Saturday, June 29, 2013

மக்கள் மனதில் இமயமாக மதிமுக

ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு தேர்தல் நிதியளிப்புவிழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் நென்மேனி ஜெயராமன் தலைமையில் நடந்தது.

விழாவில் மாவட்ட #மதிமுக. சார்பில் ரூ. 15 லட்சத்து 17 ஆயிரம் தேர்தல் நிதி வழங்கப்பட்டது. நிதியை பெற்றுக்கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் #வைகோ பேசியதாவது:-

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை என்ற முடிவு எடுத்த பின்னர்தான் ம.தி.மு.க. மக்கள் மனதில் இமயமாக உயர்ந்து நிற்கிறது. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை ராணுவத்தால் 578 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை தாரை வார்த்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கச்சத்தீவு பகுதியில் இலங்கை போர்க்கப்பலை நிறுத்தி மீனவர்களை விரட்டி வருகிறது. மத்திய அரசு இதை தடுக்கவில்லை. இந்திய, இலங்கை கடற்படையினர் கைகோர்த்து கொண்டாட்டம் போடுகின்றனர்.
இத்தனை மீனவர்கள் கொலை செய்யப்பட்டும் இந்திய அரசு இதுவரை குரல் கொடுக்கவில்லை. தமிழகத்தில் தற்போது மதுவின் பிடியில் மனிதன் சிக்கி விட்டான். இதனால் மனிதநேயம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை உணர்த்த 1,200 கிலோ மீட்டர் தூரம் மதுவுக்கு எதிராக நடைபயணம் மேற் கொண்டேன். மது போதையில் சிக்கி இளைஞர்கள் பாதை மாறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். இலங்கை ராணுவத்தின ருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவது இந்திய ஒருமைப்பாட்டுக்கு கொல்லி வைப்பது போலாகும்.



இலங்கையில் தமிழர்களின் வழிபாட்டு தலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. தமிழர்கள் வாழும் பகுதியில் இலங்கை ராணுவம் வெளியேற வேண்டும் என்று நாம் போராடி வரும் நிலையில் அந்த ராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது கண்டனத்துக்கு உரியது. எத்தனை தடைகள் வந்தாலும் முன்னேறிச் சென்று விரைவில் தமிழகத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் அரு.சுப்பிரமணியன், போகலூர் ஒன்றிய செயலாளர் சிங்கராசு, போகலூர் தொடக்க வேளாண்மை கூட்டறவு சங்க இயக்குனர் வசந்தா, பரமக்குடி நகர செயலாளர் குணா, கொள்கை விளக்க அணி செயலாளர் பொடா அழகுசுந்தரம், மாவட்ட செயலாளர்கள் சிவகங்கை செவந்தியப்பன், மதுரை பூமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment