Thursday, October 31, 2013

பொதுவாழ்வில் புகழ் பூத்த சோழவந்தான் ஆவடையப்பன்!

திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவராய் இருந்த சோழவந்தான் தா.ஆவ டையப்பன், தாயாரின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் ஒருபந்தூரில் 18.09.1913 இல் பிறந்தார்.இவரது குடும்பங்களைச் சார்ந்தவர்களை வளையப் பட்டி ஜமீன் குடும்பத்தினர் எனக் குறிப்பிடுவர்.

சோழவந்தானில் கல்வி பயின்ற பின், பள்ளி இறுதி வகுப்பை மதுரை ஐக்கிய
கிருஸ்தவ பள்ளியில் பயின்றார். தேர்வு பெறாத நிலையில் கல்வி முடிவுக்கு
வந்தது. எனினும் தங்கு தடையின்றி ஆங்கிலத்தில் உரையாடும் ஆற்றலைப்
பெற்றிருந்தார்.

1935 இல் அத்தைமகள் இரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார். குடும்ப
விளக்காய் வாழ்வதற்கு இல்லத்தில் இனிய துணையாய் விளங்கிய மனைவி
குறுகிய காலத்திலேயே அகால மரணமடைந்தார். இத்துயர நிகழ்ச்சி குடும்பத் தில் பெரும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியது.ஆவடையப்பன் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். மூன்றாண்டுகள் மறுமணம் செய்து கொள்ளாது இருந்தார்.பின்னர் 1939ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் நடை பெற்றது.

மணமகள் நாடியம்மாள் -பெரியாருடைய பகுத்தறிவு கொள்கை களை ஏற்றுக் கொண்டவராகவும்,சுயமரியாதை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவராக வும் இருந்த வடக்காலத்தூர் இராசகோபால் - திருமதி மீனாட்சி சுந்தரம் ஆகி யோரின் மூத்த மகளே ஆவார். இவர் நாவலர் நெடுஞ்செழியன், இரா.செழியன்
ஆகியோரது சகோதரி என்பதும் சிறப்புக்குறியது.

தஞ்சாவூரில் நடைபெற்றது ஆவடையப்பன் நாடியம்மாள் திருமண நிகழ்வு.
அதே நாளில் அதை ஒட்டி நாவலரின் சகோதரர் செளரிராஜன் திருமணமும், காலஞ்சென்ற இரத்தினத்தின் மாமன்மகள் அழகுசுந்தரம் திருமணமும் நடை பெற்றது. இம்மூன்று திருமணங்களையும் நடத்தி வைத்து தந்தை பெரியார் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள்.

இத்திருமண மேடையில் குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்படவில்லை. ஆவடை யப்பனின் அம்மா மீனாட்சிஅம்மாளுக்கு இது ஒரு குறையாகவே பட்டது.அவர் நேரடியாக பெரியாரிடம் சென்று “அய்யா மணவறையில் குத்துவிளக்கு ஏற்றி
வைக்காமல் உள்ளது. குத்துவிளக்கு அவசியம் வைக்க வேண்டும், ஒரே ஒரு
குத்துவிளக்கு வைக்க தாங்கள் தயவு செய்து அனுமதி அளிக்க வேண்டும்”
என்று கேட்டுக் கொண்டார். சிறிதும் தயக்கமின்றி, தாமதமின்றி மாற்றுக்கருத் தையும் மதிக்கும் மான்பமைந்த தந்தை பெரியார் அவர்கள் “அம்மா நீங்கள் விரும்புகின்றவாறு எத்தனை குத்துவிளக்குகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு தடை எதுவும் இல்லை” என்று கூற குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டு திருமணங்கள் நடைபெற்றன.

மாணவப் பருவந்தொட்டே அரசியலில் ஆர்வம் உடையவராக விளங்கிய ஆவ டையப்பன் சுயமரியாதை இயக்கத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார். பெரியாரிடம் மதிப்புமிகு கொண்டிருந்த அவர்,பகுத்தறிவு பிரச்சாரத்தில் கவரப் பட்டார்.கருத்துகள் பலவற்றை ஏற்றார். 1944 இல் ஈரோட்டில் நடைபெற்ற திரா விட இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டார். நீதிக்கட்சியில் தான் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக பனகல் அரசர் நினைவு போற்றும் வகையில் சோழ வந்தானில் தன் இல்லத்திற்கு ‘பனகல் இல்லம்’ என்று பெயர் சூட்டினார்.கழகத் தோழர்களின் சரணாலயமாக விளங்கிய ‘சமதர்ம இல்லம்’ என்றால் காரைக் குடி இராம.சுப்பையா நினைவுக்கு வருவதைப்போல, சோழவந்தானில் ‘பன கல் இல்லம்’ இன்றும் நின்று நிலைக்கிறது.
திராவிடர் கழகத்தின் தொடக்க காலத்தில் மதுரை மாவட்டப் பொறுப்பாளராக பணியாற்றியவர் ஆவடையப்பன். கருத்து வேறுபாடு காரணமாக புதிய இயக் கம் காண 1949 செப்டம்பரில் சென்னையில் அண்ணாவால் கூட்டப்பட்ட கூட் டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.அண்ணா அவர்களை பொதுச் செயலாளராகக் கொண்டு தொடங்கப் பெற்ற திமுகவில் பொதுக்குழு
உறுப்பினராகவும்,தலைமைக்கழக நிதிக்குழு உறுப்பினராகவும் நியமனம் பெற் றார். ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட திமுக கழகத்தின் முதல் மாவட்டச் செயலாளர் என்ற பெருமை பெற்று பொறுப்பாகப் பணியாற்றினார்.

தென் மாவட்டங்களில் தந்தை பெரியாரின் வலக்கரமாக விளங்கிய, பெரியார் அவர்களால் தலைவர் என்று அழைக்கப்பட்ட பட்டிவீரன்பட்டி செளந்தர பாண் டியனார்,ஆவடையப்பன் மீது அளவற்ற பற்று கொண்டவர். அவரது ஆதரவில் அய்யம்பாளையத்தில் 1950 ஆம் ஆண்டு பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற் றது.இம்முகாமுக்கு பொறுப்பாளராக நாவலர் நெடுஞ்செழியன் இருந்தார்.

1952 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட திமுக முதல் மாநாடு சோழவந்தான் மந்தை களத்தில் நடைபெற்றது.பெருந்திரளாக மக்கள் கூடுவதற்கு ஏற்ப வசதியாக பந்தல் அமைக்கப்பட்டது.இரு நாட்கள் நடைபெற்ற மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக,மாவட்டச் செயலாளராக இருந்த ஆவடையப்பன் பணியாற் றினார்.

இம்மாநாட்டில் அறிஞர் அண்ணா,நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல் வர் ஈ.வே.கி.சம்பத், கலைஞர் மு.கருணாநிதி, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இரா மசாமி, மூவலூர் இராமாமிர்தத்தம்மையார் மற்றும் முன்னணியினர் கலந்து கொண்டனர்.கழகத் தலைவர்கள் பனகல் இல்லத்திலேயே போதிய வசதி இன் மையையும் பொருட்படுத்தாது தங்கினர்.

இரவில் அண்ணா அவர்கள் வீட்டின் மாடிப்பகுதியில் அமைந்த திறந்த வெளி யில் தூங்கினார். இரு நாட்களிலும் துணைவியார் நாடியம்மாள் சமையல்
வேலைக்கு தக்கவர்களை அமர்த்தி மேற்பார்வையிட்டு அனைவருக்கும் உண வு படைத்தார்கள்.அக்காலத்தில் கழகத்திற்கு போதிய நிதிவசதிக்கான வாய்ப்பு அமைந்திருக்கவில்லை.மாநாட்டிற்கான பொருட்செலவு மிகுதியாகஆனதால் கடன்பட்டார் ஆவடையப்பன். 1962 இல் திருப்பரங் குன்றத்தில் நடைபெற்ற திமுக மூன்றாவது மாநில மாநாட்டின் செயலாளராகப் பணியாற்றினார்.

1938 இல் பெரியாரின் தலைமையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும், 1950 இல் கட்டாய இந்தியை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்திலும் களம் கண்டார்.

திமுக செயற்குழு முடிவிற்கிணங்க மதுரைக்கு வந்த மத்திய அமைச்சர் அரிகி ருஷ்ண மேத்தாவுக்கு கருப்புக் கொடி காட்டி, கைதாகி ஒருவாரம் மதுரை மத் திய சிறையில் அடைக்கப்பட்டார்.

1952 ஆகஸ்ட் 1 ஆம் நாள் இந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் வகையில் ரயில், அஞ்சல் நிலையங்களின் பெயர்ப்பலகைகளில் அமைந்திருந்த இந்தி எழுத்து களை தார் கொண்டு அழித்தார். 1953 இல் ‘நான்சென்ஸ்’ என்று பேசிய பண்டித நேருவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்.

1965 மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது பிப்ரவரி 22 ஆம் நாள் தடுப்புக்காவல் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டு சிறைபடுத்தப்
பட்டார்.

சோழவந்தான் ஊராட்சிமன்ற உறுப்பினராக, 1971 இல் மதுரை மாவட்ட நூலக ஆணைக்குழு உறுப்பினராக, 1974 இல் சோழவந்தான் நில அடமான வங்கி இயக்குநராகவும் பொறுப்புகள் வகித்தார்.

1957 ஆம் ஆண்டு திமுகழகம் பொதுத் தேர்தலில் முதன் முறையாகப் பங்கேற் ற போது, சோழவந்தான் சட்டப்பேரவை தொகுதியில் கழக வேட்பாளராக
ஆவடையப்பன் அறிவிக்கப்பட்டார்.அந்தத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தலில் திராவிட இயக்க வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.அவர்களுடைய வெற்றிக்கு பெரும்பாடு பட்டார் ஆவடை யப்பன்.1967 இல் அண்ணா முதல்வராக ஆட்சி அமைந்த போது சட்ட மேலவை உறுப்பினர் பதவியோ, வேறு முக்கிய பொறுப்போ அளிக்கப் பெறலாம் என கழ கத் தோழர்கள் எதிர்பார்த்து வந்தனர்.அண்ணாவின் மறைவுக்குப்பின் அமைந்த அரசியல் சூழலால் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆவடையப்பன் அதை சிறிதும் பொருட்படுத்தவில்லை.

சோழவந்தான் உயர்நிலைப்பள்ளி ஊருக்கு வெளியே 3 கிலோ மீட்டர் தொலை வில் அமைந்திருந்தது. பெண் பிள்ளைகள் தொலைதூரம் சென்று படித்துவர அல் லற்பட்டனர். இது குறித்து கல்வித்துறைக்கு முறையீடு அனுப்பினார். தொடர்புடையவர்களை சந்தித்து பேசினார். தொடர் முயற்சியால் தனியாக பெண்களுக்கென ஓர் உயர் நிலைப்பள்ளி ஊரின் மையப்பகுதியில் சத்திரம் வளாகத்தில் தொடங்கப்பட்டது.இது தொடர்பான நடவடிக்கைகளில் காங்கி ரஸ் கட்சியைச் சேர்ந்த அன்றைய சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எஸ்.பொன்னம்மாள் ஆவடையப்பனுக்கு உறுதுணையாக இருந் தார்.

கழக ஆட்சி அமைந்தது அதனை அடுத்து பெண்கள் பள்ளியில் அறிவியல் ஆய் வகமும், பள்ளி அலுவலகத்திற்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும் அனுமதி பெற்றுத்தந்தார். மேலும் இப்பள்ளியை மேநிலைப்பள்ளியாக உயர்நிலைப் படுத்துவதற்கும், விரிவு படுத்துவதற்கு சத்திரம் வளாகம் முழுவதையும் பள் ளிக் கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி ஆணையும் பெற்றுத் தந்தார். இப்பள் ளிக்கு மேசை நாற்காலி போன்றவற்றை நன்கொடையாகவும் அளித்தார்.

சோழவந்தானில் உள்ள உள்ளாட்சி நிதி மருத்துவமனையை விரிவுப்படுத்தி
அமைக்க வேண்டி அரசிடம் முறையீடு அளித்து, நடவடிக்கைகளை மேற்
கொண்டு, மருத்துவமனை பயன் பாட்டிற்கு கூடுதலாக புதிய கட்டடமும், கூடு தல் நிதி ஒதுக்கீடும் கிடைக்கச் செய்து பொதுமக்கள் இன்றும் பயன்பெற்று வருகின்றனர்.

அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சோழவந்தானில் ஒரு பணிமனையை அமைக்கவும் அதனை மையமாகக் கொண்டு பல ஊர்களுக்கும் பேருந்துகளை இயக்குவதற்கும் உரிய அதிகாரி களைத்தொடர்புகொண்டு பணிமனை அமைத் துத்தந்தார்.

வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால்,ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த குழாய்கள் சேதமாகி குடிநீர் வழங்கல் தடைபட்டு மக்கள் அல்லலுற்றனர்.குடி நீர் வடிகால் வாரியத்தலைவரை சந்தித்து விரைவாக உரிய நடவடிக்கை எடுக் கச் செய்து, குழாய்கள் பேரூராட்சி மூலம் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கினார்.

சோழவந்தான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சோழவந்தானுக்குப் பெரு மை சேர்த்த தமிழ் பெரும் புலவர் அரசஞ் சண்முகனாரின் திருவுருவப்படத்தை அமைச்சர் காளிமுத்து திறந்து வைக்கவும், அப்பள்ளிக்கு அரசஞ்சண்முகனார் பெயரைச் சூட்டவும் ஆவடையப்பன் காரணமாய் இருந்தார்.

ஆவடையப்பனின் மணிவிழா மாலையிலும் அவர் இளையமகள் கண்ணகி யின் திருமணம் காலையிலும் 10.09.1973 இல் திருவாரூரில் சிறப்பாக, தந்தை பெரியாரின் சீரிய தலைமையின் கீழ் நடந்தது, மணவிழா முடித்து மணிவிழா வில் கலந்து கொள்ள தங்கி இருந்து தந்தை பெரியார் அவர்கள் அரிய உரை யாற்றி அனைவரையும் மகிழ்வித்தார். 1939 இல் ஆவடையப்பனின் திருமணத் தை நடத்தி வைத்த தந்தை பெரியார் அவரது மணிவிழாவிலும் கலந்து கொண் டது, ஆவடையப்பன் போன்றோரின் செயலறிந்து, பயன் அறிந்து அவரை நினைவில் நிறுத்தியது போற்றுதலுக்கு உரியது எனலாம்.

மதுரையில் நடந்த பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் மணிவிழாவுக்குச் சென்று விட்டு மகன் மருகளுடன் பாண்டியன் விரைவு வண்டியில் சென்னைக்கு பய ணம் செய்து கொண்டிருந்தார் ஆவடையப்பன். ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தி லேயே உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேரம் செல்லச் செல்ல நிலைமை மோச மாகி மூச்சுவிடவே சிரமப்பட்டார். அவ்வண்டியில் பயணம் செய்த மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்துவிட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற வேண்டும். இல்லை எனில் உயிருக்கு ஆபத்து என்றார்.

இரயில் சமயநல்லூரை நெருங்கிக் கொண்டிருக்கிறது. திண்டுக்கல்லில் இறங் கலாம் என்றால் அதுவரை தாங்காது உடனடி சிகிச்சை தேவை என்றார் டாக் டர். டிக்கெட் பரிசோதகரிடம் நிலமையைக்கூறி சோழவந்தானில் ரயிலை நிறுத்தி பயணிகளின் உதவியுடன் ரயில் நிலைய நடைமேடையில் படுக்க வைத்தனர். மகனோ செய்வது அறியாது திகைத்து நிற்க, மருமகள் நிலைய அதிகாரி உதவியுடன் டாக்டருடன் தொடர்பு கொண்டு “நான் ஆவடையப்ப முதலியார் மருமகள் பேசுகிறேன். என் மாமனார் உடல்நிலை மூச்சு விடவும் சிரமம்.ரயில் நிலைய மேடையில் கிடத்தப்பட்டிருக்கிறார்.உடனே வந்து உதவ வேண்டும்” என வேண்டுகிறார்.

அவர்களை இறக்கிவிட்ட ரயில்,நிலையத்தை விட்டு வெளியேறும் தருணத் திலேயே கார் ஒன்று நடைமேடை அருகில் வந்து நின்றது.காரிலிருந்து டாக் டர் விஜயலட்சுமியும்,டாக்டர் பைரவனும் இறங்கினார்கள்.காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்திலேயே அவசர சிகிச்சை அளித்து,காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் வைத்து உயிர் பிழைக்கச் செய்தனர். மறுநாள் ‘எமனிடம் போன என்னை என் மருமகள் திரும்ப கூட்டி வந்துவிட்டார்’ என எல்லாரிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார் ஆவடையப்பன். ‘எமனை’ வழக்குச் சொல்லாகவே பயன்படுத்தினார்.

மதுரை ஜவஹர் மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த இதய நோய் வல்லுநர் டாக்டர் முத்துசாமி, “நான் புதிதாக சிகிச்சை ஏதும் செய்ய
வில்லை. டாக்டர் விஜயலட்சுமியே தங்கள் தந்தைக்கு தேவையான சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றி விட்டார்கள்” என்றார்.

டாக்டர் விஜயலட்சுமியை தொலை பேசியில் அழைத்தபோது, நோயாளியை
இங்கு அழைத்து வாருங்கள் என்றோ, அல்லது என்னை வந்து அழைத்துச்செல் லுங்கள் என்றோ கூறாமல் ஆவடையப்ப முதலியார் என்ற பெயரைக் கேட்ட வுடன் பெண் மருத்துவர் தேவையான மருந்துகளுடன் இரவு 9 மணிக்கு மேல் தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு இன்னொரு மருத்துவருடன் சிறிதும் தாமதிக்காமல் உரிய நேரத்தில் ரயில் நிலைய நடைமேடைக்கு வருகிறார் என்றால்.....!பொதுவாழ்வில் அவர் ஆற்றிய நற்பணிகளால் எந்த அளவு எல்லா தரப்பு மக்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று புகழ் பூத்திருந்தார் என்ப தே இவரைப்பற்றிய தெளிவான உண்மை.

பெருமரம் நிலைத்து நிற்க உயிரூட்டம் தரும் வேர், தாங்கும் விழுது. நெடி
துயர்ந்த எழில்மிகு கண்கவர் மாளிகைகள் காண்போர் கவனத்தை ஈர்க்கும், நிலைபெற்று இருப்பதற்கான அடிப்படை அமைப்பு வெளியில் தெரியா.

ஓங்கு புகழ் திராவிட இயக்கம் வளர கடும் உழைப்பை நல்கி இழப்புகளை தாங் கி தளராது பாடுபட்ட பல்லாயிரக்கணக் கானவர்களில், தக்கவர் துணையோடு
தகுந்த செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மதுரை மாவட்டத்தில் திராவிட இயக்க வளர்ச்சிக்காக ஆவடையப்பன் ஆற்றிய பணிகள் அளப்பரிய னவாகும்.

1990 மார்ச் திங்களில் தமது 77 ஆவது வயதில் காய்ச்சலால் நலமின்றி சோழ
வந்தானில் இருந்தபோது,சென்னையில் தங்கையின் கணவர் இறந்துபோனார்.
அவரது மறைவும், தங்கைக்கு ஆறுதல் கூற இயலவில்லையே என்ற ஏக்க மும் அவரை வெகுவாக பாதித்தது. உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்ட நிலை யில் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு 26.03.1990 அன்று அதிகாலை
திடீரென இயற்கை எய்தினார்.

“குலவிச்சை கல்லாமல் பாகம்படும்”என்ற முதுமொழிக் கேற்ப அமரர் ஆவ டையப்பனின் ஐந்தாவது மகன் ஆ.புகழேந்தி தலைவர் வைகோ மீது பற்றும் பாசமும் மிகக் கொண்டு சமூகப் பார்வையில் தீர்க்கமாக, தெளிவாக நெல்லை யில் வாழ்ந்து வருகிறார்.ஆவடையப்பர் (18.09.1913 -26.03.1990)நூற்றாண்டு விழா நாளில் அவரது நினைவை போற்றி வணங்குவோம்!

கட்டுரையாளர் :-மு.நெடுமாறன்

No comments:

Post a Comment