பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா -மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு, 15.09.2013
அன்று, விருதுநகரில் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்றது. மாநாட்டில் கழ கப் பொதுச் செயலாளர் #வைகோ அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி வருமாறு:
கழகத்தின் வலிமையைக் காட்டும் விருதுநகர் மாநாடு
மறுமலர்ச்சி தி.மு.க.வா? எங்கே இருக்கிறது? என்று, சில வயிற்றெரிச்சல் காரர்கள் கேட்கிறார்கள். அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்கள் ஏஜெண்டு களை, இந்த விருதுநகர் மாநாட்டுப் பக்கம் அனுப்பி வையுங்கள். இங்கே இருக்கிறது. பொங்குமாங்கடல் போல் திரண்டு இருக்கிறதே, மக்கள் கூட்டம் இலட்சக்கணக்கில்.
வேல் வரும் காலை விழித்த கண் இமைத்தல் வீரத்துக்கு இழுக்கு என்று வாழ்ந் த தமிழர்களின் களங்களை வர்ணிக்கும் புறநானூற்றில், ஒரு தாயிடம், ‘உன் மகன் எங்கே?’ என்று கேட்டபோது, ‘அவன் எங்கே இருக்கிறான்? என்று எனக் குத் தெரியாது. குகையை விட்டுப் புறப்படும் புலி எங்கு செல்லுமோ, அது போல, என் வயிற்றில் பிறந்த வேங்கை, வேலும் வாளும் உராய்கின்ற ஏதே னும் போர்க்களத்தில் இருப்பான்; அங்கு போய்ப் பார்’ என்று சொன்னாளாம்.
தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்ற வார்த்தைகளைப் புரா ணத்தில் கேட்டு இருக்கின்றோம். நமது இயக்கம், சூழும் தென்கடல் ஆடும் குமரி, தொடரும் வடபால் அடல்சேர் வங்கம் எனப் பரந்து உள்ள தமிழ்நாட்டில், எளியோர் இதயத்தில், உழவர் உள்ளங்களில், உழைக்கும் பாட்டாளிகள் நெஞ் சங்களில், பட்டிதொட்டி பட்டினக்கரை என அங்கிங்கெணாதபடி, மான உணர் வுள்ள தமிழர் நெஞ்சங்களில் இருக்கிறது.
மாற்று அரசியல்
ஊழல் ஒழியாதா? அரசியலில் நேர்மை மலராதா? என்று ஏங்கும் நல்லோர் எண்ணத்தில் இருக்கிறது. கடல் கடந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் மனதில்
இருக்கிறது. ஈழத்தமிழர்களின் இதயத்தில் இருக்கிறது. நம் தமிழ்நாட்டின் உரிமை காக்கும் அறப்போர்க்களங்கள் அனைத்திலும், நாம்தானே முனை முகத்துச் சிப்பாய்கள்.
தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றும் போராட்டமா?
எமன் உலை ஆகப் போகிற கூடங்குளம் அணு உலையை விரட்டும் போராட் டமா?
தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கான வீடுகளில் கதறி அழும் பெண்கள்; கொலை கொள்ளை கற்பழிப்பு; பஞ்சமா பாதகங்களுக்கும் பலியாகும் குடும்பங்கள்;
அனைத்துக்கும் காரணமான டாஸ்மாக் கடை, ஒயின் ஷாப் எனும் மது அரக் கனை ஒழிக்க, உவரி முதல் மதுரை வரை; கோவளம் முதல் மறைமலை நகர் வரை; பொள்ளாச்சி முதல் ஈரோடு வரை, 1500 கிலோ மீட்டர் நடைபயணமா?
நெய்யாற்றங்கரை இடதுகரை வாய்க்கால் உரிமை காக்கும் போராட்டமா?
செண்பகவல்லி தடுப்பு அணை உரிமைக் களமா?
முல்லைப் பெரியாறைக் காக்கும் கிளர்ச்சியா?
அமராவதி ஆற்று நீர் காக்கவா?
காவிரி உரிமைப் போரா?
பாலாற்றின் உரிமையா?
பெண்ணை ஆற்றைக் காக்கவா?
தூக்கு மரத்தின் நிழலிலே ஊசலாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன் மென் னியை நெருங்கும் மரணக் கயிறை அறுக்கவா?
கொங்கு மண்டலத்தில் கெயில் குழாய்களை அகற்றவா?
மீத்தேன் எரிவாயு அபாயத்தில் சோழ மண்டலத்தைக் காக்கவா?
கொடியவன் ராஜபக்சே சாஞ்சிக்கு வருகிறானா?
அதனை எதிர்த்து, விந்திய மலை வரை படை எடுக்கவா?
மீண்டுமா வருகிறான் ராஜபக்சே பீகாருக்கு?
அங்கிருந்து பிரதமரையா பார்க்க வருகிறான்?
அதை எதிர்த்துத் தலைநகர் தில்லியில் முற்றுகை இடும் போராட்டமா?
அக்கொலைகாரன் ஏழுமலையான் கோவிலுக்கு வருகிறானா?
அதை எதிர்த்து, மேல்மலையிலும், அடிவாரத்திலும் கருங்கொடிப் போராட் டமா?
கடற்கரைத் தாது மணலைக் கொள்ளை அடி அக்கிரமத்தைத் தடுக்கவா?
நமது மீனவர்களை, நமது கடலிலேயே, நாள் தவறாமல் சுட்டுக் கொல்லும் சிங்களக் கடற்படையின் வெறித் தாண்டவத்தை எதிர்க்கவா?
நஞ்சை விதைத்த இலங்கைத் தூதர் கரியவாசத்தின் கொட்டத்தை எதிர்க்கவா?
என அங்கிங்கெணாதபடி அறப்போர்க்களம் அனைத்திலும் ஓங்கி ஒலித்த குரல், நமது குரல். கிளர்ச்சிக் கொடி ஏந்திய இயக்கம், நமது இயக்கம்.
நதிநீர் இணைப்பு
நதியினில் வெள்ளம்; கரையினில் நெருப்பு என்றான் ஒரு கவிஞன். அதுதான், இன்றைய நாட்டின் நிலைமை.
ஒரு பக்கத்தில் வெள்ளப்பெருக்கு. இன்னொரு பக்கத்தில் நெருப்பாக வாட்டும் கொடிய வறட்சி.ஒருபுறம் நீரில் மூழ்கிப் பாழாகும் பயிர்கள்.இன்னொரு பக்கம், பாசனம் இன்றிக் கருகும் பயிர்கள். இனி, தண்ணீருக்காகத்தான் மூன்றாம் உலகப் போர் மூளும் என்று பலரும் எச்சரிக்கிறார்கள்.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு, நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்று இப்போது சிலர் சொல்லுகிறார்கள்.ஆனால், 2002 ஆம் ஆண்டிலேயே, நதிகள் இணைப்பு
மசோதாவை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, விவாதிக்க வைத்தவன் வைகோ. குடியரசு மலர்ந்தபின், 63 ஆண்டுகளில், எனது மசோதாவைத் தவிர இது குறித்து, வேறு ஒரு மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட் டது உண்டா? கிடையவே கிடையாது.
மனிதன் உயிர் வாழ்வதற்கு, மூச்சுக் காற்று தேவை.குடிப்பதற்குத் தண்ணீர் தேவை. புசிப்பதற்கு உணவு தேவை. இப்போது என்ன நிலைமை தெரியுமா? நாலா புறங்களிலும் நம்மைப் பேராபத்து வளைத்துக் கொண்டு இருக்கின்றது. ஆம்; இனி குடிக்கவே தண்ணீர் கிடைக்காது.
எண்ணெய் விற்பதைப் போல தண்ணீர் விற்பனை நடக்கும். இப்போதே அது தான் நிலைமை. பெரு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும், குடி
தண்ணீருக்குக் கொள்ளை விலை வைக்கிறார்கள். நிலத்தடி நீர் அடியோடு அற்றுப் போய் விட்டது. குறிஞ்சியாவது, முல்லையாவது, மருதமாவது, நெய் தலாவது? அதெல்லாம் பழங்கதை.
ஊழல் அரசுகளால், பொதுச் சொத்தைச் சுரண்டிக் கொள்ளை அடிக்கும் ஊழல் திமிங்கலங்களால், அடியோடு நாசமாக்கப் பட்டு விட்டன. மக்களைக் காக்க,
அன்றைய மன்னர்கள், ஏரி, குளங்கள், நீர்த்தேக்கங்கள் அமைத்தனர். ஆயிரக் கணக்கான ஆண்டு களாக, நதிகள், ஆறுகளில் அடிநீரைப் பாதுகாக்கும் அர ணாக மணல் படுகைகள் இருந்தது. அனைத்தையும், ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும், அடிப்பாறை வரை சுரண்டி விட்டனவே? கொள்ளை கொள்ளை, இப் படி ஒரு பகல் கொள்ளை எங்கும் நடக்க முடியாது. நம் வருங்காலத் தலை முறையின் வாழ்வே அழிந்து போகுமே?
போதாக்குறைக்கு, கடலோர மீனவர் வாழ்வை அழிக்க, தாது மணலையும் விட் டு வைக்கவில்லை. ஆளுங்கட்சியினரின் சொந்த கஜானாவில் கோடிகோடி யாக நாளும் பணத்தைக் கொட்டுகின்ற மணல் கொள்ளை ஏஜெண்டுகள்; லஞ் சம் வாங்குகிறவன்,சமூக அமைப்பைக்கெடுக்கிறான்,அவ்வளவுதான். ஆனால் இயற்கை வளங்களை அழித்துச் சுரண்டுபவன், வருங்காலத் தலைமுறையின் வாழ்வையே அழிக்கிறான்.அந்தப் படுபாவம் தொடர்ந்து கொண்டே இருக்கின் றது.மது மற்றும் இலவச போதைகளால், பித்துப் பிடித்துச் சித்தம் கலங்கிப் போன தமிழனுக்கு இது உறைக்கவா போகிறது? அவன் தலையில் அவனே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கிறான். போதாக்குறைக்கு மத்
திய அரசு, பிசாசு வடிவத்தில் வருகிறது. புதிதாக தண்ணீர்ச் சட்டம் கொண்டு
வருகிறான். அப்படியானால், உன் வீட்டுத் தோட்டத்தில் கிணறு தோண்ட முடி யாது; உன் வீட்டு முற்றத்தில் குழாய்க் கிணறு தோண்ட முடியாது.
போகிற போக்கைப் பார்த்தால், ஒரு மடக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும் என் றாலும், அதற்கும் எங்கள் அனுமதி வேண்டும் என்பார்கள் போலிருக்கிறது.
விவசாயிகளின் வேதனையை எடுத்துச் சொன்னால் சீறுவதா?
நொறுங்கிச் சிதறிச் சின்னாபின்னமாகிப் போய்விட்டதே விவசாயிகள் வாழ்க் கை? என்று குமுறும் வேதனையோடு, இதே விருதுநகர் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் மைதானத்தில், பல்லாயிரக் கணக்கான விவசாயிகளைத் திரட்டி, பயிர் கள் தீய்ந்து விட்டன, கருகி விட்டன; கடன் வாங்கிப் போட்ட முதல் எல்லாம் பட்டுப் போய் விட்டது. இனி வாழ வழி இல்லை என்று, விவசாயி, எந்தப் பயிர் களைப் பாதுகாக்க, படரும் பூச்சிகளைக் கொல்ல வாங்கினானோ, அதே பூச் சிக்கொல்லி மருந்தைச் சாப்பிட்டுச் சாகிறான்.
மத்திய, மாநில அரசுகளே, கடன்களைத் தள்ளுபடி செய்யுங்கள்; நிவாரணம் வழங்குங்கள் என்று அறப்போர் நடத்தினோம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு
அறிவிக்கப்பட்ட நிவாரணம், விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை; உயிராக நேசித்த கிராமத்து வீடுகளை, தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த வீடு களை விட்டு, துன்பக் கண்ணீரோடு வெடித்துச் சிதறும் உள்ளத்தோடு வெளி யேறுகிறான் விவசாயி.இந்த நிலையைத்தடுக்க முன்வரட்டும் தமிழக அரசு என்று அறிக்கை கொடுத் தேன்.
அவ்வளவுதான், ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்து விட்டது அரசாங்கத்துக்கு. விரக்தியின் விளிம்பில் இருக்கிறான் வைகோ; அவன் கண்ணிலே காமாலை;
அதனால் காண்பதெல்லாம் மஞ்சள் நிறம் என்ற ஏளனமான கிண்டல் என் மீது. அமைச்சர் ஒருவர் பெயராலே இந்த அறிக்கை. பாவம், அந்த அப்பாவி அமைச் சர்.
வைகோவுக்கு விரக்தி என்று சொன்னால், அடப்பைத்தியக்காரா, கை கொட்டிச் சிரிப்பார்கள். அமாவாசை இருட்டிலும், நட்டுவாக்காலிக்கும், தேளுக்கும், நச்சுப் பாம்புக்கும் அஞ்சாது, மண்வெட்டியோடு நஞ்சைக்கும், புஞ்சைக்கும் தோட்டத்துக்கும் சென்று, தண்ணீர் பாய்ச்சுகின்ற விவசாயி, இதோ பார், அவன் உடம்பு தைலம் தீர்ந்து போன கட்டை போல் இருக்கிறது;வேகாத வெயிலில் மாடாக உழைக்கிறான்; உழுது பயிரிடுகிறான்; களை பறிக்கிறான்; கதிர் விளை யக் காத்திருந்து காவல் காக்கிறான்; அனைவரும் உயிர் வாழ, பசி போக்கும் உணவு தானியத்தை விளைவிக்கிறான்;ஆனால், அவனது வாழ்வில் நிம்மதி இல்லை இப்போது.போட்டது விளையவில்லை; விளைந்தால் விலை இல் லை. பத்துக் காசு இலாபமும் இல்லை; பட்ட கடனை அடைக்க வழி இல்லை.
இன்றைக்கு இந்த நாட்டில் அடியோடு அழிந்து போன வாழ்வு யாருக்கு என் றால், அது விவசாயிக்கு மட்டும் தான். உழைக்கின்ற விவசாயி வீட்டில் குதூ கலம் உண்டா? பொங்கலுக்கு, தீபாவளிக்கு, பண்டிகைக்கு நல்ல துணிமணி உண்டா அவன் வீட்டுப் பிள்ளை களுக்கு? அவன் மனைவி மக்களுக்கு? அவ னைப் பெற்ற தாய் தந்தைக்கு? எதுவும் கிடையாது.
அவன் வீட்டுப் பெண் பிள்ளைகளுக்கு, கழுத்தில் போடத் தங்கச் சங்கிலி உண் டா? கைகளில் மாட்ட பொன் வளையல் உண்டா? எதுவும் கிடையாது.
வறுமையை, துன்பத்தை, மானத்துக்கு அஞ்சி வெளியே காட்டிக் கொள்ளாமல், நடைப்பிணமாக வாழுகிறான் இன்றைய விவசாயி.இதுதான் இன்றைய அலங் கோல நிலைமை. இதை நான் உணர்ந்தவன்; முற்றிலும் அறிந்தவன். களத்து மேட்டில் கதிர்களைப் பொலி போடும் ஓசை கேட்டு ஒரு காலத்தில் மகிழ்ந்த வன்.தொழுவத்தில் கட்டப்பட்டு உள்ள மாடுகளின் கழுத்து மணி ஓசையின் நாதத்தில் திளைத்துப் பூரித்தவன்.பொற்கோழி கூவும் அதிகாலைப் பொழுதில், நம் தாய்மார்கள், முற்றம் தெளிக்கும் நேரத்தில், உழவு மாடுகள், பசுக்கள், பருத்திக் கொட்டை, தவிடு, புண்ணாக்கு ஊறலை, உண்டு களிப்பதைக் கண்டு
களிக்கும் விவசாயக் குடும்பத்தில் பிறந்து கிராமத்திலேயே வளர்ந்தவன்.
இந்தக் கைகள், மேழி பிடித்த கைகள்; ஏர் பிடித்த கைகள்.கிணற்று நீரை,கமலை கட்டி இறைத்த கைகள்.மண்வெட்டி எடுத்து வரப்பைச் செதுக்கிய கைகள். அத னால் தெரியும் இன்றைய விவசாயியின் துன்பம்.அந்த உழைக்கும் மக்களில் ஒருவன் நான். அவர்களின் விம்மல் ஒலியைத்தான் நான் எதிரொலித்தேன்.
நான் ஒரு இலட்சியவாதி
ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு. அது கண்ணையும் மறைக்கும். என் கண்கள், கா மாலைக் கண்கள் அல்ல; எங்கெல்லாம் அநீதி ஆர்ப்பரிக்கிறதோ, அதனைச்
சுட்டெரித்துச் சாம்பல் ஆக்க வேண்டும் என்று நெருப்பை உமிழும் கண்கள்.
எங்கெல்லாம் தமிழர்களுக்குக் கேடு நேர்கிறதோ,அதைத் தகர்த்துத் தரை மட் டம் ஆக்க வேண்டும் என மூண்டு எழுகின்ற உறுதியைச் சூளுரைக்கும் கண் கள்.
சாலை ஓரத்தில் விபத்தில் அடிபட்டுக் கிடக்கின்ற ஒரு சக மனிதனைப் பார்த் து, சாதி, மதம் அரசியல் கட்சி என்ற எல்லைக்கு அப்பால், கண்ணீரைக்கொட்டு கின்ற கண்கள்.
எனக்கு ஏன் விரக்தி வரப்போகிறது? விரக் தி என்ற சொல், என் பெயரை உச் சரித்தாலே காத தூரத்துக்கு ஓடிப் போகுமே?
நான் கவலைப்பட்டது உண்டு, தமிழ்நாட்டு மக்களுக்காக.
நான் வேதனையில் துடித்தது உண்டு, தரணி வாழ் தமிழர்களுக்காக.
நான் சஞ்சலத்தால் தவித்தது உண்டு, அன்னைத் தமிழகம் ஊழலின் கொடுங் கரத்தால் பாழாகிறதே என்று.
ஆனால், எந்தக் கட்டத்திலும், இது நம்மால் முடியுமா? ஆகக் கூடிய காரியமா? என்று, நான் முனகியதும் இல்லை; மூலையில் முடங்கியதும் இல்லை. இது
சாத்தியம் ஆகாது என்று, அனைவரும் நினைக்கையில், ஏன் முடியாது? சாத்தி யம்தான் என்று சாதித்துக் காட்டுபவன்தான், இலட்சியவாதி.
அந்த வரிசையில், இந்த நாட்டின் வரலாற்றில், ஒரு அத்தியாயமாக அல்ல; ஒரு பக்கமாக அல்ல; ஒரு வரியாக அல்ல, ஒரு எழுத்தாகவாவது, என் வாழ் நாளுக்குப் பிறகு இடம் பெற வேண்டும் எனத் துடிப்பவன் நான்; அதன்படி நடப் பவன் நான். இது நம்மால் முடியுமா? என்று நினைத்து இருந்தால், இலங்கைக் கடற்படையும், இந்தியக் கடற்படையும், இந்திய இராணுவமும், சிங்கள இரா ணுவமும் போட்டு இருந்த அரண்களை ஊடுருவி, மரண பயங்கரத்தை எதிர் கொண்டு, வன்னிக் காடுகளில், நான் நெஞ்சால் பூசிக்கின்ற தலைவர் பிரபா கரனை சந்திக்கப் புறப்படத்தான் முடியுமா?
ஒரு நள்ளிரவு நேரத்தில், இனி தலைநகர் சென்னைக்குள் சிவப்பு கருப்பு சிவப் புச் சீருடை அணிந்த தொண்டர் பட்டாளத்தோடு, நுழைவதற்கு அனுமதி இல் லை என்ற காவல்துறையின் தடையை உடைத்து, இரண்டேகால் மணி நேரத் தில், 17 கிலோ மீட்டர் தொலைவை நடந்தே கடந்து, அண்ணா சதுக்கம் வரை சென்று இருக்க முடியுமா? மூன்று மாகாணங்களைக் கடந்து, சாஞ்சிக்கே படை எடுக்க முடியுமா? இவை எல்லாம் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், எங்களைத் தவிர செய்ய முனையாதது; செய்யத் துணியாதது; செய்ய முடியா தது.
மத்திய அமைச்சரவையில், நீ விரும்பும் இலாகாவைத் தருகிறேன் என்றாரே அடல் பிகாரி வாஜ்பாய்? 98 இலும் சொன்னார், 99 இலும் சொன்னார்.
வேண்டவே வேண்டாம் என்று நிராகரித்த வைகோவுக்கா விரக்தி?
2004 இல் பிப்ரவரி 7 இல் வேலூர்ச் சிறையை விட்டு நான் வெளிவந்தபின்,இதே தொகுதியில் நான் போட்டியிட்டு இருந்தால், இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்று இருப்பேன் என்பது எல்லோருக்கும் தெரிந்த துதான்.
அந்த வாய்ப்பையே வேண்டாம் என்று நிராகரித்த எனக்கா விரக்தி?
ஏன் ஒரு பொதுத் தேர்தலையே நிராகரித்து விட்டு, மக்கள் மன்றத்தில், இன்று கம்பீரமாக, தலைநிமிர்ந்து நடைபோடுகின்ற, மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகத்துக்கா விரக்தி?
இல்லை தோழர்களே. சோதனை நெருப்பில் புடம் போட்டு எடுக்கப்பட்ட தங்க மாக ஒளிர்கிறது நமது இயக்கம்.
கொலைகாரனைக் காப்பாற்ற முயலும் இந்தியா
இதுவரை நடைபெற்ற தமிழ் இன அழிவின் தொடர்ச்சியாக, சகிக்க முடியாத ஒரு அக்கிரமத்தை, இந்திய- இலங்கை அரசுகள் கூட்டாகச் செய்கின்றன. அது தான் காமன்வெல்த் அரசுகளின் மாநாடு. 53 நாடுகள் பங்கு ஏற்பு. இது நடந்தால், காமன்வெல்த் அமைப்புக்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் ராஜபக்சேதான் தலை வராக இருப்பான்.நீதி நிரந்தரமாகக்குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விடும். இந்த அமைப்புக்குச் செயலாளராக இருப்பவன், இந்தியாவைச் சேர்ந்த கம லேஷ் சர்மா. கொழும்பில் மாநாடை நடத்த, இந்தியாதான் திட்டமிட்டது. அது நடந்து விட்டால், பின்னர் மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதி கிடைக்காது. ஐ.நா. பொதுச்சபையிலும் குரல் எழாது.
பெர்வேஷ் முஷாரப் சர்வாதிகாரியானான் என்பதால், ஐந்து ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பில் இருந்தே பாகிஸ்தான் நீக்கப்பட்டது.ஒரு பழங்குடித் தலைவனைத் தூக்கில் இட்டதற்காக, நைஜீரியா, காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது.
இப்போது ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று, பிஜித் தீவுகள் நீக்கப்பட்டு உள்ளது. அப்படியானால், இலட்சக் கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார் களே,அவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லையா? உலகில் நீதியே கிடையா தா? காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கை நீக்கப்பட வேண்டும். தமிழர் களின் சவக்குழி மீது, ராஜபக்சேவுக்குக் கிரீடம் வைக்க அனுமதிக்கக் கூடாது. கொழும்பில் இம்மாநாடு நடக்கவே கூடாது.இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பது அல்ல நமது கோரிக்கை. மாநாடே அங்கு நடக்கக்கூடாது.
பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலையும் காட்டும் விலாங்கு மீன் வேலை யை, காங்கிரஸ் செய்யக்கூடும்.மன்மோகன் சிங் செய்யக்கூடும். தமிழக மக் களை,வாக்காளர்களை ஏமாற்ற, மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாமல் கூட இருக்கலாம். ஆனால், அவர்களின் வஞ்சக நோக்கம் நிறைவேறி விடும். இரண்டு ஆண்டுகளுக்கு ராஜபக்சே தலைமையில் காமன்வெல்த் அமைப்பு என்பதைக் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை.
கிளர்ந்து எழுங்கள்
கொழும்பில் காமன்வெல்த் மாநாடு கூடாது; இலங்கையை நீக்கு, என்ற குரல் எங்கும் ஒலிக்கட்டும்.இளைஞர் கூட்டத்தை அழைக்கிறேன்; மாணவர்களை
அழைக்கிறேன். போராடுங்கள். இதைவிட வேறு கடமை இல்லை. இலங்கை யை நீக்கு, கொழும்பில் நடத்தாதே என்ற பட்டயங்களை உயர்த்துங்கள்;தெருக் கள்தோறும் உயர்த்துங்கள். போராட வாருங்கள். தமிழகம் கொந்தளிக்கட்டும். மீண்டும் திரும்பியது 65 என்ற நிலையை ஏற்படுத்துங்கள்.
செப்டெம்பர் 25 ஆம் நாள் புதன்கிழமை அன்று, தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில், கொழும்பில் காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரி வித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இந்த அறப்போரில் பங்கு ஏற்க, ஈழத்தமிழ் உணர்வாளர்களை அழைக்கிறேன். தமிழ் ஈழ விடுதலைக்குத் தொடர்ந்து போராடி வரும் அமைப்புகள் அனைத்தையும் அழைக்கிறேன்.
என்ன தீர்வு?
ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு என்னதான் தீர்வு? எப்போது விடியல்?
அதைத்தான் திட்டவட்டமாகச் சொன்னேன் பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில்.
சிங்கள இராணுவமும், போலீசும், முற்றாக வெளியேற்றப் பட வேண்டும்.சுதந் திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடக்க வேண்டும். இந்த உலகின் பல நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளிலே யே வாக்கெடுப்பில் பங்கு ஏற்க, ஐ.நா. மன்றம், அனைத்து உலக சமுதாயம், ஏற்பாடு செய்ய வேண்டும். எத்தனையோ பொது வாக்கெடுப்புகள் உலகில் நடைபெற்று இருக்கின்றன. ஆனால், அவர்களின் தாயக மண்ணைத் தவிர வேறு நாடுகளில் வாக்குப்பதிவு நடந்தது கிடையாது. இந்தக் கருத்தை உலக அரங்கத்தில் முதன்முதலாகச் சொன்னவன்,மறுமலர்ச்சி தி.மு.க.வின் பொதுச் செயலாளர். வரலாற்றில் கல்வெட்டாக இது பதிந்து விட்டது.
ஆயிரமாயிரமாகப் புதிய இளைஞர்கள் நம் மீது நம்பிக்கை கொண்டு வருகி றார்கள்.பட்டதாரிகள் வருகிறார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் வருகிறார் கள். ஆம்; புது வெள்ளம் பாய்கிறது. பொங்கிப் பிரவகித்து வருகிறது. வலை தளத்தில் முகநூலில், இணையத்தில் குறுஞ் செய்திகளில், தமிழ்நாட்டில் மட் டும் அல்ல, கடல் கடந்த நாடுகளில் உள்ள இளைஞர்கள் நம்மீது நேசம் காட்டு கிறார்கள்.நம்பிக்கையோடு நம்மை நெருங்கு கிறார்கள்.
அதனால்தான் நான் சொன்னேன். வீறு கொண்ட இளைஞர்களே, இலட்சிய தாகம் மிக்க மாணவர்களே, நீங்கள்தான் உரிமைப் போர்ப்படையின் ஈட்டியின் முனைகள்.நடமாடுகின்ற எஃகுக் கம்பிகள். அச்சம் அறியாதவர்கள். சூழும் அபாயத்தைப் பற்றிக் கவலைப் படாதவர்கள். கொள்கைக்காக மார்பில் குண்டு களை ஏந்தவும் சித்தமாக இருப்பவர்கள் என்று, கடந்த கால சரிதம் சொல்லு கிறது.
அயர்லாந்து விடுதலைக் கனல்
உலகமெலாம் நடைபெற்ற களங்களும், புரட்சிக் காவியங்களும் சொல்லு கின்றன. இதோ என் மனதை விட்டு அகலாத ஒரு கல்லூரி மாணவனை உங் கள் முன் கொண்டு வந்து நிறுத்துகிறேன். பல்லாயிரக்கணக்கில் இந்த மாநாட் டுக்கு வந்து இருக்கின்ற இளைஞர்களே, தமிழகத்துக்கான மறுமலர்ச்சியை ஏற்படுத்த, போராட்டச் சுடரை உங்கள் கைகளில் ஏந்தி முன்னேறிச் செல்லுங் கள் என்பதற்காக, நெஞ்சை உலுக்குகின்ற, இதயத்தை உருக்குகின்ற, 19 ஆம் நூற்றாண்டில் அயர்லாந்தில் நடைபெற்ற, அந்தச் சம்பவத்தைச் சொல்லுகின் றேன்.
அவன் பெயர் இராபர்ட் எம்மெட். பிரெஞ்சுப் புரட்சி நடப்பதற்குப் பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவன். அப்போது, அயர்லாந்து நாடு, இங்கிலாந் தின் காலனியாக முடங்கிக் கிடந்தது. அந்த அடிமை விலங்கை உடைத்து எறியத் துடித்தான் எம்மெட்.டப்ளின் கல்லூரியில் மாணவர்களைத் திரட்டி னான்.அவன் பேச்சில் அனல் பறந்தது. அதில், எரிமலையின் சீற்றம். பிரளயத் தின் பாய்ச்சல். பூகம்பத்தின் வெளிப்பாடு. பல்லாயிரக்கணக்கில் திரண்டனர்.
பிரித்தானியப் பேரரசு, அடக்குமுறையை ஏவியது.தப்பிச் சென்றான். ஐரோப் பிய மண்டலம் எங்கும் சுற்றித் திரும்பினான். ஆயுதப் புரட்சிக்கு ஆயத்தப்படுத் தினான்.பிரிட்டிசாரின் ஆயுதச் சாலையைக் கைப்பற்ற நடத்திய தாக்குதலில் தோற்றுப் போனான். சிறைப்பட்டான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. சம்பிரதாயத்துக்காக, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான்.
நீதிபதியும், ஜூரர்களும் இருந்தனர். உனக்கு ஏன் மரண தண்டனை விதிக்கக் கூடாது? என்பதற்கு விளக்கம் சொல் என்றனர். எனக்குத் தூக்குத் தண்டனை தான் என்பதை அறிவேன்; சாவு நிச்சயம். அதைப்பற்றிக் கடுகு அளவும் கலங்க வில்லை. அதோ, மரணப் புதைகுழி உறைபனியோடு என்னை வரவேற்கக் காத்துக் கொண்டு இருக்கின்றது. அந்தப் புதைகுழியின் குளிர்ந்த மார்புக்குள் நான் சென்று விடுவேன்.
என் நாட்டு இளைஞர்களே, ஆக்கிரமிப்பாளனை நம் மண்ணில் நுழைய விடா தீர்கள். கையில் வாளோடும், தீப்பந்தத்தோடும் சென்று மோதுங்கள். இதோ, நான் சாகிறேன். ஆனால், நான் புதைக்கப்பட்ட இடத்தில் எவரும் ஒரு கல்ல றையை எழுப்பி விடாதீர்கள். அதில், ஒரு எழுத்தையும் எழுதி விடாதீர்கள். என்றாவது ஒரு நாள், என் தாயகம் விடுதலை பெறும்; அயர்லாந்து விடுதலை பெறும். அப்பொழுது, விருப்பப்பட்டவர்கள், நான் புதைக்கப்பட்ட இடத்தில், எழுதிக் கொள்ளலாம் என்றான்.
1803 செப்டெம்பர் 19. மரண தண்டனை விதிக்கப்பட்ட நாள். மறுநாள் அவனுக் குத் தூக்கு என்று அறிவித்தவுடன், ஒரு பெண், வேதனைக் குரலோடு ஒரு
மலர்க்கொத்தைத் தர முன்வந்தாள் எம்மெட்டிடம். காவலர்கள் அவளை அடித் துச் சாய்த்தனர். மறுநாள் அவன் தூக்கு மரத்தை நெருங்குகின்ற வேளையில், ஒரு காவலன் கவலை ததும்பும் கண்களோடு எம்மெட்டைப் பார்த்தான். தன் கைகளை நீட்டினான். கைகளில் விலங்குகள் பூட்டப்பட்ட எம்மெட்டால் கை கொடுக்க முடியவில்லை. நெருங்கி வந்தபோது, அவன் தலையில் முத்தம் இட்டான். அடுத்தநொடியில் அந்தக் காவலன் மூர்ச்சையுற்றான். இராபர்ட் எம் மெட் தூக்கில் இடப்பட்டான்.
அதே நாளில், அவனது பள்ளித்தோழன் ஒரு அருமையான கவிதையை எழுதி னான். என்ன உயிரோட்டமான கவிதை.
Let us breath not his name
let it sleep in the shade
where, cool and unhonoured relics are laid
எங்கே? பெருமைப்படுத்தப்படாத அவனது எலும்புகள்
அந்தக் குளிர்ந்த மண் ணுக்கு உள்ளே கிடக்கின்றதோ
அங்கே, அந்தப் பெயர் தூங்கட்டும்.
அந்தப் பெயர் கல்லறை நிழலில் உறங்கட்டும்
அவன் அமைதியாகத் தூங்கட்டும் அந்தப் புதைகுழியில்
அவன் பெயரை இப்போது யாரும் உச்சரிக்காதீர்கள்
குளிர் காலத்தில் வடிகின்ற ஒரு பனித்துளியைப் போல
நமது கண்ணீர்த் துளி அந்தப் புதைகுழியின் மேல் படட்டும்
நாம் சிந்துகின்ற கண்ணீர்த் துளிகள்
இருண்டு போன, துக்ககரமான, நிசப்தமான,ஒளியற்ற கண்ணீர்த்துளிகள்.
புல்தரையின் மீது ஒரு பனித்துளி விழுகிறது அல்லவா?
அந்த இரவு நேரத்துப் பனித்துளி போல,
நமது கண்ணீர்த்துளி விழட்டும்
அது சப்தம் இல்லாமல் விழுந்தாலும்,
அந்தப் பனித்துளி அழுகிறது.
நிசப்தத்தில் அழுகிறது.
அவனது புதைகுழிக்கு அது ஒளி தரட்டும்.
அந்தப் பனித்துளியைப் போலவே,
நாம் ரகசியமாகச் சிந்திய கண்ணீர்த்துளியும்
உருள்கிறது, அழுகிறது.
நம் இருதயங்களில் அவனது நினைவை,
என்றைக்கும் பசுமையாக வைத்து இருக்கட்டும்.
அயர்லாந்து விடுதலை பெற்றது; தூக்குக் கயிறுக்குத் தன் உயிர் கொடுத்த இராபர்ட் எம்மெட் புகைப்படம், அயர்லாந்து மக்களின் வீட்டுச் சுவர்களை
அலங்கரித்தது. சுதந்திர கீதப் பாடல்களில் அவன் பெயர் ஒலித்தது.
தமிழ் இன விடியலுக்குப் போராடுவோம் வாருங்கள்
இளைஞர்களே, மாணவர்களே, அயர்லாந்தின் இராபர்ட் எம்மெட்டைப் போல், நெஞ்சில் உறுதி பூணுங்கள்.தியாகத்துக்குத் தயாராகுங்கள். தமிழ் இன விடிய லுக்குப் போராட வாருங்கள்.
தோழர்களே, நம் கண்முன்னால் நிற்கும் உடனடிக் கடமை என்ன?
நம் கண்முன்னால் நிற்கும் அடுத்த தலையாய கடமை என்ன?
தமிழ்நாட்டுக்கும், தமிழ் ஈழத்துக்கும் துரோகம் இழைத்து வரும் காங்கிரஸ் கட்சியை, தோல்விப் பள்ளத்தாக்கில் தூக்கி எறியச் சூளுரைப்போம்.வரலாற் றின் குப்பைத் தொட்டியில் எறியப்பட வேண்டும் காங்கிரஸ் கட்சி. அது நடக் கத்தான் போகிறது. நாடு முழுவதும் அலை வீசுகிறது; காங்கிரஸ் எதிர்ப்பு அலை வீசுகிறது.
முன்னேறிச் செல்வோம்; அதிகாரத்தைக் கைப்பற்று வோம் என்றேன். அதுவும் நடக்கத்தான் போகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயார் ஆகுங்கள். இங்கெல்லாம் நாம் களம் காண்போம் என்று நீங்களே ஊகித்துப் பணி ஆற்றுங்கள்.
திண்ணைக்குத்திண்ணை, தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் நமது பிரச்சாரம் நடக்கட்டும். நானும் வருகிறேன், மக்களைச் சந்திக்க வருகிறேன்.
நாடாளுமன்றத் தேர்தலில் நமக்குக் கிடைக்கப் போகும் வெற்றி, எதிர்கால வெற்றிகளுக்கும், அதுவே பாதை அமைத்துக் கொடுக்கும்.
மீண்டும் நன்றி சொல்லுகிறேன் உங்களுக்கு. வீடு திரும்புங்கள். பத்திரமாகப் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் நலனும், நாட்டு நலனும் உறவாடும் சிந்தையோடு நான் விடைபெறு கிறேன்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.
முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.
முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.
No comments:
Post a Comment