Thursday, August 15, 2013

விடுதலை நாள் சிந்தனைகள்

நாட்டு விடுதலைக்கு முன்பே விடுதலை பெற்ற இந்தியா பற்றி கனவு கண்டு, “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று” கூத்தாடி மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார் பாரதியார்!

ஆனால், இந்த நிலையில் இருந்து ராஜாஜி முற்றிலும் மாறுபட்டவராக இருந் தார். அப்போது வேலூர் சிறையில் விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தண் டனை அனுபவித்துக் கொண்டு இருந்தார். “சுயராஜ்யம் கிடைத்ததும், அது சிறந்த அரசையும், நிறைந்த மகிழ்ச்சியையும் உடனே மக்களுக்குத் தந்து விடாது. தேர்தல் ஒழுங்கீனம், ஊழல், அநீதி, பணபலத்தின் கொடுங் கோன்மை, நிர்வாகத் திறமையின்மை ஆகியவை மூலம் மக்கள் வாழ்க்கை நரகமாகும். முன்பு இருந்த வெள்ளையர் ஆட்சியே மேலானது என்று மக்கள் நினைக்கும் நிலை வரும்.
“அவமானத்தில் இருந்தும், அடிமைத் தனத்தில் இருந்தும் விடுதலை” என்ற
ஒன்றே, நம் மக்களுக்கு உடனடியாகக் கிடைக்கவிருக்கும் ஒரே நன்மை” என்று அப்போது தன்னுடைய சிறைக்குறிப்பில் எழுதி வைத்தார் ராஜாஜி!

தொலைநோக்குப் பார்வையுடன் ராஜாஜி அன்று எழுதியது, 65 ஆண்டுகள்
உருண்டோடிய பின்னரும் உயிர்த்து இருக்கிறது என்பதுதானே கசப்பான
உண்மை.

15.08.1947 நாடு விடுதலை பெற்ற மகிழ்ச்சியை தலைநகர் டெல்லி, விழா எடுத் துக் கொண்டாடிக் கொண்டு இருந்தது. டெல்லி செங்கோட்டையில் கோலா க லமாய் நடைபெற்ற கேளிக்கையில் ஆங்கில அரசின்கடைசிப் பிரதிநிதியான மவுண்ட் பேட்டன் பிரபுவும், அவருடைய துணைவியாரும் கலந்து கொண்டு,
இந்தியத் தலைவர்களுடன் விருந்தினை சுவைத்துக் கொண்டிருந்தார்கள்.

கண்ணீரும், செந்நீரும் சிந்தி, விலை மதிப்பற்ற உயிர்களைப் பலி தந்து, போராடிப் பெற்ற விடுதலை நாளை கொண்டாட முடியாத அளவிற்கு நாட்டு
நிலைமைகள் அப்போது காணப்பட்டன.மதக்கலவரம் வெடித்துக் கிளம்பிய தால் கலவர பூமியாக வட இந்தியா உருமாறியிருந்தது.

நவகாளியில், கல்கத்தாவின், பெலிய கட்டா சாலையில் 151 ஆம் எண்ணுள்ள
ஏழை முஸ்லிம் தோழனின் குடிசை வீட்டில்,அடைக்கலம் தேடி வந்த அப்பாவி மக்களுக்கிடையே, கண்ணீரோடும், கவலையோடும் காந்தியார் படுத்திருந் தார். அப்போதும் உண்ணா விரதத்தில்தான் இருந்தார்.

கோபத்துடனும், விரக்தியுடனும் இருந்த காந்தியார் சுதந்திர தினச் செய்தி கேட்டு சந்திக்க வந்திருந்த செய்தியாளர்களிடம் பதில் அளிக்கவே தயங்கி னார். “சிதைந்த கனவுகளோடு, சுதந்திர இந்தியாவின் சிற்பி” என்ற தலைப்பில் காந்தியாரின் உண்ணாவிரதத்தையும், விடுதலைநாள் விழா கொண்டாட்டங் களையும் ஒப்பிட்டு மறுநாள் செய்தித்தாள்களில் செய்திகள் படங்களுடன் வெளிவந்தன.

“வெகு நாளுக்கு முன் விதியோடு ஓர் ஒப்பந்தம் செய்தோம்; உலகம் உறங்கும்
வேளையில் இந்தியா விழித்து எழுகிறது” என்று தலைமை அமைச்சர் நேரு,
வரலாற்றுச் சிறப்புமிக்க உரையைத் தொடங்கினார். விரைவில் இந்தியா ஒன்றுபடும் என்று உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் நம்பிக்கையுடன்
பேசியதை ‘ஸ்டேட்ஸ்மென்’ ஏடு தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.

இவை எல்லாம் நம் நினைவில் நிழலாடுகிறபோது, நாட்டு விடுதலை குறித்து, காந்தியார் கண்ட கனவுகளும் நம் நெஞ்சில் கடல் அலைபோல் ஓடிவந்து எதிரொலிக்கின்றன. 

“உண்மையான சுயாட்சி என்பது ஒரு சிலர் பதவியில் அமர்வது அல்ல; அதிகா ரத்தில் இருப்போர் தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினால் அதை எதிர்க்கும் திறனை எல்லா மக்களும் பெறுவதே சுயாட்சி ஆகும். சுயாட்சி என் பது அதிகார வர்க்கத்தைக் கட்டுப்படுத்தவும், நெறிப்படுத்தவும், தேவையான அறிவை பொதுமக்களுக்குக் கற்பிப்பதாகும்” என்று தன் யங் இந்தியா (29.1.1925) இதழில் எழுதி, சுயாட்சிக்கு இலக்கணம் வகுத்தார் அன்று காந்தி!

காந்தியார் வகித்த நெறிப்படி இந்தியாவில் மக்களாட்சியை அவரது சீட கோடி கள் நடத்தவில்லை என்பதற்கு இன்றைய நாட்டு நிலையே சான்றளிக்கும்.

“மாவட்ட காங்கிரசு செயலாளர் ஒருவர் சரிவர கணக்கு வைத்துக் கொள்ளாத
தால் ஆயிரம் ரூபாய் குறைவு ஏற்பட்டது.தென்னிந்தியாவில் இருந்து மன் னிப்புக் கோரி சிபாரிசுக் கடிதம் பெற சபர்மதி ஆசிரமம் வந்திருந்த அத்தொண் டருக்கு, காந்திஜி கடிதம் தரவில்லை. ரயில் கட்டணமும் தரவில்லை. பொதுச் சொத்துக்கு சரியான கணக்கு வைத்துக்கொள்ளாத அவர் நடந்தே செல்லட்டும் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்” என்று காந்தியாரின் நேர்மைத்திறன் குறித்து ஆனந்தவிகடன் (20.8.2008) ஏடு அரிய தகவலை வெளியிட்டது.

இதனைப் போலவே மற்றும் ஓர் செய்தி.காங்கிரசு கட்சியின் பொன்விழா 28.12. 1935 அன்று காமராசர் பிறந்த விருதுநகரில் மகிழ்ச்சித் திருநாளாகக் கொண்டா டப்பட்டது. மாநாட்டின் முடிவில், வரவு செலவு கணக்கை கவனித்தபோது, 67 ரூபாய் 3 அணா கூடுதலாக செலவானது தெரியவந்தது. காங்கிரசு தலைவர் காமராசர், விழாவின் பொறுப்பாளரான முருகு. தனுஷ்கோடி அவர்களிடம் இதற்காக கடுமையாக நடந்து கொண்டார்; பொதுப்பணத்தை சரியாக பொறுப் பாகக் கையாள வேண்டும். நான் அரை மணி நேரம் அவகாசம் தருகிறேன். சரியான கணக்கை காட்டுங்கள் அல்லது செலவான தொகையைக் கட்டுங் கள்” என்று கண்டிப்புடன் அறிவுறுத்தி, பணத்தைப் பெற்ற பிறகே அமைதி யானார் காமராசர்.

காமராசரும், காந்தியாரும் அறிவுறுத்திய “அரசியலில் நேர்மை, பொதுவாழ் வில் தூய்மை” என்ற நம் முழக்கங்களை ‘கதர் சட்டைகள்’ காற்றில் பறக்க விட்டதால் தான், முந்திராவில் தொடங்கி, அலைக் கற்றை வரை ஊழல்கள் தொடர் கதையாய் நாள்தோறும் தொடர்கின்றன.

“காங்கிரசிலே காணப்படும் ஊழலே, பலாத்காரம் உள்ளே நுழைந்துவிட்டது
என்பதன் அறிகுறியாகும். காங்கிரசு மகாசபை, எந்த நியாயமான உரிமையை
யேனும் மிதித்துத் தள்ளுமானால் அந்த நோயே, அதன் பெருமையையும்
செல்வாக்கையும் அழித்துவிடும்.காங்கிரசு கட்சி மக்கள் நலத்திற்கு விரோத மாக என்று நடக்குமோ, அன்று அது தானாகவே அழிந்துபோகும்” என்ற காந்தி யாரின் எச்சரிக்கையை (ஹரிஜன் 12.7.1946) ஆசை வெட்கம் அறியாது என்ப தைப் போல, அவரது கட்சிக் காரர்கள் அலட்சியப் படுத்தினார்கள். ஊழலில் திளைத்தார்கள்.

நரசிம்மராவ் தலைமை அமைச்சராக பொறுப்பேற்று இருந்தபோது, தகவல்
தொடர்பு அமைச்சராக சுக்ராம் நியமிக்கப்பட்டிருந்தார். தொலை தொடர்புத் துறையில் தொலைபேசிக் கருவிகளை வாங்கியதில் இமாலய ஊழலை அவர் செய்தார். ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் அமைச்சரின் வீட்டை சோதனை செய்தபோது, படுக்கைவிரிப்பு முதல் தொட்ட இடங்களில் எல்லாம் கள்ளப் பணம் கத்தை கத்தையாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்கள். அந்தத் துறையையே ஒட்டுமொத்தமாக தனியாருக்கு கூறுபோட்டு கூவி விற்க சோனியாவின் அரசு செயலில் இறங்கிவிட்டது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்தி ‘சத்தியாகிரகம்’ செய்தவர்களின்
வாரிசுகளே, வெளிநாட்டுக் காரர்களை விண்ணப்பம் இட்டு அழைத்து இந்தி யாவை விலைபேசும் செயலில் ஈடுபட்டு, அந்நிய முதலீடுகளுக்காக ஆலாய்ப் பறக்கிறார்கள்.

“நான் கனவு காணும் சுயராஜ்யம், ஏழை மனிதனின் சுயராஜ்யமே. ஒரு பணக் காரன் அனுபவிக்கும் வாழ்க்கைத் தேவைகள் எல்லாம் ஏழைக்கும் கிடைத்தாக வேண்டும். இவற்றுக்கான சூழல் கனியாதவரை நமக்குப் பரிபூரண சுயராஜ்யம் கிடைத்துவிட்டதாக நான் நம்ப மாட்டேன். நான் விரும்பி எதிர் நோக்கும் ஜன நாயகத்தில் அனைவருக்கும் சரிசமமான சுதந்திரம் இருக்கும். ஒவ்வொரு வரும் தமக்குத் தாமே எஜமானராக இருப்பார்” என்று காந்தியார் தம் உள்ளக்கி டக்கைகளை கொட்டி அளந்து செயல்திட்டமாக அறிவித்தாரே..

பசித்துக் கிடப்பவர்க்கு உணவு,வளர்ச்சியைப் பெறுவதற்கான வாய்ப்பு விரை வில் கிடைப்பதற்கேற்ப அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப் பட வேண் டும் என்ற அரசியல் நிர்ணய சபையில் பிரதமர் நேரு, தொடக்க உரையாற் றி னாரே...

இவை எல்லாம் ஏட்டுச்சுரைக்காயாகத் தானே இன்றைக்கும் இருக்கிறது.

உலகிலேயே அதிகச் செலவில் கட்டப்படும் வீடு என்ற பெருமைக்குரிய
இல்லத்தை தொழிலதிபர் முகேஷ் அம்பானி மும்பை நகரில் கட்டிக் கொண்டி ருக்கிறார். எட்டாயிரம் கோடி ரூபாயில் இந்த வீடு கட்டப்படுகிறது. 27 மாடிகள் கொண்ட இந்த வீட்டில் 2 மாடிகளில் சாப்பாட்டு அறைகள், 3 மாடிகளில் பொழு துபோக்கும் அறைகள், 3 மாடிகளில் மெக்கானிக்குகள் தங்கும் அறைகள், 2 மாடிகளில் தோட்டங்கள், 3 மாடிகளில் உடல்நலத்திற்கான வசதிகள் கொண்ட அறைகள், பால்கனிகள் ஒவ்வொன்றிலும் தொங்கும் தோட்டங்கள் என சொகுசு மாளிகையாய் அம்பானியின் அரண்மனை எழுந்து நிற்கிறது. அதே மும்பை நகரில் சாக்கடை ஓரத்தில், கொசுக்கடிக்கு நடுவில் விலங்குகளாய் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் 40 விழுக்காட்டு ஏழை எளிய மக்கள் “அம்பானி மாளிகை”யை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.

இந்தியாவில் 17 ஆண்டுகள் ஜவகர்லால் நேரு ஆட்சி செலுத்தினார். நேருவின்
பிரிய மகள் இந்திரா 16 ஆண்டுகள் ஆண்டார். இந்தியாவின் தவப்புதல்வன்
ராஜீவ்காந்தி 5 ஆண்டுகள் ஆண்டார்.ராஜீவின் அன்பு மனைவி சோனியாவின்
ஆட்சி மன்மோகன் முகமூடியுடன் 10 ஆண்டுகளாய் நடைபெற்று வருகிறது.
48 ஆண்டுகளாய் இவர்களின் குடும்பம் தான் ஆள்கிறது. ஆனால் டாட்டா,
பிர்லாக்கள் அடையும் வளர்ச்சியில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட அடித்தட்டு
மக்களுக்கு கிடைப்பதில்லையே!

நம் நாட்டுப்பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்த, பொருளியல் அறிஞர் அருண்சென் குப்தா தலைமையிலான குழு, நாள் ஒன் றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கும் ‘அன்னக் காவடிகள்’ 80 கோடி மக்கள் பாரதமணித் திருநாட்டில் வாழ்வதாக அறிக்கை தந்துள்ளதே! கிராம ராஜ்யம் பற்றி காந்தி கனவு கண்டாரே, அங்குதான் 75 விழுக்காட்டு பஞ்சைப் பராரிகள் பரிதவிக்கிறார்கள் என்று அந்தக் குழு படம் பிடித்துக் காட்டியதே!

மனித வள மேம்பாட்டில் உலகில் 196 நாடுகளில் நாம் 127 ஆவது இடத்தில்
தொங்கிக் கொண்டிருக்கிறோம். 40 விழுக்காட்டினர் இன்னமும் எழுதப்படிக்கத் தெரியாத கைநாட்டுப் பேர்வழிகள்.

ஆறுவயது முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இலவச - கட்டாயக் கல்வி யை அரசமைப்புச் சட்ட 45 ஆவது நெறிமுறைகளின்படி பத்தாண்டுகளில் அளிப்போம் என்று ஆட்சியாளர்கள் அறிவித்தார்களே - ஆண்டுதோறும் நிதி நிலை அறிக்கை, ஐந்தாண்டு திட்டங்கள், திட்டக்குழு பணிகள் எல்லாம் நடக் கிறது. ஆனால், விளைவு என்ன? எண்ணெய் செலவானதே தவிர பிள்ளை பிழைக்கவில்லை என்ற கதைதானே.

“ஒரு மனிதன் - ஒரு வாக்கு நம் ஜனநாயகத்தில் வந்துவிட்டது. ஒரு மனிதன் - ஒரே மதிப்பு என்று வரும்?” என்று அரசியல் நிர்ணய சபையின் நிறைவுக் கூட்டத்தில், டாக்டர் அம்பேத்கர் கேள்வி எழுப்பினாரே, அதற்கு இன்று வரை தீர்வு கிடைக்க வில்லையே.

நமது கல்வியின் நிலை குறித்து ஆய்வு செய்ய அரசு நியமித்த ஆச்சார்யா குழு வின் அறிக்கை, “நமது கல்வி அமைப்பின் மைய அம்சம் அதனுடைய இரட் டைத் தன்மை ஆகும். பணம் படைத்தவர்களுக்கு உலகத்தரம் மிகுந்த கல்வி யும், அடித்தட்டு மக்களுக்கு பயனற்ற, தரம் குறைந்த கல்வியும்தான் கிடைக் கிறது” என்று குறிப்பிட்டதை கவனித்தால், அம்பேத்கரின் அறிவார்ந்த வினா வுக்கு அர்த்தம் நமக்கு விளங்குகிறது.

சுதந்திரம் கிடைத்த பின் வைஸ்ராயின் மாளிகையை மக்களுக்குப் பாடுபடும்
மருத்துவமனைகளாக மாற்றி அமைக்க வேண்டும் என்று காந்தியார் கருத்து உரைத்தார்.ஆடம்பரமான பகட்டு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு,
எளிமையான வீடுகளில் அமைச்சர்கள் குடியேற வேண்டும். மக்களின் வரிப் பணத்தை ஊதாரித் தனமாக அரசு செலவழிக்கக் கூடாது என்று காந்தியார்
வலியுறுத்தினார்.

ஆனால், இன்றைக்கு என்ன நிலைமை?

இந்த நாட்டின் முதல் குடிமகன் என்ற பெருமைக்குரிய குடிஅரசுத் தலைவர் 360 அறைகள் கொண்ட பிரம்மாண்ட மான மாளிகையில்தானே வாழ்ந்து கொண்டு பரிபாலனம் செய்கிறார்.

“ஆட்டுத்தாடியைப் போல நாட்டுக்குத் தேவையற்றது கவர்னர் பதவி” என்று
அறிஞர் அண்ணா குறிப்பிட்டாரே, அந்த ஆளுநரின் இல்லம் கிண்டியில் 156
ஏக்கர் பரப்பில் மாபெரும் மாளிகையாய் விரிந்து பரந்து கிடக்கிறது. ஆளுநர்
ஆண்டுக்கு ஒரு முறை ஓய்வெடுக்க,உதகையில் 86 ஏக்கர் பரப்பளவில் பூந் தோட்டங்களுடன் கூடிய விருந்தினர் மாளிகை காத்துக் கிடக்கிறது. “கும்பி
எரியுது, குடல் கருகுகிறது, குளுகுளு வாசம் ஒரு கேடா?” என்று வசனம் பேசி யவர்களே, பங்களா வாசிகளாகி விட்டதால் ஏழைகளைப் பற்றிய கவலை
அவர்களுக்கு இல்லை.

கிருஷ்ணா கோதாவரி பள்ளத்தாக்கில், அம்பானியின் எரிவாயு தொழிலுக்கு
பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் குழு இணக்கமாக நடந்து
கொண்டதால் அம்பானி குழுமத்திற்கு ஆண்டுக்கு 26,000கோடி ரூபாய் இலாபம் கிட்டுகிறது என்று எரிசக்தித் துறையின் முன்னாள் செயலாளர் இ.எ.எஸ்.சர்மா எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி இதழில் குறிப்பிட்ட செய்தி, மத்திய அரசு யாருக்காக, யாரால் இயங்குகிறது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது.

விடுதலை பெற்ற 65 ஆண்டுகால நடப்புகளில் ஒரு பானை சோற்றில் ஒரு
சோறு என்பதைப்போல சிறிதளவையே நாம் ஆய்வு செய்தோம். எஞ்சியதை யும் எண்ணினால் பெரும் கவலையும் அச்சமும் துயரமும் நம்மை உலுக்கு
கின்றது.

வந்த சுதந்திரம் நமக்கல்ல என்று பெரியாரும், அண்ணாவும், நம் திராவிட
இயக்கமும் கூறியதன் பொருள் நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாய் இப் போது விளங்குகிறது. எனவே 65 ஆண்டுகளாய் விடுதலை நாளில் அவர்கள் தரும் இனிப்பு மிட்டாயின் சுவை நமக்கு இனிக்கவில்லை. நிலைமையை சீர் செய்து - மறுமலர்ச்சி கண்டு உண்மை விடுதலையை வென்று எடுக்க இந் நாளில் சூளுரைப்போம்.

நன்றிகள்

கட்டுரையாளர் :- ஆ.வந்தியத்தேவன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment