Thursday, August 15, 2013

நேர்மையின் இமயம்! பகுதி 2

சிறாவயலில் குருகுலத்தில் பணி ஆற்றுகிறார். அங்கிருந்து நாச்சியார் கோவி லுக்கும், கோட்டையூருக்கும் செல்கிறார்.

1927 ஆம் ஆண்டு. ஏறத்தாழ 21 ஆவது வயது. அங்கேதான் காந்தியாரைச் சந்திக்
கிறார். காந்தியார் ஜீவானந்தத்திடம் பேசுகிறபோது, ‘என்ன சொத்து? என்று
கேட்கிறார். ‘இந்தத் தாய் நாடு தான் என்னுடைய சொத்து’ என்றார் ஜீவா.அதற் குக் காந்தி, ‘இல்லை யில்லை; உன்னைப் போன்றவர்கள்தான் இந்த நாட்டுக் குச் சொத்து’ என்றார்.

அப்படிப்பட்ட தலைவன் பிறந்த மண்ணிலே, அவரது பிறந்த நாள் விழாவில் பேசுவதைக் கடமையாகக் கருதிப் பேசுகிறேன். ‘பூதப்பாண்டி’ என்கிற இந்த ஊருக்குப் பெருமையும்,புகழும் தேடித்தந்த மாமனிதன் ஜீவா. தன் வாழ்நாள் முழுமையும் தன்னலம் அற்று, இலட்சியத்துக்காகவே வாழ்ந்து மனிதநேயத் தின் சிகரமாக வாழ்ந்து,மண்ணின் விடுதலைக்கு, மொழியின் விடுதலைக்கு, இனத்தின் விடுதலைக்கு,ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கு, சமூக நீதிக்குப் பாடுபட்ட உணர்வு காரணமாகத்தான் தந்தை பெரியாரை இவர் கவர்ந்தார். தந்தை பெரியார் இவரைக் கவர்ந்தார்.


1926 இல், சிறாவயலில் தந்தை பெரியாரைச் சந்தித்தார் ஜீவா.அந்தக் கால கட் டத்தில் தான், கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சி.யும் சிறாவயல் வருகிறார். வாஞ்சிக்கு உணர்ச்சி ஊட்டிய, கப்பல் ஓட்டிய தமிழன் சிறாவயல் வருகிறார்.
‘ராட்டை நூற்பதையும் தக்களி நூற்பதையும் பார்த்துவிட்டு, ‘வாள் ஏந்த வேண் டிய கைகள் நூல் ஏந்துவதா?’ என்று வ.உ.சி. கேட்டபோது, அது வாள் ஏந்துவ தற்கு மறுத்துவிடுகின்ற மாற்று அல்ல. இதுவும் வீர உணர்ச்சிதான்’ என்கிறார் ஜீவா.

அன்று மாலை பொதுக்கூட்டம். ஜீவா வின் முழக்கத்தைக் கேட்கிறார். ‘அஞ்சு
கின்றவர்களும் கெஞ்சுகின்றவர்களும் நாட்டுக்கு விடுதலையைத் தேடித்தர
முடியாது. ஆனால், எதற்கும் அஞ்சாத சிங்கமாகிய இந்த ஜீவானந்தம் போன்ற
வர்களால்தான் நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் என்று, செக்கு இழுத்த வீர சிதம்பரம் சிறாவயலில் முழங்கி விட்டுச் சென்றார்.

அப்படிப்பட்ட தொடக்ககால வாழ்வில்,சமதர்ம உணர்ச்சி இருந்தது. சாதிய
எண்ணங்கள் அழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஒரு சிறிய
செய்திதான். அவருடைய தம்பி நடராசன். குருகுலத்தில் இன்னொரு இளை ஞனை, சாதியைக் குறித்து இழித்துப் பேசிவிடுகிறான். அதை அறிந்த மாத்திரத் தில் ஜீவா, அனல் கக்கும் விழிகளோடு வெகுண்டு, அங்கே இருந்த புளியமரத் தில் ஒரு விளாறைப் பிடுங்கி, இரண்டு விளார்கள் ஒடிகிற அளவுக்கு அவரது தம்பியை அடிக்கிறார்.

ஏ.கே.செட்டியார் ஓடிவந்து தடுக்கின்ற போது, ‘ஆண்டான் அடிமை என்ற
உணர்ச்சிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராட வேண்டிய இந்தக் குருகுலத்தில், பாசறையில்,இப்படிப்பட்ட உணர்ச்சி இவனுக்கு இருக்கலாமா? என்று கேட்கிறார்.அப்படிப்பட்ட உணர்வுகள்தான், தந்தை பெரியாரிடம் அவ ரைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. சுயமரியாதைக் கருத்துகள் அவரது உள்ளத் தில் படர்ந்தன.

1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியா ரோடு ஜீவா பங்கு ஏற்றார். 1930 ஆம் ஆண்டு, விருதுநகரில் நடைபெற்ற சுய மரியாதை மாநாட்டில் ஜீவா பங்கு ஏற்றார். 1934 ஆம் ஆண்டு, தூக்கு மேடைக் குப் போகின்ற நேரத்திலும்,‘இன்குலாப் ஜிந்தாபாத்-புரட்சி ஓங்குக’ என்று முழங்கி, இந்த நாட்டின் வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றானே பகத்சிங், அவன் எழுதிய, ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற புத்தகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார் ஜீவா. தந்தை பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக, அவர் மீது வழக்குப் போடப்பட்டது.

இவையெல்லாம் வரலாற்றுச் செய்திகள்.

ஜீவா, ஒரு சிறந்த கவிஞர். அவரது கவிதையைச் சொல்லித்தான் நான் இங்கே பேச்சைத் தொடங்கினேன். ‘சுயமரியாதைச் சொன்மாலை’ என்று அவர் முதன் முதலாக ஒரு குறு நூலை வெளியிடுகிறார். அது அவரது ஆத்திசூடி. ‘தூக்கு மேடையிலும் ஊக்கம் கைவிடேல்’ என்ற உணர்ச்சி முழக்கம்கொண்ட சுய மரியாதைச் சொன்மாலையை அவர்தந்தார். ‘உண்மை விளக்க நிலையம்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்.

1932 ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது, ‘பெண் உரிமைக் கீதங்கள்’ என்று
இருபத்திரண்டு பாடல்கள் அற்புதமான பாடல்கள் ஜீவா எழுதினார்.

புரட்சி பற்றி ஜீவா

புரட்சி என்பது புதுமைக் கூத்து
புரட்சி என்பது புத்துயிர் வெள்ளம்
புரட்சி என்பது புதிரைத் தீர்த்தல்
புரட்சி என்பது போரிற் பெரிது
புரட்சி என்பது புதுமைக் கீதம்
புரட்சி என்பது புத்துயிர் முரசு
புரட்சி என்பது பொறுமைக்குறுதி
புரட்சி என்பது போம்பணிக்கறுதி
புரட்சி என்பது பூகம்ப வேகம்
புரட்சி என்பது பூரணமாற்றம்
புரட்சி என்பது புரட்டின் வைரி
புரட்சி என்பது புவித்தாய் நகைப்பு

கலை இலக்கியப் பெருமன்றத்தாருக்கு ஒன்றைச் சொல்கிறேன்.

1961 ஆம் ஆண்டு கலை இலக்கிய பெரு மன்றத்தை ஜீவா நிறுவினார். பொது
உடைமை இயக்கத்தில், இந்த மண்ணில் வளர்ந்த கலைகள், இந்த மண்ணுக்கு
உரிய மொழி, கலை, இலக்கியம் இதனுடைய தாக்கம் இருக்க வேண்டும் என்ற வகையில், கார்க்கியைப் போற்றிய நாடுதானே ருஷ்யா? இலக்கிய வாதி களைப் போற்றுவதுதானே பொது உடைமைக்கும் ஏற்றது? மாவோ ஒரு தலை சிறந்த கவிஞன் அல்லவா?

நூறு மலர்கள் பூக்கட்டும்;
எண்ணற்ற சிந்தனைகள்
முகிழ்க்கட்டும்

என்று கூறிய மாவோ, ஒரு அற்புதமான கவிஞன்.

அதைப்போல, கலை இலக்கியப் பெரு மன்றத்தை, ஒரு தொலைநோக்குப்
பார்வையோடு உருவாக்கினார் ஜீவா. இங்கே பேசுவதற்கு, அடியேனுக்கு ஒரு
தகுதி உண்டு. கலை இலக்கியப் பெரு மன்றம் 1961 இல் தொடங்கப்பட்டது.

1962 ஆம் ஆண்டு, குறுக்குச் சாலையில்,மூன்று நாள்கள் கலை இலக்கியப் பெரு மன்றத்தின் மாநாடு நடைபெற்ற பொழுது, நான் சவேரியார் கல்லூரியின்
மாணவனாக, என் அருமைத் தோழர் இளசை அருணாவின் ஏற்பாட்டின்பேரில்,
குறுக்குச்சாலை மாநாட்டுக்குச் சென்று பேசினேன்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் வந்து இருந்தார். குமரி அனந்தன் வந்து இருந் தார். தஞ்சை ராமமூர்த்தி வந்து இருந்தார். ‘வீரத்தில் சிறந்தவன் இலக்குவனா? இந்திரஜித்தனா?’ என்ற பட்டிமன்றத்தில், ‘இந்திரஜித்தன்’என்ற அணியில் நான் பேசினேன்.

அதற்கு அடுத்த ஆண்டு, சோஷலிச சமுதாயத்தில் தனிமனித சுதந்திரம் உண் டா? இல்லையா? என்ற பட்டிமன்றம், அடிகளார் தலைமையில் அவர் நடுவர் ஏற்க, தொ.மு.சி.ரகுநாதன் ஒருபக்கத்தில்,பாலதண்டாயுதம் இன்னொரு பக்கத் தில். நான் ஒரு அணியில் நின்று பேசினேன். 1962,1963, 1964, 1965 என தொடர்ந்து
நான்கு ஆண்டுகள், குறுக்குச்சாலை கலை இலக்கியப் பெருமன்றத்தார் நடத் திய மாநாட்டில் பங்கு ஏற்றவன் என்ற தகுதியோடு, ஜீவா விழாவில் இன் றைக்கு நான் இங்கே பூதப்பாண்டியில் பேசுகிறேன்.

நான் முதன்முதலாக ஜீவாவை எப்பொழுது பார்த்தேன்?

இதோ அமர்ந்து இருக்கிறார்களே சின்னஞ்சிறு பிள்ளைகள், அவர்களைப் போல, 12 வயதில் நான் கிராமத்துப் பள்ளி மாணவன். என் ஆசிரியர்கள் மிகுந்த
இலக்கிய உணர்வு மிக்கவர்கள். என்னை ஒரு பேச்சாளனாக வார்ப்பித்தவர் கள். அவர்கள் எட்டயுரத்து பாரதி விழாவுக்கு எங்கள்பள்ளியில் இருந்து எங் களை அழைத்துச் சென்றார்கள்.

எட்டயபுரத்தில் மாரியப்ப நாடார் பள்ளிக்கூடம் இன்றைக்கும் இருக்கிறது. அங்குதான் எங்களை அழைத்துச் சென்று, இரண்டு நாள்கள் தங்க வைத்தார் கள். இரண்டு நாட்கள் விழா. மாநாட்டுப் பந்தல் பெரிய பந்தல். சின்னப் பிள்ளை கள் நாங்கள். 

அங்கே ஒருவர் பேசினார். எனக்கு அந்தப் பேச்சுகளின் கருத்து கள் நினைவில் இல்லை. ஆனால், ஒரு ருத்ர தாண்டவத்தை நான் அந்த மேடையில் பார்த் தேன். ஒரு கரம் உயர்கிறது. இன்னொரு கரம் உயர்கிறது. இப்படித் தான் திரி புரம் எரித்த விரிசடைக் கடவுள் ருத்ர தாண்டவம் ஆடியிருப்பானோ? என்கிற அளவுக்கு அந்தக் கண்கள் கோவைப் பழம் போலச் சிவக்கின்றன.இடி இடிப் பதைப்போல கர்ஜனை எழுகிறது. மேடையின் ஒரு பக்கத்தில் இருந்து இன் னொரு பக்கம்வரை சென்று பேசி வருகிறார். ஒலிபெருக்கியை விட்டுச் சென் று பேசுகிறார். ஆனால், குரல் முழக்கம் நெடுந் தொலைவுக்குக் கேட்கிறது.

நான் எனது பள்ளி ஆசிரியரிடம் கேட்டேன். ‘பேச்சே பயமாக இருக்கிறதே, இவர் யார்?’ என்றேன். ‘அவர்தான் ஜீவானந்தம்’ என்று சொன்னார். அதற்குப் பிறகு, அவரைச் சந்தித்துப் பழகுகின்ற வாய்ப்பெல்லாம் என் வாழ்நாளில் கிடைத்தது இல்லை. தொலைவில் இருந்து அறிந்ததும் படித்ததும்தான்.

ஆனால், சின்ன வயதில் எட்டயபுரம் பாரதி விழாவில் அந்த மேடையில் அவர் பேசிய அந்தக் காட்சிதான் என் கண்ணுக்குத் தெரிகிறது. அவரது கைகளை உயர்த்து வதும், ஒருபக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் போவதுமென மேடை முழுக்க அவர் உணர்ச்சி யோடு கலந்து விடுகிறார். அவருடைய எண்ணங்களோடு ஒன்றிக் கலந்து விடுகிறார்.

ஒரு பேச்சு, ஒரு உரை மக்களின் இதயத்தை எப்பொழுது ஈர்க்கும் என்றால், பேச்சு என்பது சத்தியமாக இருக்க வேண்டும். நெஞ்சில் இருந்து வர வேண் டும். உள்ளத்தில் உண்மை இருந்தால் வாக்கிலும் உண்மை இருக்கும்.அந்த உணர்ச்சி, அவரது அடிநாதத்தில் இருந்து வருகிறது. இருதய கபாடத்தில் இருந்து வருகிறது.ஊனோடு உயிரோடு கலந்து இருக்கிற உணர்ச்சி அவரு டைய நாவினில் நடனமாடுகிறது. இடியின் முழக்கமாகக் கேட்கிறது. மின்ன லின் வீச்சாகக் காட்சி அளிக்கிறது. பிரளயம் போல் எழுகிறது.

அந்தப் பேச்சுக்குச் சொந்தக்காரன் படைப்பாளி ஜீவா என்பதனால், அந்த ஜீவா வின் பிறந்த நாள் விழாவில் அவர் பிறந்த மண்ணில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து விட்டுப் பேசுகின்ற இந்த நல்ல வாய்ப்பை இன்றைக்கு நான் பெற்று இருக்கிறேன்.

ஒரு மாமனிதனின் பெருமையை, அவருடைய சிந்தனை ஆற்றல், அவரு டைய இலக்கியப் புலமையை, அந்த ஊரிலேயே பேசுவது சிறப்பு.

1935 ஆம் ஆண்டு திருத்துறைப்பூண்டியில் கருத்து வேறுபாடுகொண்டு அவர் பெரியாரைவிட்டு விலகுகிறார், இயக்கத்தில் இருந்து வெளியேறுகிறார்.
‘தமிழ்நாடு சமதர்மக் கட்சி’ என்ற ஒரு அமைப்பை உருவாக்குகிறார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில், சோஷலிஸ்ட்டு கள் இருந்தார்கள். அந்த சோஷலிஸ்ட்கள்தாம், பின்னர் கம்யூனிஸ்டுகள் ஆனார்கள். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இருந்தார்கள். ஜீவா அதில் இருந்தார்.

ஒருகட்டத்தில், கம்யூனிஸ்ட்டு களை வெளியேற்றவேண்டும் என்று ஆச்சார் யா நரேந்திர தேவ் சொன்ன போது, நேருக்குநேர் ஆச்சார்யா நரேந்திர தேவி டம் வாதிட்டு வாயடைக்கச் செய்தவர் ஜீவா என்பதை அவரது வரலாற்றில் நான் படித்து இருக்கிறேன். அவர் கம்யூனிஸ்ட்தான். ஆனால், இந்த மண்ணின் உரிமையை எள் அளவும் விட்டுக்கொடுக்க மாட்டார்.

இதோ அருகில் இருக்கின்ற மலையாள நாட்டில், ஏ.கே.கோபாலன் தலை சிறந்த கம்யூனிஸ்ட் தலைவர்.மாபெரும் தலைவர். ‘தேவிகுளம், பீர்மேடு எங்களுக்கே சொந்தம்’ என்று அவர் குரல் கொடுத்தபோது, சம்மட்டி அடிப்ப தைப்போல அதை மறுத்து, செவிட்டில் அடிப்ப தைப்போலச் சொன்னவர் இந்த நாஞ்சில் மண் தந்த ஜீவா என்பதை இன்றைக்கு நான் பெருமையோடு கூறு கிறேன்.

‘எல்லை கமிஷன் வரையறுக்க வேண்டுமே தவிர, ஏ.கே.கோபாலன் அல்ல. ஏ.கே.கோபாலன் சொல்வது கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து அல்ல. அவரது தனிப்பட்ட கருத்து’ என்று சொன்ன ஜீவாதான், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்த பகுதிகளை கேரளத்துக்குச் சொந்தம் என்று சொல்லப்பட்ட பகுதிகளை, ‘இல்லை இது எங்கள் தாய்த்
தமிழகத்தின் அங்கம்’ என்று சொல்லி, அன்று போராடிய போராளிகளுள் ஒருவராகத்தான் ஜீவா இருந்தார்.

ஜீவா எத்தனை பணியாற்றி இருக்கிறார்? எவ்வளவு சிறப்பு செய்து இருக் கிறார்? அவருடைய வாழ்க்கையே போராட்ட வாழ்க்கை. வறுமை, அவர் தேடிக்கொண்டது. இல்லாமை, அவர் ஏற்றுக்கொண்டது. நான் இன்று இங்கு
அரசியல் பேச மாட்டேன். நான் மேடைக்கு வந்தவுடன் சொல்லி விட்டேன். அரசியல் பேசுகிற இடம் இது அல்ல.மாமனிதனைப் பற்றிப் பேசுகிற இடம். நான் அவரைப் பற்றித்தான் பேசுவேன். அவர் புகழைப் பற்றித் தான் பேசுவேன்.

பொதுவாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்றால், அவரைப் போல என் போன்றவன் வாழ்ந்துவிட முடியாது.ஆனால், அவரைப்போன்றவர்கள் காட் டிய பாதையை எண்ணிப் பார்த்து, ஒரு சத்தியவந்தனாக வாழ்ந்த ஜீவாவைப் போல, அவரைப்போல ஆகமுடியா விட்டாலும், அந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறவன் நான். ஜீவா அமைச்சராக இருந்தது இல்லை. ஆள் அம்பு எதுவும் இல்லை. சொத்துகளைக் குவிக்கவில்லை. ஆனால், கொள்கைக்காக இலட்சியத் துக்காக வாழ்ந்த மாமனிதர். ஆந்த ஜீவாவின் புகழ், இந்த மண் இருக்கின்றவரை இருக்கும். பூதப்பாண்டி என்ற ஊர் இருக்கின்ற வரையிலும் இருக்கும்.

இலக்கியத்தில் அவருக்கு எவ்வளவு புலமை! அவர் எழுதிய எழுத்துகளை நான் புரட்டிப் பார்த்தேன்.புறநானூறை, கலித்தொகையை, சங்க இலக்கியங்களை
அவர் எடுத்துப் படைக்கின்ற ஆற்றலை வியக்காமல் இருக்க முடியவில்லை. புறநானூறை எழுதுகிறார், புதிய கோணத்தில் அதற்கு விளக்கம் தருகிறார்.

‘தென்கடல் வளாகம் பொதுகையின்றி உண்பது நாழி உடுப்பது இரண்டே’ இதற்கு விளக்கம் தருகிறார்.

இங்கே மழை லேசாகப் பெய்து, கொஞ்சம் இடைவெளி விட்டு இருக்கிறது. மழை வந்தால்தான் என்ன? மழையும் வாழ்த்துகிறது நமது ஜீவாவை என்று எண்ணி மகிழுவோம் என்று தான் நான் வந்தேன். மாமழை போற்றுதும் மா மழை போற்றுதும் என்போம் அல்லவா? அதற்கு ஜீவா சொல்கிறார். அவர் எழுதிய பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை. அன்றிருந்த ஆட்சியா ளர் களின் தலைவர்களது பெயர்களைச் சொல்லி, இவர்களிடம் கேட்டால், விலைவாசி கூடிவிட்டதே? விவசாயம் நாசமாகி விட்டதே? பயிர்கள் பாழாகி விட்டதே? மக்கள் வேதனையில் அமிழ்ந்து துடிக்கின்றார்களே?

இங்கே நமது விவசாய சங்கத் தலைவர், இன்றுள்ள உழவர் குடிமக்களின் கண்ணீரை நீங்கள் கொஞ்சம் பேசக்கூடாதா? என்று கேட்டார். நான் ஜீவாவைப் பற்றி மட்டும் பேசுகிறேன்’ என்று சொன்னேன். ஜீவா ஓர் இமயமான இலக்கிய வாதி. ஜனசக்தி, சமதர்மம், அறிவு இதழ்களின் ஆசிரியர்.

ஜீவா சொல்கிறார். உழவர் பெருங்குடிமக்களின் துயரத்துக்கு, துன்பத்துக்கு விலைவாசி ஏற்றத்துக்கு இந்த அரசு இதனையெல்லாம் தடுப்பதற்கு முயல
வில்லை என்று கேட்டால், ஆளும் துரைத்தனத்தார் சொல்கிறார்கள் மழை பெய்யவில்லை, நாங்கள் என்ன செய்ய முடியும்? என்கிறார்கள். மழை பெய்ய வில்லை, அரசு என்ன செய்யமுடியும்? முதல்மந்திரி என்ன செய்ய முடியும்? இதற்கு நாங்களா பொறுப்பு? மக்கள் கஷ்டப்படத்தான் செய்வார்கள் என்று சொன்னதற்கு,ஜீவா எழுதுகிறார் தோழர்களே, என்ன அழகாக புறநானூற்றில் இருந்து எடுத்துக்கொண்டு வந்து சொல்கிறார்

மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர் பழிக்கும் கண்ணகன் ஞாலம்

மழை பெய்யாவிட்டால், வாவி குளங்கள் நிரம்பா விட்டால், இயற்கை பொய்த் து விட்டால், மழை பெய்யாமல் மக்கள் துன்பத்தில் ஆழ்ந்துவிட்டால், அரச னைத் தான் அந்த உலகம் பழிக்கும். அந்த மக்களைக் காக்கின்ற கடமை தவறி யவன் என்று மன்னனைத்தான் பழிக்கும்’ என்று புறநானூற்றுப் புலவன் சொன் னான் என்று எழுதுகிறார் ஜனசக்தியில்.

என்ன அற்புதமான சிந்தனை!

பாரதியைப் பற்றிப் பலர் எழுதி இருக்கிறார்கள், பேசி இருக்கிறார்கள். ஆனால், அந்தக் கனல் கக்கும் முண்டாசுக் கவிஞனின் கவிதைகளோடு உயிரோட்டத்
தோடு கலந்துவிட்டவர் ஜீவா. அவர் பாரதியைப் பற்றி எழுதியதும், பேசியதும் நிகரற்றது.

யாரை நண்பனாகக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறார் தெரியுமா ஜீவா?

புலிகளை மட்டுமே நீ நண்பனாகக் கொள்ளவேண்டும் என்கிறார்.

இங்கே சுருக்கு எழுத்தாளர்கள் வந்து இருக்கிறார்கள்.அரசாங்கத்தின் ஒற்றர் கள் வந்து இருக்கிறார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டுவிட்டுப் போகிறபோது
ஜீவாவின் பெருமைகளில் மனமெல்லாம் பூரித்துத்தான்போவார்கள். அவர்கள் நமது நண்பர்கள் தான். ஆனாலும் கடமை இருக்கிறது அல்லவா? வைகோ அல்லவா பேசுகிறான் பூதப்பாண்டியில். 

நேற்று சென்னையில் பேசியதற்கு இன்று என் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப் பட்டதாக மாலையில் செய்தி வந்தது. நேற்று அண்ணன் பழ.நெடுமாறனும், மருத்துவர் ராமதாசும்,ஈழத்தமிழர்களுக்காக நாங்கள் தலைநகர் சென்னையில் உரையாற்றியதற்கு, எங்கள்மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக மாலை ஒரு செய்தி வந்தது. அந்தச் செய்தியைச் செவியில் வாங்கி இதயத்தில் சுமந்து கொண்டுதான் நான் பூதப்பாண்டிக்கு வந்து இருக்கிறேன்.

பூதப்பாண்டியில் இவன் என்ன பேசப்போகிறான்? என்று பதிவு செய்கின்ற கடமையைச் செய்வதற்கு அவர்கள் வந்து இருக்கிறார்கள். பாருங்கள் பூதப் பாண்டியில் போய் விடுதலைப்புலிகளை மட்டுமே நீ நண்பனாக கொள்ள
வேண்டும் என்று வைகோ பேசினான் என்று சொல்லலாம். நான் சொல்ல வில்லை. ஜீவா சொல்கிறார்,புலிகளைத் தான் நண்பர்களாக ஏற்றுக்கொள் என்று.

அவர் எழுதுகிறார். தமிழ் இலக்கியத்தில் சோழன் நல்லுருத்திரன் இயற்றிய கவிதையை எழுதுகிறார். யாரை நீ நண்பனாகக் கொள்ளவேண்டும் தெரியுமா?

வரப்பு ஓரங்களில் சின்னஞ்சிறு வளைகளில் பதுங்கிக் கிடக்கின்றதே எலிகள், அவை பிறர் பொருளைக் களவாடுகின்றவை. பிறர் உழைப்பிலே சேமித்து வைத்து இருக்கின்ற தானியங்களைத் திருடிக் கொண்டுபோய், விளைந்த கதிர் களைத் திருடிக்கொண்டுபோய், புதுமணப் பெண் போலத் தலைசாய்ந்து நிற்கக் கூடிய நெற்கதிர்களைத் திருடிக்கொண்டு போய்த் தங்கள் வளையில் ஒளித்து வைத்துக் கொள்ளக்கூடிய திருட்டுக்குணம் படைத்த எலிகளை நீ நண்பனாகக்
கொள்ளாதே.

அப்படியானால் யாரை நண்பனாகக் கொள்ள வேண்டும்?
தொடரும் .....

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment