இனிது இனிது
இவ்வுலகம் இனிமையானது.
இதில் காணும் வானம் இனிமையுடைத்து
காற்று இனிது; தீ இனிது;
நீர் இனிது; நிலம் இனிது
சூரியன் நன்று, திங்களும் நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் இனியன
மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது
கடல் இனிது மலை இனிது காடு இனிது
ஆறுகள் எல்லாம் இனியன
உலோகமும் மரமும் செடியும் கொடியும்
மலரும் கனியும் காயும் இனியன
பறவைகள் எல்லாம் இனியன
ஊர்வனவெல்லாம் நல்லன
விலங்குகள் எல்லாம் இனியன;
நீர் வாழ்வனவெல்லாம் இனியன
மனிதர் மிகவும் இனியர்;
ஆண் நன்று, பெண் இனிது, குழந்தை இன்பம்
இளமை இனிது முதுமை நன்று
உயிர் நன்று சாதல் இனிது
அதுவும் இலட்சியத்திற்கான சாவு என்றால், அது சாவு அல்ல; அது மரணத்தை வெல்லும் வாழ்வு;அதுவும் இனிது.
கொள்கைக்கான போராட்டம் அதனினும் இனிது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கூரிய கற்களில் நடந்ததும் இனிது;
குத்திக் கிழிக்கும் முட்களைக் கடந்ததும் இனிது;
இனி நாம் சந்திக்கப் போகும் வெற்றியோ இனிது,இனிது;
திகட்டாதது, தெவிட்டாதது.
பல பெரிய கட்சிகள் என்ற போர்வைக்குள் ஒளிந்து இருக்கும் கொள்கைப் புரட் டர்களின் பித்தலாட்டத்தால், ஊழல் மலையாகக் குவித்த கொள்ளைப் பணத் தால்,நம்ப வைத்துக் கழுத்து அறுத்த கடைசி நேர நயவஞ்சகத்தால், தேர்தல் களங்களில் நாம் சந்திக்க நேர்ந்த தோல்விகளும் இனிதுதான். அந்த சோதனை
நெருப்பின் ஜ்வாலையில்தான் நாம் இனி எவராலும் எதிர்கொள்ள முடியாத வாளின் கூர்முனை ஆகி உள்ளோம். இனி, ஊழித்தீயின் உத்பாதமே வந்தாலும்,
அதனை மோதி உடைக்கும் நெஞ்சுரத்தைப் பெற்று உள்ளோம்.
தொண்டர்தம் பெருமை
இந்த வலிமையை, பெருமையை, தகுதியை ஏற்படுத்தியவர்கள், கழகத்தின் தொண்டர்கள்.அவ்வையாரும், குன்றுதோறாடும் குமரனும் உரையாடுவதாக ஒரு பாடல்:
அவ்வையே, உலகில் கொடியது எது? கேட்கிறான் குமரன்.
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது, இளமையில் வறுமை.
அவ்வையே, இனியது எது? கேட்கிறான் முருகன்.
இனியது கேட்கின், வரிவடிவேலோய்,
இனிது இனிது மானிடராய்ப் பிறத்தல் இனிது
அடுத்துக் கேட்கிறான்: அவ்வைப் பிராட்டியே பெரியது எது?
பெரியது கேட்கின், எரிதவழ் வேலோய்,
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ, கலசத்தில் பிறந்தோன்
கலசமோ புவியில் சிறு மண்
புவியோ அரவினுக்கு ஒருதலை பாரம்
அரவமோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ, இறையவர் பாகத்து ஒடுக்கம்
இறைவரோ, தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை, சொல்லவும் பெரிதே
உலகத்தையே படைத்த நான்முகனை விட,அவனையே தந்த திருமாலைவிட, திருமால் பள்ளிகொள்ளும் அலைகடலை உள்ளங்கையில் அடக்கிய அகத்தி யனை விட, அந்த அகத்தியன் பிறந்த கலசத்துக்கு மண் கொடுத்த பூமியைவிட, அந்தப் பூமியைத் தாங்கும் ஆயிரம் தலை ஆதிசேடனை விட,அந்த ஆதிசேட னையே சுட்டுவிரல் மோதிரம் ஆக்கிய பார்வதியைவிட, அந்தப் பார்வதியை யே தனக்கொரு பாகமாகக் கொண்ட, திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாம் சிவபெருமானே தொண்டனின் உள்ளத்துக்குள்தான் அடக்கம் என்பதால், அனைத்திலும் பெரிது, தொண்டனின் உள்ளமே; அத்தொண்டர்தம் பெருமை, சொல்லவும் பெரிதே?
எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வோம்
அப்படிப்பட்ட தொண்டர்களால் உருவாக்கப்பட்டதால் தான், இந்தக் கட்சியை எவராலும் அழிக்க முடிய வில்லை. கீர்த்திக்குரிய கழகத்தின் தொண்டர்களே,
முன்னைவிட அதிகமான வேலை வந்துவிட்டது உங்களுக்கு;பணத்தில், பதவி யில், விளம்பரத்தில், ஏடுகள், ஊடக ஆதரவில், நம்மை விடப் பலமடங்கு பலம் கொண்ட பகைவர்களை, எதிரிகள் படையை,எதிர்த்து மோதிட வேளை வந்து விட்டது.
அதுதான் நாடாளுமன்றத் தேர்தல்.
நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட, குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகி நின்ற அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
என்று, திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர், திருப்படை எழுச்சியில் சொல்லு கிறார்:
தொண்டர்காள் தூசி செல்லீர்
பக்தர்காள் சூழப் போகீர்
ஒண்திறல் யோகிகளே, பேரணி உந்தீர்
திண்திறல் சித்தர்களே, கடைக்கூழை செல்மின்
அண்டர் நாடு ஆள்வோம் நாம்
அல்லல் படை வாராமே
நம்மைத் துன்பப் பட்டாளம் தாக்க முனைகிறது.
நமது படை புறப்படட்டும்
தொண்டர்களே,
முன்படையாகச் செல்லுங்கள்;
அன்பர்களே, ஆம்; கண்ணின்மணிகளே,
இரண்டு பக்கத்திலும் சூழ்ந்து செல்லுங்கள்
ஒளியின் ஆற்றல் பெற்ற அறிவாளர்களே,
அணிவகுப்பை நடத்துங்கள்
தியாகசித்தம் கொண்ட தோழர்களே,
நீங்கள் பின் படையாகச் செல்லுங்கள்;
அணிவகுத்துச் செல்லுங்கள்
நம்மீது படை எடுக்கும் அல்லல்கள் அனைத்தும்
நொறுங்கும்
தேவாதி தேவர்களும் தொழுகின்ற நாட்டை
ஆள்வோம் நாம்
இது நமக்கும் பொருத்தம்தான்.
இந்த மாநாடே, திருப்படை எழுச்சி ஆகட்டும்.
மலைநிகர்த்த ராட்சசன் கோலியாத்தை, கவண் கல்லால் அடித்துச் சாய்த்த டேவிட்;
உஹதுப் போரில், தொகையில் பெருத்த சைனியத்தை, சின்னாபின்னமாக்கிய அண்ணலாரின் சஹபாக்கள் வரலாற்றை நெஞ்சில் நிறுத்துவோம்.
கருப்புடை தரித்தோம் நாம்தான்; கொடுமையை நறுக்கியே தீரும் வாட்கள் என்ற ஈரோட்டின் கருஞ்சட்டைப் படை, அந்நாளில் காட்டிய தீரத்தோடு, எதிர் வரும் களங்களைச் சந்திப்போம்; எண்திசையும் வியக்க, வெற்றிச் சங்கநாதம் செய்வோம்.
ஒருநாள் அல்ல, இருநாள் அல்ல; இருபது ஆண்டுகள் பயணித்து விட்டோம். இதோ, கதவைத் தட்டுகிறது நாடாளுமன்றத் தேர்தல். மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகம் போட்டியிடுமா? அல்லது, 2011 சட்டமன்றத் தேர்தலில் முடிவு எடுத்ததுபோல், போட்டியில் கலந்து கொள்ளாமல், விலகிக் கொள்ளு மா?
இந்தக் கேள்விக்கு எனது திட்டவட்டமான பதில்.எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நாங்கள் போட்டியிடுவோம். உறுதியாகப் போட்டியிடுவோம்.
யாருடன் கூட்டு?
அடுத்த கேள்வி. அரசியல் அரங்கில் நம்மீது வீசப்படுகிறது. யாரோடு கூட்டு?
ஆட்சியில் இருந்தவர்களோடா? அல்லது, இன்று ஆட்சியில் இருப்பவர்களோ டா?
ஆட்சியில் இருந்த தி.மு.க., நம்மைக் கூட்டணியில் இணைத்துக் கொள்ளு கிறோம் என்று மறைமுகமாக வாவது, ஏதாவது சமிக்ஞை வராதா என்ற எண் ணம் கூட, குமரி முனையில் கடைகோடியில் இருந்து, வட வேங்கடத்தின் அடிவாரம் வரையில் உள்ள கழகத்தொண்டன் எவரது சிந்தனையின் நிழலைக் கூட எட்டிப் பார்க்காது.
தனது சொந்தக் குடும்ப நலனுக்காக, இலட்சோபலட்சம் திராவிட முன்னேற் றக் கழகத் தொண்டர்களின் உழைப்பாலும், உன்னதமான தியாகத்தாலும் கட்டி
எழுப்பிய மட்டற்ற மரியாதையை, மாற்றாரும் போற்றிய கீர்த்தியை, காவு கொடுப்பதில் கை தேர்ந்த கெட்டிக்காரர் கலைஞர் என்பதை நாம் நன்றாக அறி வோம். பாம்புக்குத் தலையைக் காட்டுவார்; மீனுக்கு வாலைக் காட்டுவார்;
பிள்ளையையும் கிள்ளுவார், தொட்டிலையும் ஆட்டுவார்.
முயலோடும் ஓடுவார், விரட்டும் வேட்டை நாய்க்கும் உதவுவார். He will run with the rabbit and hunt with the hound ஆங்காங்கு தூண்டில்களைப் போட்டு வைப்பார். அவ ரது அரசியல் அலமாரியில், கொள்கைப் பிரகடனப் பலகைகள் எப்போதும் ஆயத்தமாகவே இருக்கும். இந்தி எதிர்ப்புப் பலகை, ஈழ ஆதரவுப் பலகை, சிங் கள அரசு எதிர்ப்புப் பலகை எனப் பல பலகைகள் இருக்கும். தனது நோக்கம் நிறைவேறுவதற்குத் தேவையான விளம்பரப் பலகையை அவ்வப்போது எடுத்து மாட்டுவார்.
எனவே, ஒருவேளை காங்கிரஸ் தானாகவே,நிரந்தரமாகக் கை கழுவி விட்டா லோ, அல்லது,ஈழத்தமிழ் இனக்கொலையின் கூட்டுக் குற்றவாளியாக, வர லாற்றின் கூண்டில் நிற்க வேண்டி உள்ளதால், காங்கிரஸ் மீது மட்டும் பழி யைச் சுமத்திவிட்டு, இப்போது டெசோ கொடி பிடிப்பது போல, காங்கிரஸ்
இல்லாமல் அரசியல் ஆவர்த்தனம் செய்யலாமா? என்று எந்த முடிவும் அவர் எடுக்கலாம். எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தேர்தல் உடன்பாட் டை யோசிக்கலாமா?
அந்த நிலையைப் பரிசீலிக்கவே மறுமலர்ச்சி தி.மு.க.தயாராக இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் மீது கோபமா? இல்லை;
வெறுப்பா? அறவே இல்லை.
தீர்க்க முடியாத கசப்பா? இல்லவே இல்லை.
அண்ணா உருவாக்கிய இயக்கத்துக்காக வியர்வை சிந்தியவர்கள், கல்லடி பட் டவர்கள், காராகிருகத்திலே வாடியவர்கள், சொந்த வாழ்வில் சுகங்களைத் துறந்தவர்கள். அவர்களுடைய உழைப்பில் எழுந்ததுதானே அந்தக் கோட்டை.
ஒரு காலத்தில்,நமது அவைத்தலைவர் அண்ணன் திருப்பூர் துரைசாமி,ஆலோ சனைக்குழுச் செயலாளர் மலர்மன்னன், சகோதரர் கணேசமூர்த்தி உள்ளிட்ட
நம்மில் பலர், அந்தக் கட்டடத்துக்குக் கல் சுமந்து இருக்கிறோம். அண்ணாவின் மாளிகையின் மணிவிளக்குகளில் எண்ணெய் ஊற்றி இருக்கிறோம்.
எதிரிகள் வீசிய சாட்டை அடிகளை, நம் மேனியில் தாங்கி இருக்கிறோம்.
தொண்டர்களுள் ஒருவன்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயிர்நாடியாக விளங்கிய தொண்டர்கள், 1993 இல் என்னை தலைமை நீக்கியபோது, கலங்கியது ஏன்? கண்ணீர் சிந்தியது ஏன்? ஐவர் தீக்குளித்து மடிந்தது ஏன்? காரணம் இருக்கிறது.
அத்தொண்டர்களுள் ஒருவனாக நான் இருந்தேன்.மரண பயங்கரமான ஆபத்து கள் வந்தபோது,தொண்டர்களைக் காக்க உயிரைத் துச்சமாகக் கருதிக் களத் தில் நின்றேன். ஒன்றல்ல, இரண்டல்ல,எத்தனையோ சம்பவங்கள். 1991 மே 21,
திருபெரும்புதூரில் நிகழ்ந்த ராஜீவ் காந்தி கொலை.பொழுது விடிவதற்கு உள் ளாகவே, திராவிட முன்னேற்றக் கழகக் கொடிமரங்கள் வெட்டப்பட்டன. படு கொலைக்கு எள் அளவு தொடர்பும் இல்லாத கழகத் தோழர்களின் வீடுகள், தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.தி.மு.கழக அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. வீடு புகுந்து தாக்கினார்கள். மண்டை பிளக்கப்பட்டது, கை கால்கள் முறிக்கப் பட்டன; எங்கும் கோர வெறித் தாண்டவம்;
கழகத்தைக் காக்க, தொண்டர்களைக் காக்க வருகிறேன்; தாக்குதல் நடக்கும் இடங்களுக்கே வருகிறேன் என்று நான் புறப்பட்டபோது, காவலதுறைக் கண் காணிப்பாளர் வந்து தடுத்தார். வைகோ, உங்கள் தலையை எடுப்போம் என்றே பகிரங்கமாக அறிவித்து உள்ளார்கள். நீங்கள் எங்கும் போகக்கூடாது; உங்க ளைப் பாதுகாக்க முடியாது என்றனர்.
என் கழகத்தொண்டன் அடிபடும்போது,அவன் வீடு எரிக்கப்படும்போது, அவன து குடும்பத்தார் அஞ்சி நடுங்கும்போது, யார் பாதுகாப்பது? நான் என் தோழர் களோடு செல்வேன்; வருவது வரட்டும், என் தலையை எடுக்கட்டும், என் உயிர் போகட்டும் என்று, ஊர் ஊராகச் சென்றேன்.
ஆலங்குளம்,சுரண்டை,தென்காசி,கடையநல்லூர்,புளியங்குடி,சங்கரன் கோவி லில் தீக்கு இரையாக்கப் பட்ட வீடுகளுக்குச் சென்றேன். கை கால் முறிந்து
கிடந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினேன்.இடிக்கப்பட்ட கே.வி.கே. சாமி மன்றத்தின் இடிபாடுகளில் நின்று பேசினேன்.பாவூர் சத்திரத்தில் ஆயுதங் களோடு என்னைத் தாக்க முனைந்தார்கள்.அதை எதிர்கொள்ள நம்மவர்கள் துணிந்தவுடன்,அவர்கள் ஓடி ஒளிந்தார்கள். நான்கு நாட்கள், இரவுபகலாகச் சுற்றி வந்தேன். உயிரைப் பற்றிக் கவலைப்பட்டேனா? 22 ஆண்டுகளுக்குப் பிறகு நான் கேட்கிறேன். சவால் விட்டுக் கேட்கிறேன்.தமிழ்நாட்டில் என்னைத் தவிர, தி.மு.க. முன்னணியினர் எவராவது வீட்டை விட்டு வெளியே வந்தது உண்டா? தலைநகர் சென்னையில், கட்சித் தலைவர் உட்பட, காரில் கொடி கட் டிக் கொண்டு, அறிவாலயத்துக்குப் போனது உண்டா? எனது அம்பாசடர் கார் 4777 இல்தான், கருப்பு சிவப்புக் கொடி பறந்து கொண்டு இருந்தது.
இதையெல்லாம் சொல்லுவதனால் , நான் ஒன்றும் உரிமைப்பாத்தியதை கொண்டாடவில்லை.அன்றே சொல்லிவிட்டேன்,கோடிகள் உங்களோடுஇருக் கட்டும், கொள்கை எங்களோடு இருக்கட்டும் என்றேன்.
இன்று பகிரங்கமாகச்சொல்கிறேன்,தொண்டர்களைக்காக்க என் தலை போனா லும் பரவாயில்லை என்று வீதிக்கு வந்தேன். இன்று அண்ணா தந்த தி.மு.க. வின் கொள்கைகளைக் காக்க, இருபது ஆண்டுகளாக நான் போராடுகிறேன். நான் தோற்றுப் போகவில்லை.ஆயுதத்தைக் கீழே போட்டால்தான் தோல்வி. நான் போராளி, தொடர்ந்து கொண்டே இருக்கிறோம் களங்களை, இலட்சியங் களுக்குத் தோல்வி கிடையாது.அதற்கான போராட்டத்துக்கும் தோல்வி கிடை யாது.போராட்டக் காலம் நீளலாம். மாதங்கள், ஆண்டுகள் ஆகலாம். சலிப்போ, சோர்வோ, தளர்வோ இல்லாதவனுக்குத் தோல்வியே கிடையாது.
நானும் என் தோழர்களும், அவ்விதத்தில்தான் போராடுகிறோம். உறுதியாக வெற்றி பெறுவோம்.
இலங்கைத் தீவில் நம் தொப்புள் கொடி உறவுகள் எழுப்பிய மரண ஓலம், இன் னும் நம் இருதயத்தில் சம்மட்டி அடியாக விழுகிறதே?
அதைத் தடுக்க, கொழுந்து விட்டு எரிந்த தணலின் பொசுக்கும் நாக்குகளுக்குத் தன்னைப் பலியிட்டுக் கொண்ட முத்துக்குமார்கள், விண்ணுக்கும் மண்ணுக் கு மாக நின்று கேட்பார்களே?
இதயத்தில் வடிகின்ற குருதியைத் துடைத்துக் கொண்டு, அதே கரத்தால் தி.மு. க. தலைமையின் கரத்தைப் பற்ற முடியுமா? முடியாது.
அந்த இயக்கத்தின் உண்மைத் தொண்டர்களுக்காக,அண்ணாவின் தம்பிகளுக் காக, நான் வேதனைப் படுகிறேன்.
நம்ப வைத்துக் கழுத்தை அறுத்தவர்கள்
அப்படியானால் யாருடன் தேர்தல் கூட்டணி? அனைத்திந்திய அண்ணா திரா விட முன்னேற்றக் கழகம் குறித்து, உங்கள் நிலை என்ன? இது அடுத்து எழு கின்ற கேள்வி.
பதவிச்சிம்மாசனத்தில் இருக்கிறார்கள்.பெருவலிவோடு இருக்கிறார்கள் சட்ட மன்றத்தில். அதனால் ஆணவத்தின் உச்சாணிக் கொம்பில் இருக்கின்றார்கள்.
நமது பிரச்சார பலமும், தொண்டர்கள் வலிவும், தேர்தலைச் சந்திக்கப் பெரிதும் உதவும் என்பதால்தான், 1997 இல் தூது விட்டார்கள். சகோதரர் காளிமுத்துவை
அனுப்பி வைத்தார்கள். ஏன் தாயகத்துக்கே வந்து, ஒரு கொடியில் இரு மலர் கள் என்றெல்லாம் பேசினார்கள்.எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதுதானே அவர் களது பாணி. வாஜ்பாய் அரசையும் கவிழ்த்தார்கள்.
உடன்பாட்டுக்கு ஒருவரும் இல்லாத காலத்தில், கட்சி பொதுக்குழுவிலேயே அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் அறிவித்தார்கள், நம்மோடு ஒரு கட்சி
உடன்பாட்டுக்கு வருகிறது என்று. மூன்றாம் நாள் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய காளிமுத்து, என் நண்பன் கர்ணனை அழைக்கிறேன்; எங்களோடு கரம் கோர்க்க வா என்று அழைத்தார். அந்தத் தேர்தலில் நாம் போட்டியிட்டது 35 இடங்கள் என்றாலும், நான் பிரச்சாரம் செய்தது 213 இடங்கள்.
திருமங்கலத்திலே இடைத்தேர்தல். ம.தி.மு.க. ஜெயித்த இடத்திலேயே நாங் கள்தான் போட்டியிடுவோம் என்றார்கள். பொறுத்துக் கொண்டேன். அன்றைய
ஆளுங்கட்சியின் அராஜகத்தை எதிர்த்து, உயிரைத் துச்சமாக மதித்து, நாம் களத்தில் நின்று போராடினோம்.நம்பியவர்களுக்காகத் தலை கொடுப்பது தானே இத் தென்னாட்டின் மரபு.
அதற்கு அவர்கள் காட்டிய நன்றி என்ன? நம்ப வைத்து,கடைசி நேரத்தில் கழுத் தை அறுத்ததுதான், அண்ணா தி.மு.க. காட்டிய கூட்டணி தர்மம்.
உலகத்தில் எங்கேயாவது கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா? அப்படி ஒரு அக் கிரமம் நடந்தது.நமக்கு ஆறு தொகுதியாம். பின்னர் ஏழு, பின்னர் எட்டு என் றார் கள். அமைதி காத்தோம். இதற்குப் பிறகும் இவன் பொறுமையாக இருக்கின் றானே? கோபத்தைக் கிளறிப் பார்த்தோமே? இதையும் சகித்துக் கொண்டானே?
இன்னும் ஒரு ஈட்டியை இதயத்தில் வீசுவோம் என்று, நேற்றைக்குச் சொன்ன தொகுதிகளைக் கொடுக்க முடியாதாம்; பொதுச் செயலாளர் சொல்லச் சொன் னார்.அதைவிடக் குறைவாகத்தான் கொடுக்க முடியுமாம். நேற்றுச் சொன்ன எட்டுத் தொகுதிகள் கிடையாது; ஏழு தொகுதிகள்தான் என்றார்கள்.
இதற்கு மேலும் நாங்கள் இச்சகம் பேசி, பிச்சை வாங்கி அரசியலில் ஈனப் பி ழைப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. சுயமரியாதையோடு போராடு வோம். மக்கள் மன்றத்தில் போராடுவோம்.
நிலைமை இப்படியே நீடிக்காது.காலம் மாறும்.நிச்சயமாக மாறும் என்று உறுதி எடுத்துக் கொண்டுதான், சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்று சொன்னேன். அதற்குப் பின்னர்தான் கட்சி,அடிபட்ட வேங்கையெனச் சிலிர்த்து எழுந்து உள்ளது.தமிழகத்தின் அனைத்துக் களங்களிலும், தலைநிமிர்ந்து உள் ளது. ஏன், உள்ளாட்சித் தேர்தலிலும் கூட,கெளரவமான வெற்றியைப் பெற்று இருக்கிறோம்.கடந்த இரண்டு ஆண்டுகளில்,முன்னைவிட நூறு மடங்கு பலம் பெற்று, மக்கள் நம்பிக்கையைப் பெற்றுத் தலைநிமிர்ந்து நிற்கிறோம்.
அடுக்கடுக்கான வெற்றிகள் வருகிறபோது, ஒரு கட்சியை நடத்திச் செல்வது எளிது. ஆனால், தொடர்ந்து தோல்விகள் படையெடுக்கும்போது, கட்சி கல கலத்துப் போய்விடும்.
40 எம்.எல்.ஏ, 20 எம்.பி.க்கள், மத்திய அமைச்சரவையில் ஐந்து அமைச்சர்கள், தினமும் எட்டுக்காலச் செய்திகள்,பணத்துக்கோ பஞ்சமே இல்லை என்றெல் லாம் கொடிகட்டிப் பறந்த கட்சி, தோற்றதற்குப்பிறகு, இருந்த இடம் தெரியா மல் போய்விட்டது; கட்சியே காணாமற் போய்விட்டதே?
இன்னும் ஒரு மகானுபாவர், தில்லியில் இருந்து ஒரு தொலைபேசியிலேயே தன் கட்சியைக் கலைத்து விட்டாரே?
புதிய வலிவு
நாமோ, தோல்விக்குப் பின்னர்தான் புதிய வலிவு பெற்று இருக்கின்றோம். அதி லும், தேர்தலை முற்றிலும் நிராகரித்ததற்குப் பிறகு, அரசியல் அதிசயமாகப் பலம் பெற்று இருக்கிறோம். இந்தத் தோழமையும், ஐக்கியமும், இந்திரனின் வஜ்ராயுதத்தை விட உறுதியானது. எனவே, இப்பொழுது சந்திக்கப் போகிற தேர்தலில், அனைத்து இடங்களிலும் போட்டியிட மாட்டோம்.
தன் வலியும், வினை வலியும், துணை வலியும், மாற்றார் வலியும் கணக் கிட்டு, காலம் அறிந்து, இடம் அறிந்து களங்களைத் தேர்வு செய்து போட்டியிடு வோம். அழிக்க நினைக்கின்ற எதிரிகள் எப்படிக் காயை நகர்த்து கிறார்களோ, அந்தக் காய்களை வெட்டுவதற்கு எப்படி பதிலுக்கு நாம் காய் நகர்த்த வேண்டு மோ, அவ்விதத்தில் எதிர்கொள்வோம். அப்படியானால், நமது வியூகம் எப்படி
இருக்கும்? அதை இப்போதே சொல்வது விவேகம் ஆகாது; வியூகமும் ஆகாது.
எதிரி வகுக்கின்ற வியூகத்தைப் பார்த்துத்தான் நாம் வியூகம் வகுக்க முடியும். அவன் சர்ப்ப வியூகம் வகுத்தால், நாம் கருட வியூகம் வகுப்போம். ஆனால்,
ஒன்று மட்டும் உறுதி.
நாலாபுறங்களிலும் எதிரிகளும், சதிகாரர்களும் சூழ்ந்து கொண்டு தாக்கியதால், பத்ம வியூகத்தில், அர்ஜூனன் மகன் அபிமன்யு அழிக்கப்பட்டான். ஆனால், இப் போது அதுபோல நடக்காது. பத்ம வியூகத்தைப் பிளந்து கொண்டு வருகின்ற, புதிய அபிமன்யுவாக ம.தி.மு.க.பகைவர்களை வீழ்த்தி வெல்லும்.
எவராலும் வெல்ல முடியாத இந்திரசித்தன், வீடணன் துரோகத்தால், நிகும் பலை வேள்வியை முடிக்காமல் தோற்றான். ஆனால் வேள்வி முடித்து, வெற்றிச் சங்கொலி எழுப்பும் புதிய இந்திரசித்துகளாக, நாங்கள் வாகை சூடி வருவோம்.
தமிழக வாக்காளர்களுக்குச் சொல்வோம்; உங்களுக்காக வாதாட எங்களை தில்லிக்கு அனுப்புங்கள்.
தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைக் காக்க, மக்கள் அவையில் போர்முரசு கொட்ட எங்களை தில்லிக்கு அனுப்புங்கள்.
நாதி அற்றுப் போகவில்லை நானிலத்தில் தமிழ்ச்சாதி என்பதை உலகத்துக்கு உணர்த்த எங்களை தில்லிக்கு அனுப்புங்கள்.
தரணியில் தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைவதற்கு எங்களை தில்லிக்கு அனுப்புங்கள்.
நான் நெஞ்சால் போற்றும் பிரபாகரன் கட்டி எழுப்பி, காங்கிரஸ் அரசு அழித்த ஈழக்கோட்டையை, மீண்டும் கட்டி எழுப்ப, ஈழத்தமிழர்களுக்குத் தோள் கொடுக்க, டெல்லியின் வஞ்சகம் இனித் தொடராமல் தடுக்க, எங்களைத் தில்லிக்கு அனுப்புங்கள்.
நாங்கள் நாடாளுமன்றத்தில் இடம் பெற்று இருந்த நாள்களில், தமிழ்நாட்டில் இருந்து எவரும் செய்ய முடியாத சரித்திரச் சாதனைகளை நடத்திய தகுதி யோடும், உரிமையோடும் கேட்கிறேன்; எங்களைத் தேர்ந்து எடுங்கள்.
No comments:
Post a Comment