Thursday, June 20, 2013

இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறி ?

ஈழத்தமிழருக்கு நீங்கள் இழைக்கின்ற துரோகம் தொடருமானால், வருங்கால இளைய தலைமுறை இப்படியே இருக்காது.-வைகோ 

ஈழத்தமிழருக்கு இந்திய அரசின் துரோகம் தொடருமானால்
இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடும்!

தில்லி ஆர்ப்பாட்டத்தில் வைகோ எச்சரிக்கை!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில்12.8.2011 அன்று பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் தில்லி நாடாளுமன்ற சாலை யில், ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்தும், இந்திய அரசு, அனைத்து நாடு கள் மன்றத்தில் சிங்கள அரசுக்குத்தரும் ஆதரவுப் போக்கினை நிறுத்திக் கொள் ளவும் சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றத்தை விசாரணைக்கு உட்படுத்த குரல் கொடுத்திடக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத் தில் பல்லாயிரக்கணக்கான தோழர்கள் பங்கேற்றனர்.பாரதீய ஜனதா கட்சி யின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், இந்திய தேசிய லோக்தள கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரணவீர் சிங் பிரஜாபதி ஆகியோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்து உரையாற் றினர். நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரை வருமாறு:-
என் அருமைத் தோழர்களே!

எவ்வளவோ பொருளாதாரச் சிரமங்களுக்கு இடையில்,கடனை வாங்கி, தொடர்வண்டிகளில் முன்பதிவு கிடைக்காமல் இரண்டு நாள்கள் பயணித்து, 2200 கிலோ மீட்டர்கள் தொலைவைக் கடந்து வந்து, இங்கே உங்களது உணர்வு களை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள்.

இரண்டு இரவுகள் பயணித்து, இன்று காலையில் வந்த நூற்றுக்கணக்கான தோழர்கள், தில்லியைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கிஞ்சிற்றும்
இல்லாமல், இன்று மாலையிலேயே மீண்டும் இரண்டு இரவுகள் பயணித்து, சென்னைக்குத் திரும்புகின்றார்கள் என்பதை அறியும்போது, என் மனமெல் லாம் நெகிழ்ந்து போயிருக்கின்றேன்.



செங்கோட்டையைப் பார்க்க வேண்டும்; ராஜகட்டம் பார்க்க வேண்டும்; குதுப் மினாரைப் பார்க்க வேண்டும்; நாடாளுமன்றத்தைப் பார்க்க வேண்டும்; குடிய ரசுத் தலைவர் மாளிகையைப் பார்க்க வேண்டும்; காலத்தின் கண்ணீர்த் துளி என்று மகாகவி தாகூர் வருணித்தாரே, ஷாஜகான் தன் காதலிக்காகக் கட்டிய அந்த தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும் என இப்படியெல்லாம் நீங்கள் நினைக் கவில்லையே?

எந்தக் கட்சியில் இப்படிப்பட்ட தோழர்களைப் பார்க்க முடியும்? தமிழர்களைக் காக்க நம் கடமையைச் செய்து இருக்கின்றோம். மற்றவர்களை நான் குறை
சொல்லவில்லை. என் தோழர்களே, நம் சக்திக்கு மீறித்தான், கடந்த 18 ஆண்டு களாக நீங்கள் போராடி வருகின்றீர்கள். வயது முதிர்ந்த தாய்மார்கள் வந்து
இருக்கின்றார்கள். அவர்களைப் பார்த்து மிகவும் சங்கடப்பட்டேன். ஏன் இப் படிக் கஷ்டப்பட்டு வந்தீர்கள்? என்று கேட்டேன். அவர்கள் உடம்புக்கு ஏதாவது முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது? என்ற கவலைதான்.

ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் போராட்டம் என்று அறிவித்தபின்னர், நாங்கள் எப்படி வராமல் இருப்போம்? என்று கேட்டார்கள். எவ்வளவு செலவு? எத்தனை
அலைச்சல், மனக்கஷ்டம்? வழியில் நல்ல உணவு கிடைக்காது, குடிக்கத் தண் ணீர் கிடைக்காது. ஆயினும், அத்தனையும் தாங்கிக் கொண்டு வந்து இருக்கின் றீர்கள்.

வசதி குறைவாயுள்ள தோழர்கள் விமானங்களிலும் வந்து இருக்கின்றார்கள். எந்த விமானத்திலும், நமது ஆள்களாகவே தெரிகின்றார்கள் என்றுகூடச்சொன் னார்கள். சிவப்பு கருப்பு சிவப்பு வேட்டிகள்தான்; ம.தி.மு.க. பயணிகளாகத்தான் இருக்கின்றார்கள்;மதிமுகவில் விமானப் பயண அணி என்று தொடங்கி விட் டார்களா? என்றுகூடக் கேட்கிற அளவுக்கு, நம் தோழர்கள் வந்து இருக்கின்றார் கள். மனதுக்குக் கஷ்டமாக இருந்தாலும், அதற்குள்ளும் ஒரு சிறிய மகிழ்ச்சி; அவ்வளவுதான்.

ஈழத்தமிழரின் உரிமைக்காக, நாதியற்றுப்போய்விடவில்லை ஈழத் தமிழ் இனம் என்பதைக் காட்டுவதற்காக நீங்கள் இந்த அறப்போராட்டத்துக்கு வந்து இருக் கின்றீர்கள்.
இயற்கை நம் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்கிக் கொண்டு இருக்கின்றது. அதிகாலையில் தொடங்கி ஒன்பது மணிவரையிலும் பெய்த பெருமழை,சற்றே

இடைவெளி விட்டு இருக்கின்றது. இப்போது, வெயிலும் இல்லை, மழையும் இல்லை. இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் செள டாலா அவர்கள், தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரண்வீர்சிங் பிரஜா பதி அவர்களை இங்கே அனுப்பி வைத்து, நமது போராட்டத்துக்கு ஆதரவு தெரி வித்துப் பெருமைப்படுத்தி இருக்கின்றார்கள்.

பாரதீய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவர், இங்கே உரை ஆற்றிய முன் னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் நமது யஷ்வந்த் சின்கா அவர்களும், லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவர், ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி யாகத் திகழும் அருமைச் சகோதரர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்களும், அற்பு தமான உரைகளை ஆற்றினார்கள்; மிகத்தெளிவாகச் சொன்னார்கள்.

ஏற்கெனவே நாம் தில்லியில் நடத்திய உண்ணாநிலை அறப்போராட்டத்தை நான் நினைவூட்டுகிறேன்.படுகொலைக்கு உள்ளாகின்ற தமிழ் மக்களைக் காப் பாற்ற வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தோம். பட்டினிப் போர் நடத்தி னோம்; ஏ இந்திய அரசே, துரோகம் செய்யாதே, ஆயுதங்கள் கொடுக்காதே
என்றோம்.

பணம் கொடுத்தாய், ஆயுதங்கள் கொடுத்தாய்,இந்தியாவின் முப்படைத் தளபதி களையும் அனுப்பி,போர்த்திட்டங்களை வகுத்துக் கொடுத்தாய், இலங்கைக்
கடற்படையோடு, இந்தியக் கடற்படையின் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள ஒப்பந்தம் போட்டாய், விடுதலைப்புலிகளுக்கு வந்த கப்பல்களை, பன்னாட்டுக்
கடல்பரப்பில், இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடிப்பதற்கு, இந்தியக் கடற் படையை அனுப்பி உதவி செய்தாய், விண்ணிலே இருந்து விமானங்கள் சீறிப்
பாய்ந்து விமானங்கள் குண்டு வீசியபோது, எங்கள் குழந்தைகள், எங்கள் சகோ தரிகள், எங்கள் தாய்மார்கள், கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதையெல் லாம் எடுத்துச் சொல்லி எச்சரித்தோம்.

எட்டுத் தமிழ் இளைஞர்களின் கண்களைக் கட்டி,ஆடைகளை அவிழ்த்து அம் மணமாக்கி, கைகளைப் பின்புறமாகக் கட்டி இழுத்துக் கொண்டு வந்து, வெட்ட வெளியில் உட்கார வைத்து, எட்டி மிதித்து, பின்னந்தலையில் குறிபார்த்துச் சுட்டுக் கொல்லுகின்றான். இந்தக் கொடுமைகளைக் கேட்க நாதி இல்லையா? என்று கேட்டோம்.

இந்திய அரசே, ஈழத்தமிழர் இனக் கொலைக்கு நீ துணைபோனாய்; துரோகம் செய்து விட்டாய்; மன்னிக்க மாட்டோம் என்றுசொன்னோம்; உன்னையும் கூண்டில் நிறுத்துவோம் என்று சொன்னோம்.

ஈவு இரக்கம் அற்ற இந்திய அரசு, ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து, தமிழ் மக் களைக் கொன்று குவிக்கக் காரணம் ஆயிற்று. இரத்தம் ஆறாக ஓடியது. அந்தக் காட்சிகளை, இங்கிலாந்து நாட்டின் சேனல் 4 தொலைக்காட்சி உலகம் முழு மையும் ஒளிபரப்பி விட்டது. இந்தியாவில், ஹெட்லைன்ஸ் டுடே தொலைக் காட்சி எடுத்துக் காட்டி இருக்கின்றது. அந்தத் தொலைக்காட்சியின் செய்தி யாளர் தங்கை பிரியம்வதா கேட்கின்றபோது,ஈழத்துத்தாய்மார்கள்,இளம்பெண் கள் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டதைத் தயங்கித் தயங்கிச் சொல்லுகின்றார் கள். அவர்கள் கண்களில் பயம்.

அது மட்டும் அல்ல; சொல்ல நா கூசுகிறது. உள் ஆடைகள், சானிடரி நேப்கின் களைத் தருகிறோம் என்று அருகிலே வரவழைத்து, அவர்களுடைய அங்கங் களை வருணித்து ஆபாசமாகப் பேசுவார்களாம்.

வெட்டவெளியில் உள்ள முகாம்களில் ஒரு தட்டியை வைத்து மறைத்துக் கொண்டு எங்கள் பெண்கள் குளிப்பதை, சிங்களச் சிப்பாய்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்களாம். எவ்வளவு கொடுமைகள்?

எங்கள் பிள்ளைகள் செத்துப் போயின;உறவினர்கள் எல்லாம் சாப்பாடு இல்லா மல், காயங்களுக்கு மருந்துகள் இல்லாமல் செத்தார்கள். இப்போது, எங்களுக் கும் உணவு இல்லை; மருந்துகள் இல்லை. ஒரு வேளை உணவு கிடைக்குமா என்று பரிதவித்துக் கொண்டு இருக்கின்றோம் என்று அந்தச் சகோதரிகள் கேட் டதை, நேற்று முன்தினம், ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி ஒளிபரப்பி இருக்கின்றது.

ஏ இந்திய அரசே! உலகம் முழுவதும் விழித்துக்கொண்டு விட்டதே? இன்னுமா உன் கண்கள் திறக்கவில்லை? அதைத்தான், இந்திய நாட்டு மக்களிடம் தெரி விப்பதற்காக, இங்கே வந்து இருக்கின்றோம்.தமிழ்நாட்டில் ஏழு கோடித் தமிழர் கள் இருக்கின்றோம்.எங்களுடைய தொப்புள் கொடி உறவுகள் இலட்சக்கணக் கில் கொல்லப்பட்டு விட்டார்கள்.முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழர்கள் தீக் குளித்துச் செத்தார்கள். அதைச் சொல்ல வந்து இருக்கின்றோம்.

குஜராத்திலே நில நடுக்கமா? பேரழிவா? நாங்கள் உதவிக் கரம் நீட்டினோம். தமிழகத்தில் இருந்து,உதவிப் பொருள்களை அனுப்பினோம்.ஓடோடிச் சென்று
களத்திலே பணி ஆற்றினார்கள் பல தொண்டு நிறுவனங்கள். பீகாரில் வெள்ள மா? நாங்கள் உதவி இருக்கின்றோம். ஆனால், எங்கள் மக்கள் இவ்வளவு பேர்
கொல்லப்பட்டும், ஏன் ஹைதராபாத்திலே கூக்குரல் இல்லை? ஆதரவுக் குரல் இல்லை? மும்பையில் இல்லை? கொல்கொத்தாவில் இல்லை? குஜராத்தில்
இல்லை? அப்படியானால், நாங்கள் இந்தியக் குடிமக்கள் இல்லையா?

இது சிந்திக்க வேண்டிய நேரம். ஆறுதலாகப் பேசினார் யஷ்வந்த் சின்கா; ஆறு தலாகப் பேசினார் ராம் விலாஸ் பஸ்வான்.‘பேரணி நடத்துங்கள்;நாங்கள் வரு கிறோம்; இலங்கை மீது படையெடுத்துச் செல்வோம்; ஆயுதங்கள் இல்லாமல், அறவழியில், படகுகளில் செல்வோம்’ என்று அறைகூவல் விடுத்தார் யஷ் வந்த் சின்கா.

இங்கே செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்களின் ஒளிப்பதிவாளர்கள் வந்து இருக்கின்றார்கள். நாங்கள் நாதி அற்றுப் போய் விடவில்லை. தலைநகர் தில்லியில், அமைதிவழியில் எங்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றோம்.உயிர் களைக் கொடுப்பதற்கும் ஆயத்தமாக இருக்கின்ற என் தோழர்கள், சகோதரி கள் இங்கே வந்து இருக்கின்றார்கள்.

ஈழத்தமிழர்களைக் காக்கத் தவறிய, அவர்களைப் படுகொலை செய்யத் துணை போன இந்திய அரசைக் கண்டிக்க வந்து இருக்கின்றோம்.

என்னுடைய ஆருயிர்ச் சகோதரர் கணேசமூர்த்தி,நாடாளுமன்றக் கூட்டத் தொ டர் தொடங்கிய நாளில்,அவைக்குச் சென்றார். அங்கே விருந்தினர் மாடத்தில்,
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப் பினர்கள் உட்கார்ந்து இருந்தார்கள்.அதை அறிந்த உடன், நாடாளுமன்ற மக்கள் அவைத் தலைவர் தன் இருக்கைக்கு வந்து அமர்வதற்கு உள்ளாகவே, என்னு டைய அருமைச் சகோதரர் கணேசமூர்த்தி, ஆவேசமாகக் கொதித்து எழுந்தார்.
கண்டனக் குரல் எழுப்பினார்.

எனக்கு என்ன மகிழ்ச்சி தெரியுமா? இந்த ஒரு வேங்கை உள்ளே சென்று உறு மிய உறுமல், அவையை நடுங்க வைத்தது. நமது கடமையைச் செய்கிறோம்.
நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் விவாதத்துக்கு வரலாம். நாங்கள் அனை வரையும் கேட்டுக் கொள்கின்றோம். இந்திய அரசு தன் துரோகத்தை நிறுத்த
வேண்டும்; இலங்கை அரசோடு செய்து கொண்ட ஒப்பந்தங்களை இரத்துச் செய்ய வேண்டும்; தமிழர் பகுதிகளில், சிங்கள இராணுவத்தைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றான். அவர்களை வெளியேற்ற வேண்டும்.

என்றாவது ஒருநாள், தமிழ் ஈழம் அமைப்பதற்கான வாக்குப்பதிவு நடக்கத்தான் போகின்றது. அதற்காக,பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில், முதன்முதலாகக் குரல்
கொடுத்தது மறுமலர்ச்சி திமு.க.அந்த வாக்கெடுப்பில், உலகின் பல நாடுகளில் வாழுகின்ற ஈழத்தமிழர்கள், ஆங்காங்கே வாக்கு அளிப்பதற்கான வழிவகைகள்
வகுக்கப்பட வேண்டும் என்று முதல் குரல் எழுப்பியது மறுமலர்ச்சி தி.மு.க. அதுபோல, ஈழத்தமிழர் வரலாற்றில், தனி ஈழம்தான் தீர்வு என தமிழ்நாட்டில் முதன்முதலாக, 1995 ஆம் ஆண்டு, திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட் டில் நாம் தீர்மானம் நிறைவேற்றினோம்.

அதுபோல, இன்றைக்கும் தனி ஈழம்தான் தீர்வு; அதற்காக வாக்குப்பதிவு நடத்த வேண்டும்; ஐ.நா மற்றும் பன்னாட்டுப் பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என்று திட்டவட்டமாகச் சொல்லி இருக்கின்றோம்.

இனப்படுகொலைக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்த வேண்டும்.வார்த்தை யைக் கவனியுங்கள், ராஜ பக்சேயையும், அவனது கூட்டாளிகளையும், இனப்
படுகொலைக்காகக் கூண்டில் நிறுத்த வேண்டும்; ஐ.நா.மன்றத்தில், இலங் கைக்கு ஆதரவாக இந்தியா இனியும் குரல் எழுப்பக் கூடாது. உன் துரோகத்தை நிறுத்திக் கொள்.

என்னுடைய அன்புக்குரிய தோழர்களே,

ஆகஸ்ட் இரண்டாம் நாள், நானும், நம்முடைய அருமைச்சகோதரர் கணேச மூர்த்தி அவர்களும், இந்திய நாடாளுமன்றக் கட்டடத்துக்குள், இந்தியப் பிரத மர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைச் சந்தித்து, முல்லைப் பெரியாறு பிரச் சினை, ஈழத்தமிழர் பிரச்சினை மற்றும், பேரறிவாளனுக்குத் தூக்குத் தண்டனை யை இரத்துச் செய்ய வேண்டும் என மூன்று கோரிக்கைகள் விடுத்தோம். மனி தாபிமானத்தின் பெயரால், இரக்கத்தின் பெயரால், மனிதநேயத்தின் பெயரால், பேரறிவாளனை மரணக் கொட்டடியில் இருந்து விடுவியுங்கள் என்று கேட்டோம்.

அந்த இளந்தளிர், 19 வயதில் குற்றம் அற்றவராகச் சிறை சென்றார். திருபெரும் புதூர் சம்பவத்துக்கும், அவனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.இரண்டு பேட் டரி செல்கள் வாங்கிக் கொடுத்தான் என்பதுதான், அவன் மீதான குற்றச்சாட்டு. அதற்காக, இருபது ஆண்டுகள் அவனது இளமைக் காலம், சிறை எனும் நரகத் தில் அழிந்து விட்டது என்று சொன்னோம். உங்கள் கோரிக்கையை நான் உள் துறை அமைச்சருக்கு அனுப்புகிறேன் என்றார். அன்று மாலையே, நானும், கணேசமூர்த்தியும், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தைச் சந்தித்தோம். பேரறி வாளன் மட்டும் அல்ல, சாந்தன், முருகனும் குற்றம் அற்றவர்கள்தான். இந்த வழக்கு, தடா சட்டப்படி, காவல் துறையினரால் துன்புறுத்தி வாங்கப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில் சோடிக்கப்பட்ட வழக்கு, வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதைச் சொன்னோம்.

உயிர் காப்பு அமைப்பின் சார்பில், அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் முயற்சி எடுத்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, வழக்கறிஞர் நடராசன் வாதாடி, 19 பேருக்கு விடுதலை கிடைத்தது.கீழ் நீதிமன்றம், 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது.ஆனால், உச்சநீதிமன்றம், 19 பேர்களை விடுதலையே
செய்து விட்டது. நான்கு பேர்களுக்குத் தூக்கு, மூன்று பேருக்கு ஆயுள் என்று தீர்ப்பு அளித்தது. குற்றம் சாட்டப்பட்டு இருந்த பலர் இறந்து விட்டார்கள். உச்ச நீதிமன்றத்தில் தூக்கு உறுதி செய்யப்பட்ட நளினியின் மரண தண்டனை, பின் னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு விட்டது.அப்படியானால், அதே அளவுகோல்தானே மற்றவர்களுக்கும் இருக்க வேண்டும்?

உலகில்,இன்றைக்கு 135 நாடுகளில் மரண தண்டனை கிடையாது.அன்றைக்கு எங்களிடம் எந்த பதிலும் சொல்லவில்லை, உள்துறை அமைச்சர் சிதம்பரம். எங்கள் கோரிக்கை மனுவை வாங்கினார், படித்தார், சென்று வாருங்கள் என் றார். நான் எந்த விமர்சனமும் செய்யவில்லை. ஆனால், மரண தண்டனையை
உறுதிப்படுத்தி உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட் டதாகவும், அதைக் குடியரசுத்தலைவர் ஏற்றுக் கொண்டதாகவும் நேற்றைக் குச் செய்திகள் வந்து இருக்கின்றன. அதைக்கேட்டதும் எனக்கு உயிரே போய் விட்டது.

ஒரு சிறுமியைக் கற்பழித்துக் கொன்றதற்காக,கொல்கத்தாவில், 2004 ஆம் ஆண்டு ஒருவர் தூக்கில் போடப்பட்டதற்குப் பின்னர், இந்தியாவில் வேறு எவ ரும் தூக்கில் போடப்படவில்லை. இப்பொழுது, மூன்று இளந்தமிழரின் உயி ரைப் பறிக்க முடிவு செய்து விட்டார்கள். அந்த முடிவை மாற்ற முடியும். மத் திய அரசால், இப்போது நினைத்தாலும் முடியும். அவர்களுக்கு அதிகாரம் இருக்கின்றது.

நாங்கள் கெஞ்சுகிறோம். செய்யாதீர்கள்; இந்தத் தவறைச் செய்யாதீர்கள். மூன்று அற்புதமான உயிர்களைக் காப்பாற்றுங்கள்.

ஈழத்தமிழர்களுக்குத் தொடர்ந்து துரோகம் செய்வோம் என்றால், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை என்ற நிலைமை நீடிக்குமானால், அபூர்வமாக யஷ்வந்த் சின்கா, பஸ்வானைப் போல ஒன்றி ரண்டு குரல்களே ஒலிக்கும் என்றால், இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல் லப்பட்டாலும், 500 க்கும் மேற்பட்ட தாய்த் தமிழகத்து மீனவர்கள் சுட்டுக் கொல் லப்பட்டார்கள் என்றாலும், இந்தியாவில் கேள்வி கேட்பார் கிடையாது என் றால் , சாம்ராஜ்யங்கள் சரிந்து போகும்.

வரலாற்றில் எத்தனை சாம்ராஜ்யங்கள் இங்கே இருந்தன? இன்றைக்கு எங்கே அந்த சாம்ராஜ்யங்கள்? இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டிஷ்காரன் இங் கே வருவதற்கு முன்பு, எங்கே இருந்தது இந்தியா? தில்லியில் நின்று கொண்டு தான் கேட்கிறேன். இங்கே உள்ள காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கின்றேன். இங்கே அதிகாரிகள் எங்களை கண்ணியமாக நடத்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வாங்குவதற்காக, நானும், கணேசமூர்த்தி, மல்லை சத்யா, தேவதாஸ், தில்லி மாநில ம.தி.மு.க. அமைப்பாளர் பழனிக் குமார், பாண்டியன் ஆகியோர் சென்றபோது, எங்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுத்து வரவேற்றார்கள். நான் சொன்னேன்: எங்கள் போராட்டத்தில் கண் ணியம் இருக்கும், ஒழுங்கு இருக்கும்; உங்களுக்கு வேலை இருக்காது என் றேன்.நாடாளுமன்றச் சாலையிலேயே நாம் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனு மதி கொடுத்து விட்டார்கள். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கி றேன்.உங்களிடம் தெரிவித்தபடி, இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குமுறையோடு நடத்திக் காட்டி இருக்கின்றோம்.இதுதான் மறுமலர்ச்சி தி.மு.க.

தமிழகத்தில் 17 பேர் தீக்குளித்துச் செத்தபின்னும்,இந்தியாவில் எந்த மாநில மும் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை என்றால், இந்திய அரசு செய்கின்ற
துரோகத்தைத் தொடருமானால், காலம் இப்படியே இருக்காது.

கோத்தபய இராஜபக்சே என்ன திமிரில் பேசுகிறான்? அவனை, இந்த நிமிடம் வரையிலும் இந்திய அரசு கண்டிக்கவில்லை. வினையை விதைக்கின்றீர்கள்;
வினையை அறுவடை செய்து விடாதீர்கள். என்ன நடக்கும். இந்திய ஒருமைப் பாடு என்பது இருக்காது என்று எச்சரிக்கிறேன். நான் ஒன்றும் ஆயிரம் ஆண்டு கள் இருக்கப் போவது இல்லை. ஆனால், என் குரல் இந்தக் காற்றில் கலந்து விட்டது. அது, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ஒலித்துக் கொண் டே இருக்கும்.

ஈழத்தமிழருக்கு நீங்கள் இழைக்கின்ற துரோகம் தொடருமானால், வருங்கால இளைய தலைமுறை இப்படியே இருக்காது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த
வீரேந்திர பாட்டீல் என்ன சொன்னாரோ, அதையே நானும் சொல்லுகிறேன். பவனங்கள் தூதரகங்கள் ஆகி விடும். ஆம்; தில்லியில் உள்ள மாநில அரசு களின் இல்லங்கள், தூதரகங்கள் ஆகி விடும்.

தமிழ்நாடு இல்லம், தமிழ்நாடு தூதரகம் ஆகி விடும்.இன்றைக்கு அதை நாங் கள் விரும்பவில்லை என்றாலும், வருங்காலத் தலைமுறை அப்படிச் சிந்திப் பதற்கு நீங்கள் இடம் கொடுத்து விடாதீர்கள். காலம் அப்படிப்பட்ட நிலைமை களைக் கொண்டு வந்து திணித்து விடும்.இந்திய ஒருமைப்பாடு நிலைக்க வேண்டும் என்றால்,இந்திய அரசு தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் உள்ள முதன்மையான அரசியல் கட்சிகள்,இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும்.

யஷ்வந்த் சின்கா போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் மட்டும்தான் இப்படிச் சிந்திக்கின்றார்கள். உங்கள் போக்கு, அணுகுமுறை ஆகியவற்றில் நீதி இருக் கட்டும்;மனிதாபிமானம் இருக்கட்டும். மனித உரிமைகளைக்காக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கட்டும். ஈழத்தமிழர்களுக்காக, எங்கள் தொப்புள் கொடி
உறவுகளுக்காக, இன்றைக்கும் மரண வேதனையில் துடித்துக் கொண்டு இருக் கின்ற அந்த மக்களைக் காப்பாற்றுவதற்காக, உடல் பொருள் ஆவி அனைத் தை யும் தத்தம் செய்ய ஆயத்தமாக இருக்கின்ற கூட்டம்தான், அண்ணாவின் தம்பிகளான, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டம்.

எத்தனையோ சிரமங்களுக்கு இடையில் இங்கே வந்து இருக்கின்றீர்கள். இந் தத் தில்லி அறப்போருக்காக நீங்கள் செலவழித்த தொகையில், உங்கள் பிள் ளைகளுக்கு, குடும்பத்துக்கு என்று எதையாவது செய்து இருக்கலாம்.அடுத்து, மதுரையிலே உண்ணாநிலை அறப்போர்; நெல்லையிலே மாநாடு என்று மீண்டும் மீண்டும் உங்கள் தலையில் சுமைகளை ஏற்றுகின்றோம். அத்தனை யும் தாங்குகின்ற சுமைதாங்கிகளாக நீங்கள் இருக்கின்றீர்கள்.

எதற்காக? எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்த்து அல்ல.அண்ணாவின் கொள் கைகளைக் காக்க, உலகத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க உங்களை
ஒப்படைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள். காலம் மாறும்;நிலைமைகள் மாறும். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் குரல், அனைவரும் அங்கீகரிக்கின்ற அரசியல் சக்தியாக மாறும். உங்கள் அனைவருக்கும் என் நன்றி!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

No comments:

Post a Comment