Saturday, April 20, 2013

சிலப்பதிகாரமும் மதுவிலக்கும்!

அன்னைத்தமிழில் முதல்காப்பியம் சிலப்பதிகாரம்;அது மொழிவளம், பண்பாடு, மொழியைப் பேசியவர்கள் வாழ்விடம் ஆகிய பிறவற்றை அறிவதற்கான அரிய
தரவாகவும் அமைந்துள்ளது. மூன்று காண்டம், முப்பது காதைகள் கொண்ட சிலப்பதிகாரத்தில், கி.பி. 1863 இல் பி.ஏ. பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மங்கல வாழ்த்துப் பாடல், மனையறம் படுத்த காதை, அரங்கேற்று காதை, அந்தி மாலைச் சிறப்புச் செய்காதை, இந்திரவிழா வெடுத்த காதை, கடலாடுகாதை, கானல்வரி என ஏழு காதைகள் மட்டும் தேர்விற்குரிய பாடமாகச் சென்னைப்
பல்கலைக்கழகம் வைத்திருந்தது. எனவே ஏட்டுப்பிரதியில் இருந்து சிலப்பதி காரத்தை தேவை கருதி முதலாவது புகார்கண்டத்தை அச்சுக்கு கொண்டு வரும் முயற்சி நடைபெற்றது.



தி.ஈ.ஸ்ரீநிவாஸ்ராகவாச்சாரியார்

சென்னை பிரஸிடென்சி கல்லூரித் தமிழ்ப் பண்டிதர் தி.ஈ.ஸ்ரீநிவாஸ் ராகவாச் சாரியார் மேற்சொன்ன ஏழு காதைகளையும் 1872 இல் அச்சிட்டு வெளிக்
கொணர்ந்தார். இச்சிலப்பதிகாரத்திற்கு அரும்பதவுரை,அடியார்க்கு நல்லாருரை பழையவுரை உள்ளது. 1876 இல் மேற்சொன்ன ஏழு காதைகளோடு, வேனிற் காதை,கணாத்திறம் உரைத்த காதை, நாடுகாண் காதை என புகார்காண்டம் முழுவதையும் தி.ஈ.ஸ்ரீநிவாஸ்ராகவாச்சாரியார் அச்சிட்டார்.

தி.க.சுப்பராயசெட்டியார்

1880 இல் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மாணவரான தி.க.சுப் பராயசெட்டியாரும் புகார் காண்டத்தை வெளியிட்டார்.

உ.வே.சா

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் 1892 இல் சிலப்பதிகாரம் முழுவதையும் அச்சில் தந்தார். 1920,1927 என்று தொடர்ந்து பல பதிப்புகளை அது கண்டது.

ந.மு. வேங்கடசாமி நாட்டார்

பாகனேரி வெ.பெரி. பழ.மு. காசிவிசுவநாத செட்டியார் உதவியுடன் 1940 இல் ந.மு. வேங்கடசாமி நாட்டார் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதி சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகம் மூலம் வெளியிட்டார்.

ஒளவை சு.துரைசாமிபிள்ளை

1940 இல் ஒளவை சு.துரைசாமிபிள்ளையும் உரை குறிப்புகளோடு சிலப்பதி காரத்தை வெளியிட்டார்.கரந்தைத் தமிழ்ச்சங்கம் 1943 இல் புகார் காண்டத்தை
மட்டும் அச்சில் தந்தது.

ஆர்.கே.சண்முகம் செட்டியார்

1946 இல் சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தை சந்தி பிரித்து ஆர்.கே.சண்முகம் செட்டியார் உரையுடன் வெளியிட்டார். நூலாவதற்கு முன் வசந்தம் எனும்
இதழில் அது தொடராக வந்தது.

மர் ரே எஸ்.ராஜம்

1955-1960 களில் இலக்கியங்களை சந்தி பிரித்து வெளியிட்ட மர் ரே எஸ்.ராஜம் நிறுவனத்தார் 1957 இல் சிலப்பதிகாரத்தை வெளியிட்டனர்.

புலியூர் கேசிகன்

1958 இல் புலியூர்கேசிகன் சிலப்பதிகாரத்திற்கு உரை தந்தார்.

கே.இராசகோபாலாச்சாரியார்

1960 இல் கானல் வரியை மட்டும் கே.இராசகோபாலாச்சாரியார் வெளியிட்டார்.

தி.ந.ச.வரதன்

தி லிட்டில் பிளவர் கம்பெனி மூலம் 1964 இல் தி.ந.ச.வரதன் சிலப்பதிகாரத்தை வெளியிட்டார்.

பொ.வே.சோமசுந்தரனார்

1968 இல் புகார்க்காண்டம், 1969 இல் மதுரைகாண்டம்,வஞ்சிக்காண்டம் உரை தந்த பொ.வே.சோமசுந்தரனார்.1973 இல் முழுவதுமாக ஒரே நூலாக வெளியிட்டார்.

மு.சுப்பிரமணியர் - ஜெ.ஸ்ரீசந்திரன் -ஞா.மாணிக்கவாசகம்

1973 இல் மு.சுப்பிரமணியனும் சிலப்பதிகாரத்திற்கு உரைதந்தார். 1985 இல் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒரு பதிப்பு தந்தது. 1988 இல் ஜெ.ஸ்ரீசந்திரனும் உரை தந்துள்ளார்.1995 இல் ஞா.மாணிக்கவாசகம் உரை தந்தார்.

சிலம்பொலிசெல்லப்பன்

1996 இல் சிலப்பதிகாரத்திற்கு உரை தந்தார் சிலம்பொலிசெல்லப்பன்.

ச.வே.சுப்பிரமணியன்

1998 இல் ச.வே.சுப்பிரமணியன் சிலப்பதிகாரத்திற்கு உரை தந்தார்.

ப.சரவணன்

2006 இல் ப.சரவணன் சிலப்பதிகாரத்திற்கு உரை தந்தார்.

வ.சுப.மாணிக்கம்

சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டையும் இணைத்து இரட்டைக் காப்பியங் களாக 1958 இல் தந்தவர் வ.சுப.மாணிக்கம். சிலப்பதிகாரத்தில் காணப்படும்

மதுவிலக்குச் செய்திகள் இதோ:

பாவடிகள் தோறும் தேன் வடியப் பாடிய இளங்கோ அடிகள் காப்பியத்தின் இறுதி யில் வரந்தரு காதையில் அறிவுரை தந்துள்ளார்.

வரந்தருகாதை

“அறமனை காமின், அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்”

கள்ளும், களவும், காமமும் பொய்யும், என்னும் இவற்றை ஒழிக்கும் முறை யால் ஒழித்திடுங்கள் (ஜெ.ஸ்ரீ.சந்திரன் உரை பக்-509). 

கள், களவு, காமம், பொய், ஆகியவற்றை ஒழிக்கும் வகையறிந்து ஒழியுங்கள் (சிலம்பொலி செல்லப்பன் உரை பக்-465). 

கள்-மதுவை திருட்டை காம இச்சையைப் பொய்யை, விட்டொழியுங்கள் (ஞா.
மாணிக்கவாசகன் உரை பக்-529)

கள் உண்ணலையும், களவாடும் எண்ணத்தையும்,காமத்தையும், பொய்யினை யும் உறுதியுடன் கைவிட்டு விடுங்கள் (புலியூர் கேசிகன் உரை, பக்-439). 

“கள்ளும்,களவும், காமமும் பொய்யும் என்றும் இவற்றை ஒழிக்கும் உபாயத் தால் ஒழித்திடுமின்” (நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமிநாட்டார் உரை, பக்-647). 

கள் உண்ணுதலை நீக்குதல் வேண்டும் என்று இளங்கோ கூறுவதை மு.சுப்பிர மணியன் தனது சிலம்புச்செல்வம் நூலில் பக்-57 இல் சுட்டிக்காட்டுகிறார்.

“கள்ளுண்ணுதலையும், களவு கொள்ளுதலையும் பிறமகளிரைக் காமுறுதலை யும், பொய் மொழிதலையும்,வறுமொழியாளரொடு கூடியிருத்தலையும் எவ் வகை உபாயத்திலேனும் ஒழித்து விடுமின் (புலவர் பொ.வே.சோமசுந்தரனார் உரை, பக்-202).

 “கள் உண்ணல், களவு செய்தல், காமுறுதல், பொய் கூறல்,அறிவிலிகளோடு சேர்ந்திருத்தல் ஆகியவற்றை ஒழிக்கும் வகையறிந்து ஒழியுங்கள்”(ப.சரவணன் உரை, பக்-522). 

இறுதியில் இளங்கோ அடிகள் கூறிய அறிவுரை பற்றியே சொல்லுகிறாயே, நூலில் வேறுஎங்கேனும் கள்ளின் தீமை குறித்த செய்தி உள்ளதா எனும் கேள்வி எழும், இதோ அதற்கான விடை...

கா.அப்பாதுரை: மறுமலர்ச்சி நூல் சிலப்பதிகாரம்

பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார் தந்துள்ள நூல் ‘சிலம்பு வழங்கும் செல்வம்’. அதில் மறுமலர்ச்சிக்குரிய தலைசிறந்த நூல் சிலப்பதிகாரம் என்றும், சிலப்பதிகாரம் சங்க நூல்கள் ஆகிய இரு திற நூல்கள் மட்டுமே மறுமலர்ச்சி யைத் தூண்டியவை என்பார் கா.அப்பாதுரை  (பக் 16-17)

பொ.அழகுகிருஷ்ணன்

‘சிலப்பதிகாரம் காட்டும் பண்பாடும் சமுதாய வரலாறும்’என்ற ஆய்வேட்டை பொ.அழகுகிருஷ்ணன் தந்துள்ளார்.(1988) அதில் பக் 104 இல் அவர் தரும் செய்தி இதோ:

“சிலப்பதிகாரத்தில் வணிகக் குலத்தினன் ஆன கோவலன் கள் அருந்துவதாக எங்கும் கூறப்படவில்லை” காவியத் தலைவனை மது அருந்தாதவனாகவே இளங்கோ காட்டுகிறார்.

கண்ணகியின் காற்சிலம்பு

கண்ணகியின் காற்சிலம்பை விற்க வணிக வீதிக்குச் சென்றான் கோவலன். கோவலனை ஓரிடத்தில் இருக்க வைத்துவிட்டு, மன்னனிடம் சென்று பாண்டி மாதேவியின் சிலம்பைக் களவாடிய கள்வன் அகப்பட்டு விட்டான் என்று சொல்லப்படுகிறது. கள்வன் கையில் சிலம்பு இருந்தால் கள்வனைக் கொன்று சிலம்பைக் கொணர்க எனக்குறினான் மன்னன். காவலர்கள் கோவலனைப் பார்த்தனர். அவனது முகத்தை நோக்கிய அவர்கள் அவன் கள்வன் அல்லன் என்பதை உணர்ந்தனர்.

இவன் திருடியிருக்க மாட்டான். பார்த்தால் நல்லவனாகத் தோன்றுகிறதே என்று காவலர்கள் பேசிக் கொண்டிருக்கையில் நடந்தது என்ன? இளங்கோ
அடிகள் கூறுகிறார்...

“கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள்வான் எறிந்தனன்! விலங்கு ஊடு அறுத்தது”

அவ்வேளையில் படிப்பு அறிவில்லாத, கொலை அஞ்சாத கள்ளுண்ணும் காவ லன் தன் கையிலுள்ள கூர்மையான வாளால் கோவலன் உடலில் நடுவே வெட்டினான்.(ச.வே.சுப்பிரமணியன் உரை, பக்-274)

பாவேந்தர் பாரதிதாசன்

கண்ணகி புரட்சிக்காப்பியம் தந்த பாவேந்தர் பாரதிதாசன், பகுத்துணராப்பாவி ஒரு காவலன் தான் பட்டென்று கோவலனை வெட்டிச் சாய்த்தான் என்பார்.
(பக்-89)

வித்வான் ஐயம் பெருமாள்கோனார்

கல்வியறிவில்லாமையால் கொலைக்கு அஞ்சாத குடியன் ஒருவன் தன் கையி லுள்ள வெள்ளிய வாளாலே கோவலனை வெட்டினான் என்று உரை தருவார்
வித்வான் ஐயம் பெருமாள் கோனார் (பக் 59)

வி.ஆர்.ராமச்சந்திர தீட்சிதர்

20.4.1939 இல் சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டவர் வி.ஆர்.ராமச் சந்திர தீட்சிதர்; அவர் தனது நூலில் பக்கம் 227 இல் எழுதுகிறார்.

At this, an unlettered person, in a fit of drunkenness, hurled his well-polished sword from his hand(upon kovalan), cutting him across..


ஏ.எஸ்.பஞ்சாபகேச அய்யர்


‘கோவலனும் கண்ணகியும்’ என்ற ஆங்கில நூலில் ஏ.எஸ்.பஞ்சாபகேச அய்யர்; பக்கம் 64 இல் தரும் செய்தி:

At that, a young and impetuous guard said to him,‘you are right’, and hurled his sword at kovalan’s
neck. (impetuons - வெறித்த - மூர்க்கத்தனமான)

Alain Danielou

1965 இல் சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த Alain Danielou தனது நூலில் பக்கம் 111 இல் தரும் செய்தி இதோ:

There upon one of these drunkards hurled his sword at kovalan


ஆர்.எஸ்.பிள்ளை

தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆங்கில சிலப்பதிகாரம் 1989 பக்கம் 69 இல் Then an ignorant drunkard swung his sword என்று குறிப்பிட்டுள்ளார்.

கா.மீனாட்சிசுந்தரம்

‘சிலம்பில் துணை பாத்திரங்கள்’ நூலினை 1980 இல் தந்தவர் கா.மீனாட்சி சுந்தரம். அதில் பக்கம் 80 இல்,கல்லாக் களிமகன் எனும் தலைப்பில், கல்லாத வனும், கள் குடியனும் ஆன ஒருவன் கோவலனைக் கொலை செய்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

தி.மாணிக்கவாசகம்

‘செந்தமிழ்ப்பாவை’ எனும் நூலினை 1959 இல் தந்த தி.மாணிக்கவாசகம் (மாசி) தனது நூலில் பக்கம் 269 இல்,‘அப்பொழுது கல்வி அறிவில்லாத குடிவெறியுற்ற
காவலன் ஒருவன் பொறுமை இழந்து கைவாளால் கோவலனை வெட்டினான்’ என்பார்.

ச.செயப்பிரகாசம்

1977 இல், ‘சிலப்பதிகாரத்தை மூலமும் குறிப்புரையுடன் வெளியிட்ட ச.செயப் பிரகாசம் தனது நூலில் பக்கம் 260 இல்,கல்லாத கள்ளருந்திய களிமகன் ஒரு வன் வாளை வீசசிக் கோவலன் வீழ்ந்தான் என்பார். சிலப்பதிகாரக்கதை முழு தும் நடைபெற குடிகாரன் ஒருவன் செய்த தவறினால், கண்ணகி, சினம் கொண்டு எழுந்ததும்;மதுரை அழிந்ததும்; பிந்தைய நிகழ்வுகள். குடியின் கொடு மை யை, கேவலத்தை இதைவிட வேறு எப்படி எடுத்துக் காட்டிட முடியும்?




தமிழர் தலைவர் வைகோ

தமிழர் தலைவர் வைகோ அவர்கள் பிப்ரவரி 18 இல் அண்ணல் நபி (ஸல்) அவர் களின் அருமைத்தோழர் தமீம் உல் அன்சாரி (ரவி) அடக்கமாகியுள்ள கோவளத் தில் இருந்து இரண்டாவது கட்ட முழு மது ஒழிப்பு பிரச்சார நடைப்பயணத்தை மேற்கொண்டார்.

அவர்களது இலட்சியப்பயணம் வெல்லும். இன்பத் தமிழகம் மது இல்லா மாநில மாக மாறும்.

நன்றிகள் 

கட்டுரையாளர் :- செ.திவான்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment