Thursday, November 7, 2013

கட்டபொம்மனின் 214 வது நினைவேந்தல்-வைகோ உரை-பாகம் 2

அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்!

பாஞ்சைப் பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 214 ஆவது நினை வேந்தல் நிகழ்ச்சி அவர் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் 16.10.2013 அன்று நடை பெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ ஆற்றிய வீர உரையின் சென்ற பாகத்தின் தொடர்ச்சி வருமாறு:

அக்டோபர் 16 ஆம் தேதி விசாரணை என்ற பெயரில், ஒரு போலி நாடகம்
தொடங்கியது. வீரபாண்டிய கட்ட பொம்மன் மீது ஐந்து குற்றச்சாட்டு களைச் சுமத்துகிறார்கள். ஆங்கிலத்தில் சொல்லப்பட்டதைத் தமிழில் மொழி பெயர்த் துச் சொன்னார் துபாஷி இராமலிங்க முதலியார். அதற்குக் கட்டபொம்மன் சொன்ன பதில்களை,ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப்பானர்மேனுக்குச் சொல் லுகிறார்.சுற்றிலும் வெள்ளையருக்கு ஆதரவான பாளையக்காரர்கள் உட்கார்ந் து இருக் கிறார்கள். மக்கள் கூடியிருக்கிறார்கள்.
முதல் குற்றச்சாட்டு: கிஸ்தி கொடுக்க வில்லை.

அதற்குக் கட்டபொம்மன் பதில்: கிஸ்தி கொடுப்பது எங்கள் வழக்கம் இல்லை.

இரண்டாவது குற்றச்சாட்டு: கலெக்டர் லூசிங்டன் அழைத்தும்கூட நீங்கள் போய்ப் பார்க்கவில்லை. அவரை மதிக்க வில்லை.

கட்டபொம்மன்: நண்பர்கள் ஆயினும்,பகைவர்கள் ஆயினும், என் மீது அவம திப்புக் குற்றச்சாட்டை எவரும் சொல்ல முடியாது. கும்பினி அதிகாரிகள் என் னைப் பார்க்க வருகிறபோது,அவர்களை மரியாதையாக நடத்தி இருக்கிறேன்; அன்போடு உபசரித்து இருக்கிறேன். ஆனால், ஜில்லா கலெக்டரைச் சந்திக்க வந்து காத்துக் கிடப்பதற்கு நான் ஒன்றும் வேலைக் காரன் அல்ல. அது கட்ட பொம்மனுக்கு ஆகிற காரியம் இல்லை என்கிறான்.

எப்போது சொல்லுகிறான்? தன்னுடைய உயிர் போகும் என்பதைத் தெரிந்து
கொண்டு சொல்லுகிறான். அப்போதும் தலைவணங்கவில்லை. ஏதாவது
உயிர்ப்பிச்சை கிடைக்கும் என்று நினைக்கவில்லை.

மூன்றாவது குற்றச்சாட்டு: திருவை குண்டம் தானியக் களஞ்சியத்தை, உங்க ளுடைய தானாதிபதி சிவ சுப்பிரமணிய பிள்ளை கொள்ளை அடித்தார். அவ ரைக் கைது செய்ய முனைந்தபோது, நீர் அனுமதிக்க வில்லை; அவரை எங்க ளிடம் ஒப்படைக்கவில்லை. எனவே, இந்தக் குற்றத்திற்கு நீர் பொறுப்பாளி.

கட்டபொம்மன்: திருவைகுண்டத்தில் நெற் களஞ்சியத்தைக் கொள்ளை அடித் தது தவறுதான்.எங்கள் பகுதியில் வறட்சி.மக்களுக்கு உணவுக்குவழி இல்லை. அவர்களுடைய பசியைத் தீர்ப்பதற்காக, உணவு தானியக் களஞ்சியத்தைத் திறந்து அவர்களை எடுத்துக்கொண்டு போகும்படி தானாதிபதி சொல்லியிருப் பார் என்று நான் நம்புகிறேன். அதற்காக என்னிடம் வந்து மன்னிப்புக் கேட்டார். 700 கோட்டைத் தானியத்துக்குக் கணக்குப் போட்டுப் பார்த்து, அதற்காக 3300
ரூபாயும், அபராதத் தொகை 700 ரூபாயும் சேர்த்து, 4000 ரூபாய் கும்பினியாரி டம் கொடுத்து விடுவதாகச் சொன்னேன்.அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள
வில்லை.

அதற்காக,சிவசுப்பிரமணிய பிள்ளையை நான் ஒப்படைக்க மாட்டேன். அடைக்
கலமாக என்னிடம் வந்த அவரை எதிரி களிடம் ஒப்படைப்பது, கட்டபொம்ம னுக்குச் சரிப்பட்டு வராது.


நான்காவது குற்றச்சாட்டு: சிவகிரி பாளையத்துக்கு உள்ளே போய்க் கலகம்
செய்தீர்.

கட்டபொம்மன்: சிவகிரி பாளையத்தில் ஏற்பட்ட கலகத்தை அடக்க வேண்டும்
என்று பாளையக்காரர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதால், நான் அங்கே
போனேன்.

ஐந்தாவது குற்றச்சாட்டு: பாஞ்சாலங் குறிச்சிப் படைகளால் பல கும்பினி இரா ணுவ அதிகாரிகள் கொல்லப் பட்டார்கள். அதற்கு நீர்தான் காரணம்.

உடனே சிரித்துக்கொண்டே கட்ட பொம்மன் சொல்லுகிறான்: என் மீது தாக்கு தல் நடத்தியதே கும்பினிப் படைதான். பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெ டுத்தீர்கள். பாஞ்சாலங் குறிச்சியை அழிக்கின்ற விதத்தில் சுற்றி வளைத்து நின்றீர்கள். என் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கருதிய போது, தற் காப்புக்காகத்தான் நாங்கள் எதிர்த்தாக்குதல் நடத்தினோம். அதில் சில அதிகாரி கள் இறந்ததற்கு நானா காரணம்?

நடந்த உண்மைகளை, திருச்சியில் உள்ள உங்களுடைய மேல் அதிகாரிகளுக் கு எடுத்துச் சொல்லலாம் என்று கருதித்தான், கோட்டையை விட்டு வெளி யே றிச் சென்றேன். ஆனால், மக்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு ஓடிப்போய் விட் டான் என்று என்னை அவமானப்படுத்துகின்ற வகையில் வதந்திகளைப் பரப்பி னீர்கள். பாஞ்சாலங் குறிச்சியைக் கொள்ளையடித்தீர்கள்.எங்கள் சாவுக்கு நீங் கள் காரணமாக இருந்தீர்கள். இருதரப்பும் மோதிக் கொண்டோம். ஆனால், யுத் தத்தை நடத்தியவனே வந்து, மற்றொரு தரப்பு மீது விசாரணை செய்கின்ற
விசித்திரத்தை இங்கேதான் பார்க்கிறேன்.உங்களிடம் என்ன வாதிடச் சொல்லு
கிறீர்கள்? உங்களுக்கு எது இஷ்டமோ அதைச் செய்து கொள்ளுங்கள்’ என் றான்.

என்ன அருமையான வாதங்கள்! என்ன துணிச்சலான வாதங்கள்; அறிவுப்பூர்வ
மான வாதங்கள்.

இதைக் கேட்டு எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள்.

தூக்குத்தண்டனை

பானர்மேனும், கட்டபொம்மனும்தான் மோதிக்கொண்டார்கள். ஆனால், விசார ணை என்கிற பெயரில் பானர்மேன் நீதிபதியாக உட்கார்ந்து இருக்கிறான். இப் படித்தான் அந்த விசாரணை நடைபெற்றது. தூக்குத்தண்டனை விதிக்கப்படு கிறது; இன்றைக்கே தூக்கில் இட வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போகி றான் பானர்மேன். கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்டான்.

அதற்குப்பிறகு, அங்கே என்ன நடந்தது என்பதை, மறுநாள் 17 ஆம் தேதி, பானர் மேன் தனது மேலதிகாரிகளுக்கு எழுதுகிறான்.

இந்த விசாரணையின்போது,பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரன் கட்டபொம் மன் உறுதியோடும், தலை வணங்காத கம்பீரத்தோடும், அச்சம் இல்லாமல் நின்று கொண்டு இருந்தான்.தூக்கில் போடுவதற்காகக் கொண்டு போகையில், உறுதியாக அடி எடுத்து வைத்துச்சென்றான். இரண்டு புறமும் இருந்தவர்களை வலது புறமும்,இடது புறமாகவும் ஏளனமாகப் பார்த்துக் கொண்டே சென்றான். அங்கே இருந்த எட்டயபுரம், சிவகிரிப் பாளையக்காரர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தான். தூக்கில் போடு கின்ற வரையிலும், அவன் தலைவணங்க வில் லை. தண்டனை நிறைவேற்றப்பட்டபோது,கடைசியாக கட்டபொம்மன் சொன் னதாக அங்கே இருந்த சிப்பாய்கள் எனக்குக் கொடுத்த தகவல், அவனது தம்பி ஊமைத்துரையைப் பற்றித்தான் கவலைப்பட்டுப் பேசியதாகச் சொன்னார்கள்.

“நான் கோட்டையிலேயே இருந்து யுத்தத்தில் செத்து இருக்க வேண்டும்; அது இன்னும் கெளரவமாகப் போயிருக்கும். அங்கே இருந்து வெளியேறியது தவறு தான் என்று சொல்லிவிட்டு, கடைசியாக ஓ முருகக் கடவுளே என்று பலத்த குரல் கொடுத்து விட்டு, கயிறை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டதாகச் சொன்னார்கள் என்று,அன்றைக்கு மறுநாளே,பானர்மேன் எழுதி வைத்து இருக் கிறான். இதுதான் வரலாறு.

இந்தியாவில் எங்கும் இல்லாத வீரம்

இதற்குப் பின்னர்தான் இன்னொரு சரித்திரம் இருக்கிறது. இந்தியாவில் வேறு எங்கே இப்படி நடந்தது? அந்தப் பஞ்சாப்பில் நடந்ததா? வங்கத்தில் நடந்ததா? மராட்டியத்தில் நடந்ததா? இங்கேதான், இந்தத் தென்னாட்டில்தான் நடந்தது. இந்தத் தமிழர் மண்ணில்தான் அத்தகைய வீரம் வெளிப்பட்டது.

1799 அக்டோபர் 16 கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்டார். அதற்குப்பிறகு, ஊ மைத்துரையையும், அவருடன் 16  பேர்களையும் சேர்த்துக் கொண்டு போய்,
பாளையங்கோட்டைச் சிறையில் அடைத்தார்கள். 16 மாதங்கள் கழிந்தன.
சிறைக்கு உள்ளே உணவு கொண்டு வருகின்ற ஒரு அடப்பக்காரன் மூலமாக,
பாளையக்காரர்களுக்கு ஊமைத்துரை ஓலை அனுப்புகிறார். அப்படி யாருக்
கெல்லாம் அவர் அனுப்பினார் என்ற பெயர்ப்பட்டியல் கூட இருக்கிறது. புலிக் குட்டி நாயக்கர், மாப்பிள்ளைச்சாமி என்கிற சுப்பிரமணியசாமி சிவத்தையா
நவாப் நாயக்கருக்கு இவர்களுக் கெல்லாம் அனுப்புகிறார். எங்களைச் சிறை யில் இருந்து விடுவிப்பதற்கான வேலையைச்செய்யுங்கள் என்று எழுதுகிறார். அந்தக் காலகட்டத்தில் இப்படித் திட்டமிட்டது இந்தியாவிலேயே வேறு எங் கும் கிடையாது.1801 பிப்ரவரி மாதம். தை மாதம்.தைப்பூசத்துக்காக திருச்செந் தூருக்குச் செல்லுகின்ற பக்தர்களைப் போல அந்தச் சிறைக்கு அருகில் தங்கி இருந்து, உளவு பார்க்கிறார்கள். பிப்ரவரி மாதம் முதல் நாள் சிறை அதிகாரிகள், காவலர்கள் எல்லோரும் சம்பளம் வாங்கி, மது அருந்திக் கிடக்கிறார்கள்.

ஊமைத்துரை சிறைக் கண்காணிப்பாளரின் மனைவியிடம், ‘எங்கள் முன் னோர்களுக்கு நாங்கள் திதி கொடுக்கின்ற வழக்கம் உண்டு;அதற்காக எங்க ளுக்கு வாழை இலை, பழங்கள்,விறகு வேண்டும்’ என்று கேட்கிறார். அவர் அனுமதி கொடுத்ததன் பேரில்,வெளியில் இருந்தவர்கள் விறகுக்கட்டுகளோடு உள்ளே வருகிறார்கள்.சிறையில் இருந்தவர்கள் மொத்தம் 336 பேர் என்றும்; 12 பேர் அதற்குத் தலைமை தாங்கியவர்கள் என்றும் ஜெகவீரபாண்டியனார் எழுதி
இருக்கிறார்.

ஊமைத்துரையே ஒரு லிகிதம் எழுதி இருக்கிறார்.‘200 பேர் உள்ளே வந்தார்கள், மற்றவர்கள் வெளியே இருந்தார்கள்’ என்று எழுதி இருக்கிறார்.

பக்கெட் துரை சிறைப்பிடிப்பு 

உள்ளே வந்தவர்கள், விறகுக் கட்டு களுக்கு உள்ளே இருந்து ஆயுதங்களை
வெளியே எடுத்தார்கள். ஊமைத்துரை உள்ளிட்டவர்களுக்குப் பூட்டப்பட்டு
இருந்த விலங்குகளை உடைத்தார்கள்.அவர்களை மீட்டார்கள். அங்கிருந்து
வெளியேறி, வல்லநாட்டு மலைச்சரிவுகளில் இருந்துகொண்டு, ஏழு களங் களில் பிரிட்டிஷாரைத் தோற் கடித்தார்கள். தூத்துக்குடிக்குப் போனார்கள். அங் கிருந்த ஆங்கிலேயர் களை அடித்து விரட்டினார்கள்.ஆயுதங்களைக் கைப்பற் றினார்கள்.பக்கெட் துரையைச் சிறைப்பிடித்தார்கள்.அவரது மனைவி, ஊமைத் துரையிடம் வந்து விண்ணப்பம் போட்டார். என் கணவரை விடுவித்து விடுங் கள் என்று கேட்டார். ஊமைத்துரை விடுவித்தார்.அவரது அனைத்து உடைமை களையும் அவரிடம் திருப்பிக் கொடுத்து அனுப்பினார் என்று வெல்ஷ் துரை எழுதி வைத்து இருக்கின்றார்.

இதற்குப்பிறகு, திருச்சியில் இருந்தும் மற்ற இடங்களில் இருந்தும் படை களைக் கொண்டு வந்து, இந்தக் கயத்தாரில்தான் குவிக்கின்றார்கள். 1801 மார்ச் 27. 

இதற்கு முன்பு, 1799 மே 4 ஆம் தேதி,சீரங்கப்பட்டினம் சண்டையில் திப்பு சுல் தான் கொல்லப்பட்டார். கள்ளர் நாட்டு வேந்தர்களை ஒன்றாகச் சேர்த்து,விருப் பாட்சி கோபால் நாயக்கர், மருது சகோதரர்கள், ஊமைத்துரையும் ஒன்று சேர்ந் து களம் அமைத்தபோது, அங்கே திப்பு சுல்தான் தோற்காமல் இருந்து இருந் தால், வரலாறே மாறிப் போயிருக்கும்.

இதற்கு இடையில், பாளையங் கோட்டைச் சிறையில் இருந்தபோதே திட்டங் களை வகுத்துக் கொடுத்து,அதன்படி கட்டுமானப் பொருள்களை எல்லாம் சேகரித்து வைத்து, ஏழே நாள்களில், பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைப் புதுப்பித்துக் கட்டினார்கள். எந்த இடத்தில் பீரங்கி களைக் கொண்டு, தங்கள்
கோட்டையைத் தாக்கித் தகர்த்தார் களோ, அதே இடத்தில் மீண்டும் கோட்டை யைப் புதுப்பித்துக் கட்டும் துணிச்சல் எப்படி வந்தது? எதிரியிடம் துப்பாக்கிகள் உள்ளன. பீரங்கிகள் இருக்கின்றன. ஆனாலும் போரிட்டு வெல்ல முடியும் அல் லது மடிவோம் என்ற உணர்வுதான் காரணம். அத்தகைய உணர்வை, அதற்குப் பிறகு, ஈழத்தில் விடுதலைப்புலிகளிடம் தான் நான் பார்த்தேன். வீரத்தை நான் மதிப்பேன். 

500 பேர் தூக்கில் இடப்பட்ட கொடுமை

மார்ச் 31 ஆம் தேதி சண்டை தொடங்குகிறது. மே 24 ஆம் தேதிதான் அந்தச் சண்டை முடிகிறது. ஆச்சரியமாக இருக்கிறது. 55 நாள்கள், ஊமைத் துரையின் படைகள், ஆங்கிலப் படை களை எதிர்த்துச் சண்டை போட்டு இருக்கின்றார் கள். போரில் தோற்கிறார்கள். அதற்குப்பிறகு, சிவகங்கைக்குப் போகிறார்கள். அங்கே மருதுபாண்டியர்கள் களம் அமைக்கிறார்கள். அங்கும் சில துரோகங் கள் நிகழ்கின்றன. கடைசியில் அவர்களிடம் ஆயுத பலம் குறைந்ததாலே, மருது பாண்டியர்கள் தோற்கடிக்கப் படுகிறார்கள். அக்டோபர் 24 ஆம் தேதி,
தூக்கில் இடப்பட்டார்கள். திருப்பத்தூரில், சிவங்கையில் 500 க்கும் மேற் பட்ட வர்கள் அங்கே தூக்கில் இடப்பட்டார்கள். அப்படி இந்தியாவில் வேறு எங்கும் நடைபெற்றது இல்லை.

ஊமைத்துரையின் வாழ்வு எப்படி முடிந்தது தெரியுமா? பல பேர் எழுதி இருக் கின்றார்கள். கால்டு வெல்,வெல்ஷ் என ஆங்கிலேயர்கள் எழுதிய ஆவண ங் களில் இருந்து நான் சொல்லுகிறேன். ஊமைத்துரையையும், அவரது தம்பி செவத்தையா என்ற துரைசிங்கத்தையும், திரும்பக் கொண்டு வந்தார்கள். கட்ட பொம்மனைத் தூக்கில் இடுவதற்கு முன்பே, தானாதிபதி சிவ சுப்பிரமணிய பிள்ளையை, 1799 அக்டோபர் 10 இல் நாகலாபுரத்தில் வைத்துத் தூக்கில் இட் டார்கள். அவரது தலையை வெட்டிக்கொண்டு வந்து,பாஞ்சாலங்குறிச்சி கோட் டைக்கு முன்னால், ஈட்டியில் குத்தி வைத்தார்கள்.

ஊமைத்துரையை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் வடக்கு வாசலிலும்,
தெற்குக் கோட்டை வாசலில் துரை சிங்கத்தையும், 1801 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் நாள், தூக்கில் இட்டார்கள்.

தப்பிக்க அல்ல, தாக்குவதற்கு

பாளையங்கோட்டைச் சிறைச்சாலையை உடைத்துக்கொண்டு வந்தது தப் பித்து ஓடுவதற்காக அல்ல. மீண்டும் ஆங்கிலேயரை எதிர்த்துக் களம் அமைத் துப் போராடினார்கள். இத்தகைய வீர வரலாறு இந்த மண்ணுக்குச் சொந்தமா னது. அவர்கள் வழி வந்த ஒன்பது குலத்து மக்கள், தோக்கலவார், மேகலவார், பாலவார், பெல்லவார்,சில்லவார், வீர செல்லவார், சிறு செல்லவார், கொல்ல வார், மல்லவார் என ஒன்பது கம்பளங்களைச் சொல்லு கிறார்களே, இந்த மக் கள், அன்றைக்கு வெள்ளைக்காரன் அடக்குமுறையில் இருந்து இன்று வரை யிலும் வறுமையில் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அன்றைக்குக் காட்டிக் கொடுத்தவர்களின் அரண்மனைகள் இன்றைக்கும் அழகாக இருக்கின் றன.மானத்துக்காகப் போராடி மடிந்தவர்கள் மண்மேடாகி விட்டார்கள்.

இந்த வீர வரலாறைச் சொல்லுவதன் நோக்கம், இரண்டு காரணங்கள்.அனைத் துச் சாதி மக்களையும் சகோதரர்களாக அரவணைத்துக் கொண்டான் கட்ட பொம்மன். சாதி வேற்றுமை பார்க்கவில்லை. எல்லோரும் ஒன்றாக நின்று போராடி உயிர்களைக் கொடுத்தார்கள். வெள்ளையம்மாள் கனவு கண்டதாகச் சொல்லுகிறாள். சிலப்பதிகாரத்தில் கண்ணகி கண்ட கனவுக் காட்சி காட்டப் படுகிறது. இவர்கள் வீர சக்கம்மா தேவியை வழிபடுகிறார்கள்.

எலினெஸ் என்ற வீர காவியத்தில், வீனஸ் தேவதையை வீரத்தின் தெய்வமாக
வழிபட்டார்கள். கிரேக்கர்கள், வீனஸ் என்ற தெய்வத்தை வழிபட்டார்கள். மராட்டியத்து வீர சிவாஜி பவானி தேவியை வழிபட்டார். தமிழ் மூவேந்தர்கள் கொற்றவையை வழி பட்டார்கள். கட்டபொம்மன் சக்கம்மா தேவியைக் குல தெய்வமாக வழி பட்டான். வீரத்தை நான் மதிக்கிறேன்.(பலத்த கைதட்டல்)

கல்கி எழுதினார். சாளுக்கியப் புலிகேசி படையெடுத்து வருகிறான். காஞ்சி
புரத்தைச் சூறையாடி, பல்லவப் பேரரசை அழிக்கின்ற நிலையில், மகேந்திரச்
சக்கரவர்த்தி கட்டளை இட்டாராம். இனி ஊருக்கு ஊர் மகாபாரத யுத்தத்தைப்
படியுங்கள்; ஊருக்கு ஊர் அபிமன்யு சரிதத்தைப் படியுங்கள். மக்களுக்கு வீர
உணர்ச்சி வரட்டும். நாம் சாளுக்கியப் புலிகேசியை எதிர்த்து யுத்தம் செய்ய
வேண்டி இருக்கிறது என்று சொல்லுவாராம்.

வீரத்தை மதிப்பவன்

நான் ஏன் பேசுகிறேன் தெரியுமா? வீரத்தாய் வேலு நாச்சியார் நாட்டிய நாடகத் தை எங்கள் சொந்தச் செலவில் அரங்கேற்றியவன். இன்றைக்கு அந்த நாடகம் அமெரிக்காவில் அரங்கேறி இருக்கிறது. வேலு நாச்சியாருக்கு உதவியவர் யார்? ஹைதர் அலி. அவரது வீர மகன் திப்பு சுல்தானையே அனுப்பி வைத்தார் பீரங்கிகளோடு. எங்கெல்லாம் போராடுகிறார்களோ, அந்த வீரர்களை நான் போற்றுகிறேன்.அப்படித்தான் நேதாஜியை மதிக்கிறேன்.அத்தகைய வீர உணர் வு இன்றைய இளைஞர்களுக்கு வர வேண்டும் என்பதற்காகப் பேசுகிறேன்.

சாதிச்சண்டை போடுவதற்காக அல்ல, தவறான வழிகளில் போவதற்காக அல்ல, மதுவின் பிடியில் சிக்குவதற்கு அல்ல.இளைஞர்களுக்குச் சொல்லு வேன்.நீங்கள், தாயை, தந்தையை, கடவுளாக மதித்து நடந்து கொள்ளுங்கள். சாதி வேற்றுமை பார்க்காதீர்கள்;அனைவரையும் சகோதரர்களாகக் கருதுங் கள். வீர உணர்வை, மான உணர்வை, உங்கள் நாடி நரம்புகளில் தேக்கி வைத் துக் கொள்ளுங்கள்.

ஒரு பெரும் பயங்கரம் நடந்து விட்டது.இலட்சக்கணக்கான தமிழர்கள் ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டுவிட்டார்கள்; பச்சிளம் குழந் தைகள், தாய் மார்கள், முதியோர்கள் கொல்லப் பட்டு விட்டார்கள். நாதியற்றுப் போய்விட் டது தமிழ்ச் சாதி. பசியோடும்,பட்டினியோடும், மருந்து இன்றிச் செத்தார்கள். இத்தனைப் படுகொலை களையும் செய்த இராஜபக்சே, அங்கே காமன்வெல்த் நடத்துகிறான்.

மண்ணின் விடுதலைக்காகப் போராடியவர்களை மதிக்கின்றீர்களா?

இந்த மண்ணுக்காகப் போராடி மடிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரால்,
அவனுக்கு உறுதுணையாகக் களத்தில் நின்று மடிந்த வீரத்தியாகிகளின் பெய ரால் உறுதி எடுத்துக் கொள்வோம்.வீர இளைஞர்களே, உங்களை நான் கட்சிக் கு அழைக்கவில்லை. ஓட்டுக்கேட்கவில்லை. உங்களுக்கு எந்தக் கட்சி பிடிக் கிறதோ, அந்தக் கட்சியில் செயலாற்றுங்கள். காவல் துறை அதிகாரிகளைக் கேட்கிறேன். இப்படி ஒரு கூட்டத்தை எங்காவது பார்த்து இருக்கின்றீர்களா? ஒரு சத்தம் உண்டா? எவ்வளவு கட்டுப்பாடாக நடக்கிறது இந்தக் கூட்டம்.

இந்த அரசாங்கத்தைப் பற்றி நான் ஒரு சதவீதம்தான் பேசி இருக்கிறேன். 99
சதவீதம் இருக்கின்றது. இங்கே மக்கள் திரண்டால் உங்களுக்கு என்ன? எதற் காக இத்தனைக் கட்டுப்பாடுகள்? மண்ணின் விடுதலைக்காகப் போராடியவர் களை,இந்த அரசு உண்மையாகவே மதிக்கிறதா? மணிமண்டபங்கள் எதற்காக? விளம்பரத்துக்காகவா? 

விழா நடக்கின்ற இடத்தில் கட்டுப்பாடு வையுங்கள். எதற்காக ஊர் ஊராகச் சென்று மிரட்டுகிறீர்கள்? சீருடை அணிந்து இந்த விழா வுக்காகப் புறப்பட்ட வர் கள், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரவர்கள் ஊர்களில் இருந்து புறப்பட முடியாமல் தடுக்கப்பட்டதால், வேதனையில் இருக்கின்றார்கள் தெரியுமா? அவர்களை எதற்காகத் தடுக்கின்றீர்கள்? என்ன காரணம்? தோழர்களே, இவர் கள் எத்தனைத் தடை விதித்தாலும் என்ன, இயற்கை நமக்கு ஒத்துழைப்புக்
கொடுத்து இருக்கின்றது.

ஒவ்வொரு ஆண்டும் பலத்த மழை வெள்ளத்துக்கு இடையேதான் இந்த நிகழ்ச் சியை நடத்துகிறோம். இந்த ஆண்டு, வேகமாக வந்த மேகங்கள், இந்த வீர வாலிபர் களைப் பார்த்துக் கலைந்து போய் விட்டன.

நான் சாதிகளில் ஒற்றுமை ஏற்படுத்து கிறவன். மதங்களில் ஒற்றுமை ஏற்ப டுத்து கிறவன். இளம்பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருதிச் செயல்பட்டுக்
கொண்டு இருப்பவன். போதைப் பழக்கத்துக்கு ஆளாகாதீர்கள் என்று வலியு றுத்துகிறேன். நான் பேசுவது நாட்டின் நன்மைக்காக. தமிழகத்தின் வாழ்வாதா ரங்களைக் காப்பதற்காக, ஈழம் மலர்வதற்காக. எந்த உணர்வோடு இந்தப் பாஞ் சாலங்குறிச்சிக் களத்தில் நின்றார்களோ, அந்த உணர்வோடுதான், நான் நெஞ் சால் பூஜிக்கின்ற தலைவர் பிரபாகரனுடைய படைகளும் அங்கே போரிட்டார் கள்.

காவலர்களும் மனிதர்களே

காவல்துறை அதிகாரிகளைக் கேட்கிறேன். வழிநெடுகிலும் நீங்கள் தடுத்தீர் கள். எங்காவது என் தம்பிமார்கள் உங்களிடம் பிரச்சினை செய்தார்களா?கலவ ரம் செய்தார்களா? பல்லாயிரக்கணக்கானவர்கள் இன்றைக்கு இங்கே வந்து இருப்பார்கள். அதைத் திட்டமிட்டுத் தடுத்தது இந்த அரசின் சில அதிகாரிகள். அதற்காக, எல்லா அதிகாரிகளையும் நான் குறை சொல்ல வில்லை. தமிழகத் தில் காவல்துறையை, அதிகாரிகளை மதிப்பவர்கள் என்னை விட வேறு எவ ரும் கிடையாது.

இங்கே ஒரு கல்லூரி முதல்வர் கொல்லப்பட்டார்.அதைக் கேள்விப்பட்டவு டன் நான் துடித்தேன்.அவருக்கு ஒன்பது வயதில் ஒரு பெண் குழந்தை. அவ ரது சம்பாத்தியத்தில் தான் தம்பி குடும்பத்தையும் காப்பாற்றிக் கொண்டு இருந் தார். எதற்காகக் கண்டித்தார்? எதிர்காலத்தில் அந்தப் பிள்ளைகள் வாழ்வு நன் றாக இருக்க வேண்டுமே என்பதற்காக, நன்றாகப் படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.குடித்துவிட்டு விடுதியில் கலவரம் செய்தால் வெளியேற் றாமல் என்ன செய்வார்கள்? பேருந்தில் பெண்களிடம் வம்பு இழுத்தால் கண் டிக்க மாட்டார் களா? இரண்டு முறை சொல்லிப் பார்த்தார்; மூன்றாவது முறை
கண்டித்தார். முதல் நாள் முழுவதும் மதுவைக் குடித்து விட்டு, கல்லூரி வளா கத்துக்கு உள்ளேயே வெட்டிச் சாய்த்து விட்டார்களே? அந்தப் படுகொலையை யும் நியாயப்படுத்து வதற்குச் சிலர் முனைகிறார்கள் என்கிற போது வேதனை யாக இருக்கிறது.நிர்வாகம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டது; அதனால், இந்த மாணவர்கள் இப்படித் தவறு செய்து விட்டார்கள் என்கிறார்கள்.

தமிழகத்தில் இன்றைக்கு இலட்சோப லட்சம் மாணவர்கள், கட்டுப்பாடாக,
அமைதியாகப் படித்து முன்னேறிக் கொண்டு இருக்கின்றார்கள். தாய் தகப்பன் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைக்கின்றார்கள். அவர்களை நான் போற்று கிறேன். அப்படி ஆயிரம் மாணவர்கள் இருக்கின்ற இடத்தில் ஒரு பத்துப் பேர்கள்தாம் குடிக்கின்றார்கள்.990 பேருக்கு அந்தப் பழக் கம் இல்லை.அந்தப் பத்து என்ற எண்ணிக்கையில் மேலும் ஒன்றுகூடக் கூடி விடக் கூடாதே என்பதற்காகத்தான் நான் கவலைப் படுகிறேன்.

அன்றைக்கு கட்டபொம்மன் இந்த மண்ணில் உலவினான். இன்றைக்கு இல் லை. ம.பொ.சி. அவனைப் பற்றிப் பேசினார். அவர் இன்றைக்கு இல்லை.
வைகோ இன்றைக்குப் பேசுகிறான். சில ஆண்டுகளுக்குப் பிறகு இவன் இருக் கப் போவது இல்லை. எனவே, நான் எந்த ஒரு பிரச்சினையைப் பேசினாலும் சரி,அது எனக்காகப் பேசவில்லை; எதிர்காலத்தை மனதில் கருதி, இந்தத் தமிழ் நாட்டின் நலன் கருதித்தான் பேசுகிறேன். (பலத்த கைதட்டல்).

சிறைவாசத்தின்போது...

அமெரிக்காவில் இருந்து நான் சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங் கியபோது கைது செய்யப்பட்டேன்.அன்றைக்கு 150 வண்டிகள்.எத்தனை காவல் துறை உயர் அதிகாரிகள். நான் என்ன சர்வதேச பயங்கரவாதியா? நேராக மது ரையில் நீதிபதி முன் கொண்டு சென்றார்கள்.காவலில் வைப்பதாகக் கூறினார். காவல்துறை அதிகாரிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.என்ன? என்று கேட்டேன். உங்களை வேலூர் சிறையில் அடைக்க உத்தரவு.அதனால் இன்று இரவு மதுரைச் சிறையில் வைத்து இருந்து விட்டு, நாளை பகலில் வேலூருக் குக் கொண்டு போகிறோம் என்றார்கள்.

நான் உயர் அதிகாரிகளிடம் சொன்னேன்.என்னை இந்த மதுரைச் சிறையிலே யே அடைப்பதாக இருந்தால் சரி.இல்லாவிட்டால், இந்த ஒரு இரவுக்காக,
இங்கே என்னுடைய அடையாளங்களை எல்லாம் சொல்லி ஆவணங்களைப்
பதிவு செய்து, உடனே நாளைக் காலையில் வேலூருக்குப் போவதை விட, இப்போதே நேரடியாக வேலூருக்குக் கொண்டு போய் விடுங்கள்.

ஒருவேளை சென்னையில் இருந்து வந்த காவலர்களுக்கு ஓய்வு தேவை என் றால்,இங்கேயிருந்து வேறு காவலர்களை உடன் அனுப்புங்கள். இதற்கு மேல்
என்னைக் கட்டாயப் படுத்தினால் நான் வர மாட்டேன். என்னை அடித்து வேண் டுமானால் கொண்டு செல்லுங்கள் என்றேன். அதிகாலை 5 மணி வரை அவர் களுக்குள்ளாகவே பேசிக்கொண்டு இருந்து விட்டு கடைசியாக, நாங்கள்
வேலூருக்கே கொண்டு போகிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.

அன்றைக்குக் காவல்துறை அதிகாரியான துரைராஜ் அவர்கள் ஓய்வுபெற்று
இப்போது திருச்சியில்தான் இருக்கின்றார்கள். அடைக்கலத்திடம் சொன்னார்: வைகோ இரண்டு நாள்களாகப்பயணித்து அமெரிக்காவில்இருந்து வந்து இருக் கிறார். நல்ல டிபன் வாங்கிக் கொண்டு போய்க் கொடுங்கள் இங்கே ரிசர்வ் லயனிலேயே குளிக்கச் சொல்லுங்கள்.அவர் ஆயத்தமானவுடன் புறப்படலாம். என்றார்.வேலூருக்குப் போனோம். வழியில் செய்தித்தாள்களைப்பார்க்கிறேன். எல்லா ஏடுகளிலும் எட்டுக்காலச் செய்தி, வைகோ கைது. நான் எவ்வளவு பிர மாண்டமான கூட்டங்களில் அருமையாகப் பேசி இருக்கிறேன்.அதெல்லாம் செய்தியானதே கிடையாது.ஆனால், இந்தியாவில் பொடா சட்டத்தின் கீழ் கை தான ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால்,எல்லா ஏடுகளிலும் தலைப்புச் செய்திகள். பக்கம் பக்கமாக எழுதி இருந்தார்கள்.அதைப் பார்த்து என் னுடைய தோழர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. தினமலரில் என்னைப்பற்றி விவ ரங்களை எல்லாம் எழுதி விட்டு,இவருக்கு அசைவ உணவு பிடிக்கும் என்று எழுதி இருந்தார்கள்.

அசைவ உணவை மறுத்தேன்

அதைப் படித்தவுடன் யோசித்தேன்.சிறையில் இப்போது வாரத்துக்கு இரண்டு மூன்று நாள்கள் அசைவ உணவு கொடுக்கின்றார்கள். எனவே நாளைக்கு, வைகோ நன்றாக ஆடு,கோழி, முட்டை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றார் என்றும் எழுதுவார்கள். கயத்தார் டீக்கடையில் காலையில் செய்தித்தாள்களை வாசிப்பவர்கள் அதைப்படித்து ஏதாவது சொன்னால்,அதைக் கேட்டு என் தோழ னுடைய மனது கஷ்டப்படும் என்பதால், எத்தனை ஆண்டுகள் சிறையில் அடைத்தாலும் முட்டை கூடச் சாப்பிடுவது இல்லை என்று முடிவு செய்தேன். ஒன்றே முக்கால் ஆண்டும் சிறை உணவுதான். அந்த அரிசி ரப்பர் போல இருக் கும்.சப்பாத்தியைப் பிய்க்கவே முடியாது.அதைத்தான் ஒன்றே முக்கால் வருட மும் சாப்பிட்டேன்.

வேலூர் சிறையில் 19 மாதங்கள் நான் அடைபட்டுக் கிடந்த போது, நாகப்பட்டி னம் நீதிமன்றத்தில் என் மீது இருந்த ஒரு பழைய வழக்கைத் தூசு தட்டி எடுத் தார்கள். அதற்காக என்னை அங்கே கொண்டு போனார்கள். காலை 5.30 மணிக் கு எழுந்து விடுவேன்.என்னோடு பாதுகாப்புக் காவலர்கள் வருவார்கள். அவர் களும் காலை 4.30 மணிக்கு எழுந்து குளித்து சீருடை அணிந்து ஆயத்தமாவார் கள். நான் ஒரு ஆபத்தான ஆள் பாருங்கள் அதனால் எனக்கு முன்னும் பின் னும் மூன்று வேன் நிறைய காவலர்கள். திண்டிவனத்தில் இருந்து டாக்டர் மாசிலாமணி,விழுப்புரத்துக்கு உணவு எடுத்துக் கொண்டு வருவார். எனக்கு மட்டும் அல்ல. என்னோடு வருகின்ற அத்தனைப் பேருக்கும் சேர்த்து எடுத்துக் கொண்டு வருவார்.ஒருமுறை புதிதாக வந்த டி.எஸ்.பி. ஒருவர், வைகோவுக்கு மட்டும் சாப்பாடு கொடுங்கள். மற்றவர்கள் யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்றார்.

காவலர்களுக்கும் உணவு

நான் கேட்டேன்: அவர்கள் நான்கு மணிக்கு எழுந்து ஆயத்தமாகி என்னோடு வருகிறார்கள். இங்கே இல்லா விட்டால் அவர்கள் எங்கே போய்ச் சாப்பிடுவார் கள்? அவர்களுக்கு வேண்டாம் என்றால், எனக்கும் சாப்பாடு வேண்டாம் என்று, சாப்பாட்டை எடுத்துக்கொண்டு போகச் சொல்லிவிட்டேன். நாங்கள் புறப்பட்டு ஊரைத் தாண்டி வருகிறோம். டி.எஸ்.பி. வண்டியை மறித்தார். சார்.. நீங்க சாப் பிடாமலேயே போகிறீர்களே? என்றார். என்னோடு வருகின்ற 64 காவலர்களும் சாப்பிட்டால்தான் நான் சாப்பிடுவேன். இல்லாவிட்டால் போகலாம் என்றேன். அடுத்து சிதம்பரம் காவல்நிலையத்துக்குக் கொண்டு போனார்கள். தயிர்சாதத் தைக் கொண்டு வந்து கொடுத்து, சார் காலையில் இருந்து நீங்கள் சாப்பிடவில் லை; இப்போதாவது சாப்பிடுங்கள் என்றார்கள். உடன் வருகின்ற காவலர்கள் சாப்பிட்டார்களா?என்று கேட்டேன்.இல்லை என்றார்கள்.அப்படியானால் எனக் கும் வேண்டாம் என்று சொல்லி, கையைச் சற்றே ஒருக்களித்துத் தலையைச் சாய்த்துக் கொண்டேன். அதைத் தொலைவில் இருந்து படம் எடுத்த செய்தியா ளர், ‘வைகோ மயங்கி விழுந்தார்’ என்று செய்தி போட்டு விட்டார். இதுதான்
என்னுடைய அணுகுமுறை. நான்காவலர்களை மனிதர்களாக மதிப்பவன்.
எப்போதோ வருகின்ற வி.ஐ.பி.க்களுக்காக அவர்களை நீண்ட நேரம் சாலை யில் வெயிலில் நிற்க வைக்காதீர்கள் என்று சொல்லுவேன்.அவர்களும் மனி தர்கள்தானே?

அம்பாசமுத்திரம் அருகே காவல்துறை ஆய்வாளர் வெற்றிவேலை, சாலை யில் துண்டு துண்டாக வெட்டிப் போட்டார்களே.. அந்தச் செய்தியைக்கேட்டுத் துடித்துப் போனவன் நான்.அப்போது அந்த இடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் காரை விட்டு இறங்கி வரவில்லை.. இரண்டு அமைச்சர்கள் அருகில் கூட வர வில்லை. உடன் வந்த அரசு அலுவலர்கள் எவரும் பக்கத்தில் போகவில் லையே? தண்ணீர் தண்ணீர் என்று கேட்டார். ஒருவரும் ஒரு சொட்டுத் தண் ணீர் கொடுக்கவில்லை.எல்லோரும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து ஒருவர் அருகில் சென்று, சற்றே தள்ளி நின்று தண்ணியை ஊற்றினார்.அதை அவரால் குடிக்க முடியவில்லை.இறந் தே போனார். முள்ளிக்குளத்தில் அவரது வீட்டுக்குப் போய் மனைவி பிள்ளை களைப் பார்த்து ஆறுதல் கூறியவன் நான். காவல்துறையைமதிப்பவன். தவ றான வழியில் போக மாட்டேன். ஆனால், அடக்குமுறை என்று சொன்னால், அதைத் தூசாக நினைப்பவன். இந்த அணுகுமுறையை எங்களது சுற்றுப்பய ணங் களிலும் கடைபிடித்து வருகிறோம்.

அடக்குமுறைக்கு அரசாங்கமே பொறுப்பு

இந்த அடக்குமுறைக்கு யார் காரணமாக இருந்தாலும், நான் அரசாங்கத்தைத்
தான் குற்றம் சாட்டுவேன். ஆனால்,நான் இங்கே அரசியல் பேசவில்லை. இந்த
அடக்குமுறையைத் தூண்டிய காவல்துறை, உளவுத்துறை அதிகாரி யார்? ஜாபர் சேட்டுகள் காலம் முடிந்து விட்டது என்று நினைத்தேன்; இன்னமும்
சில ஜாபர் சேட்டுகள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

மணி பத்தரை ஆகி விட்டது. இத்தனை அடக்குமுறையையும் தாண்டி இங்கே
வந்த நீங்கள் அனைவரும், பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும். அடுத்த
ஆண்டு, இதே இடத்துக்கு பல்லாயிரக் கணக்கில் திரண்டு வாருங்கள். வாழ்க
வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

கட்டபொம்மனின் 214 வது நினைவேந்தல்-வைகோ உரை-பாகம் 1

No comments:

Post a Comment