பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா -மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு, 15.09.2013
அன்று, விருதுநகரில் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்றது. மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் #வைகோ அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
‘உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்;
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,
புகழ்எனின், உயிருங் கொடுக்குவர்; பழியெனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையராகித்,
தமக்கென முயலா நோன்தாள்,
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே’
என்று, கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி உரைத்த நெறிதனையே இலக்காக் கிக் கொண்டு இயங்கி வருகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தின் மாநாடு.
பகுத்தறிவுப் பகலவன்
இந்தத் தமிழகத்தில், தூய்மையுடன் மனதுக்குச் சரி என்று பட்டதை, எவரும் எடுத்து உரைக்கலாம் என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது; அறி வுப் புரட்சியின் மூலம்!
இதற்கு முழுக்க முழுக்கப் பொறுப்பாளர் பெரியார்!
திடுக்கிட வைக்கிறாரே; திகைப்பாக இருக்கிறதே;
எரிச்சலூட்டுகிறாரே; ஏதேதோ சொல்கிறாரே; என்று கூறியும்,
விட்டு வைக்கக் கூடாது; ஒழித்துக் கட்டியாக வேண்டும்;
நானே தீர்த்துக் கட்டுகிறேன் என்று மிரட்டியும்,தமிழகத்தில் உள்ளோர் பலர் பேசினர்.
ஏசினர், எதிர்த்தனர், ஏளனம் செய்தனர், மறுப்பு உரைத்தனர்.
ஆயினும், மூலையில் நின்றாகிலும், மறைந்து இருந்தாகிலும்,
அவர் பேச்சைக் கேட்டவண்ணமே இருந்தனர்.
அந்தப் பேச்சு, 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தபடியே இருந்தது.
தங்கு தடை இன்றி, வேகம் குறையாமல் பாய்ந்து ஓடி வந்தது;
மலைகளைத் துளைத்துக் கொண்டு, கற்களை உருட்டிக் கொண்டு,காடுகளை, கழனிகளை வளம் பெறச் செய்து கொண்டு,
ஓசை நயத்துடன், ஒய்யார நடையுடன், வெளிவந்துகொண்டே இருந்தது.
அவரது உரிமைப் போர் வென்றது; அந்த அறிவுப் புரட்சியைத் தந்தவர் பெரியார்
என்று பாராட்டிய,பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்த நாள்விழா மாநாடு.
வீரத்தியாகி சங்கரலிங்கனார்
அன்று அண்ணா எழுதினார்:
“வீரர் வழி வந்தோரே; வெற்றி முரசு கொட்டினோரே தமிழர்காள்; தரணி புகழப் பரணி பாடிய பரம்பரையினரே
கடலில் கலம் செலுத்தி, கரிப்படை கொண்டு கற்கோட்டைகளைத் தூளாக்கி,
வேற்படை கொண்டு மாற்றாரை விரட்டி
வாகை சூடிய வெற்றி வீரர் வழிவந் தோரே
மானம் இழந்து, உணர்ச்சி இழந்து, உயிரைச் சுமந்து கொண்டு உலவுங்கள்
என்னால் முடியாது. இதோ, நான் மரணத்தைத் தழுவிக் கொண்டேன்
எனக்கு இந்த நெருப்புப் படுக்கை போதும்; பிடிசாம்பல் ஆகிறேன் என்று,
விநாடிக்கு விநாடி மரண வாயிலை நெருங்கிக் கொண்டு இருந்தார்.
இன்றுபோல் அன்றும் நடுநிசி;நானும்,நண்பர்கள் நடராசன்,மதுரை முத்து ஆகி யோரும் அவரைக் காணச் சென்றபோது, விருதுநகரில் காங்கிரஸ் தியாகி சங் கரலிங்கம் என்பார், உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அந்தத் திடலில் நான் பலமுறை பேசி இருக்கிறேன். கடைவீதியை ஒட்டி உள்ள மாரியம்மன் கோவில் திடல். காங்கிரஸ் கொடி, அந்தக் குடிலின் மீது பறந்து கொண்டிருக் கக் கண்டதும், தம்பி, எனக்குச் சொல்லொணாத வேதனைதான்.
அமைதி குடிகொண்டிருந்த இடம்; நாங்கள், சத்தம் ஏதும் எழலாகாது. அவருக் குச் சங்கடம் ஏற்படும், எண்ணிக் கொண்டபடி, உடன் வந்த தோழரை, எழுப்பா தீர் ஐயா,என்று ஜாடை காட்டிச் சொன்னோம். அவரோ, தியாகத் திருவைத் தொட்டுத் தட்டினார். சங்கரலிங்கனார் கண் திறந்தார். தூக்கம் அல்ல; சோர்வி னால் செயல் அற்றுப் போன நிலை.
ஐயா..... அண்ணாத்துரை.....என்று அந்த நண்பர் சொன்னதும், என் இரு கரங்க ளையும் பற்றிக் கொண்டார்.அவருடைய முகத்தருகே என் கரங்கள்- கண்ணீர்
கரத்தில் தட்டுப்பட்டது.
தலைமாட்டில் நான் உட்கார அவர் இடம் செய்து தர,சிறிது நகர்ந்தார். நான் அமர்ந்தேன். அவருடைய போர்வை கலைந்தது. எலும்புக்கூடாகத் தெரிந்தார்.
பழுத்த பழம். பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டு, காலந்தள்ளிக் களித்திட வேண்டிய வயது; உண்ணாவிரதம் மேற்கொண்டு அறுபது நாட்க ளுக்கும் மேலாகி விட்டது.
சங்கரலிங்கனார் எழுபது நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் இருந்து மூர்ச்சை யாகி விட்ட பிறகு,மதுரை மருத்துவ விடுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மறைந்து போனார்.
தமிழ்நாடு என்ற பெயர் பெறுவதற்காவது நாம் முனைந்து நிற்க வேண்டாமா?
அறம் நிச்சயமாக வெல்லும்; ஆனால், அது கடுமையான காணிக்கைகளைக் கேட்கும்.
மிகக் கடுமையான காணிக்கை தரப்பட்டாகி விட்டது. வீரத்தியாகி உயிரை அர்ப்பணித்தார்”
என்று, திராவிட நாடு ஏட்டில் 1956 அக்டோபர் 21 இல் எழுதினார் அண்ணா.
அந்த வீரத்தியாகி சங்கரலிங்கனார் பெயர் தாங்கி உள்ளது இம்மாநாட்டுப் பந்தல்.
அந்த உத்தமரின் எண்ணத்தைச் செயல்படுத்திய பேரறிஞர் அண்ணா அவர் களின் பிறந்த நாள் விழா மாநாடு. எவ்வளவு பொருத்தம் பாருங்கள்!
நுழைவாயில்கள்
திராவிட இயக்கத்தின் நடமாடும் கருத்துக் களஞ்சியம்; இன எதிரிகளின் கண் டனங்களைத் தூள் தூளாக்கிய கொள்கைச் சம்மட்டி; ஈரோட்டுப் பெரியாரா? பாபா சாகேப் அம்பேத்கரா? இவர்தான் அதற்கு அதாரிட்டி; விளக்கம் தரும் என் சைக்ளோபீடியா என்ற பட்டயத்துக்கு உரியவர்; ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்
கழகத்தில் படித்து, கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்திலும், பச்சையப்பன் கல்லூரியிலும் ஆசிரியப் பணி செய்தவர்; நெல்லையில், கரூரில், நம் மாநாடு களில், ரோம் நாட்டின் சிசரோ போல், வீர உரை ஆற்றியவர்; ஆகஸ்ட் 16 ஆம் தேதி நான் சந்தித்தபோது, கிழித்துப் போட்ட நாராகப் படுக்கையில் கிடந்தார்.
குளோபல் மருத்துவமனை. இரண்டு நாள்களாக,பேசக்கூட முடியாமல் தவித் தார். இதோ, உங்களைப் பார்த்த மாத்திரத்தில், எழுந்து உட்காருகிறாரே; பேசத்
தொடங்கி விட்டாரே; என்ன ஆச்சரியம் என்றனர் அவரது மனைவியும், பிள் ளைகளும். என் பக்கத்தில் மல்லை சத்யா.
அவர் மனதில் கொந்தளித்த எண்ணங்களைச் சொன்னார். பேசினார், பேசினார், மூன்று மணி நேரம் பேசினார். அவர் கண்களிலே ஒரு பிரகாசம். அந்த நிலை யிலும் அவர் நகைச்சுவையை நிறுத்தவில்லை. என்ன சத்யா? உங்கள் உடல் எடை என்ன? என்றார்.சத்யா 80 கிலோ என்றார். என் கையை மடக்குங்கள்
பார்ப்போம் என்று கையை நீட்டினார். முயன்றார்; முடியவில்லை.
நான் 100 கிலோ எடையை, இந்தக் கையில் தேக்கி இருக்கிறேன்; திராவிடர் கழகத்தில் எதிரிகள் தாக்குதலைத்தடுக்க ஜப்பானில், ஜூடோவும் கராத்தேவும் பயின்றேன். வியந்து போனேன். ஈழத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்; புலி கள் மீண்டும் வருவார்கள்; புதைகுழியில் இருந்து புறப்படுவார்கள். சுதந்திரக் கொடியை உயர்த்துவார்கள்;அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆனால் தமிழ்நாடு,பெரியாரும் அண்ணாவும் உருவாக்கிய தமிழ்நாடு, எழுபது ஆண்டுகளுக்குப் பின்னால் போய்விட்டது. அனைத்தையும் கலைஞர் கருணா நிதி பாழாக்கி விட்டார். இதில் இருந்து மீள வேண்டும்; அதற்காகப் போராடும் தகுதியை உங்களிடம் கண்டுதான் கழகத்தில் சேர்ந்தேன்.
இப்போ தேர்தல் வந்துருச்சு; துணிச்சலாக முடிவு எடுங்கள். யார் சொல்வது? பகுத்தறிவாளன் பெரியார்தாசன் சொல்லுகிறேன். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங் கியது. படுக்கையை விட்டு எழுந்தார்.கைத்தாங்கலாக நாற்காலியில் உட்கார வைத்தேன். என் இருதயத்தில் ஊசியால் குத்துவது போல் அந்தக் காட்சி. ஆம்; மூத்திரப் பைக்குச் சொருகப்பட்ட குழாயில் படிகிறது ரத்தம். அதைவிடத் துன் பம், திரவ உணவு தருவதற்காக மூக்கில் சொருகப்பட்ட குழாயில் இருந்து வடி கிறது இரத்தம். என்னால் தாங்க முடியவில்லை.
இமைகளை முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு, விருது நகர் மாநாடு,பெரிய அளவிலே ஏற்பாடு.திராவிட இயக்கத்தின் மூதாதை மூவர் படத்தை நீங்கள்தான் திறக்கிறீர்கள் என்றேன். அவருக்கே உரிய பாணியில், உதடுகளில் ஒரு புன்முறுவலை நெளிய விட்டவாறு,கண்டிப்பாக வருகிறேன்; காரிலேயே வந்து விடுகிறேன்; முடியவில்லை என்றால், விமானத்தில் வரு கிறேன் என்றார்.
பறந்து வருகிறேன் என்றார்; ஐயோ, 48 ஆவது மணியில்,பறந்தே போய் விட் டார். மரண வானத்துக்குள் பறந்தே போய்விட்டார். ஆனால், கரூரிலும், நெல் லையிலும் அவர் சொல்லியது வருவோர் மனதில் ஒலிக்க, அப்துல்லாஹ் பெரியார்தாசன் பெயரால் நுழைவாயில்.
சொல்லிலும், செயலிலும், பகைக்கு அஞ்சாத கொள்கை மாவீரனாக நமக்கு உதவினாரே, என் ஆருயிர்த் தம்பி வழக்கறிஞர் சுப்புரத்தினம் பெயரால் நுழை வாயில்.
உற்றுழி உதவிய குணக்குன்றாகத் திகழ்ந்த ஷேக் முகமது பெயரால் நுழை வாயில். மூச்சு அடங்கும்வரை,கழகத்துக்குத் தொண்டு ஆற்றிய, டாக்டர் அசன்
இப்றாகிம் பெயரால் நுழைவாயில்.
கலை எழில் பந்தல்
இந்தியாவிலேயே ஈடு சொல்ல முடியாத பந்தல் கலைத்திலகம் தஞ்சை சிவா, அவர்களின் கைவண்ணத்தில், காணக் கண்கோடி வேண்டும் எனப் பிரமிப்பூட் டும் எழில் குலுங்கும் மாநாட்டுப் பந்தல்.
பாலச்சந்திரன் அரங்கம்
இயக்கம் உதித்த நாள் முதல், நமக்கு உற்ற துணையாகத் திகழும் செல்வன் நிறுவனத்தின் தலைவர் அன்புச் சகோதரர் தர்மர் அவர்கள் அமைத்து உள்ள
ஒளிவெள்ளம் விழிகளில் பாய்கிறது; ஒலியின் கம்பீரம் செவிகளில் கேட்கி றது.
ஒரு பாலகனாகப் பிறந்த பாவத்தைத் தவிர
வேறு எதுவும் செய்து இருக்கவில்லை
ஒட்டிய வயிறுடன், நிராயுதமான களத்தில்
அணிந்து இருந்த கால்சட்டையும், மூடி இருந்த
போர்வையும் தவிர
வேறு எதுவும் இல்லை
குற்றங்கள் நிரம்பிய வானத்தில்
எந்தப் பறவையும் இல்லை
இனி வேறு எந்த பாலகனின் கண்களைப் பார்ப்பது?
ஏதும் அறியாப் பாலகர்கள், இந்த மண்ணில்
பிறந்ததைத் தவிர
வேறு எதுவும் செய்தது இல்லை
பதுங்கு குழியில் பிறந்தவன், பதுங்கு குழியிலேயே
கொல்லப்படுகையில்
எஞ்சியது எதுவும் இல்லை
இரும்புத் துப்பாக்கிகள் நெஞ்சில் பதிகையில்
இறுதிக்குரல் அப்பாலகன் எடுக்கையில்
உடைந்த நிலாவைத் தவிர
வேறு எந்தச் சாட்சியும் இல்லை
இப்படி எத்தனை பாலச்சந்திரன்கள்?
இதுவரை ஆயிரம் களங்களில் புலிகளின் ஆயுதங்கள் செய்ததை அந்தக் கண் கள், பாலச்சந்திரனின் அந்த வீரத் திருவிழிகள் சாதித்து விட்டன
உலகம் இது வரை சந்தித்திராத, செவிகளில் கேட்கும்போதே நாடி நரம்புகளில் மின்சாரத்தைச் செலுத்துகின்ற வீரச் சமர்களை, ஈழ விடுதலைப் போர்க்களத் தில் நடத்திய, நான் நெஞ்சால் நேசித்துப் போற்றுகின்ற தலைவர், தமிழ்த் தாயின் வீரமைந்தன்,தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின்
பிள்ளை, ஐந்து துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் தாங்கி மடிந்த மாவீர மகன், பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனின் பெயரால் அமைந்து இருக்கின்ற மாநாட்டு அரங்கம்.
மாநாட்டுத் தலைமை
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது
எனும் குறட்பாவுக்கு ஒப்ப, எந்தப் பிரதிபயனையும் எதிர்நோக்காமல், உங்க ளுக்குத் தோள் கொடுக்க வருகிறேன்; உதவி செய்ய வருகிறேன் என்று நேசக் கரம் நீட்டினார்.
2009 ஆம் ஆண்டு, இதே விருதுநகர் தொகுதியில் களம் கண்டு நான் தோற்று, கண்மணிகளின் நெஞ்சில் கவலை சூழ்ந்த வேளையில், இனி கும்மிருட்டுத் தான் நிரந்தரமாக முற்றுகை இடும் என எதிரிகள் ஏளனம் செய்த நேரத்தில், நமக்கென்று ஓர் தொலைக்காட்சி இல்லை; ஊடகம் இல்லை; என்ன செய்யப் போகிறோம்?என்று நீங்கள் எல்லாம் தவித்த நேரத்தில், இதோ, வான் அலை கள் வழியாக, மக்கள் மனங்களில், உங்கள் இயக்கத்தைக் கொண்டு நிறுத்து வேன் என நம் நெஞ்சில் நம்பிக்கையை, ஓங்கிடும் மலையென உயர்த்திய இமயம் தொலைக்காட்சி நிறுவனர், இதேவேளையில் நேரலையாக இலட்சக் கணக்கான குடும்பங்கள் நம் மாநாட்டை சின்னத்திரையில் காணச் செய்து உள்ள, கழகத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர், தமிழக அரசியல் வரலாற்றில் பெருந் திருப்பத்துக்குக் கால்கோள் அமைக்கும் இம்மாநாட்டின் தலைவர், ஆருயிர்ச் சகோதரர், இமயம் ஜெபராஜ் அவர்களே!
கழக முன்னோடிகளே
கருங்கற் சுவரும் காவற் கூடமாகுமோ?
இரும்புக் கம்பியும் பெருஞ் சிறையாகுமோ?
தூய்மை மனத்தன், விடுதலை வீரனுக்கோ
சிறைச்சாலைதானும் அறச்சாலை ஆகுமே!
என்று, அண்ணா தீட்டிய பாட்டு வரிக்கு ஏற்ப, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை, நேற்றும் ஆதரித்தோம்; இன்றும் ஆதரிக்கின்றோம்; நாளையும் ஆதரிப்போம் என்று, மூரி நிமிர்ந்து முழங்கி, மாதங்கள் 19 சிறைவாசம் ஏற்ற, தியாக வேங் கை, சிவகங்கை மாவட்டச் செயலாளர், இந்த மாநாட்டின் திறப்பாளர்; ஆரு யிர்ச் சகோதரர் புலவர் செவந்தியப்பன் அவர்களே!
பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரைக்கு, சிவகங்கை மருதுபாண்டியர்கள் துணை நின்றது போல், 93 இல் இருந்து, எனக்குப் பக்கபலமாகவும், இயக்கத்துக்கு அர ணாகவும், தனக்கென்று எதையும் எதிர்பார்க்காது,இருபது ஆண்டுகளாக, இந்த மாவட்டத்தில், கண்ணை இமை காப்பது போலக் கழகத்தைக் காக்கின்றவரும், நாம் எண்ணியதை எண்ணியாங்கு செய்து முடிக்கும் வினைத்திறம் மிக்கவ ரும், கடந்த இரண்டு மாத காலமாகத் திட்டமிட்டு வேலை செய்து, இன்றைய
மாநாட்டை திக்கெட்டும் புகழ் பரப்பும் வெற்றி மாநாடாக ஆக்கிக் காட்டி உள்ள, விருதுநகர் மாவட்டச் செயலாளர்,வரவேற்பு உரை ஆற்றிய ஆருயிர்ச் சகோ தரர் ஆர்.எம்.எஸ். அவர்களே,
கழகக் கொடி உயர்த்திய, ஆருயிர்த் தம்பி, சிப்பிப்பாறை இரவிச்சந்திரன் அவர் களே,
அண்ணா சுடர் உயர்த்திய ஆருயிர் இளவல், டாக்டர் சதன் திருமலைக்குமார் அவர்களே,
படத் திறப்பாளர்களே, கண்காட்சித் திறப்பாளர்களே,கழகத்தின் அவைத் தலைவர் ஆருயிர் அண்ணன் திருப்பூர் துரைசாமி அவர்களே,
எனது ஆருயிர்ச் சகோதரர்களான, பொருளாளர் டாக்டர் மாசிலாமணி அவர் களே, துணைப்பொதுச்செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை. பால கிருஷ்ணன் அவர்களே,
அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர் அண்ணன் மலர்மன்னன் அவர் களே,
ஆய்வு மையச் செயலாளர் அருமை இளவல் செந்திலதிபன் அவர்களே,
நிலம் வழங்கிய பயில்வான் கிருஷ்ணசாமிதேவர் அவர்களுக்கும், ஜெயஜோதி திருப்பாலை கண்ணன் உள்ளிட்ட அனைவருக்கும், பாடுபட்டு உழைத்தோ ருக்கு எல்லாம்
நன்றி உரை ஆற்றிய அன்புத்தம்பி வழக்கறிஞர் ரவீந்திரன் அவர்களே,
நமது மாநாடுகளில் பசிக்கு உணவு தரும் திருப்பூர் முத்துகிருஷ்ணன் அவர் களே,
கழகத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினர்களே, மாவட்டச் செயலாளர்களே, தலைமைக் கழகச் செயலாளர்களே, அணிகளின் அமைப்பாளர்களே,ஒன்றிய நகர செயலாளர்களே, செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்களே,
காணப் போவது பொன்னுலகம்; சூடப் போவது வெற்றிகளே எனும் நம்பிக்கை யை ஊட்டுகின்ற இணையதளத் தம்பிகளே, தங்கைகளே,
தொண்டர்படைத் தம்பிமார்களே, பொங்கி வரும் பெரு வெள்ளமாய், ஆர்ப்பரிக் கும் அலைகட லாய், இலட்சக்கணக்கில் திரண்டு இருக்கின்ற தமிழ்ப்பெரு மக் களே, தாய் மார்களே, பெரியோர்களே,
ஜனநாயகத்தின் விழிகளும், செவிகளு மான செய்தியாளர்களே, ஊடகங்களின் ஒளிப்பதிவாளர்களே,இமைப் பொழுதும் நெஞ்சில் நீங்காது, என் ஊனோடும்,
உதிரத்தோடும், உயிர் மூச்சோடும் இரண்டறக் கலந்து நிறைந்து, என்னை இயக்கி வரும் கழகத்தின் கண்மணிகளே,
சிந்தனையைக் கூர் தீட்டும் செவ்விய தலைப்புகளில், கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும் வேட்ப மொழிந்து, உரை முழக்கம் செய்த கழகத்தின்
கருவூலங்களான சொற்பொழிவாளர்களே,
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும்
ஆற்றல் அதுவே படை
என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கு ஏற்ப, ஈட்டிபாய்ந்தாலும் இமை கொட் டாது மார்பு காட்டும்,கூட்டம்தான், மறுமலர்சசி திராவிட முன்னேற்றக்கழகத் தின் வீறு கொண்ட வேங்கைகள் கூட்டம் என, மேடைகள் தோறும் நான் முழங் குகின்ற தகுதியைத் தந்து இருக்கின்ற வாலிபப் பட்டாளமே, வணக்கம்!
தொடரும் ..........
No comments:
Post a Comment