Thursday, April 18, 2013

திருமந்திரமும் மதுவிலக்கும்!

சைவ சமயத்தைச் சார்ந்த பக்தி இலக்கியம் பன்னிரு திருமுறைகளாகப் பாகு பாடு செய்து அமைக்கப்பட்டது.முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம்; நான்கு முதல் ஆறுவரையிலான திருமுறைகள் திருநாவுக் கரசர் அருளியது; ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் பாடியது.

மாணிக்கவாசகரின் திருவாசகமும்,திருக்கோவையாரும் எட்டாம் திருமுறை; திருமாளிகைத் தேவர்,கருவூர்த்தேவர் முதலிய சிவனடியார் ஒன்பது பேர் பாடிய பக்திப் பாடல்கள் 301 திருவிசைப்பா இது ஒன்பதாம் திருமுறை ஆகும்.

திருமூலரின் திருமந்திரம் பத்தாம் திருமுறை; நக்கீரர், பட்டினத்தார் முதலான சான்றோர்களின் நூல்கள் பதினொன்றாம் திருமுறை; சேக்கிழாரின் பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறை. பத்தாம் திருமுறையான திருமூலநாய னார் அருளிய திருமந்திரத்தில் மதுவிலக்கு பற்றி வரும் செய்திகள் இதோ:



திருமந்திரம்

பெயருக்கு ஏற்றபடி மந்திரம் போல் சுருங்கிய சொற்களில் ஆழ்ந்த பொருள்
திட்பமாக அமைந்த பாடல்களும்,மறைந்த நுட்பமான பொருள் உடைய பாடல் களுமாக 3000, திருமந்திரத்தில் உள்ளன. திருமந்திரம் என்பது 9 தந்திரங்கள் உடையது.

முதல் தந்திரம்

முதல் தந்திரத்தில் மெய்யுணர்ச்சிக்குச் சாதனமாக அமையும் நல்ல நடத்தை
களை வற்புறுத்தும் பாக்கள் அடங்கும்.(வை.வே.இரமணசாஸ்திரி,திருமந்திரம்,
வேதாரண்யம் 29.9.1911, பக்கம் 27)

முதல் தந்திரத்தில் 166 திருப்பாடல்கள் உள்ளன. உபதேச முதல் கள்ளுண் ணாமை முடிய பதினேழு பிரிவுகளைக்கொண்டது.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை என்ற பிரிவில் (17) 12 பாடல்களைத் திருமூலர் தந்துள்ளார்.
‘கழுநீர்ப்பசு எனத் தொடங்கும் முதற் பாடலில் (311) முழுநீர்க் கள்ளுண்போர்
முறைமை அகன்றோர்’ என்பார். தங்கள் உடலையும், உணர்வையும் ஒருங்கு
சுருக்கும் முழு மூடத்தன்மை வாய்ந்த இயற்கையும் செயற்கையுமாகிய மயல் சேர் கள்ளினையுண்பர் அவர்கள் அறமுறையும், அருள் முறையும் அகன்று
பாவநெறியில் செல்வோராவார்.

(திருமந்திரம், ப.இராமநாதபிள்ளை,அ.சிதம்பரனார் உரை 1957, பக் 137) கள் அருந்துவோர் பாவநெறியில் சென்றவர் ஆவர்.

இரண்டாவது பாடல்

(312) ‘சுத்த மதுவுண்ணச் சுவானந்தம் விட்டிடா நித்தல் இருத்தல் கிடத்தல்
கீழ்க்காலே’

மயக்கும் கள்ளுண்பவர்கள் அறிவிழக்கும் கீழ்மக்கள் ஆவார்கள்.கீழ் நிலை யாகிய சகல கேவல நிலையினராவார். சகல கேவலம் என்பது ஒவ்வொரு நாளும் நனவு, கனவு,உறக்கம், பேருறக்கம் உயிர்ப்படங்கலாகிய கீழ்நோக்கும் நிலை.இந்நிலைபோன்று கள் உண்போரும் நிற்றல் இருத்தல் கிடத்தல் செய்யினும் தம்நிலையினை இழந்து செய்தவர்.அதனைக் கீழ்நிலை என்பர். கள்
உண்பவர்கள் கீழ் மக்கள் ஆவர்.

மூன்றாவது பாடல்

(313) ‘காம முங் கள்ளுங் கலதி சட்கேயாகும்’

இழி காமமும், அழி கள்ளும் தீக்குண முடைய கலதிகளாகிய கீழோர்கட்கு உரியன. கள் கீழோர்களாலே விரும்பப் படுகிறது.

நான்காவது பாடல்

(314) ‘வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர் காமத்தோர் காமக்கள்ளுண்டே கலங்குவர்’

இழி காமமுடைய கீழோர் இணை விழைச்சு எனப்படும் உடன் உறைவு அல்லது ஆண் பெண் இணக்கம் என்னும் உடலையும் உள்ளத்தையும் உணர்வையும் தளரச்செய்யும் காமக் கள்ளுண்டு கலங்குவர். கள்ளுண்டு அறிவிழப்பார்கள். கள் அறிவையும்,உடலையும், உணர்வையும் அழித்து விடும்.
(315) ‘கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறியாரே’

கள் உண்போர் உண்மையறியாதவர்

கள்ளுண்ணும் மாந்தர் பிறப்பெடுத்துள்ள நோக்கத்தையும் தெரிந்திடாமல்
கேடுறுவர். அதாவது ஒளியிழப்பர். மது மயக்கம் கொண்டோர் தற்பயன்
அடையும் கருத்தற்றகயவர் என்க!

(திருமந்திரக் கட்டுரை முதல் தந்திரம்,திருவாவடுதுறை ஆதினம், 1960, டி.எஸ்.தியாகராஜ தேசிகன் உரை, பக் 389)

ஆறாவது பாடல்

(316) ‘மயக்க மதுவுண்ணும் மாமூடர் தேரார்’

சமயநெறியின் மயக்க நீக்க முறையினை அறியாமல் கள்ளைக் குடிப்பவர்கள்
மயங்குவர்; பிறகு தெளிவர்; பிறகு குடித்து மறுபடியும் மயங்குவர்.இது இழிவுத் தன்மை ஆகும். கள் குடித்தல் இழிந்த செயலாகும்.



(317) ‘மயங்கும் தியங்குங்கள் வாய்மை அழிக்கும்’

கள் உண்போர் கதி கள்ளானது உண்டவரை அறிவு திருத்திக் கெடுக்கும்; கவலை அடையச் செய்யும்; சத்தியத்தை அழிக்கும்.இருமனப் பெண்டிரான பரத்தையரின் பொய்யின் பத்தையே அடைந்து மயங்கச் செய்யும்.

எட்டாவது பாடல்

(318) ‘இராப்பகல் அற்ற இடத்தே இருந்து’ எனத் தொடங்கும் பாடலில்,

கள்ளுண்டு காலம் தெரியாமல் மயங்கிக்கிடப்பது மெய்யன்பு. (உண்மையான
அன்பு) ஆகாது.

கள்ளை ஏற்கும் சமயம் சக்தியுடையது ஆகாது

(319) ‘சத்தியை வேண்டிச் சமயத் தோர்கள் கள்ளுண்பர் சத்தி அழிந்தது தம்மை மறுத்தலால்’

கள்ளைக் குடித்துக் குடித்து அறிவும் உடலும் வலிமையும் நாளுக்கு நாள் குறையப் பெறுவர்.குடித்து மயங்கிக் கிடக்கையில் தியானம் நிகழ வழியில்லை. கள்ளை விரும்பி ஏற்கும் கூட்டம் சக்தி பெறாது.

பனிரெண்டாவது பாடல்

(320) ‘மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று ஆகும் மதத்தால் அறிவிழந்
தாரே.

இம்மையிலே முத்தியின்புறுவதற்குக்கள் குடித்தாலே மார்க்கம் எனக்கொண்டு ஆணவமதத்தால் அழிந்துபடுவர். கள் குடிப்பதால் நன்மை என்று எண்ணுபவர் வீணே அழிந்துவிடுவர்.

மனிதன் மிருகமாகிறான்

கள் குடிப்போர் மாக்களினும் இழிந்தோராவார். மிருகத்திலும் கீழாவார். கள்
மயக்கம் கூடாது. கள் உண்போர் பிறப்பின் குறிக்கோளை அறியாதவராவர். மயக்கமும், தியக்கமும், மாறி மாறி வரச் செய்வது கள். கள் உண்டால் ஆற்றல் அழியும்; அறிவும் கெடும்; கள் மனிதனை மிருகமாக்குகிறது.

திருமந்திரம் முதல் தந்திரம் கள்ளுண்ணாமைக்கு விளக்கம் தந்த ஞானாந்தா
கூற்று இதோ:

ஞானாந்தா

கள் உண்டவர்களுக்கு அறிவு மயங்கும் துன்பம் வந்தடையும்; ஞானம் வந்தடையாது.

(திருமந்திரக்கருத்து, திருவாவடுதுறை ஆதினம், 1964, பக் 31)

திருமூலர் திருமந்திரம் முதல் தந்திரத்தில் முத்தாய்ப் பாகவும்,முடிவாகவும் கள்ளுண்ணாமை குறித்து தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்துள் ளனர்.

தமிழர் தலைவர் வைகோ

இரண்டாம் கட்ட நடைப்பயணத்தை நிறைவு செய்திட்ட தமிழர் தலைவர்
வைகோ முழு மதுவிலக்கு நமது இலக்கு என்று மூன்றாம் கட்டப் பயணத்தைத்
தொடங்கிட இருக்கிறார்கள். அவர்கள் எண்ணம் ஈடேறட்டும். மது நாட்டில்
இருந்தே மறையட்டும்.


நன்றிகள் 

கட்டுரையாளர் :- செ.திவான்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment