Sunday, June 23, 2013

நெருப்போடு விளையாடாதே! -பகுதி 1

‘தந்தையும் தம்பியும்’ என்னும் பொ.தங்கபாண்டியன் எழுதிய நூல் வெளியீட்டு விழா 02.12.2011 அன்று சென்னை - தியாகராயர் நகரில் நடைபெற்றது. நூலை வெளியிட்டு கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...

நான் வயது முதிர்ந்த கிழவன் அதனால் நான் பலாத்காரத்தில் நம்பிக்கை இல் லாதவனாக இருக்கலாம். நாளைய இளைஞர்கள்,இரத்த வெள்ளத்திலே நின்று பிரிவினை கேட்பார்கள். கத்தி முனையிலே நின்று பிரிவினை கேட் பார்கள் என்ற தந்தை பெரியார் அவர்களுடைய காலத்தின் கல்வெட்டாகப் பதிக்கப் பட்ட வாசகங்களையும்,


இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவஆசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி என்று உரைத்த மாவீரர்திலகம் பிரபாகரன் அவர்களையும், இப்புவி யின் பல கண்டங்களிலே பிளக்கப்பட்ட இதயங்களோடு துடித்துக்கொண்டு இருக்கின்ற மான உணர்வுள்ள தமிழர்களின் உள்ளங்களில் உயிரோவியமாகப் பதிந்து இருக்கின்ற தந்தை பெரியார் அவர்களை, மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களை, அவர்கள் வாழ்க்கையில் பங்கேற்ற நிகழ்வுகளை எல்லாம், படங் களாக நம் மனத்திரையில் பதிகின்ற ஓவியங்களாக, அவர்களைப் பற்றிய செய்திகளைக் கருத்துகளாக, அவர்கள் தந்த மணிவாசகங்களை நூலில் இடம் பெறுகின்ற பொன்மொழிகளாக, அருமையாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கின்ற நாளந்தா பதிப்பகத்தின் சார்பில், தந்தையும், தம்பியும் என்ற நூலாக வழங்கி இருக்கின்ற அருமைச்சகோதரர் தங்கபாண்டியன் அவர்களுடைய இந்தப் படைப்பை, வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


நான் பெரிதும் மதிக்கின்ற ஆருயிர்ச்சகோதரர், பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் இந்த நிகழ்வுக்குத் தலைமை ஏற்று இருக் கின்றார்கள். நெடுநாட்களுக்குப் பிறகு ஒரு அரிய நிகழ்வாக, ஆருயிர்ச் சகோ தரர் பரிதி அவர்கள், அருகில் இருந்து அமர்ந்து,இந்த உரையைக் கேட்கக்கூடிய
வாய்ப்பைத் தந்து இருக்கின்றீர்கள்.

துள்ளி வருகுது வேல், தமிழ்ப்பகையே தூர விலகி நில் என இங்கே முழங்கி னார் பாசமிகு சகோதரர் வேல்முருகன். அன்புக்குரிய சகோதரர் இயக்குநர்
தாமிரா அவர்கள், இந்த நிகழ்ச்சியை உணர்ச்சிகரமாகத் தொகுத்து வழங்கினார்.

ஆயிரமாயிரம் கவலைகளை ஆண்டுக்கணக்கில் சுமந்துகொண்டு இருக்கின்ற அன்னை அற்புதம் அம்மையார் அவர்களே, தந்தை பெரியாரையும், மாவீரர்
திலகம் பிரபாகரனையும் இதயத்தில் போற்றிக்கொண்டு இருக்கின்ற உணர் வாளர்களே, இந்த அரங்கத்தில் திரண்டு இருக்கின்ற அன்புக்குரியவர்களே,
செய்தியாளர்களே, தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களே, வணக்கம்.

தந்தையும், தம்பியும் என்ற இந்த நூலைப் பற்றி, தங்கபாண்டியன் அவர்களு டைய ஈடுபாட்டைப் பற்றி, இங்கே பேசியவர்கள் அருமையாக எடுத்துச் சொன் னார்கள்.அத்தகைய சிறப்புக்குரிய இந்த நூலை வெளியிடுவதற்காக வாய்ப் பை எனக்குத் தந்தமைக்காக, தங்கபாண்டியன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெறாமல் போனபிறகு, இந்த நிகழ்ச்சி நடக்குமா?என்ற ஐயப்பாடுடன் அவர் என்னை வந்து சந்தித்தார். கவலையை விடுங்கள்; அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களும்,நானும் விழுப்புரத்தில் கலந்து கொள்வ தாக இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதால், உயர் நீதிமன்றத்தில் தொடுத்து இருக்கின்ற வழக்கில்,புலிகளையும் ஆதரித்துப் பேச எங்களுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவித்து இருக்கின்ற பின்னணியில், அனுமதி கிடைக்கும்; எனவே, இந்தத் தியாகராயர் அரங்கத்தில் உங்கள் நிகழ்ச்சி தங்கு தடை இன்றி நடக்கும் என்று நான் அவரி டம் கூறினேன்.

தந்தையும், தம்பியும் என்கின்ற இந்த நூலில், அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த நிகழ்வுகளின் பின்னணியில், செய்திகளைத் தொகுத்துத் தந்து இருக்கின்றார்.
பாராட்டுகிறேன்.

என்னுடைய அன்புக்குரிய இளவல் பரிதி அவர்கள், இந்தப் படங்களுக்குக் கீழே பெயர்களையும் பொறித்து இருந்தால், சிறப்பாக அமைந்து இருக்கும் என்று
சொன்னார். அடுத்தடுத்து வெளியிடுகின்ற பதிப்புகளில் அவர் அதைச் செய்ய லாம். நம் இதயத்தில் நிறைந்து இருப்பவர்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த
நிகழ்வுகளைச் சித்தரிக்கின்ற இந்தப் படங்களைக் காணும்போது, உடன் இருப் பவர் யார்? இது எந்த ஆண்டில் எடுத்தது? என்ற தேடல் நம் இதயத்தில் தானாக எழுவது இயற்கைதான்.

ஒரு இடத்தில்,மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களைப்பற்றிக் குறிப்பிடுகின்ற போது, அவர், ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்றுப் புதினத்தை விரும்பிப் படித்தார் என்ற செய்தி சொல்லப்பட்டு இருக்கின்றது. அவர் புலிகள் என்று ஏன் பெயர் வைத்தார்? என்பதற்கு அருமையான விளக்கம் வருகின்றதே, புலிக் கொடி ஏந்திய அருள்மொழிவர்மன், இராஜராஜசோழனாக, கடல் கடந்து பல நாடுகளுக்குச் சென்றான்; அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலன் சென்றான் என்பதால், தன் புனைப்பெயரையும் கரிகாலன் என்று வைத்துக் கொண்ட பிரபாகரன் அவர்கள்,அந்தப் புலியையே சின்னமாகத்தேர்ந்து எடுத்து, இயக்கத்துக்குப் புதிய புலிகள் என்று பெயர் சூட்டப்பட்ட அந்த நாளையும் நினைத்துப் பார்க்கின்றபோது, பொன்னியின் செல்வன் புதினத்தை நான் பல முறை படித்து இருக்கிறேன்; தற்போது என்னிடம் இல்லை என்று, வன்னிக் காட்டில், 89 ஆம் ஆண்டில், பிப்ரவரித் திங்களில் அவர் கூறியதன் விளைவாக, தாயகத்துக்கு, தமிழகத்துக்குத் திரும்பி வந்தபிறகு, பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும், நான் அவருக்கு அனுப்பி வைத்தேன்.

களத்துக்குச் செல்கின்ற வீரர்கள், வீராங்கனைகளோடு அவர் உரையாடுவது வழக்கம். அப்போது, பெரிய பழுவேட்டரையரின் உடலில், 64 தழும்புகள் இருந் தன என்பதை அவர் குறிப்பிட்டதாக, இந்த நூலில் சொல்லப்பட்டு இருக்கின் றது. பொன்னியின் செல்வன் தொடருக்காக, வாரந்தோறும் கல்கியில் ஓவியர் மணியம் அவர்கள் வரைந்து இருக்கின்ற சித்திரங்கள் அற்புதமானவை. சின் னப்பழு வேட்டர் கோபக் கனலாக விளங்கிய, ஆதித்த கரிகாலன், வீரமும்,
விவேகமும், விளையாட்டுத்தனமும் கொண்டு இருக்கின்ற கதாநாயகன் வல் லவரையன் வந்தியத்தேவன், கடைசிவரை புதிராகவே இருந்துவிட்டுப் போன நந்தினி, தம்பிக்கு வழிகாட்டியாகவே திகழ்ந்த குந்தவைப் பிராட்டியார், விலா நோகச் சிரிக்க வைக்கின்ற வைணவ நம்பி ஆழ்வார்க்கடியான், சம்புவரையர் மாளிகை, அவரது மகன் கந்தமாறன், அலைகடலும் ஓய்ந்து இருக்க, அகக் கடல் தான் பொங்குவதேன்? என்று ஓடத்திலே பாடிச் சென்றாளே பூங்குழலி, இவர்களையெல்லாம், கீழே பெயர் குறிப்பிடாமலேயே மணியம் அவர்கள் வரைந்து இருக்கின்ற சித்திரங்களைப் பார்க்கின்றபோதே ஒவ்வொரு முறை யும், அடுத்த வாரம் எப்போது வரும்? கல்கி இதழ் எப்போது கிடைக்கும்? என்ற ஏக்கம் பிறக்கும்.

அப்படி நாம் நேசிக்கின்ற, நம் நெஞ்சக்கோவிலில் இடம்  பெற்று இருக்கின்ற பிரபாகரன் வாழ்க்கைக் காட்சிகளைக் காணுகின்றபோது, மெய்சிலிர்க்கின்றது.

இந்த நிகழ்ச்சியில் நான் பரிதியைப் பாராட்டிப் பேசி,அவருக்கு ஒரு சங்கடத் தை ஏற்படுத்த விரும்பவில்லை. இந்தத் தம்பியை எழும்பூர் இடைத்தேர்தல் களத்தில் வெற்றி பெற வைப்பதற்கு, ஆபத்துகளுக்கு நடுவில் களத்தில் நின்ற வன் நான். அன்று அந்தக் கட்சியின் தேர்தல் பணிச் செயலாளர் நான். வாக்கு கள் எண்ணப்பட்டுக்கொண்டு இருந்தன. நானும் அந்த இடத்தில் இருக்கின் றேன். ‘பரிதி நீங்கள் வெற்றி பெறுவீர்கள்; நாளை நண்பகல் உங்களுக்கு என் வீட்டில் விருந்து’ என்றேன். அதுபோலவே அவர் வெற்றி பெற்றார்.

பரிதி நினைவு இருக்கின்றதா? மறுநாள், நண்பகலில் நீங்களும், திராவிட இயக் கத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் நெஞ்சில் இடம்பெற்று இருந்த என். வி.என் அவர்களின் புதல்வர் சோமு அவர்களும், செங்கை சிவம் அவர் களும், என் இல்லத்துக்கு வந்து,அருமையான விருந்துண்டு,அந்தி சாயும் வரையிலும் உரையாடிக் கொண்டு இருந்தது நினைவு இருக்கின்றதா? அதோடு விட்டுவிடு கிறேன். அதற்கு மேல் எதுவும் சொல்லி, உங்களைச் சங்கடப்படுத்த விரும்ப வில்லை. வீரனை வீரன் மதிப்பான். அதுபோலத் தம்பி, உன் ஆற்றலை மதிப்ப வன் நான். (பலத்த கைதட்டல்).

இப்படிச் சொல்வதால், நான் ஒரு வீரன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள வில்லை. நீ வீரன்; உன்னைப் பார்த்து நான் வியந்தவன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது, நீ அபிமன்யுவைப் பற்றிச் சொன்னபோது. நான் பல மேடைகளில் அதைப் பேசி இருக்கின்றேன். பத்ம வியூகத்துக்கு உள்ளே நுழைந்து சக்ரகார மாகச் சுழன்ற அபிமன்யுவைப் போல இந்தப் பரிதி, சட்டமன்றத்துக்கு உள்ளே சாட்டையைச் சொடுக்குகிறார் என்று நான் பேசி இருக்கின்றேன்.

நான் மிகவும் நேசிக்கின்ற இரண்டு கதாபாத்திரங்கள் உண்டு. அவை புராணம் தான். இருப்பினும்கூட, ஒருவன் பதின்மூன்றாம் போர்ச்சருக்கத்தில் சென்ற அபிமன்யு. இன்னொருவன், நிகும்பலை வேள்வி செய்யச்சென்றபோது, வீட ணனால் காட்டிக் கொடுக்கப்பட்டு அதனால் வீழ்ந்த இந்திரஜித். அவனது வீரத் தை, இலக்குவன் பாராட்டுவதாக, தேரழுந்தூர் கம்பன் பாடுகிறான்.

எய்தவன் பகளியெல்லாம் பறித்து
இவன் என்மேல் எய்யும்;
கை தடுமாறாது உள்ளம்
உயிரினும் கலங்கா யாக்கை
மொய்கணை கோடி மொய்க்கவும்
இளைப்பொன்றில்லான்
ஐயனும் இவனோடு எஞ்சும்
ஆண்தொழில் ஆற்றல்

என்றான்.

இவனோடு வீரம் அழிந்தது என்கிறான். அது கற்பனை இலக்கியம், புராணம். அவன் எழுத்தில், அப்படி ஒரு சித்திரத்தைக் கொண்டு வந்தான். ஆனால், அவர் களைஎல்லாம் நாம் நேசித்தோமே? நம் காலத்தில் அதை நிஜமாக்கிக் காட்டிய வர் மாவீரர் திலகம் பிரபாகரன். (பலத்த கைதட்டல்.)

தந்தை பெரியார் அவர்களின் வாழ்வில் நடந்த அத்தனைச் சம்பவங்களையும் விவரிக்க நேரம் இல்லை.  ஆனால், அவரே சொல்லுகிறார்: என் காதலி, துணைவி, நாகம்மாள் இறந்துவிட்டாள். எனக்கு மகிழ்ச்சிதான்.இனி தொல்லை இல்லை என்று அவர் கூறியதாக, இந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருக்கின் றது. 1933 ஆம் ஆண்டு,மே மாதம் 11 ஆம் நாள்,நாகம்மையார் மறைந்தார்.அதை
குடியரசு ஏட்டில் எழுதுகிறார் பெரியார்.

‘ஒரு அடிமை நீங்கிற்று என்று சொல்லவா? ஆதரவு நீங்கிற்று என்று சொல்ல வா? இன்பம் நீங்கிற்று என்று சொல்லவா? ஊக்கம் நீங்கிற்று என்று சொல்ல வா? எல்லாமே நீங்கிற்று என்று சொல்லவா? எதைச் சொல்ல? என்று எழுது
கி றார். அவருடைய உள்ளத்துக்கு உள்ளே இருந்த வேதனையின் வெளிப்பாடு அது.

அடுத்துச் சொல்லுகிறார்: தனக்கு வந்த துன்பங்களைத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், நாகம்மாள், துக்கத்துக்கும், துயரத்துக்கும் ஆளாவதைக் கண்டு, நான்
துக்கப்பட வேண்டிய தொல்லை இனி இல்லை. எனவே, எனக்கு மகிழ்ச்சிதான் என்கிறார்.

பெரியாரைப் பெற்ற தாய் சின்னத்தாயம்மாள்,1906 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் நாள் மறைந்தபோது அவர் குறிப்பிடுகிறார்.

மழலை பேசுகின்ற காலத்தில் இருந்து, அப்போதே இந்தப் பிள்ளையை வேறு இடத்துக்குக் கொடுத்து விட்டார்கள் அல்லவா, அதையெல்லாம் சுட்டிக்காட்டி குடியரசு ஏட்டில் எழுதுகிறார். தாயின் மறைவைப் பற்றி எழுதுகிறார்:

இரவு ஒன்பதரை மணி அளவில் என் தாயாரிடம் சொல்லி விட்டுத்தான், ஜோலார்பேட்டை பிரச்சாரத்துக்குப் போனேன். 12 மணி அளவில் இறந்து விட் டார்.அந்தச் செய்தியைக் கேட்டபோதும் நான் அழவில்லை. என் மனைவி நாகம்மை இறந்தபோதும், கண்ணீர் வடிக்கவில்லை.நான் கலங்கவில்லை. ஆனால், ஓமான் கடலில், ஏ.டி. பன்னீர்செல்வம் மறைந்தபோது, என் மெய் நடுங்கியது; நெஞ்சு திக்திக் என்கிறது. மனம் பதைக்கிறது. கை எழுத முடிய வில்லை.கண்ணீர் எழுத்துகளை மறைக்கிறது.

தமிழர்களை எண்ணுந்தொறும் எண்ணுந்தொறும், காணுந்தொறும் காணுந் தொறும், சர் ஏ.டி.பன்னீர்செல்வத்தின் மறைவு என்னை அச்சுறுத்துகிறது.மனம்
பதைக்கிறது என்கிறார்.

எரிமலைதான்; அதற்கு உள்ளும் ஒரு பனிமலை. அவர்தாம் பெரியார்! அவர் தாம் பிரபாகரன்!

புனே ஒப்பந்தம், இரட்டை வாக்கு உரிமை என்பதையெல்லாம் பற்றி இப்போது
பேசப்படுகின்றதே? பண்டித மதன்மோகன் மாளவியா, அரசியல் சட்டத்தை யாத்துத் தந்த அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கரோடு, அந்த ஒப்பந்தத்திலே
கையெழுத்து இடுவதைப் பற்றி பேச்சு நடத்திக்கொண்டு இருந்தபோது, 1934 ஆம் ஆண்டு, ஐரோப்பியப் பயணத்திலே அப்போது சுற்றுப்பயணம் செய்து
கொண்டு இருந்த தந்தை பெரியார், அந்த ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்து இடாதீர்கள் என்று, அங்கிருந்து ஒரு நீண்ட தந்தி அனுப்புகிறார். அந்தத் தந்தி யின் விவரம், குடியரசு ஏட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.

அதில் ஒரு வார்த்தையைச் சொல்லுகிறார்.‘கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை, உத்தமர் காந்தியின் உயிரை விட மேலானது’ என்கிறார்.
இன்றைக்குப் பேசுகின்றார்கள். ஆனால், அன்றைக்கே சொன்னவர் அல்லவா எங்கள் தந்தை பெரியார், பகுத்தறிவுப் பாட்டன். (பலத்த கைதட்டல்).

இன்றைய மும்பை, அன்றைய பம்பாய் நகரம். காயிதே  ஆசம் முகமது அலி ஜின்னாவை, அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களை, அறிவு ஆசான் தந்தை பெரியார் சந்தித்த படம், இந்த நூலில் இருக்கின்றது.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள், ஆற்றல்மிக்க பேச்சாளர்.அவரைப்போல ஒரு தீர்மானத்தை யாரும் எழுத முடியாது. அதனால்தான், அரசியல் சட்டத்தை
ஆக்குகின்ற பணியை அவரிடம் ஒப்படைத்தார்கள். ஜின்னா ஒரு பாரிஸ்டர். அருவி போன்ற ஆங்கிலத்திலே வாதங்களை எழுப்பக்கூடிய வல்லமை உண் டு. நமது ஈரோட்டுத் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்தாரே,அங்கே யாரா வது மொழிபெயர்ப்பாளர் இருந்தார்களா? என்ற சந்தேகம் எவருக்காவது வரலாம்.

ஏனெனில், இங்கே மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களுக்கு, ஆங்கில மொழி யை அதிகமாகத் தெரிந்து கொள்ளவில்லையே என்ற ஒரு வருத்தம் இருந்த
செய்தியும் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. ஒரு தகவலை, அன்புக்குரிய சகோதரர் கொளத்தூர் மணி அவர்கள் தெரிவித்தார்கள். நான்
மணியை மிகவும் நேசிப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா? அவர் தன்னை எங்கும் முன்னிலைப்படுத்திக்கொள்ள மாட்டார். (கைதட்டல்). விளம்பரப்படுத் திக் கொள்ள மாட்டார். புலிகளின் பாசறை அங்கே வன்னிக்காடுகளில் இருந் தது என்றால், இங்கே கொளத்தூர் மணியின் காட்டிலும், தோப்பிலும் இருந்தது. (பலத்த கைதட்டல்).அதற்காக,தமிழ்நாட்டு அரசியலில் அதிக ஆண்டுகள்சிறை வாசம் ஏற்றவர் என் சகோதரர் மானமிகு கொளத்தூர் மணி. ஈழத்தமிழர்களுக் காக இன்முகத்தோடு சிறைவாசம் ஏற்றார். பொன்னம்மான், புலேந்திரன் உள் ளிட்ட பிரபாகரனின் தளகர்த்தர்கள் அனைவருமே அவருடைய பாடி வீட்டுக்கு வந்து சென்றவர்கள்தாம்.அதையெல்லாம் அவர் சொல்லிக்கொள்வது இல்லை.

தொடரும் .....

No comments:

Post a Comment