Monday, November 11, 2013

நாளை முழு அடைப்புப் போராட்டம்; மாணவர்களுக்கு வைகோ அழைப்பு

நவம்பர் 12 முழு அடைப்புப் போராட்டம்; மாணவச் செல்வங்களே! வெற்றி பெறச் செய்வீர்! #வைகோ அறிக்கை

இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, அவர்களின் இரத்தம் கொட்டப்பட்ட பூமியில் கோலாகலமாக கொண்டாட்டம் நடத்தப் போகிறது மகிந்த ராஜபக்சேயின் சிங்கள அரசு. 53 காமன்வெல்த் நாடுகளின் அதிபர்கள் கூட்டம் நவம்பர் 15, கொழும்பில் தொடங்குகிறது.
அதற்கு முன்னோட்டமாக நேற்றைய தினம், காமன்வெல்த் இளைஞர் மய்யத் தையும், மக்கள் மய்யத்தையும் ராஜபக்சே தொடங்கி வைத்துள்ளார்.

பிரிவினைவாதிகளால் 30 ஆண்டுகள் அழிவையும், இரத்தக் களறியையும் தன்னுடைய நாடு சந்திக்க நேர்ந்தது என்று விடுதலைப்புலிகள் மீது பழியைச் சுமத்தி உள்ளார்.
கடந்த 50 ஆண்டு காலத்தில், தமிழர்களுக்கு சிங்கள அரசினால் இழைக்கப் பட்ட கொடுமைகளை நினைக்கும்போதே ஆயிரம் தேள்கள் நெஞ்சில் கொட்டு வதுபோல் வலிக்கிறது.

இலட்சக் கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்து, எண்ணற்ற இளம் பெண்களின் கற்பைச் சூறையாடி, பச்சிளம் குழந்தைகளையும் படுகொலை செய்த சிங்கள அரசு, இன்று கொட்டம் அடிக்கிறது. இந்தக் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் செல்லாமல், யாரையாவது அனுப்பி வைத்து ஒரு கபட நாடகத்தை காங்கிரஸ் தலைமை தாங்கும் இந்திய அரசு நடத்தும் என்று தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறேன்.

ஈழத் தமிழ் இனப்படுகொலையில் கூட்டுக் குற்றவாளிதான் இந்தியாவின் காங்கிரஸ் அரசு என்பதால், இனக்கொலைக் குற்றம் குறித்து பன்னாட்டு நீதி விசாரணை நடைபெறவிடாமல் தடுப்பதற்கும், சுதந்திரத் தமிழ் ஈழ விடுதலை யை நடைபெற விடாமல் அழிப்பதற்கும் இந்திய அரசு திட்டமிட்டே இலங்கை யில் காமன்வெல்த் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது.

காமன்வெல்த்தினுடைய செயலாளர் நாயகமாக தற்போது செயல்படும் கம லேஷ் சர்மா என்ற இந்தியரைக் கொண்டுதான் இந்தச் சதித் திட்டத்தை நடத் தியது.

இந்தியாவிலிருந்து எந்தப் பிரதிநிதியும் கலந்துகொள்ளாவிட்டாலும்கூட, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குக் காமன்வெல்த் அமைப்புக்கு மகிந்த ராஜ பக்சேதான் தலைவராக செயல்படுவார்.

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கொடுமையை, அந்த உண்மைகளை உலகத்தின் கண்களுக்கு புலப்பட விடாமல் குழிதோண்டிப் புதைப்பதுதான், இந்திய-இலங்கை அரசுகளின் சதித் திட்டமாகும்.

காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கை நீக்கப்பட வேண்டும். அதன் மூலம் கொழும்பில் அம்மாநாடு நடக்கக்கூடாது என்ற மானத் தமிழர்களின் கோரிக் கை தற்போது நிறைவேற வாய்ப்பு இல்லை. மாநாடு நடக்கத்தான் போகிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரியான்னன் என்பவரும், நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேன் லோகி என்பவரும் இலங்கைத் தீவின் வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற அழிவுகளைப் பார்வையிட்ட பின் னர், பத்திரிகையாளர்களைச் சந்திக்க அவர்களுக்கு சிங்கள அரசு அனுமதி மறுத்ததுடன், விசாரணையும் நடத்துகிறது.

உலகில் எந்த ஒரு இனத்துக்கும் இப்படிப்பட்ட துன்பம் நேர்ந்தால் அந்த இனத் தின் இளந்தலைமுறையினர் எரிமலையாக வெடித்திருப்பார்கள். பிரளயமாகச் சீறி இருப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளின் பித் தலாட்டத்தால், இளந்தலைமுறையினர் முழு உண்மை நிலையை அறியாத சூழலில் இருப்பது மனதுக்கு மிகவும் வேதனை தருகிறது. இளைஞர்களும், இளநங்கைகளும்தான் நீதிக்காக, உரிமைக்காக அச்சமின்றிப் போராடும் ஈட்டி முனைகளாவார்கள்.

தமிழகத்தில் தன்மான உணர்ச்சி செத்துப்போய்விடவில்லை என்பதை உணர்த்தவும், இளந்தலைமுறையினரை, குறிப்பாக மாணவர்களை போராட் டக் களத்துக்கு அழைக்கத்தான், வீரத்தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேர் தங்கள் உடலுக்கு நெருப்பு வைத்து உயிர்களை பலிகொடுத்தனர்.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது அநீதி என்பதையும், அந்த அமைப்பிலிருந்து இலங்கையை நீக்காதது மனிதகுலத்தின் மனசாட்சி தமிழர் களைப் பொறுத்தமட்டில் செத்துப்போய்விட்டது என்பதைத் தெரியப்படுத்த வும், தாய்த் தமிழகத்து மக்கள் தங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்காக கிளர்ச் சி செய்கிறார்கள் என்பதையும், தமிழ்ச் சாதி நாதியற்றுப்போய்விடவில்லை என்பதையும் உலகத்துக்கு உணர்த்தவும், இந்திய அரசின் துரோகத்தை அம்ப லப்படுத்தவும் நவம்பர் 12 ஆம் தேதி, தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டத் தை வெற்றிபெறச் செய்ய வேண்டியது தமிழர்களின் கடமையாகும். அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் மாணவர்களுக்கத்தான் இருக் கிறது.

மாணவச் செல்வங்களே! மார்ச் மாதம் நீங்கள் நடத்திய போராட்டத்தி னால் தான் ஈழத் தமிழர் துன்பமும் துயரமும் உலகத்துக்குத் தெரிந்தது.

இந்தியாவில் பிற மாநிலங்களிலே வாழுகிற பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களுக்கும் ஈழத் தமிழர்கள் படுகொலையைத் தெரிவிப்பது மாணவர் களின் கையில்தான் உள்ளது.

மாணவக் கண்மணிகளைப் போராட்டத்துக்கு அழைக்கிறேன். அரசியல் எல் லைகளைக் கடந்து உடன் பிறவாத சகோதரனாக அழைக்கிறேன். முத்துக் குமார் உள்ளிட்ட வீரத் தியாகிகளின் பெயரால் அழைக்கிறேன். நாளைய முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்யுங்கள். நானும் மதுரையில் நடைபெறும் இரயில் மறியலில் கலந்துகொள்கிறேன்.

‘தாயகம்’                                                                 வைகோ
சென்னை - 8                                              பொதுச்செயலாளர்
11.11.2013                                                      மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment