Thursday, June 27, 2013

சீனம் சிவந்தது ஏன்?

“ஆசிய கண்டத்தின் தீர்மான சக்திகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளன. சர்வ தேச வர்த்தகத்துக்கு மிகப்பெரிய உந்து சக்திகளாக இரு நாடுகளும் இருந்து வருகின்றன. இரு தரப்புக்கும் இடையே பிரச்சினைகள் இருக்கத்தான் செய் கின்றன. அவற்றை மூடி மறைத்திட விரும்பவில்லை.

கடந்த கால வரலாறு, இரு நாடுகளுக்கும் இடையே சில பிரச்சினைகளை விட் டுச் சென்றுள்ளது. ஆனாலும், அந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உள்ளது. இந்தி யாவும், சீனாவும் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள். இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை உள்ளது.அதற்குப் பேச்சுவார்த் தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதிலும்,இருவேறு கருத்துகளுக்குஇடம் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும்
உருவாக்கி, ஒரு புதிய அத்தியாயம் தொடங்க வேண்டியது அவசியமான கட மையும் ஆகும்”.


கடந்த மே 20 ஆம் தேதி, இந்தியாவுக்கு வருகை தந்த சீனப் பிரதமர் லீ கெகி யாங், நமது பிரதமர் மன்மோகன்சிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது மேற்கண்டவாறு தெரிவித் தார்.

சீனப் பிரதமர் லீ கெகியாங் குறிப்பிட்டது, எங்கேயோ கேட்ட குரலாக இருக் கிறது. 1962 அக்டோபரில் சீனா, இந்தியா மீது போர் தொடுப்பதற்கு முன்பு, 1960 ஏப்ரலில் இந்தியா வருகை தந்த சீனப் பிரதமர் சூ-என்-லாய்,இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவை சந்தித்துப் பேசிய பிறகு இப்படித்தான் கூறிவிட்டுச் சென்றார். அதன் பின்னர் உருவான நிலைமைகள் சீன-இந்தியப் போர் வெடிப் பதற்குக் காரணமாயிற்று.வரலாறு மீண்டும் திரும்புகிறதோ என்ற ஐயப்பாடு, வரலாற்று நிபுணர்களுக்கு வந்திருக்கின்றது. காரணம், ஏப்ரல் மாதம் சீன நாட் டின் இராணுவம் இந்தியாவில் ஊடுருவியது ஆகும்.

சீன இராணுவம் அத்துமீறல்

இந்திய-சீன எல்லைப் பகுதியில்,காஷ்மீர் மாநிலம் - லடாக் கிழக்குப் பகுதியில் உள்ள தவுலத் பெக் ஆல்டி என்ற இடத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதி சீன இராணுவத் தின் 50 பேர் கொண்ட படைப்பிரிவு ஊடுருவியது.

சீனாவின் மக்கள் விடுதலைப் படை (PLA) இந்தியப் பகுதிக்குள் 19கிலோ மீட்டர் தூரம் உள்ளே நுழைந்து அங்கு கூடாரம் அமைத்து முகாமிட்டனர்.எல்லையில் இருந்த இந்திய-திபெத் எல்லைக் காவல்படை (ITBP) இதனைக்கண்டறிந்து, சீன இராணுவ அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர். அப்போது அவர்கள் அளித்த பதில் இன்னமும் சீனா 1962 போரை மறந்துவிடவில்லை என்பதற்கு சாட்சி யாக இருக்கின்றது.

‘1959 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவுக்கு, சீனப் பிரதமர் சூ-என்-லாய் எழு திய கடிதத்தில், லடாக் பகுதி முழுவதும் சீனாவுக்குச் சொந்தம்’ என்று தெளிவு படுத்தி இருக்கின்றார். ஆகவே, எங்கள் நிலப்பரப்புக்குள் நுழைந்து முகாம் அமைத்து இருக்கின்றோம்”என்று சர்வ சாதாரணமாக சீன இராணுவத்தினர்
பதில் கூறினார்கள்.

அதன் பிறகு, ஏப்ரல் 21 ஆம் தேதி இரண்டு சீன இராணுவ ஹெலி காப்டர்கள் இந்திய பகுதிக்குள் அத்து மீறிப் பறந்து வந்து, அங்கு முகாமிட்டு இருந்த சீன இராணுவ வீரர்களுக்கு டின்களில் அடைக்கப்பட்ட உணவு, சிகரெட் பாக்கெட் மற்றும் தண்ணீர் கேன்களை போட்டுவிட்டுச் சென்றன.பின்னர் ‘லே’ பகுதி யில் உள்ள அம்மார் என்ற இந்திய நிலப்பரப்பின் மீது இரண்டு சீன இராணுவ ஹெலிகாப்டர்கள் அத்துமீறி நுழைந்து பறந்தன.

அமைதி உடன்பாடு உடைந்தது

இந்தியாவும்-சீனாவும் எல்லையில் ‘அமைதி காக்க’ ஒப்புக்கொண்ட இருபது
ஆண்டுகளுக்குப் பின்னர், சீனா இந்த அத்துமீறலில் இறங்கி உள்ளது. சர்ச்சைக் குரியதாக இந்தியா கூறிவரும் 4,000 கி.மீ. எல்லைப்பகுதிகளில், சீன இராணு வம் 2001 ஆம் ஆண்டிலிருந்து 500 ஊடுருவல்களை செய்துள்ளது.ஆனால்,இந்த முறை நடந்த ஊடுருவல் சீனாவின் நீண்ட கால திட்டம் என்ன என்பதை இந்தியாவுக்கு உணர்த்து வதாக இருந்தது.

சீன இராணுவம் இந்தியாவுக்குள் நுழைந்த தககவல் வந்ததும், இந்திய இராணு வம் எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான சீன தூதர் வெய் வெய்யை இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் நேரில் அழைத்து, சீன இராணுவம் இந்தியப்பகுதிக் குள் அத்துமீறி நுழைந்ததற்கு கண்டனம் தெரிவித்தார்.

இப்பிரச்சினையைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியத்தை யும், ரஞ்சன் மத்தாய் வலியுறுத்தினார். இதன்படி, ஏப்ரல் 23 ஆம் தேதி லடாக் பகுதியில் இந்திய-சீன இராணுவத்தின் ‘பிரிகேடியர்’ மட்டத்திலான அதிகாரி களின் பேச்சுவார்த்தை மூன்று மணிநேரம் நடந்தது. ஆனால், சீனப் படைகளை திரும்பப் பெற முடியாது என்று சீனா பிடிவாதமாக மறுத்துவிட்டது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய வெளி யுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன், ‘சீனா
தனது படைகளை திரும்பப் பெற்று, முந்தைய நிலைக்குச் செல்ல வேண்டும்.
இந்தப் பிரச்சினை நேருக்கு நேர் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது’ என்று கூறினார்.

இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஏப்ரல் 24 ஆம் தேதி
பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். சீன ஊடுருவல் குறித்து
அமைதியான முறையில் தீர்வு காண சீனாவுடன் பல்வேறு மட்டங்களில்
பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேசிய ஒருமைப்பாட்டையும், பாது
காப்பையும் கட்டிக்காக்க எல்லாவிதமான நடவடிக்கைகளையும் மத்திய அரசு
எடுக்கும் என்று ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.

சீனா பிடிவாதம்

இந்திய இராணுவத் தளபதி விக்ரம்சிங்,எல்லைப் பகுதிக்குச் சென்று பாதுகாப்பு
நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். இந்தியாவில் இவ்வளவு தூரம் பதட்டம் ஏற் பட்டபோது, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன் யிங், “சீன எல்லைப் பாதுகாப்புப் படைகள், இருதரப்பு ஒப்பந்தங்களை கண்டிப் பாக பின்பற்றி நடந்து வருகின்றன. எல்லைக் கோட்டில் சீன எல்லைக்கு உட் பட்ட பகுதியில் வழக்கம்போல் ரோந்து சென்று வருகின்றன. எல்லைக் கோட் டை ஒரு போதும் கடக்கவில்லை.

இப்பிரச்சினை குறித்து இந்தியாவும்,சீனாவும் பேச்சு வார்த்தையைத்தொடங்கி உள்ளன. அதே சமயத்தில் எல்லைக்கோடு தொடர்பாக இதுவரை ஏற்பட்ட கருத்து ஒற்றுமையை இரு நாடுகளும் மதித்து நடக்க வேண்டும்அதுதான் இரு நாடுகளுக்கும் நல்லது” என்று கூறியதன் மூலம் ஊடுருவிய இந்தியப் பகுதி யில் தங்கள் படைகள் தொடர்ந்து முகாமிட்டு இருக்கும் என்று சீனா சூசகமாக தெரிவித்தது.

இந்தியாவில் பத்திரிகைகளும், ஊடகங்களும் சீன இராணுவத்தின் ஊடுரு வலை ‘ஆக்கிரமிப்பு’ என்றும், ‘போர் முஸ்தீபு’ என்றும் பூதாகரமாக செய்தி வெளியிட்ட போது, சீனாவில் உள்ள பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் எதுவும் நடக்காதது போன்று அமைதி காத்தன.

பாரதிய ஜனதா கட்சி, எல்லையில் நீடிக்கும் பதற்றம், மன்மோகன்சிங் அரசின் கையாலாகத் தனத்தைக் காட்டுகிறது என்று சாடியது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ்,சீனா யுத்த பேரிகை கொட்டுகிறது என்று முழங்கினார்.

இந்திய அரசு தரப்பில் சீனாவுடன் ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தை நடத் தியதும், சீனப் பிரதமர் லீ கெகியாங் இந்திய வருகை உறுதி ஆனதும் எல்லை யில் நிலைமை சீரடைவதற்கு வழி வகுத்தது. மே 5 ஆம் தேதி சீனத் துருப்புகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலைக்குத் திரும்பின.

இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், எல்லைக் கட்டுப்பாட்டு
பகுதியில் ((Line of Actual Control LAC) உள்ள இருநாட்டு துருப்புகளும் அந்தந்த நிலையில் நீடிப்பது என்றும், சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் பேசித் தீர்க்க வேண்டுமேயொழிய, இராணுவம் முன் னேறுவது கூடாது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 15 இல் இருந்து மே 5 ஆம் தேதிவரை இருபது நாட்கள், இந்தியாவின்
கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரின் லடாக் கிழக்குப் பகுதியில் உள்ளே நுழைந்து
முகாமிட்டிருந்த சீன இராணுவம் பின்னர் தானாகவே முன் வந்து, தனது பகு திக்கு திரும்பிச் சென்றது.

என்ன காரணத்திற்காக சீன இராணுவம் ஊடுருவியது? இதன் மூலம் இந்திய
அரசுக்கு என்ன செய்தியை சீனா கூற விரும்பியது? என்றெல்லாம் எழும் வினாக்களுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.

சீனப் பிரதமர் வருகை

எல்லையில் இவ்வளவு கடுமையான போர் முஸ்தீபு போன்ற நடவடிக்கை களை முடுக்கிவிட்டு, பின்னர் எதுவுமே நடக்காததைப்போல, சீனப் பிரதமர் லீ
கெகியாங், மே 19 ஆம் தேதி மாலை டெல்லிக்கு வருகை புரிந்தார். மே 20 ஆம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய அரசின் உயர்மட்டக் குழுவின ரோடு ஐதராபாத் இல்லத்தில்பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், சீனப் பிரதமர் வெளியிட்ட செய்தியில், “இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காணப்படும்” என்றார்.

மேலும், “நான் பிரதமராக பதவியேற்றவுடன் என்னுடைய முதல் வெளி நாட் டுச் சுற்றுப் பயணம் எதுவாக இருக்க வேண்டும் என யோசனை செய்தபோது,
முதலில் என் மனதில் தோன்றியது இந்தியாவே. உலகின் மிகப் பெரிய ஜன நாயக நாடு இந்தியாதான்.சீனாவுக்கு இணையாக மக்கள் தொகையையும் கொண்ட நாடு.இருநாடுகளின் மக்கள் தொகை 2.5 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) உலக மக்கள் தொகையில் இது 40 சதவீதம் ஆகும்.

உலகச் சந்தையில் இந்தியாவும்,சீனாவும் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன  இருப்பினும் இருநாட்டு வர்த்தகம் கடந்த ஆண்டில்,70பில்லியன் டாலர் மதிப்பு தான் (சுமார் 3 இலட்சத்து 87 ஆயிரத்து 240 கோடி) இருந்தது. இருநாட்டு வர்த்தக உறவுகளும் பொருளாதார ஒத்துழைப்பும் இன்னும் மேம்பட வேண்டும்.”

“உலகப் பொருளாதாரத்தை இயக்கும் சக்தியாக ஆசியா திகழ்கின்றது. சீனா,
இந்தியா ஆகிய இரு நாடுகளின் பங்களிப்பு இல்லாமல், இது சாத்திய மாகாது. இரு நாடுகளும் ஆசிய கண்டத்தில் இணைந்து கைகோர்த்து நின்றால், அது உலக அமைதிக்கு வித்திடும். சீனாவும், இந்தியாவும் கைகோர்த்தால், அது இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஆசியாவின் வளர்ச் சிக்கும் உலக நடப்பில் இரு நாடுகளும் பெரும் பங்கு வகிக்கும் சூழலும் உரு வாகும்” என்று சீனப்பிரதமர் லீ கெகியாங் தமது நாட்டின் விருப்பத்தையும், சீனா, இந்தியா உலக அரங்கில் வகிக்க வேண்டிய பாத்திரத்தையும் சுட்டிக்
காட்டினார்.

சீனாவுடன் ஒப்பந்தங்கள்

சீனப் பிரதமர் வருகை தந்தபோது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மே 20 ஆம் தேதி எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

1. இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த மூன்று செயல் குழுக்களை அமைத்தல்.
2. கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வயர்லஸ் செட் மற்றும் சிம் கார்டுகள் வழங்குவது.

3. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் பிரம்மபுத்திரா
நதியின் நீர் மட்டம், சீன அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் அளவு
குறித்து இந்தியாவுக்கு தினமும் அறிக்கை அளிப்பது.

4. குறைந்த நீரில், நிறைவான பாசன வசதிக்கான தொழில்நுட்பத்தை இந்தியா வுக்கு வழங்குவது.

5. இருநாடுகளின் மீன், இறைச்சி போன்ற உணவுப் பொருட்களின் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு.

6. இந்தியாவுக்கு, கழிவு நீர் சுத்திகரிப்புக் கான தொழில்நுட்பம் வழங்குவது.

7. இரு நாடுகளின் பாரம்பரியமுள்ள 25 நூல்களை மொழி மாற்றம் செய்வது.

8. இருநாடுகளின் பாரம்பரியத்துடன் இணைந்த நகரங்கள், மாநிலங்களைக்
கண்டறிந்து உறவை மேம்படுத்திக் கொள்வது.

பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட செய்தி

சீனப் பிரதமர் லு கெகியாங் சந்திப்புக்குப்பிறகு, பிரதமர் மன்மோகன்சிங் வெளி யிட்ட அறிக்கையில், “சீனா-இந்தியா இடையே நல்லுறவு நிலவினால்தான் இந்தப் பிராந்தியத்தில் அமைதி ஏற்படும். இரு நாடுகளுமே மிகப்பெரிய நாகரிக சமுதாயத்தைக் கொண்டவை.இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக பல பிரச்சினைகள் உள்ளன. ஆனாலும் கடந்த 25 ஆண்டுகளாக எந்தவொரு
பிரச்சினையும் வேறுபாடுகளும் ஏற்பட வில்லை.

கடந்த காலங்களில் நிகழ்ந்த சம்பவங் களை எல்லாம் தாண்டி இப்போது இரு
நாடுகளின் உறவு பன்மடங்கு வளர்ந்து உள்ளது. அமைதியும், நல்லிணக்கமும்
மிகவும் அவசியம். இதற்கு இரு நாடுகளுமே சம்மதம் தெரிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப்  பிரச்சினைக்கு விரைவில் சுமூகத் தீர்வு
காணப்படும். சமீபத்தில் லடாக் பகுதியில் சீன இராணுவத்தின் ஊடுருவல் நடைபெற்றது குறித்தும் பேசினோம். இந்தப் பிரச்சினை பெரிதாகி ஒரு யுத்தம் ஏற்படும் அளவுக்குச் சென்றுவிடாதபடி, இரு நாடுகளுமே பொறுப்புடன் நடந்து கொண்டது மிகவும் திருப்தி அளிக்கிறது.

இந்தியா-சீனா இடையே சாலை போக்குவரத்து ஏற்படுத்த வேண்டியது அவசி யம். வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வங்கதேசம், மியான்மர் வழியாக இந் தியா-சீனா இடையே சாலை அமைப்பதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள் ளன” என்று குறிப்பிட்டார்.மேலும் சீனாவுக்கு வருகை தருமாறு சீனப் பிரதமர் விடுத்த அழைப்பையும் ஏற்றுக்கொண்டதாக பிரதமர் மன்மோகன்சிங் தெரி வித்துள்ளார்.

சீன இராணுவம் ஊடுருவல் ஏன்?

சீன, இந்திய நாட்டுப் பிரதமர்களின் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து, முன் னேற்றம் கண்டது என்கிறபோது,எல்லையில் சீனஇராணுவம் நுழைந்தது ஏன்? சீனப் பிரதமர் இந்திய வருகைக்கு முன்பு மிரட்டல் விடுக்கப்பட்டதா? என்ற
கேள்வி எழுகிறது.

இன்றைய உலக ஒழுங்கமைப்பில் அமெரிக்காவின் சக்திக்கு ஈடுகொடுக்கும் நாடாக சீனாதான் விசுவரூபமெடுத்து வளர்ந்துவிட்டது.அமெரிக்கப் பொருளா தாரத்தை விஞ்சக்கூடிய ஆற்றல்மிக்க நாடாக சீனா வடிவம் பெற்றுள்ளது. ஆசிய கண்டத்தையும் தாண்டி சீனா உலக அரங்கில் முன்னணிக்கு வருவதை
“உலக போலீஸ்காரன்”அமெரிக்கா விரும்பவில்லை என்பது யதார்த்தம். ஆசி யாவில் சீனாவுடன் இந்தியா கைகோர்த்து, ஒருங்கிணைந்து செயற் படாத வாறு இந்தியாவை தம் கூட்டாளி நாடாக கட்டுக்குள் வைத்திருக்க வேண்டி யது அவசியம் என்று அமெரிக்கா கருதுகிறது.

அமெரிக்காவின் உள்நோக்கம் நிறைந்த செயல்பாட்டுக்கு இந்தியா துணை
போய்க்கொண்டிருக்கிறது. இதுதான் சீனாவின் கண்களை உறுத்துகிறது. இந்தி யாவுடன் நட்புறவை மேம்படுத்த அமெரிக்கா போட்டு வரும் தடைதான் சீனா விற்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

இந்தியச் சந்தையில் சீனா

சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகம் 2002-2003 இல் 477 கோடி டாலராக இருந் தது. 2012-13 இல் 7400 கோடி டாலராக 14 மடங்கு அதிகரித்து இருக்கின்றது. இவற்றில் 5403கோடி டாலர் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட் களாகும். மாறாக, 1353 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களே இந்தியாவி லிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி ஆகி உள்ளன. இரு நாடுகளுக்கும் வர்த்தக பற் றாக்குறை 4077 கோடி டாலர்.இது இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை யில் பாதி அளவு ஆகும். பொருளாதார நிபுணர்கள் இது அபாயகரமானது என்று எச்சரிக்கை தருகின்றனர்.

சீனாவிலிருந்து இந்தியா பொருட்களை இறக்குமதி செய்கிறது. ஆனால்,மூலப்
பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதனால் இந்தியப் பொருளா
தாரத்தில் எதிர்மறையான வர்த்தக சமனை ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டு களில் சீன பொருட்களின் படையெடுப்பு இந்தியாவில் பெரும் அளவில் இருக் கின்றது. இதனால், உள்நாட்டின் ஒருங்கிணைந்த உற்பத்தித் துறை சரிந்து வரு கிறது.

இந்நிலையில், சீனாவுடன் பொருளாதார வர்த்தகங்களை மேம்படுத்திக் கொள் ள வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருக்கின்றது. சீனப் பிரதமர் கூறிய வாறு ஆசியாவில் இருநாடுகளும் ஒன்றையொன்று சார்ந்து கை கோர்த்து நிற்க வேண்டிய தேவை எழுந்து இருக்கின்றது. ஆனால், நடைமுறையில்
பிரச்சினைகள் முளைக்கின்றன.எல்லையில் சீனத்தின் மிரட்டல் வருகின்றது. இதற்கான அடிப்படைக் காரணங்கள் எதுவாக இருக்கும் என்பதையும் ஆராய வேண்டும்.

தொடரும் எல்லைப் பிரச்சினை

1947 இல் இந்தியா விடுதலை பெற்ற காலத்திலிருந்து சீனாவுடனான எல்லைப் பிரச்சினை இருந்து வருகின்றது. 1962 அக்டோபரில் சீனாவுடன் போர் மூண்ட போது, என்ன மாதிரி நிலைமை இருந்ததோ, அதே போன்ற காரணங்களை 2013 ஏப்ரலில் இந்திய எல்லைப் பகுதியில் சீனா ஊடுருவலுக்கு காரணமாகக் கூறு கிறது.

1993 இல் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருநாடுகளும் ஆக்கிரமிப்பு செய் யக்கூடாது என்று உடன்பாடு காணப்பட்டது. 1996 இல் இரு நாட்டு இராணுவ மும் தங்கள் எல்லைக் குள்ளேயே ரோந்து வர வேண்டும் என்றும், 2005 இல் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில் எவ்வித கட்டுமானப் பணிகளும் செய் யக்கூடாது என்றும் சீனாவும்-இந்தியாவும் ஒப்புக் கொண்டன.

இந்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் காஷ்மீர் மாநிலத்தின் சர்ச்சைக்குரிய
லடாக் கிழக்குப் பகுதியில் சும்மார் (Chumar) என்ற இடத்தில் இந்தியா நிரந்தரக் கட்டுமானங்களை அமைத்ததும், பதுங்கு குழிகளை உருவாக்கியதும், கண் காணிப்பு இராணுவப் படையினைக் குவித்ததும் தான் ஏப்ரல் 15 ஆம் தேதி சீனாவின் அத்துமீறலுக்குக் காரணம் என்று அந்நாட்டின் நடவடிக்கைகள் தெளிவு படுத்திவிட்டன.

1962 இல் சீன-இந்தியப் போர் வெடிப்பதற்கும், இந்தியாவின் ‘முன்னேறும் கொள்கை’ தான் காரணமாயிற்று என்பதையும், பலமிக்க உலகத் தலைவர் என்று மதிக்கத்தக்க இடத்திலிருந்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சீனப்போரின் போது தடுமாற்றத்திற்கு ஆளானார் என்பதையும், இதனால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு உருவானது என்பதையும் வரலாற்றுப் பாதை யில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். 1962 சீனப் போருக்கான
காரணங்களைத் தொடர்ந்து ஆராய்வோம்.

தொடரும்..........
நன்றிகள் 


கட்டுரையாளர் :- ஈழ வாளேந்தி

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment