Thursday, June 6, 2013

இரண்டு ஜப்பானியர்கள் சண்டை போடுவதைப் பார்க்க முடியாது!

தலைவர் வைகோ அவர்களின் ஆசியோடு, ஜப்பான் நாட்டில் 16 நாள்களும், ஹாங்காங், மகாவ்,சீனாவில் ஒரு வார காலமும் சுற்றுப்பயணம் மேற்கொண் டேன். ஜப்பான் நாடு, இந்த உலகில் உள்ள வேறொரு உலகம் என்பதை நேரில் கண்டேன்.ஜப்பான் பயண அனுபவங்களை,சங்கொலி வாசகர்களோடுபகிர்ந்து கொள்ளுமாறு தலைவர் வைகோ அவர்கள் கூறினார்கள்.தம்பி ஜெயசீலனோ டு நிகழ்த்திய உரையாடலை ஏற்கனவே பதிவு செய்து உள்ளேன். இந்த இதழில், பரமக்குடி குன்றாளன் அவர்களுடைய கருத்துகள் இடம் பெறுகின்றன. உரை யாடல்கள் தவிர, ஜப்பானில் நான் கண்டதும் கேட்டதும், அவ்வப்போது சங் கொலியில் இடம் பெறும்.


5 மே 2013

இன்று காலையில் ஆயத்தமாகி, 8.30 மணிக்கு அராய் தொடர்வண்டி நிலையம்
சென்று வண்டி பிடித்து, அகாஷி நிலையம் போய்ச் சேர்ந்தோம். அங்கிருந்து பயணித்து,கோபே தொடர்வண்டி நிலையத்தில் நாங்கள் இறங்கியபோது மணி 10.00. நண்பர் பரமக்குடி குன்றாளன், தமது புத்தம் புதிய கருப்பு டொயோட்டா வேன்கார்டு காருடன் காத்துக்கொண்டு இருந்தார். கடந்த மாதம்தான் புதிதாக வாங்கினாராம்.அன்போடு எங்களை வரவேற்று அழைத்துச் சென்றார். அதி விரைவுச்சாலையில், கார் விரைந்தது. அங்கிருந்து கியோத்தோ, சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவு.


தமிழக அரசியல் நிலவரங்களை ஆர்வத்தோடு என்னிடம் கேட்டு அறிந்தார்.
தொடர்ந்து, ஜப்பான் குறித்த எனது கேள்விகளுக்கு விளக்கமாக விடை அளித் தார். அவருடன் நிகழ்ந்த உரையாடலை அப்படியே தருகிறேன்.

அருணகிரி: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்....

பரமக்குடி குன்றாளன்

பரமக்குடி அருகே சாலைகிராமம் என்ற ஊருக்குப் பக்கத்தில் உள்ள வடுகை என் தந்தையின் சொந்த ஊர்.இளையாங்குடி, சிவகங்கை எல்லாம் அருகில் உள்ள ஊர்கள். எனது பாட்டனார் நல்ல உழைப்பாளி.பர்மாவில் ஐந்து ஆண்டு கள் இருந்தார்.ஊருக்குத் திரும்பி வந்தபிறகு பல தொழில்கள் செய்தார். ஒரு முறை, அரசாங்க அலுவலகத்துக்கு அவர் சென்றபோது, ‘படித்தவர்கள் எல் லாம் தனி வரிசையில் நில்லுங்கள்; மற்றவர்கள் தள்ளி நில்லுங்கள்’ என்று
சொன்னதைக் கேட்டு, தம் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என உறுதி பூண்டார். படிக்க வைத்தார். எனது பெரியப்பா, காவல்துறையில் உயர் அதிகாரியாகப் பணி ஆற்றி ஓய்வு பெற்று, இயற்கை எய்தினார். என் தந்தை யார் விஸ்வநாதன் அவர்கள், ஆசிரியராகப் பணி ஆற்றி நற்பெயர் ஈட்டி ஓய்வு பெற்றார்கள்.

தமிழ்ப் பற்றாளரான என் தந்தை, ஒரு தனிச்சிறப்பான பெயரைத் தெரிவுசெய்து எனக்குச் சூட்டி இருக்கின்றார்.‘குன்றாளன்’ என்ற இந்தப் பெயரில் வேறு எவ ரேனும் இருக்கிறார்களா? என்று தேடித்தான் பார்க்க வேண்டும் நான் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் பி.எஸ்சி, பூண்டி புஷ்பம் கல்லூரியில் எம்.எஸ்சி., முடித்தேன். 1992 ஆம் ஆண்டு, சென்னையில்,ஒரு கணினி நிறுவனத்தில் பணி யில் சேர்ந்தேன்.அங்கே, ஜப்பானிய மொழி கல்வி பயிற்றுவித்தார்கள். ஆர்வத் தோடு படித்தேன். தமிழ்நாடு அளவில் நடைபெற்ற ஜப்பானிய மொழி பேச்சுப்
போட்டியில், முதல் பரிசு பெற்றேன்.தில்லியில் நடைபெற்ற அனைத்து இந்தி யப் போட்டிக்கு அனுப்பினார்கள்.அங்கே, ஜப்பானிய மொழியிலேயே படித்துப் பட்டம் பெற்றவர்களும் வந்து பங்கு ஏற்றதால் வெற்றி வாய்ப்புகிட்டவில்லை. அந்த நிகழ்ச்சிக்குச்சிறப்பு விருந்தினராக ஜப்பானியத் தூதர் வந்து இருந்தார்.

என்னுடைய ஜப்பானிய மொழிஅறிவால், நிறுவனத்தின் சார்பில் என்னை ஜப் பான் கிளைக்கு அனுப்பி வைத்தார்கள். 1995 ஆம் ஆண்டு இங்கு வந்து சேர்ந் தேன். இங்கே, பல்வேறு நிறுவனங்களில் பணி ஆற்றியபின்பு, கடந்த ஓராண் டாக, கோக்னிசன்ட் கணினி (சிடிஎஸ்) நிறுவனத்தில் பணிபுரிகின்றேன். ஓசக் கா, டோக்யோ, கோபே ஆகிய ஊர்களில் பணி ஆற்றி இருக்கின்றேன்.

இங்கே வந்தபின்பு, நடைமுறை வாழ்க்கையில் நாள்தோறும் ஜப்பானிய மொழியிலேயே பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், என்னுடைய ஜப்பா னிய மொழி அறிவும் மேம்பட்டு உள்ளது. இப்போதெல்லாம், நான் தொலை பேசி யில் ஏதேனும் ஜப்பானியரோடு உரையாடினால், அவர்கள் என்ன இவர் ஜப்பானிய மொழியில் பேசுகின்றார்; ஆனால், ஏதோ வேறு பெயரைச் சொல்லு கின்றாரே? என்று யோசிக்கக்கூடிய அளவுக்கு, ஜப்பானிய மக்களோடு, ஜப்பா னிய மொழியில் சரளமாக உரையாடி வருகிறேன்.

அருணகிரி: அப்படியானால்,தமிழ்நாட்டில் இருந்து வந்து, ஜப்பானிய மொழி யில் நூல் எழுதுகின்ற முதலாவது தமிழராக நீங்கள் இருப்பீர்கள் என்று நான் கருதுகிறேன்

குன்றாளன்: அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஜப்பானிய மொழியைப் பிழை
இன்றிப் பேசக் கற்றுக் கொண்டாலே போதும். இங்கே இப்போது, எழுத்துகளுக் கான பயன்பாடுகள் குறைந்து வருகின்றன. எதிர்காலத்தில் நிலைமை எப்படி இருக்குமோ சொல்ல முடியாது.

அருணகிரி: இல்லை. தமிழ்நாட்டைப்பற்றி, ஜப்பானிய மொழியில் நீங்கள் ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். ஜப் பானிய வாழ்க்கையைப் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

குன்றாளன்: குன்றாளன்: ஜப்பானியர்கள், எந்த இடத்திலும் எறும்புகளைப் போல வரிசையாக ஒழுங்காக அணிவகுத்துச்செல்கின்றார்கள். சாலைகளில் கார்களில் வேகமாகப் பயணிக்கும்போதும்,ஒருவரை யொருவர் முண்டியடித் துக் கொண்டு முந்திச் செல்லுவது இல்லை.பொது இடங்களில் யாரும் தங்க ளது தனித்திறமைகளைக் காட்டிக்கொள்ள முயற்சிப்பது இல்லை.

இது ஒரு ஜனநாயக நாடாகக் காட்சி அளித்தாலும், உண்மையில், இது ஒரு
பொது உடைமைச் சமுதாயம்.அமெரிக்கா போல, வேலைவாய்ப்புகளை அயல் நாட்டவர்க்கு வழங்குவது இல்லை. அவரவர் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பு கள் கிடைத்தால்தான் சமூக ஒற்றுமை நிலவும். திருட்டு,வழிப்பறி, கொள்ளை நடக்காது. அந்த வகையில் பார்த்தால், உலகத்துக்கே ஒரு வழிகாட்டியாக, அமைதிப்பூங்காவாக ஜப்பான் திகழ்கின்றது.

இங்கே நள்ளிரவிலும் பெண்கள் தனியாக நடமாட முடியும். 24 மணி நேரமும்
இயங்கக்கூடிய ஒரு பெரிய பல்பொருள் அங்காடியிலும், இரவில் நள்ளிரவில்
ஒரேயொரு பெண் தனியாக உட்கார்ந்து இருப்பார். வீடுகளுக்கு முன்பாக, தங் களுடைய பொருள்களை கடை போலப் பரப்பி வைத்து இருப்பார்கள்.அங்கே ஒருவரும் இருக்க மாட்டார்கள்.என்றாலும்கூட, யாரும் பொருள்களை எடுத் துச் செல்ல மாட்டார்கள்.தங்களுக்குத் தேவையான பொருளை எடுத்துக் கொண்டு, அதில் எழுதப்பட்டு உள்ள விலைக்குப் பணத்தை வைத்து விட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள். வைத்த பொருள்கள் அந்தந்த இடங்களில் அப்படியே இருக்கும். இந்தக் காட்சியை, தெருக்களில் நடந்து போகும்போது
நீங்களே பார்க்கலாம்.

அருணகிரி: அப்படியானால், ஜப்பானில் சட்டம், ஒழுங்குப் பிரச்சினைகளே
இல்லையா?

குன்றாளன்: ஒட்டுமொத்தமாக அப்படிச்சொல்லிவிட முடியாது. அங்கொன் றும்,இங்கொன்றுமாக சில குற்றங்கள் நிகழ்கின்றன. இங்கே எந்த அரசியல்
கட்சியினரும் கூட்டங்கள் போடுவதும் இல்லை; போராட்ட முழக்கங்களை
எழுப்புவதும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை. ஏனென்றால், ஒரு
அடித்தட்டு ஜப்பானியரின் குரல், நாட்டின் பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும் தெளிவாகக் கேட்கின்றது.

அருணகிரி: அப்படியானால், இங்கே அரசியல் மாற்றங்கள் எப்படி நிகழ்கின் றன?

குன்றாளன்: நமது நாட்டைப் போல ஒரு கட்சியின் தலைவராக வாழ்நாள் முழுமையும் ஒருவரே நீடிக்கக்கூடிய நிலைமை இங்கே இல்லை. தேர்தலில்
எந்தக் கட்சி தோற்கின்றதோ, அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, உடனே
அந்தக் கட்சியின் தலைவர் விலகி விடுவார். அதாவது, உண்மையிலேயே உட் கட்சி ஜனநாயகம் நிலவுகின்ற நாடு இது.

அதுமட்டும் அல்ல, பிரதமராகவும் ஒருவரே தொடர்ந்து நீடித்து விட முடியாது. இங்கே, கருத்துக்கணிப்புகளைத் துல்லியமாக நிகழ்த்தக்கூடிய நிறுவனங்கள் உள்ளன. அவர்களுடைய கணிப்பின்படி, பிரதமருடைய தகுதிப் புள்ளிகள் 20 அல்லது 30 விழுக்காடுகள் குறைந்தால், உடனே அவர் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, பிரதமர் பதவியில் இருந்து விலகி விடுகிறார்.‘புதிய பிரதம ரைத் தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிடுகிறார். நான் இங்கே வந்தபிறகு, 15 ஆண்டுகளில், 10 க்கும் மேற்பட்டோர் பிரதமராகப் பொறுப்பு வகித்து விட்டார்கள். இங்கே மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்று வது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல.

நமது நாட்டில், எத்தனை முறை தேர்தலில் தோல்வி அடைந்தாலும்,ஒரு கட்சி யின் தலைவர் அவ்வளவு எளிதில் பதவி விலகி விட மாட்டார். தன் குடும்பம், வாரிசுகளை அரசியலுக்குக்கொண்டு வந்து திணிப்பார். அப்படி,வாரிசுக்கு வாய்ப்பு என்பதை இங்கே எண்ணிப் பார்க்கவே முடியாது.ஏனென்றால், தனக் கே இங்கே பதவியில் நீடிக்க பாதுகாப்பு இல்லையே?

ஜப்பானிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தங்களுடைய நலன்களைப் பின்னுக்குத் தள்ளி, நாட்டின் நலனையே முன்னிறுத்திப் பணி ஆற்றுகின்றார் கள். அதனால், இந்த நாடு, ஜனநாயகத்தில் உயர்ந்து ஓங்கி இருக்கின்றது என் றே சொல்லலாம்.( Democracy at its best).

எந்த ஒரு பிரதமருக்கும், தொடக்கத்தில் தகுதிப்புள்ளிகள் அதிகமாக இருந்து,
படிப்படியாகக் குறைந்து கொண்டே வரும். ஆனால், தற்போதைய பிரதமர்
சின்சோ அபேவுக்கு மட்டும்தான்,தகுதிப்புள்ளிகள் உயர்ந்துகொண்டே போகின் றன. அந்த அளவுக்கு மக்கள் இடையே அவருக்கு செல்வாக்கு இருக்கின்றது. எனவே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் தோற்றவர், மீண்டும் வென்று இப்போது இரண்டாவது முறையாகப் பிரதமர் ஆகி இருக்கின்றார். ஜப்பானைப் பொறுத்தமட்டில் இது ஒரு சாதனை.

அருணகிரி: ஜப்பானிய மக்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உள்ளது?

குன்றாளன்: இங்கே நடுத்தர மக்கள்தான் 90 விழுக்காடு. பெரும் பணக்காரர் கள், முதலாளிகள் எண்ணிக்கை மிகவும் குறைவு. நடுத்தர மக்கள் என்றாலும்,
எல்லோருக்கும் எல்லாம் என்ற அளவில், எந்தக் குறையும் இல்லை. எனவே தான், எண்பதுகளில், ஜப்பான் நாட்டுக்கு வந்த, சோவியத் ஒன்றியத்தின் அதி பர் மிகாயில் கோர்பச்சேவ் japan is the most successful communist country without communism; அதாவது, கம்யூனிசம் இல்லாத, ஆனால் உலகிலேயே சிறந்த கம்யூனிச நாடு ஜப்பான் என்று சொன்னார்.

அருணகிரி: இங்கே நடுத்தர மக்கள் என்றால், அது நமது நாட்டில் பணக்காரர் கள் அல்லவா?

குன்றாளன்: அப்படி ஒரு நாட்டோடு, மற்றொரு நாட்டை ஒப்பிடக் கூடாது.
இங்கே 100 யென் கொடுத்து ஒரு காபி வாங்கிக் குடிக்கின்றார்கள் என்றால், அது ஒரு ரூபாய் செலவழிப்பதற்குச் சமம்.உலகப் பொருளாதாரத்தில் நீண்ட
நாள்களாக ஜப்பான்தான் இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது. அண்மை யில் தான், சீனா இரண்டாவது இடத்தைப்பிடித்து இருக்கின்றது. என்றாலும் கூட, சீனாவின் நாட்டின் மக்கள் தொகையோடு ஒப்பிட்டுப் பார்த்தால்,அது சரி யான கணக்கு அல்ல. அங்கே எல்லோரும் பணக்காரர்கள் ஆகிவிட்டார்களா என்ன?

அருணகிரி எனக்கு விவரம் தெரிய,இருபது ஆண்டுகளுக்கு முன்பு, 100 இந்திய ரூபாய்க்கு, 1800 அல்லது 1500 ஜப்பானிய யென்கள் என்ற நிலைமை இருந்தது. இப்போது, 100 ஜப்பானிய யென்களுக்கு, 50 இந்திய ரூபாய் என்ற அளவில் இருக்கின்றது. இது என்ன கணக்கு?

குன்றாளன்: நீங்கள் சொல்லுவது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் இங்கே வந்தபொழுது இருந்ததற்கும், இப்போது உள்ள நிலைமைக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. அப்போது, 100 யென்கள் 30 ரூபாய் என இருந் தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 70 ரூபாய் வரையிலும் சென்றது. இப் போது, 55 ரூபாய் என்கின்ற அளவில் உள்ளது.இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
அடைந்து இருப்பதையே இது காட்டுகிறது.உண்மை நிலவரத்தை மட்டும் தான் என்னால் கூற முடியும். இதுகுறித்து,பொருளாதார வல்லுநர்களின் கருத்தே
சிறப்பானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அருணகிரி: தமிழகத்துக்கும், ஜப்பானியர்களுக்குமான தொடர்புகள் குறித்துக் கூறுங்கள்.

குன்றாளன்:பொதுவாக, தென்னிந்தியர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும் நிறை ய ஒற்றுமைகள் உள்ளன. ஏனென்றால், இரு தரப்பினருக்குமே பொதுவான
உணவு அரிசி.

வடஇந்தியர்களின் முதன்மை உணவு கோதுமை. ஐரோப்பியர்களுக்கும் அப் படித்தான். எனவேதான், வட இந்தியர்கள் வணிகத்தில் நாட்டம் கொண்டு இருக்கின்றார்கள். தென்னிந்தியர்களும், ஜப்பானியர்களும் கடின உழைப்பாளி கள், முதலாளித்துவ மனப்பான்மை இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். அதனால்தான், பெரிய பெரிய நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், தொலை நோக்குப் பார்வை உள்ளவர்கள் வழிநடத்த, மற்றவர்கள் ஒன்றாக இணைந்து, பின்தொடர்ந்து செல்கின்றார்கள். குழுவாகச் செயல் படுவது, ஜப்பானியர் களின் இயல்பு.

ஆனால், இந்தியாவில் அப்படி இல்லை.மக்கள் இடையே ஒற்றுமை இல்லை.
மேற்கத்திய நாடுகளின் பண்பாட்டுத்தாக்கங்களால்,நான், எனது என்ற ஆதிக்க மனப்பான்மை மேலோங்கி வருகின்றது.

ஜப்பானியர்களைப் போன்ற இயல்பு கொண்டவர்களாகிய நாம்,நமது பண்பைப் புரிந்து கொள்ளாமல்,நேர் எதிரான பாதையை நோக்கிப்போய்க்கொண்டு இருக் கின்றோம். அடுத்தவர்களைப் பின்பற்ற முயற்சிப்பது தவறு.அப்படி வெற்றி பெறவும் முடியாது. நாம்,நமது இயல்பைப் புரிந்து கொண்டு செயல்பட வேண் டும்.

ஒவ்வொரு வருக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. எனக்கு விளையாட்டுத் துறையில் கூடுதல் ஆர்வம் என்றால்,அதைத்தான் தேர்ந்து எடுக்க வேண்டும்.
நன்றாகப் படிப்பவன் என்றால் தொடர்ந்து படிக்க வேண்டும்.அப்படித்தான் வெற்றி பெற முடியும்.

நமது நாடு இப்போதுதான் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் அடி எடுத்து
வைக்கின்றது. ஆனால், பலர் தங்களுக்குப் பிடிக்காத வேலைகளை எல்லாம் எடுத்துப் போட்டுக் கொண்டு செய்கின்றார்கள். அது மன அழுத்தத்தைத்தான் ஏற்படுத்தும்.நீங்கள் ஒரு புத்தகம் எழுதுவதற்காகவே ஜப்பானுக்கு வந்து இருக் கின்றீர்கள் என்கிறபோது, உங்களுக்குப் பிடித்தமான வேலையைச் செய்கின் றீர் கள்.எங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்புக்கிட்டவில்லையே என்று ஏக்கமாக
இருக்கின்றது.

ஜப்பானைப் பல வகையில் பாராட்டினாலும், இங்கேயும் சில குறைகள் உள் ளன. முதன்முதலில் இந்தியாவில் இருந்து வருகின்றபோது, அகன்ற தரமான சாலைகள்; மக்கள் அமைதியான வாழ்க்கை நடத்துகின்றார்கள்; நல்ல உடை அணிகிறார்கள் என்பதை எல்லாம் பார்த்து வியக்கின்றோம். அதை மட்டுமே
வைத்துக் கொண்டு ஒரு நாட்டை எடை போட்டு விட முடியாது.

எனக்குத் தெரிந்த அளவில், இங்கே மிகப்பெரிய குறை என்ன என்றால்,கழிப்பு அறை களைச் சுத்தப்படுத்தும் பணியில், நாடு முழுவதும் 90 விழுக்காடு பெண் கள்தான் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். ஆண்கள் கழிப்பு அறையையும்கூட, பெண்கள்தான் சுத்தப்படுத்து கின்றார்கள்.

அருணகிரி: ஆமாம். நானும் பார்த்தேன்.

குன்றாளன்: இந்த விசயத்தில், நம் நாடு பரவாயில்லையோ என்று நினைக்கத்
தோன்றுகிறது.

அருணகிரி: ஜப்பான் நாடு முழுவதுமே இதே நிலைமைதானா?

குன்றாளன்:அப்படிச் சொல்லிவிட முடியாது. இங்கே ஒரு நிறுவனத்தை எடுத் துக் கொண்டால், உயர் பதவிகளுக்குப் பெண்கள் வருவது அவ்வளவு எளிது அல்ல.

அருணகிரி: இந்தியாவிலும், ஆசிய நாடுகள் அனைத்திலுமே இதுதானே நிலைமை?

குன்றாளன்: இல்லை. இந்தியாவில் பெண்கள் நிலை பரவாயில்லை என்றே
நான் கருதுகிறேன். முன்னேறிய நாடுகள் என்று சொல்லக்கூடிய ஜப்பானி லோ, அமெரிக்காவிலோ, பெண்கள் தலைமைப் பொறுப்பை அவ்வளவு எளி தில் பெற்று விட முடியாது. இந்திரா காந்தி 16 ஆண்டுகள் பிரதமராகப்பொறுப்பு வகித்தார். ஜப்பானில் இதுவரையிலும் ஒரு பெண் பிரதமர் ஆனது இல்லை; வேறு எந்த முக்கியப்பொறுப்புக்கும் வந்தது இல்லை. அமெரிக்காவில் ஒரு பெண், குடியரசுத் தலைவராக ஆனது இல்லை. இவை எல்லாம் சில எடுத்துக் காட்டுகள்.

அருணகிரி உங்கள் கருத்துகளில் எனக்கும் உடன்பாடுதான்.

இவ்வாறு எங்க ளுடைய உரையாடல் தொடர்ந்து கொண்டு இருந்த போது, சற் றே போக்கு வரத்து நெருக்கடி நிலவியது. இரண்டு சக்கர வண்டியில் வந்து கொண்டு இருந்த ஒரு இளைஞன் தடம் மாறி, திடீரென எங்கள் காருக்கு முன் பாகப் பாய்ந்து வந் தார். குன்றாளன் வண்டியே உடனே நிறுத்தினார். சற்றுத் தாமதித்து இருந்தா லும் விபத்து நேர்ந்து இருக்கும். ஆனால், தவறு எங்களு டையது அல்ல.

உண்மை என்னவென்றால், சாலையில் நின்று கொண்டு இருந்த இரண்டு காவ லர்கள் அந்த இளைஞனைக் குறிவைத்து வளைத்து விட்டார்கள். பிறகுதான் புரிந்தது, அந்த இளைஞன் இதற்கு முன்பே ஒரு இடத்தில் சாலை விதிகளை மீறியதற்காக, அங்கே இருந்த காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் நிற்காமல் வந்து இருக்கின்றான். அந்தக் காவலர்கள், இங்கே இருந்த காவலர்களுக்கு, அந்த இளைஞனைப் பற்றித்தகவல் தெரிவித் து விட்டார்கள்.

இங்கே இவர்கள் சரியாக அவனை வளைத்து விட்டார்கள். அவர்களிடம் பிடிப டாமல் தப்பிப்பதற்காகத்தான் அந்த இளைஞர் எங்கள் காருக்கு முன்பாகப் பாய்ந்து, இடைவெளியில் தப்பிக்க முயன்று இருக்கிறார். ஆனால், மேற் கொண்டு செல்ல முடியவில்லை. போக்குவரத்து நெருக்கடியான இடத்தில்
இளைஞனை வளைத்துப் பிடித்து விட்டார்கள்.

எங்கள் உரையாடல் தொடர்ந்தது:

குன்றாளன்:அந்த இளைஞர் பிடிபட்டுவிட்டார்.நமது நாடு என்றால் என்னஆகி
இருக்கும்? நம் கண் முன்னாலேயே லத்தியால் நாலு சாத்துச் சாத்தி இருப்பார் கள். ஆனால், இங்கே அவரை அடிக்க மாட்டார்கள். பண்போடு நடத்துவார்கள். அவருடைய தவறு என்ன என்பதைச் சுட்டிக் காட்டுவார்கள்.

இங்கே போக்குவரத்துக் காவலர்கள்,சாதாரண கார்களில் அமர்ந்து நெடுஞ் சா லைகளில் நம்மோடு சேர்ந்தே பயணித்துக் கொண்டே இருப்பார்கள். யாரே னும் போக்குவரத்து விதிகளை மீறினால், உடனே அவர்களுடையகாருக்கு உள்ளே இருந்து சிவப்பு விளக்கைத் தூக்கி மேலே வைத்து,தாங்கள் காவலர் கள் என்பதை அப்போது தான் அடையாளப் படுத்துவார்கள்.

இங்கே சாதாரண வேலை என்றாலும், அதில் தவறு இருக்கக்கூடாது என்று கருதுவார்கள். அதனால், நல்ல தரமான பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால்,
ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, சலிப்புத் தட்டி விடும்.
அது ஜப்பானியர்கள் இடையே அதிகமாக உள்ளது.

நமது நாட்டில் எவ்வளவோ கஷ்டங்கள் இருந்தாலும், நன்றாகச் சிரித்துக் கொண்டு கதை பேசிக்கொண்டு இருப்பார்கள். ஆனால், இங்கே இவர்கள் நல்ல வசதியாக இருந்தாலும் வாய் விட்டுச் சிரிக்க மாட்டார்கள். இறுக்கமாக இருப் பார்கள். ஆனால், மிகவும் பக்குவப் பட்டவர்கள். அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். எதற்கும் போட்டி இருக்காது. தொடர்வண்டிகளில் ஏறும்போதும் வரிசையில் நிற்பார்கள். முண் டியடித்துக் கொண்டு முன்னே செல்ல மாட்டார்கள்.

அடுத்து நீங்கள் சீனாவுக்குச் செல்லு கின்றீர்கள். ஜப்பானியர்களையும், சீனர்
களையும் ஒப்பிடவே முடியாது.இருவருமே பார்ப்பதற்கு ஒன்றுபோல இருந் தாலும்கூட, பண்பாடு பழக்க வழக்கங்களில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதை நீங்கள் நேரடியாகவே பார்த்து உணர்ந்து கொள்ளலாம்.ஜப்பானியர்கள் பிறருக்கு மிகவும் மரியாதை கொடுப்பார்கள்.

இங்கே இரண்டு ஜப்பானியர்கள் சண்டை போடுவதை நீங்கள் பார்க்கவே முடி யாது. ரஷ்யாவைத் தோற்கடித்தவர்கள், சீனாவைக் கைப்பற்றி ஆண்டவர்கள், இரண்டாம் உலகப்போரில் 28 ஆசிய நாடுகளை வளைத்தவர்கள், இந்தியாவை நெருங்கியவர்கள் என்றாலும்கூட, இன்று, ஜப்பானியர்கள் தங்களுக்கு உள்ளே சண்டையிட்டுக் கொள்வது கிடையாது என்பது வியப்புக்கு உரியது. அந்த அளவுக்குப் பக்குவப்பட்டு விட்டார்கள்.

அருணகிரி: இரண்டாம் உலகப்போருக்கு முன்பு பின்பு, ஜப்பானியர்களை ஒப்பிடுங்கள்.

குன்றாளன்:அப்போது இவர்கள் சக்தியை அழிவு வேலைக்குப் பயன்படுத்தி னார்கள். இப்போது, ஆக்கப் பணிகளுக்காக உழைக்கின்றார்கள். அதனால், உற் பத்தி பெருகி, தரம் உயர்ந்து விளங்குகிறது. பொருளாதாரமும் வளமாக இருக் கின்றது. அழிவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு திருத்திக் கொண்ட தால் முன்னேறி விட்டார்கள்.

இவர்கள் கடின உழைப்பாளிகள். ஒபுச்சி என்று ஒரு பிரதமர்  அவர் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம்தான் தூங்குவாராம்.அதனால், வேலைப்பளு அதிகமாகி, கோமாவில் விழுந்து இறந்தார்.அப்போது அவருக்கு வயது 63 தான். அவரைப்பாராட்டுகின்ற வேளையில், இது அளவுக்கு அதிகமானதோ என்றும்
நினைக்கத் தோன்றுகிறது. உழைத்து உழைத்துப் பணத்தை ஒருவர் சேமித்து
வைக்க, யாரோ ஒருவர் எடுத்துக் கொண்டு போய்விடக் கூடாது அல்லவா?

நான் உடற்பயிற்சி மேற்கொள்கின்ற கூடத்தில், 67, 82 வயது முதியவர்கள் இரு வர் உடற்பயிற்சி செய்கிறார்கள். 82 வயதுக்காரர், 67 வயதுக்காரரிடம், ‘நீச்சல்
போட்டி வைப்போம்’ என அழைத்தார். 67 வயதுக்காரர் மறுத்துவிட்டார். அவ ரோடு போட்டி போட முடியாது என்று சொல்லுகின்ற இவரோடு போட்டி போட
முடியாது என்றே, 43 வயதுக்காரனான எனக்குத்தோன்றுகிறது.அந்த அளவுக்கு இவர்கள் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.

ஜப்பானைப் பற்றி ஒரே வார்த்தை:இவர்கள் மேனியாக்குகள்.இப்படிச் சொல்லு வது சற்றே கடினமாக இருக்கும்.சில நாள்களுக்கு முன்பு, 80 வயது ஜப்பானி யர் ஒருவர், எவரெஸ்ட் சிகரத்தில் மூன்றாவது முறையாக ஏறி இருக்கின் றார். கால, நேரம் பார்க்காமல் வேலை செய்வார்கள். நேரம் தவறாமை மிகவும் முக்கியம். இதில் அவர்களிடம் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல், நமது மரியாதையை இழந்து விடுவோம்.

அருணகிரி:: இவர்களுக்கு இந்த இயல்பு எப்படி வாய்த்தது?

குன்றாளன்:இவர்கள் மட்டும் அல்ல; மங்கோலிய இனத்தவர்களான சீனர்கள்,
கொரியர்கள் எல்லோருமே இப்படித்தான் இருக்கின்றார்கள். இரண்டாம் உல கப் போருக்கு முன்னர் ஜப்பானியர்கள் செய்ததை, இப்போது வட கொரி யாக்
காரர்கள் செய்து கொண்டு இருக் கின்றார்கள்.

அருணகிரி: தமிழ்-ஜப்பானியத் தொடர்புகள் குறித்துச் சொல்லுங்கள்...

குன்றாளன்: ஜப்பானிய மொழியின் வேர்களுள் ஒன்றாகத் தமிழ் இருக்கின் றது. எனவே, தமிழர்கள் எளிதாக ஜப்பானிய மொழியைக்கற்கலாம், பேசலாம். ஜப்பானிய மொழியில் நிறைய தமிழ்ச்சொற்கள் உள்ளன.இது தொடர்பாக பலர்
ஆராய்ச்சிகள் செய்து, இணையதளத்தில் ஆவணங்களை வெளியிட்டு உள்ள னர்.இந்த நாட்டில் வசிப்பதால், நாள்தோறும் ஜப்பானிய மொழியைப் பேசுவ தால், அதை நாங்கள் நேரடியாக உணர்கின்றோம்.

அருணகிரி தமிழ் என்பதை, ஜப்பானிய மொழியில்,‘தமிருகோ’ என்று சொல்லு
கிறார்கள். ழ் என்ற ஒலி கிடையாதா?

குன்றாளன்:ஆம்; ஜப்பானிய மொழியில், ‘எல்’ என்ற எழுத்து கிடையாது.அதை
‘ர,ரு’ என ஒலிப்பார்கள். இங்கே, ‘ர்’ என்ற’ ஒலியோடு சொற்கள் முடிவது இல் லை.‘கோ’ என்றால், மொழி என்று பொருள்.எனவே, தமிழ் மொழி என்பதை,
‘தமிருகோ’ என்றுதான் சொல்ல வேண்டும்.

எழுத்தாளர் என்பதற்கு, ‘ஹொங்கா’என்று சொல்லுவார்கள். எனவே, நீங்கள்
தமிழ் எழுத்தாளர் என்பதை, ‘தமிருகோ ஹொங்கா’ என்று சொல்ல வேண்டும்.
(தமிருகோ ஹொங்கா என்பதைப் பலமுறை சொல்லிப் பார்த்துக்கொண்டேன். அடுத்தடுத்த இடங்களில் சொல்ல வேண்டும் அல்லவா?)

அருணகிரி சென்னையில் ஜப்பானிய மொழியைக் கற்பிக்கும் மையங்கள் உள் ளனவா?

குன்றாளன்: பல இடங்கள் உள்ளன.ஏஓடிஎஸ்-அசோசியேசன் ஆஃப் ஓவர் சீஸ் டெக்னிகல் ஸ்காலர்சிப். இது, நுங்கம்பாக்கத்தில், நெல்சன் மாணிக்கம்
சாலையில் உள்ளது. மற்றொன்று, ‘ஜப்பான் ஃபவுண்டேசன்’ அதுவும் நுங்கம் பாக்கத்தில் உள்ளது.

பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல, இப்போது தமிழ்நாட்டுக் கணினிப் பொறியாளர்கள் உடனடியாக அயல்நாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற முடியவில்லை.இந்த வேளையில் ஜப்பானிய மொழியைக் கற்பதன் மூலம், நாம் ஜப்பானில் வேலை வாய்ப்புகளைப் பெற முடியும்.

அருணகிரி: இந்தக் கியோத்தோ நகரின் ஒரு வீதிக்கு,‘ஒரிகாவா மருட்டா
மச்சி’ என ஆங்கிலத்தில் நீளமாக எழுதி இருக்கின்றார்களே, இதன் பொருள் என்ன?

குன்றாளன்:‘மச்சி’என்றால், நகரம் என்று பொருள். ஆங்கிலத்தில் இவ்வளவு நீளமாக எழுதி இருப்பதை, ஜப்பானிய மொழியில், ‘நான்கே’ பட எழுத்துகளில் எழுதி இருப்பதைப் பாருங்கள்.

அருணகிரி அந்த நான்கு பட எழுத்து களுக்கு உள்ளே நிறைய குறுக்குக் கோடு கள் உள்ளனவே?

குன்றாளன்:ஆமாம்.அந்தக் கோடுகளுக்குள், எதை முதலில் போட வேண்டும் என ஒரு ஒழுங்கு இருக்கின்றது. ஒரே பட எழுத்துக்கு உள்ளே, 25 கோடுகள் போட வேண்டிய அளவுக்கு ஒரு பெரிய எழுத்தும் உள்ளது. அதேபோல பல எழுத்துகள் உள்ளன. அவற்றை நினைவு வைத்துக்கொள்வது கடினம். 92 ஆம் ஆண்டு,சென்னையில் நான் ஜப்பானிய மொழியைப் படித்தபோது நோட்டுப்
புத்தகத்தில் எழுதி எழுதிப் பழகினேன்.

இப்போது நான் ஜப்பான் மொழியில் கணினியில் தட்டச்சு செய்கிறேன்.கணினி யில் ஜப்பானிய எழுத்துகளை எழுதும்பொழுது, அதில் ஒரு கோடு போடுவேன். அதே வரிசையில் உள்ள பல எழுத்துகளை கணினி தரும். அவற்றுள் சரியான எழுத்து எது என்பது எனக்குத் தெரியும் . அதைத் தேர்ந்து எடுத்து எழுதி விடு வேன்.

இப்போது, ஜப்பானியர்களும் கூட எழுதுவது குறைவு. இன்றைய ஜப்பானியத் தலைமுறையினர், சீன மொழி வரி வடிவிலான பட எழுத்துகளை நினைவில் வைத்துக்கொண்டு எழுதுவதற்குச் சிரமப்படுகின்றார்கள். நமது நாட்டில் கூடப் பாருங்கள், இப்போது எத்தனை பேர் கடிதங்கள் எழுது கின்றார்கள்?

நாம் இப்போது வலம் வந்து கொண்டு இருக்கின்ற இந்தக் கியோத்தோ, ஒரு
பழமையான நகரம். சென்னை அண்ணாநகர் போல இங்கே உள்ள தெருக்களை
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, அந்தக்காலத்திலேயே திட்டமிட்டு ஒழுங்காக
அமைத்து இருக்கின்றார்கள்.

இங்கே, உயரமான கட்டடங்கள் கட்டுவது இல்லை. தொடர்வண்டி நிலையக் கட்டடம் கூட அழகாக இருக்கும். அதற்கு அருகில் மட்டும்தான் சில அடுக்கு மாடிக் கட்டடங்கள் உள்ளன. கியோத்தோ நகரின் வரை படத்தை, கணினியில், கூகுள் நில வரை படத்தில், நீங்கள் பார்க்கலாம்.

அருணகிரி: இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மதுரை நகரம்,
அப்படிக் கட்டப்பட்டு உள்ளது என்பதை, ஐரோப்பியர்கள் அப்போதே கண்டு பிடித்து உலகுக்கு அறிவித்து இருக்கின்றார்கள். சரி, ‘கியோத்தோ’ என்றால் என்ன பொருள்?

குன்றாளன்:இவர்கள் எல்லாப் பெயர்களையும் பொருளோடு வைப்பது இல் லை. அது குறித்து நான் மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.

அருணகிரி: தமிழ் இளைஞர்கள் ஜப்பானியப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றார்களா?

குன்றாளன்:ஆம்;பல நண்பர்கள் ஜப்பானியப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.நிறுவனங்களில் பணி ஆற்றுவதற்காக வந்த பல இளைஞர்கள், பின்னாளில் அந்த வேலைகளை விட்டுவிட்டு,இப்போது இங்கே வீடு, மனைகளை வாங்கி விற்கிறார்கள். அந்தத் தொழிலில் பெரும் பணம் ஈட்டலாம்.

அருணகிரி:ஜப்பானியக் குடி உரிமை பெறுவது எப்படி?

குன்றாளன்:ஜப்பான் குன்றாளன்: அயல் நாட்டவர்களுக்குக் குடி உரிமையை எளிதாக வழங்குவது இல்லை. இப்போது அந்த நிலைமை கொஞ்சம் கொஞ்ச மாக மாறிக்கொண்டு வருகின்றது. காரணம், ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து விட்டது. ஜப்பானியர்களின் வாழ்நாள் கூடிக்கொண்டே போகிறது.

எனவே, முதியோர்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது. அவர்களுக்கு பென் சன் கொடுக்க வேண்டும் என்றால், உழைப்பதற்கு இளைஞர்கள் தேவை. அத னால், இப்போது அயல்நாட்டு இளைஞர்களை வரவேற்கின்றார்கள். மேலும், மென்பொருள்களுக்கான தேவையும் ஜப்பானில் அதிகரித்து உள்ளது. ஆயி னும், அமெரிக்கா வழங்குவது போல, ஜப்பான் நிரந்தர வசிப்பிடச்சான்றிதழோ, குடி உரிமையோ எளிதாக வழங்குவது இல்லை.இங்கே பத்து ஆண்டுகள் வசித் தால், Permanent Resident நிரந்தர வசிப்பாளர் என்ற நிரந்தர வசிப்பாளர் ஆவணத் தைப் பெறலாம். ஆராய்ச்சிப் பணிகளுக்காக வருபவர்களுக்கு, ஐந்து ஆண்டு களிலேயே அது கிடைத்து விடும்.

அருணகிரி: உங்கள் குழந்தைகள்....

குன்றாளன்: மகன் தமிழ்நாட்டில் பிறந்தான். மகள், இங்கேதான் பிறந்தாள்.வீட் டில் தமிழில்தான் பேசுகிறார்கள்.ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக அமெரிக் கப் பள்ளியில் சேர்த்து இருக்கின்றோம். டோக்யோவில் மட்டும் தான் இந்தி யப் பள்ளிகள் இருக்கின்றன.

அருணகிரி:: உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன? ஜப்பானில் குடி உரிமை
பெற விழைகின்றீர்களா?

குன்றாளன்:ஜப்பானிய வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.
வாழச் சிறந்த நாடு ஜப்பான். எனக்கு அமெரிக்காவில் அதிக சம்பளத்துடன்
வேலை வாய்ப்பு கிடைத்தும் நான் அங்கே போகவில்லை. அதற்காக, ஜப்பானி யக் குடி உரிமை பெற வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் இங்கே வசிக்க நிரந்தரவசிப்பாளர் என்ற தகுதி இருக்கின்றது.இப்போது எனக்கு வயது 43.இன்னும் சிலஆண்டுகள் பணிபுரிந்து விட்டு ஊருக்குத் திரும்பி வந்து விடுவேன்.

நன்றிகள் 

கட்டுரையாளர் :- 
அருணகிரி

வெளியீடு :- சங்கொலி

2 comments:

  1. Dear admin can u please post Mr.Kundralan's social profile links ??

    ReplyDelete
    Replies
    1. திரு.குன்றாளன் அவர்களின் தொடர்பு விவரம் எங்களிடம் இல்லை ... மேலும் உங்களுக்கு குன்றாளன் தொடர்பு விவரம் வேண்டுமெனில் ... திரு அருணகிரி அவர்களை இந்த writerarunagiri@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம் ... நன்றி

      Delete