Sunday, September 8, 2013

கச்சத்தீவு யாருக்குச் சொந்தம்?

சங்கொலி தலையங்கம் 

டெல்லியில் ஆட்சிபுரிகின்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக் குக்கூட்டணி அரசு, தமிழ் இனத்திற்கு எதிரான அரசு - தமிழ்நாட்டிற்கு விரோத மான அரசு என்பதை,மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்து இருக்கின்றது. 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உச்சநீதி மன்றத்தில் கச்சத்தீவு தொடர்பாக ஒரு வழக்கு தொடர்ந்தார்.

“கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தம் இல்லாமல் இருந்தது.ஆங்கிலேயர் ஆட் சிக் காலத்தில் கச்சத்தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சனை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது. அதைத் தொடர்ந்து இந்தியா-இலங்கைக் கடற்பகுதியில், சர்வதேச எல்லைக்கோட்டை நிர்ணயித்தபோது, கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் சென்றுவிட்டது. அதன் பிறகு இந்தியா மற் றும் இலங்கை அரசுகளுக்கிடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஒப் பந்தங்கள் உருவாக்கப்பட்டன. இதன் அடிப்படையில் ராமேஸ்வரம் அருகே உள்ள கச்சத்தீவு இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டது. எனவே, இந்த ஒப் பந்தங்களை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று மனுவில் ஜெய லலிதா குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்டு 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது,மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“கச்சத்தீவு என்பது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியா மற்றும்இலங்கை இடையே பிரச்சினையாக இருந்தது. இந்தத்தீவின் நிலை தொடர்பாக இருந்த பிரச்சினை 1974 ஆம் ஆண்டில் இந்திய - இலங்கை அரசுகளிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் மூலம் தீர்க்கப்பட்டது. வரலாற்று ஆதாரங்கள் மற்றும் சட்ட அம்சங் கள் உட்பட, அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொண்ட பின் இரு நாடு களும் ஒப்பந்த முடிவுக்கு வந்தன.

1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் ஏற்பட்ட நிலைமை. 1976 ஆம் ஆண்டு
ஒப்பந்தத்தில் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இந்தியாவின் எந்த ஒரு பகுதி யும், எந்த நாட்டிற்கும் கொடுக்கப்படவில்லை. அதனால், கச்சத்தீவு இலங் கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டதாக மனுதாரர் கூறுவது சரியானது அல்ல; அரசு ஆவணங்களுக்கு முரணானது. இந்தியா-இலங்கை அரசுகளிடை யே ஏற்பட்ட இரண்டு ஒப்பந்தங்களின்படி, இலங்கை கடல்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி இல்லை.அதே நேரத்தில் இந்திய மீனவர் களும் சுற்றுலாப் பயணிகளும் கச்சத்தீவுக்குச் செல்லலாம்.

இதற்கான, இலங்கை அரசிடமிருந்து பயண ஆவணங்களோ அல்லது விசா வோ பெற வேண்டிய தேவை இல்லை. கச்சத்தீவுக்கு செல்லும் உரிமையை, அந்தத் தீவைச் சுற்றிலும் மீன்பிடிக்க வழங்கப்பட்ட உரிமையாக, இந்திய மீன வர்கள் கருதக்கூடாது.எனவே, ஜெயலலிதாவின் மனு, விசாரணைக்கு உகந் தது அல்ல; தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று மத்திய அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சவுகான் மற்றும் பாப்தே அடங்கிய அமர்வு, மனுதாரர் இதற்கு பதில் ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும். வழக் கின் இறுதிகட்ட விசாரணை மூன்று வாரங்களுக்குப் பின் நடைபெறும் என்று உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு முற்றிலும் விஷ மத்தனமானது; தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரானது; இலங்கைக் கடற்படையின ரால் தமிழக மீனவர்கள் நாள்தோறும் தாக்கப்படுகிறார்கள்; கைது செய்யப் பட்டு முறையான விசாரணையின்றி இலங்கைச் சிறையில் அடைக்கப்படுகி றார்கள் இதுவரை எழுநூறு பேருக்கு மேல், நமது மீனவர்கள் சிங்களக் கடற் படையால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்கள்.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்கள் மீன்பிடிபடகுகள், வலை கள் சேதமாக்கப்படுவதும் கொடூரமாக தாக்கப்படுவதும் அன்றாட செய்திகள் ஆகிவிட்டன.இந்நிலையில்தான் கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. தமிழ்நாட்டிற்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிய வேண்டும் என்று ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் வலியுறுத்தி வரும் வேளையில், உச்சநீதிமன்றத்தில் மத்திய காங்கிரஸ் அரசு, கச்சத்தீவு இந்தியாவுக்கு உரியது அல்ல என்று மனுதாக்கல் செய்திருப்பது தமிழர்களின் நெஞ்சத்தில் நெருப்புக் கனலை மூட்டி உள்ளது.

மத்திய அரசு கச்சத்தீவு பிரச்சினையில் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராகத் தான் செயற்பட்டு வந்திருக்கின்றது. 2010, ஆகஸ்டு 31 ஆம் தேதி, நாடாளு மன் றத்தில் கச்சத்தீவு தொடர்பாக கருத்து தெரிவித்த அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இப்பொழுது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் என்ன தெரிவித்ததோ அதையே கிருஷ்ணாவும் கூறினார்.

“கச்சத்தீவு இலங்கை அரசுக்கு சொந்தமானது. கச்சத்தீவு கொடுத்தது கொடுத்த துதான்.அதைத் திரும்பப்பெற வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இந் திய எல்லையைத் தாண்டி கச்சத்தீவில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது.இலங்கை இந்தியாவின் நட்பு நாடு”இந்திய வெளி யுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின், இறுமாப்பு நிறைந்த தமிழ்நாட்டை யும், தமிழக மீனவர்களையும் கிள்ளுக்கீரையாகக் கருதி தெரிவிக்கப்பட்ட கருத்து இது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் நிலைப்பாடு இதுதான் என் பதை இப்போது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனு மூலம் திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறார்கள்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் ஆகஸ்டு 19 ம் தேதி டெல்லிக்கு வந்து, பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிற காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று நேரில் அழைப்புக் கொடுத்தார். அப்போது டெல்லியில் அளித் த பேட்டியில் “கச்சத்தீவு என்பது முடிந்து போன விவகாரம். இதை மீண்டும் எழுப்பிப் பயனில்லை” என்று ஜி.எல்.பெரீஸ் ஆணவமாகக் கூறிச் சென்றார். இலங்கை அமைச்சரின் கருத்தை அப்படியே இந்தியா ஏற்றுக்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து வேட்டையாடப் படும் கொடுமை நடப்பதால் கச்சத்தீவை இந்தியா இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதன் முதலாக 1991, அக் டோபர் 3 இல் ஜெயலலிதா அரசு தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. 2013 மே 3 ஆம் தேதி மீண்டும் ஒரு தீர்மானத்தை சட்ட மன் றத்தில் நிறைவேற்றி, கச்சத்தீவை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத் தப்பட்டது. ஆனால், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, தமிழக மக்களின் ஜன நாயக அறமன்றமான சட்டமன்றத் தீர்மானத்தை ஒரு பொருட்டாகக் கருதா மல் குப்பைக்கூடையில் வீசி எறிந்துவிட்டது.

கச்சத்தீவு முழுக்க முழுக்க தமிழர்களுக்கு சொந்தமான பகுதியாகவே இருந் தது என்பதற்கு ஏராளமான ஆவணங்கள் இருக்கின்றன.இந்தியாவின் தெற்குக்
கடற்கரையில் பாம்பன் தீவுக்கு அருகில் சுமார் 285.2 ஏக்கர் நிலப்பரப்புக் கொண்ட கச்சத்தீவு இராமேஸ்வரத்திலிருந்து 12 கல் தொலைவில் உள்ளது. மதுரை நாயக்க மன்னர்கள் காலத்திற்குப் பின் சேதுபதி அரசர்களுக்கு அளிக் கப்பட்ட நிலப்பகுதியில் கச்சத்தீவும் அடங்கி இருந்தது. முதல் அரசர் முதலாம் சடைக்கத்தேவர் என்ற உடையான சேதுபதி காலத்தில்(1605-1621) கி.பி.1609 இல் சாலிவாகன சகம், 1531 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட சேதுபதியின் செப்பேட்டில் தலைமன்னார் வரை சேதுபதி ஆட்சிக்கு உட்பட்டது எனக் கூறப்படுகிறது.

சேதுபதிக்குரிய கடற்கரை ஊர்கள் 69; தீவுகள் 8 ஆகும். சேதுபதி மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று. இராமநாத புரம் மாவட்ட ஆவணங்களிலும், பதிவு அலுவலகங்களிலும் கச்சத்தீவு பற்றிய ஆவணங்கள் இன்றும் இருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சியில் 1895, 1930 ஆம் ஆண்டுகளில் கச்சத்தீவு அளவை செய்யப்பட்டு, இந்திய அரசு வரைபட ஆவ ணங்களில் சேர்க்கப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு 1952, 1956 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசு வெளியிட்ட வரைபடங்கள் அனைத்திலும் இரா மேஸ்வரத்தின் ஒரு பகுதியாகக் கச்சத்தீவு காட்டப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இந்திராகாந்தி ஆட்சியில் 1974, ஜூன் 26 இல் இந்தியாவும் இலங்கையும் ஒரு உடன்பாட்டை செய்து கொண்டு, கச்சத்
தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இந்த உடன்பாட்டின்படி பாக் நீரி ணையில் இந்தியாவும், இலங்கையும் எல்லையோரக் கடல்பகுதிகளை வரை யறை செய்து கொண்டன.பன்னாட்டுச் சட்ட விதியையும், (Rule of International Law) சமதூர எல்லை விதியையும் (Equi - Distance Rule) மீறி, இந்திய எல்லையோர கடற் பகுதியை இந்தியா, இலங்கைக்கு 1974 ஜூன் 26 உடன்பாட்டின், பிரிவு 4 இன் படி விட்டுக் கொடுத்துவிட்டது.

1974, ஜூன் 26 உடன்பாட்டின் கீழ் இலங்கை அரசுக்கு இந்தியா கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, பிரிவு 5 இன் படி தமிழகத்திலிருந்து மீனவர் கள் கச்சத்தீவு சென்று வர வழிவகை செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் பிரிவு 5, கச்சத்தீவுக்கு இந்திய மீனவர்கள் செல்லவும், அங்குள்ள அந்தோணியார் ஆல யத்தில் வழிபாடு செய்யவும் எப்போதும் உரிமை உண்டு. அவ்வாறு சென்று வர பயண ஆவணங்களோ,இலங்கையின் அனுமதியோ தேவை இல்லை என்று கூறுகிறது. ஒப்பந்தத்தின் பிரிவு 6, இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் பாரம்பரிய மாக அனுபவித்துவந்த உரிமைகளை (படகுகளை நிறுத்துதல், மீன் வலை களை உலர்த்துதல்) தொடர்ந்து அனுபவிப்பர் என்று கூறுகிறது.

இந்திய வெளியுறவுச் செயலர் கேவல்சிங், இலங்கை வெளியுறவுச் செயலா ளர் ஜெயசிங் இருவரும் 1976 மார்ச் 23 இல் கையொப்பம் இட்ட ஒப்பந்தம் 
இந்திய மீனவர்களின் (தமிழ்நாடு மீனவர்) தொன்று தொட்டு உள்ள மீன்பிடி தொழில் உரிமையையும், கச்சத்தீவுக்கு பயண ஆவணங்கள் இன்றி சென்று வரும் உரிமையையும் ரத்து செய்தது.

எனவேதான், கச்சத்தீவு தொடர்பாக தமிழர்களுக்கு எதிரான 1974, 1976 இந்திய-
இலங்கை ஒப்பந்தங்களை இரத்து செய்ய வேண்டும். கச்சத்தீவை இந்தியா திரும்பப் பெற்று தமிழக மீனவர்களின் உயிரையும் உடைமையையும் மற்றும் கச்சத்தீவு மீதான உரிமையையும் நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், மத்திய காங்கிரஸ் அரசு தமிழர்களின் உரிமைகளை காவு கொடுப்பதி லேயே குறியாக இருக்கின்றது. மத்திய காங்கிரஸ் அரசை தமிழர்கள் தூக்கி எறிந்து, மீண்டும் எழ முடியாமல் செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூறுவதை செயற்படுத்தினால்தான் தமிழ் இனத்திற்கு விடியல் கிடைக்கும்.

No comments:

Post a Comment