Saturday, June 1, 2013

தமிழ் ஈழம் கானல் நீரல்ல... இரத்தத்தால் தியாகத்தால் எழுப்பப்பட்ட இலட்சியக் கோட்டை! பகுதி 1

சென்னை தியாகராயர் நகரில் 27.11.2010 அன்று, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற் றது. பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய எழுச்சி உரை வருமாறு:-

விடுதலைப் போர்க் களத்தில் செங்குருதி சிந்தி தங்கள் நல்லுயிரை மாய்த்துக் கொண்ட மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தவும், சூளுரை மேற்கொள்ள வும் தரணியெல்லாம் வாழும் தமிழர்கள் கடமை மேற்கொண்டு இருக்கின்ற இந்த மாவீரர் நாளில் தலைநகர் சென்னையில் முத்துரங்கன் சாலையில் நடை பெறுகின்ற இந்தப்பிரமாண்டமான கூட்டத்துக்குத்தலைமை தாங்கு கின்ற என்னுடைய ஆருயிர் அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களே!


தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சிச்சார்பிலே உரையாற்றிய அதன் முன் னணித் தலைவர்களில் ஒருவரான அருமைச் சகோதரர் வைகறை அவர்களே! தமிழர் தன்மானப் பாசறையின் பொதுச் செயலாளர் அருமைச்சகோதரர் ஆவடி மனோகரன் அவர்களே! உழைக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலை வர் பேரன்புக்குரிய மெல்கியோர் அவர்களே!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்
ஆருயிர் இளவல் மல்லை சத்யா அவர்களே!

நெஞ்சிலே நிலைத்து நிற்கின்ற நிகழ்ச்சியை நம் உள்ளங்கள் வேதனையால்
நெகிழ்ந்து போகின்ற வகையிலும் அடிகளாரைப் போல, ஆம் -வள்ளலாரைப் போல அறவழியிலே தமிழக அரசியலிலே புகழ் மலையில் போற்றப்படு கின்ற வர் என்று எத்தனையோ மேடைகளில் நான் பாராட்டி இருக்கின்ற எனது அன்பு
அண்ணன் பழ. நெடுமாறன் அவர்கள் இனி பொறுப்பதற்கில்லை.எரிதழல் எடுப் போம்; தமிழ் ஈழ விடுதலையைப் பெற்றுத்தர, மாவீரர் திலகம் பிரபாகரனுக்குத் தோள் கொடுக்கின்ற தமிழர் படை புறப்படுகின்ற நாள் வந்து விடும் என்பதற்கு அறிகுறியாகத்தான் வேளச்சேரி மணிமாறனின் ஏற்பாடு இருக்கிறது என்று முழக்கம் இடுகின்ற அளவுக்கு இந்த நிகழ்ச்சியைச் சிறப்புடன் அமைத்துத் தந்தி ருக்கின்ற தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆருயிர்ச் சகோதரர் மணி மாறன் அவர்களே!

மேடையிலே அமர்ந்திருக்கின்ற தமிழ் உணர்வாளர்களே! வெள்ளமெனத் திரண்டிருக்கின்ற தமிழ்ப் பெருமக்களே! பத்திரிகையாளர்களே!

கூற்றுடன்று மேல்வரினும் கூடிஎதிர் நிற்கும் 
ஆற்றல் அதுவே படை 

என்ற வள்ளுவர் வாய் மொழிக்கு இலக்கணமாக ஈட்டி பாய்ந்தாலும், இமை கொட்டாது மார்பு காட்டும் கூட்டம்தான் இந்த வீர வணக்க நாள் கூட்டத்துக்குத் திரண்டு வந்திருக்கின்ற வேங்கைகள் என்று பாராட்டும் அளவுக்குக் குவிந்தி ருக்கின்ற வாலிபப் பட்டா ளமே! தமிழர் நெஞ்சங்களே!சிரம் தாழ்ந்த வணக்கம்.

நான் பேசுகின்ற இடம் தியாகராய நகர் -முத்துரங்கன் சாலையா? அல்லது 2003-
ஆம் ஆண்டின் கிளிநொச்சியா? என்று பிரமிக்க வைக்கின்ற காட்சியைப் பார்க் கிறேன். அந்தத் தழல் அணைய வில்லை. அவர்கள் தூக்கிய ஆயுதங் களுக்கு எதிரே, மூட்டப்பட்டு இருக்கின்ற அந்தத் தியாகத் தணல் அணைய வில்லை. அந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற கடமையை ஆண்டு தோறும் செய்வதை அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களும், அன்புச்சகோதரர் வைகறை அவர்களும் வரலாற்று நிகழ்வினை இங்கே பதிவு செய்தார்கள். 28 ஆண்டுகளுக்கு முன்னால், ஈழத்திலே சிங்களக் காடையரால் வேட்டையாடப் பட்டு, மேனியிலே குண்டு பாய்ந்த நிலையில்,அலைகடல் தாண்டி தமிழகத் துக்கு வந்து சேர்ந்த சங்கர் என்ற சிவகுமாரன்.செய்யப்பட்ட மருத்துவம் பய னின்றிப் போக, அவன் உயிர்மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக அணைந்து கொண் டிருந்த வேளையில், பத்து மாதக் காலம் தன்னுடைய மணி வயிற்றிலே சுமந் து பெற்ற அன்னையை நினைத்துப் பார்க்காமல், தோள் மீதும், மார் மீதும்
சீராட்டி வளர்த்த தந்தையை நினைக்காமல், தம்பி.... தம்பி.... தம்பி....தம்பி.... என்று, மாவீரர் திலகம் பிரபாகரனுடைய பெயரை அந்த உதடுகள் உச்சரித் தவாறே, சிவகுமாரனுடைய உயிர் பிரிந்தது.

அவன் நினைவாகத்தான், 1989-ஆம் ஆண்டு சங்கர் என்ற சத்தியநாதன் மறைந் த நவம்பர் 27-ஆம் தேதியை அடர்ந்த வன்னிக் காடுகளுக்குள்ளே, பிரபாகரன் அவர்கள் சங்கர் என்ற சத்தியநாதனுக்கு மட்டுமல்ல; நம் தாயக விடுதலைக் காக, இரத்தம் சிந்தி, உயிர்களைத் தந்த வீரர்கள் -வீராங்கனைகள் அனைவருக் கும் மாவீரர் நாளாக அவர்களுக்கு நடுகல் நட்டுப்பெருமை சேர்ப்பதைப் போல வீர வணக்கம் செலுத்தி, அவர்கள் சிந்திய இரத்தத்தின்மீது சபதம் ஏற்போம் என்று 1989 நவம்பர் 27-இல் அறிவிக்கிறபோது, இதுவரை களச்சாவு அடைந்த வர்களின் எண்ணிக்கை 1,027 பேர் என்று பிரபாகரன் சொன்னார். 1989-இல் அவர்
குறிப்பிடுகின்றபோது, களத்துக்குச் சென்று பலியானவர்கள் - ஆயுதம் ஏந்திப்
போரிட்டு மடிந்தவர்கள் - விடுதலைப் புலிகளின் படைப் பிரிவில் சேர்ந்து
களத்தில் மடிந்தவர்கள் 1,027 பேர்.அவர்களுக்கு நான் வீரவணக்கம் செலுத்து கிறேன். இது மாவீரர் நாள் என்று 1989 நவம்பர் 27-இல் வன்னிக் காட்டிலே
அறிவித்தார்.

சங்கர் மறைந்து 28 ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன. 26-ஆம் ஆண்டு 2008-இல் பிரித்தானியத்திலே இருக்கின்ற நமது சொந்தங்கள், சகோதரர்கள் அழைப் பின்பேரில், நான் இலண்டன் நகருக்குச் சென்று பிரித்தானிய நாடாளு மன்றத் தின் ஒரு அரங்கத்திலே, மாவீரர் திலகம் பிரபாகரன் பிறந்த நாளாகிய 26- ஆம் தேதி உரையாற்றுகின்ற வாய்ப்பைப் பெற்றேன். 27-ஆம் தேதி, 60 ஆயிரத்துக் கும் மேல் திரண்டிருந்த இங்கிலாந்து நாட்டிலேயே அவ்வளவு பெரிய அரங்கம் இல்லையென்று சொல்லப்படும் எக்சென் அரங்கத்தில் உரையாற்றிய நிகழ்வு என் நினைவுக்கு வருகிறது. அது 2008-ஆம் ஆண்டு.

24 மாதங்களுக்குப் பிறகு, 2010-ஆம் வருடத்தில், அன்று நெஞ்சிலே ஏற்படாத சோகம் - அன்று உள்ளத் தில் பாயாத வேல்கள் - அந்தச் சோகங்களைச் சுமந்து
கொண்டவர்களாக, இலட்சோப இலட்சம் தமிழர்களின் விழிகள் கண்ணீர் சிந்தி
சிந்தி வற்றிப் போய்விட்டன என்ற நிலையில், இருண்டு விட்டதா தமிழ் ஈழத் தின் எதிர்காலம் - முடிந்து விட்டதா விடுதலைப்புலிகளின் படைக்கோலம் என் கிற கேள்வி எழுந்திருக்கின்ற வேளையில், அது ஒருகாலும் அழியாது. 2008-ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில், பிரபாகரன் அவர்கள் பேசுகின்றபோது, அந்த உரையை முடிக்கும் தருவாயில் சொன்னார்:

“எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து வந்தாலும், அனைத்தை யும் எதிர்கொண்டு, தமிழ் ஈழ சுதந்திர தனி அரசை அமைப்போம்.சத்திய இலட் சியத் தீயில் தங்களை எரித்து அழித்துக் கொண்ட மாவீரர்கள் சென்ற பாதை யிலே பயணிப்போம்; வெற்றி பெறுவோம்!” என்று சொன்னார்.

அங்கு எரியும் தீ - சத்திய இலட்சியத் தீ. இதற்கு இடையிலேதான் முள்ளி வாய்க் கால் சம்பவங்கள் கோடானுகோடி தமிழர்கள் உள்ளத்திலே வேதனை
தந்தன. விடுதலைப்புலிகளின் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமல்ல; தமிழ் ஈழத் தின் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள் எழுந்தன. புரட்சி இயக்கங்களில் எதிர்ப்புரட்சியாளர்கள் தோன்றுவதுண்டு. ஆயுதப்போராட்டங்களில் துரோகி கள் தோன்றுவதுண்டு.விடுதலை வரலாறுகளில் துரோகிகள் அவ்வப்போது
தோன்றுவதுண்டு. அதைப் போன்ற துரோகிகள் சிலர் பேனா முனைகளோடு புறப்பட்டிருக்கிறார்கள்; எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்;வலைதளத்தைப் பயன் படுத்து கிறார்கள்; இணையத் தளத்தைப் பயன்படுத்துகிறார்கள்; கணினியைப் பயன்படுத்துகிறார்கள்.

பிரமாண்டமான இந்தக் கூட்டத்தில், உணர்ச்சிமயமான இந்தக் கூட்டத்தில் வருகை தந்திருக்கின்ற இளம் தோழர்களே! கட்சிகளுக்கு அப்பாற்பட்ட இளந்
தோழர்களே! நான், என் கட்சிக்கு அழைக்கவில்லை; எங்கள் கட்சியிலே வந்து சேருங்கள்; எனக்குத் தோள் கொடுங்கள் என்று அழைக்கவில்லை. தொலை விலே இருக்கின்ற அந்த இளம் தோழர்களுக்கும் - வண்ண வண்ணக் காட்சி களைச் சின்னத் திரையிலே பார்ப்பதற்கு எத்தனையோ வாய்ப்புகள் உருவாகி இருக்கக் கூடிய காலகட்டத்தில், அந்திப் பொழுதிலேயே நீங்கள் பல்லாயிரக் கணக்கில் இங்கே வந்து குவிந்து விட்டீர்கள்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக, நானும், அண்ணன் பழ. நெடுமாறன் அவர் களும் இங்கே வருவதற்கு தாமதமாயிற்று. நீங்கள் வெள்ளமென வந்து குவிந் து விட்டீர்கள். அப்படிக் குவிந்திருக்கக் கூடிய இளைஞர்களுக்குச் சொல்லு கிறேன். வாலிப உள்ளங்களுக்குச் சொல்லுகிறேன். அழிக்க முடியாது. டி.பி. எஸ். ஜெயராஜ் எழுதுகிறார். வலைதளத்திலே பதிவு செய்கிறார். விஷத்தைக் கக்குகிறார். ஆலகால விஷத்தை அள்ளித் தருகிறார். குமரன் பத்மநாபன் பெய ரிலே விஷத்தைக் கக்குகின்ற செய்திகள் வெளிவந்தன. அதில் நம் நெஞ்சிலே போற்றுகின்ற பிரபாகரன் மீது குற்றச்சாட்டுகள் வைத்தார். இப்படிச் சிலர் புறப் பட்டிருக்கிறார்கள். அவர்களை முதலில் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். குழப்பம் விளைவிக்க முனைகிறார்கள். எல்லாம் முடிந்து விட்டது என்கிறார் கள். அது மட்டுமல்ல; கொலைகாரன் இராஜபக்சே-க்கு, பக்கபலமான கருத்து களைத் தருவதற்கு முனைகிறார்கள்.

நான் இந்தக் கூட்டத்தின் வாயிலாகச் சொல்லுகிறேன்.இந்தப் பூமிப் பந்திலே பல நாடுகளிலும் சிதறிக் கிடக்கின்ற ஈழத் தமிழ்ச் சகோதர. சகோதரிகளுக்கு
வேண்டுகோள் விடுக்கிறேன். ஏதிலிகளாக, நாதியற்றவர் களாக, சர்வதேச அநாதைகளாக, ஏதுமற்றவர்களாக உலகத்தின் பல நாடுகளிலும் சிதறிக் கிடப் பதுதான் வாழ்க்கையா? அல்லது செய்கிற வேலையிலே கிடைக்கின்ற ஊதி யத்தைப் பற்றி மட்டுமே எண்ணி இனி வாழ்க்கையை நடத்துவோம் என ஒரு சிலர் நினைக்கிறார்களே! அதுதான் வாழ்க்கையா? இல்லை. நீங்கள் காலமெ லாம் உங்கள் வாழ்வை தமிழ் ஈழ விடுதலைக்கு அர்ப்பணித்தீர்களே! உங்க ளைப் பட்டினிப் போட்டுக் கொண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு
நீங்கள் உதவினீர்கள்.

உலக நாடுகளிலே கோடிக்கணக்கிலே பணத்தைப் பெற்று, இந்தியாவிலே இருந்து ஆயிரமாயிரம் கோடி பணத்தைப் பெற்று, பன்னாட்டு ஆயுதங்களை வாங்கி இராஜபக்சே கூட்டம் குவித்துக் கொண்டிருந்தபோது, புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடுவதற்கு - நீங்கள் வியர்வை கொட்டி,5 டாலர்,10 டாலர், 15 டாலர் என்று திரட்டிக் கொடுத்தீர்கள். ஆகவே, நம்பிக்கையை யாரும் இழக்க வில்லை.

இதைச் சொல்வதற்குக் காரணம் இன்றைக்குச் சில இணையத் தளங்களில் வரக்கூடிய குழப்பமான செய்திகளைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். இது
எல்லா விடுதலை இயக்கக் காலங்களிலும் வந்திருக்கும். அதை முறியடிக்க முடியும்.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் தமிழிசைக் குறுந்தகடு வெளியீட்டு விழா வில் சொன்னேன். அவர் எழுதிய செய்தியைச் சொல்லிவிட்டு, அதிலே
குறிப்பிட்டேன். ஒரு கூழாங்கல். அது ரொம்பவும் அலுத்துக் கொண்டது; ரொம் பவும் வருத்தப்பட்டது.பாடித் திரிகிற பறவையைப் பார்த்துக் கூடச் சொன்னது:
“நான் இந்தச் சாலையிலே இவ்வளவு நாளாகக் கிடக்கிறேன். எனக்கு எந்த மரி யாதையும் இல்லை.அதோ.... அந்தப் பேழைக்குள்ளே - அந்த வைரத்தை வைத் து, இத்தனை பேர் அதைச் சுற்றிச் சுற்றி வந்து இவ்வளவு அழகு பார்க்கிறார் களே! நான் எத்தனையோ காலமாக இந்த இடத்திலேயே கிடக்கிறேன். எனக்கு
அந்த மரியாதை கிடைக்கவில்லையே! அந்த வைரத்துக்கு அல்லவா மரியா தை கிடைக்கிறது!” என்று சொன்னபோது, காசி ஆனந்தன் பறவையின் வாயி லாகச் சொல்லுகிறார். “நிறைவாகும்வரை மறைவாக இரு!” என்று குறிப்பிட் டார். பிரபாகரன் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். (கைதட்டல் - ஆரவா ரம்)

இந்த இடத்திலேதான், 2006-ஆம் ஆண்டு திராவிடமுன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததற்குப் பிறகு, தமிழ் ஈழத்தை ஆதரித்து, மறுமலர்ச்சி திராவி ட முன்னேற்றக் கழகம் சார்பில் வேளச்சேரி மணிமாறன் தலைமையில் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்ட பொதுக் கூட்டத்துக்கு நானும் வந்தேன். ஆனால்,
கூட்டத்துக்கு முதல்நாள் இரவிலே வேளச்சேரி மணிமாறனை கருணாநிதி அரசு கைது செய்தது.அவர் சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டார்.அவர் சிறை யில் அடைக்கப்பட்டாலும், இன்று போல அன்றும் பெருமளவில் திரண்டு விட் டது கூட்டம். அந்தக் கூட்டத்திலே பேசினேன். அதன் பின்னர் சிறைக்குப்போய் மணிமாறனைச் சந்தித்தேன்.

நான் கலைஞர் கருணாநிதி அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் சிறைச்சாலையோ, அடக்கு முறையோ, மிரட்டலோ எதுவும் எங்களது உணர்ச் சியைப் பறித்துவிட முடியாது. (கைதட்டல்) வழக்கறிஞர்கள் போராடினார்கள், ஈழத் தமிழர்களுக்காக. அதற்காகவே அவர்களில் எழுபது பேர் கை கால்கள் முறிக்கப்பட்டன.இந்த நெருப்பை ஏற்றியவன் முத்துக்குமார். நெஞ்சிலே ஏந்தி ய வன் முத்துக்குமார். மூன்று நாட்கள் கொளத்தூரிலே அவன் சடலம் கிடந்த போது, இலட்சக்கணக்கான தமிழர்கள் அவனது உயிரற்ற உடலைத் தரிசிக்க வந்தபோது, மூலக்கொத்தளம் சுடுகாட்டுக்குக் கொண்டுபோய் நள்ளிரவு நேரத் தில் தீ மூட்டியபோது, அப்போது என்ன உறுதி எடுத்துக் கொண்டோம்? பதினே ழு பேர் இந்தத் தமிழகத்திலே தீக்குளித்து மடிந்தார்கள். தமிழகத்திலே உணர்ச்சி செத்துப் போய்விடவில்லை. தப்புக்கணக்குப் போட வேண்டாம். இந்த உணர்ச் சி நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது.

இந்த மாவீரர்கள் தங்கள் உயிர்களைத் தந்தார்கள்.வாழ்க்கையின் எந்த சுகத் தையும் பார்க்கவில்லை அந்த இளைஞர்கள். திருமணமாக வேண்டிய வாலிப வயதில் வாழ்க்கைச்சுகங்கள் எதையும் நாடாமல்,தேடாமல் காடுகளுக்குள்ளே பட்டினி கிடந்து, ஆயுதமேந்திப் போராடி,காயம்பட்ட வேளைகளில் அதற்குரிய மருத்துவம் பார்க்க முடியாமல், உலகத்தில் ஆயுதப் போராட்டம் நடத்திய எந்த விடுதலை இயக்கமும் சந்தித்திராத துன்பங்களைச்சந்தித்தார்கள்அவர்கள். ஆயினும், அவர்கள் வெற்றிகளைப் பெற்றார்கள். பெற்ற வெற்றியின் அடிப்ப டையிலேதான் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் பிரபாகரன். ஆனையிறவிலே வெற்றி பெற்றதற்குப் பிறகுதான் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்காகத்தான்
போர் நிறுத்தத்தை அறிவித்தார்.போர் நிறுத்தத்தை அறிவித்தவர்கள் விடுத லைப் புலிகள்; சிங்கள அரசல்ல!

கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது, முப்பது நாட்கள் போர் நிறுத்தம் என்றார். 2001 டிசம்பர் 24-இல் முப்பது நாட்கள் முடிவுறும் தறுவாயில் மேலும் முப்பது நாட்கள் போர் நிறுத்தம் நீடிக்கும் என்றார்கள். நார்வே உள்ளிட்ட நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக வேறு வழியின்றி,சிங்கள அரசு போர் நிறுத்தம் என்று அறிவித்தது.

இப்போது நான் இந்திய அரசைக் கேட்கிறேன்.வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கொழும்புக்குச் சென்று அங்கே கொலைபாதகன் இராஜ பக்சே வுடன் கைகுலுக்கி அவன் தந்த விருந்தை வயிறு முட்டத் தின்றுவிட்டு,இங்கே வந்து சேர்ந்திருக்கிறார். நான் இந்திய அரசாங்கத்துக்குச் சொல்கிறேன். நாங் கள் ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்று கருதுகிறவர்கள் அல்ல; வன்முறை யைக் காதலிப்பவர்கள் அல்ல.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தைத் தொடங்கி பதினேழு ஆண்டுகள் ஆயிற்று. தியாக நெருப்பிலே புறப்பட்ட இயக்கம். எங்களால் ஒரு சிறு சம்பவமும் தமிழ்நாட்டிலே ஏற்பட்டது கிடை யாது.கடைத் தெருவிலே கல்வீச்சு - பேருந்து மீது கல் வீச்சு -இப்படி எதுவும் கிடையாது. நாங்கள் வன்முறையில் ஈடுபட மாட்டோம். தமிழகத்தில் ஒரு போதும் ஈடுபட மாட்டோம்.

தமிழகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புபவர்கள் நாங்கள். சாதி யின் பெயரால் - மதத்தின் பெயரால் மோதல்கள் நேரிட்டுவிடக் கூடாது என்று
துடிப்பவன் நான். நான் பிறந்த பொன்னாடு இது; புண்ணிய பூமி இது. அமைதி தவழ வேண்டிய இடம் இது. ஆனால், விடுதலைக்கான போராட்டத்தை ஆதரிப் பதற்காக ஸ்பெயின் தேசத்தில் பிராங்கோவினுடைய சர்வாதிகாரத்தை எதிர்த் து இளைஞர்கள் புறப்பட்டபோது, ஃபெரோஸ் காந்திக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்பினார் பண்டித ஜவகர்லால் நேரு என்ற செய்தியை அண்ணன் நெடு மாறன் இங்கே அழகாக எடுத்துச் சொன்னார்.

இப்போது இந்திய அரசாங்கத்தைக் கேட்க விரும்புகிறேன். இலங்கை சிங்கள அரசு இவ்வளவு பணத்தை இராணுவத்துக்கு ஒதுக்கியது ஏன்?மீள் குடியேற்றம் என்ற பேச்சுக்கு இப்போது வர விரும்பவில்லை. இது ஏமாற்று வேலை. இராஜ பக்சே பேசுவதோ, மன்மோகன் சிங் பேசுவதோ, கிருஷ்ணா பேசுவதோ, கரு ணாநிதி ஒப்பாரி வைப்பதோ மக்களை ஏமாற்றுகின்ற வேலை. முப்பதாயிரம் பேர் இருப்பதாகச் சொன்னார்களே, முள்வேலி முகாம்களில். “இந்து” ஏட்டுக் குக் கொடுத்த பேட்டியிலே இராஜ பக்சே தன்னை அறியாமலே உண்மையைக் கக்குகிறான். “மூன்று இலட்சம் பேர் இங்கே இருந்தார்கள்.இன்னும் ஒரு இலட் சத்து எழுபதாயிரம் பேர் இருக்கிறார்கள்!” இது சிங்கள அதிபன் இராஜபக்சே வாக்குமூலம்.அப்படியானால், இந்தியாவினுடைய வெளி விவகாரத் துறை அமைச்சர் - அப்போது வெளி விவகாரத்துறையின் பொறுப்பிலே இருந்த பிர ணாப் முகர்ஜி, 2009-ஆம் வருடம் பிப்ரவரி 18-ஆம் தேதி இந்திய நாடாளுமன் றத் தில் எழுபதினாயிரம் பேர்தான் துன்பத்திலே சிக்கியிருக்கிறார்கள். எழுபதி னாயிரம் தமிழர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட வேண்டியிருக் கும் என்று அன்றைக்கு இராஜ பக்சே கொழும்பில் சொன்னதை - அவன் எழுதிக் கொடுத்ததை - இந்திய நாடாளுமன்றத்தில் வாசித்தீர்கள்.நீங்கள் தூத்துக்குடிக் கு வருகிறபோது எதிர்ப்பு தெரிவித்து, கறுப்புக் கொடி ஏந்தி ஜெயிலுக்குப் போ னோம்.

நான் இந்திய சர்க்காரைக் கேட்கிறேன். எழுபதினாயிரம் பேர் என்று அன்றைக் கு இராஜ பக்சே சொன்னான்.இன்றைக்கு அவனே ஒரு இலட்சத்து எழுபதினா யிரம் பேர் என்கிறான். இன்னமும் அவர்கள் போகவில்லை. ஒரு முகாமிலே இருந்து, இன்னொரு முகாமுக்கு அனுப்பி, அங்கே சிறை வைக்கிறான். சிங் களக் குடியேற்றத்தை நடத்துகிறான். தமிழர் தாயகத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுகிறான்.வழிபாட்டுத் தலங்களை அழிக்கிறான். முருகர் கோவிலில், சிவன் கோவிலில் பெளத்த விகாரைகளை அமைக்கிறான். சித்தார்த்தன் சிலை களை அங்கே நடுகிறான்.
                                                                                                                 தொடரும் .................

No comments:

Post a Comment