Saturday, September 14, 2013

ஒளி மலர; இருள் அகல

பொடா சிறைவாசத்தின் போது ஒளி மலர; இருள் அகல எனும் தலைப்பில், #வைகோ எழுதிய கடிதங்களில் இருந்து அண்ணாவின் நினைவுகள்

பன்னூறு ஆண்டுகள் வளைத்துவிட்ட வைதீகத்தின் பிடியில், வர்ணாசிரமத் தின் முற்றுகையில், வட ஆரியக்கலாச்சாரத்தின் ஆதிக்கத்தில் சிக்கிக் கிடந்த தமிழ் இனத்தின் மீட்பராகவன்றோ அண்ணா தோன்றினார். அவரது எழுத்தும்,
பேச்சும், எண்ணமும் செயலும், உணர்வும், வாழ்வும் ‘சகாப்த நாயகனாக்கிற்று அவரை!அவரது படைப்புகளில் பரவிக் கிடக்கும் எண்ண ஓட்டத்தை,கண்மணி களே உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

வடவர் புராணத்தை, கற்பனை இதிகாசத்தைப் பாடல்களாக வடித்திட்டகம்ப னே கூட “அலைகடலைக் குடிக்க முற்படும் பூனையின் முயற்சி தன் வேலை” என்றான். கோடிப் பூக்கள் மலர்ந்து மணம் தரும் சோலையில் ஓரிரு மலர் களைக் காட்டிடவே எளியோரால் இயலும். உலவிடுங்கள் அண்ணா எனும்
சோலையில்! ததும்பி நிற்கிறது தேன்,குடம் நிரம்ப! ஒரு துளியை நீட்டுகிறேன்
நான்! சில நிமிடக் காட்சிகளைத் தந்து “இது வெறும் டிரெய்லர்” -முழுப்படத்தை வெள்ளித் திரையில் காண்க என்பதுபோல “என் மனத்துக்குப் பிடித்த சில பகுதி களை, அண்ணாவின் எழுத்துக்களை, உரை வீச்சை - உங்கள் கண்களுக்கு வைக்கிறேன்! கருத்துக்கு விருந்து ஊட்டிட!

இருள் அகலும் வேளையில் சேவல் கூவுகிறது! வைகறையின் வரவுக்குக் ‘கொக்கரக்கோ’ எனக் கட்டியம் கூறுகிறது. ஒளிமலர வாழ்த்து உரைக்கிறது. அதனால்தான், அறிஞர் அண்ணா அவர்கள், தான் முதன் முதலாக ஆனந்த விகடனுக்கு, ‘செளமியன்’ எனும் புனைபெயரில் எழுதிய சிறுகதைக்கு, ‘கொக் கரக்கோ’ எனும் தலைப்பினைச் சூட்டினார்.

1934ஆம் வருடம் பிப்ரவரி 11ஆம் நாள் பிரசுரமாயிற்று. “செளமிய வருடத்தில்
பிறந்ததனால் செளமியன்” எனும் பெயரில் எழுதிய அண்ணா அவர்கள்,‘பரதன், சமதர்மன், காலன், செளமியன்,குறிப்போன், வழிப்போக்கன், வீரன்,சாவடி, பேகன், சம்மட்டி, ஆணி, தமிழன்பன், நக்கீரன், ஒற்றன், தமிழ்த் தொண்டன், கொழு, வர்தன், பாரத், குயில், பாரதி, வீனஸ், மணிமொழி’ என்னும் 22 புனை பெயர் களில் எழுதி உள்ளார்.

‘கடித இலக்கியத்தில்’ காவியம் படைத்த அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு
எழுதிய முதல் கடிதம் “காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி”. எழுதிய
நாள் 1955 மே 8.

அண்ணனின் பார்வையில் பெரியார்

வாருங்கள் தோழர்களே!அண்ணாவின் சோலைக்குள். .தந்தை பெரியார் பற்றி இதோ அண்ணாவின் எண்ணம்!ஒளிரிடும் நித்திலமன்றோ அவர்தம் சிந்தனை.

“பெரியாருக்கு இன்று உள்ள பெரும் செல்வாக்கு சாமான்யமானது அல்ல.அவ ருக்கு இன்றுள்ள செல்வாக்கும், அதனை ஈட்டிட அவர் ஆற்றி உள்ள அரும் பெரும் பணியும் அபாரம்.எதற்கும் அஞ்சுபவர் அல்ல! எதிர்நீச்சலில் பழகியவர்! கொடி, கோட்டை வாசலில் உள்ளதைக் கொளுத்த வேண்டும் என்றாலும், அத னால் ஏற்படக்கூடிய ஆபத்துப் பற்றித் துளியும் கவலைப்பட மாட்டார். அது
அவருக்குச் சேவையால் கிடைத்தது மட்டும் அல்ல. அவருடைய சுபாவமே அத்தகையது. அந்தக் குறுகுறுப்பான கண்களிலேயே நான் பல சமயங்களில் கோபம் கொந்தளிக்கக் கண்டு இருக்கிறேன். அடிக்கடி அலட்சியத்தைக் கொட் டக் கண்டு இருக்கிறேன். சில வேளைகளில் பரிவு, பச்சாதாபம் தோன்றிடக் கண்டு இருக்கிறேன்.

ஒருபோதும் அந்தக் கண்களில் இருந்து பயம் கிளம்பக் கண்டது இல்லை. நானொன்றும், தம்பி, பத்து கெஜத் தொலைவிலே இருந்து அவரைப் பார்த்துப் பூரித்திடும் இரசிகன் அல்ல. பக்கத்திலேயே பத்து ஆண்டுகளுக்கும் மேலாக
இருந்தவன்; அவரைப் பல கோணங்களிலே இருந்து பார்த்தவன்- பல பிரச்சி னைகள் குறித்த அவருடைய பிரத்தியேகக் கருத்து களை அறிந்தவன். “மேஸ் திரி” வேலையல்லவா பார்த்து இருக்கிறேன்.”(அளவுகோல் எது? - கடிதம் 13)

விலகிவந்த இடைக்காலத்தில் பழையநினைவுகளில் அவர் மேனி சிலிர்க்குது
என்கிறார்.

“ஒரே ஒருமுறை என் மேனி சிலிர்த்தது உண்டு. அது மீண்டும் திரும்பிவர முடி யாத ‘அந்தக் காலத்தில்’ - ஈரோடு நகராட்சி மன்றத்தின் வரவேற்பு எனக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பெரியார் முன்னின்று நடத்திய விழா; ஊர்வ லமாக, பழைய கோட்டைக் காளைகள் பூட்டிய வண்டியிலே நான் அமர்ந்து கொண்டு இருக்க, வெண்தாடி காற்றினிலே அசைந்தாட, திராவிடச் செங்கோ லாகிடத் தக்க வலிவுபெற்ற கைத்தடியை ஏந்திக்கொண்டு, அரிமா நோக்கு இது தானோ என்று எவரும் எண்ணிடத்தக்க, தனியானதோர் பார்வையை, இப்புற மும் அப்புறமும் செலுத்திக் கொண்டு, பெரியார் ஊர்வலத்திலே நடந்துவந்த போது -அன்று உள்ளபடி எனக்கு மேனி சிலிர்த்தது.” (கடிதம் 122 - மேனி சிலிர்க் குது)

ஆயத்தப்படுத்திக் கொள்வோம்

கருத்துச் சுரங்கமாம் அண்ணா, தம்பிமார் களுக்காகவே என்னைத் தயார்படுத் திக் கொள்கிறேன் எனும் உணர்வினைக் கூறுகிறார். இதோ:

“எனக்குத் திறமைகளைப் பெற வேண்டுமே என்ற அவசர ஆர்வம்கூட ஏற்பட் டது என்று கூறலாம்.இலட்சக்கணக்கானவர்கள், நமக்குத் தமது இதயத்திலே இடம் அளித்து இருக்கிறார்களே, அதற்கு ஏற்ற முறையில், அவர்கள் மகிழத் தக்க விதத்தில் பெருமைப்படத்தக்க வகையிலே, நாம் திறமைகளைத் தேடிப் பெற்றாக வேண்டுமே என்ற எண்ணம் எழுந்தது.

(கடிதம் 130 - குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை)

இந்தியத் துணைக்கண்டம் குறித்த வரலாற்று உண்மையை அண்ணா பதிவு
செய்யும் பாங்கினைப் பாருங்கள். இதோ:

“இந்த நிலைமைகள் மட்டும் அல்லாமல், வரலாறைப் புரட்டிப் பார்க்கும்போது வெள்ளையன் வருவதற்கு முன் இந்தியா என்ற அரசியல் அங்கம் (Political Unit)
உலகில் இருந்ததாகவே தெரியவில்லை. அதாவது ஒரு சர்க்காரின் கீழ் இந் தியா என்ற நாடு இருந்ததாக இல்லை. இந்தியா என்பது ஒரு பூகோளப் பெய ராகவே திகழ்ந்து வந்து இருக்கிறது. எப்படி, பல தனித்தனி நாடுகளைக் கொண் ட ஐரோப்பாவின் ஒரு பிரதேசத்துக்குப் பால்கன் தீபகற்பம் என்று பெயரோ, மற்றும் ஸ்வீடன், நார்வே ஆகிய இரு நாடுகளையும் சேர்த்து ஸ்காண்டி நேவி யா என்று அழைக்கிறோமோ,அதேபோல் இந்தியத் தீபகற்பம் என்று ஆசியா கண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் பூகோளப் பெயரே தவிர, ஒரு சர்க் காரின் கீழ்  இருந்த ஒரு நாட்டின் பெயராக அது விளங்கியது இல்லை.”

(கடிதம் 130 - குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை)

தன் தம்பிமாரின் உறுதி குறித்தும், அடக்குமுறையாளர் ஆணவம் குறித்தும், கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடு குறித்தும் அவர் கூறுவதைக்கண்டிடுவீர் இங்கே:

“இப்பெரும் படையினை, இவர்தம் உறுதியினை அறிவாயோ?எதையும் தாங் கிக் கொள்ளும் இதயம் கொண்டோர்! எந்தையர் நாட்டின் உரிமை காத்திட இன் னுயிரையும் ஈந்திடும் உரம் கொண்டோர்! துரைத்தனத்தார் அவிழ்த்துவிடும்
அடக்குமுறை கண்டு அஞ்சுவோர் இவர் அல்ல! துப்பாக்கி உறுமட்டும், தூற் றல் துளைக்கட்டும், தூய உள்ளம் படைத்த இத்தமிழ்ப் பெருங்குடி மக்கள், துளியும் அஞ்சப் போவது இல்லை.

நான் பன்னிப் பன்னி - அமைதி -அமைதி அடித்தால் பொறுத்துக்கொள்ள வேண் டும்; தாக்கினால் தாங்கிக் கொள்ள வேண்டும்; தூற்றுவர், கோபம் கொள்ளக் கூடாது;இழித்தும் பழித்தும் பேசுவர், ஏளனம் செய்வர், அது கேட்டு மன எரிச்சல டையக் கூடாது என்கிறேன்.நமது முறையில் பலாத்காரம் தலைகாட்டக் கூடாது.” (கடிதம் 38 - தண்டோரா சர்க்கார்)

மொழி குறித்து அண்ணா

அண்ணாவின் இதயம் கவர்ந்த தலைவர் அயர்லாந்து விடுதலைத் தலைவர் ஏமன் டிவேலரா.

அண்ணாவின் வர்ணனையில் டிவேலராவை, மொழி குறித்த கருத்துகளை அறிவோம்.

தம்பி!

“தாயகத்தைவிட்டுப் பிரியப் போகிறேன் நாளைய தினம் என்று வைத்துக் கொள்ளுவோம். அந்த நேரத்தில் நாட்டு மக்களுக்கு என்ன தந்துவிட்டுச் செல் கிறீர்? நாட்டவருக்குத் தாங்கள் அளித்திட விரும்பும் கடைசிச் செய்தி யாது?
என்று என்னை வினவிடின், அயரிஷ் இனத்தவராகத் தொடர்ந்து வாழ விரும் பினால், அய்ரிஷ் மொழியைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்றுதான் கூறிச் செல்வேன்.” 

பிரிட்டிஷ் பிடியில் இருந்து தாயகத்தை - அயர்லாந்து நாட்டை மீட்டிட, அரும் பாடுபட்ட வீரன், அகில உலகு பாராட்டத்தக்க ஆற்றல் மிக்கோன், டிவேலரா இதுபோலக் கூறினான்.

வல்லமை மிக்கவர்கள் இந்தப் பிரிட்டிஷார்! அவர்களின் படை பலம் பயமூட்டு வதாக இருக்கிறது; எதிர்ப்போரைக் கொன்று குவிக்கின்றனர்;நாடே நாசப்படு குழியில் தள்ளப் படுவதாயினும் சரி, எங்கள் ஆதிக்கத்தை மட்டும் விட மாட் டோம் என்று கொக்கரிக்கின்றனர்;கொக்கரிப்பது மட்டும் அல்ல, கூசாது கொடுமை பல செய்கின்றனர்; இவர்களை எப்படி விரட்டுவது, வீழ்த்துவது? தாயகத்தை எங்ஙனம் விடுவிப்பது என்று மக்கள் மருண்டு கிடந்தபோது,

“சாகத் துணிந்திடின், நாட்டினரே! நாடு வாழும்!

வாழ வேண்டுமே என்று அலைந்திடின் நாடு சாகும்!”

என்றுரைத்து, வீர உணர்ச்சியை ஊட்டி, மக்களைத் திரட்டி,விடுதலைப் போர் நடத்தி, வெற்றி மாவீரன் டிவேலரா அந்த விடுதலை வீரன் கூறுகிறான், மொழி காப்பாற்றப் பட வேண்டும் இனம் அழிந்து விடாமலிருக்க வேண்டுமானால்
என்று.

ஆமாம்! உண்மைதானே அது? ஒவ்வோர் இனத்துக்கென ஒவ்வோர் மொழி இயற்கையாக அமைந்து இருக்கிறது. அந்த மொழி ‘வாழ்க்கை வழி’யை அந்த இனமக்களுக்கு, அமைத்துத் தருகிறது. ஓராண்டு ஈராண்டு அல்ல; பல தலை முறைகளாகச் சிறுகச் சிறுகச் சமைக்கப்பட்டுக் கூட்டாகி, ஒரு பேருரு ஏற் பட்டு விடுகிறது. அந்த மக்கள், உலவும் நாடு, வேட்டையாடி மகிழ்ந்திடும் காடு, நீந்தி விளையாடும் ஆறுகள், உழுது பயன்காணும் வயல்கள், உழைப்புடன் மதி நுட்பத்தை இழைத்திடும் தொழிலிடங்கள், குலவி இன்புறும் மனைகள் - இங் கெல்லாம்,எண்ணங்களை எடுத்துக் கூறியும் பிறர் கூறிடக் கேட்டும், கலந்து ரையாடியும், கருத்துக்களை உருவாக்கி, பிறகு அதனைக் காப்பாற்றிடவும், வளர்த்திடவும்,வழிவகை கண்டறிகின்றனர். இந்தச் சீரிய செல்வத்தை, மக்கள் பெற உறுதுணையாக நிற்பது, அவர்க்கென அமைந்த மொழி. எனவேதான், மொழி என்பது வாழ்க்கை வழியினை அமைத்தளிக்கிறது என்று அறிவாளர்
கூறுகின்றனர். (கடிதம் 102 ஆணை பிறந்தது)

அரசியல் குறித்து அண்ணா

“அரசியல் உலகு, அற்புதங்கள்,உற்பாதங்கள், அதிர்ச்சிகள், அக மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள்,எக்களிப்புகள், எரிச்சலூட்டும்சம்பவங்கள் வெற்றிகள் தோல்வி கள் யாவும் நிரம்பிய இடம்.

எல்லாத்துறைகளும் அவ்விதம்தான் என்பாய்! ஒரு மாறுபாடு உண்டு. மற்ற எந்தத் துறையினையும் விட அரசியல் துறையிலே எதிர்பாராத நிகழ்ச்சிகள், ஏமாற்றங்கள்,எரிச்சல்கள் நிரம்ப ஏற்படும் விசித்திரமான உலகு.”

- தம்பிக்கு அண்ணாவின் கடிதம் ‘அறுவடையும் அணிவகுப்பும் (1)

செவ்வாழை

அண்ணாவின் சிறுகதைகளில் எனது இதயத்தை ஈர்த்த கதைகளில் ஒன்று தான் செவ்வாழை. இது ஒரு சோகச் சித்திரம். நாளும் உழைக்கும் ஏழையின் வீட்டுப் பிள்ளைகளின் சின்னஞ்சிறு ஆசைகளும் நிராசைகளே என்பதை விவ ரிக்கும் கதை! மாடாக உழைக்கிறான் செங்கோடன்! அவன் வீட்டுக் கொல்லை யில் செவ்வாழைக் கன்று வளர்க்கிறான்! அக்கன்று வளர வளர அவனது பிள் ளைகளுக்கு ஆசைகளும் வளர்கின்றன. வாழை தித்திக்கும் “செவ்வாழைப்பழக் குலை”யை தரும். அப்பழங்களைச் சுவைக்கலாம் என்ற ஆவல் நிரம்ப பிள்ளை களுக்கு. இதோ ‘குலை’ பிறந்துவிட்டது.இன்னும் இரண்டு நாள்! முழுமையான பழக்குலை. நம் கையில் என்ற கற்பனையில் திளைக்கின்றன அப்பிஞ்சு நெஞ் சங்கள்.

ஐயோ! திடீரென்று மரண ஓலை வந்தது! செல்வந்தரான பண்ணையார் பரந்தா ம முதலியார் மருமகப் பெண்ணுக்குப் பிறந்தநாள் விழாவாம். கோயில் அபி ஷேக அர்ச்சனைக்கு ஆராதனைக்கு வாழைப்பழம் வேண்டும் என்றாராம் ஐயர். பண்ணையாருக்குத் தெரிய வந்தது செங்கோடன் வீட்டுக்கொல்லையின் செவ் வாழை! உத்தரவு பிறந்தது. செவ்வாழைக்குலையை வெட்டி பண்ணை யாருக் குத் தந்தான் செங்கோடன். தங்கள் ஆசைக் கனவுகள் சிதைந்து அழுது துடித் தனர் அவன் பிள்ளைகள். நான்கு நாள்களுக்குப் பின்னர் பண்ணையாரின் கணக்குப் பிள்ளை, செங்கோடனின் செவ்வாழைக் குலையின் நாலு சீப்பு பழத் தை -கள்ளத்தனமாக விற்றதால் - கடையில் விலைக்குத் தொங்கியது அப்பழச் சீப்பு.செங்கோடனின் மகன் அப்பழத்தைக் கண்டு ஏங்கினான், வாடினான். ‘அணா’ இல்லை அவனிடம் பழத்தை விலைக்கு வாங்க!

‘செவ்வாழைத்தண்டு’ பார்வதி பாட்டி பாடையில் கட்ட - வெட்டிக் கொண்டு
சென்றான் செங்கோடன்! அவன் மகன் கரியன் பெருமையுடன் சொன்னான்.
மற்றக் குழந்தைகளிடம் “எங்க கொல்லை செவ்வாழைக் குலையைப்பண் ணை வீட்டுக்குக் கொடுத்தோம்.மரத்தை பாடையில் கட்டிவிட்டோம்” ஆம்! பழத்தின் சுவை பருகும் வாய்ப்பற்ற ஏழைப்பிள்ளை. (1949 இல் வெளிவந்த கதை).

இலட்சிய வரலாறு (29.6.1947)

“நம் இழிவு நீக்கம், நம் முன்னேற்றத் தடை நீக்கம், ஆரியத்தில், மூட நம்பிக் கையில் இருந்து விடுபடுதல்,பகுத்தறிவாளர்களாக, மானமுள்ள சமுதாயமாக ஆவது, இப்படிப்பட்ட நம் வேலை, நெருப்போடு பழகுவது போல் பாமர மக்க ளிடம் பழகுவதாகும்.அவர்கள் நம்பிக்கையைப் பெற வேண்டும். அவர்களைத் திருத்தியே ஆகவேண்டும். இதற்கு நல்ல பிரச்சாரம் வேண்டும். ஒத்துழைப்பு வேண்டும், ஒன்றுபட வேண்டும். நிலைகுலைந்து சின்னாபின்னப்பட்டுக் கிடக் கும் மக்களை ஒன்று சேர்த்து, யாவர் பலத்தையும் ஒன்றாய்த் திரட்டி, ஒரு
மூச்சுப் பார்த்தாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இனி நாம் சூத்திரர்களாக
வாழமாட்டோம் என்பதே நமது இலட்சிய சொல், நமது மூச்சு.

வெற்றி கண்ணுக்குத் தெரிகிறது. அது கானல் நீரல்ல. கருத்தும் கவலையும்
இருந்தால் கண்டிப்பாக அடைந்தே தீருவோம் என்கிற உறுதி எனக்கு உண்டு.

தோழர்களே!

இன்றைய இருள் அகல வேண்டுமெனில், இழிநிலை அகற்றப்பட வேண்டு மெனில், நம்மை தியாக வாழ்வுக்கும், துன்ப வாழ்வுக்கும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.அண்ணா சொல்கிறார் இதோ! நமக்காக - கருத்தை, கவ னத்தை பிரிதோர் பக்கம் சிதறவிடாமல் அவர் தந்த ‘மரண சாசனம்’ எனும் பிரகடனத்தில் சிந்தையைப் பதிப்போம்.

மரண சாசனம்

யுகயுகமாக இருந்து வருவதாகக் கூறப்படும் ஏற்பாடுகளை நாம், திருத்தி அமைக்க விரும்புகிறோம்.மமதை மலைக்கு வேட்டு வைக்கிறோம். நம்மீது சிறுசிறு துண்டுகள் சிதறி விழுந்து,மண்டையைப் பிளக்கின்றன என்றால், நாம் வைத்த வேட்டு மலையைப் பிளந்து வருகிறது என்று பொருள். மலையைப் பிளக்கும் காரியத்தில் இறங்கிவிட்டு,மலர் தலைமீது விழும் என்று எதிர்பார்க் க முடியாதல்லவா? நம்மை நாமாகவே இந்தக் காரியத்துக்கு ஒப்படைத்து
விட்டோம். உலகில் பல பாகங்களிலே, இதற்கு ஒப்பான காரியம் செய்யப் புகுந்தவர்கள் பட்டபாடுகள், இன்று பல்கலைக் கழகங்களில் பாடப் புத்தகங் களாகி விட்டன. அன்று சாக்ரடீஸ் குடித்த விஷம். இன்று வரை, சாகா நிலை யைச் சாக்ரடீசுக்குத் தந்து விட்டது. பழியையும் இழிவையும், எதிர்ப்பையும், ஆபத்தையும் தலைமீது ஏற்றுக் கொண்டு, பணி புரிந்து சென்று, அந்தப் பணி யின் பலனைப் பின் சந்ததியார் அனுபவிக்கச் செய்யும் பரம்பரையில் நாம் சேர்ந்திருக்கிறோம். நமக்கு, இன்னலும் இடையூறும் இருக்கத்தான் செய்யும்; ஆனால், நமது உழைப்பு ஒருநாளும் வீண் போகாது.

கடு விஷம் கொடுத்துக் கொல்லப் பட்டோர், காரிருட் சிறையில் ஆயுட்கால முழுதும் தள்ளப்பட்டோர்,கல்லால் அடித்துத் துரத்தப்பட்டோர் சிலுவையில் அறையப்பட்டோர்,சிறுத்தைக்கு இரையாக்கப்பட்டோர், கழுத்து நெரிக்கப்பட் டோர், கனலில் தள்ளப்பட்டோர், கண்டதுண்ட மாக்கப்பட்டோர், நாட்டு மக்க ளாலேயே துரத்தி அடிக்கப் பட்டோர், நாதியற்றுப் போனோர் என்று இவ்வித மாகத்தான் இருக்கும்.சமூகப் புரட்சிப் பணியிலே ஈடுபட்டவர்களுடைய வாழ்க்கை வரலாறுகள். நாம் அந்த இனம், அவர்களெல்லாம் இன்று அறிஞர்
உலகின் அணிமணிகளாயினர்.நம்மையும், பின்சந்ததி மறவாது.

காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றிய காலம், கட்டிப் போட்டு வீட்டுக்குத் தீயிட் ட காலம், கிணற்றில் தள்ளிக் கல்லிட்ட காலம், கண்களைத் தோண்டி எடுத்த காலம்,நாவைத் துண்டித்த காலம்,கழுவிலேற்றிய காலம்,தலையைக் கொய்த காலம்,தணலில் தள்ளிய காலம் -இவையெல்லாம் இருந்தன.சீர்திருத்தம் பேசி யோர் இவைகளிலே தான் உழன்றனர். பெரும் பாலானவர்கள் சாகவில்லை;
கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தாலேயே அவர்கள் இன்று சாகாதவராக உள்ளனர். எனவேதான்,மரண சாசனம் தயாரித்துக் கொண்டு இந்த மகத்தான போராட்டத்திலே இறங்க வேண்டும் என்று கூறுகிறோம்.

அண்ணாவின் படைப்புகள்

அறிஞர் அண்ணாவின் பேனா முனையில் “தம்பிக்கு மடல்கள் மலர்ந்தன! நாட கங்கள் பிறந்தன! புதினங்கள், கதைகள், கட்டுரைகள், இதழுரைகள் உதித்தன. அவர் தந்தவற்றைப் பட்டியல் தருகிறேன். இதோ...

தம்பிக்கு மடல்கள் - 316
கட்டுரைகள் -560
நாடகங்கள் - 13
சிறு நாடகங்கள் - 114
புதினங்கள் - 6
குறும்புதினங்கள் - 18
சிறுகதைகள் - 117
ஊரார் உரையாடல் - 26
அந்திக்கலம்பகங்கள் - 36
கவிதைகள் - 77
இதழுரைகள் ஆயிரத்துக்கும் மேல்!

இத்தனையும் தமிழ்க்குலம் தழைத்து ஓங்கி வாழ்வதற்காக! தமிழகம் மறும லர்ச்சி காண்பதற்காக!

அவரது உரைகள் - அறிவுலகத்தின் ஒளி வீச்சுக்கள்! மடமையின் மீது விழுந்த
சம்மட்டி அடிகள்! இலட்சோப இலட்சம் வாலிபர்களை வசீகரித்த உரைகள்.
ஆயிரமாயிரம் உரைகள், கல்லூரிகளில் பல்கலைக் கழக மண்டபங்களில் அவர் ஆற்றிய உரைகள் அனைத்தும் சிறப்பு மிக்க இலக்கியங்கள்! நாடாளு மன்ற சட்டமன்ற உரைகள் சரித்திரத்தில் பதிந்த கல்வெட்டுக்கள்!

பத்து வால்டேர்கள்,பத்து ரூசோக்கள்,பத்து பெர்னாட்சாக்கள், பத்து கார்க்கிகள், பத்து மாஜினிகள், பத்து இங்கர்சால்கள், பத்து வால்ட்விட் மன்கள், பத்து டால் ஸ்டாய்கள், பத்து பாப்லோ நெருடாக்கள் சேர்த்து உழைத்துத் தந்திடக் கூடிய சிந்தனைச் செல்வத்தைத் தான் ஒருவராக இச்சிங்கத் தமிழ்நாட்டுக்குத் தந்த வர் தாம் அறிவுச் சிகரமாம் அறிஞர் அண்ணா!

இது உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை. சரித்திரத்தின் பாடங்களை நான் ஓர ளவு முறையாகப் படித்து உள்ளேன். இலக்கியங்களை,நாவல்களை, கதை களை, கவிதைகளை, நாடகங்களை, சிந்தனையைக் கூர்படுத்தும் கட்டுரை களை, இலயித்துப் படித்து உள்ளேன், என் சிற்றறிவுக்கு எட்டியவரையில்!

தமிழ்க்குலத்தின் அருள் ஒளிதாம் அறிஞர் அண்ணா! அடக்கம்! எளிமை, அரவ ணைக்கும் தன்மை, அன்னையின் பாசம் பொழியும் ஈர நெஞ்சம், தம்பியரைத் தட்டிக் கொடுத்து ஊக்குவித்துப் பாராட்டும் பண்பு, அனைத்தும் கொண்ட அண் ணன் அதிக நாட்கள் வாழவில்லையே என எண்ணும் போது நெஞ்சம் ஏங்கி ஏங்கிப் புலம்புகிறது.

அவர் மறைந்தாலும் அளப்பரிய அறிவுச் செல்வத்தையன்றோ அள்ளி எடுத்துத்
தந்து உள்ளார். இன்னொரு அண்ணா வரப்போவது இல்லை. எனவே அவரது
கருத்து ஓவியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டி யது நம் பணி.

மறுமலர்ச்சி காண, நம் தாயகம் மறுமலர்ச்சி பெற, இன்றைய இருள் கிழித்து ஒளி வீசும் - தீபச்சுடர்தான் அண்ணா. அந்த ஒளி மலர வேண் டும் மலர வேண் டும் நம் மனக் குகையில்! யார் நமக்கு ஆசான்? யார் நமக்குத் தலைவர்? எனும் கேள்விகளுக்கே இடம் இல்லை. அண்ணாவின் கருத்துக்களும், வாழ்க்கை முறையும், அவர் தெரிவித்த இலட்சியக் கனவுகளும்தான் நமது வழிகாட்டிகள்.

தோழர்களே! மறுமலர்ச்சி என்பது வனப்பு மிக்க சொல்! வசீகரம் நிறைந்தது. 1942 இல் அறிஞர் பெருந்தகை தேர்ந்தெடுத்துக் கையாண்ட சொல்!மறுமலர்ச்சி மன்றம் அமைத்தார் காஞ்சியில்! உலகில் பல நாடுகளில் பல இனங்களில் மறுமலர்ச்சி ஏற்பட்டது.எண்ணற்றோர் செய்த தியாகத்தால்! கடுமையான காணிக்கை தரப்பட்டதால்!

மறுமலர்ச்சி கண்டிட நடத்தப்பட்ட பயணங்கள் எல்லாம்,பாலைவனப் பயணம் போன்றவையே! எதிர்ப்புகள்,ஏளனப் பேச்சுக்கள், இழிமொழி அர்ச்சனைகள், அதிரடித் தாக்குதல்கள்,உயிர் பறிக்கும் உத்தரவுகள், கொட்டடிச் சித்திரவதை கள், இவையனைத்தின் வெறியாட்டத்தைச் சந்தித்த பின்னரே அதிக ரத்தம் கொட்டப்பட்ட பின்னரே, கண்ணீர் வெள்ளமாகப் பாய்ந்த பின்னரே, ‘மறுமலர்ச் சி’ உதயமாயிற்று பல நாடுகளில்!

எனது இளம் தோழர்களே! அண்ணாவின் அழகு தமிழ் அருவி நடைப்பேச்சைக்
கேட்கும் பேறு உங்கட்கு இல்லை.தேனடைகளாக எழுந்த அவரது எழுத்துக் களைப் படியுங்கள். தலைப்புச் செய்திகளை மேலோட்டமாகப் பார்த்து, பார் வையில் விழுங்குவதும், தொலைக் காட்சிப் பெட்டிக்கு முன் தங்கள் நேரத் தைத் தொலைப்பதுமாகி விட்டது இன்றைய அவசரக்கார உலக வாழ்க்கை!

நமது தோழர்களை,தோழியரை வேண்டுகிறேன்.நமது தமிழகத்தின் எதிர்காலத் தைப் பாதுகாக்க, திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க “அண்ணாவின்” படைப்பு களைப் படியுங்கள்.பழந்தமிழர் வாழ்வை,புராதனமான கோட்டை கொத்தளங் களை அழகு தவழும் சிலைகளின் கலை அரங்கத்தைக் கண்டு களிக்க வாருங் கள்.அதன் எழில்தனைப் பருக வாருங்கள் என அழைத்துச்செல்லும் வழி சொல் வோன் (Guide)  நான். (வழிகாட்டி எனும் சொல்லைப் பயன் படுத்த நான் விரும்ப வில்லை) தெற்கு நோக்கிச்சென்றால், பின்னர் மேற்கே பிரியும் சாலையில் நடந்தால் நீங்கள் தேடுகிற கலைக்கூடம் காட்சி அளிக்கும் எனச் சொல்லி அனுப்புகிற வேலையைச் செய்ய முனைந்து உள்ளேன் நான்.

பல பகல்கள் பல இரவுகள், பல நாள்கள், பல வாரங்கள், பல மாதங்கள் என்
மனதில் எழுந்த வேதனை அலைகளின் அறுவடைதான் நான் தீட்டும் மடல் கள்.நமது இயக்கத்தில் இளைஞர் கூட்டத்தை, சகோதரிகளை அறிவுப்பயிற்சி யில் ஆயத்தமாக்க வேண்டும்.

நான் சிலை வடிக்கும் சிற்பி அல்ல.படிந்துவிட்ட தூசியைத் துடைத்து, சிலை யில் அழகைப் பராமரிக்க முனையும் வேலைக்காரன்!

நான் சைத்ரீகன் அல்ல! எழில் சிந்தும் ஓவியத்தின் பொலிவைப் பேணி வாரீர் காண்பதற்கு என அழைக்கும் ஊழியக்காரன்!

நந்தவனத்தை அமைத்தவன் அல்ல நான்! நச்சரவுகள் நுழையாமல் விரட்டிக் காவல் புரியும் காவல்காரன்!

நான் தலைவன் அல்ல! தமிழ்க் குலத்தின் இன்றைய தலைமுறையும் வரப் போகும் தலைமுறைகளும் தலைநிமிர்ந்தன தரணி போற்றிட எனும் நிலை பெற, நாளும் உழைக்கும் உண்மைத் தொண்டன் நான்.

வைகோ 

No comments:

Post a Comment