Monday, September 2, 2013

சிறைவாசிகளை விடுதலை செய்க!

பேரறிஞர் அண்ணா 105-ஆவது பிறந்த நாளையொட்டி
சிறைவாசிகளை விடுதலை செய்க!

#வைகோ கோரிக்கை

ஆயுள் தண்டனை அடைந்தோர், பத்து ஆண்டுகள் தண்டிக்கப்பட்டோர், சில குற்றப் பிரிவுகளில் தண்டனை பெற்றதைக் காரணம் காட்டி, 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் கடந்தும் சிறையில் இருக்கின்றனர்.

வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு சிறைவாசி, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தால், பரோல் விடுப்பு கிடையாது என்பதும், நியாயப்படுத்த முடியாத மனிதாபிமானம் அற்ற நடவடிக்கை ஆகும். 

விடுப்பில் செல்லும் சிறைவாசி, தவிர்க்க இயலாத காரணங்களால் குறிப் பிட்ட நாளில் சிறைக்குத் திரும்பி வர இயலாமல், ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்பட்டு விட்டால்கூட, இந்தியத் தண்டனைச் சட்டம், 224 பிரிவுகளின்கீழ் மேலும் தண்டிக்கப்படுகின்றனர். பொது மன்னிப்பில் அவர்கள் விடுவிக்கப் படுவதும் கிடையாது. 

இதனால், மரணத்தைவிடக் கொடுமையான மனத் துன்பங்களுக்கு ஆளாகி
உள்ளனர். ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களை, மேலும் தண்டிப்பதைப் போல இந்த நடவடிக்கைகள் அமைகின்றன. அவர்களது குடும்பங்கள் சிதறி சின்னாபின்னமாகின்றன. 

இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில், 14 ஆண்டுகளுக்கு மேல் கைதி களின் சிறைவாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம், இந்திய நாடாளுமன்றத்தில் வந்தபோது, அதனைக் கடுமையாக எதிர்த்து, கருத்துச் சொன்னது நான் மட்டுமே. 

நீண்ட நெடிய சிறைவாசத்தில் மனந்திருந்தியவர்கள், தங்கள் எஞ்சிய வாழ் நாளில் சுதந்திரக் காற்றை அனுபவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும். 

வருகிற செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா அவர்களின் 105-ஆவது பிறந்தநாள் ஆகும். அதையொட்டி, பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்போரை, விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

‘தாயகம்’                                                                                                       வைகோ
சென்னை - 8                                                                                பொதுச் செயலாளர்,
02.09.2013                                                                                        மறுமலர்ச்சி தி.மு.க 

No comments:

Post a Comment