Wednesday, June 19, 2013

தாமிரபரணியைக் காப்போம்!

பாண்டி நாடே பழம் பதி, ‘ஆறில்லா ஊருக்கு அழகில்லை’ என்பதை மெய்ப்பிக் கும் வகையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளங்கொழிக்கச் செய் யும் வற்றாத ஜீவ நதி தாமிரபரணி.

‘தாமிரபரணி’ என்று மிகச் சாதாரணமாக இன்று வழங்கி வருகிறோம். இப்பெய ரின் வரலாற்றைச் சிறிது நோக்குவோம்.

மெகஸ்தனிஸ்

செல்யூகஸ் நிகேடர் அரசால் சந்திர குப்த மெளரியர் பேரரசரின் அவைக்கு கி.மு.302 இல் வந்தவர் மெகஸ்தனிஸ். ‘ தாப்ரபனே’, ‘த்வீபராவண’என்று அவர்
தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். (வி.எஸ்.வி. ராகவன், மெகஸ்தனிஸ் கி.மு. 302 - 296) 1978, பக். 81, 104, 260, 275.
பெரிப்ளூஸ்

கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலில் நடைபெற்ற வாணிக வர லாறும் ரோமானியர் காலத்தில் கடற்பயணத்திற்கு உதவியளிக்கும் வகை யில் வழங்கப்பட்ட குறிப்புகளின் தொகுப்புமான ‘பெரிப்ளூஸ்’ (கி.பி. 50-80) என்ற நூலிலும் தாமிரபரணி பற்றிய குறிப்புகள் ஐந்து இடங்களில் காணப் படுகிறது.

தாலமி

புவியியல் வல்லுநரான தாலமி (கி.பி. 119-161) இல்எழுதப்பட்ட நூலான தாலமி யில் 12 இடங்களில் தாமிரபரணி பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.



அசோகர் (கி.மு. 273-232)

இந்தியாவின் பெளத்தப் பேரரசரான அசோகரது கீர்நார் (Girnar) சிலாசாஸனத் தில் தாமிரபரணி (Tambaparani) பற்றிய குறிப்புகள் உள்ளது. (Asoka, The Buddhist Emperor of India, Vincent A.Smith,1920, p.160) வரலாற்றுப் பேராசிரியர் வின்ஸ்டன் ஸ்மித் தனது இந்திய வரலாற்று நூலிலும் இதுபற்றித் தெரிவித்துள்ளார்.

தாம்பபன்னி

பெளத்த ஆசிரியர்கள் இலங்கையை ‘தாம்பபன்னி’என்று அழைத்துள்ளனர். தாமிரபரணி நதி கடலோடு கலக்குமிடத்திற்கு நேராகவே இலங்கைத் தீவும்
உள்ளது.

வியாசரின் மகாபாரதம்

வியாசரின், வன பருவத்தில் அத்தியாயம் 86, தர்மருக்கு தீர்த்த மகிமைகளை உரைக்குமிடத்தில் தாம்பிரபரணி குறிக்கப்பட்டுள்ளது. (வியாசபாரதம் பகுதி - 2) 1998 வ.ஜோதி, ப.722.

வால்மீகி இராமாயணம்

வால்மீகி இராமாயணத்தில் கிஷ்கிந்தா கண்டத்தில்,ஸர்க்கம் 41இல் ‘தென் திக்கில் ஹனுமாரையனுப்புவது என்ற தலைப்பில், சுக்ரீவன் சீதையைத் தேடத் தெற்கு நோக்கி வானரப் படைகளை அனுப்புகிற போது, “அந்த மலய மலையினது உச்சியில் வீற்றிருக்கிறவரும் சூரிய பகவானைப் போல மிகுந்த ஒளியுடன் விளங்குபவருமான அகஸ்திய முனிவர் பெருமானை காண்பீர்கள்.

அவ்விடத்தில் திருவுள்ளம் உவந்த அந்த மகாத்மாவினால் விடையளிக்கப் பட்டவர்களாய், பெரும் முதலைகள் நிறைந்த பெரு நதியாகிய தாமிரபர்ணி யைத் தாண்டுங்கள்” என்று வால்மீகி, தாமிரபரணியைக் குறிப்பிட்டுள்ளார். (கிஷ்கிந்தா காண்டம், பி.எஸ்.கிருஷ்ணசாமி ஐயர் மொழிபெயர்ப்பு, 1970, ப.377).

காளிதாசரின் இரகுவம்சம்

19 ஸர்க்கங்களைக் கொண்ட காளிதாஸனது ‘இரகுவமிசத்தில்’ (கி.பி. 5ஆம் நூற்றாண்டு) நான்காவது ஸர்க்கத்தில் 50 ஆவது சுலோகத்தில் “அப்பாண்டியர் கள் தாமிரபர்ணி நதியுடன் சேர்ந்துள்ள ஸமுத்திரத்தினுடையதும், குவிக்கப் பட்டுள்ளதுமான சிறந்த முத்துக்களை, சேமிக்கப்பட்டுள்ள தங்களுடைய புகழைத் தருவது போல ரகுவிற்கு அடி பணிந்து கொடுத்தனர்”(ரகு வம்ச மஹா காவியம், வே.வேங்கடராகவாச்சாரியார் மொழிபெயர்ப்பு, 1952).

கெளடலீயம் பொருணூல் (அர்த்த சாஸ்திரம்)

கெளடல்யரின் அர்த்த சாஸ்திரத்தை 1955 இல் பண்டிதமணி மு.கதிரேசன் செட் டியாரும், பி.எஸ் ராமானுஜாச்சாரியும் மொழிபெயர்த்து அண்ணாமலை பல் கலைக்கழகம் 1238 பக்கங்களில் வெளியிட்டது.அதில் பாண்டிய நாட்டு முத்து களைப் பற்றிப் பேசும் இரண்டாம் அதிகரணம். பதினோராம் பிரகரணம் 32 ஆம்
அத்தியாயத்தில் பொருநையாறு (தாமிரபரணி) பேசப்பட்டுள்ளது. ப.208.

கம்ப இராமாயணத்தில் - பொருநை

கவிச் சக்கரவர்த்தி கம்பரின் இராமாயணத்தில் கிட்கிந்தாகாண்டம், நாடவிட்ட படலத்தில், (4477 ஆவது பாடலில்)

“தென் தமிழ்நாட்டு அகன்பொதியில் திருமுனிவன்
தமிழ்ச் சங்கம் சேர்கிற் பீரேல்
என்றும் அவன் உறைவிடம் ஆகும்; ஆதலினால்,
அம் மலையை இறைஞ்சி ஏகி,
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
திருநதி பின்பு ஒழிய, நாகக்
கன்று வளர் தடஞ்சாரல் மயேந்திரமா
நெடுவரையும், கடலும் காண்டிர்”

என்று தாமிரபரணி நதியை ‘பொருநை’ என்றும் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.

நம்மாழ்வார் - பொருநல்

திருவாய்மொழியில், ‘பொருநல் நல்வடகரை வண்தொலை வில்லி மங்கலம்’ (6-5-6) ‘தெண்டிரைப் பொருநல் தண்பனை சூழ்ந்த’ (9-2-1) என்று நாலாயிரத் திவ் வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் தாமிரபரணியைப் ‘பொருநல்’ என வழங்கி யுள்ளார்.

கலிங்கத்துப்பரணி - பொருநை

செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணியில் 592 ஆவது பாடலில்,

“பொன்னித் துறைவனை வாழ்த்தினவே
பொருநைக் கரையனை வாழ்த்தினவே”

என்று தாமிரபரணி பேசப்படுகிறது.

ஒட்டக்கூத்தர் - மூவருலா - பொருநை

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரின் மூவருலாவில்,இராசராச சோழனுலா 232 ஆவது பாடலில்,‘பொன்னிக்கும், கோதாவரிக்கும், பொருநைக்கும்’என்று வரு கிறது. இதற்கு உரையாசிரியர் பொருநை -தாமிரபர்ணி என்று குறிக்கின்றனர் (உ.வே.சா. பதிப்பு,1992, ப.207)

சேக்கிழார் - தண் பொருந்தம்

பாண்டிய நாட்டிற்கு அடைமொழியாகத் ‘தண் பொருந்தம்’வந்துள்ளதை பெரிய புராணத்தில் காணலாம். திருநாவுக்கரசு நாயனார்புராணம் 399 ஆவது பாடல் ‘தண் பொருந்தப் புன்னாட்டில் எல்லையிலாத் திருநீறு வளர்த்ததுவும்’ என் கிறார் சேக்கிழார்.

முதலாம் இராச இராசனது சாஸனம்

முதல் இராசராசனது 28 ஆம் ஆண்டு (கி.பி. 1013) வட்டெழுத்துச் சாஸனம் ஒன் றில் ‘தண் பொருந்தத்தின் வடகரை தென் திருமாலிருஞ்சோலை எம் பெருமா னுக்கு’ என்றுள்ளது (411, 1906).

சீவலப்பேரியை அடுத்துச் சித்திரா நதி தாம்பிர பரணியோடு கலக்கும் நதிப் பகுதி ‘தண்பொருந்தம்’ என்று வழங்கப்படுகிறது

பொருந்தம்
The River was also called Porundam and Mudigondasola. p.peraru. (CEPigraphia Indica, Vol.XI 1914, p.205) பொருந்தம் என்ற சொல் தண் பொருநை எனவும், பொருநை எனவும் மருவியது.பொருநை, பொருநர், தண்பொருநை, தண்பொருந்தம் என பல பெயர்களில் தாமிரபரணி அழைக்கப்பெற்றது.

தாமிரபரணி மகாத்மியம்

A Descriptive catalogue of Tamil Mss Vol. VII, D.No. 2821, Madras Govt., Oriental, Mss, Library Madras
தாமிரபரணி மகாத்மியம் எனும் நூல், சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத் தில் உள்ளது.

பொருநை மாதாவின் ஸ்தல புராணம்
பொருநை மாதாவின் ஸ்தலபுராணம் - தாமிரபரணி ஸ்தலபுராணம் பாட்டும் உரையும் குறுக்குத்துறைப் பதிகமும் இதில் உள்ளது. விசயலட்சுமி விசால
அச்சியந்திரசாலை பாளையங்கோட்டையில் 1895 இல் அச்சிடப்பட்டது.

தாம்பிரபரணிப் புராணம்

கிராம முனிசீப் சங்கரலிங்கம் பிள்ளை அவர்களால் (இவர் தமிழறிஞர் எஸ்.வையாபுரிபிள்ளையின் பிதா மகன் ஆவார்) இயற்றப்பட்ட தாமிரபரணிப் புராணம் கி.பி. 1868 இல் அச்சானது.

திருவிளையாடற் புராணம்

பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்தில்,‘பெருகுதண்பொருநை’ என்றும், ‘திரைபடு பொருநை நீத்தம் செவிலி போல் வளர்க்கும்’ என்றும்
பொருநையின் சிறப்பைப் போற்றியுள்ளார்கள்.

திருநெல்வேலித் தலபுராணம்

120 சருக்கங்களைக் கொண்ட திருநெல்வேலித் தலபுராணம் 800 பக்கங்களுக்கு மேலானது. 21 ஆவது சருக்கம் தென்மலை தாம்பிரபன்னி தீர்த்தச்சருக்கம். 48
ஆவது சருக்கம் தாம்பிரபன்னிச் சருக்கம், அதிலிருந்து ஓர் பாடல் (32).

“ஆதியில் விளையும் ரத்நம் ஆனதோர் பொருநை நாப்பண்
மேதகு திவ்யமான தாம்பிரம் விளைவதாகும்”

வேணுவனபுராணம்
மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவான் மு.ரா.அருணாசல கவிராயர் எழுதிய உரைக் குறிப்புடன் 1914 இல் வெளிவந்த நூல் வேணு வன புராணம் 72 பக்கங்களைக்
கொண்டது. அதில் எட்டாவது தீர்த்தச் சருக்கம் 19 ஆவது பாடலில் ‘தத்து திரை யெறிந்து வருந்தண் பொருநை மாநதி நீ’ என்று வந்துள்ளது.

சங்க இலக்கியங்களில்

பொருநை (புறநானூறு 387) தன் பொருநை (புறநானூறு 11) ஆன் பொருநை (புறநானூறு 36, அகநானூறு 93) எனவும் சங்க இலக்கியங்களில் பொருநை காணப்படுகிறது. இவை சேர நாட்டுத் தலைநகராய் விளங்கிய வஞ்சி - கருவூ ரைக் கரையிற் கொண்ட ஒரு நதியைக் குறிப்பதாகும்.

கி.பி. 9 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே ‘பொருநை’என்னும் பெயர் தாமிரபரணிக் கு வழங்கலாயிற்று என்பார் எஸ்.வையாபுரிபிள்ளை (கல்விக் கழகக் கட்டு ரைத் திரட்டு, 1952, ப.20).

மகாகவி பாரதி

1919 சுதேசமித்திரனில் ‘பாபநாசம்’ என்ற பயணக்கட்டுரையில் மகாகவி பாரதி தாமிரபரணி ஆற்றை வர்ணிக்கிறார்.

‘எத்தனை வருஷங்களாக, எத்தனை யுகங்களாக இந்தக் குன்றுகளின் மீதும் சங்கீதக் காரியாகிய தாம்ரபர்ணியின் மீதும் இங்ஙனம் அற்புதமான ஸீர்யோத யம் நிகழ்ச்சி பெற்று வருகிறதோ! எத்தனை யுகங்களாக இந்தத் தாம்ரபர்ணி இங்கு இடைவிடாமல், ஓயாமல், தீராமல் ஒரே ரகமான பாட்டு பாடிக் கொண்டி ருக்கிறாளே!

கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி

‘திருநெல்வேலி மக்களில் முக்கால்வாசிப் பேரைத் தினம் அதிகாலையில் தாமிரபணி நதியில் குளித்துக் கொண்டிருக்கக் காணலாம். பொழுது விடிந்து சூரியன் உதயமாவதே காலையில் தாமிரபரணியில் ஸ்நானம் செய்வதற்குத் தான் என்பது திருநெல்வேலியாரின் அசையா நம்பிக்கை’ என்பார் கல்கி.

இன்று அந்த நம்பிக்கை நாசமாகிக் கொண்டிருக்கிறது; ஆலைக் கழிவுகள்; அங் கங்கே அனைத்து வகையான கழிவுகள், மனிதக் கழிவுகள் அத்தனையும் மொத் தமாகக் கலந்து மாநதியினை மாசுபடுத்திக் கொண்டே வரும் மோசமான நிலைக்கு விடிவு வர வேண்டும்.

தாமிரபரணியின் வரலாற்றோடு அதன் புனிதத்தையும் பாதுகாப்போமாக!.

நன்றிகள் 

கட்டுரையாளர் :- செ.திவான்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment