Sunday, June 16, 2013

பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்- வைகோ அறிக்கை

மக்கள் விரோத மத்திய அரசு பெட்ரோல் விலையை இந்த மாதத்தில் இரண் டாவது முறையாக லிட்டருக்கு ரூ.2.54 உயர்த்தி இருக்கின்றது. ஜூன் 1 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 பைசாவும், டீசல் விலை 50 பைசாவும் உயர்த்தப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து இருப்பதால், பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதாக எண் ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு முறை பெட்ரோல், டீசல் விலை அதிரிக்கப்படும் போது, சர்வ தேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையையும், இந்திய ரூபாய் மதிப்புச் சரிவையும் காரணம் காட்டுவது மத்திய அரசின் வாடிக்கை ஆகிவிட்டது.
கட்டுப்பாடற்ற விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர். உணவு பணவீக்கம் மட்டும் 8.25 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலை கூடி உள்ளது. காய்கறிகளின் விலை விண்ணைத் தொட்டுவிட்டது. வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வகையில் அதிக ரித்துவிட்டது. மக்கள் மீது சுமையை ஏற்றுவதிலேயே குறியாக இருக் கும் மத்திய அரசு, விலைவாசியைக் குறைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை.

மத்திய அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கிவிட்டு, தனது பொறுப்பை தட்டிக் கழித்தது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு,மண் எண்ணெய் விலைகளை மத்திய அரசு உயர்த்திக்கொண்டே இருக்கும் நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் ஒரு சிலரிடமிருந்து மிரட்டல் வருவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவெடுக்கும் பெட்ரோலிய அமைச்சர் மிரட்டப்படுவதாக அத்துறையின் அமைச்சரே கூறு வது, கடுமையான குற்றச்சாட்டு ஆகும். இதற்கு மத்திய அரசு உரிய விளக்கம் தர வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதிலும், எண்ணெய் இறக்குமதி செய்வதிலும் உள்ள முறைகேடுகள், பெட்ரோல் துறை அமைச்சரின் கூற்று மூலம் வெளிப்பட்டு இருக்கின்றது. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் ரூபாயின் வீழ்ச்சிக்கும், விலைவாசி உயர்வுக்கும் காரணம் ஆகும்.

மீண்டும் மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதால், விலைவாசி மேலும் அதிகரித்து, மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

‘தாயகம்’                                                                                          வைகோ
சென்னை - 8                                                                      பொதுச்செயலாளர்
16.06.2013                                                                              மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment