Friday, April 19, 2013

பத்திரிகை உலகின் பேரொளி அணைந்தது! - வைகோ உருக்கம்

பத்திரிகை உலகின் பேரொளி அணைந்தது!

மனிதநேய சிகரமான பண்பின் வேந்தர் சிவந்தி ஆதித்தனார் மறைந்தார்!

வைகோ உருக்கம்

“தமிழர் வரலாற்றின் புகழ்மிக்க அங்கமான தினத்தந்தி ஏட்டின் அதிபர் ஐயா சிவந்தி ஆதித்தனார் மறைந்தார்” என்ற செய்தி ஈட்டியாய் என் இதயத்தில் பாய்ந்தது. என் செவிகளையே என்னால் நம்ப முடியவில்லை!

எழில் சிந்தும் புன்னகையுடன் அனைவரையும் காந்தமெனக் கவர்ந்த உத்தமராம் ஐயா சிவந்தி ஆதித்தனார், தமிழர் தந்தை ஐயா ஆதித்தனார் தொடங்கிய தினத்தந்தி ஏட்டை, தமிழ் கூறும் நல் உலகத்தின் காப்பரணாகவும், கலங்கரை விளக்கமாகவும் நடத்தி வந்தார்.

வலது கை கொடுப்பது இடது கை அறியாத கொடை உள்ளத்தால் பல்லாயிரக் கணக்கான குடும்பங்களை வாழ வைத்தார். விளையாட்டுத் துறையில் இந்தியாவின் கைப்பந்தாட்டத்தை உலகளாவிய தகுதிக்கு தன்னுடைய முயற்சியாலும், சொந்த பொருட்செலவினாலும் உயர்த்திய உத்தமர் ஆவார்.



பல ஆண்டுகளாக அந்த உன்னதமானவரின் நேசத்தைப் பெற்ற நான், அவர் உடல் நலிந்த செய்தி கேட்ட நாள்முதல் துயரத்தால் துடித்தேன். எப்படியும் நலம்பெற்று விடுவார் என்றே ஏங்கி இருந்தேன். ஆனால் அந்தப் பேரொளி அணைந்துவிட்டது!

இந்திய பத்திரிகை உலகின் இமயமாய் ஓங்கி இருந்த அப்பெருந்தகையாளர் மறைந்த செய்தி பேரிடியாய் தலையில் விழுந்துவிட்டது. அந்தப் புகழ் மாமனிதரின் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது.
இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, தமிழ் நாட்டுக்கும், இந்தியாவுக்கும், பத்திரிகை துறைக்கும் விளையாட்டுத் துறைக்கும் ஜனநாயகத்துக்கும் காப்பரணாக திகழ வேண்டியவரை இரக்கமற்ற காலன் பறித்துக்கொண்டான்.

மண்ணை விட்டு அவர் மறைந்தாலும், அவரது பெயரும் புகழும் விண் இருக்கும் மட்டும் நிலைத்திருக்கும். அவரது மறைவால் கண்ணீரில் துடிதுடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், தினத்தந்தி நிறுவனத்தின் அனைத்துத் துறைகளிலும் இயங்குகின்ற சகோதரர்கள் அனைவருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பொங்கி வரும் கண்ணீருடன் என் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன்.

‘தாயகம்’                                                                                                               வைகோ,
சென்னை - 8                                                                                             பொதுச்செயலாளர்
19.04.2013                                                                                                     மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment