Tuesday, June 18, 2013

தண்ணீர்..தண்ணீர்.. தண்ணீர்.. பகுதி -2

தமிழகத்தைத் தவிக்கவிட இந்திய அரசின் திட்டமிட்ட சதி!

ஒருங்கிணைந்த சென்னை மாகாணமாக இருந்தபோது தண்ணீர் பற்றாக் குறை யில்லாமல் இருந்தது.1953 இல் ஆந்திரா தனிமாநிலமாகப்பிரிந்தது. 1956 இல் மாநிலங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதன் விளைவாகவே தமிழகம் தண்ணீரை இழக்க நேர்ந்தது.

அறிஞர் அண்ணா ஆசைப்பட்ட (தென்னாடு) திராவிட நாடு மட்டும் அமைந்தி ருக்குமானால், நீர்வளம், நிலவளம், தொழில்வளம், மனித வளம் ஆகிய அனைத்து வளங்களும் பொருந்திய நாடாக அமைந்திருக்கும்.
வடக்கு தெற்கு எனும் பிரிவினை உணர்வு கொண்டது தமிழ்நாடு என்பதால் தான், தமிழ்நாட்டுக்கு எல்லா விதத்திலும் இடையூறு விளையும் வகையில், உள்நோக்கமுடன் இந்திய அரசு இன்றுவரை மாமியார் மனப் பான்மையில் அலட்சியம் செய்து வருகிறது. தமிழ்நாடு என்றாலே வேண்டாத மருமகள் நிலையில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்வதை மனதிற் கொள்ள வேண்டும்.

வைகோ,மதிமுக,தண்ணீர் ,vaiko,mdmk

இந்திய அரசின் திட்டமிட்ட சதிகேடு

1956 இல் மாநிலங்களின் எல்லையை வரையறை செய்திட இந்திய அரசு ஒரு
குழுவை அமைத்தது. 100 க்கு 70 பேர் எந்த மொழி பேசுகிறார்களோ, அந்த மொழி பேசும் மக்களை அந்த மொழி பேசும் மாநிலத்தோடுதான் சேர்க்க வேண்டும் என்பது விதியாக இருந்தது.அந்த விதிகளின்படி எந்த மாநிலமும் பிரிக்கப்பட வில்லை. 100க்கு 90 பேர் தமிழ் பேசிய மக்கள் கொண்ட ஊர்களையெல்லாம் கேரளத்தோடும், கர்நாடகத் தோடும், ஆந்திரத்துடனும் சேர்த்துவிட்டார்கள்.

மொழி வழியாக மாநிலங்கள் என்று பிரிக்கப்படும்போது, மிக அதிகமாக தமிழ்
நாட்டுப் பகுதிகளையும், நீர் ஆதாரங் களையும் இழந்த நாடு தமிழ்நாடுதான்.
தமிழர்களைக் கெடுக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் காங்கிரஸ் செய்த
சதிகேடு இது என்பதே உண்மையாகும்.

1911 ஆம் ஆண்டு வரையிலும் திருப்பதி வடஆற்காடு மாவட்டத்திற்குள்தான் இருந்தது. ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்’ என் பது இலக்கியச் சான்று.முறைப்படி திருப்பதி தமிழ்நாட்டுடன் தான் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும்.ஆனால், நடந்தது என்ன? தமிழ்நாட்டின் வட எல்லை யான திருப்பதி மற்றும் சித்தூர் மாவட்டப் பகுதிகள் எல்லாம் ஆந்திராவுக்குக் கொடுக்கப்பட்டது.அதனால் பாலாற்று நீராதாரம் பாதிக்கப் பட்டது.

கோலார் தங்கவயல், கொள்ளேகால் பகுதிகள் கருநாடகத்திற்கு கொடுக்கப்
பட்டது. அதனால், காவிரியின் நீர்வரத்து தடுக்கப்பட்டது.

பாலக்காடு, முக்காலி பகுதிகளும்,மூணாறு, தேவிகுளம், பீர்மேடு, முல்லைப் பெரியாறு, தேக்கடி அணைப்பகுதிகள் மற்றும் செங்கோட்டைப் பகுதியும் கேரளாவுக்குக் கொடுக்கப் பட்டது. அதனால், பவானி நதி,அமராவதி நதி, முல்லைப் பெரியாறு,வைகை நதி, செண்பகா அருவி, தாமிரபரணி, ஆகியவற் றின் நீராதாரங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

இந்தச் சதிகேடுகளைத் திட்டமிட்டே செய்தது இந்தியக் காங்கிரஸ் கட்சியினர்
என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.தமிழ்நாட்டின் நீர்வளம் காலம் முழுவ தும் தகராறுக்கு உரியதாக ஆக்கி வைத்து வேடிக்கை பார்க்கிறது இந்திய அரசு. இதற்குத் தீர்வு கண்டால் தான் தமிழ்நாடு முன்னேற முடியும்.

ஆகவேதான் மாநிலங்களின் எல்லை களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
என்கிற புதிய கோரிக்கையை நாடாளு மன்றத்தில் முன் வைக்க வேண்டும்.
இதற்குத் தகுதியுள்ள ஒரே தலைவர் வைகோ மட்டும்தான். அவரைத் தவிர
வேறு எவராலும் இதைச் சாதிக்க முடியாது. அதற்குப் பக்க பலமாக தமிழ் நாட் டின் அரசு அதிகாரம் அவரிடம் இருக்க வேண்டும்.

மத்திய அரசை ஆட்டம் காணச்செய்திடும் வல்லமை வாய்ந்த எம்.பி.க்கள் வைகோவிடம் இருக்க வேண்டும். அந்த நிலை ஏற்படுமானால், பறிபோன ஊர் களைத் திரும்பப் பெற போராட முடியும். நதி நீர்ப் பங்கீடுகளின் படி நமது பங் கான நீராதாரங்களை முழுமையாகப் பெற முடியும்.வைகோவின் வெல்லும் சொல்லுக்கு வடக்கு சரணடையும் சாத்தியக் கூறுகள் நிச்சயமாக உள்ளன.

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 1,30,000 சதுர கிலோ மீட்டர்.தமிழ்நாட்டின் மக்கள் தொகை (2013) இன்றைய கணக்குப்படி 7 கோடியே 30 இலட்சம் (தின மணி செய்தி).

தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகள் மற்றும் நதிகளைப் பற்றிய சில குறிப்புகளை
வைத்துப் பார்க்கும்போது, தமிழ்நாடு அரசின் குறிப்பு ஏடுகளில் நதிகளை 3 வித மாகப் பிரித்துப் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது.

20 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட நதிகளைப் பெரிய ஆறுகள் (Major Rivers) என்றும், 2,000 முதல் 20,000 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டவை நடுத்தர ஆறுகள் (Medium Rivers) என்றும், இதற்குக் குறைவான பரப்பளவு கொண்ட சிறிய ஆறுகளை ((Minor Rivers) என்றும் அளவிட்டுள்ளனர்.

இந்த அளவுகோள் அடிப்படையில் பார்த்தால், காவிரி ஆறு மட்டுமே பெரிய
நதி ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் 33 ஆற்றுப்படுகைகள் உள்ளன. இந்த ஆறு கள் அனைத்தும் பருவமழையால் மட்டுமே பெருக்கெடுத்து வருபவை.

அந்த ஆறுகளின் பெயர்கள் வருமாறு:-   ஆரணியாறு,  கொறட்டலையாறு, கூவம் , அடையாறு, பாலாறு, ஓங்கூராறு, வராகநதி, மலட்டாறு, பெண்ணை யாறு, கடிலம் ஆறு, வெள்ளாறு, காவிரி, அக்னியாறு, அம்புலியாறு, வெண் ணாறு, கொலுவனாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, கோட்டாலையாறு,வைகை, உத்தரகோசமங்கையாறு, குண்டாறு, வேம்பாறு, வைப்பாறு, கல்லாறு, கோரம் பள்ளம் ஆறு, தாமிரபரணி, கரமனையாறு, நம்பியாறு,அனுமா நதி,பல்ல வாறு, வள்ளியாறு, கோதையாறு என 33 ஆற்றுப் படுகைகளைக் கொண்டது தமிழ் நாடு.

வட இந்தியாவைப்போல வற்றாத ஜீவநதிகள் தமிழ்நாட்டில் இல்லை. 

தமிழ் நாட்டில் மொத்தம் 52 பாசன நீர்த்தேக்கங்கள் உள்ளன. 39,000 ஏரிகளும் தமிழகத் தில் உள்ளன. அவற்றில், 25,600 ஏரிகள் வானம் பார்த்த ஏரிகளாகும். இவற்றிலும் பல ஏரி, குளங்களை ஆட்சியாளர்கள் பட்டா போட்டு விற்று விட் டார்கள். 

பருவமழையால் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த நீர் அளவு 2,400 கோடி கன மீட்டர். அண்டை மாநிலங்களில் இருந்து வரும நீரின் அளவு 1,200 கோடி கனமீட்டர்.ஆகமொத்தம் ஆண்டு ஒன்றுக்கு 3,600 கோடி கனமீட்டர் நீர் நமது மாநிலத்திற்குக் கிடைக்கிறது.

அரசு அதிகாரிகள் தரும் கணக்குப்படி தமிழ்நாட்டில் 18,26,906 கிணறுகளும்,
41,948 டாங்குகளும் உள்ளன.இவற்றின் மூலம் சராசரியாக 21.3 விழுக்காடு பகுதிக்கு நீர்ப்பாசன வசதி கிடைத்து வருகிறது. 13,00,000க்கு மேற்பட்ட கிணறு களுக்கு பம்ப்செட் வசதி உண்டு. இந்தியாவிலேயே அதிக அளவு பம்ப்செட் பயன்படுத்தும் மாநிலம் தமிழ்நாடு தான் என்பது அரசுக்குறிப்பிலிருந்து தெரிய வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது ஊற்றுப் பெருக்கெடுக்கும் வாய்ப்பு உள்ள மொத்த நிலத்தடி நீரளவு 2,640 கோடி கனமீட்டர். இதில் இருந்து தற்போது 1,320 கோடி கனமீட்டர் தண்ணீரை ஆண்டுதோறும் இறைத்து வருகிறோம்.நிலத்தடி நீர் குறைந்துகொண்டே வருகிறது. இது மிகவும் ஆபத்தான அறிகுறியாகும். இது வரை எந்த அரசும் இதைப்பற்றி கவலைப்படுவதில்லை. (உங்கள் தலைவர் (வைகோ) மட்டும் தான் நாட்டைப் பற்றி,நீராதார இழப்பால் விவசாயம் அழிந்து வருவதைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுகிறார்) அரசு அதிகாரி ஒருவர் சொன்ன வார்த்தை இது.

உலக நீர்வளம் 48,000 கன கிலோ மீட்டர் என்றால், தமிழகத்தின் நீர் வளம் 4.8 கன மீட்டர்தான். அதாவது பத்தாயிரத்தில் ஒரு பங்கு எனக் கொள்ளலாம். தமிழக மக்கள் தொகையோ உலக மக்கள் தொகையில் நூறில் ஒரு பங்காகும். சராசரியாக உலக மனிதன் ஒருவனுக்குக் கிடைக்கும் நீரில், நூறில் ஒரு பங்கு மட்டும் தான் தமிழனுக்குக் கிடைக்கிறது. எனவே, இக்கணக்குப்படி தமிழகம் நீர்வளத்தில் மிக மிகப் பற்றாக்குறையோடு உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதே சமயம் இன்னொன்றையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். திபேத் வழி யாக இந்தியா வந்து சேரும் பிரம்மபுத்திரா நதியின் நீர் வளமோ 900 கன மீட்டர். தமிழகத்தின் நீர்வளத்தைப் போல 19 மடங்கு அதிகமாகும். காவிரி ஆற்றில் நமக்கு உரிய பங்கே நமக்குக் கிடைக்காதபோது, இந்திய நீர்வளத்தினால் நமக் கு உடனடியாக எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

வைகோ அவர்கள் ஏற்கனவே தென்னக நதிகளை இணைக்க வேண்டும் என்று
நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்து,மூன்று மாதம் விவா தம் நடைபெறச் செய்தார். நதிநீர்ப் பிரச்சினை பற்றி அவர் பேசும் போது, எந்த விதமான சிறு குறுக்கீடுகள் கூட ஏற்பட்டதில்லை. வைகோ விரும்பியபடி
தென்னக நதிகளை இணைத்தாலே போதும். விவசாயம் செழித்து நீர்ப் பற்றாக் குறை நீங்கி தமிழகம் பல துறையிலும் முன்னேற்றம் அடையும்.

ஆங்கிலேயர் காலம் முதல் இன்றுவரை தமிழகத்தில் கட்டப்பட்ட அனைத்து
அணைகளின் மொத்தக் கொள்ளளவு 440 டி.எம்.சி. ஆகும். தமிழர்களால் பழங் காலத்தில் கட்டப்பட்டு அழிந்தது போக எஞ்சியுள்ள 39,200 ஏரிகளின் கொள்ள ளவு மட்டும் 390 டி.எம்.சி. என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஏரி குளங்கள் அமைத்து நீரைச் சேமித்து வைப்பதில் பண்டைத் தமிழர்கள் மிக
மிக உயர்ந்த நிலையில் இருந்தனர்.2,000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை குறித்து ஆய்வு செய்த ஆங்கிலப்பொறியாளர் சர்.ஆர் தர் காட்டன் அவர்கள், “ஆழங்காண முடியாத மணல் பரப்பில் அடித்தளம் அமைத்து அணை கட்டுவது குறித்த தொழில் நுட்பத்தை இங்கிருந்துதான் கற்றுக்கொண்டோம்” என்று கல்லணையின் கட்டுமானத் திறனை வியந்து போற்றுகின்றார்.

ஏரிகளின் மாவட்டமான பழைய செங்கற்பட்டு மாவட்டத்தில் 2,000 கிராமங் களிலும் 1,762 முதல் 1,766 வரை நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி நெல் விளைச் சல் அமோகமாக இருந்ததுபற்றி 10 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையான சோழர்காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

உலகத்தின் தலைசிறந்த ஆய்வாளரும்,கவாய் பல்கலைக் கழகப் பேராசிரியரு மான டாக்டர் ரேமன் டி லாபினா (Dr. Ramon De lapena) அவர்களின் ஆய்வுரையில் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள 62,500 குடும்பங்களின் விவசாய செழிப்பை யும், நெல் விளைச்சலின் இருபோகப் பொலிவுகளையும் கண்டு வியப்படை
கின்றார்.

18 ஆம் நூற்றாண்டு விளைச்சல் குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக ஓலைச் சுவடிகளில் இருந்து இந்த ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். அன் றைய தமிழகத்தில் ஆயிரக் கணக்கான நெல் வகைகள் இருந்திருக்கின்றன. பருவ காலத்திற்கேற்ப விளையும் நெல்மணிகள் பல இருந்தன.

கடுமையான வறட்சியையும் மிகுதியான அடை மழையையும், நோய்களைத்
தாங்கும் சக்தியையும் நீருக்குள்ளே இருந்து வளரும் தன்மையையும் இயல் பாகவே பெற்றுள்ள நெல்மணிகள் செங்கை மாவட்டத்தில் இருந்ததாக ஆய்வு கள் தெரிவிக்கின்றன. இப்போது இவ்வகையான நெல்மணிகள் அறவே இல்லை.

திருப்பூரின் பெருமை சொல்லவும் பெரிதே

இன்றைய திருப்பூரின் தொழில்வளர்ச்சி நொய்யல்நதியை இல்லாமல் ஒழித்து விட்டது. அதே நொய்யல் நதிக்கரையில் “கொடுமணல்” எனும் நகரம் கி.மு.400 முதல் கி.பி. 200 வரை 600 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புடையது. உலகம் முழுவதும் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்து வந்திருக்கின்றது. இத்த கைய பழம் பெருமையைத் தற்போதைய அகழ் ஆய்வு உறுதி செய்துள்ளது.

இதுவரை இந்தியாவில் நடத்தப்பட்ட அகழ் ஆய்வில் கிடைக்கப்பெற்ற மொத்த ரோம் நாணயங்களில் 50 சதவிதத்திற்கு மேல் அங்கு கிடைத்து உள்ளன. கோவைப் பகுதியில் இருந்து கொடுமணல் வரையிலும் நொய்யல் நதியில் அந்தக் காலத்தில் 32 தடுப்பு அணைகள் கட்டப்பட்டு மிகச் சிறந்த முறையில் வேளாண்மை செய்யப்பட்டு உள்ளதை அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சிறப்புக்குரிய திருப்பூரில் ம.தி.மு.க.அவைத் தலைவர் சு.துரைசாமி அவர்கள் வீற்றிருப்பது அப்பகுதிக்குப் பெருமை தருவதுடன், நம்மையெல் லாம் பெருமிதம் கொள்ளச்செய்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க அப்பகுதிகள் சேரர் ஆட்சியில் இருந்துள்ளது. அங்கு
பல்வேறு அணிமணிகள் செய்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இரும்பு உருக் கு உற்பத்தி செய்யப்பட்ட உலைக்கலன் அறியப்பட்டுள்ளது. சேரர் ஆட்சிப் பகுதியில் இருந்த முசிறி, தொண்டி துறைமுக நகரங்கள் மூலம் ஏற்றுமதி
செய்யப்பட்டன. அதன் மதிப்பு இன்றைய திருப்பூரின் ஏற்றுமதியைவிட அதிக மதிப்புடையதாகும். கொடுமணல் நகரம் குறித்து இச் செய்திகளைத் தொல் பொருள் அகழ்வு ஆய்வாளர் திரு.இராஜன் அவர்கள் தனது நூலில் விரிவாக எழுதியுள்ளார். இத்தகைய பெருமைக்குரிய அந்த நொய்யல் நதி இன்று இல்லாமல் போனது வருந்தத்தக்க செய்தியாகும்.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே

தொடரும்....
நன்றிகள் 

கட்டுரையாளர் :- கவிஞர் தமிழ்மறவன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment