முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க முயற்சிப்பதா?
‘நானே அரசு’என்றான் ஒருவன் பிரெஞ்சு நாட்டிலே; ஜெயலலிதாவுக்கும் அந்த எண்ணம் வந்துவிட்டது!
என்று தஞ்சையில் நடைபெற்ற முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு
விழாவில் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ அவர்கள் பேருரை ஆற்றி னார். அவரது உரையின் சென்ற பாகத்தின் தொடர்ச்சி வருமாறு:
இந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிலைகளை வடித்ததன் நோக்கம் என்ன? இவையெல்லாம் இங்கே ஏன் எழுப்பப்பட்டன? அமெரிக்காக்காரர்கள் தங்கள் பெருமைகளைப் பேசுவதற்காக தெற்கு டகோடா ரஸ்மோரில் சிலைகளை வடித்தார்கள்.இங்கே ஏன் வடித்தோம்? 1989 ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் 3 ஆம் நாள், வல்வெட்டித்துறைக்குச் சென்ற போது,மாவீரர் துயிலகங்களைப் பார்க்க நான் ஆசைப்பட்டேன். அப்போது அந்த ஊர்த்தலைவர், ‘அங்கே இந்திய இரா ணுவம் குவிக்கப்பட்டு இருக்கின்றது. நீங்கள் அங்கே போக முடியாது’ என்று சொன்னார்.அப்போது, குமரப்பாவின் தாயாரும், கிட்டுவின் தாயாரும் படகில் என்னை வழியனுப்பி இங்கே அனுப்பி வைத்தார்கள்.
இப்போது அங்கே, மாவீரர் துயிலகங் களை உடைத்து நொறுக்கி விட்டான்.
அடையாளம் இருக்கக்கூடாது என்று ராஜபக்சே அழித்து விட்டான். ஆனால்
கிளிநொச்சியில், நான் நெஞ்சால் பூஜிக்கின்ற தலைவர் பிரபாகரன், யுத்தத்தை இயக்கிய அந்த நிலவறையும்,போர்க்களத்தளமும் பாதுகாக்கப்பட்டு இருந்தது. வாருங்கள்; வந்து பாருங்கள் என்று சொல்லி, அயல்நாட்டுச் சுற்றுலாப்பயணி களை அழைத்துக் கொண்டு வந்து காண்பித்துக் கொண்டு இருந்தார்கள்.இப் போது அதையும் குண்டுகள் வைத்துத் தகர்த்துத் தரைமட்டமாக்கி விட்டான்.
என்ன காரணம்?
இது நாங்கள் பிரபாகரனை வென்ற இடம் என்று வெறிக்கூத்து நடத்துவதற்கா கத் திட்டமிட்டான். ஆனால், அந்த இடத்தைப் பார்க்க வந்தவர்கள் நெஞ்சில், இது ஒரு மாவீரனின் இருப்பிடம் என்ற மரியாதையே மேலோங்கியது. வணக் கத்துக்கு உரியதாகக் கருதினார்கள். அதனால், அதை இப்போது அழித்து விட் டான்.
போரில் ஒரு வீரன் கொல்லப்பட்டான்.அவனது கல்லறையும் உடைக்கப்பட்டு
விட்டது. அதில் இருந்து இரண்டு கற்களை எடுத்துக்கொண்டு வந்தார் ஒரு தாய்.அவர்களது வீட்டையும் கொளுத்தி விட்டார்கள். அந்தத் தாய் சிங்களவன்
முகாமில் அடைக்கப்பட்டார். அங்கே அந்தக் கற்களை வைத்து, பூக்களைப் போட்டுப் பூசித்தார்.
எல்லாவற்றையும் அழித்து விடலாம் என்று அவன் நினைக்கின்றான் அல்ல வா? இல்லை. அந்த உணர்வுகளை அழிக்க முடியாது என்பதை இந்த உலகத் துக்குக் காட்டு வதற்காகவே, இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப் பட்டு இருக்கின்றது. இது, உணர்ச்சி ஊட்டுவதற்காக, தமிழ் ஈழத்தைக் கட்டி
எழுப்புவதற்காக!
என்னுடைய அன்புச் சகோதரர்களே,
ஈழத்திலிருந்து வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்றைக்கு உங்கள்
நிலைமை என்ன என்பது எங்களுக்குத் தெரியும். உங்கள் தலை மீது கத்தி
தொங்குகிறது. நீங்கள் பகிரங்கமாக சில கருத்துகளைப் பேச முடியாது. அதை
நாங்கள் தவறாகக் கருத மாட்டோம்.ஆனால், நாங்கள் இருக்கிறோம். என்னை
விட வீரமான வாலிபர்கள் எதிர்காலத்தில் வருவார்கள். என்னை விட வேக மான இளைஞர்கள் வருவார்கள்.
மகிந்த ராஜபக்சேயைப் போல வடிகட்டிய முட்டாள் எவனும் கிடையாது. முட் டாளே நீ உடைத்துப் போட்டாயே, அந்தத் துகள்கள் அங்கேதானே இருக்கும்?
அவர்கள் சிந்திய இரத்தத் துளிகள் அந்த மண்ணில்தானே கலந்து இருக்கும்?
அவர்கள் சுவாசித்த காற்று, அங்கேதானே உலவிக்கொண்டு இருக்கும்? அந்த
மாவீரர்களுடைய துயிலகங்கள் மீண்டும் அங்கே எழும்.கல்லறைகளும் எழும்.
எங்கெல்லாம் நீ உடைத்தாயோ,அங்கெல்லாம் கட்டி எழுப்புவோம்.
சுதந்திரத் தமிழ் ஈழத்தில் எழும். ஈழத்தின் கொடி அங்கே பறக்கும். அவர்களு டைய பிரதிநிதிகள், இங்கே வருவார்கள். இந்த முள்ளிவாய்க்கால் முற்றத் தைப் பார்ப்பார்கள். இடையில் கடல் சற்றே பிரித்து வைத்து இருக்கின்றது. இந்த அலைகடல் வழியாகத் தான் இராஜராஜன் படையெடுத்துச் சென்றான்; இராசேந்திரன் படை நடத்திச் சென்றான். பராந்தகன்,வருணகுலத்தான், ரகு நாதன் படைகள் சென்றன. தமிழரின் வெற்றிக்கொடியை நாட்டினார்கள். இது வரலாறு.காமன்வெல்த் மாநாடு நடக்கப்போகிறது கொழும்பிலே. அது ஆதிக்க சக்திக்கு அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளின் கூட்டு அமைப்புத்தானே? இங்கே பேசியவர்களது கருத்தை நான் மறுக்கவில்லை.
ஆனால், அதில் ஆப்பிரிக்க நாடுகள் இருக்கின்றன. காலனி ஆதிக்கத்திற்கு
உள்ளே அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகள் இருக்கின்றன. ஒடுக்கப்பட்ட நாடு கள், உண்மை தெரியாமல் இருக்கின்றன.அப்படி ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு,
உரிமைக்காகப் போராடிய தென்னாப்பிரிக்காவில், ரோபென் தீவுச்சிறையில் 27 ஆண்டுகள் வாடினார் நெல்சன் மண்டேலா. அதைப் போலவே, துன்பங்களை அனுபவித்துப் போராடி,அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்ற பிஷப் டெஸ் மண்ட் டுட்டூ, நேற்று தில்லியில் பேசுகிறபோது, இரண்டு கருத்துகளைச்சொல் லுகிறார்.
இந்தியா வகுத்துக் கொடுத்த திட்டம்
அதில் ஒரு கருத்து, இலங்கையில் நடைபெறு கின்ற காமன்வெல்த் மாநாட் டை, அத்தனை நாடுகளும் புறக்கணிக்க வேண்டும் என்கிறார். தொடக்கத்தில் இருந்து நாம் அதைத்தான் சொன்னோம். எதிர்கால நம்பிக்கையை வார்க்கின்ற இளைஞர்கள், மாணவர்கள் என்னைச் சந்தித்தபோது அவர்களிடம் சொன் னேன்: தம்பிகளே, இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தா தீர் கள்.
காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று சொல்லுங்கள். அப்படி நீக்கிவிட்டால், இலங்கையில் மாநாட்டை நடத்த முடி யாது.இந்த மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற திட்டத்தை வகுத்துக் கொடுத்ததே, இந்திய அரசுதான்.
சேனல் 4 தொலைக்காட்சி வெளி யிட்ட ஆவணங்கள், இன்றைக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தி இருக்கின்றன. உலகின் பல நாடுகளில் உள்ள நாடாளு மன்ற உறுப்பினர் களுக்குப் போட்டுக் காண்பிக்கின்றார்கள். சிரபெரெனிகா வில், ஆறு முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்காக, 55 ஆண்டுகள் சிறைத்தண் டனை விதித்து இருக் கின்றார்கள். இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்ற ராஜபக்சே தப்ப முடியாது. இனப்படுகொலைக்கான விசாரணை நடக்கும். அப் படி ஒரு நிலை ஏற்பட்டால், நாம் சிக்கிக் கொள்வோம் என்பதற்காகத்தான், இந்தியா இந்த சதித்திட்டத்தை வகுத்துக் கொடுத்து இருக்கின்றது.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு இசைப்பிரியா படுகொலை, எட் டுத் தமிழ் இளைஞர்களை அம்மணமாக இழுத்து வந்து, பின்னந்தலையின்
சுட்டுக்கொன்றது என, சேனல் 4 காண்பித்த ஆவணங்கள் அனைத்தும் நூற் றுக்கு நூறு உண்மை என்று, ஜான் ஹோம்ஸ் என்ற நிபுணர் 2011 மே 31 இல் ஜெனீவாவில் சொல்லி விட்டார்.
அன்றைக்கு இந்தக் காட்சிகளைப் பற்றி,முன்னாள் முதல்வரிடம் செய்தியாளர் கள் கேட்டார்கள். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘இது ஏதோ பழை ய படம் போலத் தெரிகிறது’ என்று நக்கலடித்தார். நமது தமிழ் மொழி எப்படி யெல்லாம் அவருக்கு உதவுகிறது தெரியுமா? இன்றைக்குப் பாருங்கள்; அதைப் பற்றி முரசொலியில் வருணனை செய்கிறார். இசைப்பிரியா கொல்லப்பட் டதை, எட்டுத் தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை எப்படியெல்லாம் வருணிக்கிறார் தெரியுமா?
நான் குற்றம் சாட்டுகிறேன்: இசைப் பிரியாவைப் போன்ற ஆயிரக்கணக்கான
எங்கள் சகோதரிகள் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படு கொலை செய்யப்பட்டதற்கு, இந்திய அரசுதான் காரணம். நீதான் இனக்கொ லைக் குற்றவாளி. ராஜபக்சேவை மட்டும் அல்ல, உன்னையும் சேர்த்துத்தான் கூண்டில் நிறுத்த வேண்டும்.
சிசிலியன் இரத்தம் அல்லவா சோனியா காந்தி? கொன்று குவிக்க வேண்டும்
விடுதலைப்புலிகளை, அதில் எத்தனை இலட்சம் தமிழர்கள் செத்தாலும் பரவா யில்லை என்று முடிவு எடுத்து இப்படிச் செய்தார். எத்தனை தடவை பிரதமரி டம் மன்றாடி இருப்பேன்? இங்கே மணியரசன் எடுத்துச் சொன்னாரே?
இந்தியாவுக்காகத்தான் போரை நடத்தினோம் என்று ராஜபக்சேவே சொல்லி விட்டான். 2009 ஆம் ஆண்டு, ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்சிலில், அந்த இலங்கைக்குப் பாராட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டது இந்தியா. நான் மிகவும் மதிக்கின்ற ஃபிடல் கேஸ்ட் ரோவின் கியூபா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அதற்கு ஆதரவு. இன்றைக் கும் புரட்சியாளன் சே குவேரா படத்தைப்பனியனில் போட்டுக் கொள்கிறார்கள் நமது தமிழ் இளைஞர்கள்.நானும் அவனை மதிக்கின்றேன். அவன் ஒரு புரட்சி யாளன். அவன் போராடிய கியூபாவும் அந்தத் தீர்மானத்தை ஆதரித்தது. எப் போது?
2009 இல், இலட்சக்கணக்கான தமிழர்கள் செத்துக் கிடந்தபோது. இதற்கு ஐ.நா. வும் உடந்தை. அவர்களும் குற்றவாளிகளே. அதற்கு ஆதாரம் இருக்கின்றது. உணவும் அனுப்பவில்லை. கடைசியில் அங்கே இருந்த அதிகாரிகளிடம் உண் மையை வெளியில் சொல்லாதீர்கள்; புலிகள் மீது பழி சொல்லுங்கள் என்றான் விஜய் நம்பியார்.அதற்குத் துணைபோனவர்தான் நவநீதம் பிள்ளை.
இலங்கையில் மாநாட்டை நடத்தி விட்டால், காமன்வெல்த் அமைப்புக்கு ராஜ பக்சே தலைவர் ஆகிவிடுவான்.அவர்களே விசாரித்துக் கொள்ளுவார்கள் என் பதுதான் இந்தியாவின் திட்டம்.
தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு
தமிழ் ஈழம் அமைப்பதற்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத் தை, முதன்முதலாக பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில், நான் முன்வைத்தேன். பொது
வாக்கெடுப்பு குறித்துப் பலர் பேசி இருக்கலாம். அப்படிப்பட்ட பொது வாக்கெ டுப்புகள் எல்லாம், அந்தந்த நாடு களிலேயே நடைபெற்று இருக்கின்றன. ஆனால், இன்றைக்கு ஈழத்தில் விரட்டப்பட்ட தமிழர்கள் எட்டு இலட்சத்துக்கும்
மேற்பட்டோர், உலகின் பல நாடுகளில் வசிக்கின்றார்கள்.
எனவே, அந்தப் பொதுவாக்கெடுப்பை,உலகில் ஈழத்தமிழர்கள் எங்கெல்லாம்
வாழ்கின்றார்களோ, அவர்கள் அந்தந்த நாடுகளிலேயே வாக்கு அளிக்கின்ற
விதத்தில் நடத்த வேண்டும் என்ற கருத்தை, உலக அரங்கில் முதன்முதலாக
முன் வைத்தவன் அடியேன் என்ற தகுதியோடு இங்கே பேசுகின்றேன். அண் ணன் பழ. நெடுமாறன் அவர்களையும் வைத்துக் கொண்டுதான் சொல்லு கிறேன்.
முன்னுக்குப் பின் முரணான சட்டமன்றத் தீர்மானங்கள்
அதே கருத்தை வலியுறுத்தி, மார்ச் மாதம் தமிழகச் சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் தீர்மானம் நிறைவேற்றிய அடுத்த நொடியிலேயே, வரலாறு உங் களுக்குப் பொன் மகுடம் சூட்டும் என்று வரவேற்று அறிக்கை விடுத்தேன். ஏதோ அவர்களுடன் மீண்டும் கூட்டுக்காக அறிக்கை விடுகிறேனோ என்று யாரும் நினைத்து விடாதீர்கள். நான் பெரியாரின் வார்ப்பு;அண்ணாவின் வார்ப் பு, சுயமரியாதைக் காரன். (கைதட்டல்). கடந்த காலத்தில் சில தவறுகளைச் செய்து இருக்கின்றோம்,பொது நன்மைக்காக. அதை நியாயப்படுத்த வில்லை. சியாங்கே சேக்கோடு மாவோ கை கோர்த்ததைப் போல, தொடக்கத்தில் ஹிட் லரோடு ஸ்டாலின் இணக்கமாக இருந்ததைப் போலத்தான்.
இப்போது அதே முதல் அமைச்சர் என்ன தீர்மானம் போட்டு இருக்கின்றார்.சிங் களவருக்கு இணையாக தமிழர்களுக்கும் சமவாய்ப்புகள் கிடைக்கின்ற வரை யில், காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கி வைக்க வேண் டும். அப்படி என்றால், மார்ச் மாதம் நிறைவேற்றிய தீர்மானம் உண்மையான தா? அல்லது இந்தத் தீர்மானம்தான் உங்கள் உள்ளக்கிடக்கையா?
முத்துக்குமார் செத்துக் கிடந்தபோது, வெள்ளையனும், புகழேந்தி தங்கராசும்
வந்தார்கள். நானும், ஜீவனும் சென்றோம்.அவனது உடலை கொளத்தூரில் கொண்டு போய் வைத்தோம். அண்ணன் நெடுமாறன் அவர்கள் வந்தார்கள். மூன்று நாள்கள் சாப்பிடாமல் அங்கேயே இருந்தோம்.மூலக்கொத்தளம் சுடு காட்டுக்குக் கொண்டு சென்றோம். வழிநெடுக பல்லாயிரக் கணக்கான தாய் மார்கள் நின்று கதறி அழுதனர். மெழுகுவர்த்தி ஏந்தி வந்து அந்த வண்டியைத் தொட்டுக் கும்பிட்டார்கள்.
ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம்
நான் அந்த இரவில், இன்றைய முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினேன். முத் துக் குமார் உடல் சென்ற வழியில் இலட்சக் கணக்கான தாய்மார்கள் வந்தார் கள். வழியில் வைக்கப் பட்டு இருந்த சோனியா காந்தி படங்களை, கலைஞர் கருணாநிதி படங்களை உடைத்து நொறுக்கினார்கள்.உங்கள் படங்களையும் உடைத்தார்கள்.ஆனால் அவர்களுடைய படங்கள் ஐம்பது என்றால், உங்கள் படங்கள் ஒன்றிரண்டைத்தான் உடைத்தார்கள்.அவ்வளவு ஆத்திரம், சோனியா காந்தி மீதும், கருணாநிதி மீதும் இருக்கின்றது என்று எழுதினேன்.
இன்றைக்குக் கடிதம் எழுதுகின்ற கலைஞர் அவர்களே, அன்றைக்கு முத்துக் குமார் இறந்தபோது இரங்கல் தெரிவித்தீர்களா? அதற்குப் பிறகு எத்தனை பேர் தீக்குளித் தார்கள்.. இரங்கல் தெரிவித்தீர்களா? போரில் இதெல்லாம் சகஜம் என்றீர்கள்.அதற்குப் பிறகு, தமிழ் மக்களின் உணர்வுகளைத் தெரிந்து கொண் டீர்கள்.உங்களுக்கு ஓட்டு வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு இடம் தராமல் கூட்டணியை விட்டு வெளி
யேற்றினாலும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் மார்ச் மாதம் அவர் நிறைவேற்றிய தீர்மானத்தை வரவேற்று
அறிக்கை கொடுத்தேன். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இப்போது எதற் காக இந்த வேலை?
இராஜபக்சேவுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நான் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். தீர்ப்பு ஆயத்தில் வாதாடினேன். கடந்த இரண்டு ஆண்டுகளில், விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது ஏதேனும் ஒரு வழக்கு பதிவு செய்து இருக்கின்றீர்களா? என்று கேட்டேன். அதற்காக, இப் போது தமிழ்நாடு கியூ பிராஞ்ச் போலீஸ் பொய் வழக்குப் போட்டு, விடுதலைப் புலி உறுப்பினர் களைக் கைது செய்தோம் என்று சொல்லி, மத்திய அரசு விதித் த தடையை நியாயப்படுத்துவதற்காகச் செய்து இருக்கின்றார்கள்.
அப்படித்தான் செந்தூரன் மீது வழக்குப் போட்டார்கள். விடுதலைப்புலிகள் மீதா ன தடையை நீக்க வேண்டும் என்று நான் தொடுத்த வழக்கு, சென்னை உயர்நீதி
மன்றத்தில் இன்னமும் நிலுவையில் இருக்கின்றது.ஆக, புலிகள் மீதான தடை யை நீடிக்க வேண்டும் என்று இப்போதும் நீங்கள் முயற்சித்துக் கொண்டு இருக் கின்றீர்கள். இன்னொரு பக்கத்தில்,ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதைப்
போலக் காட்டிக் கொள்ளுகின்றீர்கள்.
வேலு நாச்சியார் உள்ளிட்ட வீரத் தியாகி களுக்கு நினைவு மண்டபங்கள் கட்டு வதாக அறிவித்து இருக்கின்றீர்களே? அவர்களது படங்களைத்தானே இங்கே
சித்திர மகாலில், முத்தமிழ் மண்டபத்தில் வைத்து இருக்கின்றார்கள். நீங்கள் இந்த மண்டபத்தை இடிக்க துடிக்கிறீர்கள்.
அப்படியானால், இராஜபக்சே போக்குதான், உங்கள் போக்கா? அவன் அங்கே
உடைத்தான்.
ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவரை வைத்து, ஒரு வழக் கையும் போட்டு இருக்கின்றீர்கள்.விளார் ஊராட்சியில் இந்த முற்றத்தை
அமைப்பதற்காக நாங்கள் முன்பு கொடுத்த அனுமதியை நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். இந்தக் கட்டடங்களை அகற்ற வேண்டும்; இடிக்க வேண்டும்.யாருடைய கையெழுத்து? துணைத் தலைவர் கையெழுத்துப் போட் டதாக.ஆனால்,அவர் அப்படிக் கையெழுத்துப் போடவில்லை. அதுவும் போலிக்
கையெழுத்து. ஏற்கனவே போர்ஜரி கையெழுத்து என்று சொன்னவர் தானே?
அந்தப் பழக்கம்தான் இதிலும்.
இது ஆக்கிரமித்துக்கட்டப்பட்டு இருக்கின்றது;பொதுப்பணித்துறைக்குஇடைஞ் சலாக இருக்கின்றது அகற்ற வேண்டும் என்கிறீர்களே, தமிழர்கள் நெஞ்சல் தணலாக எரிகின்றதே? 19 தமிழர்கள் தீக்குளித்து மடிந்து இருக்கின்றார்களே? இந்த இடத்தை இடிக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த அதிகாரிக்கு எப்படி வந்தது? முதல் அமைச்சர் சொன்னால்தான் என்ன? உனக்கு எப்படி அந்த எண் ணம் வந்தது? நீ தமிழனா? உன் உடம்பில் ஓடுவது தமிழ் இரத்தம் தானா? எப்படி இந்த மனுவைப் போட்டாய்? இடித்து விடுவாயா?
என் பிணத்தின் மீதுதான் இடிக்க முடியும் என்று அண்ணன் நெடுமாறன் சொன் னார்.நான் பேசினால் வன்முறையாளன் என்று சொல்லுவார்கள். நீங்கள் ஏன் பிணமாக வேண்டும்? எவன் வருவான் இங்கே? உயிரைக் கொடுப்பதற்காகப் பட்டாளத்தை நான் திரட்டிக் கொண்டு வருகிறேன்.
இந்த அக்கிரமத்தை இந்த அரசு எப்படிச் செய்ய முனைந்தது? முதல் அமைச் சரே என்ன நோக்கம் உங்களுக்கு? கல்லூரி முதல்வரிடம் போய், எங்களுக்கு
இடைஞ்சலாக இருக்கின்றது என்று கூறும்படிச் சொல்லி இருக்கின்றார்கள்.
விளார் ஊராட்சி மன்றம் மூலமாக மனு; அதிகாரிகள் மனு. ஆனால், நீதிபதிகள்
நீதியை நிலைநாட்டி இருக்கின்றார்கள். நீதி உணர்ச்சியோடு செய்து இருக்கின் றார்கள்.நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம்.
வழக்குப் போட்டு எங்களை மிரட்ட முடியாது. I am the State என்று பிரான்ஸ் நாட் டில் ஒருவன் நினைத்தான். இப்போது உங்களுக்கு அந்த மனப்பான்மை வந்து
இருக்கின்றது. ஒரு பக்கத்தில் மணிமண்ட பங்களை நீங்கள் கட்டுவீர்கள்; இதை இடிக்கச் சொல்லுவீர்களா?
எதற்காக இந்த முற்றம்?
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்பது, உணர்ச்சியை ஊட்டுவதற்காக; ஈழத் தமிழருக்கு விடியல் ஏற்படுத்துவதற்காக.இனி அவர்கள் சிங்களவர்க ளோடு சேர்ந்து வாழ முடியாது. தந்தை செல்வா காலத்திலேயே முடிவு எடுத்து அறிவித்து விட்டார்கள். 1976 ஆம் ஆண்டிலேயே வட்டுக்கோட்டையில் தீர் மானம் நிறைவேற்றி விட்டார்கள். அதற்குப் பிறகு அங்கே நடந்த தேர்தல்கள் அனைத்துமே பொது வாக்கெடுப்புதான்.தமிழர் தாயகத்தில் சிங்களவர்களை வெளியேற்ற வேண்டும்.
உலக நாடுகளைக் கேட்கிறேன். டமாஸ்கசுக்கு அருகில் ரசாயனக் குண்டு களைப் போட்டு, 900 பேர்களைக் கொன்று விட்டான் என்று குற்றம்சாட்டி, சிரி யா மீது படையெடுக்க வேண்டும் என்கிறீர்களே, இங்கே எத்தனை இலட்சம் தமிழர்களைக் கொன்று இருக்கின்றார்கள்? எங்களுக்கு நாதி இல்லையா? 65 நாடுகளில் தமிழர்கள் வசிக்கின்றோம்.
இளந்தமிழர்களே, உணர்ச்சி உள்ள தமிழர்களே, ஸ்பார்ட்டாவின் 300 வீரர்களை வைத்துக் கொண்டுதான், இலட்சக்கணக்கான பாரசீகப் பெரும்படையை எதிர்த் து நின்றார்கள் தெர்மாப்ளே கணவாயிலே. 28 பேர்களை வைத்துக்கொண்டு வன்னிக்காட்டுக்கு உள்ளே போய், இலட்சம் பேர் கொண்ட படைகளை எதிர்த் தார் பிரபாகரன். இங்கே அங்கயற் கண்ணியின் சித்திரம் இருக்கின்றது. அவர் தான் முதல் கடற் கரும்புலி. 6300 டன் எடையுள்ள கப்பலை, காங்கேசன் துறை முகத்தில் தகர்ப்பதற்காகச் சென்றாள்.
அதற்கு முன்பு வீட்டுக்குப் போனாள். பிள்ளைகளோடு மகிழ்ச்சியாகப் பேசி னார். நான் காற்றோடு காற்றாகப் போய்விடுவேன் என்று சொல்லிவிட்டுப் போனார். அது அந்தத் தாய்க்குப் புரியவில்லை. 34 கிலோ எடையுள்ள வெடி
குண்டுகளைக் கட்டிக் கொண்டு, 17 கிலோமீட்டர் நீந்திச் சென்றார். சிங்களக் கடற்படைக் கப்பலைத் தகர்த்தார். 50 கிலோ எடையுள்ள அங்கயற்கண்ணி, 6300 டன் எடையுள்ள கப்பலைத் தகர்த்தார்.
தியாகம் வீண் போகாது
அப்போது, கரையில் நின்று கொண்டு இருந்த தோழிகள் ஒருபக்கத்தில் மகிழ்ச் சி அடைந் தாலும், மறுபக்கத்தில் அங்கயற்கண்ணி மடிந்து விட்டாளே என்று வருந்தினார்கள். கடல் அலைகள் சொல்லுகின்றன.அவள் சமுத்திரகுமாரி ஆகிவிட்டாள்; எங்கள் புதல்வி ஆகிவிட்டாள் என்று. அந்த அங்கயற்கண்ணி சொன்னாளாம்.
நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழா சமயத்தில், நான் இந்தப் பணியைச் செய் து சாக வேண்டும்; ஏன் தெரியுமா? அந்தத் திருவிழாவின்போது, என் அம்மா கச்சான் விற்றால், கொஞ்சம் காசு கிடைக்கும்; இனி என் நினைவுநாளுக்கு நிறையப் பேர் வீட்டுக்கு வருவார்கள். அப்போது அவர்களுக்குச் சோறு போட அம்மாவிடம் காசு இருக்காது; அந்தத் திருவிழாவின்போது நான் செத்தால், அம் மா கையில் கொஞ்சம் காசு இருக்கும் என்றாளாம். இப்படி ஒரு தியாகத் தை, உலகில் வேறு எங்கே பார்க்க முடியும்?
கேப்டன் மில்லர் எப்படிச் செத்தான்? நெல்லியடி முகாமை எப்படித் தகர்த்தான்? அந்த வீரர்களின் படங்கள் இங்கே இருக்கின்றன. குமரப்பா, புலேந்திரன் உள் ளிட்ட 12 வீரத்தளபதிகள் மற்றும் கிட்டு, ஜானியின் சாவுக்கு இந்திய அரசுதான் காரணம். அந்தத் துரோகத்தைச் சித்தரிக்கும் படம் இங்கே இருக்கின்றது.
பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி மார்பிலே குண்டு தாங்கி மடிந் தான். வேலுப் பிள்ளையும், பார்வதி அம்மையாரும் இருக்கிறார்கள். அந்தப் பார்வதி அம்மையார் மருத்துவ சிகிச்சைக்காக வந்தபோது, அவரை வரவேற்க நானும், அண்ணன் நெடுமாறனும் சென்றோம். ஈவு இரக்கம் அற்றவர்கள், அவ ரை இந்த மண்ணில் இறங்கவிடாமல் விரட்டி அடித்தார்கள். பச்சைப் பிள்ளை பாலச்சந்திரன் படமும் இருக்கின்றது.அவன் கண்களைப் பாருங்கள். எந்த பய மும் இல்லாமல் உட்கார்ந்து இருக்கின்றான். இந்தப் படங்கள் எல்லாம் உணர்ச்சியை ஊட்டும். சுதந்திரத் தமிழ் ஈழம் மலரும். மலர வேண்டும்.
இந்திய ஒருமைப்பாடு நீடிக்குமா?
இனி எந்தக் கட்சி இந்தியாவில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழர்களுக்குத் து ரோகம் இழைத்தால், வஞ்சகம் செய்தால், தாய்த் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டால், அப்படிப்பட்ட இந்திய நிலப்பரப்பில் இந்தத் தமிழகம் இருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழும். அதைத்தான் இங்கே மணியரசன் எச்சரித்தார். 500 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் உங்களோடு இல்லை; சந்திர குப்தர் காலத்தில், அசோகன் காலத்தில், குப்தர் காலத்தில், அக்பர் காலத்தில்,
ஒளரங்கசீப் காலத்தில் உங்களோடு இல்லை. உங்கள் படைகள், எங்கள் பக்கம் எட்டிப் பார்த்தது இல்லை. ஆனால், நாங்கள் கடல் கடந்து சென்றவர்கள். எங் கள் உரிமைகள் பாதுகாக்கப்பட்டால்தான் ஒருமைப்பாடு.
இன்றைய இந்திய அரசு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தலைமை தாங் கிய காங்கிரஸ் கட்சி, 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரை அதில் அமைச்சர் பதவிகளை வகித்த தமிழ்நாட்டுக் கட்சிகள், எல்லோரும் குற்றவாளிகள்தான். ஈழத்தமிழர் படுகொலைக்குக் காரணமான இவர்களை விட மாட்டோம். கூண் டில் நிறுத்துவோம்.
எச்சரிக்கிறேன்: தமிழக மீனவர்கள் படுகொலை தொடர்ந்தால், இந்தியாவின் ஒருமைப்பாடு பலிபீடத்துக்குப் போய்விடும். மலரப் போகும் தமிழ் ஈழத்துக்குக் கலங்கரை விளக்கமாக இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் திகழும். தமிழ் ஈழத் துக்காக விண்ணில் பூக்கின்ற விடிவெள்ளிதான் இந்த முள்ளிவாய்க்கால். நன்றி, வணக்கம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.
No comments:
Post a Comment