Thursday, April 18, 2013

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -4

முதல்  நாள்  நடைபயண நிறைவு கூட்டம் ..

16.04.13 அன்று இரவு ஆனைமலையை அடுத்துள்ள கோட்டூர் மலையாண்டி பட்டணம் குமரன் திடலில் பூரண மதுவிலக்கு நடைபயண பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 ஒன்றிய செயலாளர் சுந்தரசாமி தலைமை தாங்கினார். சின்னு (எ) சண்முக சுந்தரம், சண்முகவேல், அப்பு என்ற லோகநாதன், பழனிச்சாமி, வக்கீல் ராதா கிருஷ்ணன், இளங்கோ, ரேணுமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பட்டணம் பாலு வரவேற்று பேசினார். ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-



பசும் சோலையாக எப்போதும் காட்சியளித்து வரும் பொள்ளாச்சி பகுதி நான் நடைபயணம் வந்து கொண்டிருந்த போது பொட்டல் காடாக மாறியுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அரபிக்கடலில் ஆண்டிற்கு 2 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. ஆனால் தமிழகத்திற்கு சொட்டு தண்ணீர் கூடத் தரக்கூடாது என கேரள மாநில அரசு நினைக்கிறது.

அதன் விளைவு முல்லைப்பெரியாறு அணையை உடைக்க சதி செய்கிறது. இதே நிலை தான் பவானி, சிறுவாணி, பாண்டியாறு உள்ளிட்ட அனைத்து அணைகளுக்கும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டில் கேரள அரசு அணை கள் மற்றும் நதிகள் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.

அந்த தீர்மானம் நிறைவேறினால் சோவியத் ரஷ்யா போல இந்தியாவும் சிதறுண்டு போகும் என பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கிடம் நேரில் சென்று எச்சரிக்கை செய்தேன். தமிழகத்தின் குரல் நசுக்கப்படும் போது எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் குரல் கொடுக்கும் இயக்கம் ம.தி.மு.க. பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி ஆகியோர் செய்ய தயங்கிய மதுவிலக்கை தளர்த்தியதால் பண்பாட்டில் சிறந்த தமிழகம் அனைத்து துறையிலும் பின் தங்கி விட்டது.

ஒரு கோடி தாய்மார்களின் கண்ணீருக்கு அடிப்படையாக மதுக்கடைகள் உள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் 677 சிறுமிகள் மதுவுண்ட மனித மிருகங் களால் சிதைக்கப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இனிமேலும் இந்த நிலை தொடர்ந்தால் மனித நேயம் அற்று போகும். எனவே தான் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

தாய்மார்கள் மனம் புழுங்கி வீட்டில் இருந்தவர்கள் எங்களது நடைபயணத்திற்கு ஆதரவு தந்த வண்ணம் உள்ளனர்.இனிமேல் மது அரக்கனை ஒழிக்க முடியாதோ? என்ற அச்சத்தில் இருந்த தாய்மார்கள் எங்களின் நடைபயணத்தை கலங்கரை விளக்கமாக பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

மதுக்கடைகளை மூட தாய்மார்கள் ஆக்ரோஷத்துடன் போராடுவது மகிழ்ச்சி யளிக்கிறது. மதங்கள், ஜாதியை தாண்டி அனைவரும் ஆதரவு தரும் எங்களது பூரண மதுவிலக்கு கோரும் நடைபயணம் வெற்றி தரும். இலங்கையில் போர்க் குற்றம் புரிந்து லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே இந்தியாவில் எந்த மாநிலத்திற்கு வந்தாலும் எதிர்ப்போம்.

நாங்கள் கட்சி வளர்ச்சிக்காக இந்த போராட்டத்தை கையில் எடுக்கவில்லை. தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும், எதிர்கால பாதுகாப்பிற்காகவும் பூரண மதுவிலக்கு போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம். இதில் வெற்றியடை வோம் என்று உறுதியாக நம்புகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், டாக்டர் வரதராஜன், பாஸ்கர சேதுபதி, ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், சூலூர் பொன்னுசாமி, அமிர்தலிங்கம், பாக்கியம், தர்மராஜ், செல்லமுத்து, தஞ்சை முருகேசன். கனகராஜ், கவுன்சிலர்கள் பேபி அப்பு, மறுமலர்ச்சி முரளி, தர்மராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் கே.வி.எஸ். நன்றி கூறினார்.

No comments:

Post a Comment