Saturday, August 10, 2013

காதல் மரணிப்பதில்லை!

காதலர்கள் மரணித்தாலும் காதல் மரணிப்பதில்லை!

முன்னயிட்ட தீ முப்புறத்திலே
பின்னயிட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
நானும் இட்ட தீ மூள்க மூள்கவே

என்று நாட்டுரிமை காக்கும் போர்க் களத்தில், இந்திய விடுதலை வேள்வியில் நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க தன்சுவாசத்தை தந்து வெள்ளை ஏகாதிபத்தி யத்தை திகிலுறச் செய்த உலகத்தின் முதல் மனித வெடி குண்டு சுந்தரலிங்கம் (வீரபாண்டிய கட்டபொம்மன்), குயிலி (வேலு நாச்சியார்) தாழ்த்தப்பட்ட பட்டிய லினத்தவர்கள்.
திராவிட இயக்கம் அரியணை ஏற காரணமாக இருந்த ஆதிக்க இந்தி மொழிப் போர்க் களத்தில், முதன் முதலாக உயிர்பலியாகி ரத்த சாட்சியான நடராசன்
ஆதிதிராவிடன். இவர்கள் தங்களது சாதிய அடையாளத்திற்காக உயிர் தியா கம் செய்யவில்லை. தமிழன்,தமிழ்நாடு என்ற பொதுமை நோக்கில்! அந்த பார்வை எங்கே?

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தஆதிதிராவிடர்கள் தாழ்ந்தவர்கள் அல்ல.
சனாதனத்தின் பெயரால்,மனுதர்மத்தின் பெயரால், மதத்தின் பெயரால் ஆதிக்க
வர்க்கத்தால் தாழ்த்தப்பட்டவர்கள்.

புரட்சி

வயிற்றுப் பிழைப்புக்காக நில உடைமை சமுதாயத்திடம் கூலி வேலை செய் யும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி,
தாங்கள் வைப்பது தான் சட்டம்; ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஊரிலிருந்து அப் புறப் படுத்தப்படுவார்கள், வேலை மறுக்கப்படும், இதனால் கூலி கிடைக்காது. பசி,பட்டினி. இந்த பாட்டாளி வர்க்கத்தில் இருந்து தான் ரஷ்யாவில்; லெனி னும்,சீனாவில் மாவோவும், சர்வாதிகாரத்தில் இருந்த நாட்டை மீட்டனர். லெனினும்,மாவோவும் திடமாக நம்பினார்கள்.

Nations are renewed from bottom not from the top

மாற்றம் என்பது அடித்தட்டு மக்களால் மட்டுமே உருவாக்க முடியுமே அல்லா மல் மேல்தட்டு மக்களால் அல்ல என்பதனை. இங்கே என்ன நடக்கின்றது? அந்த உழைக்கும் மக்களான பாட்டாளிகளை அடிமை படுத்தும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தர்மபுரி சம்பவம் மீண்டும் ஒரு புரட்சிக்கான தேவையை பதியம் போட்டுள்ளது.

உலகப் புரட்சி வரலாறுகள் ஏராளமான குருதியை சிந்தி எல்லா மனித மனங் களையும் சுதந்திரத்தை நோக்கி திருப்பிவிட்ட எல்லா புரட்சிகளும் அடக்கப் பட்டு கிடந்த கோடிக்கணக்கான மக்களில் வாழ்ந்த யாரோ சிலரின் இதயத்தில் கருவுற்றே கருத்தின் செயல் வடிவம் பெற்றது என்றால். எங்கே தீண்டாமை மேலோங்கி இருந்ததோ,அதை உடைத் தெறிய நக்சல் பாரி சிந்தனையாளர்கள் பாலன், அப்பு சிலைகள் இருக்கின்றதோ அதே இடத்தில் தீண்டாமை மீண்டும் தீ பந்தத்தை தூக்கிப்பிடித்துக் கொக்கரிக்கின்றது.

தருமபுரியில் இளவரசன் - திவ்யா, சாதிய மறுப்பு காதலுக்கு எதிராக சாதி வெறியர்கள் பற்ற வைத்த தீ ஆண்டு முழுவதும் பத்திரிக்கைகளும், தொலைக்
காட்சிகளும் அரசியல் மேடைகளிலும் தலைப்புச் செய்தியாக மாறி இருக் கிறது.

தருமபுரியில், மாமல்லபுரத்தில், மரக் காணத்தில், தொடர்ந்து வடமாவட்டங்
களில் கல்வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் அரங்கேறி பொது சொத்துக்கும் பொது
அமைதிக்கும் குந்தகம் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் அசாதாரண சூழல் ஏற் பட்டு சமுதாய நல்லிணக்கமும்,சகோதர நேயமும் கெட்டு,சாதி வெறி அரசி யல் வேருக்கு தாழ்த்தப்பட்டவர்களின் ரத்தமும், உயிரும், உடைமையும் பரி மாறப்பட்டு சாதி வெறி அரசியல் பிழைப்பு வாதம் உயிர் பெற்று இருக்கலாம். இதன் பயனாளிகள் யார் என்று எண்ணிப் பார்க்கின்ற போது கவலையும்,கோப மும் வருகிறது.

2009 ஆம் ஆண்டு தமிழீழ சொந்தங்களை இனப்படுகொலை செய்த சிங்கள பேரி னவாதி ராஜபக்சேவையும், அவன் கூட்டத்தையும் சர்வதேச நீதிமன்ற குற்ற
கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தந்து சுதந்திர இறையான்மை கொண்ட
தமிழீழ தாயக பூமியை அமைத்துத் தர வேண்டிய தாய் தமிழகம், கடமையை
மறந்தது, சிங்கள இந்திய சதிக்கு காங்கிரஸ் ஆட்பட்டது. இன்றோ இந்த சாதி வெறி அரசியல் நாடகம் தலை தூக்குகிறது.

சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள தங்கள் சாதி மக்களை, கல்வியில்,
வேலைவாய்ப்பில்,முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச்செல்வது சாதி உணர் வு.அது தவறு அன்று. சாதி வெறி என்பது கையில் அரிவாளை, தீ பந்தத்தை தந்து உன் சாதி உயர்ந்த சாதி, மற்ற சாதிகளை அடிமைப்படுத்த வெட்டு, வீடு களுக்கு தீ வை என்பது சாதி வெறி.

உங்கள் கையில் இருக்கும் தீ சுடரால் இருளில் இருப்பவர்களை வெளிச்சத் திற்கு கொண்டு வரும் வழி காட்டும் விளக்காக மாற்றுங்கள். மாறாக சமுதாய
இருளில் புறக்கணிக்கப்பட்டு உள்ளவர் களுக்கு கொள்ளியாக மாற்றாதீர்கள்.
ஆதிக்க சாதி என்பது வேறு, சாதிய ஆதிக்கம் என்பது வேறு. ஆதிக்க சாதிகள்
எண்ணிக்கையில் குறைவாகவும், நில உடைமை சமுதாயமாக ஜமீன்களாக,
பண்ணைகளாக, மிராசுதாரர்களாக இருப்பார்கள். சாதிய ஆதிக்கம் என்பது
எண்ணிக்கையில் பெரும்பான்மையராக உழைக்கும் வர்க்கமாக விளங்குவர்.
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த இவர்கள் தாழ்ந்தவர்கள் அல்ல. ஆதிக்க வர்க் கத்தால் பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள். இவர்கள் சேர்ந்து வாழும் பகுதி சேரி என்றானது.

அறியாமல் தெரியாமல் நடந்துவிட்ட தவறுகளுக்கு மன்னிப்பு உண்டு, அறிந் தே தெரிந்தே திட்டமிட்டு செய்திருக்கின்ற தர்மபுரி தீண்டாமை குற்றச் செய லுக்கு தண்டனை மட்டுமே தீர்வு.

சாதிய நல்லிணக்கத்தை உருவாக்குவோம்,ஆதிக்கமற்ற சமுத்துவ சமுதாயம்
மலர பாடுபடுவோம்.அமைதியும்,சமாதானமும், மகிழ்ச்சியும் பிரவாகம் எடுக்க சிந்தியுங்கள், குறைந்தபட்சம் மனிதர்களாக வாழ பழகுங்கள். காதலை காதலர் களை வாழ விடுங்கள் இதோ வரலாற்றில் காதல் உங்களுக்காக.

உலக காதலர் தினம் புனித வாலன்டைன் நாள் பிப்ரவரி 14

ஆண்டின் பிப்ரவரி என்பது வசந்த காலத்தின் வருகையை முன்னறிவிக்கும்
மாதம். சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் ரோமப் பேரரசை ஆண்டு வந்த கிளாடி யஸ்  என்னும் மன்னனின் ஆட்சிக் காலத்தில் மக்கள் இராணுவத்தில் சேர
நாட்டம் இல்லாமல் நாட்டின் இராணுவ பலம் குறைந்து போனது. மக்கள் காதல்,குடும்பம் என்று வாழ்ந்து வந்தனர். எனவே தன்னுடைய ஆட்சியில் யாரும் காதலிக்கக் கூடாது, திருமணம் செய்யக் கூடாது என்று தடை விதித் தான். இதை கிறித்துவ போதகர்கள் எதிர்த்துப் போராடினார்கள்.

இந்நிலையில் அருட்தந்தை வாலன்டைன் காதலர்களை ஊக்குவித்து நிறைய திருமணங்களை ரகசியமாக செய்து வந்தார்.இதை அறிந்த மன்னர் கிளாடி யஸ் கோபமடைந்து அருட்தந்தை வாலன்டைனை சிறையில் அடைக்க உத் தரவிட்டு கி.பி.270 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் நாள் கொடூரமாக படுகொலை செய்யப்படுகிறார்.காதலுக்காக உயிர் நீத்த வாலன்டைன் நினைவாக அவர் இறந்த நாளை காதலர் தினமாக அனைத்துலக கிருத்துவர்களின் ஆண்டகை யாக விளங்கும் வாடிகன் நகரத்தின் போப் ஆண்டவர் கி.பி.498 இல் அதிகார பூர்வமாக பிப்ரவரி 14 காதலர் தினமாக அறிவித்தார்.

இது ஐரோப்பிய கண்டத்தில் இருந்து உலக நாடுகளில் பரவியது. அது இந்தியா வில் 1980களில் தொடங்கி காதலிக்கோ, காதலனுக்கோ பரிசு வழங்கி தங்க ளின் காதலை தெரிவிக்கும் நாளாக மாறிவிட்டது. ஏதோ காதலை வெளிப்
படுத்த ஆண்டின் 365 நாட்கள், 12 மாதங்கள், 52 வாரங்களில் பிப்ரவரி 14 அந்த ஒருநாள் தான் உகந்தது என்று சொல்லி நாள் நட்சத்திரம் பார்க்கும் நாளாக ஒரு சம்பிரதாய நாளாக மாறிவிட்டது.

காதல் என்பது காதலருக்கு தென்றல், பெற்றோர்களுக்கு புயல். பார்த்தவுடன்
இவர் தான் தன்னுடைய துணையாக வரவேண்டியவர் என்று இதயத்தில் ஏற் படும் ஒரு ரசாயன மாற்றம் ஒரு இணை தங்களுக்கானவரை தேர்வு செய்து விட்டபின் உலகப் பேரழகியையோ அல்லது பேரழகனையோ சந்திக்க நேர்ந் தால் கூட அது காதலாக மாறாது.காதலுக்கு அழகு, அந்தஸ்து, சாதி, மதம் தெரி யாது. எனவே தான் காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள். சமத்துவ
சமுதாயம் ஆதிக்கமற்ற சமுதாயம் அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் காதலை ஊக்குவிப்பார்கள். சாதி பிசாசையும், மத பிசாசையும் விரட்டி அடிக் கும் மந்திர சக்தி காதலுக்கு மட்டுமே உண்டு என்று சொல்வார்கள்.காதல் பல தரப்பட்டது, ஒருதலைக் காதல், நிறைவேறாத காதல், தெய்வீகக் காதல் என்று பல்வேறு அடைமொழிகளுடன் காரண பெயர் வைத்து அழைக்கின்றோம்.

இங்கு நிறைவேறாத காதலே வரலாற்றில் பேசப்படுகிறது. ரோமியோ- ஜூலி யட்; லைலா-மஜ்னூன்; அனார்கலி-சலீம்சா; அம்பிகாபதி-அமராவதி காதலை
இன்றளவும் பேசுகிறார்கள் என்றால் இவர்களின் காதல் நிறைவேறாத முற் றுப் பெறாமல் கண்ணீரோடு கல்லறையில் முடிந்து போனதால்தான் அமரத் துவ காதல்.

இறைவனிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை பக்தனாக ஒப்படைத்து வழிபடுவது சாந்தபாவம்.

இறைவனை எஜமானனாகவும், தன்னை அடிமையாகவும் எண்ணி வழிபடு வது, தாஸ்யபாவம். இந்த வழிபாட்டில் இருந்தவர் திருநாவுக்கரசர்.

இறைவனை தோழனாக நினைத்து பக்தி செய்வது சத்தியபாவம். இதை மேற்
கொண்டவர் சுந்தரர். அதனால் தான் அவருக்கு தம்பிரான் தோழர் என்ற பெயர்
வந்தது.

இறைவனைக் குழந்தையாக நினைத்து வழிபாடு செய்வது 'வாத்ஸல்ய பாவம்' பாலமுருகன், பாலகிருஷ்ணர்,குழந்தையேசு என தெய்வத்தை பால்ய உரு வில் வைத்து மகிழ்வது.

இறைவனை காதல் தலைவனாகவும்,தலைவியாகவும் தன்னை காதலியாக வும், காதலனாகவும் உரிமை எடுத்து எண்ணி பக்தி செலுத்துவது மதுரபாவம். ஆண்டாள், மீரா, அபிராமி பட்டர் போன்றவர்கள் இந்த முறையில் தான் வழி பட்டனர்.

இங்கே கண்ணகி தன் கணவன் கோவலனுக்காக மதுரையை தீக்கு இரை யாக் கியதும்.தன் அன்புக் கணவன் சத்தியவானுக்காக சாவித்திரி விண்ணுலகு வரை சென்று போராடியதும்.

முகலாயப் பேரழகி மும்தாஜுக்காக மாமன்னர் ஷாஜகான், அவள் நினைவாக
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை கட்டியதும்.

காதலுக்காக அல்ல காதலிக்கு அடுத்த கட்டமான கணவன் மனைவிக்கும்,
மனைவி கணவன் மீதும் வைத்திருந்த மாறாத அன்பின் வெளிப்பாட்டின் உரிமை போராட்டம்.

லைலா - மஜ்னு

பாரசீக நாட்டின் ஒரு அழகிய கிராமத்தில் கயஸ் , லைலா பள்ளியில் பயிலும் போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு நாள்பட நாள்பட அது காதலாக மாறியது.
ஏழையான கயஸ்சை காதலிப்பதை அறிந்த பெற்றோர் லைலாவின்படிப்பிற்கு தடை விதித்து ஒரு செல்வந்தர்க்கு லைலாவை திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்தாலும் கயஸின் நினைவாகவே வாழ்ந்து வந்த லைலா அவ னைத் தேடி பல இடங்களில் அலைந்தாள். கயசும் லைலாவின் நினைவாகவே சித்தபிரமை பைத்தியம் பிடித்து வாழ்ந்து வந்தான்.

அப்படி ஒரு நாள் தன் காதலி லைலாவை தேடிக் கொண்டு சென்ற போது ஒரு
மரத்தடி நிழலில் பெரியவர் ஒருவர் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில்
ஒன்றான தொழுகையை மேற்கொண்டு இருந்தார். லைலாவின் நினைவாக வே சென்று கொண்டிருந்த கயாஸ்  பெரியவர் தொழுகையை கவனியாமல் குறுக்கே சென்றான்.

தொழுகைக்கு இடையூறாக கடந்து சென்றவனை கைதட்டி அழைத்து தொழு கை நிகழ்த்திக் கொண்டு இருக்கும் போது குறுக்கே செல்லக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா,அது குற்றம் (அராம்) அல்லவா என்று கோபமாய் கேட்ட போது, ஏக நாயகனை எண்ணித்தாங்கள் தொழுது கொண்டு இருக்கும் வழிபாடு உண்மையாக இருக்குமானால் நான் குறுக்கே சென்றது தங்களுக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்? மனதை ஒருநிலைப் படுத்தாமல் தொழுவது முறை யல்லவே.

நான் என் இதய நாயகி லைலாவை எண்ணிக் கொண்டு செல்லும் போது உங் களின் தொழுகை எனக்குத் தெரிய வில்லையே என்றான்.

கயஸ் நண்பர்கள், கயஸிடம் லைலா இப்பொழுது வேறு ஒருவனின் மனைவி.
அவளை மறந்துவிட்டு வேறு பெண்ணை மணம் செய்து கொள். நீ ஏன் அனு தினமும் அவள் நினைவாக இருக்கிறாய் என்று நண்பர்கள் அக்கறையோடு சொன்னபோது என் காதலி லைலாவை தவறாகப்பேசாதீர்கள்.அவளை அறிந் து கொள்ள வேண்டும் என்றால் முழுமையாகப் புரிந்து வைத்திருக்கும் என் கண்களால் தான் நீங்கள் பார்க்க வேண்டுமே தவிர, உங்கள் பார்வையால் அல்ல என்று நம்பிக்கையுடன் பேசினான்.

அப்படி இருவரும் காதல் வயப்பட்டு ஒருவரை ஒருவர் தேடிக்கொண்டு வரும்
போது ஒருநாள் இருவரும் சந்திக்க நேர்ந்த போது உண்மைக்காதலின் வெளிப் பாடு அங்கு உணரப்பட்டது.ஒருவர் இல்லை என்றால், ஒருவர் இல்லை என்ற நிலை கயஸ் பைத்தியக்காரனாக மாறி இருந்தான். இதை அறிந்த லைலாவின் பெற்றோரும் கணவனின் வீட்டாரும் லைலாவை வீட்டுக் காவலில் வைத்த னர்.கயசை மறக்க முடியாத லைலா அவனது நினைவாகவே இறந்து போனாள். அதை அறிந்த லைலாவின் மஜ்னுவும் அவள் கல்லறைக்கு வந்து
இறந்தான். மஜ்னு என்றால் பைத்தியம் பிடித்தவர்.

ரோமியோ - ஜூலியட்

ஜென்மப் பகை என்று கீரியும், பாம்புமாக இருந்த இரண்டு குடும்பத்து பிள்ளை கள் தான் ரோமியோவும்,ஜூலியட்டும். மேலை நாட்டின் கலாச் சாரமான ஒரு விருந்து நிகழ்ச்சியில் ஜூலியட்டும் ரோமியோவும் சந்திக் கிறார்கள் பருவங் களுக்காக காத்திருக் காமல் பூக்கும் ஒரே பூ காதல் ஒன்று தானே! இருவருக் குள்ளும் ஒரு புரிந்து கொள்ள முடியாத ஈர்ப்பை உணர் கிறார்கள். இருவரும் இணைந்து நடனம் ஆடுகிறார்கள்.

ஒருவரை ஒருவர் விரும்பி காதல் வயப்படுகிறார்கள். இருவரின் காதலை தங் கள் பெற்றோரிடம் தெரிவிக்கின்ற போது ஜென்ம எதிரியின் வீட்டில் உறவு
வைத்துக் கொள்ள பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். குடும்ப சண்டை
காரணமாக ஒன்று சேர முடியாது என்று ரோமியோவும், ஜூலியட்டும் ரகசிய
பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

திருமணத்திற்கு பின்பு பெற்றோர் ஒப்புதலுடன் இணைந்து வாழ அவரவர் வீட் டிற்கு திரும்பி இருக்கிறார்கள்.நாட்கள் உருண்டோடு கிறது. ரகசிய திருமணம் ஜூலியட்டின் சகோதரனுக்கு தெரிகிறது. ரோமியோவை வீணாக சண்டைக்கு அழைக்கின்றான். அந்தச் சண்டையில் ரோமியோவின் உயிர் நண்பன் கொல் லப் படுகிறான்.ஆத்திரத்தில் ரோமியோ ஜூலியட்டின் சகோதரனை படு கொலை செய்கிறான்.இதன் தண்டனையாக ரோமியோ நாடு கடத்தப்படு கிறான்.

இந்நிலையில் மாதங்கள் கடந்து ஓடுகிறது. ஜூலியட்டின் பெற்றோர் திரு மணம் செய்ய முயற்சிக்கின்ற போது தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று மறுதலிக்கிறாள்.இருப்பினும் ஜூலியட்டின் பெற்றோர் திரும ணத்திற்கு கட்டாயப்படுத்து கிறார்கள். அப்போது தனக்கும் ரோமியோவிற்கும் ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது என்று சொல்கிறாள்.இருப்பினும் அவர் கள் பிடிவாதமாய் இருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் தங்களுக்கு திருமணம் செய்து வைத்த பாதிரியாரிடம்
உதவி நாடுகிறாள். பாதிரியாரும் ஒருயோசனை சொல்கிறார்.அதன்படி மயக்க மருந்தை சாப்பிட்டு இறந்து விட்டதாக நடிக்கச் சொல்கிறார்.மேற்படி நாடகத் தை விவரித்து பாதிரியாரும் ஜூலியட்டும் கடிதம் ரோமியோவிற்கு அனுப்பு கிறார்கள். அக்கடிதம் அவனை சென்று சேர்வதற்கு முன் ஜூலியட் இறந்து விட்டாள் என்ற செய்தி உறவினர் மூலமாக அறிகிறான். ரோமியோ,ஜூலியட் இல்லாத வாழ்வை நினைத்துப் பார்க்க முடியாமல் விஷம் வாங்கிக் கொண்டு ஓடி வருகிறான்.

ஜூலியட்டின் பெற்றோர்களும்,உறவினர்களும் ஜூலியட் இறந்து விட்டதாகக் கருதி சவப்பெட்டியில் வைத்து நல்லடக்கம் செய்ய இருந்த நிலையில் ரோமி யோ அங்கு வந்து சவப்பெட்டிக்கு முன்நின்று நீ இல்லாத உலகில் நான் வாழ்ந்து என்ன பயன் என்று அவசரப்பட்டு விஷம் அருந்தி இறந்து போனான். பாதிரியாரின் திட்டப்படி சவப் பெட்டியில் இருந்து மயக்கம் தெளிந்து ஜூலியட் தன் நினைவாக ரோமியோ விஷம் அருந்தி இறந்துவிட்டான் என்ற செய்தி அறிந்து ரோமியோ சென்ற இடத்திற்கு தானும் செல்ல விரும்பி அவன் இல்லாத உலகில் வாழவிரும்பாமல் அவன் குடித்து மீதி இருந்த விஷத்தை அருந்தி ஜூலியட்டும் இறந்து போகிறாள்.

இதை அறிந்த ஊர் மக்கள் உற்றார்உறவினர்கள் கூடினார்கள்.பாதிரியார் நடந்த அனைத்தையும் எடுத்துச் சொன்னார். இருகுடும்பமும் தங்களின் பகையை மறந்து நண்பர்களாக மாறினர்.ரோமியோஜூலியட் நினைவாக சிலை வைத்து காதலை வாழவைத்து வருகின்றனர்.
அனார்கலி-சலீம்

மொகலாயப் பேரரசர் அக்பர்-ஜோத்பாய் இணையரின் மகன் தான் இளவரசர்
சலீம். சிறுவயதிலேயே அனைத்து கலைகளையும் கற்றுக் கொண்டு மன்னர்
அக்பருடன் பல போர்க்களங்கள் செல்கிறார். பின் தனியாக பல ராஜ்ஜியங் களை வென்று பேரரசை உருவாக்கினார். இவ்வேளையில் தான் சலீம் மன்னர் அக்பரால் அரண்மனைக்கு திரும்ப அழைக்கப்படுகிறார்.

அரண்மனை விழாக்கோலம் பூணுகிறது.இளவரசரை வரவேற்க ஆடல்பாடல் கள் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்படி நடனமாடி இளவரசரை சிலிர்க்க வைத்த
சிங்காரச் சிலை தான் அனார்கலி.அனார்கலி மொகலாயப் பேரரசர் அக்பரின் அரண்மனையில் அந்தப்புரத்தின் பணிப் பெண்ணாகவும்,நாட்டியப் பேரொளி யாகவும், பல சிறப்புகளும் பன்முக ஆற்றலும் பெற்றவள். இவள் பெயர் நதிரா. இவளே அனார்கலியாக அழைக்கப்பட்டாள்.

முதல் பார்வையிலேயே தன்னை அனார்கலியிடம் பறிகொடுத்தான் சலீம்.
அவள் நினைவாகவே இருந்து அவளை அடிக்கடி சந்தித்து உரையாடல் செய் தான் காலப்போக்கில் காதலாக மாறியது. பாரம்பரியத்தைக் காரணம் காட்டி சாதாரண நடனப் பெண்ணை பட்டத்து ராணியாக ஆக்க, அக்பரும், மகாராணி யும் அவர்கள் காதலை நிராகரித்து அனார்கலியை சிறையில் அடைக்கிறார் கள்.

விளைவு காதலுக்காக தன் தந்தை மீதே யுத்தத்தை தொடுத்து சிறை வைக்கப் பட்டிருந்த அனார்கலியை நண்பனின் உதவியுடன் விடுவிக்கிறான்.அக்பரின் பெரும் வலிமைக்கு முன்பு நிற்க முடியாமல் தோற்று ஒடுகிறான்.அக்பர் தன் பேரரசுக்கு எதிராக கலகம் விளை வித்ததற்காக சலீமை சிறைபிடித்து மரண தண்டனை வழங்குகிறார்.

தூய்மையான காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்படும் போது தான் சமூகத் தில் எதிர்ப்பு அலைகள் உருவாகி காதலை வாழவைக்க முற்படுகிறது. நாட்டு மக்கள் காதலுக்காக ஒன்று கூடுகிறார்கள். மரண தண்டனையைத் திரும்பப் பெற வேண்டுகோள் விடுக்கின்றனர். மன்னர் மறுபரிசீலனை செய்து தன் சிறை கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்த அனார்கலியை திரும்ப ஒப்படைத்தால்
மன்னிப்பு வழங்கப்படும் என்றார்.

அதற்கு உடன்பட மறுக்கிறான் சலீம்.தனக்காக மரண தண்டனையை ஏற்க
துணிந்துவிட்ட சலீமைக் காப்பாற்ற அனார்கலி மன்னரிடம் சரணடைகிறாள்.
மரண தண்டனை மாற்றி அமைக்கப்படுகிறது. சலீமுக்கு பதிலாக அனார்
கலிக்கு மரண தண்டனை வழங்கப் படுகிறது. தண்டனை அனார்கலியை
உயிருடன் நிற்க வைத்து கல்லறை எழுப்ப உத்தரவு இடுகிறார். தண்டனை
நிறைவேறுவதற்கு முன் அனார்கலியின் கடைசி விருப்பத்தை கேட்கிறார்கள்.

அனார்கலியும் ஒருநாளாவது சலீமின் மனைவியாக வாழ வேண்டும் என்ற
ஆசையைச் சொல்கிறாள். இதற்கு அக்பர் பாதுஷா ஒரு நிபந்தனையுடன் ஒப்புக்கொள்கிறார். அந்த நிபந்தனை முதலிரவுகொண்டாட்டம் முடிந்து, விடியற்காலைப்பொழுதில் ரோஜாபூவில் மயக்க மருந்தைத் தெளித்து சலீமை
மயங்க வைத்துவிட்டு தண்டனையை நிறைவேற்றும் இடத்திற்கு வர
வேண்டும் என்கிறார்.

அன்று நள்ளிரவுக்கு பின் சலீம் மயக்கமுற்ற தகவல் கிடைத்த உடன் மன்ன ரின் மெய்க்காவல் படையினர் அனார்கலியை அழைத்துச் சென்று உயிருடன் கல்லறை கட்டி விடுகின்றனர். மயக்கம் தெளிந்த சலீம் இத்தகவலை அறிந்து கொண்டு அவனும் அந்தக் கல்லறைக்கு சென்று இறந்துவிட்டதாக சொல்லப் படுகிறது.

அழிந்து போகும் அந்தஸ்திற்காக அழியாத காதலை சமாதியாக்கியது காலம். அனார்கலி என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை ஒன்று லாகூரில் இருப்ப தும், அது இந்த அனார்கலி தானா என்பதும் வினாக் குறியானது. காரணம் மொகலாயப் பேரரசின் அனார்கலி - சலீம்ஷா காதல் காவியம் கற்பனை என் றும் சொல்லப் படுகிறது.

அம்பிகாபதி - அமராவதி

கலிங்கம் வரை படை நடத்தி வாகை சூடிய குலோத்துங்க சோழனின் மகள் இளவரசி அமராவதியும், கம்பனின் மகன் அம்பிகாபதியும் கல்வி பயில கம்பன்
வீட்டிற்கு வந்து சென்ற போது முகம் பார்த்து பழகிய நட்பு ஆயிரம் முகங்கள்
கடந்து சென்றாலும், ஒரு சில சந்திப்புகள் மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக் கும்.கம்பன் இல்லா நாட்களில் அம்பிகா பதியிடம் காதலைக் கற்றுக் கொண்டாள்.

இருவரின் காதலை அறிந்த மன்னன் குலோத்துங்க சோழன் அம்பிகாபதியை
குற்றவாளி கூண்டில் நிறுத்தியதன் விளைவு தான் தன் தந்தை இல்லாத நாட் களில் கல்வியை கற்பித்ததாக வாதாடுகிறான். இருப்பினும் மன்னரும்
மந்திரி பிரதானிகளும் அம்பிகாபதியை சோதித்தனர். உன் இதயத்தில் காதல்
இல்லை என்றால் சிற்றின்பம் கலக்காமல் நூறு பாடல்கள் பாடினால் தண்ட னையில் இருந்து விடுவிக்கப் படுவாய் என்று ஒட்டக்கூத்தர் போட்டியை அறிவிக்க, அம்பிகாபதி சவாலை ஏற்றுக் கொள்கிறான்.

கடவுள் வாழ்த்துடன் நூறு பாடல்களை பாடி முடிக்க அம்பிகாபதி அவளை ஆரத்தழுவிக் கொள்கிறான். கடவுள் வாழ்த்தை சேர்க்காமல் 99 பாடல்கள் தான் பாடப்பட்டது என மன்னன் சதி செய்து தீர்ப்பு வழங்கி அம்பிகாபதிக்கு மரண தண்டனை விதிக்கிறான். மரணக் கொட்டடியில் இறந்து கிடக்கும் அம்பிகாபதி மார்பில் விழுந்து அமராவதியும் அதே இடத்தில் இறந்து போனாள்.

தொடரும்....
நன்றிகள் 

கட்டுரையாளர் :- 
மல்லை சத்யா

வெளியீடு :- சங்கொலி

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படுத்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment