Thursday, November 28, 2013

வழக்கறிஞர்கள் மாநாட்டில் வைகோ உரை -பாகம் 1

காமன்வெல்த் அமைப்போடு உலகம் நின்றுவிடவில்லை. ஈழத்தமிழர் களுக்கு நீதி கிடைக்கும் என்று சென்னையில் நடந்த #மதிமுக வழக்கறிஞர்கள் மாநாட் டில் #வைகோ உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர்களின், இரண்டாவது மாநில மாநாட்டில், உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகி றேன். கழகத்தின் சட்டத்துறைச் செயலாளர், ஆருயிர்ச் சகோதரர், வழக்கறிஞர் தேவதாஸ் அவர்கள் தலைமை ஏற்று இருக்கின்றார்கள்.

2002 ஆம் ஆண்டு,அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் நடைபெற்ற தேவநேயப்
பாவாணர் நூற்றாண்டு விழாவில் உரை ஆற்றி விட்டுத் தமிழகம் திரும்பிய போது,சென்னை விமான நிலையத்தில்,பொடா அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டேன். அந்த இரவில், அங்கிருந்தே நேரடியாக மதுரைக்குக்
கொண்டு சென்று, நடுநிசியில் நீதிபதியின் இல்லத்துக்கு அழைத்துச் சென்று
ஆஜர்படுத்தவும், அவர் நீதிமன்றக் காவலுக்கு ஆணை பிறப்பித்தார்.

அங்கிருந்தே வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டேன்.
இந்தியாவில் கைது செய்யப்பட்ட முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற
பெருமையோடு, பூவிருந்தவல்லி பொடா வழக்கு மன்றத்தில் நானும், என் சகோதரர்களும் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டபோது, அந்த அடக்குமுறைக்
காலகட்டத்தில் துணிச்சலோடு எனக்காக வழக்கறிஞர் கட்டணம் எதையும்
எதிர்பார்க்காமல், வாதாட முன்வந்த பெருந்தகையாளர், நமது மதிப்பிற்குரிய
மூத்த வழக்குரைஞர் கே.எஸ். தினகரன் அவர்கள், நமது அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்து சிறப்பித்து இருக்கின்றார்கள்.

பொடா வழக்கு விசாரணையின்போது,நான் அவரிடம் சொன்னேன்‘இந்த வழக் கில், என்னைத் தவிர மற்ற எட்டுப் பேரும், அந்த மேடையில் விடுதலைப்புலி களை ஆதரித்துப் பேசவில்லை.ஆனால், அப்படிப் பேசும் துணிச்சல் உள்ளவர் கள்; கொள்கை உரம் உடையவர்கள்; திருமங்கலத்தில் பசும்பொன் தேவர் திரு மகனார் திருவுருவச் சிலைக்குப் பக்கத்தில் நடைபெற்ற அன்றைய கூட்டத் தில், என்னோடு சிறையில் அடைக்கப் பட்டு, இன்றைக்கு மண்ணுக்குள்ளே மறைந்து விட்ட என் சகோதரன் வீர.இளவரசன் முன்னின்று நடத்திய அந்தக் கூட்டத்தில், இவர்கள் பேசவில்லை. ஆகவே, அவர்கள் மீது பொய் வழக்கு என்ற முறையில், நீங்கள் அவர்களுக்காக வாதாடுங்கள்; எனக்காக நானே வாதிட்டுக் கொள்ளுகிறேன்; தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்றேன்.

வாதத்தில் வல்லவர் வழக்கறிஞர் தினகரன்

ஒவ்வொரு அமர்வுக்கு வருகின்றபோதும்,நீதிமன்றத்தில் நீதிபதி வருவதற்கு முன்பு உரையாடும் போதெல்லாம், சிந்தனைக் கூர்மை உள்ள கருத்துகளை எடுத்து உரைத்தார். அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு, கவலை களை மறந்து கலகலவென்று விலா நோகச் சிரிக்க வைக்கின்ற, வகையில் பேசிய அவரோடு அளவளாவி மகிழ்ந்தேன்.

ஒருமுறை நீதிமன்றத்தில் நான் என் தரப்பை எடுத்துப் பேசியதற்குப் பின்னர்,
‘ஈழத்தமிழர்கள் வடிக்கின்ற கண்ணீரை உங்கள் குரலின் வழியாகக் கேட்கி றேன்; அந்த மக்களுக்காக நீங்கள் உண்மையாகப் போராடுகிறீர்கள்; என்று சொன்னார்.

அரசுத் தரப்பில் குற்றச்சாட்டுகள் தொடுக்கப் பட்டுப் பதிவு செய்யப்பட்ட பின் னர், நீதிபதிக்கு முன்னால் நான் பதில் சொல்ல வேண்டிய கட்டம் வந்தது. அப் பொழுது, நமது மரியாதைக்குரிய கே.எஸ். தினகரன் அவர்கள், நீங்கள் என்ன
சொல்லப் போகின்றீர்கள்? என்று கேட்டார்கள்.

‘நான் அதை மறுக்கப் போவது இல்லை; ஒப்புக் கொள்வேன்’ என்றேன்.

அப்போது அவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டு, ‘கொஞ்சம் மறுபரிசீலனை
செய்யுங்கள்; நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு களை மறுப்பதில் தவறு ஒன்றும் இல்லை; அப்படியே நீங்கள் ஒப்புக்கொண்டு விட்டால், தண்டிக்கப்படக்கூடிய
வாய்ப்புகள் இருக்கின்றன’ என்று, எவ்வளவோ எடுத்துக் கூறினார்.தயவு செய்து வருத்தப்படாதீர்கள் என்று கூறி விட்டேன்.

நீதிபதி கேட்டார்: ‘நீங்கள் இப்படிப் பேசினீர்களா?’

‘ஆம்; அப்படித்தான் பேசினேன். நான் விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித் தேன்’ என்றேன்.
அதைக்கேட்ட நீதிபதி இராஜேந்திரன் அவர்கள் சற்றே துணுக்குற்று, ‘கொஞ் சம் பொறுங்கள்;அடுத்து யோசித்துப்பதில் சொல்லுங்கள்’ என்று என்னைத் தடுத்தார்.

Your honour, After deep comtemplation I am making my statement. I am very clear about my stand. I supported the LTTE yesterday; I do support the LTTT today; I will support the LTTE tomorrow.

‘மாண்புமிகு நீதிபதி அவர்களே,நான் ஆழ்ந்த யோசனைக்குப் பிறகுதான் சொல் லுகிறேன். ‘விடுதலைப்புலிகளை நான் நேற்றும் ஆதரித்தேன்; இன்றும் ஆத ரிக்கின்றேன்; நாளையும் ஆதரிப்பேன்’ என்றேன்.

எதற்காக வெளியே வந்தேன்?

நான் பிணை விடுதலையில் வெளியே வர விரும்பவில்லை. ஆனால், அன் றைய அரசியல் களத்தில், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய
சூழலில், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய
ஜனதா கட்சியோடு கை கோர்க்கின்ற வேளையில், திராவிட முன்னேற்றக் கழ கம் தலைமை தாங்கிய அணியில் பங்கு ஏற்க வேண்டிய நிலையை,சிறைக்கு வெளியே இருந்த மறுமலர்ச்சி தி.மு.க.முன்னோடிகளும், என்னைச் சூழ்ந்து
இருந்த நிலைமையும் ஏற்படுத்தியதன் விளைவாக, வேறு வழி இன்றி அவர் களோடு தேர்தல் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைமைக் குத் தள்ளப்பட்டோம்.அதற்காகத் தி.மு.கழகத்தின் தலைவர் அவர்கள், இரு முறை சிறைச்சாலைக்கே நேரடியாக வந்து என்னைச் சந்தித்தார்கள்.

பின்னர் பூவிருந்தவல்லி நீதிமன்றத்துக்கும் வந்து, வெயில் நேரத்தில், ஒரு மணி நேரம் காத்து இருந்தார் என்பதை அறிந்து, நான் உண்மையான கவலை யோடும், அக்கறை யோடும், ‘நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? குளிர்சாதன வசதி இல்லாத இடத்தில் காத்து இருக்க வேண்டும்?’ என்று கேட்டேன்.

‘நீங்கள் பிணையில் வர மாட்டேன் என்று முடிவு எடுத்து இருக்கின்றீர்கள்.தேர் தலில் பங்கு ஏற்க வேண்டும்; பிரச்சாரத்துக்கு வர வேண்டும்’ என்று வற்புறுத் தினார்.அப்போது நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று அவர் நினைத்து
இருப்பார்.

நான் ஆழ்ந்த கவலைக்கு உள்ளானேன்.பல்வேறு காரணங்களையும் யோசித் து, என் சகாக்களைப் பொங்கல் திருநாளுக்காக ஊருக்கு அனுப்பி விட வேண் டும் என்று முடிவு செய்தேன்.

குற்றச்சாட்டை மறுக்கவில்லை

பின்னர் பிணை விடுதலை கோரி மனுத் தாக்கல் செய்து, நானே வாதங்களை முன் வைத்தேன். அரசுத்தரப்பில் வாதிட,அட்வகேட் ஜெனரல் என்.ஆர். சந்தி ரன் அவர்கள் வந்தார்கள். என் மீது குற்றச் சாட்டுகளைத் தொடுக்கலாம் என்று கருதி வந்தார். ஆனால்,அரசுத் தரப்பு என் மீதுஏற்கனவே சுமத்தி இருந்த குற்றச் சாட்டுகள் அனைத்தையும் நான் அப்படியே ஏற்றுக் கொண்டு வாதங்களை முன் வைத்தேன்.அரசுத் தரப்பு வாதங்களைத் தகர்த்தேன்.

அதன்பின்பு அட்வகேட் ஜெனரல் அவர்கள், நீதிமன்றத்திற்கு உள்ளேயே என்
கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘இனி எங்களுக்கு எந்த வேலையும் இல்லை யே?இப்படி ஒரு சூழ்நிலையை நான் எந்த நீதிமன்றத்திலும் சந்தித்ததுஇல்லை’ என்றார்.

நமது தினகரன் அவர்கள், அன்பு, பரிவு,நகைச்சுவையோடு எடுத்து உரைக் கின் ற ஒவ்வொரு சொல்லும் கருத்து நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொரு முறை யும் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு உள்ளே வருகின்ற போது,நமது மதிப் பிற்குரிய தினகரன் அவர்களைப் பார்க்கும்போதே எனக்கு மகிழ்ச்சியாக இருக் கும். அந்த நினைவுகள் எல்லாம்,இன்றைக்கு என் நெஞ்சில் அலைமோது கின் றன.

நீதிமன்றத்தில் நின்றோம்

இரண்டாவது வாய்தாவில், நான் கணேச மூர்த்தி அவர்களிடம் ஏதோ கேட் டேன்.மெதுவாகத்தான். காதோடு கிசுகிசுத்தேன்.உடனே, நீதிபதி உதவியாள ரை அழைத்து ஏதோ சொன்னார். உடனே அவர் எங்களைப் பார்த்து, ‘குற்றம் சாட்டப்பட்டு உள்ள நாங்கள் எழுந்து நிற்க வேண்டும்’ என்றார்.ஏதோ கேள்வி கேட்கப் போகிறார்கள் என்று கருதி நாங்கள் எழுந்து நின்றோம். ஆனால்,எந்தக் கேள்வியும் இல்லை. அன்று நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

இரண்டு நாள்கள் கழித்து வழக்கறிஞர் அருணாசலம் அவர்கள் சிறைக்கு வந்து
என்னைச் சந்தித்தார்கள். ‘அன்றைக்கு நீதிபதி அவர்கள், எழுந்து நிற்கும்படித்
தவறாகச் சொல்லிவிட்டாரோ என்னவோ?அப்படிச் சொல்லி இருக்கக்கூடாது; நீங்கள் இதைப் பொருட்படுத்தாதீர்கள்’ என்றார்.‘பரவாயில்லை’ என்றேன்.

அடுத்த முறை நீதிமன்றத்துக்கு வந்தோம்.ஒவ்வொரு முறையும், வேலூர், திருச்சி,மதுரை, சேலம் என நான்கு சிறைகளில் இருந்து நாங்கள் கொண்டு வரப் படுகின்றோம். அன்றைக்கு நான் என் சகாக்களிடம் சொன்னேன்: ‘உட்கா ராதீர்கள்; எவ்வளவு நேரமானாலும் நின்று கொண்டே இருப்போம்’ என்றேன்.

சற்று நேரம் கழித்து நீதிபதி எங்களைப் பார்த்து, ‘அமரலாமே?’ என்றார்.

அப்போது நான் கேட்டேன். கடந்த அமர்வில் நீங்கள் எங்களை நிற்கச்சொன்ன தற்கான காரணம் என்ன? குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்கு விசாரணையின் போது, உட்கார வைக்கப் பட வேண்டும்;நீதிபதி உள்ளே நுழை கையில் மட்டும், மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்கலாம்; அதன்பிறகு, அவர்களிடம் கேள்வி கள் கேட்கப்படும்போது மட்டும்தான் அவர்களை எழுந்து நிற்கச் சொல்ல வேண்டும் என்று, இந்திய உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி ஒரு தீர்ப் பைக் கொடுத்து இருக்கின்றார்.ஆனால்,அதற்கு மாறாக, அன்றைக்கு எங்களை எழுந்து நிற்கச் சொன்னதற்கான காரணம் என்ன? என்று கேட்டேன்.

உடனே அவர் ,அமெரிக்க நாட்டு நீதி மன்ற நடைமுறைகளைச் சொன்னார். எனக்கும் அதைப்பற்றித் தெரியும். அதுகுறித்து இங்கே விவாதிக்க நான் விரும் பவில்லை என்று பதிலளித்தேன்.

அவரால் பதில் சொல்ல முடியவில்லை.மீண்டும் எங்களைப் பார்த்து, உட்கா ருங்கள் என்றார்.

‘நிற்கச் சொல்லுவதற்கு எப்படி உங்களுக்கு அதிகாரம் இல்லையோ, அது போல உட்காரச் சொல்லுவதற்கும் அதிகாரம் இல்லை; அது எங்கள் விருப்பம். நாங்கள் நின்றுகொண்டு தான் இருப்போம்’ என்றேன்.

தோழர்களே, அடுத்த 16 மாத காலமும்,ஒவ்வொரு வாய்தாவின் போதும், நாங் கள் நின்றுகொண்டே இருந்தோம். ஒவ்வொரு முறையும் நீதிபதி எங்களை உட்காரச் சொன்னார். ஆனால், நாங்கள் உட்கார வில்லை. ஒரு மணி நேரம், ஒன்றரை மணிநேரம் நின்றுகொண்டே இருந்தோம்.

மனிதாபிமானம்

கடைசியாக, நாங்கள் பிணை விடுதலையில் வெளியே வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, நீதிபதி எங்களைப் பார்த்து இரண்டு வார்த்தைகள் சொன் னார். கண்கலங்கச் சொன்னார். நான் மிகுந்த மனிதாபிமானி. யார் மீதும் எனக் குப் பகையோ, வெறுப்போ கிடையாது.அவர் சொன்னதைக் கேட்டு நான் மனம்
நெகிழ்ந்து போய்விட்டேன். நீதிமன்றத்தை விட்டு வெளியே வருகையில்,செய் தியாளர்களை அழைத்தேன். அவர்கள் எல்லோரும் எனக்கு நண்பர்களே.உங்க ளை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். இன்றைக்கு நீதிபதி எங்களைப் பார்த் துச் சொன்னதை, ஏடுகளில் எழுதி விடாதீர்கள்; அது அவரது மதிப்பைக் குறைத் துவிடும்’ என்றேன்.

அப்படி அவர் என்ன சொன்னார்? ‘Forget and forgive’ என்றார். நீதிமன்றத்தில், ஒரு
நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்த்து, மறந்து விடுங்கள்; மன்னித்து
விடுங்கள் என்று கூறினார். என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட செய்தியா ளர்கள், அதை எழுத வில்லை.நாங்கள் பிணையில் வெளியே வந்தோம்.

அந்த நீதிபதிக்கு இரண்டு புதல்வியர்.இருவருமே வழக்கறிஞர்கள்.குடும்பத் தோடு ஒன்றாகச் சேர்ந்து வெளியே போய் உணவு அருந்தினார்கள். ‘மார்பு வலிக்கிறது’ என்றார். வீட்டுக்கு வருவதற்குள் உயிர் போய்விட்டது.தேவ தாஸ் தகவல் சொன்னார். எனக்கு மனம் கலங்கி விட்டது. உடனே அவரது
இல்லத்துக்குச் சென்று, மாலை வைத்து மரியாதை செலுத்தினேன்.

இன்றைய மாநாட்டில்..

அந்தக் காலகட்டங்களில், எனக்கு ஒரு ஆறுதலாக இருந்த மரியாதைக்குரிய
கே.எஸ். தினகரன் அவர்கள், அவருக்கே உரிய ஆற்றலோடு, நறுக்குத் தெறித் தாற் போன்ற கருத்துகளை முன்வைத்து இங்கே உரை ஆற்றினார்.

திராவிட இயக்கக் கொள்கைகளை உள் வாங்கியவராக, மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு என்ன? எதிர்கால அணுகுமுறை என்ன?
என்பதை யெல்லாம், சட்டத்துறையின் செயலாளர் வழக்கறிஞர் சகோதரர்
வீரபாண்டியன் அவர்கள், தன் உரையிலே இங்கே பதிவு செய்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக இருந்த பொழுது, மாநில அளவில் நடைபெற்ற மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில், எனக்கு எதிராக ஒரு கருத்துச் சொல்லப்பட்ட போது துணிச்சலாக, நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று எதிர்த்து நின்று வீர முழக்கம் இட்டதால் அன்றே பதவி பறிக்கப்பட்ட போதும், அன்று முதல் இன்றுவரையிலும் எனக்கு உறுதுணை யாக இருந்து போராடிக்
கொண்டு இருக்கின்றார் சட்டத்துறைச் செயலாளர் அருமைத்தம்பி வழக்கறி ஞர் வெற்றிவேல் அவர்கள்.

தமிழ் மணக்கப் பேசுகிறார்; தொலைக் காட்சி ஊடக விவாதங்களில், எதிரி க ளைத் திணறடிக்கும் கேள்விகளை எழுப்பு கின்றார்; விடுக்கப்படுகின்ற வினாக்
களுக்குப் விளக்கங்களைத் தருகின்றார் என்று, கழகக் கண்மணிகள் எல்லாம்
பாராட்டுகின்ற தகுதியைப் பெற்று இருக்கின்ற, தொழிற் சங்கத் தலைவரும்,
வழக்கறிஞருமான ஆவடி அந்திரிதாஸ் அவர்கள், இந்த மாநாட்டு நிகழ்வு களைச் சிறப்பாகத் தொகுத்துத் தந்தார்.

ஏன் எழுதினேன்?

சங்கொலி ஏட்டுக்கு நான் ஆசிரியர். பொடா சிறைவாசத்தில் கொட்டடியில்
இருக்கின்றேன். அப்போது நம் ஏட்டில் ஒரு செய்தி தவறாக வந்தது. அந்த இதழ், அஞ்சலுக்கு அனுப்புவதற்கு முதல் நாளில் எடுத்துக்கொண்டு வந்த 
தம்பி அருணகிரியிடம், இப்படிச் செய்தி போடுவது நியாயம்தானா?தி.மு.கழகத்
தலைவர் அவர்கள் சிறைக்கு வந்த செய்தியை, முரசொலியில் எட்டுக்காலம்
வெளியிட்டு இருந்தார்கள். ஆனால், நமது ஏட்டில் அவரது வருகையைக் கேலி செய்து,கொச்சைப்படுத்திச் செய்தி போடுவது நியாயம்தானா? இது முறை 
தானா? இந்த ஏடுகளை அனுப்பக் கூடாது. மூட்டை கட்டிப் போடுங்கள். இதை மாற்றி, நான் சொல்வது போல எழுதி அச்சிடுங்கள்’என்று சொல்லி அனுப்பி னேன். அங்கிருந்து வெளியே வந்து தலைமைக் கழகத்தைத் தொடர்பு கொண் டு, மாற்று ஏற்பாடுகளைச் செய்தார்.

அன்றைக்கு நேர்ந்த இந்தச் சூழ்நிலையின் காரணமாக, அன்று அந்த இரவிலே யே நான் ஒரு முடிவு எடுத்தேன். இனி சங்கொலியின் முதல் பக்கத்தில், ‘கண் ணின் மணிகளே’ என்ற தலைப்பில் கடிதங்களை எழுதுவது எனத் தீர்மானித் தேன். எழுதத் தொடங்கினேன். எனக்கு நேர்ந்த துன்பங்கள் எல்லாமே பிறகு
நன்மையாகவே முடிந்து இருக்கின்றன. Sweat are the uses of adverstiy நடப்பவை
எல்லாம் நன்மைக்கே என்று கருதுபவன் நான்.

இதன்பின்னர், சிறைக்கு உள்ளே நான் எழுதியவற்றைத் தம்பி நன்மாறன் அவர் கள் மூலமாகக் கொடுத்து அனுப்பி, நான் சொல்லச் சொல்ல அவர் கேட்டு
எழுதியதாக அன்றைக்குப் பதிவு செய்து, தொடர்ந்து அக்கடிதங்கள் சங்கொலி யில் வெளியாகின. ‘சிகாகோவில் இருந்து வேலூர் வரை நடந்த நிகழ்வுகளை
எழுதினேன். ஸ்பார்ட்டா வீரர்களைப் பற்றி, உமர் முக்தார், நெஞ்சில் நிறைந்த நேதாஜி என எழுதினேன். ஒளி மலர...இருள் அகல..என்ற தலைப்பில் பேரறி ஞர் அண்ணா அவர்களைப் பற்றி ஏழு வாரங்கள் எழுதினேன். அரசியலுக்கோர் ஆபிரகாம் லிங்கன்; களங்களின் மாவீரன் கரிபால்டி என எழுதினேன். இடையி டையே தமிழக அரசியல் நிகழ்வுகளை, கழகச் செய்திகளை முன்வைத்து எழுதி னேன். அப்போது நடைபெற்ற கழகத்தின் பொதுக்குழுவுக்காக, 78 பக்க அளவில் என் உரையை எழுதி அனுப்பினேன்.அத்தனையையும் பெற்றுக்கொண்டு வந்து சேர்ப்பித்த தூதுவன்தான், தன்முனைப்பு சிறிதும் இல்லாமல், தன்னை முன்னி றுத்திக் கொள்ளாமல், தனக்கென்று எதையும் நாடாமல், எனக்குத் துணையா கத் தோள் கொடுத்து வருகின்ற அருமைத் தம்பி வழக்கறிஞர் நன்மாறன் அவர் கள், இங்கே வரவேற்புரை நிகழ்த்தினார்.

வழக்கறிஞர் தம்பி சைதை சுப்பிரமணி அவர்கள் நன்றி சொல்ல இருக்கின்றார் கள்.இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த அவரது அருமைத் தம்பியின் திருமண
வரவேற்பில் நான் கலந்து கொள்ள இயலாத அளவுக்கு, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நிலை ஏற்பட்டு விட்டது.இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்காக அரும்பாடு பட்டு இருக்கின்றார்.

கவனத்தை ஈர்த்த கருத்து உரைகள்

காலையில் இருந்து இங்கே உரை ஆற்றியவர்கள், அருமையாகவும், ஆழமாக வும் கருத்துகளைத் தந்து இருக் கின்றார்கள்.இங்கே வருகை தந்து இருக்கின்ற வழக்கறிஞர்களே, அருமைத் தங்கைகளே உங்களை எல்லாம் வரவேற்கின் றேன்.

மிக முக்கியமான கட்டத்தில் இங்கே நான் பேசுகிறேன். நமது நன்றிக்கு உரிய இமயம் தொலைக்காட்சி இதை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. உலகின் பல
பாகங்களிலும் நேரடியாகப் பார்த்துக் கொண்டு இருக்கின்ற என் இனிய உறவு களே, பெரியோர்களே, தாய்மார்களே,என் நெஞ்சில் தணல் எரிகின்றது. கொடு மைகளைக் கண்டு உள்ளம் கொதிக்கின்றது.

இதே நாளில், இதே நேரத்தில், கொழும்பு நகரில், காமன்வெல்த் நாடுகளின் அரசுத் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஈழத் தமிழ் இனப் படுகொலையாளன், கொடியவன் இராஜபக்சே கூட்டத்தை என் றைக்குக் குற்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்போம் எனத் துடித்துக் கொண்டு இருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்குரைஞர் களின் மாநாடு இங்கே நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

ஆறுதல் அளிக்கும் செய்தி

மாலைச் செய்தி மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இங்கிலாந்து நாட்டின் பிர தமர் டேவிட் கேமரூன், 1948 பிப்ரவரி 4 ஆம் நாள், இலங்கைத் தீவை விட்டு
இங்கிலாந்து வெளியேறியது. சிங்களவரின் நுகத்தடியில் தமிழர்கள் அடிமை களாகப் பூட்டப்பட்டனர். அதற்குப் பிறகு,யாழ்ப்பாணத்துக்கு, ஈழத் தமிழர் தாய கத்துக்கு, எந்தப் பிரதமரும், எந்த நாட்டு அதிபரும் சென்றது இல்லை. இப் போதுதான்,டேவிட் கேமரூன் சென்று இருக்கின்றார். தமிழர்களின் செங்குருதி
கொட்டப்பட்ட மண்ணுக்குச் சென்று இருக்கின்றார். என் பிள்ளைகளைக் காண
வில்லை; என் மகள் எங்கே போனாள் என்று தெரியவில்லை; என் கணவனைப் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகின்றன; அவர்கள் எல்லாம் உயிரோடு இருக்கின் றார்களா? இல்லையா? என்பதே தெரியவில்லை. எங்கள் குடும்பமே அழிந்து விட்டது எனக் கதறி அழும் பெண்கள், எங்கள் நிலத்தைப் பறித்துக் கொண்டார் கள்; எங்களுக்கு நீதி கிடைக்குமா? என அழுகையும் கண்ணீருமாக ஒப்பாரி வைத்தார்கள். அவரைத் தமிழர்கள் முற்றுகை இட வில்லை.கண்ணீரும் கம்ப லையுமாகத் தங்கள் துயரங்களை எடுத்து உரைத் தார்கள். அந்த இடத்துக்கும் வந்த ஒரு சிங்களவர் கூட்டம் வெறிக்கூச்சல் போட்டது.

உதயன் நாளேட்டின் அலுவலகத்தின் மீது எத்தனையோ முறை கொலை வெறித் தாக்குதலை நடத்தினார்கள் சிங்களக் குண்டர்கள். அந்த அலுவலகத் துக்கும் சென்றார் கேமரூன்.

இப்பொழுது கடைசியாகக் கிடைத்து இருக்கின்ற செய்தி: கொலைகாரக்கொடி யவன் இராஜபக்சேயோடு அவர் பேசியதாகவும், மனித உரிமை மீறல்கள்,
போர்க்குற்றங்கள், தமிழர்களுக்கு இழைக்கப் பட்ட அழிவுகள் குறித்து முறை யான விசாரணை நடக்க வேண்டும்; அவர்களுக்கு நீதி கிடைக்காவிட்டால்,
பன்னாட்டு நீதி விசாரணையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என அவர்
கூறியதாகச் செய்திகள் வந்து இருக்கின்றன. (கைதட்டல்).



லண்டனில் நான் விடுத்த வேண்டுகோள்

2008 ஆம் ஆண்டு, நவம்பர் 26 ஆம் நாள், நான் நெஞ்சால் பூசிக்கின்ற தேசியத்
தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளில்,நான் லண்டனில் பிரித்தானிய நாடாளு
மன்றக் கட்டடத்துக்கு உள்ளே இருக்கின்ற ஒரு அரங்கில், இங்கிலாந்து நாடா ளுமன்ற உறுப்பினர்கள் இடையே நான் உரை ஆற்றினேன். நான் ஒரு குக்கிரா மத்தில் பிறந்து, அங்கேயே தொடக்கக்கல்வி கற்று வளர்ந்தவன். ‘கான்வென் ட்டு’க்குப் போனது இல்லை. எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில், அம்மொழியை யே தாய் மொழியாகக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே உரை
ஆற்றினேன்.

இங்கிலாந்து நாட்டின் ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி, மூன்றாவது கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் அங்கே அமர்ந்து இருந்தார்கள். நான் அரங்கத்துக்கு
உள்ளே நுழைந்தபோது, அவர்கள் என்னைக் கைதட்டி வரவேற்றது எனக்கு
வியப்பாக இருந்தது. அப்போது நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட அல்ல.ஒவ்வொருவரும் ஐந்து நிமிடங்கள் பேசினார்கள். அடுத்து என்னைப் பேச அழைத்தார்கள். என்ன பேசுவது? எனத் தெரியாமல் திகைத்து நின்றேன்.

‘இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய அன்புச் சகோதரர் களே சகோதரிகளே, உங்கள் இடையே உரை ஆற்றுகின்ற அரியதோர் வாய்ப் பைப் பெற்று இருக்கின்றேன்’ என்று தொடங்கி,என்னை அறியாமல் பேசி னேன்.‘இலங்கைத் தீவில் எங்கள் மக்கள் பட்ட துன்ப துயரங்களுக் கெல்லாம் நீங்கள் காரணம்; உங்களது இங்கிலாந்து நாடுதான் காரணம் என்றேன். எங்கள் அழுகைக் குரல் உங்கள் செவிகளில் விழவில்லையா? தனியாக ஒரு அரசு அமைத்து வாழ்ந்த எங்கள் மக்களை, சிங்களவனோடு சேர்த்து ஒரு நிர்வாகத் தைக் கட்டி எழுப்பி,அவர்களது அதிகாரத்துக்குள் எங்களை ஒப்படைத்தது நீங் கள்தானே? அதனால்தான் நாங்கள் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்கின் றோம்.எனவே, இப்போது எங்கள் மக்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை’ என்று சொன்னேன்.

நான் பேசி முடித்தபிறகு, ஸ்டீபன் பவுண்ட் என்ற லிபரல் கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர் எழுந்து சொன்னார்: ‘இந்த நாடாளுமன்றக் கூட்ட அரங்கு எத்தனை யோ பேர்களது உரைகளைக் கேட்டு இருக்கின்றது. எத்தனையோ சிறந்த உரை கள் இங்கே நிகழ்த்தப்பட்டு இருக்கின்றன. நான் அறிந்த வரையில், இப்படி உணர்ச்சி ஊட்டுகின்ற ஒரு பேச்சு,இந்த நாடாளுமன்றக் கட்டடத்துக் குள்ளே இதுவரை ஒலித்தது இல்லை’ என்றார்.

கேமரூன் உணர்ந்த உண்மை

தோழர்களே,2008இல் நான் இலண்டனில் பேசினேன்.நேற்றைய தினம்,டேவிட்
கேமரூன் யாழ்ப்பாணத்துக்குச் சென்று இருக்கின்றார். அவர், போர்க்குற்றங் கள் என்கிறார். அந்தக் கருத்து நமக்கு உடன் பாடானது அல்ல. ஆனால் இப் போது, இந்தக் கட்டத்துக்காவது அவர் வந்து இருக்கின்றார். உண்மையை உணர்ந்து இருக்கின்றார். என்ன இருந்தாலும் சரி, காமன்வெல்த் மாநாட்டைக் கொழும்பில் நடத்தியதை நாம் மன்னிக்கவே முடியாது.

அயோக்கியன் கமலேஷ் சர்மா

அங்கே காமன்வெல்த் மாநாட்டை நடத்தியதால், காமன்வெல்த் குடும்பத்துக் கே ஒரு பெருமையை ஏற்படுத்திக் கொடுத்து இருப்பதாக ஒரு அயோக்கியன் பேசி இருக்கின்றான். a scoundral. ஆம்; நான் இந்தச் சொல்லைத் தான் பயன் படுத் து கிறேன்.இந்த உரையை, எத்தனையோ பேர் நேரடியாகப் பார்த்துக் கொண்டு
இருக்கின்றார்கள் என்பதை நான் அறிவேன். என்னுடைய பொறுப்பை நான்
உணர்ந்து தான் நான் பேசுகிறேன். 

இப்படிச் சொன்ன அயோக்கியன் யார் தெரியுமா? இந்தியாவைச் சேர்ந்த கம லேஷ் சர்மா. அவன்தான் காமன்வெல்த் அமைப்புக்குப் பொதுச்செயலாளர். அவன் மூலமாகத்தான் இந்த மாநாட்டை, வஞ்சகம் நிறைந்த, துரோகம் நிறைந்த சிசிலிய இரத்தத்திலே வந்த, சோனியா காந்தி இயக்குகின்ற, மன் மோகன் சிங் என்ற கைப்பாவை நடத்துகின்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்பாடு செய்து கொடுத்து இருக்கின்றது.

கொலைகாரக் கூட்டாளி இந்தியாவின் வஞ்சகத் திட்டம்

கடந்த முறை இந்த மாநாடு ஆஸ்திரேலி யாவின் பெர்த் நகரில் நடந்தபோது,
அடுத்து கொழும்பில் நடத்த வேண்டும் என்று இந்தியா திட்டமிட்டதற்குக் கார ணம், சிங்கள அரசு மீது, மகிந்த ராஜபக்சே மீது பன்னாட்டு நீதி விசாரணை என் ற நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தான். ஏனெனில், இவர்கள் கூட்டுக் குற்றவாளிகள்.தப்ப முடியாது. இவர்கள் தந்த ஆயுதங்கள்,அள்ளிக் கொடுத்த பணம்,அதன் மூலமாக அவன் பெற்றுக் கொண் ட, தடை செய்யப்பட்ட குண்டுகள்,கொல்லப்பட்ட குழந்தைகள் என அத்தனை உண்மைகளும் வெளியே வரும்.

எனவே, கொழும்பில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தி விட்டால், அடுத்த
இரண்டு ஆண்டுக் காலத்துக்கு அந்த அமைப்புக்கு இராஜபக்சே தலைமை தாங் குவான்; அவனே ஒரு விசாரணை நாடகத்தை நடத்திக் கொள்வான்; இந்தக்
கபட நாடகத்தை நாம் தொடரலாம் என்பதுதான்,இந்தியாவின் நோக்கம். 

தோழர்களே,இந்தக் காமன்வெல்த் அமைப்போடு உலகம் நின்று விடவில்லை.
டேவிட் கேமரூன் அங்கே போன அளவில் ஒரு நன்மை கிடைத்து இருக்கின் றது.உண்மையின் ஒரு பகுதியை, பத்து விழுக்காட்டை அவர் நேரில் பார்த்து
உணர்ந்து இருக்கின்றார். இன்னும் 90 விழுக்காடு உணர வேண்டும். சல்மான்
குர்ஷித் என்ற ஒரு அரசியல் கோமாளி உளறி இருக்கிறான். அவன் பெயரை
எல்லாம் இந்த மேடையில் சொல்ல நான் கூச்சப்படுகிறேன். இந்தியப் பிரதம ரும் வந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.தமிழ்நாட்டில் சில செண்டி மென்ட்ஸ் காரணமாக அவர் வராமல் போய்விட்டார்என்று பேசி இருக்கிறான். பாவிகளே, நீங்கள்தான் கொலைகாரர்கள். you are the murderers.

மிக முக்கியமான கட்டத்தில் இந்த வழக்கறிஞர்கள் மாநாடு, இங்கே நடக் கிறது. என் பேச்சை இமயம் தொலைக்காட்சி மட்டும் பதிவு செய்யவில்லை. மத்திய அரசின் உளவுத்துறை, மாநில அரசு காவல்துறை பதிவு செய்கிறது.
அதற்காகத்தான் நான் பேசுகிறேன்.

தொடரும் ....

No comments:

Post a Comment