Friday, August 9, 2013

அறநெறி அண்ணல் பழநியப்பனார்!

தமிழுக்கு, தமிழ் இனத்துக்கு அருந்தொண்டு ஆற்றியவர்

அறநெறி அண்ணல் பழநியப்பனார்!
நூற்றாண்டு விழாவில் #வைகோ புகழாரம்


பழ.நெடுமாறன் அவர்களின் தந்தை அறிநெறியண்ணல் கி.பழநியப்பனார் நூற் றாண்டு விழா 07.07.2013 அன்று மதுரையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பங் கேற்று, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில்
இருந்து....

உலகப் பொதுமறைத் தொண்டர்,சைவ சமய சேவாமணி, தமிழுக்குச் செய்த தொண்டால், காலத்தால் அழியாது, மானத் தமிழர் நெஞ்சில் வாழுகின்ற, அற நெறி அண்ணல் பழநியப்பனார் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வில்,
உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.மாநகர் மதுரை யில், 1924 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த வணிகர் அரங்கத்தில், அறநெறி அண்ணல் புகழ்க்காவியம் படைக்கின்ற விழா என்பதால், இரவு பத்து மணிக்கு
மேலும் அரங்கம் நிரம்பி இருக்கின்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள
வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.

மக்காள்,
அருந்தி வளர்மின்; நுமக்கு மிக்கோர்
இல்லாத
முதுசுதந்திரத்தின் முத்திரையாகி
இது பரிணமித்து, நும் இதயத்து உறைக;

என மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்களால் வருணிக்கப்பட்ட, வற் றாத பொருநை நதியின் கரையில், கீழநத்தம் கிராமத்தில் ஒரு பழந்தமிழ்க்
குடும்பத்தில் பிறந்து, இந்த நான்மாடக்கூடலில் தமிழ்ப் பெருந் தொண்டு ஆற் றியவர் அண்ணல் பழநியப்பனார் அவர்கள் இன்று காலை தொடங்கி இங்கே உரை ஆற்றியவர்கள்,தமிழுக்கும், இனத்துக்கும்,சமயத்துக்கும், அவர் ஆற்றிய
தொண்டுகளைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.


‘உலகத்தின் பொதுமறையாகத் திகழ்வது திருக்குறள்தான்;அதற்கு ஈடான இன் னொரு மறை இல்லை’என்று, நோபெல் பரிசு பெற்ற ஆல்பர்ட் சுவைட்சர் சொன்னார்.அந்தத் திருக்குறளை வாழ்வியலாகத் தந்தார் வள்ளுவர். அறநெறி
அண்ணல் பழநியப்பனார் அவர்கள் இயற்றிய திருக்குறள் சிந்தனைச் சாரல், குறள் அமுது ஆகிய சாரல், குறள் அமுது வெளியீடுகள், இங்கே வருகை தந்த
தமிழ் அன்பர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

1330 அருங்குறட்பாக்களை, 133 அதிகாரங்களை, எட்டுச் சொற்றொடர் களாக அவற்றை வரிசைப்படுத்தி இருக்கின்றார்.

கடவுள் வாழ்த்தொடு, வான் சிறப்பும் நீத்தார் பெருமையும் உணர்ந்து, அறன் வலியுறுத்தி, இல்வாழ்க்கையில் வாழ்க்கைத் துணைநலமும் மக்கட் பேறும் பெற்று, அன்பு உடைமையோடு விருந்தோம்பல் செய்து, இனியவை கூறி,செய் நன்றி மறவாது, அடக்கமுடன் ஒழுக்கத்துடன், பிறன் இல் விழையாது, பொறையுடன், அழுக்காறாது,வெஃகாது, பயனில சொல்லாது,தீவினை அஞ்சி வாழ்கின்ற வாழ்க்கை,ஈகையினால் புகழ்மிக்க வாழ்க்கை வாழ்வோமாக! என இல்லற இயலைச் சொல்லி,

அருள் உடையராய், மெய் உணர்ந்து,புலால் மறுத்து அவா அறுப்போமாக என்று துறவற இயலைச் சொல்லி,

ஊழில் பெருவலி உணர்வோமாக என ஊழ் இயலைச் சொல்லி, 

இறைமாட்சியுடன் அரசியல் நடத்திடு வோமாக; படைச் செருக்கு கொண்டு, ஆள்வினையுடன், இடுக்கண் அழியாது, வலி அறிந்து காலம் அறிந்து இடன் அறிந்து அரசியல் ஓங்கிடச் செய்வோமாக என்று அரசி யலைச் சொல்லி, அமைச்சும், சொல் வன்மையும் கொண்டு, வினைத் திட்பம் உணர்ந்து, வினைத் தூய்மை உடையவராக, பெரியாரைப் பிழையாது, பகைத்திறம் உணர்ந்து, பகை மாட்சி அறிந்து, உட்பகை நீக்கி, வரைவின் மகளிர், சூது ஒழிந்து வாழ்வோமாக என்று அங்க இயலைச் சொல்லி,

குடிமை காத்து, மானம், பெருமை,சான்றாண்மை நிலைநாட்டி, கயமை ஒழிப் போமாக என்று சொல்லி, தகை அணங்குறுத்து, புணர்ச்சி மகிழ்ந்து, காதல் சிறப்பு உரைத்து, நெஞ்சொடு கிளர்ந்து, களவு, கற்பு கண்டு வாழுகிற களவு இயல், கற்பு இயலைச் சொல்லி, இப்படி 133 அதிகாரங்களையும் எட்டுச் சொற் றொடர்களிலே திருக்குறள் சிந்தனைச் சாரலாகத் தந்த பெருமகனாருக்குத் தான், இங்கே நூற்றாண்டு விழா நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. (பலத்த கைதட்டல்).

எழுதிய நூல்கள்

மணிச்சுடர் ஏட்டைப் பற்றி, மதுரை மலர் ஏட்டைப் பற்றிச் சொன்னார்கள்.அந்த மதுரை மலரில் வாரந் தவறாமல்,ஒவ்வொரு அதிகாரத்திலும் திருக்குறள் செறிந்த கருத்துகளை,எளிய தமிழிலே, இதயத்தில் பதிகின்ற விதத்திலே அவர் தந்தவற்றுள், 54 குறள்கள்தான் கிடைத்து இருக் கின்றன. அது, குறள் அமுதாக இங்கே வெளியிடப்பட்டு இருக்கின்றது 

அவர் ஒரு ஆன்மிகத் துறவியாக வாழ்ந்தாலும், தமிழுக்குத் தொண்டு செய்த பெருமகன். ஓவியர், இலக்கிய வித்தகர், கவிஞர், பாடல்களைப் படைத்தவர், கட்டுரைகளை எழுதிய அந்தப் பெருமகனார்,இந்த மதுரை மாநகருக்குச் செய்து இருக்கின்ற பணிகள் ஏராளம். மதுரை மூதூரின் சிறப்புக்குக் காரணமான வற்றை எல்லாம் மனதில் ஆழமாகச் சிந்திக் கின்றார்.

‘வாழ்விக்க வந்தோர் வரலாறு’ என்ற ‘வாழ்விக்க வந்தோர் வரலாறு’ நூலில், சீனர் சமயம், சப்பானியர் சமயம், ஈரானியர் சமயம், யூதர் சமயம், கிறித்துவர் சமயம், முகமதியர் சமயம், பெளத்தர் சமயம், இந்து சமயம் என்று, இந்தச் சமயங்களைத் தந்த பெருமக்கள், அவர்களுடைய கருத்து களை எல்லாம் தொகுத்து நூலாகத் தந்து இருக்கின்றார். அது மட்டும் அல்ல; உலகச் சமயங் கள், சமயம் தோன்றிய வரலாறு, மதுரை மீனாட்சி பாண்டியன் மகள் ஆனது ஏன்? பேசும் பிள்ளையார், திருப்புகழ் மணிகள்,பழமுதிர் சோலை, நாட்டு நடப்பும் மக்கள் பேச்சும் என எத்தனையோ மக்கள் பேச்சும் நூல்களை எழுதி வெளியிட்டது மட்டும் அல்ல, பேரறிஞர்கள்பலருடைய நூல்களை அரங்கேற் றம் செய்து, தமிழுக்குத் தொண்டு ஆற்றி இருக்கின்றார்.

மகாத்மாவுடன் சந்திப்பு

அவர் காந்தியாரைச் சந்தித்தது, பாபு இராஜேந்திர பிரசாத்துக்கு ஓவியம் தீட்டித் தந்தது, பண்டித ஜவகர்லால் நேருவிடம் கையெழுத்துப் பெற்றது இப்படி அவ ருடைய வாழ்நாளின் பல்வேறு செய்திகள், இந்த மன்றத்தில் எடுத்துச் சொல் லப்பட்டன.

காந்தியாரிடம் அவர் கையெழுத்துக் கேட்கிறார்; வைக்கம் அறப்போருக்குத்
தலைமை ஏற்க வருமாறு தந்தை பெரியாருக்குக் கடிதம் எழுதி அழைத்த ஜான் ஜோசப் அவர்களுடைய அருமைத் துணைவியார்தான் அறிமுகம் செய்து வைக்கின்றார்.அப்போது காந்தியார் கையெழுத்து இடுவதற்கு ஐந்து ரூபாய் கேட்கிறார்.இவர் கையிலே பணம் இல்லை;

எனவே, மணநாளில் தனக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கணையாழியை அவர் கழற்றித் தருகிறார். அதைக் கையில் வாங்கிய காந்தியார், இது தங்கம்தானா? என்று மீரா பென்னிடம் காண்பித்துக் கேட்கிறார்; மீரா பென் அதை வாங்கிப்
பார்த்துவிட்டு, இது உண்மையிலே தங்கம்தான் என்று கூறுகிறார்.அப்படி யா னால் சரி, கையெழுத்து ஏட்டைக் கொண்டு வா என்று சொன்ன போது, இவரது கையிலே தாள் இல்லாததால், மீரா பென் ஒரு தாளைக் கிழித்துக் கொடுக் கிறார்.

அதைப் பார்த்துவிட்டு மகாத்மா காந்தி,உன்னிடத்தில் எவ்வளவு அன்பாக இருக்கிறாள் பார்த்தாயா? என்று ஆங்கிலத்தில் கூறியதாகவும், இந்தப் பின்ன ணியில் நாட்டு விடுதலைக்கான களத்தில் நின்ற தலைவர்களோடு அவர் சந்தித்த நிகழ்வுகளைச் சொல்லுகின்றார்.

சுயமரியாதை மாநாட்டில் பங்கேற்பு

திருச்சி தூய வளனார் கல்லூரியில் அவர் படித்துக் கொண்டு இருந்த போது, மதுரையில் இருந்து செல்லுகின்ற கூடலிங்கம் அவர்கள், செங்கல்பட்டில் நடைபெறுகின்ற சுயமரியாதை மாநாட்டுக்கு இங்கே இருந்து சிறப்புத் தொடர் வண்டி செல்லுகிறது;அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் அந்த மாநாட்டை
முன்னெடுக்கின்றார்; எனவே நீயும் அந்தத் தொடர்வண்டியைப் பார்க்க வா
என்று அழைத்து வந்த இடத்திலே,அவரையும் அழைத்துக் கொண்டு செங்கல் பட்டு மாநாட்டுக்குப் போனதாகவும், அந்த மாநாட்டில் அண்ணல் பழநியப்ப னார் பங்கு ஏற்றதையும் நான் அறிகிறேன்.

பரிதாபத்திற்குரிய தோற்றத்தோடு வந்து இருக்கின்றார் இந்தத் துறவி என்று எண்ணியவர்களுக்கு நடுவில்,சகோதரர்களே, சகோதரிகளே என்று தன் உரை யின் தொடக்கத்தில் அவர் விளித்த சொற்கள்,அதிர்வு அலைகளை ஏற்படுத் தின. அதைச் சொன்னவர் விவேகானந்தர். அந்த விவேகானந்தருடைய பெய ரால், பழநியப்பனார் விவேகானந்தர் பொன்மொழிக் குறள் என 100 குறள் பொன் மொழிக் குறள் பாடல்களை இயற்றினார். குறள் வெண்பாவிலே பாடல்கள்
படைக்கிறார் பழநியப்பனார்.

அதற்கு நேர் எதிராக, பெரியாரைப் பற்றியும் பாடல்களை எழுதுகிறார். 323 குறள் வெண்பாக்களில் எழுதிய பாடல்கள்தாம்,பெரியார் புரட்சிமொழிக் குறள், ஒருபக்கம் எரிமலை; மொழிக் குறள்,இன்னொரு பக்கம் பனிமலை; விவேகா னந்தர் பொன்மொழிக் குறள் படைத்த பழநியப்பனார், பெரியார் புரட்சி மொழிக் குறள்பாடல்களையும் படைக்கின்றார்.

நம்புவோர் ஏற்க; நம்பார் அகல்க;இதனை ஆராய்ந்து அறிந்து நன்றெனில் கொள்க; அன்றெனில் தள்ளுக என பெரியாரைப் பற்றிப் பாடுகிறார்.

மதுரைச் சரித்திரம்

இந்த மதுரை மாநகருக்குச் சிறப்புச் சேர்க்கின்ற மீனாட்சி அம்மன் ஆலயத்
திருப்பணியின் இருவிழிகளாகத் திகழ்ந்தவர்கள் தமிழவேள் பி.டி.இராசன் அவர்களும், அறநெறி அண்ணல் அவர்களும். குன்று தோறாடும் குமரன் அவர் நெஞ்சில் குடி கொண்டு இருந்தான் என்பதை,அவருடைய நூல்களில் படிக்கின் றேன். அவர் தீட்டிய கோவில் மாநகர் மதுரையின் சரித்திரம் நீண்ட மாநகர் மதுரையின் சரித்திரம் நெடிய வரலாறு.

திருப்பணி நடந்து கொண்டு இருந்த காலத்தில், தமிழவேள் போன்றோரின்
வேண்டு கோளுக்கு இணங்க, இந்த ஆலயத்தின் வரலாறு, ஆல்வாய் அழகன் வீற்று இருக்கின்ற இந்த மதுரை மாநகரின் வரலாறு அறிய வேண்டும் என்ப தற்காக, உடல் நலம் குன்றி இருந்த நிலையிலே அவர் எழுதுகிறார்.

பழமுதிர்சோலையில்...

அவரைப் பற்றிய ஒரு நூலில் நான் படித்தேன். முருகனைப் புகழ்ந்து நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை அவர் இதயத்தில் இருக்கின்றது. கனவு காண் கிறார். இரண்டு மலைகளுக்கு நடுவே ஒரு அடர்ந்த காடு. அங்கே ஒரு பாழ டைந்த மண்டபம். அது திடீரென ஆலயமாக, திருமுருகனின் கோவிலாக ஆவதுபோலவும் கனவு காண்கிறார். அதைத் தோழர்களிடம் சொல்லுகிறார்.

வணங்காமுடி கண்ணையா அவர்களோடும், அன்றைய மதுரை நகரில் பணி ஆற்றிக் கொண்டு இருந்த ஞானேந்திரன் அவர்களோடும் அழகர் மலைக்குச் செல்லுகிறார். 1959 ஆம் ஆண்டு. அது அவருடைய நம்பிக்கை.நடந்த செய்தி. ஒரு காட்டு எருமை எதிரே நிற்கிறது. அது இவர்களை ஒன்றும் செய்யல்லை. விலகிச் செல்லுகிறது. அதன் பின்னாலேயே இவர்களும் செல்லுகிறார்கள்.

அந்த எருமை காட்டுக்கு உள்ளே புகுந்து விட்டது. இவர்களும் அதைப் பின் தொடர்ந்து செல்ல, அங்கே ஒரு பாழடைந்த மண்டபத்தைக் காண்கிறார்கள். அது 16 கால் மண்டபம், சாம்பல் மண்டபம் என்று அழைக்கப்பட்ட இடம். அதற்கு அருகே ஒரு பெரிய பாம்புப் புற்று இருக்கிறது; அந்தப் புதர்களுக்கு
நடுவே ஒரு கல் தென்படுகிறது; புதரை அகற்றிவிட்டுப் பார்க்கின்ற போது, வேலின் படிவம் அந்தக் கல்லில் வேல் உருவம் பொறிக்கப்பட்டு இருப்பதைக் காண்கிறார்கள்.

இதன்பிறகு, 1959 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி, வேல் பொறிக்கப் பட்ட கல்லுக்கு திருமுரு காற்றுப்படை நூல் காற்றுப்படை கொண்டு சாற்றிய
தாகவும், அப்போது அங்கு வந்தசொற்கள், பழமுதிர் சோலை பாடல் வரிகளா கவே இருந்ததாலும், அவர்கள் ஆச்சரியத்தில் திகைத்துப் போனார்கள். அந்த இடம் பழமுதிர் சோலை. அறுபடை வீடுகளுள் ஒன்று.அங்கே ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என்று அவர்கள் பெரு முயற்சி செய்தனர்.

தமிழவேள் துணை நின்றார்; கருமுத்து தியாகராச செட்டியார் போன்றோர்
பெருந்துணையாக இருந்தார்கள்.அப்படிப்பட்ட சூழலில், இது வைணவர்கள் வழிபடுகின்ற அழகர் மலை ஆலயத்துக்கு எதிரான முயற்சி என்று ஒரு வழக்கே தொடுக்கப்பட்டது. அந்த வழக்கிலும் அவர் வென்று வருகிறார். 618 அடிகளை ஆசிரியப்பாவாகக் கொண்டு, பழமுதிர் சோலை வேல் உலா என்று ஒரு சோலை வேல் உலா நூலை எழுதினார். எதிர்த்தவர்களும் ஏற்றுக் கொள் கின்ற வகையில் அங்கே முருகனுக்கு ஆலயமும் எழுப்பினார் என்ற செய்தி யைப் பார்க்கிறேன்.

திருவள்ளுவர் கழகம்

1941 ஆம் ஆண்டு, மே மாதம் 21 ஆம் தேதி, திருவள்ளுவர் கழகத்தை நிறுவு
கிறார். சுப்பிரமணியனாரை அழைத்துக் கொண்டு வந்து நிறுவுகிறார். அந்தக்
கழகத்துக்கு வெள்ளி விழா எடுக்கிறார்.திருவள்ளுவர் 2000 ஆம் ஆண்டு விழா கொண்டாடுகின்றார்.திருக்குறள் நெறிப்படி வாழ்ந்து காட்டுகிறார். அதனை வலியுறுத்துகிறார். அப்படிப்பட்ட உணர்வுகளைக் கொண்டு இருந்த நம்மு டைய அறநெறி அண்ணல், இந்தக் கோவில் மாநகர் என்கின்ற மாநகர் நூலை எழுதுகிற போது, ஆலயத்தைப் பற்றி மட்டும் எழுதவில்லை. எத்தகைய ஆல யங்கள் எழுப்பப்பட்டன? என்ற செய்தியையும் சொல்லுகிறார்.

பழந்தமிழர் வரலாறு

மன்னர்களின் ஆதரவில் தமிழ் தழைத்து ஓங்கியது. முதற் சங்கம், தென் மதுரையில் இருந்தது;அதன்பிறகு, கபாடபுரத்தில் இரண்டாம் சங்கம் எழுந்தது;
அதற்குப்பிறகு கபாடபுரம் அழிந்தது;பின்னர் மூன்றாம் சங்கம் வந்தது. பாடல் களை அரங்கேற்றுவோர் எண்ணிக்கை அதிகம். அங்கே வீற்று இருக்கின்ற புலவர்கள், ஆய்வு செய்கின்ற புலவர்கள்; 549 பேர் முதற்சங்கத்திலும், 59 பேர் இரண்டாம் சங்கத்திலும், 49 பேர் மூன்றாம் சங்கத்திலும் இருந்தனர் என்ற
வரலாற்றை எடுத்துச் சொல்லுகிறார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட மன்னர்கள்; பாண்டிய
மன்னர்கள் மேற்கொண்ட போர்க் களங்கள்; அவர்கள் தழுவிய சமயங்கள்; அனைத்து விவரக்குறிப்புகளையும் தருகிறார். பாண்டிய மன்னர்கள் சைவ நெறியை ஏற்றுக் கொண்டவர்களாகவே இருந்தபோதிலும், பராந்தகன் நெடுஞ்
சடையன் மட்டும் வைணவ சமயத்தை ஆதரித்தார்; பூதத்து ஆழ்வார் போன் றோர் உலவிய காலத்தில், வைணவத்தை ஆதரித்தார் என்ற செய்தியையும் இந்த நூலில் பார்க்கின்றேன்.

இவை அனைத்தும் வரலாற்றுச் செய்திகள். விருப்பு வெறுப்பு இன்றி எழுதி இருக்கின்றார். இந்தக் கோவில் மாநகர் புத்தகத்தை நான் முழுமையாகப் படித் தேன். அவர் மனதில் இருக்கின்ற எந்தக் கருத்தையும் இதில் கொண்டு வர வில்லை. தக்க சான்றுகளோடு தருகிறார். ஆலவாயழகன் ஆலயம், அங்கயற் கண்ணி இருக்கின்ற ஆலயம், அங்கே செதுக்கப்பட்ட கல்வெட்டுகள், அதில் சொல்லப்படுகின்ற செய்திகள், அனைத்தையும் வரிசைப்படுத்திக் கொடுத்து, ஒரு நெடிய வரலாற்றை, இந்தக் கோவில் மாநகர் மதுரையின் சிறப்பை, இங்கே ஆண்ட மன்னர்களின் பெருமையை வரிசைப்படுத்தி, உடல் நலிவுற்று
இருந்த வேளையில், திருப்பணிக் குழுவில் இருந்தபோது, தமிழவேள் போன் றோரின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த நூலை யாத்துத் தந்து இருக்கின் றார். தமிழ்க்குலத்துக்குத் தொண்டு செய்தார். அறம் சார்ந்த வாழ்க்கையை நடத்தி வந்து இருக்கின்றார்.

இல்லற மாண்புக்கு எடுத்துக்காட்டு

அவரது அருமைத்திருமகனாக,இன்றைக்கு உலகெங்கும் வாழுகின்ற தமிழர் களின் இதயத்தில் தனித்ததோர் இடத்தைப் பெற்றுஇருக்கின்ற அண்ணன் பழ. நெடுமாறன் கூறுகிறார்: என் தந்தையும், தாயும் வாதிட்டுக் கொண்டதைக்கூட நான் பார்த்தது இல்லை என்று.பேசுவார்களே தவிர, இருவருக்கும் இடையில் கருத்து முரண்பட்டு வாதிட்ட காட்சியை நான் ஒருநாளும் பார்த்தது இல்லை என்கிறார்.

இல்லற மாண்பு நூலை எழுதியது இல்லற மாண்பு மட்டுமா? அப்படியே அல்ல வா வாழ்க்கை நடத்தி இருக்கின்றார்! அத்தகைய அருமைத் துணைவியார்
மறைந்தபோது, பாவேந்தர் இங்கே வந்து, இவர்களது இல்லத்தில் தங்கி இருந்து, அவரது கண்ணீரைத் துடைப்பதற்கு, துயரத்தைத் தணிப்பதற்கு ஆறு தல் கூறி இருக்கின்றார். தமிழுக்கு எத்தகைய அருந்தொண்டு ஆற்றி இருந் தால், பாவேந்தர் இங்கே வந்து பக்கத்தில் இருந்திருப்பார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அறநெறி அண்ணலின் அன்பில் மாவீரர் திலகம் பிரபாகரன்

அத்தகைய அறநெறி அண்ணல் அவர்களுடைய இல்லத்துக்குத்தான் வீரத்தின் பிரளயமாக, வரலாற்றைத் திகைக்க வைக்கின்ற பிரபாகரன் அவர்கள் வந்து தங்கி இருந்தார்.அவரிடத்தில் அன்பைப் பொழிந்தார்.இந்த மதுரை மாநகரில், அண்ணன் நெடுமாறன் அவர்களுடைய அரவணைப்பு நிழலிலே, தலைவர்
பிரபாகரன் அவர்கள் இருந்த நாள்களில் நான் பலமுறை வந்து சந்தித்து இருக் கின்றேன்.

உயிரோடு திரும்பி வர முடியுமா? என்ற சூழலில், அண்ணன் நெடுமாறன் அவர் கள் ஈழத்துக்குச் சென்று,புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி களுக்கு உள்ளே, அரச மரியாதையோடு புலிப்படை வீரர்கள் அவரை அழைத்துச் சென்று, அவர்களு டைய அரசை அறிவிக்க இருந்த நிலையும் இருந்தது. உயிரோடு திரும்புவாரா?
என்ற நிலையிலும்கூட, வீரமகன் சென்று இருக்கின்றான் என்ற உணர்வோடு தான், தந்தை பழனியப்பனார் இருந்தார்கள். (பலத்த கைதட்டல்).

அன்று பழமுதிர் சோலையில் முருகனுக்குக் கோவில் கண்டார். இன்று, அந்த முருகனை வழிபடுகின்ற இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொன்று குவிக் கப்பட்டு இருக் கின்றார்கள். அவர்களது குருதியில் நனைந்து இருக்கின்றது தமிழ் ஈழம்.நெஞ்சைப் பிளக்கின்ற காட்சிகளைச் சிற்பங்களாக ஆக்கி,தஞ்சைத்
தரணியில், முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கின்றார், அறநெறி அண்ண லின் அருமைத் திருமகன் பழ.நெடுமாறன். இது தமிழ் இனத்துக்கு அவர் ஆற்று கின்ற பெருங் கடமை. தமிழ்க்குலம் அவருக்கு நன்றிக்கடன் பட்டு இருக்கின் றது. அது வெறும் காட்சிக் கூடம் அல்ல கண்டு ரசிப்பதற்கு.

ஈழத்தமிழர்க்கு நேர்ந்த அவலத்தை,வருங்காலத் தலைமுறை அறிந்து கொள் ளத் தருகின்ற ஆவணக்கூடம்.இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரனை,உலக நீதி மன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்திட வேண்டும். தமிழ் ஈழம் அமைந்திடத் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்ற உறுதியைப் பெற வேண்டும். தொடர்ந்து பல சூழ்ச்சிகள் அரங்கேறுகின்றன;
நயவஞ்சகம் இழைக்கப்படுகின்றது.தமிழ் இனத்தைத் துரோகம் சூழ்ந்து இருக் கின்றது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

இனி நாம் ஆற்ற வேண்டிய கடமை என்ன? எந்த அறம் ஓங்க வேண்டும், தமிழ்க்குலம் தரணியில் சிறந்து விளங்க வேண்டும் என அறநெறி அண்ணல் பாடுபட்டாரோ,‘வடமொழிக்கு இங்கே இடம் இல்லை; தமிழகத்து ஆலயங் களில் தேவாரம் ஒலிக்கட்டும்’ என்று குரல் கொடுத் தாரோ, அந்தத் தமிழுக்கே இன்று பேராபத்து சூழ்ந்து இருக்கின்றது.தரணி போற்ற வாழ்ந்த தமிழனின் மொழி, உலகத்தின் மூத்த மொழி, ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்; அனி மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்’ என்று வெடித்த கவிஞனின் வார்த்தைகள் கூறு கின்ற அபாயம் நேருகின்ற விதத்தில் ஆகி இருக்கிறது.

பள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில், நீதிமன்றங்களில் எங் கும் தமிழ் வேண்டும் என்று சொன்னோம். இனி, பள்ளிகளில் கூடத் தமிழ் அற்றுப்போகுமோ என்ற ஒரு பேராபத்து, தலைக்கு மேல் கத்தியாகத் தொங் கிக் கொண்டு இருக்கின்றது. கிராமப் புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூட ஆங்கிலத்தில் பயிலட்டும் என்ற கொடுவாளைச் செலுத்து கின்றார்களே? அதை எதிர்த்து, அந்த நிலை மேலும் ஓங்க விடாமல் தடுக்க வேண்டியது நம் கடமை. அதைத்தான்,அறநெறி அண்ணல் அவர்களின் நூற்றாண்டு விழாவில் நான் நினைவூட்ட விரும்புகின்றேன்.

தமிழ் இனம் காக்க,தமிழ்க்குலம் காக்க,தரணியில் தமிழனுக்கு என்று ஒரு நாடு ; தமிழ் ஈழத் திருநாடு மலர்ந்திட,விருப்பு வெறுப்பு இன்றிப் பாடு படுகின்ற, வட லூர் வள்ளலார் போல வாழ்கின்ற அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களும்
நூறாண்டுகள் வாழ வேண்டும். அந்த நூற்றாண்டு விழாவிலும் என் போன்ற வர்கள் பங்கு ஏற்கின்ற வாய்ப்பை இயற்கை அருள வேண்டும்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment