ட எனது குடும்பத்திற்கு இப்போது தமிழகஅரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 20 கிலோ அரிசி, விலை இன்றி கிடைக்கிறது. 4 கிலோ கோதுமை கிலோ ஒன்றின் விலை ரூ 7.50 வீதம் கிடைக்கிறது. ஒரு கிலோ பாமாயில் ரூ 25க்கும், ஒரு கிலோ து.பருப்பு ரூ 30க்கும், ஒரு கிலோ உளுந்தம்பருப்பு ரூ 30க்கும், இரண்டு கிலோ சர்க்கரை ரூ 27க்கும், 6 லிட்டர் ம.எண்ணை ரூ 83க்கும் கிடைக்கிறது.

இந்த அத்யாவசியப் பொருட்கள் எனது குடும்பத்திற்கு மாதத்திற்கு 15 நாட் களுக்கு போதுமானதாக இருக்கிறது.இதேபோல் இந்த உணவுப் பொருட்கள்
சென்னையின் ஒற்றையறை குடித்தன வாசிகளின் பாதிக் குடும்பத்தினருக்
காவது போதுமானதாக இருக்கும். இவை களை நாங்கள் கண்டிப்பாக ஒவ் வொரு மாதமும் பெற்று விடுகிறோம்.

நாங்கள் ஒற்றையறை குடித்தனவாசிகள்தான். திட்டக்கமிஷன் வரையறுப்புப் படி நாங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழானவர்களா? அதற்கும் சற்று மேலே
உசந்த “பொதுவானவர்”களா? என்பது எல்லாம் நாங்கள் அறியோம். கூடவே
எங்கள் வீடுகளில் ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளது. எங்கள் குடும்ப உறுப்பி னர்கள் மூவரும் ஆளுக்கொரு கைபேசியும் வைத்திருக்கிறோம். என் துணை வியாரிடமிருந்து வாரத்தில் மூன்று நாளிலாவது மதியம் 2 மணிக்கு எனக்கு வருகிற கைபேசி கட்டளை;“வருகிற வழியில் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வந்து விடுங்கள்”.

இப்போது நகர்ப்புறங்களில் வசிக்கிற வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்
களுக்கு மட்டும்தான் உணவு தானியம் என்கிற மத்திய அரசின் உணவுப்பாது காப்பு அவசர சட்டம் வந்திருக்கிறது.ஆக, சென்னையின் ஒற்றையறை குடித் தனவாசிகள் பாதிபேர்கள் இந்த பொது விநியோகத் திட்டத்திலிருந்து அப்புறப் படுத்தப்பட விருக்கிறோம்.

மீதிப் பாதிபேர்களுக்குமே இனிமேல் விலை இல்லா அரிசி கிடையாதாம். அரி சியே கிடையாது என்றால் மானிய விலையில் கோதுமை, பாமாயில், துவரம்
பருப்பு, உளுந்தம்பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணை ஆகியவற்றை தரவா
செய்வார்கள்?

இனிமேல் நபர் ஒருவருக்கு மூன்று ரூபாய் விலையில் 5 கிலோ அரிசி மட்டும்
தானாம். ஒரு கட்டத்தில் டெல்லிக் காரர்கள் 5 கிலோ அரிசிக்குரிய பணத்தை ரொக்கமாக நமக்கு தந்து விடப் போகிறார்களாம். இவர்கள் தருகிற பணத் தோடு நமது பணத்தை போட்டு திறந்த சந்தையில் நாம் அரிசி வாங்கிக் கொள்ள வேண்டுமாம். இதுதான் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு அவசர
சட்டமாம்.

உணவுக்கான உரிமை என்பது உணவுப் பாதுகாப்புக்கான போராட்டத்தின் ஒரு
பகுதியாகும். மக்களுக்கான உணவு உரிமை இதுவரையிலும் உத்திரவாதப்
படுத்தப்படவில்லை. இப்போது அனைவருக்குமான உணவு உரிமை முக்கிய மான பிரச்னையாகியுள்ளது.

ஏனெனில் இந்தப் பிரச்சினையானது நகர்ப்புற முறைசாரா பெரும் தொழிலா ளர் குடும்பங்களையும் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் இந்தியர்களில் மிகப் பரந்த பெரும் பான்மையுடனும் சம்மந்தப்பட்டதாகும்.உணவு உத்தரவாதத்தின் தேய்மானத் திற்கும், மக்களின் கோடிக்கணக் கானவர்களின் உணவு உரிமை மறுக்கப் படுவதற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. அது பெரும் உணவு தானிய வர்த்தகர்கள், பெரும் கார்பரேட் நிறுவனங்களின் பகற்கொள்ளை. இதில் மத்திய ஆட்சியாளர்களுக்கு கிடைக்கிற பெருங்கமிஷன். இவர்களுக்கு மக்கள் நலன் என்பதெல்லாம் பொருட்டல்ல.அவர்கள் நலன் மட்டுமே முக்கியம்.

ஃ ஃ ஃ ஃ

உணவுக்கான உரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மறுக்க முடியாத உரிமையாகும். இந்த உரிமையானது அனைத்து மனித உரிமைகளிலேயே மையமானதாக இருக்கிறது. இந்த உரிமை உயிர் வாழும் உரிமையாகும். இந்த உணவுப் பாதுகாப்பின்மையினால் அடிமட்டத்தில் அழுத்தி வைக்கப்பட்டிருக் கிற எல்லா சாதியினமும் உயர் சாதிகளைச் சேர்ந்த பணக்காரர்களைச் சார்ந்தி ருக்கும் இழிநிலைமை அதிகரித்துள்ளது. இதனால் சாதி ரீதியான சுரண்டல்
வலுவடைந்துள்ளது. இதே சமயத்தில் நகர்ப்புற பாட்டாளி வர்க்கமும் அடங்கி யே வாசிக்கிறது.

ஆனால், இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசும் கேரள அரசும் தங்களின் தொடர்
நடவடிக்கைகளால் தங்கள் குடிமக்கள் அனைவருக்கும் உணவிற்கான உத்திர
வாதத்தை அளித்து 100 சதம் சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. இவ் வாறு சுய அதிகார உரிமை கொண்ட மாநிலங்களின் உணவு தானிய விநி யோகமுறைகளை தாக்குவதற்கு டெல்லி ஆட்சியாளர்களால் பல்வேறு
தாக்குதல்கள் நடைபெறுகின்ற பெருந்திரளான ஏழை மக்களுக்கு ஏற்ற விலை யில் உணவு தானியங்களை வழங்குவதற்கான குறைந்தபட்ச பொறுப்பு களிலிருந்து தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு மட்டுமே உணவு தானியம் வழங்கவும் நிர்பந்திக்கப் படுகின்றன. இது உணவுக் கான மானியங்களை வெட்டுவதற்கான சதித் திட்டமாகும்.

உலகளாவிய இந்த சதித்திட்டங்களால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக மெக்ஸிகோவில் உணவுக் கான மானியம் 80 சதம் வெட்டப்பட் டது. இதனால் அந்நாட்டில் எல்லாம் உணவுப் பொருட்களின் விலைகளும் பெரும் அளவிற்கு உயர்ந்தன. அருகே இருக்கிற இலங்கையிலும் கூட மிக வறியவர்களுக்கு மட்டும் தான் தானிய விநியோக முறை என்கிற சதித்திட்டம் நடை முறைப் படுத்தப்பட்டதால் இலங்கையின் ஏழை மக்களில் 50 சதம் பேர் பொது விநியோகத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இவர் கள் தலைகால் புரியாமல் தேசிய வெறி கொண்டு அலைகிறார்கள்.

உணவுப் பாதுகாப்பு என்பதை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய
அமைப்பு தெளிவாக ஒரு வரையறுப்பு செய்துள்ளது. அதாவது; “ஒரு ஆரோக் கியமான வாழ்க்கை நடத்து வதற்கு அனைத்து மக்களுக்கும் அனைத்து நேரங் களிலும் தேவையான உணவு கிடைப்பதற்கு வெளிப்படையான மற்றும் பொருளாதார ரீதியான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்” என்பதே உணவுப் பாதுகாப்பு என்று கூறுகிறது ஐ.நா. சாசனம்.

ஐ.நா.வின் இந்த வரையறுப்பு இந்தியா விலேயே நடைமுறையில் இருக்கிற இரு மாநிலங்கள் தமிழகமும், கேரளமும் மட்டும்தான். 1960 களில் இந்தியா
முழுவதிலும் 5 இலட்சம் நியாய விலைக் கடைகள் இருந்தன. டெல்லி ஆட்சி யாளர்களால் இவற்றில் கணிச மானவை மூடப்பட்டுவிட்டன. ஆனால் தமி ழகத்திலும், கேரளத்திலும் இன்றும் புதிது புதிதாய் நியாயவிலைக் கடைகள்
திறக்கப்படுகின்றன.

தமிழகம்,கேரளம் தவிர்த்து பிற மாநிலங்களில் நியாயவிலைக்கடைகள் மூடப் பட்டதற்கு காரணம் வறுமைக் கோட்டிற்கு கீழானவர்களுக்கு மட்டுமே உணவு தானியம். பிற ஏழைகளுக்கு கிடையாது என்கிற டெல்லி ஆட்சியாளர் களின் நாசகார கொள்கையினால்தான். அதாவது மூன்று சேலைகள் ஒரு குடும்பப் பெண்மணி வைத்திருந்தால் அக்குடும்பத்திற்கு பொது விநியோக முறை கிடையாது. அந்தக் குடும்பத் தலைவன் ஒரு சைக்கிள் வைத்து இருந்தாலும் அக்குடும்பத்திற்கு உணவு தானியம் கிடையாது. இதுதான் டெல்லி கிழித்த வறுமைக் கோட்டின் இலட்சணம். இலக்கணம்.

இதனால் 1993-1994 இல் இந்தியர் 100 பேர்களில் 36 பேர்கள் ஏழைகளாக இருந்த னராம். 1999-2000 இல் இவர்கள் 26 பேராகக் குறைந்துவிட்டார்களாம்.அவர்கள் மூன்றாவது புடவையையோ, ஒரு பழைய சைக்கிளையோ வாங்கி விட்டார் கள் போலும். அதாவது மிக வறியவர்களுக்கு மட்டுமே உணவு தானியங்கள். மீதி 80 சதம் பேர்களுக்கு பொது விநியோகமுறை தானியம் கிடையாது.இதுவே இந்திய அரசின் உணவுக் கொள்கை.

ஆனால், தமிழகம், கேரளத்தின் பாதை அலாதிபாதை. “எமது மக்கள் எல்லோ ருக்கும் நாங்கள் உணவு அளிப்போம்” என்கிற பாதை. கேரளம் எப்போதுமே இடதுசாரிகளின் செல்வாக்கு உள்ள மாநிலம். தமிழகம் தந்தை பெரியாரின் பாசறை.

இந்நிலையில் தமிழகம், கேரள முன் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு
அனைவருக்குமான பொது விநியோக முறையை அடிப்படையாகக் கொண்ட
ஒரு அற்புதத் திட்டத்தை இந்திய அரசு நடைமுறைப்படுத்தி இருக்கலாம். இந்த
வாய்ப்பை தவறவிட்டுவிட்டு மத்திய அரசு தறுதலைத் தனமாகவும், தானடித்த
மூப்பாகவும் உணவுப் பாதுகாப்பு அவசரசட்டம் ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது.
இந்த அவசர சட்டம் உண்மையில் இந்தியா முழுவதிலும் கொடுத்து இருப்ப தைக் காட்டிலும் பறித்திருப்பதே அதிகம். தமிழகம்,கேரளாவில் இதன் பாதிப்பு மிக அதிகம். இதை 5 விசயங்களில் பார்க்க முடியும்.

இதுவரை பொது விநியோகத்திட்ட பயனாளிகளாக கிராமப்புறத்தினர் 82 சதம் குடும்பங்கள் இருந்தனர். இது 75 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.நகர்ப்புறத்தில் 80 சதத்தினர் இருந்தனர்.இதே எண்ணிக்கை நகர்ப்புறத்தில் 50 சதமாக குறைக் கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எல்லா மாநில அரசுகளும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர் களாக 56 சதத்தினரை வரையறுத்து உள்ளன. இந்த அவசர சட்டம் இதை 46
சதமாகக் குறைத்துள்ளது.

மிக வறிய நிலையில் இருந்த குடும்பங்களுக்கு இதுவரை ஒரு குடும்பத்தை அலகாகக் கொண்டு 35 கிலோ தானியம் வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் அந்தக் குடும்பத்தில் மூன்று பேர் இருந்தால் 15 கிலோ தானியம்தான். 4 பேர் இருந்தால் 20 கிலோ தானியம். 35 கிலோவெல்லாம் கிடையாது.

தமிழகத்திலோ விலை இல்லாமல் 20 கிலோ அரிசி. கேரளத்தில் கிலோ 2 ரூபாய் விலையில் 20 கிலோ அரிசி.இதேபோல் 10க்கும் மேற்பட்ட மாநிலங் களில் கிலோ அரிசி 2 ரூபாய். மத்திய அரசின் இந்த அவசர சட்டம் உயர்த்தி இருப்பதோ கிலோவிற்கு 3 ரூபாய்.

வறுமைக் கோட்டிற்கு மேலானவர்களின் எண்ணிக்கையை வேறு குறைக் கிறது இந்த அவசர சட்டம்.

இந்த அவசர சட்டம் பெருங்கேடானது.ஏனெனில் மாநில அரசுகளின் இறை யாண்மைக்கு எதிராக - பல்வேறு ஷரத்துகளின் மூலமாக ஆதிக்கத்தனமான அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது. எண்ணிக்கைகள்,கோட் பாடுகள், பொறுப்புகள், செலவுகள் வரையிலும் அனைத்து அதிகாரங்களையும் இந்த அவசர சட்டம் மத்திய அரசின் கைகளில் குவித்திருக்கிறது.

உணவு தானியங்கள் பெறுவதற்கான மக்களில் கணிசமானோரின் நியாய மான உரிமையை இந்த அவசர சட்டம் பறித்திருக்கிறது. கூடவே மத்திய அரசு
உத்திரவாதமான உணவு தானியங் களுக்குப் பதிலாக பணம் அளிக்குமாம்.
உணவுப் பாதுகாப்புக்கான உரிமையின் முக்கியத்துவம் இந்த அவசரச் சட்டத் தால் குறைக்கப்பட்டுள்ளது.இந்தச் சட்டம் அடாவடித்தனமான எதிர்மறை களைக் கொண்டிருக்கிறது.

வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ளவர்கள் முன்னுரிமைப் பகுதியினராம். மற்ற
ஏழைகள் பொதுவான பகுதியினராம்.கிராமப்புறத்தில் ஒருவருக்கு தினசரி ரூ
15, நகர்ப்புறத்தில் ரூ 25 போதுமானது என்று மதிப்பிடுகிறது இந்த அவசர சட் டம்.

நம்மைக் கீழே தள்ளிய இந்த சண்டிக் குதிரை அவசர சட்ட 13(1) ஆவது பிரிவு
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர் களின் எண்ணிக்கையை மத்திய அரசே தீர்மானிக்குமாம். விழுப்புரம் மாவட்டம் மாம் பழப்பட்டு அருகேயுள்ள ஒட்டன் காடு வெட்டி கிராம ஓட்டர்களை இந்த மன் மோகன் சிங் ஆட்கள் கணக்கு எடுப்பார்களா?

13(2) ஷரத்து இன்னும் கொடிய காமெடி.கிராமப்புறங்களில் 25 சதவீதத் தினருக் கும் நகர்ப்புறங்களில் 50 சதத்தினருக்கும் இந்த அவசர சட்ட பலன்கள் கிடை யாதாம்.

14(1) ஷரத்து இன்னும் வேடிக்கை யானது. இந்த அவசர சட்ட பயனாளி களை அடையாளப் படுத்துவதற்குரிய வழிகாட்டல்களை டெல்லிதான் வழங்குமாம். பயனாளிகள் இன்னார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையும் டெல்லியினுடை யதாம். பிறகெதற்கு தமிழ்நாட்டிற்கு ஒரு மாநில அரசு?

இதனால் என்ன நடக்கும் தெரியுமா? கிராமப்புறங்களில் 25 சதம் குடும்பங்க ளுக்கும், நகர்ப்புறங்களில் 50 சதம் குடும்பங்களுக்கும் பொது விநியோக அட் டை வழங்கப்படாது. ஏனெனில் இவர்கள் வறுமைக் கோட்டைத் தாண்டிவிட் டார்களாம்.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப் போன்று ஒரு குடும்பத்தை அலகாகக் கொண் டுவறியவர் குடும்பத்திற்கு 35 கிலோ தானியம் வழங்கப்படுவது இந்த அவசர சட்டத்தால் நிறுத்தப்படுகிறது.இனிமேல் நபருக்கு 5 கிலோதான். 

ஏற்கனவே இந்தியாவில் 10 மாநிலங்கள் கிலோ தானியத்தை 2 ரூ விலைக்கு விநியோகித்து வருகின்றன. தமிழகத்தில் 20 கிலோ அரிசி இலவசம். இனி மேல் இந்த விலைகளை உயர்த்தும் அதிகாரத்தை இந்த அவசர சட்டம்
டெல்லிக்கு வழங்கியுள்ளது.

இந்த அவசர சட்ட அடி நாதத்தின்படி நகர்ப்புறங்களில் வசிக்கிற வறுமைக்
கோட்டிற்கு மேலான 50 சத குடும்ப அட்டை வைத்திருப்பவர்களும், கிராமப்
புறங்களில் 25 சதம் பேர்களும் இப்போது உரிமையாக்கப்பட்டுள்ள எல்லா பொது விநியோக சலுகைகளையும் இழப்பார்கள். இந்த அவசர சட்ட அத்தியா யம் 3 ஜி கூறுகிறது.

பயனாளிகளுக்கு உணவு தானியம் வழங்க முடியாத பட்சத்தில் பணப்பட்டு வாடா திட்டம் நடைமுறைப் படுத்தப்படுமாம்.

இங்கே பாமரத்தனமாக ஒரு கேள்வி.இப்போதே பெரும் பணவீக்கம். நமது
வீட்டில் நான்கு பேர்கள். நான்கு பேர் களுக்குரிய 20 கிலோ தானியத்திற்கான
விலையை மத்திய அரசு நமக்குத் தந்து விடுகிறது என்றே வைத்துக் கொள் வோம். இப்போதே கிலோ அரிசி 45 ரூபாய். நமக்கு 20 கிலோ அரிசி வெளிச் சந்தையில் வாங்கிட 900 ரூபாயா டெல்லி நமக்குத் தரும்? ஏதோ ஒரு தொகை தரலாம். நம்மை பெரும் வர்த்தகர்கள் மற்றும் கார்பரேட் கம்பெனிகளுக்கு இரையாக்கவா இந்த உணவுப் பாதுகாப்பு அவசர சட்டம்?

இவர்களால் ஏழ்மையை ஒழிக்க முடிய வில்லை. இதனால் ஏழைகளை ஒழித் துக் கட்டிவிட துடியாய்த் துடிக்கிறார்கள். இவர்களின் எத்தனையோ மாய்
மாலங்களில் இப்போதைய புதிய மாய்மாலம் இந்த உணவுப் பாதுகாப்பு அவசர சட்டம். 

அன்றும் அந்தப் புறாக்கூட்டம் இரைதேடி வானில் வட்டமிட்டது. கீழே நெல் மணிகள் குவிந்திருந்தன. அதன் மேலே வேடன் வலை விரித்து இருந்தான். உயரத்தில் இருந்து பார்த்த போது அந்த புறாக் கூட்டத்திற்கு வலை தெரிய வில்லை. விருட்டென நெல் குவியலின் மீது இறங்கிவிட்டன. அந்த புறாக் கூட்டம் முழுக்கவுமே அந்த வஞ்சக வேடனின் வலையில் மாட்டிக் கொண்டு விட்டன. அந்தப் புறாக்கள் ஒவ்வொன்றும் கண்ணீர் விட்டன.கதறின.

அய்யோ! நான் மூன்று குஞ்சுகளை கூட்டில் விட்டுவிட்டு வந்திருக்கிறேனே
என்று ஒரு தாய்ப்புறா கன்ணீர் சிந்தியது.“நான் நான்கு முட்டைகளை அடை
காத்து வந்தேனே” என்று இன்னொரு புறா அழுது புலம்பியது. இப்படி அழுது
புலம்பிட ஒவ்வொரு புறாவிற்கும் ஒரு சோகக் கதை இருந்தது.

தலைமைப் புறா மட்டும் கண்ணீர் சிந்தவும் இல்லை. துளியளவும் கலங்கவும் இல்லை. அத்தனை பேர்களின் புலம்பலையும் அமைதியாக செவி மடுத்த அந்தத் தலைமைப்புறா இப்படி ஆணையிட்டது.

ஏன் அழுகிறீர்கள்? இந்த வேடனின் வலை நமக்கு ஒரு பொருட்டா? மூச்சை
இழுத்துவிட்டு மனதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நான் ஒன்று, இரண்டு,
மூன்று எனக் கூறுவேன். மூன்று என்று நான் சொன்னதும் நாம் அனைவரும் ஒரே சமயத்தில் முழுப்பலத்தோடு இறக்கை களை அடித்து பறப்போம். இந்த வஞ்சக வேடனின் வலை எம்மாத்திரம்? என்று ஆணையிட்டு அப்படியே மூன்று வரை எண்ணியது தலைமைப் புறா.

அடுத்த நொடியில் அந்தப் புறாக் கூட்டம்விண்ணில். கால்களில் வலையோடு.
பிறகு ஆளில்லாத இடத்தில் இறங்கின.தங்கள் அலகுகளாலேயே அந்த வலை
களை கிழித்தெறிந்தன. மகிழ்ச்சி தாங்க வில்லை, அந்தப் புறாக்கூட்டத்திற்கு.
ஆனால், ஒரு விசயம். அந்த தலைமைப் புறாவே வேடனின் கூட்டாளியாக
இருந்திருந்தால்? இந்த உணவுப் பாதுகாப்பு அவசர சட்டத்தை அவசர அவசர மாக கொண்டு வந்திருப்பவர்கள் வஞ்சக தலைமைப் புறாக்களே...

நன்றிகள்

கட்டுரையாளர் :- கருப்பன் சித்தார்த்தன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment