Tuesday, August 13, 2013

அணு உலையில் உற்பத்தியை தொடங்க கூடாது

#மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அணுக்கதிர் வீச்சு என்ற அபாய வளையத்திற்குள் உலகமே சிக்கி இருக்கிறது. உலகில் பல நாடுகள் அணு உலைகளை மூட முடியாமல் அதன் ஆயுள் காலம் 40 ஆண்டுகள் தான் என நிர்ணயித்து இருந்தாலும் பத்து, பத்து ஆண்டுகளாக நீட்டித்துக்கொண்டே செல்கின்றன. தற்போது உலகம் முழுவதும் 440 அணு உலைகள் உள்ளன.
அணு உலை கழிவுகளை என்ன செய்ய போகிறார்கள் என்பது தான் பிரச்சினை. அணு உலைகளை மூடினாலும் அதன் கழிவுகளை கடலில் கொட்டினாலும், பாதாளத்தில் புதைத்து காங்ரீட் தளம் போட்டு மூடினாலும் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு அதன் கதிர் வீச்சு தன்மை மாறாது. மத்திய அரசு கூடங்குளம் அணு உலை பூங்காவை அமைத்தே தீருவோம் என்று கூறி வருகிறது.



கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்பட தொடங்கினால் தென் தமிழகமே சுடுகாடாக மாறும் அபாயம் உள்ளது. அப்படி ஒரு நிலை வந்து விடக்கூடாது என்பதற்காக தான் இடிந்தகரை பகுதி மக்கள் தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் 730 நாட்களாக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இந்தியாவில் இதுபோன்ற அறவழி போராட்டம் இதுவரை நடந்தது இல்லை. இந்த அறப்போராட்டத்திற்கு 2 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஒருவர் காவல் துறை துப்பாக்கிசூட்டில் பலியான அந்தோணி ஜான். இன்னொருவர் கடற்கரையில் பறந்த சிறிய விமானம் மோதி இறந்த சகாயம்.

இவர்களது உயிருக்கு என்ன விலை? மே 6-ந் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அணு உலை போராட்டக்காரர்கள் மீது தமிழக அரசு போட்ட வழக்குகளையும் உடனே திரும்ப பெற வேண்டும் என்ற நிபந்தனையும் கூறப்பட்டு உள்ளது. ஆனால் தமிழக அரசு இன்னமும் வழக்குகளை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வில்லை.

அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்க கூடாது, தொடங்கி விட்டு நிறுத்தக்கூடாது. பின்னர் நிறுத்தினாலும் அதனால் ஏற்படும் அழிவுகளை தடுக்க முடியாது என்று தான் விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இப்படி ஒரு நிலை தமிழகத்திற்கு வரக்கூடாது என்பதற்காக தான் கூடங்குளம் அணு உலையில் உற்பத்தியை தொடங்க கூடாது என்கிறோம்.

இவ்வாறு வைகோ கூறினார்.

No comments:

Post a Comment