Monday, April 8, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 8

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே

“ எம்.ஜி.ஆர். அவமதிக்கப்பட்டதற்கு கொதித்தெழுந்த வைகோ”

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் “குற்றம் சுமத்தப்பட்டு” தடா எனும் கொடிய சட்டத்தின் மூலம் கொடூர சித்ரவதைகள் செய்து காவல்துறை பெற்ற வாக்கு மூலங்களின் அடிப்படையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா பாட்டீல் நிராகரித்துவிட்டார். மூன்று தமிழர்களைத் தூக்கி லிடுவதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் பட்ட மத்திய அரசின் பரிந்துரை அறிக்கையில் கையெழுத்திட்டு இருப் பவர் ப.சிதம்பரம் என்ற தமிழனே என்பதுதான் வரலாற்று முரண். இதுதான் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம்.செப்டம்பர் 9 என்று நாள் குறித்துவிட்டார்கள்.

மூன்று தமிழர்களின் உயிரைக் காப்பதற்கு எல்லா தளங்களிலும் சக்தி முழுமை யும் திரட்டிப் போராடி வருகிறார் தமிழர் தலைவர் வைகோ.தமிழகத்தைஆளும் அண்ணா தி.மு.க. கட்சியின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தலைவர் வைகோ மூன்று பேரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யுமாறு தொடர்ந்து வேண்டு கோள் விடுத்து வருகிறார்.


கோடானகோடி தமிழ் மக்களின் உள்ளங்களில் இன்றும், வாழ்ந்து கொண்டிருக் கின்ற ஏழைகளின் ஏந்தல்,புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.உருவாக்கிய கட்சிதான் அரியணையில் இருக்கின்றது. எம்.ஜி.ஆர். என்கிற மாபெரும் மக்கள் சக்திதான்
ஜெயலலிதாவின் அரசியல் வெற்றிக்கும்,மூன்றாவது முறை மகுடம் தரிப்பதற் கும் பயன்பட்டிருக்கிறது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

தமிழக மக்களின்அன்பைப் பெற்ற எம்.ஜி.ஆர். தமிæழ மக்களின் நெஞ்சினில் குடி யிருக்கிறார். விடுதலைப் புலிகள் முன்னெடுத்துச் சென்ற வீரஞ்செறிந்த ஆயுதப்போராட்டத்திற்கு பலம் சேர்த்து துணைநின்றவர் புரட்சித் தலைவர். இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு தமிழக ஆட்சிப்பீடத்தில் இருந்துகொண்டு அள்ளிக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.

இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் இயங்கும் ஒரு மாநில அரசின் முதல்வர் என்ற
எல்லையையும் மீறி,ஈழத்தமிழர்களுக்காக எம்.ஜி.ஆர்.பாடுபட்டதை நாம் நன்றி யுடன் நினைவு கூர்ந்திட வேண்டும். ஒரு தனி நூல் எழுதக்கூடிய அளவிற்கு புரட்சித்தலைவரின் ஈழத்தமிழர் நலப்பணிகள் இருந்தாலும் சிலவற்றை மட்டும்
குறிப்பிட்டுக் காட்டுகிறோம்.

எம்.ஜி.ஆரின் ஆதரவுக் கரம்

1. சிங்கள இனவெறியன் ஜெயவர்த்தனே,அதிபராக இருந்தபோது, 1983 ஜூலை யில் ஈழத்தமிழர் இனப்படுகொலை உச்சத்தில் இருந்தபோது உயிர்தப்பி, தாயின் மடியென்று தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலட்சக்கணக்கான ஈழத்தமிழர் களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர் எம்.ஜி.ஆர்.

2. ஈழத்தமிழ் அகதிகளை, பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என்று பாதிக் கப் பட்டு வந்தவர்களைக் கண்டு மனம் கலங்கிய எம்.ஜி.ஆர்.அவர்களை தாயன் போடு வரவேற்று முதலில் மருத்துவ உதவிகள் கிடைக்கச் செய்தார். முகாம் களை அமைத்து உணவு, உடை உறையுள் வழங்கிட மாவட்ட ஆட்சித் தலைவர் களுக்கு உத்தரவிட்டார்.

3. தகுதி நிர்ணய விதிகளை தூக்கி எறிந்துவிட்டு, ஈழத்தமிழர்களின் பிள்ளைகள் தமிழகத்தில் கல்வி பயிலுவதற்கு தனி ஒதுக்கீடு செய்தார்.

4. ஈழத்தில் நடைபெறும் இனப்படு கொலையைத் தடுத்து நிறுத்தக் கோரி 1983 ஜூலை 28 இல் தமிழகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றி, பிரதமர் இந்திராகாந்திக்கு அனுப்பியதுடன், 1983 ஆகஸ்டு 2 இல் தமிழ் நாட்டில் பொது வேலைநிறுத்தம் நடத்திக்காட்டினார்.

5. 1983 ஆகஸ்டு 13, 14 ஆகிய தேதிகளில் அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டிய எம்.ஜி.ஆர். இலங்கைத் தமிழரின் கண்ணீரைத் துடைக்கும் தீர்மானங்களை
நிறைவேற்றினார்.ஈழத்தமிழர்களின் உயிர் உடைமைகளுக்கு பாதுகாப்புத்தரும் வகையில் நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி அ.தி.மு.க. தோழர்கள் கறுப்புச் சட்டை அணியவேண்டும் என்பதை வலியுறுத்தி தானும் தமது அமைச்சரவை சகாக்களும் கறுப்புச்சட்டை அணிந்து வழிகாட்டினார்.

6. தமிழகத்தின் உணர்வுகளுக்கு அசைந்துகொடுக்காத ஜெயவர்த்தனே தமிழர் களோடு பேச முடியாது; இராணுவத்தின் மூலமே தீர்வு என்று கூறியதைக் கேட்டு கொதித்தெழுந்த எம்.ஜி.ஆர். 1983 ஆகஸ்டு 30 இல் கடும் எச்சரிக்கை விடுத் தார். ‘தமிழர்கள் கட்டுப்பட்டிருக்கிறார்கள். கட்டுண்டி இருக்கிறார்கள். ஜெயவர்த்தனே தயவுசெய்து தமிழகத்தை ஆத்திரத்திற்கு உள்ளாக்கிட வேண் டாம்’ என்று மட்டும் இந்த நேரத்தில் கேட்டுக்கொண்டு, ‘இருப்பது ஓர் உயிர் தான், போவதும் ஒருமுறைதான்’ என்ற அறிஞர் அண்ணா கூறியதை தெரிவித் துக் கொள்வேன்.ஈழத்தில் நடைபெறுகின்ற இனப்படு கொலை காரணமாகத் தமிழகத்தில் உள்ள ஐந்துகோடி தமிழர்களும் சீறிப்பாயக்கூடிய நிலைமையை ஜெயவர்த்தனே நிச்சயமாக ஏற்படுத்தக் கூடாது என்று தமிழக முதல்வர் என்ற
முறையிலும் அனைத்திந்திய அண்ணா தி.மு.கவை நிறுவியவன் என்ற முறை யிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எம்.ஜிஆரின் இந்த அறிக்கை, எந்த மாநில முதல்வருக்கும் இல்லாத துணிச் சலாகும்.

7. சிங்கள கொடுங்கோல் அரசுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்காவைக்
கண்டித்து 1983, அக்டோபர் 12 இல் சென்னையில் கருஞ்சட்டைப் பேரணியை எம்.ஜி.ஆர். நடத்தினார்.இலட்சோப இலட்சம் பேர் பங்கேற்ற பேரணியின் முடி வில் அப்போதைய பொதுச்செயலாளர் ப.உ.சண்முகம், கொள்கைபரப்புச் செய லாளர் செல்வி ஜெயலலிதா ஆகியோரை அமெரிக்கத் தூதர் அலுவலகத்திற்கு அனுப்பி இலங்கை அரசுக்கு அமெரிக்கா உதவிடக்கூடாது என்று மனு அளிக்கச்
செய்தார்.

8. சிங்கள இனவாத அரசுக்கு தமிழக மக்களின் உள்ளக்குமுறல்களை, வெளிப் படுத்தும் விதமாக, படகு மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் இலங் கை செல்வோம் என்று அப்போதைய காமராஜ் காங்கிரஸ் தலைவரும் சட்ட மன்ற உறுப்பினருமான பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார்.உடனடியாக தமிழக அரசு அதிகாரிகள் இராமேஸ்வரம் கடற்கரையிலிருந்த படகுகளை அப்புறப் படுத்தி விட்டனர்.எம்.ஜி.ஆர்.அரசை அப்போது பலரும் குறை கூறிய போது, 1983 நவம்பர் 15 இல் சட்டமன்றத்தில் உரையாற்றிய எம்.ஜி.ஆர். இதுகுறித்து விளக்கம் அளித்தார்.

“ஒரு நெடுமாறனை நாம் இழந்து விட்டால் இன்னொரு நெடுமாறனை நாம்
உற்பத்தி செய்ய முடியுமா? இதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இந்திரா
காந்தி அம்மையாருக்கு வந்த ஆபத்தை தான் தாங்கிக்கொள்கிற ஆற்றல்பெற்றி ருக்கின்ற நெடுமாறன் அவர்கள், அங்கே போய், இடையில் யாராவது சுட்டால் அவரிடம் துப்பாக்கி இருக்கிறதா? அல்லது தடுப்புக் கருவி இருக்கிறதா?ஒன்றும் இல்லை. மனம்தான் துணிவோடு இருக்கிறது. அங்கேபோய் ஆபத்து ஏற்பட்டு விட்டால்என்ன செய்வது? ஆகவே படகுகள் இல்லாமல் செய்தோம்.”
உணர்ச்சி அவ்வப்போது வந்து போய்விடும். உணர்வுதான், நினைவு இருக்கும் வரை இருக்கும்.அந்த உணர்வு இருக்க வேண்டும்.நாம் செய்வது என்ன காரியம்? சரியா தவறா? என்ன விளைவு? என்றெல்லாம் எண்ணினேன். நான் போய் பிரச்சாரம் செய்ய முடியாது. நெடுமாறன்செய்கிறார். ஆட்கள் வருகிறார் கள்.தினமும் பத்திரிகையில் வருகிறது.அது வெளிவரட்டும்.அது அந்த நாட்டுக் கு நல்லதாக அமையட்டும். அந்த உணர்வுகள் பெருகுமானால் பெருகட்டும் என்பதற்காக அவரை கைது செய்யாமல் விட்டுவிட்டேன்.

இந்த உரையின் மூலம் எம்.ஜி.ஆரின் உணர்வை நாம் புரிந்துகொள்ள முடி கிறது.

9.ஜெயவர்த்தனே அரசைக் கண்டித்து 28.10.1983 இல் தமிழக சட்ட மேலவையில் எம்.ஜி.ஆர்.தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

10. பிரதமர் இந்திராகாந்தி அவர்களின் ஒப்புதலைப்பெற்று, ஐக்கியநாடுகள்
மன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதிகளாக அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்தி ரனை, ஐ.நா.செல்லும் குழுவில் இடம் பெறச்செய்ததுடன் 1983,அக்டோபர் 21ஆம்
நாள், ஐ.நா.அவையில் தமிæழ மக்களின் பிரச்சினையில் பேசச் செய்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

11. சட்டமன்றத்தில் 1984 ஏப்ரல் 9 ஆம் நாள் உரையாற்றிய முதல்வர் எம்.ஜி.ஆர்.
தனது போர்க்குணத்தை வெளிப்படுத்தினார். 

“இலங்கை அரசு இனியும் வன்முறையில் ஈடுபடுமானால் இந்த தமிழக அரசு தன் சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் நிச்சயமாகச்செலவிட்டு எப்படி முறி யடிக்க முடியுமோ அப்படி முறியடிப்பதற்கு ஆவன செய்ய களத்தில் இறங்கும். மீண்டும் பழைய சம்பவம் நடக்கும் என்றால், இந்த தமிழகம் தனித்து நின்று ஏதாவது செய்ய வேண்டும்” என்றார். அதைச் செய்ய முன் வருவேன்” என்று பிரகடனம் செய்தார்.

12. அனைத்துக்கட்சிக் கூட்டத்தை 1984,ஏப்ரல் 16,17 தேதிகளில் கூட்டிஈழத்தமிழர் பாதுகாப்பு குறித்து விவாதித்தார். பின்னர் ஏப்ரல் 19 இல் புதுடெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்களைச் சந்தித்து ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க கோரிக்கை விடுத்தார்.

13. பிரதமர் இராஜீவ்காந்தி வற்புறுத்தலின் பேரில் 1985 ஆகஸ்டில் போராளி இயக்கங்கள் திம்புவில், சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது இலங்கையில் விமானங்கள் மூலம் தமிழர்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசி ஆயிரக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்றான் ஜெயர்வர்த்தனே. இலங்கை அரசின் இச்செயலைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக தலை யிடக்கோரியும் 1985 செப்டம்பர் 24 ஆம் நாள் உடல்நிலை மிகவும் பாதிக்கப் பட்டி ருந்த நிலையிலும், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் எம்.ஜி.ஆர்.

14. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்,அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் இருவரையும் 1986 நவம்பர் 3 ஆம் நாள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அழைத்து, ஈழத்தமிழர் நிலை குறித்தும், விடு தலைப் போராட்டம் குறித்தும் கேட்டறிந்தார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

15. 1986 நவம்பர் 7 இல் மத்திய அரசின் அழைப்பின் பேரில் டெல்லி சென்ற முதல்வர் எம்.ஜி.ஆர். பிரதமர் ராஜீவ்காந்தியை சந்தித்துப்பேசினார்.அப்போது பெங்களூரில் நடைபெற இருக்கும் தெற்காசிய நாடுகளின் (சார்க்) மாநாட்டில் பங்கேற்க ஜெயவர்த்தனே வரும் போது, புலிகள் இயக்கம் ஒரு சமரசத் தீர்வை ஏற்க வலியுறுத்த வேண்டும் என்று எம்.ஜி.ஆரிடம் ராஜீவ்காந்தி கூறினார்.
எம்.ஜி.ஆர்.டெல்லியில் இருக்கும்போது மத்திய அரசு உள்துறை மூலமாக தமிழக காவல்துறை இயக்குநர் (டி.ஜி.பி.) புலிகள் இயக்கத்தலைவர் பிரபா கரனை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தது.மேலும், புலிகளின் தகவல் தொடர்பு சாதனங்களும் பறிக்கப்பட்டன.
எம்.ஜி.ஆருக்கும் தம்பி பிரபாகரனுக்கும் இடையேயான நல்லுறவை சீர் குலைக்க முயன்ற சிங்கள அரசின் கைக்கூலிகள் சிலர், மத்திய அரசின் மூலம் அதை சாதிக்க முயன்றனர். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை இயக்குநர் மோகன்தாசுக்கு நேரிடையாக மத்திய அரசு உத்தரவு பிறப் பித்து,பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.அதிகார அத்துமீறலில் ஈடுபட்ட டி.ஜி.பி.
மோகன்தாஸ், பிரபாகரனை கைது செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோகாட்சி களை இலங்கை அரசுக்கு அனுப்பிவைத்தார். அவை இலங்கை அரசின் ‘ரூபா வாகினி’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.

எம்.ஜி.ஆர். இவற்றையெல்லாம் கண்டு மனம் குமுறினார்.ராஜீவ்காந்திஅரசின்
அதிகார தர்பார் எம்.ஜி.ஆருக்கு எரிச்சலை ஊட்டியது. சென்னை திரும்பிய
எம்.ஜி.ஆர், பிரபாகரனின் வீட்டுக் காவலை விலக்கிக்கொள்ள உத்திரவிட்டது மட்டுமன்றி, 15.11.1986 இல் பெங்களூரில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் ஜெய வர்த்தனே -ராஜீவ்காந்தி இருவரும் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பேச
இருந்ததால் அதற்கு உதவிட எம்.ஜி.ஆரையும் டில்லி அழைத்தபோது,புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்,ஆலோசகர் பாலசிங்கம், திலகர் ஆகியோரையும் பெங்களூருக்கு அழைத்துச் சென்றார் எம்.ஜி.ஆர்.

இதன்மூலம் இலங்கைத் தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள்தான் என்பதைஎம்.ஜி.ஆர். சிங்கள ஜெயவர்த்தனேவுக்கும், பிரதமர்
ராஜீவ் காந்திக்கும் உணர்த்தினார்.

16. தம்மிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களையும், தகவல்தொடர்பு சாதனங்களையும் திரும்ப ஒப்படைக்கக் கோரி, விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் 22.11.1986 அன்று அதிகாலையிலிருந்து சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத்துவக்கினார். ஒருபுறம் மத்திய அரசின் நெருக்கடி.மறுபுறம் டி.ஜி.பி.மோகன்தாஸ் போன்ற டில்லி உளவாளிகள் இருப்பினும்,பின்னப்பட்ட சூழ்ச்சி வலையை அறுத்தெறிந்த முதல்வர் எம்ஜிஆர்  புலிகள் இயக்கத்திடம் பறிமுதல் செய்தவற்றை ஒப்படைக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தமிழக அரசையும்,தமிழ் மக்களையும் காட்டிக்கொடுத்த டி.ஜி.பி. மோகன்தாஸ் மீது நடவடிக்கை எடுத்து அவரை காவல்துறைஇயக்குநர்
பொறுப்பிலிருந்து நீக்கினார்.

17. ராஜீவ்காந்தி அரசின் சிங்கள ஆதரவு போக்கு குறித்து மிகுந்த துயரம் அடைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சார்க் மாநாடு முடிந்தபிறகு மத்திய அரசுக்கு உணர்த்தும் விதமாக அறிக்கையொன்றை வெளியிட்டார்.

‘இலங்கை யில் தமிழர்கள் மீது இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மேற்கொண்ட முயற்சிகள் அனைத் தையும் வீணாக்கும் வகையில் -இலங்கை அரசும், இராணுவமும்
அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றனர். அரசியல் ரீதியிலும், ராச தந்திர நடவடிக்கை மூலமாகவும் இலங்கை அரசை ஒரு கவுரவமான வழிக்கு திருப்ப நாம் எடுக்கும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என்பது
வருந்தத்தக்கதாகும்.’

இலங்கை பிரதமர் பிரேமதாசா, அரசியல் தீர்வுக்கு நாங்கள் தயாராக இல்லை
என்று கூறியவுடன் பிரதமர் ராஜீவ்காந்திக்கு 09.3.1987 இல் முதல்வர் அனுப்பிய தந்தியில், 

‘உங்களுடைய உண்மையான முயற்சிகளுக்கு மாறாக இலங்கை அரசு அரசியல் தீர்வை விரும்பவில்லை.அதற்கு மாறாக இராணுவத் தீர்வுக்கு
அவர்கள் சென்று விட்டார்கள்.மக்கள் மீது முப்படைகளையும் ஏவி இருக்கிறார் கள். இராணுவத்தின் மூலம் தாக்குதல் நடத்துகிறார்கள்.விமானம் மூலம் குண்டு வீசுகிறார்கள். தமிழர்கள் தப்பித்து வெளியே செல்ல முடியாமல் கடல் வழியையும் தடை செய்கிறார்கள்.’ என்று குறிப்பிட்டார்.

18. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் 1987 ஏப்ரல் 27 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டார். “சிங்கள இராணுவத் திற்கு எதிராக விடுதலைப் புலிகள்தான் தன்னந்தனியாக நின்று போராடி உயிர்த்தியாகம் செய்து வருகிறார்கள். பொதுவாக, ஆண்கள் செந்நீரை சிந்து வார்கள். பெண்கள் கண்ணீரை சிந்துவார்கள். ஆனால், இலங்கைத் தமிழ்ப் பகுதியைப் பொறுத்தவரையில் பெண்களும் ஆண்களோடு சேர்ந்து செந்நீரைச்
சிந்துகிறார்கள். ஆண்களும், பெண்களும் சேர்ந்து இலங்கை அரசின் சர்வாதி காரப் போக்கை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.அவர்களுக்கு உதவி செய்யக்கடமைப் பட்டு இருக்கிறோம்.

இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுகின்ற இயக்கங்களுக்கு நாம் நம்முடைய ஆதரவையும்,உதவியையும் செய்கிற அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உதவுகிற வகையில், நான்கு கோடி ரூபாய் வழங்குவதற்கு இந்த அரசு
முடிவு செய்துள்ளது.”

சட்டமன்றத்தில் அறிவித்தவாறு நான்கு கோடி ரூபாயில் விடுதலைப்புலிகள்
இயக்கத்திற்கு மூன்று கோடி ரூபாயும், ஒரு கோடி ரூபாய் ஈராஸ் இயக்கத் திற்கும் நேரிடையாக அளிக்கப்பட்டது.

புலிகள் தலைவர் பிரபாகரன், 1987 மே நாள் செய்தி விடுத்தபோது, “தமிழ்நாடு
அரசும் தமிழ்நாட்டு மக்களும் எமது விடுதலை இயக்கத்திற்கு அங்கீகாரம்
அளித்தது, எமது இலட்சியத்திற்கு ஆதரவளிக்க முன்வந்திருப்பது எமது
போராட் டத்தின் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பம் ஆகும்” என்று எம்ஜிஆர். அரசுக்கு நன்றி கூறினார்.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளைக் கண்டு அலறிய ஜெயவர்த்தனே, பிரதமர்
ராஜீவ்காந்தியிடம் எம்.ஜி.ஆர். மீது புகார் கூறினார். மேலும், “இலங்கையின்
வடகிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து பொருள் களை வழங்கப்போவதாக தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் கூறி யிருக்கிறார். நாங்களே உணவு அளிக்க முடியும்.அதற்கு இந்தியப்பணம் தேவை இல்லை. உணவுப் பொருள்கள் என்றால், எம்.ஜி.ஆரின் பாஷையில் ஆயுதங்கள் என்று பொருள். விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆ தனிப்படை” என்று கூறிய ஜெயவர்த்தனே, கொழும்பு நகரில் புத்தர் ஆலயத் திற்கு எதிரே பத்தாயிரம் சிங்கள மாணவர்களைக் கூட்டி எம்.ஜி.ஆருக்கு
எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினான்.

எம்.ஜி.ஆரை அவமதித்த ஜெயவர்த்தனே

தமிழ்ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மகத்தான பங்களிப்பை வழங்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் மீது ஆத்திரமும்,கோபமும் அடைந் திருந்த ஜெயவர்த்தனே, சார்க் மாநாட்டிற்கு பெங்களூர் வந்தபோது (15.11.1986) செய்தியாளர் சந்தித்தனர்.

அப்போது இலங்கைப் பிரச்சினைக்கு எப்போது தீர்வு வரும்? என்று ஜெயவர்த் தனேவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஜெயவர்த்தனே, “இலங்கையில் ஏற்பட்டு இருக்கின்ற இத்தனை பிரச்சினைகளுக்கும் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தான் காரணம். அவருடைய இரட்டை வேடம்தான் பிரச்சினை சிக்கல் ஆகி வருவதற்குக் காரணம்” என்று எம்.ஜி.ஆர். மீது விழுந்து பிராண்டினான்.

ஜெயவர்த்தனே இவ்வாறு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மீது குற்றம் சுமத்தி
பதிலளித்தபோது, பிரதமர் ராஜீவ்காந்தியும் அவர் பக்கத்தில் இருந்தார். இந்தச் செய்தி ஸ்டேட்ஸ்மென்,இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளேடுகளில் வெளி வந்தது.

தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறதா? விலகிவிட்டதா?

இதற்கு மறுநாள் பாராளுமன்றம் கூடுகிறது.பிரதமர் ராஜீவ்காந்தி இருக்கை யில் உள்ளார். வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் அவையில் இருக்கிறார். பகல் 12 மணிக்கு கேள்வி நேரம் முடிந்ததும் தலைவர் வைகோ எழுந்து,முக்கியமான கேள்விக்கு பதில் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்.
.
“தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறதா? அல்லது இந்தியாவிலிருந்து விலகி தனி
நாடாகப் போய்விட்டதா?” என்று வைகோ அவர்கள் கேள்வி எழுப்பியதும், வழக் கம்போல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சல் போட்டனர். அதை யெல்லாம் பொருட்படுத்தாத வைகோ,“வெளி நாட்டிலிருந்து வருகின்ற ஜனாதிபதி போட்ட விருந்தைத் தின்றுவிட்டு மரியாதையாகப் போக வேண்டும்.எங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்திருக்கிறார் ஜெயவர்த்தனே? பக்கத்திலே அதைக்கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார் ராஜீவ்காந்தி.நட்வர் சிங் கும் பக்கத்திலே இருந்துள்ளார்.

இதுவரை சுதந்திர இந்தியாவில் வெளிநாட்டுத் தலைவர்கள் யாராவது இங்கு வந்து இங்குள்ள அரசியல் தலைவர்களை விமர்சித்தது உண்டா? மரபு மீறப் பட்டு இருக்கிறதே! இதுதான் வெளிவிவகார அமைச்சரவையினுடைய அணுகு முறையா? அதை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை?”

தலைவர் வைகோவின் வினாவுக்கு பதிலளிக்க முடியாத காங்கிரஸ்காரர்கள்,
எம்.ஜி.ஆர். மீது வைகோவுக்கு என்ன திடீர் காதல்? என்றனர்.உடனே பதிலடி
தந்தார் வைகோ.

“திடீர் காதல் அல்ல. எம்.ஜி.ஆரோடு எங்களுக்கு அரசியல் வேறுபாடு உண்டு.
எங்கள் மாநிலத்தின் முதலமைச்சரை இலங்கையில் கொலைவெறிஅரசாங்கம்
நடத்தக்கூடிய ஜெயவர்த்தனே விமர்சிப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது.”

தி.மு.கழகத்தின் எம்.பி.யாக இருந்த போதும்கூட, ஈழவிடுதலைப் போராட்டத் திற்கு எல்லா வகையிலும் துணை நின்றார் எம்.ஜி.ஆர்.என்பதற்காக, மனசாட் சிப்படி நாடாளுமன்றத்தில் புரட்சித் தலைவர் அவமதிக்கப்பட்டபோது,அவருக்கு
ஆதரவாக குரல் எழுப்பினார்.

நாடாளுமன்றம் முடிந்து டெல்லியில் தமது இல்லம் திரும்புகிறார் வைகோ.

சென்னையிலிருந்து ஒரு தொலைபேசி வருகிறது. வைகோ எடுக்கிறார். மறு முனை யில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., தழுதழுத்த குரலில் வைகோவிற்கு நன்றி தெரிவிக்கிறார்.எனக்காக, நான் அவமதிக்கப்பட்டதைத் தாங்க முடியா மல், நாடாளுமன்றத்தில் கொதித்து எழுந்து விட்டீர்களே? எப்படி நன்றி கூறு வேன்? என்று வாஞ்சை பொங்க நன்றி தெரிவித்த புரட்சித் தலைவரிடம்,

“நான் எனது கடமையைத்தானே அண்ணே செய்திருக்கிறேன். நீங்கள்  எங்க ளுக்கும் சேர்த்துத்தானே முதல்வர்.ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு எவ்வளவு பக்கபலமாக இருந்தீர்கள்” என்று தலைவர் வைகோ பதில் தந்தார்.

ஆண்டுகள் 34 ஓடி மறைந்துவிட்டன.தலைவர் வைகோவின் அதே அணுகு முறைதான் இன்றும். அரசியலில் லாபம் நட்டம் பார்க்காமல், தன்னலம் கருதா மல், புரட்சித் தலைவர் உருவாக்கிய அ.தி.மு.க. ஆட்சியின் முதல்வரிடம், வேண்டுகோள் வைத்திருக்கிறார். ‘மூன்று தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற கருணை உள்ளத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார்.

என்ன செய்யப்போகிறார் முதல்வர் ஜெயலலிதா? தமிழ்ச் சமுதாயம் காத்தி ருக்கிறது.

                                                                                                                    தொடரும்...

நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment