Saturday, June 1, 2013

கச்சத் தீவு தமிழ்நாட்டுக்குச் சொந்தம்: கட்டுக் கட்டாக ஆதாரங்கள் !

டச்சுக்காரர்களும் போர்ச்சு கீசியர்களும் இலங்கைத் தீவை வளைத்தபோதும்
கூட, கச்சத் தீவில் அவர்கள் கால் வைக்கவில்லை.

1874 ஆம் ஆண்டு கர்னல் வாக்கர்,அவரது உதவியாளர் மேஜர் பிரான் ஃபீல்டு ஆகியோர் இந்தியாவின் அளவைத்துறைக்காக கச்சத் தீவை அளந்தார்கள். அப் போது அந்தோணியார் கோவிலுக்கு முன்புறம் இந்திய அரசின் சர்வே துறை யினர் நட்ட தூண் இன்றும் உள்ளளது.

1895,1930 ஆம் ஆண்டுகளில் கச்சத்தீவு,மீண்டும் அளவை செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் 1952, 1956 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வரை படங்கள் அனைத்திலும் கச்சத் தீவை இராமேசுவரத்தின் ஒரு பகுதியாகவே சுட்டிக்காட் டப்பட்டுள்ளது.
குறிப்பாக, 1874 முதல் 1956 ஆம் ஆண்டு வரை, கச்சத் தீவு இந்தியாவின் பகுதி தான் என்பதை உறுதிப்படுத்தும் புள்ளிவிவரங்கள் இந்திய அரசின் அளவைத் துறையிடம் உள்ளன.

கீழக்கரை வாசுதேவன் செட்டியார் என்பவர், கச்சத் தீவுக்கு சில வணிகப்பொ ருட்களைக் கொண்டு சென்றார்.இந்திய அரசின் சுங்கத் துறையினர் அவ ரைத் தடுத்தனர். அதுகுறித்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

“கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியே ஆகும். அவர் சென்று வணிகம் செய்தி டவும் அதைப்போல ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமை உண்டு” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அந்தோணியார் கோயில்

1939 ஆம் ஆண்டில், இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் உள்ள நம்பு தாழையைச் சேர்ந்த மீனவர் சீனிக்குப்பன் என்பவர் கச்சத் தீவில் அந்தோணி யார் கோயிலைக் கட்டினார்.1972 இல் இந்திய அரசு வெளியிட்ட அரசிதழ் ஆணையின்படி, இராமநாதபுரம் அருகில் தங்கச்சி மடத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க பாதிரியார் பொடேல் வருகை தந்து வழிபாடு நடத்துவார்.

அந்தோணியார்கோயில் கண்காணிப்பு யாழ்ப்பாணக் கிறித்துவத் திருச்சபை
யிடமே இருந்தது.

1947 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15 இல் இந்தியத் துணைக் கண் டம் விடுதலை அடைந்தது. விடுதலைக்குப் பிறகும் கச்சத் தீவு சேது மன்னர் களிடமே இருந்து
வந்தது.

இந்திய அரசு 1949 இல் ஜமீன் ஒழிப்புச்சட்டம் கொண்டு வந்தது. தமிழ்நாடு அரசு ஆணை எண்: 2093, நாள்: 11.05.1949. கால்நடைத் துறை மூலம் கச்சத் தீவை அரசு புறம்போக்காக மாற்றிவிட்டது.

அரசு ஆணையின்படி இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் கிராமப்புல எண்: 1250 இல் 285 ஏக்கர் 20 செண்ட் புறம்போக்கு நிலமாக கச்சத் தீவை அறி வித்தது.

சென்னை நிலத் தீர்வை உதவி அலுவலர் (Assistant Settlement Officer) எஸ்.ஏ.விசுவ நாதன் என்பவரால்,11.11.1958 இல் வெளியிடப்பட்ட இராமேசுவரம் கிராமத்தின் நிலப்பதிவேடு (Settlement Register) எண்: 65 இல் இந்த அரசு ஆணை பதிவாகி உள் ளது. அதன்படி கச்சத் தீவு இன்றைய தமிழ்நாட்டுடன் இணைந்தது.

“கச்சத் தீவு தமிழ்நாட்டுக்குச் சொந்தமானது”

07.09.1991 தினமணி ஏடு தலையங்கம் “1802 ஆம் ஆண்டு வரையப்பட்ட ஒரே
ஒரு தேசப்படத்தில் மட்டும்தான் கச்சத் தீவு இலங்கையைச் சேர்ந்ததாகக்
காட்டப்படுவதற்கான ஆதாரம் உள்ளதாகக் காட்டப்படுகிறது. அது உண்மை அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக, அதே காலகட்டத்திலிருந்து கச்சத் தீவு இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமானது என்பதற்கு ஏகப்பட்ட ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் சில வருமாறு:

1) கச்சத் தீவு 23.06.1880 அன்று இரண்டு பேருக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. இதற்கான பத்திரப் பதிவு செய்யப்பட்ட தேதி 02.07.1880. இது இராமநாதபுரம் சப்-ரிஜிஸ்திரார் அலுவலகத்தில் 510 எண்ணுள்ள பத்திரமாகப் பதிவுசெய்யப்பட் டுள்ளது.குத்தகைக்கு விட்டவர் சேதுபதி மன்னர். குத்தகைக்கு எடுத்தவர்கள் முத்துசாமிபிள்ளை, அப்துல் காதர் மரைக்காயர் இருவரும்.

2) இந்த ஒப்பந்த காலம் முடிந்தபிறகு, மீண்டும் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டு
இருக்கிறது. இதே இராமநாதபுரம் ரிஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. பத்திரத்தின் எண்:134.

3) அடுத்து 1913 இல் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் 15 வருடங்களுக்குச் செல்லு
படியாகும் குத்தகை என்று விட்டிருக்கிறது. அடுத்து இதே குத்தகை 1936 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.

4) 1943 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள மீன்பிடித் துறையினர் ஒரு நிலப் படத்தை வரைந்திருக்கிறார்கள்.அதில் கச்சத் தீவு தமிழ்நாட்டுக்குச் சொந்த மானது என்றே வரைந்து காட்டப்பட்டிருக்கிறது. கணேசன் என்பவர் இதை வரைந்துள்ளார்.

5) அடுத்து 1947 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் 2 ஆண்டு காலத்திற்கு அதாவது 30.06.1949 வரை கச்சத் தீவு குத்தகைக்கு விடப்பட்டு உள்ளது. பதிவு எண்:278. நாள்:26.07.1947 ” (தினமணி 07.09.1991) 

இதுபோன்று இன்னும் பல ஆதாரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
கச்சத் தீவு நமக்கே சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை இன்னும்
50 பக்கங்களுக்கு மேலாக எழுதலாம்.

1800 ஆம் ஆண்டு முதல் -கருணாநிதி வரை

1800 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டு அறிஞன் தாலமி வரைந்த தேசப்படம் முதல், கருணாநிதி ஆட்சிக்கு முந்திய காலம் வரை இந்தியத்துணைக் கண்டத் தின் வரைபடங்கள் அனைத்திலும் கச்சத் தீவு இருப்பதற்கான சான்று ஆதாரங் களை யெல்லாம் இதுவரை பார்த்தோம்.

இத்துணை காலம் தமிழ்நாட்டுக்குச் சொந்தமாக இருந்த கச்சத் தீவை, தமிழ் நாட்டின் அனுமதி இல்லாமலேயே சிங்களவனுக்குத் தாரை வார்த்துக் கொடுத் துவிட்டது இந்திய அரசு.

1974 ஜூன் 26 ஆம் நாள் கச்சத் தீவை இலங்கைக்குக் கொடுத்தார் இந்திரா காந்தி. அதற்குக் காரணம் என்ன? 

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது இந்திராகாந்தி தமிழினத்திற்குச் செய்த
பச்சைத் துரோகமாகும்.

பண்டித ஜவஹர்லால் நேரு முதல் இந்திராகாந்தி வரை, ஆரிய இன உறவும்,
தமிழ் இனப் பகையுமே அவர்களை இயக்கிக் கொண்டு இருந்தது என்பதே இதற் கெல்லாம் முதன்மைக் காரணமாகும்.

அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் தமிழ்நாட்டைச்சேர்ந்த வள்ளியப்ப செட் டியார், “இந்தியர்கள் சேவா சங்கம்” என ஒரு அமைப்பை நடத்தி வந்தார். தேசாய் எனும் வட இந்தியர் “இலங்கை இந்தியச் சங்கம்” நடத்தி வந்தார்.

சிங்களத் தலைவர்கள் எல்லாம் ஒருங்கே இணைந்து “இலங்கை இந்தியக் காங் கிரஸ்” எனும் புதிய அமைப்பை உருவாக்கி, அந்த அமைப்புக்கு தமிழ் இனப்பகைவரான ஜெ.ஆர்.ஜெயவர்த்தனாவைச் செயலாளராக நியமித்தனர்.

அந்த அமைப்பில் உள்ள தமிழ் அறிஞர் களும், தமிழ் இனத்திற்கு உரிமை கோரும் தலைவர்களும் அந்த அமைப்பில் இருந்து வெளியேற்றப் பட்டனர். அதுவே பிற்காலத்தில் பண்டித நேருவின் உதவியுடன் சிங்கள இன வெறியர் களின் இயக்கமாக வளர்ந்து “ஐக்கிய தேசியக் கட்சி” (U.N.P)) எனப் பெயர் பெற் றது. காலத்தால் வெள்ளையனிடம் இருந்து இலங்கைத் தீவைப் பெற்றது.

1951 ஜூன் திங்களில் இந்தியப் பிரதமர் நேருவும், சிங்களத் தலைமை அமைச் சர் டட்லி எஸ்.சேனநாயகாவும் லண்டனில் சந்தித்தனர். அப்போது இலங்கை யில் உள்ள தமிழர்கள் குடியுரிமை இழந்து அநாதையாக நின்று தவித்தார்கள்.

இலங்கையில் வாழ்ந்த பாகிஸ்தானியர்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட போது, அன்றைய பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் “இலங்கையில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயார்” என்று
அறிவித்தார். அதே நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டு இருப்பதை அறிந்தும் நேரு
பாராமுகமாய் இருந்தார்.

1954 இல் நேரு-ஜான் கொத்தலாவல பேச்சுவார்த்தை டில்லியில் நடந்தது. நெடுங்காலமாக இலங்கையில் வாழ்ந்த இலட்சக்கணக்கான தமிழர்களுக்கு
குடியுரிமை வழங்க மறுத்தார். அதற்கு நேருவும் தலையசைத்தார்.

1955 இல் நேருவின் அன்புக்கு உரியவராக பச்சைத் தமிழர் காமராசர் தான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார். அப்போதுதான் சிங்களப்படையினர் கச்சத் தீவில் இறங்கினார்கள்.காமராசர் கண் முன்னாலேயே கச்சத் தீவை சிங்களவன் விழுங்கினான்.

கச்சத் தீவைச் சிங்களவன் சொந்த மாக்கிக் கொண்ட செய்தி பற்றி நாடாளு
மன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.பலர் கேள்வி எழுப்பினர்.அதற்கு பண்டித நேரு “கச்சத் தீவா? அது எங்கே இருக்கிறது?” என்று மழுப்பலாகப் பேசினார். கச்சத் தீவு குறித்துப் போதிய செய்திகள் அரசிடம் இல்லை என்று திட்டமிட்டே கூறினார் நேரு.

தொடரும்...

நன்றிகள் 

கட்டுரையாளர் :- கவிஞர் தமிழ்மறவன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment