Friday, August 16, 2013

காதலும் வீரமும் அகமும் புறமும்!

காதல் ஒழிக

ரோமை தலைநகராகக் கொண்ட இத்தாலி நாட்டிற்கு சிந்து நதியும் கங்கை நதி யும் பாய்ந்தோடும் ஒரு கலாச்சார நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் அதிகார பீடத்தை அலங்கரித்த செல்வச்செருக்குள்ள வீட்டுப் பிள்ளை மேல்படிப்பிற் காக இத்தாலி செல்கிறான்.ஆகாயத்தில் எல்லையில்லாமல்பறந்திட வேண் டும் என்று விமானியாக பயிற்சி எடுத்தவர் இத்தாலி நாட்டின்ஓட்டலில் அங் கிருந்த பணிப் பெண்ணிடம் இதயத்தைப் பறிகொடுக் கிறான். காதல் கனிந்து திருமணம் கை கூடியது.

இத்தாலி பணிப்பெண் அவன் நாட்டிற்கு மணப் பெண்ணாக வந்த அதிர்ஷ்டம்
ஆட்சி பீடத்திலிருந்த அவனது அன்னைக்கு தொலைநோக்கு சமூக பார்வை ஆளுமை சர்வதேச நாடுகளின் மதிக்கத்தக்க தலைவராக உயர்ந்து இருந்தார். தீவு நாட்டில் உரிமை மறுக்கப்படும் தொன்மையான இனமக்களுக்கு உதவு வதற்கு அரசியல் நடவடிக்கை பயனற்றுப் போனதால் அவ்வின இளைஞர் களைத் தேர்வு செய்து போர் யுக்திகளும் ஆயுதப் பயிற்சியும் தந்து இராணுவ
உதவிகளையும் செய்து அவர்களின் இழந்த உரிமைகளைப் பெறுகின்ற சூழலை உருவாக்கித் தந்தார்.

நன்றிக் கடனாக அம்மக்கள் அவரை அன்னை என்று அழைத்தனர்.இவ்வேளை யில் எதிர்பாராத விதமாக ஒருவிபத்தில் அன்னை மரணம் அடைகிறார். அதன் மூலம் அவன் அந்நாட்டின் தலைமை பீடத்திற்கு வருகிறான்.

அனுபவம் இல்லாமை. அதிகாரம் கண்ணை மறைக்க அண்டை தீவு நாட்டுப் பிரச்சினையில் தலையிட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறான். தன் நாட்டு படை கொண்டு வேற்று நாட்டு மக்களை அழிக்கிறான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை போன்று ஒரு விபத்தில் அவனும் இறந்து ஒரு துன்பியல் சம்பவம் நடந்தேறுகிறது.

மாவீரன் ஆண்டனியின் ஊர்ஜிதமாகாத மரணத்திற்கே தன்னை மாய்த்துக்
கொண்ட பேரழகி கிளியோபாட்ரா இங்கு உங்கள் நினைவுக்கு வந்தால் நான்
பொறுப்பல்ல. இத்தாலியப் பெண் வாழ்க்கைப்பட்டதால் அடுக்கடுக்காக தொடர் துன்பங்கள் நேரிடுகிறது.காலத்திற்காக காத்திருந்தாள் அந்தக்காரிகை.

காதல் கணவனின் குடும்ப பாரம்பரியம் கணவனின் நலன் விரும்பிகளை
சாதுர்யமாக அவர்களை தலையாட்டி பொம்மைகளாக்கி இருபத்து ஒன்றாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் கணவனின் நாட்டின் அதிகார வர்க்கத்திற்கு திரைமறைவில் தலைமை ஏற்று கணவனின் மரணத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல், தவறான முடிவுகளை மேற்கொண்டு கணவன் செய்த தவறை தானும் செய்து, நாட்டுரிமை கேட்டுப் போராடும் பேராளிகள் மட்டும் அல்லாமல் கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடிகள் லட்சக்கணக்கானவர்களை பல வழிகளில் அழித்தொழிக்க காரணமாக இருந்தாள்.

காலம் ஒரு மருத்துவனைப் போன்றது விதைப்பதற்கு ஒரு நாள் உண்டு என் றால் அதை அறுப்பதற்க்கு ஒரு நாள் உண்டல்லவா. இயற்கை மகத்தானது
சர்வ வல்லமை படைத்தது. பாதிப்புக்கு உள்ளான அப்பாவி பெண்கள் இட்ட
சாபம் வீண் போகாது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
யார் அவள் என்று எண்ணத் தூண்டுகிறதா. இலங்கையுடன் தொடர்பு உள்ள இராமாயணத்தின் நாயகன் இராமனை அயோத்தியை ஆள தகுதி இல்லாத வனாக்கிய கூனியா என்று விடை தேடுவது புரிகிறது.

முட்டுச் சந்தில் உருவாகி ராஜபாட்டையில் நடை போடுவது போன்றுகுடிசை யில் உருவான காதல் ராஜ மாளிகையில் நிறைவு பெற்றது. ராஜபாட்டையில் தொடங்கி சுடுகாட்டில் முடிந்து போகும் காதல் போன்று அரண்மனையில் உருவான காதல் குடிசையில் முடிந்து போனது. இவை நடக்காத நாளோ, நாடோ இல்லை.

விவேகானந்தர்

மேலை நாடுகளில் காதல் என்பது பல பரிமாணங்களில் காணப்படுகிறது. சில
நாட்கள் உடற்பசிக்காக சேர்ந்து இருக்கவே அந்தக் காதல் அவசியப் படுகிறது. அமெரிக்க நாட்டில் சிகாகோ நகரில் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட விவே கானந்தரிடம் அவரின் அறிவையும், ஆற்றலையும் அமைதி தவழும் முகத்தை யும் பார்த்த ஒரு இளம் பெண், உங்களை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்ன போது, விவே கானந்தர் எதற்காக என்னை மணம் செய்ய விரும்புகிறீர்கள் என்று வினவிய போது,உங்களைப் போன்று அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை என்றாள்.

அதற்கு நீங்கள் 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா, நீங்கள் சம்மதித்தால், இந்த கணமே நான் உனக்கு மகனாகிறேன். நீங்கள் எனக்கு தாயாகுங்கள் அம்மா என்ற விவேகானந்தரின் பதிலைக் கேட்டு திகைத்துப் போன அப்பெண்
இந்தியாவின் நாகரிகம் கலாச்சாரத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்டாள்.

ஒரு இந்தியன் தன் தாரத்தைத் தவிர மற்ற எல்லாப் பெண்களையும் தாயாகப்
பார்க்கிறான் என்று உலகத்தின் உச்சியில் நமது கலாச்சாரத்தைப் பதிய வைத் தார். ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த சித்தாந்தத்தை தேசங்கள் கடந்தும் பதிய வைத்த விவேகானந்தரின் நினைவு நாளான 4.7.2013 அன்று மலருக்கு மலர் தாவும் பட்டாம்பூச்சியை போல் அல்லாமல் திவ்யாவுக்காக தன் காதலை இளவரசன் அர்ப்பணித்தான்.

காதலை பற்றி எழுதாத கவிஞனும் இல்லை. காதலைப் பற்றி பாடாத புலவ னும் இல்லை. என்றும் சிரஞ்சீவியாய் வாழும் காதல் பிரிவை விவரிக்கும் சாகா வரம் பெற்ற ஒரு காதல் ஜோடியின் காதல் மொழி.

உன் பிரிய சிநேகிதி எழுதுகிறேன். நீ என்னை விட்டுப் பிரிந்த பிறகு நான் எழு தும் முதல் கடிதம். என் அன்பே நீ ஒரு புதுக்கவிதை இதற்கு இலக்கண மில் லை யார் இல்லை என்றது என்று கேட்காதே! என்னைப் பொறுத்த வரை என்ன எழுதுகிறோமோ அதெல்லாம் புதுக்கவிதை தான். அதுபோல நம் சந்திப்புகள் எல்லாம் சம்பவங்கள் தான்.ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு சரித்திரம்.

நானும் நீயும் பழகிய, உனக்கும் எனக்கும் நேர்ந்த விஷயங்கள், சம்பவங்கள் உயர்தரமானவை. தூய்மை யானவை. இனியவையும் கூட. உன்னுடன் கொண்ட காதலை நினைத்துப் பார்ப்பது சலவையில் இருந்து எடுத்துக் கட்டிய புடவையை போல் இருக்கிறது. தேடினால் முட்கள் அகப்படாது.

ஆனால் எங்காவது ஒரு மூலையில் குத்திக் கொண்டே இருக்கும். அதைப்
போலத்தான் உன்னைப் பற்றிய ஒரு நினைவு வந்து மறைந்தவுடன் எங்கே
மறைகிறது? மற்றொரு நினைவு மறுபடி மற்றொன்று, சிறு விஷயங்கள் சிறிய வையே அல்ல, மகத்தானவை மட்டும் அல்ல, மறக்க முடியாதவையும் கூட.

மரம் சாய்ந்துவிட்டாலும் பூமியில் இருந்து பிரிய மறுக்கும் வேர்களாய் உன்
பிரிவிற்குப் பிறகும் நினைவுகள் மறைய மறுக்கின்றன. மரண சோகம் கூட
எனக்கு ஏற்பட்ட அனுமானம் தான்.பிரிவு சோகத்தையும் கூட சேர்த்துக் கொள். அன்பே அப்போது சொல்லத் தெரியவில்லை. இப்போது சொல்கிறேன் அனுப வித்து அனுபவித்ததைச் சொல்கிறேன்.

உன்னை நான் முதன் முதலாகப் பார்த்த போது என் மனதில் ஒரு புதுவித பர வசம்.ஏன் என்று அப்போது எனக்கு தெரியாது. உன்னிடம் கொண்ட காதலுக்கு நான் நடுமரமாயிருந்தால் நீ அதன் ஆணிவேர். நான் ஆணிவேர் என்றால் அதை வளர்த்த மண் நீ. எல்லோரும் என்னைப் பற்றி ஏதாவது பேசினால் அதைப்பற்றி நீ என்ன நினைப்பாய். யார் என்ன நினைத்தால் என்ன? உன்னை நான் அறிவேன். என்னை நீ அறிவாயா? அதைப்பற்றிப் பேச நினைப்பேன்.

ஆனால் நீ இதற்கெல்லாம் கேள்வியும் நீயே. அதற்கான பதிலும் நீயே அத்து டன் அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி உன்னுடன் காதல் ஏற்பட்ட உடனேயே
எனக்கு வர்ணம் மாறிவிட்டதாக தோழிகள் கூறினார்கள். இது திடீர் என்று
நேர்ந்தது என்று சொல்லமாட்டேன் என்னவனே உன்னைப் புரிந்த பின் மாறிய தாகவே நான் கருதுகிறேன்.

இந்த மாறுதலை வர்ணமாய்ப் பார்க்கின்ற போது தான் காதலின் பரிசுத்த மாண் பை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஐப்பசி இடைவிடாத மழைக் குப்பின் ஆங்காங்கே எங்கெங்கோ ஏதே தோ, வெண்மஞ்சு கூட்டங்கள் கலை வதைப் போல் என்னுள் புதிது புதிதாக பரவசம் இறக்கை கட்டிப் பறக்கிறது. உனது காதலில் எனக்கு ஒரு பரவசம் புரிகிறது. நீண்ட நடைவழியில் சுமை தாங்கி யை கண்டாற் போல்.

நாம் பேச வேண்டியதும், பேசியிருப்பதும் ரொம்ப ரொம்ப. ஆனால் இப்போது
அதற்கெல்லாம் நேரமில்லை.நாளெல்லாம் நிமிடமாக கழிந்து போய்விட்டது போல் இருக்கிறது.காலங்கள் உருண்டோடலாம் உன் நினைவுக் கோலங்கள் அழியப் போவதில்லை. உன் சந்தோஷம் என் சந்தோஷம். ஆனால் அவஸ்தை யின் அஸ்திவாரமே சந்திப்பிலும் அதற்குப் பின் நேரும் பிரிவிலும் தான்.

நீ என்னை மறந்து எத்தனையோ நாட்கள் ஆகி இருக்கலாம். ஆகாமலும் இருக் கலாம். நீ என்னைப் பிரிந்த பிறகு தான் முன்னைக் காட்டிலும் என்னில் அதிகம் ஒன்றிப் போனாய். எனக்கு ஜூரம் அதிகம் ஆகி படுத்தப் படுக்கை ஆகிறேன். இது என்னை விட்டு நீ பிரிந்ததாலா? இனி உன்னுடன் பழைய சுதந்திரத்துடன் பழக முடியுமா? உன் பிரிவுத் துயரத்தால் ஒன்றை உனக்கு நினைவுபடுத்து கிறேன். என் எண்ணங்களை உணர்வுகளை வெளி படுத்த உன் அளவிற்கு ஒரு சினேகிதன் எனக்கு கிடைக்க மாட்டான்.

இது அசாத்தியம் அன்று, சத்தியம்.வாழ்ந்தது போதும். வாழ்ந்தது உனக்காக.என் உயிருடன் கலந்த உன் நினைவுகளைக் கழற்ற நினைப்பேன். அதுவோ பசுமரத் தாணி போல், கழல மறுக்கிறது.நீ எப்படியோ உறவைத்தான் பிரிக்க முடியும். என் உயிரில்கலந்த உன் நினைவைப் பிரிக்க முடியாது. ஆனால் இது நிச்சய மாய் என்னை அறியாமல் உன் மேல் வைத்த காதல் அல்ல என்பதை நான் அறுதியிட்டுக் கூறுவேன்.

நான் என்வாழ்வைக் கண்டு அஞ்சுகிறேன் உன் முடிவில் மனம் திரும்பி என் னை மீண்டும் ஏதாவது ஒரு பாலை வனத்திலோ அல்லது நதிக்கரையிலோ
சந்திக்க நேர்ந்தால், நமது நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்வோம்.இறந்து போய்விட்டால் மறு பிறவியிலாவது சேர்ந்து இருக்க விரும்புகிறேன்.

மனங்கள் ஒன்றை ஒன்று துணை நாடும், இன்பத்தில் வேதனையா வேதனை யில் இன்பமா, உனக்காக உயிர் கொடுத்து உடன்கட்டையும் ஏறத் துடிக்கும் என்றும் உன்னவள்.

பதில் கடிதம்

பிரியமானவளே எனது எழுத்துகள் அனைத்தையும் கவிதைகளாக்கியவளே!
வெப்பம் எங்கேனும் குளிர்விக்குமோ என வினா எழுப்பி எனக்கு உன் இதய
சுவாசத்தால் குளிர்வித்தவளே.

கண்களின் வெப்பத்தை இமைகள் தான் அறிய முடியும். காதலின் மெளனத்தை
காலம் தான் உணர்த்த முடியும்.கவிஞனின் சிந்தனைகளை கவிதைகள் தான் இழுத்து வர முடியும். என் உயிரே என் உள்ளத்தையும் அதன் எண்ணத்தையும் உன் ஒருவளால் தான் புரிந்துகொள்ள முடியும். இது என் மனதில் எழுந்த தற் பெருமையல்ல, உன் மீது நான் கொண்டிருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு.

நாம் இருவருமே ஒருவரை ஒருவர் சிறைச்சாலையில் வைத்துப் பூட்டிவிட்டு
ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கும் சின்னப் பறவைகள்.
இறக்கைகளை எங்கெங்கோ அனுப்பினாலும் அவை இரவில் திரும்புவது நமது இதயக்கூடுகளில் தானே! நினைத்துப் பார்க்கின்றேன்.நேரங்களின் அவச ரத்தை காலம் உணர்ந்து அது காலாண்டர்களை கொன்று விடுகிறது. தனியாக
தத்தளித்துக் கொண்டிருக்கும்,என் விழித்தாள்களில் இமைப் பேனாக்கள் என்ன எழுதுகின்றன தெரியுமா? இரவு அழகானது, நிலவு அதைவிட அழகானது.எல் லாவற்றையும் விட நீ அழகானவள்.உன்னை விடவும் அழகானது உன் காதல்
புரியாத புதிரே நிம்மதியை பறிக்கும் நிம்மதி நீ என்று.

சில நேரங்களில் உண்மைக்கு உறக்கம் வந்துவிடும் அப்போது தான் சந்தடி
இன்றி சந்தேகங்களுக்கு வெளியே வீதி உலா புறப்பட்டு விடும். ஒரு நாள்
உண்மைக்கு உறக்கம் கலையும் போது சந்தேக விலங்குகள் நொறுங்கியே
தீரும். அப்போது சந்திப்பு துளிகள் விழுந்தே தீரும்.

இனியவளே! என் நெஞ்சில் நிறைந்தவளே! உன்னை மறப்பதற்கு நான் துணிய முடியுமென்றால் நிலாவையே வானம் விவாகரத்து செய்துவிடட்டும். மலர் களைத் தென்றல் தூக்கில் போடட்டும், முடியுமா அது?  நமது கடைசி ஒரு துளி மூச்சு முடியும் வரையிலும் என் பெயரை உனது உதடுகளும் உன் பெயரை எனது உதடுகளும் உச்சரித்துக் கொண்டே அல்லவா முடியும்?

நமது வாழ்வில் நாம் சந்தித்து சிந்தித்த எத்தனையோ நிகழ்ச்சிகள் இப்போது என் நெஞ்சில் கரைகளில் அலை அலையாய் வந்து கோலம் போடுகின்றன. அதனைத் தடுத்து நிறுத்தும் சக்தி எனக்கில்லை என்ன செய்வேன். வானம் அழுது ஓய்ந்து கிடக்கும் இன்றைய ராத்தியில் எனது இதயம் உன்னை நினைத் து பலமாக அழுகிறது. அதைத்தேற்ற உன்னைவிட யார் இருக்கிறார் கள்.

உன்னால் மட்டும் பொங்கி வரும் உணர்வு வெள்ளங்களைத் தடுத்து நிறுத்தி விட முடியுமா என்ன? நீ பூவைப்போல, இல்லை இல்லை. அதைவிட மென் மையானவள். இல்லை என்றால் இந்தப் பாறையின் ஒரு சிறு கண்ணசைவு கிடைக்கவில்லை என்பதற்காக பக்கம் பக்கமாக புலம்பி இருப்பாயா? தோழி யே, முடியவில்லை என்பதற்காக ஒன்றில் பொருளில்லை என்று ஒதுக்கி விடும் குணம் எனக்கில்லை. உன்னை உனது காதலை நான் அசைபோடும் போது என்னை அறியாமலேயே எனக்குள் ஒன்று உன்னை நோக்கி நகரு கிறது, தொண்டை வரையிலும் உயரும் அந்தச் சோகப் பந்து விழி ஜன்னல் வழியாக இறங்கி விடுகிறது.

புவி ஈர்ப்பு விசையை நியுட்டன் கண்டுபிடித்து இருப்பினும் உயிர் ஈர்ப்பு விசை யை எனக்கு சொல்லிக் கொடுத்தவள் நீ தான். என் முகத்தை பார்த்துச் சொல். என் மீது கோபமா உனக்கு? இருக்க முடியாது. மெய்  எழுத்து உயிரெழுத்திடம் கோபித்துக் கொண்டால் நாம் எழுதுவதெல்லாம் பொய் எழுத்தாக அல்லவா மாறிவிடும்.

சிநேகிதியே என் வாடிய பயிருக்கு நீர் நீ, வாடாத காதலுக்கு சாட்சி நீயே. உன்
முகத்தைப் பார்த்துவிட்டு மலர்களைப் பார்த்தால் வசந்த காலமே செத்துப்
பிறந்தது போல் ஒரு பிரமை. கனவிலே சிரித்து விழித்து பின் அழும் குழந்தை யைப் போல உன்னைக் கண்டு பிரியும் மனம் தவிக்கும்.

எத்தனை முறை உன்னை நான் பார்த்திருந்தாலும், பேசிப் பழகி இருந்தாலும் இன்றைக்கும் நீ புதியவளாகவே எனக்குத் தோன்று கிறாய், என் வாழ்க்கை வானத்தில் நம்பிக்கை நட்சத்திரங்களை விதைத் தவளே! எனது விழிகள் எங்கெங்கோ சுற்றித் திரிந்தாலும் கை விரல்கள் மட்டும் உன்னையே அணைக்க வரும்.

மக்கள் மன்றங்களில் கூட சில நேரங்களில் ஒத்திவைப்பு தீர்மானங்கள் நிறை வேற்றுவது உண்டு. ஆனால் நமது காதல் சன்னிதானத்தில் மட்டும் நினைக் கப்பட்ட உடனேயே மசோதா முடிக்கப்பட்டுவிடும். என் உயர்வுக்காக நீ எத்தனை துயரச் சிலுவைகளை சுமந்து திரிந்திருக்கிறாய், எத்தனை முறை பிரிவு என்ற ஆணிகளால் உன்னை அறைந்து இருக்கிறேன் இருப்பினும் தாயின் கனிவோடு அவைகளைப் பெரிது படுத்தும் நிலையிலும் நமது அன்பு
எல்லை சிறைப்பட்டுவிடவில்லை.

எனது வாழ்வு புதுமையாக இனிமையாக இயங்க வேண்டுமென்று விரும்பிய வள் நீ. எனது வாழ்வுப் படிகளின் ஒவ்வொரு அடிகளையும் உனது விருப்பங் களாலும் விழுதுகளாலும் வரைந்து கொடுத்தவள் நீ. எனது துயரங்களுக்காக கண்ணீர் வடிப்பவளே! காயம் எனக்கு பட்டால் வலி மட்டும் உனக்கு வருகி றதே. அது எப்படி? இது தான் இயற்கையின் விந்தையோ. உனக்கு மட்டும் தான்
சேமித்த கண்ணீர் துளிகளை எழுத்தாக்க முடியுமா? என்னாலும் தான் முடியும்
என்று போட்டியில் எழுதவில்லை. நான் நினைத்தாலே இனிக்கும் என்பார் களே அதைப்போல் உன்னை நினைத்தாலே பிறக்கும் என்னுள் ஆயிரம் வரிகள்.

எனது அந்தரங்க மாளிகையை தூசி தட்டிய போதும் வெளிப்புற வீட்டுக்கு
வெள்ளையடித்த போதும் நீயே எனக்குத் துணையாய் நின்றாய். மிகைப்
படுத்திக் கூறியதாக நினைக்கலாம்.ஆனால் உண்மை இது தான். எந்தச் சூழ் நிலை யிலும் எந்த மானிட சக்தியாலும் உணர முடியாத உன்னத மானது நமது காதல் ஒன்று தான்.என்றுமே எந்த கணமுமே இந்த பூஞ்செடியை அசைவிக் கும் தென்றல் நீ தான்.

உறக்கத்தை எனது படுக்கையில் கிடத்திவிட்டு உன்னோடு இவ்வளவு நேரம் வார்த்தை ஜாலம் நடத்தி விட்டேன். மன்னித்துக் கொள் முடிப்பதற்கு மனமில் லாமல் என் விரல் களையும் விருப்பங்களையும் கட்டாயமாக ஓய்வெடுக்க உத்தரவிட்டே இதை முடிக்கிறேன். நீ பிரிந்தாலும் என்னில் பிரியாதிருக்கும் உன் நினைவுகள்.

முறிவதனால் முருங்கைமரம்
அழிந்துவிடாது-நாம்
பிரிவதனால் நமது மனம்
மறந்துவிடாது இருக்கிறது
நாம் பேச எத்தனையோ நாட்கள்
என்று முடிகிறது இத்துடனே
வார்த்தைப் பூக்கள் என்றும்.........

எது காதல்?

காதல் என்பது எதுவரை, அது கல்யாணம் ஆகும் வரை -என்று ஒரு திரைப் படப் பாடல் போன்று குறுகிய ஆயுளை உடையது. வாலிபப் பருவத்தில் பிறந்து கல்யாண நாளன்று இறந்துவிடும் அற்ப ஆயுள் படைத்ததாக ஆகிவிடு கிறது.திருமணமாகாத ஆண் பெண் பாலுணர்ச்சியின் வெளிப்பாடே காதல்
என்று உளவியல் ரீதியாக சொல்லப் படுகிறது. பல தடைகளைக் கடந்து, ஏன்
காதலுக்காக பெற்றோரை மறந்து, சாதி,மத அடையாளங்களைத் துறந்து,
நாட்டின் எல்லை கடந்து,வெற்றி பெற்று திருமணம் செய்து கொண்டு கணவன்
மனைவியாக வாழ்கின்றவர்கள் பிறரிடம்ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து
வைக்கும் போது இவர் என் காதலி, என் காதலன் என்று அறிமுகம் செய்து
வைப்பதில்லை. மாறாக என் மனைவி,என் கணவன் என்று தான் அறிமுகம்
செய்து வைப்பதிலிருந்து கல்யாணத் தோடு காதலுக்கு முற்றுப் புள்ளி வைத்து
விடுகிறார்கள்.

உளவியல் ரீதியாக காதலன், காதலி என்பது தாழ்ந்ததாகவும், கணவன் மனை வி என்பது அந்தஸ்தானதாகவும்,கெளரவமாகவும் இருப்பதாக உணர்கிறார் கள். முன்பு ஒருவருக்கு ஒருவர் எட்டாக்கனியாக இருந்த காதல் இப்போது கணவன்-மனைவியாகி குடும்பம் சமூகம் என்ற சூழ்நிலையில் கடமை பொறுப்புகளும் இருவர் மீதும் தோள் மாற்றம் செய்யப்படுகிறது.

நித்தம் போனால் முத்தம் சலிக்கும் என்பவர் ஒரே படுக்கையில் இடைவெளி
இல்லாமல் படுத்திருந்தும் இருவருக்கும் மத்தியில் கடக்க முடியாத நீண்ட நெடிய சீனப் பெருஞ்சுவர் இருப்பதை உணரலாம். மனைவிக்காக தாஜ்மகா லை கட்டுவேன் என்பவன் உறவுகளுக்கு மத்தியில் சீனப் பெருஞ்சுவரை எழுப்பி விட்டு இருப்பதை.

காதல் உண்மையானது என்றால் போராடி வெற்றி பெற வேண்டும். காதலன் காதலியை, காதலி காதலனை ஏதோ ஒரு காரணங்களுக்காக பிரிவது காதலா. தேன்கூட்டிலிருந்து தேன் எடுக்க விரும்புபவன் தேனீக்களினால் கொட்டப் படவே செய்வான். அதற்காகத் தேனை விரும்பாமலோ அல்லது தேனை
எடுக்காமலோ இருக்கப் போவது இல்லை.

காதலித்து சாதிய மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் கூட தங்கள்
பிள்ளைகளின் காதலை எதிர்த்து போர்க்கொடி உயர்த்துபவர்களும் உண்டு. காரணம் அது பெற்றோரின் பாசம் மட்டுமல்ல. சமூகத்தில் அவர்கள் எதிர் கொண்ட அனுபவங்கள் அவர்களை மாற்றி யோசிக்க வைக்கிறது.

20 ஆண்டுகள் பாராட்டி சீராட்டி போற்றி பாதுகாத்த பெற்றோரும் உடன் பிறந்த வர்களும், சொந்தபந்தங்களும் தங்களை சரியான நபருக்கு மணம் முடித்து தருவார்கள் என்றில்லாமல் எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை பாழும் கிணற்றில் தள்ளிவிடப் போவதில்லை, இருப்பினும் ஒருசில மணிதுளிகளில் ஒரு சில நாட்கள் பேசிய மெளன மொழி, இரண்டு இதயங்களுக்குள் ஏற்படும் ஏதோ ஒரு மாற்றம் எல்லாவற்றையும் இழக்கவும், எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் காதலால் உருவாகிறது.

காதலின் முடிவு திருமணம் எனில்,அதோடு காதலும் முடிவு பெறுகிறது என்று சொல்லப்படுவது உண்டு.உலகளவில் இன்றளவும் உயர்ந்து நிற்கும் காதல் காவியங்கள் விதி விலக்காக மணப்பந்தலில் முடியாதவை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உன் முகத்தை பார்த்தவுடன் வசந்தகாலமே செத்து பிறந்ததை உணர்ந்தேன் என்று சொன்னவர்கள் கூட பின் உன் முகத்தை பார்த்த தாலேயே தன்னுடைய எதிர்காலம் செத்துவிட்டதாக அங்கலாய்த்தவர் கள் உண்டு.

ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் வருவது காதலா?(அல்லது) கண்டதும் காதல் என்பது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் பாலுணர்ச்சி ஈர்ப்பின் காரண மாக இதயத்தை இடம் மாற்றம் செய்து தங்களை இழக்கின்ற நிலை காலம் தந்த படிப்பினை அனுபவம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டபோது தவறான நபரை தேர்வு செய்து விட்டோம் என்று வருந்தி பயன் இல்லை.

குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வது போல காதலிக்கப் போய் கற்பை இழந்து பெற்றோர் ஏற்க மறுத்து முடிவில் தற்கொலை, படுகொலை, பைத்தி யம் பிடித்து விடும் நிலை.எனவே ஒருவரை பார்த்து பழகி அவரைப் பற்றிய முழு நம்பிக்கையும் தனது வாழ்வின் பாதுகாப்பும் நிறைந்ததாக இருக்கும் போது அதற்காக தடையை மீறிப் போராடலாம். நமது நாட்டில் பெண்களுக்கு காதல் என்பது எதிர்கால வாழ்க்கை பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது.

இதில் நட்பிற்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழப்பிக் கொள்வது ஒருதலை காதலாக வளர்த்துக் கொண்டு பின் அது தெரிந்த பின் மனவேதனை அடைவது பித்துப்பிடித்து அலைவது, அவசர கதியில் அள்ளித் தெளிந்த அழிந்த
கோலங்களாக வாழ்க்கைப் பயணம் அவசர முடிவில் எடுத்த முடிவுகள் அமை கிறது. ஒருவர் மேல் ஒருவர் பழிச்சொல்வது அவதூறு பேசுவது தவறு.எனவே நமது கலாச்சாரம் பண்பாட்டை பாதுகாக்கின்ற வகையில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையில் உங்களின் தேர்வுகள் அமையட்டும்.

பலநாள் பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் கூட மனமுறி விற்கு ஆளாகி நீதிமன்றப் படிக்கட்டுகளில் தீர்ப்பிற்காக காத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.முன்பின் முகம் பார்த்துப் பழகாமல் பெற்றோர் பார்த்து திரு மணம் செய்து கொண்டு வாழ்நாள் வரையில் ஒருமித்து வாழ்பவர்களையும் பார்க்கத்தான் முடிகிறது. கவிஞர் கண்ணதாசன் சொல்வதைப் போன்று நல்ல
குணமுள்ளவரை சந்தேகப்பட்டே வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர் களும் உண்டு. மோசமான நடத்தை கொண்டவரை வாழ்நாள் முழுவதும் நம்பியே வாழ்ந்தவர்களும் உண்டு. எனவே சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வர் களாக வாழுங்கள்.ஆயிரம் ஆலோசகர்கள் இருந்தாலும் சொல்புத்தியும் சுய புத்தியும் இருந்தால் எந்த சூழலிலும் வாழ்ந்துவிடலாம். உங்களைப்போல உலகம் வாழ வாழுங்கள்... வாழ்ந்து காட்டுங்கள்....

காதலும் வீரமும்

தமிழர்கள் வாழ்க்கையை அகம் புறம் என்று இரண்டாகப் பகுத்தார்கள். அகம்
என்பது காதலில் தொடங்கி திருமணத்தில் தொடரும். குடும்பம், வாழ்வியல், உழவு,விவசாயம் என்று தன் இல்வாழ்க்கை சார்ந்து ஏர் முனையை போதிப்பது.

புறம் என்பது குடும்பத்திற்கு வெளியே மற்றவரிடம் பெருமையாக எடுத்துக்
கூறத்தக்க கல்வி, கொடை, அரசியல்,புகழ், வீரம் உள்ளடக்கிய புற வாழ்க்கை
கூறுகளை கொண்ட போர் முனையை விவரிப்பது. அகத்திலிருந்து பண்பாடும்,
புறத்திலிருந்து நாகரிகமும் தமிழர்களின் அடையாளம். அகத்திலிருந்து காத லும், புறத்திலிருந்து வீரமும் தமிழர்களின் இரு கண்கள். இவை ஒட்டிப்பிறந்த
இரட்டைக் குழந்தை.

ஆனால் இன்று சாதியும், மதமும் தமிழர்களின் வாழ்க்கை கூறுகளாக மாறிய தன் விளைவு ஒட்டிப் பிறந்தாலும்,ஒதுக்கி வைக்கப்படுகின்ற இடது கைபோல் மேல் சாதி, கீழ் சாதி, ஆண்டான் அடிமை முறை உருவாகி ஒரு தமிழனை மற் றொரு தமிழன் அடிமைப்படுத்தி எனக்கு கீழே நீ என்று இருமாந்து இருக்கும் நிலை.

காதல் வாழ்க! காதலர்கள் வெல்க!!

நன்றிகள் 

கட்டுரையாளர் :- 
மல்லை சத்யா

வெளியீடு :- சங்கொலி

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படுத்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment