Saturday, October 5, 2013

மறுமலர்ச்சி பயணம் ,தூத்துக்குடி மாவட்டம்-வைகோ உரை

மாற்றத்தைத் தருகின்ற வலிமையோடு,மக்களைச்சந்திக்கின்றது மறுமலர்ச்சி தி.மு.கழகம் தமிழ்நாட்டு வாக்காளர்களே,நேர்மையான அரசியலை ஊக்கு விக்க, ஆதரவு தாரீர்!

மறுமலர்ச்சிப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி வைத்து மக்கள் தலைவர் #வைகோ வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டம் - செய்துங்கநல்லூரில் 30.09.13 அன்று,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத் தைத் தொடங்கினார்.நிகழ்ச்சியின்போது அவர் ஆற்றிய உரையில் இருந்து.....
தியாகத்தாலும், உழைப்பாலும், தன்னலமற்ற நேர்மையாலும், தந்தை பெரியா ரின் சுயமரியாதையோடு பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய வழியில் தமி ழக நலனுக்காக பாடுபட்டு வருகிற தமிழக வாழ்வாதாரங்களைக் காக்கப் போ ராடி வருகின்ற, அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத் தில் உறுதி என்ற முழக்கங்களை மக்களிடம் வைத்து,நாட்டு மக்களின் நன் மதிப்புக்கு உரியதாக இருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மக்களைச் சந்திக்கின்ற பயணத்தை பழம் பெருமை வாய்ந்த தாமிர பரணி ஆற்றங்கரையில்,செய்துங்கநல்லூரில் தொடங்கி வைக்கக்கூடிய அரி யதோர் வாய்ப்பைப் பெற்று உங்கள் முன்னால் நிற்கின்றேன்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்

என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னார்.

நெஞ்சிலே துணிவும், உறுதியும் கொண்டவர்கள் நினைத்ததை சாதித்து முடிப் பார்கள் என்றார். அப்படிச் சாதிக்கின்ற மனோதிடம் கொண்ட ஒரு வீரமிக்க பட்டாளம்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நிருபிக் கின்ற விதத்தில், நாங்கள் இருபதாண்டுக் காலமாக தமிழகத்தினுடைய நல னுக்காக நம் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்காகப் போராடி வருகிறோம்.

எங்களது மறுமலர்ச்சிப் பயணத்தைத் தொடங்குவதற்கு, செய்துங்கநல்லூரை
நான் முதல் ஊராகத் தேர்ந்து எடுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது.

“செய் அல்லது செத்து மடி” என்று 1942 ஆகஸ்டு புரட்சியில் மும்பை மாநகரி லே தேசப்பிதா மகாத்மா காந்தி அறைகூவல் விடுத்தார். அப்படிப்பட்ட செயல் திறன் கொண்டவர்களை செய்துங்க நல்லூரில் நான் காண்கிறேன்.

நீண்ட காலத்துக்கு முன்பு இந்தப் பகுதியில் இப்படிப்பட்ட தார்ச்சாலைகள் கிடையாது. இவ்வளவு போக்குவரத்து வசதிகள் கிடையாது. அப்பொழுது பொதிகைமலை அடிவாரத்தில் இருந்து, திருக்குற்றாலம் செங்கோட்டை, சிவ கிரி, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்குப்
போவதற்காக மக்கள் வருவார்கள்.அறுபடை வீடுகளுள் ஒன்றாகிய குமரன்
குடிகொண்டு இருக்கின்ற சூரபத்மனை வதம் செய்து, அவனைத் தன்னோடு
ஐக்கியப்படுத்திக்கொண்ட குன்றக்கடவுள் முருகப்பெருமானுடைய சன்னி தானத்திற்குப் போகவேண்டும் என்று மக்கள் வருவார்கள். அவர்கள் பசியாறு வதற்கும் இளைப்பாறுவதற்கும் இடம் வேண்டும். அவர்கள் இங்கே வந்து
உணவு சமைத்து உணவு உண்டு ஓய்வு எடுத்து அதற்குப் பிறகு செல்வர்.

ஆம்; ‘செய்து உண்க நல்லூர்’ - உணவைச் சமைத்து, உண்டு ஓய்வு எடுத்துச் சென்றனர்.

எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நலனே என்று சொன்ன தைப்போல, நல்ல மனம் கொண்ட மக்கள் இங்கே இருந்ததால், செய்து உண்க நல்லூர் என்று இந்த ஊருக்குப் பெயர் வந்தது.

இன்னொரு காரணமும் சொல்வார்கள்.தாய்மார்கள் தங்கள் கைக் குழந்தைக ளைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். இங்கே இருக்கின்ற மரக்கிளைகளில் தொட்டில் கட்டுவார்கள். இப்பொழுது வீசுகின்ற இந்தக் காற்றை விட இன்னும் சுகமான சுத்தமான காற்று வீசும்.

தாமிரபரணி ஆற்றங்கரையிலே வருகிற காற்று அவ்வளவு சுகாதாரமான காற்று.அந்தத் தென்றல் காற்று, மாலை வேளையில் வீசும். இந்தப் பகுதி மக்க ளுக்குப் பரவசம் ஊட்டும்.அப்பொழுது அந்தத் தொட்டில்களிலே மந்த மாருதம் தவழ, தாலேலோ பாடி அந்தக் குழந்தைகளை தூங்க வைப்பார்கள்; பாட்டுப் பாடி தூங்க வைப்பார்கள். அதாவது, சேய் தூங்க நல்லூர். சேய் நல்லூர். என் றால் குழந்தை.தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இந்தத் தொட்டிலில் கட்டி தூங்க வைத்த காரணத்தினால், இந்த ஊருக்குச் சேய் தூங்க நல்லூர் என்றும் பெயர் வந்ததாகக் கூறுவார்கள். காலப்போக்கில் அது மருவி செய்துங்கநல் லூராக வந்தது என்ற இன்னொரு செய்திக்குறிப்பும் இருக்கின்றது.

இங்கே கழகத்தினுடைய தோழர் ஒருவர் தனது அருமை மகளைத் தூக்கிக்
கொண்டுவந்து என்னிடத்தில் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.நான்
இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தைக் காப்பதற்காக போராடுபவன் என்பதை
நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.தாமிரபரணி உரிமை காக்கப் போராடுகி றோம். தமிழகத்தின் இயற்கை வளமெல்லாம் அழிந்து போகிறதே, நேற்றைய தினம் ஏரலில் விவசாய மக்களுக்காகவே போராடி வாழுகிற நயினார் குலசே கரன் தலைமையில், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு விவசாயிகள் மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டிலே பேசுகிறபோது சொன்னேன், இந்தியாவில்
இருக்கக்கூடிய நதிகளிலே மிகப் பழமையான நதி தாமிரபரணி நதிதான். இது கங்கை நதியை விட மிகப் பழமையானது. யுகங்களைக் கடந்தது.ஒவ்வொரு நதியும் ஒரு யுகத்தோடு முடிந்துபோகும் என்பார்கள்.

இன்னும் ஒரு செய்தி, இன்றைக்கு நமக்கு உரிமை உள்ள நதிகளை எல்லாம்
பக்கத்து மாநிலத்துக்காரன் ஆக்கிரமிப்புச் செய்து தொல்லை கொடுக்கிறான்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்,தமிழகத்தின் பணத்திலே நெய்யாறு இட துகரை சானல் கால்வாயை அமைத்தார். கேரளாக்காரர்களும் பயன் பெறட்டும் என்று செலவு செய்து அமைத்தார்.

ஆனால் இன்று, கேரளம், குமரி மாவட்ட மக்களுக்குக் கொடுக்க வேண்டிய
தண்ணீரைக் கொடுப்பது இல்லை.முல்லைப் பெரியாறு அமைந்த இடமே நம் முடைய மண்தான். அதை மார்ஷல் நேஷமணியே சொல்லி இருக்கிறார்.பென் னி குயிக் அணையைக் கட்டினார்.அதை உடைக்க கேரளா திட்டம் தீட்டிக்
கொண்டு இருக்கிறது. வடக்கே, ஆந்திரா பாலாறுக்குக் குறுக்கே அணை கட் டித் தடுக்கிறது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக தமிழகத்தை வாழ வைத்த
காவிரிக்குக் குறுக்கே கர்நாடகம் தொடர்ந்து அணைகள் கட்டி தண்ணீர் வரவி டாமல் தடுக்கிறது. ஆக, மூன்று பக்கத்திலும் தமிழ்நாட்டுக்கு ஆபத்து வரு கிறது.

ஆனால், எந்த மாநிலமும் தொல்லை கொடுக்க முடியாத அளவுக்கு தமிழ்நாட் டிலேயே ஒரு நதி தோன்றி தமிழ்நாட்டிலேயே கடலில் போய்ச் சேருகிறது என்றால், அது இந்தத் தாமிரபரணி நதி ஒன்று மட்டும்தான். பொதிகையில் தோன்றி காயலில் கலக்கின்ற இந்த நதி, பாபநாசத்திலே வந்து மேலே இருந்து கீழே குதித்து மின்சாரத்தையும் தருகின்றது.

அப்படிப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரையில், செய்துங்க நல்லூரிலே உங்க ளை நான் சந்திக்கின்றேன்.
தமிழகத்தினுடைய வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்.மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது. தமிழகத்துக்கு கேடு செய் கிறது. நான் மேலே குறிப் பிட்ட அனைத்துப் பிரச்சினைகளும் காங்கிரஸ் தலைமை தாங்குகின்ற ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி அரசுதான் காரணம். போதாக்குறைக்கு அது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியா கட்டும், இப்பொழுது நடைபெறுகிற அனைத் திந் திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஆகட்டும், ஆயிரக்கண க் கான ஆண்டுகளாக நமது முன்னோர்கள் பாதுகாத்துப் பராமரித்து வந்த ஆற் றுப் படுகையினுடைய மணல் சுரண்டப்பட்டு,கோடானுகோடி செல்வம் கொள்  ளையடிக்கப்பட்டு, நமது எதிர்காலமே பாலைவனம் ஆகக்கூடிய அளவுக்கு அரசியல் ஊழல் காரணமாக இந்த அக்கிரமம் தொடர்ந்து  நடைபெற்றுக்கொண் டே வருகிறது.

ஆற்று மணலிலே இப்படிப்பட்ட கொள்ளை நடப்பதைப் போலத்தான் நமக்கு இயற்கை அரணாக கடற்கரை ஓரத்திலே அமைந்து இருக்கக்கூடிய தாது மண லும் கொள்ளையடிக்கப்பட்டு,கடற்கரை பகுதி வாழ் மக்கள் வாழ்வும் அழிக்கப் படுகின்ற நிலைமை வளர்ந்து வருகிறது.

மிகவும் வேதனை அளிக்கக்கூடிய வகையில், நம் கண் முன்னாலேயே இலட் சக் கணக்கான ஈழத்துத் தமிழர்கள் இலங்கைத் தீவிலே படுகொலை செய்யப் பட்டார்கள். கேள்வி கேட்பார் இல்லாமல் போய்விட்டது. ஆயுதம் கொடுத்தது இந்திய அரசு. முப்படைத் தளவாடங்களைக் கொடுத்தது காங்கிரஸ் தலைமை தாங்குகின்ற டெல்லி அரசு. ஆகவே,இலட்சக்கணக்கான தமிழர்களின் படு கொலைக்கு காங்கிரஸ் தலைமை தாங்குகின்ற இந்திய அரசு காரணம் ஆயிற் று. இன்னும் வஞ்சகம் தொடர்கிறது.இந்த படுகொலை களுக்கான நீதியை நாம் பெறவேண்டும் என்பதற்காக நீதி விசாரணை கேட்கிற வேளையில், கொழும் பிலே காமன்வெல்த் மாநாடு நடத்த இந்திய அரசே ஏற்பாடுசெய்து கொடுக் கிறது.

இங்கே, இளைஞர்கள் இருக்கிறார்கள்,கட்சிகளைச் சாராத நண்பர்கள் இருக் கிறார்கள். இப்பொழுது நாட்டுக்காகப் பாடுபடுகிற இதே உணர்வோடுதான், நெல்லை மாவட்டம் உவரியில் தம்பி சரவணனும், தம்பி ரைமண்டும் ஏற்பாடு செய்து கொடுத்த நடைபயண நிகழ்ச்சியில் தொடங்கி, கோடிக்கணக்கான மக் களைச் சந்தித்து இருக்கிறேன். தாய்மார்கள் கண்ணீரைத் துடைப்பதற்காக. உங்கள் குழந்தை களின் வருங்காலத்தைப் பாதுகாப்பதற்காக, மதுவின் கோரப் பிடியிலே இருந்து தமிழகத்தை மீட்பதற்காகப் பாடுபடுகிறோம்.

பத்திரிகையைப் புரட்டுங்கள்; ஒரு நாளைக்கு எத்தனை படுகொலைகள்? நெஞ் சைப் பதற வைக்கிற சம்பவம் அனைத்துக்கும் மதுதான் காரணம். மது குடிப்ப வரைத் திருத்திவிட முடியாது.ஆனால், தெருவுக்குத் தெரு மதுக்கடை களை வைத்து இருப்பதனால்தான் குடிக்கப் போகிறார்கள். பாடசாலைக்குச்செல்கிற பிள்ளைகளுக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொள்ளும். ஒழுக்கம் சிதையும். ஆரோக்கியம் கெடும். சமூக வாழ்வு சீரழியும். பெண்கள் எங்கேயும் பாதுகாப் பாக நடமாட முடியவில்லை.எண்ணற்ற சம்பவங்கள். கொலை நடுங்க வைக் கக்கூடிய சம்பவங்கள்.

பத்திரிகைகளைப் பாருங்கள் அனைத்துக்கும் மூலகாரணம் மதுதான்.அது மக் களை அழித்துவிடும்.

அரசாங்கத்திற்கு வருமானம் வேண்டும் என்பதற்காக வீட்டுக்கூரையைத் தீயி டுவதைப்போல, நாட்டிலே மதுவை அனுமதித்து மக்கள் வாழ்வைச் சீரழித்து
விட்டார்கள்.

நான் கேட்கிறேன், அண்ணா காலத்தில் மது உண்டா? காமராஜர் ஆட்சியில் மது உண்டா? அரசாங்க வருமானத்தைப் பற்றி, அண்ணாவும், காமராஜரும்
கவலைப்படவில்லையா? இதைப்பற்றி யோசிக்க வேண்டும். மதுவிலக்கு
இருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக மது குடிப்பார்கள், கள்ளச்சாரா யம் குடிப்பார்கள். அதைத் தடுக்க முடியாது. கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், அதைக் காரணம் காட்டி, தெருவுக்குத் தெரு ஒயின் ஷாப்பையும், டாஸ்மாக்கையும் திறந்து வைத்து இருப்பதனாலே பாடசாலைக்குப் போகிற
பிள்ளைகள், இளைஞர்கள் அந்தப் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள். தாய்மார்கள் தான் அவதிப்படுகிறார்கள்.ஒவ்வொரு வீட்டிலும், அழுகையும் கண்ணீரும் வேதனையும் ஏற்படுவதற்கு மதுவே காரணம் ஆகிறது. இது கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தவே, என் ஆருயிர்த் தம்பி ஜோயல் அவர்கள் ஏற் பாட்டில் இந்த தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஆறு நாட்கள், 1200 தோழர் களோடு வெயிலிலும் மழையிலும் நடந்து இருக்கிறேன்.

அந்தப் பயணத்தின்போது, நான் அரசியல் பேசவில்லை. ஓட்டுக் கேட்கவில் லை. சிந்திக்கச் சொன்னேன்.இது வருங்காலத்தை அழித்து விடும்.யாருக்கும் பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டுவிடும்.

நாங்கள் மக்கள் நலனுக்காகப் பாடுபடுகிறோம். நாதியற்றவர் களுக்காகக் குரல் கொடுக்கின்றோம்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்த லில் நாங்கள் போட்டியிடவில்லை.தேர்தலைப் புறக்கணித்தோம். ஆனால்
எங்களுடைய அரசியல் பணிகளை நிறுத்தவில்லை. மீனவர்கள் கொல்லப்
பட்டார்களா? நாங்கள்தான் கடமை ஆற்றினோம். முல்லைப் பெரியாறுக்கு
ஆபத்து வந்ததா? நாங்கள்தான் போராட்டக் களத்திலே நின்றோம்.கொலைகார ராஜபக்சே வருகிறானா?மூன்று மாகாணங்களைக் கடந்து விந்திய மலைக்குப் பக்கத்திலே போய் போராடக்கூடிய துணிவும் ஆற்றலும் நெஞ்சு உறுதியும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருந்தது.என்னுடைய தலை மையில் போய்ப் போராடினோம். ராஜபக்சே டில்லி பிரதமர் வீட்டுக்கு வருகி றானா? பிரதமர் வீட்டை முற்றுகையிடுகின்ற போராட்டத்தை நடத்தினோம். ஆகவே, இரண்டு ஆண்டு காலம், இடைவிடாது பாடுபட்டு இருக்கின்றோம். நாட்டு மக்கள் நலனுக் காகப் பாடுபட்டு இருக்கின்றோம்.

நாடாளுமன்றத் தேர்தல் குறிப்பிட்ட காலத்தில் வரவேண்டும் என்றால், ஏப்ரல்
மாத இறுதியில் மே முதல் வாரத்தில் நடக்க வேண்டும். அதற்கு முன்னதாகக்
கூட வரலாம். மத்திய அரசு ஆட்டம் கண்டுகொண்டு இருக்கிறது. எந்த நேரத் திலும் வரலாம். பிப்ரவரியிலே கூட வரலாம். தேர்தல் காலத்தில் உங்களை
யெல்லாம் வந்து சந்திப்பதற்கு எனக்கு நேரம் இருக்காது. எனவே,இப்பொழுதே
உங்களைச் சந்திக்க வந்து இருக்கிறேன்.

எங்களிடம் காசு பணம் இல்லை.நல்ல மனம் கொண்டவர்கள் திரட்டிக் கொடுத் த நிதியை நாங்கள் வெளிப்படையாகச் சொல்லி, வெளிப் படையாகப் பெற்று இருக்கிறோம்.அதைத்தான் பல பேர் பாராட்டி இருக்கிறார்கள். எங்களிடம் பணம் இல்லை, நாங்கள் இயங்குவதற்குப் பணம் தாருங்கள் என்று நிதியை வாங்கி இருக்கிறோம். பொதுமக்களை நம்பி நான் வந்து இருக்கிறேன்.நாங்கள்
தொடர்ந்து மக்களுக்காகப் பாடுபடுவோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் போட்டி யிடுவது என்று முடிவு எடுத்ததற்குப் பிறகு நான் முதன் முதலாக செய்துங்க நல்லூரிலே நாட்டு மக்களைச் சந்திக்கின்றேன். எந்தக் கட்சியையும் சாராத நடுநிலையாளர்கள்,இளைஞர்கள்,புதிய வாக்காளர்களே சிந்தியுங்கள்.நேர்மை யாக நாணயமாக தமிழ்நாட்டு வாழ்வாதாரங்களைக் காக்க,தமிழக உரிமை களைக் காக்க ஜாதி, மத கண்ணோட்டம் இன்றிப் பாடுபடுகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் வாய்ப்புத் தாருங்கள். நாதியற்ற வர்களுக்காக குரல் கொடுக்க வாய்ப்புத் தாருங்கள்.ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குக் குரல் கொடுக்க வாய்ப்புத் தாருங்கள்.

முல்லைப் பெரியாறா? நெய்வேலி நிலக்கரி நிறுவனமா? அந்த உரிமைகளைத் தற்காத்துக் கொடுத்த மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு வாய்ப்புத் தாருங்கள். தமி ழக மக்களுடைய உரிமைக் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க வேண் டும் என்பதற்காக, அநீதிகளை எதிர்ப்பதற்காக, வஞ்சிக்கப்படுகிற தமிழகம் அதி லிருந்து மீளவேண்டும் என்பதற்காக வாய்ப்புத் தாருங்கள். இந்தக் கோணத் தில்தான் நாங்கள் தேர்தலைச் சந்திக்க விரும்புகிறோம். பொதுமக்களை நாடி
வந்து இருக்கின்றோம்.

அரசாங்கத் திட்டங்களுக்குப் போகவேண்டிய பணம் கமிஷனாக, லஞ்சமாக, ஊழலாக கோடிக்கணக்கிலே குவிக்கப்பட்டு இருக்கிற பணம், வெள்ளமாகப் பாய்ந்ததை இடைத்தேர்தல்களிலே நான் பார்த்தேன்.வருகின்ற தேர்தலிலும் அது வெள்ளமாகப் பாயும். அது உழைத்துச் சேர்த்த பணமா? தெருத் தெருவாக
கடைகளிலே நூறு இருநூறு நன்கொடை வாங்கிச் சேர்ந்த பணமா? மக்கள் பணம்.

ஒரு ஓட்டுக்கு, ஆயிரம் இரண்டாயிரம், ஐயாயிரம்கூடக் கொடுக்கலாம். அந்த
ஒருநாளுடன் முடிந்துவிட்டது. அடுத்து அவர்கள் மக்களைப் பற்றிக் கவலைப் படப் போவது இல்லை; சந்திக்கப்போவதும் இல்லை.

ஆனால், வருகின்ற தேர்தலில் பணத்திற்காக ஓட்டுப்போடுகின்ற நிலைமை இருக்காது என்று நான்  நம்புகிறேன். ஐந்து ஆண்டுக் காலத்திற்கு நம்முடைய ஓட்டுகளை அடிமை முறிச்சீட்டாக அடகு வைத்து விடக்கூடாது. யோசியுங் கள் நீங்கள்.இந்தக் கட்சிக்குத்தான் நீங்கள் ஓட்டுப் போடவேண்டும் என்ற அடிப்படையில் கேட்கவில்லை. இந்தமுறை நான் நம்புகிறேன், இளைஞர் களிடம், மாணவர்களிடம் புதியதோர் விழிப்பு உணர்வு ஏற்பட்டு இருக்கின்றது.

திராவிட முன்னேற்றக் கழகம்,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற் றக் கழகம் இந்த இரண்டின் பிடியில்தானே தமிழகம் இருக்கிறது.இந்த இரண்டு கட்சிகளோடு கூட்டுச் சேர்கிற கட்சிகள்தானே தேர்தலில் வெற்றி பெற முடி யும்? இதுதானே தமிழ்நாட்டில் இத்தனை காலமாக இருந்து வருகிறது என்று ஒரு வாதத்தை சில நண்பர்கள் வைக்கிறார்கள்.

அவர்களுக்கு நான் விளக்கம் சொல்ல விரும்புகிறேன், மாற்றம் என்பதே, இது
சாத்தியம் இல்லை என்று கருதுகிற இடத்திலே மாறுதல் வருவதற்குப் பெயர் தான் மாற்றம். சாதாரணமாக வருவது மாற்றம் அல்ல. இது நடக்காது என்று சொல்கிறபோது, அதை நடத்திக் காட்டுவதற்குப் பெயர்தான் மாற்றம். ஆக
மாற்றம் வரும். இந்தச் சுழலில் இருந்து தமிழ்நாடு விடுபடும். அந்த மாற்றத் தைத் தரக்கூடிய முழுத் தகுதியோடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழ கம் மக்களைச் சந்திக்கின்றது. நேர்மையான அரசியல், ஊழலற்ற அரசியல், மக்களுக்குத் தொண்டு ஆற்றுகின்ற அரசியல், தமிழக மக்களை வாழ வைப்ப தற்குப் பாடு படுகிற அரசியலை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

நம்பிக்கையோடு சொல்லுகிறேன்,எங்கள் குரல் நாடாளுமன்றத்தில் வலிமை யாக ஒலிப்பதற்குத் தமிழக மக்கள் வாய்ப்புத் தருவார்கள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்

No comments:

Post a Comment