Wednesday, June 12, 2013

மூடப்பட்ட பள்ளிகளில் பயின்ற குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்-மதிமுக இளைஞரணி கோரிக்கை

மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடித விவரம்:

கோவையில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட பள்ளிகளை மூட மாவட்டக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதை ஏப்ரல் மாதத்தில் எடுத்திருந்தால் அனைத்து மாணவர்களும் வேறு பள்ளிகளில் சேர்ந்திருப்பார்கள்.

ஆனால் பள்ளி திறக்கும் நாளில் சீருடையோடு மகிழ்ச்சியோடு சென்ற குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது பிஞ்சு உள்ளங்களின் மனதில் ஏற்பட்ட மன உளைச்சலைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. மூடப்பட்ட பள்ளிகள் ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் தான்; வேறு பள்ளிகளில் சேர்க்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
வேறு பள்ளிகளில் கேட்கும் கட்டணத்தைக் கட்டவும் பெற்றோரால் முடியாது. ஏற்கெனவே படித்த பள்ளியில் பணத்தைத் திரும்ப வாங்குவது நடைமுறை சாத்தியமில்லாதது.

அங்கீகாரம் பெறாமல் மூடப்பட்ட பள்ளிகள் இந்த ஆண்டு துவங்கப்பட்டவை அல்ல; அவை பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. கல்வித் துறை அதிகாரிகள் ஏன் முன்னதாகவே இப்பள்ளிகளை மூடவில்லை? மேற்படி பள்ளிகளை மூடுவதைக் கடந்த ஏப்ரல் மாதமே செய்திருந்தால் இந்த அளவுக்குப் பிரச்னை இல்லை.

பாதிக்கப்படும் அனைத்து மாணவர்களையும் பெற்றோர் விரும்பும் அருகமைப் பள்ளிகளில் ஓரிரு நாள்களில் கல்வி அதிகாரிகள் சேர்க்க வேண்டும். புதிய பள்ளிகளில் சேர்வதற்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும். புதிய பள்ளிகளில் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
மூடப்பட்ட பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேர் வேறு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை மாவட்டக் கல்வித் துறை அறிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment