Saturday, April 27, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 19

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே


தமிழீழம் சென்று நலமுடன் திரும்பிய
வைகோவுக்கு நாடாளுமன்றத்தில் வரவேற்பு

தமிழீழத்திற்கு தலைவர் வைகோ மேற்கொண்ட இரகசியப் பயணம் தமிழக அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

1989 பிப்ரவரி 6 ம் நாள் நள்ளிரவு கடந்து கோடியக்கரை கடல் பகுதியிலிருந்து விடுதலைப்புலிகளின் படகில் தலைவர் வைகோ ஈழம் நோக்கிப் புறப்பட்டார். போகும் பாதையெல்லாம் கடற்கரையோரத்திலிருந்து இந்திய இராணுவத்தின் தாக்குதல். தாக்குதல் தொடுத்த போதும் விடுதலைப் புலிகள் போரிட்டவாறே வைகோ அவர்களை வவுனியா காட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தனர்.



1989 பிப்ரவரி 15 ஆம் நாள் வவுனியா காட்டில், ஒரு இலட்சம் இந்திய ராணுவத் துருப்புகளை எதிர்த்து போர் புரிந்து கொண்டிருக்கும், உலகின் ஈடுஇணையற்ற
கொரில்லாப் படையின் தலைவர் விடுதலைப்புலிகளின் தலைவர் ‘தம்பி தம்பி’ என்று தமிழீழ மக்கள் பாசமும் நேசமும் குழைத்து அன்பொழுக அழைக் கும் மாவீரர் பிரபாகரன் அவர்களை தலைவர் வைகோ சந்தித்தார்.

இந்திய-சிங்கள இராணுவம் முற்றுகை இட்டுள்ளது.துப்பாக்கி குண்டுகள் முழக்கம் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. மாவீரர் பிரபாகரன் -தலைவர் வைகோ சந்திப்பு அப்போதும் நடந்துகொண்டுதான் இருந்தது.

தலைவர் வைகோ-தம்பி பிரபாகரன் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பில், தமிழீழ மக்களைச் சூழ்ந்துள்ள துயரம்; இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத் திய எதிர்மறை விளைவுகள்,இந்திய அமைதிப்படையின் வருகை, இந்திய
இராணுவத்தின் அத்துமீறல், தமிழீழ மக்களுக்கு இந்திய இராணுவம் ஏற்படுத் தியுள்ள நெருக்கடிகள், அவற்றை எதிர்கொள்ள புலிகள் இந்திய இராணுவத் தை எதிர்த்து போர்புரிய வேண்டிய நிலை ஏன் உருவானது? புலிகளின்
எதிர்காலத் திட்டம்? தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த படிநிலை வளர்ச்சி என்ன?ஆகியவற்றைப் பற்றியெல்லாம் விரிவாகப் பேசப்பட்டன.

“பிரபாகரன் தன் கழுத்தில் கட்டியிருந்த இரண்டு சயனைட் குப்பிகளில் ஒன்றை - கழற்றி - பொட்டு அம்மானை ஒரு கயிறு கொண்டுவரச்சொல்லி, அதில் இணைத்து வைகோ கழுத்தில் அணிவித்தார்.” இந்தப் பேறு உலகில் வேறு எவருக்கும் கிடைத்திருக்காது. “தம்பி”யின் கழுத்தில் இருந்த குப்பியைத் தன் கழுத்தில் தொங்கவிடும் வாய்ப்பு எவருக்கும் இல்லை.

தம்பி பிரபாகரனுடன் உண்டு, உறங்கி அங்கேயே புலிகள் தலைவர் பாசறை யிலேயே சில நாட்கள் தங்கி இருந்து தலைவர் வைகோ, புலிகளின் அணி வகுப்பு களைப் பார்வையிட்டார். அடர்ந்த காடுகளுக்குள்ளே பிரபாகரன் ஏற் பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் புலிகள் இயக்கத்தின் தளபதிகளும் வீரர்களும் பங்கேற்ற பாசறை நிகழ்ச்சியில்,தலைவர் வைகோ வீர உரை ஆற்றினார். எந்தக்குரல் இனஎதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக தமிழ் நாட்டின் மேடை தோறும் கம்பீரமாக ஒலித்ததோ, எந்தக் குரல் இந்திய நாடாளுமன்றத்தில் தமிழினத்திற்காக பிரதமரையே எதிர்த்து ஒலித்ததோ, எந்தக் குரல் சர்வதேச அரங்கில் தமிழினத்தின் குரலாக ஒலித்ததோ,அந்தக் குரல் வைகோவின் குரல் தங்கள் பாசறையில் முழங்குவதைக் கேட்டு புலிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழ் ஈழத்தின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து, இந்திய அமைதிப்படையின் தாக்குதலால் நிலைகுலைந்திருந்த மக்களை நேரில் சந்தித்த தலைவர் வைகோ, உண்மை நிலவரங்களை அறிந்துகொண்டார்.

பிரியாவிடை கொடுத்த பிரபாகரன்

தான் சந்தித்த ஈழத் தமிழ் மக்களிடம் “எதற்கும் கவலைப்படாதீர்கள். உங்களுக் காக குரல் கொடுத்திட ஆதரவாக செயலாற்றிட தொப்புள்கொடி உறவுகளாக தமிழர்கள் நாங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறோம். தமிழக மக்கள் என்றென்றும் உங்கள் பக்கத்தில்தான் இருப்போம்” என்று தலைவர் வைகோ நம்பிக்கை தந்தார்.

தமிழீழத்தில் யுத்தம் நடந்துகொண்டிருந்த வேளையில் 24 நாட்கள் அங்கே பயணம் செய்த தலைவர் வைகோ, தாயகம் திரும்பப் புறப்பட்டபோது, மாவீரர் பிரபாகரன் தலைவரை கட்டித் தழுவி பிரியாவிடை கொடுத்து அனுப்பினார்.

இந்த இடத்தில் புலிகளின் தளபதிகளுக்கு வைகோவை பத்திரமாக தமிழகத் தின் கடற்கரையில் கொண்டுசேர்க்க உத்திரவிட்டார் பிரபாகரன். தனது மனைவி குழந்தைகளை அனுப்பி வைத்தபோதுகூட அவர்கள் உயிரைப்பற்றி பெரியதாக கவலைப்படாத தம்பி பிரபாகரன்,தலைவர் வைகோவை வழி அனுப்பும்போது, “அவரை பாதுகாப்புடன் உயிரோடு, எந்த சேதாரமும் இல்லா மல் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும்” என்று கவலைப்பட்டு உத்தரவு களைப்பிறப்பித்தார். முக்கியத் தளபதிகள்,பால்ராஜ், பானு, ஜேம்ஸ் உட்பட
பலரையும் 57 புலிகளையும் உடன் அனுப்பினார்.

நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் மாறாத நினைவுகளைச் சுமந்துகொண்டு
தலைவர் வைகோ, தமிழீழ மண்ணில் இருந்து தாயகம் புறப்பட்டார். எப்படி
புலிகள் அவரை, படகில் வவுனியாவுக்கு அழைத்துச் சென்றனரோ அதைப்
போலவே புலிகள்தான் தலைவர் வைகோவை படகில் தமிழ்நாட்டிற்கு
அழைத்து வந்தனர். பல இடங்களில் இந்திய இராணுவம் சுற்றி வளைத்து
தாக்குதல் நடத்தியபோதும், புலிகள் வீரச்சமர் புரிந்து வைகோவைக் காப்பாற் றினர். தலைவர் வைகோவை அழைத்து வந்த புலிப்படைப் பிரிவில் இருந்த தளபதி லெப்டிணன்ட் சரத் உயிர்ப்பலியானார். பதின்மூன்று விடுதலைப்புலி கள், இந்திய இராணுவத்தின் தாக்குதலில் படுகாயமுற்றனர். தம்பி பிரபாகரன்
ஆணைப்படி தங்கள் உயிரைக்கொடுத்து தலைவர் வைகோவை விடுதலைப்
புலிகள் பத்திரமாக தமிழ்நாட்டுக் கரையில் சேர்த்துவிட்டனர்.

கடுஞ்சொல் வீசிய கருணாநிதி

1989 பிப்ரவரி 6 இல் தனது வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கிய தலைவர்
வைகோ, மார்ச்சு 4 ஆம் நாள் தமிழ்நாட்டில் காலடி வைத்தார்.அதற்குள் தமிழக செய்தித் தாள்கள்,தாங்கள் விரும்பியவாறு யூகங்களை வெளியிட்டன. பத்தி ரிக்கைகள் எவ்வளவு உண்மை விளம்பிகள் என்பதற்கு எடுத்துக்காட்டு, தலை வர் வைகோ மார்ச்சு 4 ஆம் நாள் தமிழகம் வந்து சேர்ந்த அதே நாளில், வைகோ
கைது செய்யப்பட்டு, இந்திய இராணுவ முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ளார்.
அவரை மீட்டுக் கொண்டுவர மத்திய அரசுடன், மாநில அரசு பேசிக்கொண்டு
இருக்கின்றது என்று எட்டுக்கால செய்தி, காலை, மாலை ஏடுகளில் வெளியி டப் பட்டிருந்தது. இதனைக் கண்ட வைகோ மெளனமாக புன்னகைத்தார்.

தனது ஈழப்பயணம் குறித்து தி.மு.க.தலைவரும் தமிழக முதல்வருமான
கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு தலைவர் வைகோ பிப்ரவரி 5 ஆம் நாள்
எழுதிய மடல், கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் அவரிடம் பிப்ரவரி 7 ஆம் நாள் சேர்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால்,கருணாநிதி வைகோவின் கடிதத் தை 23 நாட்கள் வரை வெளியிடாமலே வைத்திருந்துவிட்டு, மார்ச்சு 3 ஆம்
தேதிதான் வெளியிட்டார்.

பிப்ரவரி 24 ஆம் தேதிதான் தன் கைக்கு வைகோ எழுதிய மடல் கிடைத்ததாக வும், பச்சைப் பொய்யையும் அவிழ்த்துவிட்டார். மார்ச்சு 1ஆம் தேதி புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பேபி சுப்பிரமணியத்தை அழைத்து கலைஞர் கேட்ட போது, வைகோ இருந்த இடத்தில் இந்திய இராணுவம் வளைத்துத் தாக்கிய தால் புலிகள் அவரைப் பாதுகாப்பாக காடுகளுக்கு கொண்டுசென்றுள்ளார்கள் என்றார் அவர்.

ஆனால், 1989 மார்ச்சு 3 ஆம் நாள் செய்தி ஏடு ஒன்றில் இந்திய இராணுவத்தின்
தாக்குதலில் குண்டு அடிபட்டு, பலத்த காயமுற்ற நிலையில் வைகோ கொல் லப்பட்டுவிட்டார் என்று ஒரு செய்தி மிகுந்த பரபரப்புடன் வெளியானது. இத னைத் தொடர்ந்து தான் கருணாநிதி, வைகோ எழுதிய கடிதத்தை வெளியிட்டு விட்டார். 23 நாட்களுக்குப்பின்னர் வைகோவின் மடலை பத்திரிக்கைகளுக்கு தந்தார் கருணாநிதி.

மார்ச்சு 4 ஆம் நாள் நள்ளிரவில் தாயகம் திரும்பிய தலைவர் வைகோ, 1989
மார்ச்ச 5 ம் நாள் காலை 6 மணிக்கு கலைஞர் கருணாநிதி அவர்களை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார்.வைகோ உயிரோடு திரும்பப் போவதில்லை என்று எண்ணிக்கொண்டிருந்த கருணாநிதி வைகோ காலையிலேயே தனது
இல்லத்திற்கு வந்ததைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லை. முக்கால் மணி நேரம் கழித்துதான் வைகோவை அழைத்துப் பேசினார்.

“வைகோ கொல்லப்பட்டுவிட்டார்” என்று செய்திகள் நாளேடுகளில் வந்த பிறகு, அவர் எழுதிய கடிதத்தை வெளியிட்ட கருணாநிதி,“வை.கோபால்சாமி மீதுள்ள தணியாத பாசத்தின் காரணமாக, அவர் பத்திரமாக திரும்பி வர வேண் டும் என்று தவித்துக்கொண்டு இருக்கிறேன்” என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறியவர், வைகோ உயிரோடு திரும்பி தனது இல்லத்துக்கு வந்தவரைப் பார்த்து முகம் மலர்ந்து ஒரு வார்த்தைகூட ஆறுதலாகப் பேசவில்லை. நலன் விசாரிக்கவில்லை.மாறாக, எப்படித் திரும்பினீர்கள்? டில்லியிடம் தொடர்பு கொண்டு இந்திய இராணுவத்திடமிருந்து மீட்டு அழைத்துவர நான்தான் ஏற் பாடு செய்தேன்” என்று சிடுசிடுத்தார்.ஏனெனில் அன்றைய நாளேடுகள் வைகோ இந்திய இராணுவத்தின் பிடியில் இருப்பதாக செய்தி வெளியிட்டு
இருந்தன.

“இந்திய இராணுவம் சுற்றி வளைத்தது.மயிரிழையில் உயிர் தப்பி வந்தேன்.
புலிகள்தான் என்னைக் காத்து அழைத்துவந்தனர். என்னைக் காப்பாற்ற
நடந்த சண்டையில் சரத் என்ற விடுதலைப்புலி கொல்லப்பட்டார்.இந்திய இராணுவம் என்னை கைது செய்யவும் இல்லை. அவர்களோடு நான் தமிழகம் திரும்பவும் இல்லை.புலிகள்தான் அவர்கள் படகில் என்னை அழைத்துவந்து கரைசேர்த்தனர்” என்று வைகோ மறுமொழி கூறியதை கருணாநிதி ரசிக்க வில்லை.

“ஈழப்பிரச்சினையில் பற்று இருக்கலாம்.வெறி கூடாது” இதுதான் வைகோ வுக்கு கருணாநிதி கூறிய ஆறுதல் வார்த்தைகள். உபதேசம் செய்யும் நேரமா அது? பாசம் பொங்கி வழிவதாக வெளிஉலகிற்குக் கூறி நாடகமாடிய கருணா நிதி, வைகோ மீது வெறுப்பைத்தான் அப்போது கொட்டினார்.

“எனது பயணம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்பார்களே? நான் என்ன சொல்வது?” இவ்வாறு கேட்ட வைகோவிடம் “என்ன நடந்ததோ உண்மை நில வரத்தை செய்தியாளர்களிடம் கூறுங்கள்” என்று தெரிவித்தார் கருணாநிதி.

ஈழப்பயணம், வைகோ பேட்டி

1989 மார்ச்சு 5 ஆம் நாள் காலையிலேயே அண்ணா அறிவாலயத்தில் நூற்றுக்
கணக்கான பத்திரிக்கை யாளர்கள் சூழ்ந்துவிட்டனர், ஈழம் சென்று  வந்த வைகோ வின் நேர்காணலுக்கு. அநேகமாக இந்தியாவின் அனைத்து பத்திரி கைகளும், செய்தி நிறுவனங்களும் செய்தியாளர்களை அனுப்பி இருந்தன.
தலைவர் வைகோவின் பேட்டியில், அவர் இலங்கைக்கு எப்போது சென்றார்?
வவுனியா காட்டில் பிரபாகரனை சந்தித்தது, ஈழத்தில் உள்ள தற்போதைய
நிலையில் மக்களின் கருத்து ஆகியவற்றை விரிவாக நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்தினார்.

தலைவர் வைகோவின் பேட்டியை 1989 மார்ச்சு 6 ஆம் நாள் அனைத்து நாளே டுகளும் எட்டுகால தலைப்புச் செய்தி ஆக்கி முக்கியத்துவம் தந்து வெளி யிட்டன.

“ஈழத்தில் இந்திய இராணுவம் முற்றுகை முறியடிப்பு; கோபால்சாமி உயிர் தப்பியது எப்படி? பிரபாகரன் சொன்னது என்ன? சென்னை திரும்பியதும் பர பரப்புப் பேட்டி” என்று தினகரன் நாளேடு (06.3.1989) வைகோ பேட்டியை முழு மையாக வெளியிட்டிருந்தது.

“Gopalasamy back after meeting Prabhakaran” என்று தலைப்பிட்டு ‘இந்து’ ஆங்கில நாளே டு (06.3.1989) முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது.பத்திரிக்கையாளர்களிடம் வைகோ அளித்த பேட்டி வருமாறு:

“இலங்கை சென்று தம்பி பிரபாகரனை சந்திக்க விரும்பினேன். நானாக அந்த
முடிவை எடுத்து நானாகவே புறப்பட்டுச் சென்றேன். தமிழீழம் போவது பற்றி
யாருடனும் நான் கலந்துபேசவில்லை. என்னுடைய வீட்டுக்குக்கூட அது
தெரியாது. பிப்ரவரி 7 ஆம் தேதி அளவில் இலங்கை சென்றுவிட்டேன். அங்கு
தம்பி பிரபாகரனை சந்தித்தேன்.அவருடன் சில நாட்கள் இருந்தேன்.ஈழத்தில் மொத்தம் 24 நாட்கள் இருந்தேன். நான் அங்கு இருந்தபோது,இரண்டு தடவை இந்திய இராணுவம் முற்றுகையிட்டு என்னைப் பிடிக்க முயன்றது. விடு தலைப் புலிகள் அந்த முற்றுகையை உடைத்து என்னை பாதுகாப்பான வேறு இடத்துக்கு அழைத்துச்சென்றார்கள்.

கடந்த ஞாயிறு அன்று காலை 7.30 மணி அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட
இந்தியத் துருப்புகள் மீண்டும் நாங்கள் இருந்த இடத்தைச் சுற்றி வளைத்து
தாக்குதல் நடத்தின. ஆனால், புலிகள் தீரத்தோடு போராடி இந்திய இராணுவத் தின் முற்றுகையை மீண்டும் உடைத்து என்னை வேறு ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள்.

புலிகள் உயிர்த் தியாகம்

இந்தத் தாக்குதலில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 24 வயதான லெப்டினன்ட் சரத் உயிரிழந்தார். சிவா என்ற இன்னொரு புலி படுகாயம் அடைந்தார்.
மேலும் 13 புலிகளுக்கு காயம் ஏற்பட்டது.அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நாங்கள் இருந்த காட்டுப்பகுதியில் இரண்டு நாட்கள் இரவும் பகலும்தொடர்ந்து பீரங்கி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. முதலில் நடந்த தாக்குதலில் புலிகளுக்கு எவ்வித சேதமும் இல்லை. மிக சாமர்த்தியமாக புலிகள் என்னை அழைத்துச்சென்றனர்.

பிரபாகரன் சந்திப்பு

நான் சென்ற நான்கு நாட்கள் கழித்து, ஒரு முகாமுக்கு என்னை புலிகள்அழைத் துச் சென்றனர். அதன்பின்னர், பல முகாம்களுக்கு அழைத்துச் சென்று பிப்ரவரி 15 ஆம் தேதி அளவில் பிரபாகரனைச் சந்தித்தேன். அவருடன் சில நாட்கள் இருந்தேன். நேற்று இரவு (மார்ச்சு-4) சென்னை திரும்பினேன்.நான் எப்படிப் போனேன்/ எப்படி வந்தேன் என்பதை வெளியிட விரும்பவில்லை.

அங்கு விடுதலைப்புலிகளுக்கு பொது மக்களின் பரிபூரண ஆதரவு இருப்பதை
நான் நேரிலேயே பார்த்தேன். சூரிய ஒளிகூட புகமுடியாத காட்டுக்குள் இருக் கும் புலிகளுக்கு ஆங்காங்கு உள்ள மக்கள் உணவு தயாரித்து அனுப்பு கிறார் கள். 

பொதுவாக தமிழீழத்தில் உள்ள மக்கள் தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந் திருப்பதனால், போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பு ஏற்படும் என்று கொஞ்சம் நிம் மதி அடைந்து இருக்கிறார்கள்.

தமிழீழத்தில் உள்ள மக்களின் எண்ணம் என்ன? புலிகளின் நிலை என்ன? என் பதை அறிந்து பேச்சுவார்த்தைக்கு ஒரு வழி ஏற்படுமா? என்பதைத் தெரிந்து கொள்ள நான் அங்கு சென்றேன்.ஆனால், அவர்களுடைய எண்ணம்  வேறு விதமாக இருக்கிறது. இந்திய இராணுவம் முழு மூச்சுடன் எங்களை அழித்து வருகிறது என்று புலிகள் சொல்கிறார்கள்.திலீபன் மரணத்துக்குப் பிறகு, ஏற் பட்ட ஒப்பந்தத்துக்கு மாறாக இந்திய இராணுவம் நடந்துகொள்கிறது என்று சொல்கிறார்கள்.

புலிகளுக்கு இந்திய இராணுவம் இழைத்த துரோகம்

12 புலிகள் சயனைடு சாப்பிட்டு இறந்ததற்கு இந்திய இராணுவத்தின் துரோகம் தான் காரணம் என்று தெரிவிக்கிறார்கள். அந்த 12 பேரின் உடலைப் பார்த்த பிறகு தான் பிரபாகரன் ரிவால்வரை எடுத்து இடுப்பில் சொருகி இருக்கிறார். அவரைத் தொடர்ந்து மற்ற புலிகள் துப்பாக்கி தூக்கிச் சென்றனர்.

குமரப்பாவின் தாயாரை நான் பார்த்தேன்.10 வருட போராட்டத்தில் சாகாதவர் கள் பொது மன்னிப்பு அளிக்கப்பட்ட நிலையில் சாக வேண்டிய நிலை ஏற்பட்ட தை அவர்களால், ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் போராடியே தங்களது கோரிக்கையைச் சந்திப்பது என்ற முடிவுக்கு வந்து இருக்கின்றனர்.

அதோடு ஒரு போலி அரசு உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பதும், அவர்களு டைய கருத்து. இந்த நிலையில் இந்திய அரசு அரசியல் ரீதியாக தங்களுக்கு உதவ வேண்டுமே அல்லாமல், இராணுவத்தை வைத்துக்கொண்டு தலையிடு வதை அவர்கள் விரும்பவில்லை.

தமிழீழமே இலட்சியம் இந்திய இராணுவம் வெளியேறி விட்டால், சிங்கள இராணுவத்தை நாங்களே சந்தித்துக்கொள்வோம் என்றார்கள். ‘தமிழீழம்’ ஒன்றுதான் இலட்சியம். அதே நேரத்தில் இந்தியாவுடன் நட்புடன், நேசத்துடன்
இருக்க அவர்கள் விரும்புகிறார்கள்.

கிட்டுவைப் பார்த்தேன். இன்னும் 140 புலிகள் இந்திய இராணுவக் காவலில்
இருப்பதாக அறிந்தேன். என்னை வரவேற்ற ஹரி, கமல் என்ற இரண்டு தள பதிகளும் போரில் இறந்துவிட்டனர். 

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஏராளமான இளைஞர்களும், பெண்களும்
புதிதாக சேர்ந்து இருக்கிறார்கள். மக்கள் ஆதரவு அவர்களுக்கு இருக்கிறது.
பிரபாகரனை சந்தித்தபோது, கலைஞருக்கு தெரியாமல் நான் வந்திருக்கிறேன் என்றேன். பிரபாகரன், கலைஞருக்கு எந்தவிதக் கடிதமும் தரவில்லை.

நேற்று இரவு நான் சென்னை திரும்பியதும், இன்று அதிகாலையில் கலைஞர் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். ஆர்வம், வெறியாக மாறக் 
கூடாது என்றார். நான் பார்த்ததை,கேட்டதை தலைவரிடம் தெரிவித்து இருக்கிறேன்”.

தலைவர் வைகோ அண்ணா அறிவாலயத்தில் இந்தப் பேட்டியைத் தரும் போது, டி.ஆர்.பாலு எம்.பி., உடன் இருந்தார்.

வைகோவின் ஈழப்பயணமும், அவர் திரும்பி வந்ததும் கொடுத்த பேட்டியும்
ஒரு மாத காலமாக தமிழக நாளேடுகளில் செய்தியாக வந்தவண்ணம் இருந் தன.இந்து நாளேடு வைகோ திரும்பிய செய்தியை பேட்டியுடன் முதல் பக்கத் தில் வெளியிட்டபோது, (The Hindu, March 6,1989)

“The DMK MP, Mr. V.Gopalasamy,who returned from an adventarous and strenuous four week visit to the North Eastern province of Sri Lanka last night”

“தி.மு.க. எம்.பி., திரு வை.கோபால்சாமி,தனது துணிகர கடற்பயணத்தின் மூலம் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்த்து விட்டு நேற்று இரவு திரும்பினார்” என்று செய்தி தொடங்கி இருந்தது.

ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன், குமுதம், கல்கி மற்றும் The Week, Frontline போன்ற ஆங்கில வார இதழ்களும் வைகோவின் ஈழப்பயணத்தை விரிவான செய்தியாக வெளியிட்டன.

தி.மு.கழகத்தின் இலட்சோபலட்சம் தொண்டர்கள் நெஞ்சத்தில் வைகோ, துணிச்சலும், தியாக உணர்ச்சியும் நிறைந்த போர்ப்படைத் தலைவராக உயர்ந் து நின்றார். பொறுப்பாரா கருணாநிதி?

வெறுப்பை உமிழ்ந்த கருணாநிதி

ஈழம் சென்று வந்து தன்னைச் சந்தித்த போது, வைகோவிடம் பத்திரிகை களுக்கு சொல்லுங்கள் என்று கூறிய கருணாநிதி வைகோவுக்கு இப்படி தமிழ் மக்களிடம் ஒரு பெயர் ஏற்பட்டு விட்டதே என்று எரிச்சலையும், வெறுப்பை யும் ஒருங்கே பத்திரிக்கையாளர்கள் பேட்டியில் கொட்டித் தீர்த்தார்.

சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில்,1989 மார்ச்சு 6 ஆம் தேதி செய்தி யாளர்களைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி கூறியவற்றைப் பார்த்தால், கரு ணாநிதியின் சுயரூபம் நமக்கு புலனாகும் (தினகரன், 07.3.1989)

கேள்வி: வை.கோபால்சாமி எம்.பி.,உங்களை சந்தித்தாரா?

கருணாநிதி: பார்த்தார், அவருடைய செயல் கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல். பொதுவாக விசா வாங்கிக்கொண்டு இலங்கைக்கு சென்று வரலாம். சென்னை திருச்சியிலிருந்து இலங்கைக்கு விமானம் சென்று கொண்டு இருக் கிறது. சில நாட்களுக்கு முன்புகூட இலங்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள என்னுடைய மகள் செல்வியும், மாறன் மனைவி மல்லிகாவும் சென்று வந்தார்கள். விசா இல்லாமல்கூட தாம்பரத்தில் உள்ள ஐ.பி.கே.எப். விமானப்படை தளத்திலிருந்து ‘முரசொலி’ நிருபர் உள்பட பல நிருபர்கள் யாழ்ப்பாணம் சென்று இருக்கிறார்கள். எனவே, விசா கேட்டு அது மறுக்கப் படாத ஒரு சூழ்நிலையில் கோபால்சாமி இப்படி ஒரு பயணம் மேற்கொண்டது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் ஆகும்.

இந்தத் தேவையற்ற அட்வஞ்சரிசம் தி.மு.கழகத்துக்கு ஏற்புடையது அல்ல.
இது விஷயத்தில் அவருடைய சொந்தப் பாதுகாப்புக்காகத்தான் மிகவும் கவ லைப்பட்டுக் கொண்டிருந்தேன்.

அவர் கண்டு-கேட்டு அறிந்தவை நமக்கு ஒன்றும் புதிதல்ல. புதிய செய்தி எதை யும் அவர் கொண்டுவரவும் இல்லை. சுருக்கமாக ‘‘Highly irresponsible act ’ என்று தான் சொல்லவேண்டும்.கோபால்சாமியின் செயல் விளம்பரத்துக்கு பயன் பட்டதே தவிர, விவகாரம் தீரவில்லை. அதற்கு மாறாக கொஞ்சம் விபரதமாக வும் ஆகி இருக்கிறது.

கேள்வி: என்ன விபரீதம் ஏற்பட்டு இருக்கிறது?

கருணாநிதி: தாக்குதல் அதிகமாகி இருக்கிறது. இரு தரப்பாரும் செத்துக் கொண்டிருக்கின்றனர். இது வேதனை தரக்கூடியது.

கேள்வி: கோபால்சாமி மீது நடவடிக்கை எடுப்பீர்களா?

கருணாநிதி: கட்சியின் நிர்வாகக் குழுவோ, செயற்குழுவோ கூடும்போது
இதுகுறித்து விவாதிக்கப்படும்.

ஈழத்தில் நம் சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாகக் கண்டு நெஞ்சு பொறுக் காமல் நேரில் சென்று அந்த மக்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்றுஆறுதல் கூறி வந்த தலைவர் வைகோவை, உலகத் தமிழினமே உச்சிமுகர்ந்து கொண் டாடிக்கொண்டிருந்த நேரத்தில் கருணாநிதி வைகோவின் வீரப்பயணத்தைக்
கொச்சைப்படுத்தியதற்கு வரலாற்றில் என்றென்றும் மன்னிப்பே கிடையாது.

1956-57 களில் பேரறிஞர் அண்ணா மும்முனைப் போராட்டத்தை அறிவித்த போது, தி.மு.கழகத்தின் ஐம்பெரும் தலைவர்களான பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன்,ஈ.வெ.கி.சம்பத், கே.ஏ.மதியழகன்,என்.வி.நடராசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதாகாமல் இருந்த கருணாநிதி, கல்லக் குடியில் இரயில் மறியல் செய்ய வேண்டும் என்று அறிஞர் அண்ணா அறிவிப் புக்கு மாறாக தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தார். கருணாநிதியின் இந்த நடவடிக்கையை விளம்பரத்திற்காக செய்தார் என்றா அண்ணாகூறினார்?
தாயுள்ளத்தோடு கருணாநிதியின் போராட்டத்தை ஏற்றுக்கொண்டு தனக்கே உரிய பெருந்தன்மையோடு “தண்டவாளத்தில் தலை வைத்துப்படு என்றாலும், அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்றாலும் இரண்டையும் ஒன்றாகக் கருது பவன் என் தம்பி கருணாநிதி” என்றல்லவா பாராட்டினார்.தி.மு.கழகத்தின் வளர்ச்சிக்கு கல்லக்குடியில் கருணாநிதி நடத்திய போராட்டத்தை உரமாக்கிக் கொண்டார் அறிஞர் அண்ணா!

ஆனால், கருணாநிதி தி.மு.க. தோழர்களின் இதயம் நொறுங்கிப் போகின்ற அளவுக்கு, ஈழம் சென்றுவந்த வைகோ அவர்களை குத்திக் கிழித்து காயப் படுத்தினார். ஆயிரக்கணக்கான திமுக தோழர்கள் கருணாநிதியை வசைபாடி வைகோவுக்கு மடல்கள் அனுப்பினர். தி.மு.கழகத்தின் போர்வாள் என்று அழைக்கப்பட்ட வைகோ மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார் என்றால், இதுதான் கருணாநிதியின் இயல்பு. இன்னமும் அந்த இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருப்பதால்தான், 2009 ஆம் ஆண்டில் இலட்சக்கணக் கானத் தமிழர்களை ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்டபோதும்,வாளா இருந் தார்.நாடகங்கள் பலவற்றை அரங்கேற்றினார்.

ஆனால், நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வைகோ வின் காயங்களுக்கு மருந்திட்டு, அவரை வாழ்த்தினர்.


நாடாளுமன்றத்தில் வைகோவுக்கு நெகிழ்ச்சியான வரவேற்பு

ஈழப்பயணம் சென்று திரும்பிய தலைவர் வைகோ, 1989 மார்ச்சு 30 ஆம் நாள்
நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார்.

இதே நாடாளுமன்றத்தில் கனல் கக்கும் விழிகளுடன் காங்கிரஸ் கட்சியின் மீதும், பிரதமர் மீதும் எத்தனை தடவை வைகோ கணைகளை வீசி இருப்பார்.
கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டிருப்பார். ஆனால், வைகோ யுத்த களத்திலிருந்து உயிரோடு மீண்டு, நாடாளுமன்றத்தில் நுழைந்த போது, காங் கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் மேசைகளைத்தட்டி
ஆரவாரம் செய்து வரவேற்றார்கள்.அன்றைக்கு வைகோ அவர்கள் பேச எழுந்த போது, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருமே மேசை யைத் தட்டி பலத்த வரவேற்பு அளித்தனர்.

மாநிலங்களவைத் துணைத்தலைவர் திருமதி நஜிமா ஹப்துல்லா: கோபால்சாமி எந்த ஆபத்தும் இன்றி பத்திரமாக வந்து சேர்ந்து திரும்பவும் சபைக்கு வந்ததில் அனைவரும் இன்று சந்தோஷப்படுகிறோம். இந்த சபை அவரை வரவேற்கிறது. ஏனெனில் அவருக்கு அபாயம் ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என்றுதான் அனைவரும் கவலைப்பட்டோம்.

பாராளுமன்றத்துறை அமைச்சர் எம்.எம்.ஜேக்கப்: கோபால்சாமி திரும்பி
வந்ததில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம். முழு அங்க அவயங்களோடு எந்த சேதமும் இல்லாமல் அவர் வந்ததே போதும். போய் வந்த விபரம் பற்றி அறிக்கை தரப்போகிறாரா?

ஏ.ஜி.குல்கர்னி(இ.காங்கிரஸ்):கோபால்சாமிக்கு மூளைச்சலவை (Brain Wash) செய்யப்பட்டு வந்திருக்கிறாரா என அறிய விரும்புகிறேன்.

வைகோ: எனக்கு யாரும் மூளைச்சலவை செய்ய முடியாது. தேவைப்பட்டால்
மற்றவர்களுக்கு நான் மூளைச்சலவை செய்யக்கூடியவன். (சபையில் பலத்த
சிரிப்பு)

வலிவுல்லா(இ.காங்கிரஸ்): கடல் தண்ணீர் மூலம் பயணம் வந்ததால் மிக வும் சுத்தமாக வந்து இருக்கிறார்.

பன்ஜல், அனுமந்தப்பா, புதுவை நாராயணசாமி(இ.காங்கிரஸ்): எங்கள்
கவலை எல்லாம் கோபால்சாமி உயிருடன் திரும்ப வேண்டும் என்பதுதான். அவர் திரும்பி வந்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.

குருபாதசாமி(ஜனதாதளம்): கோபால்சாமி எந்த ஆபத்தும இன்றி சுகமாக வந்து சேர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கவலை தீர்ந்தது.

பி.உபேந்திரா(தெலுங்குதேசம்): இனி சபை நடவடிக்கைகளில் உற்சாகமாகப்
பணியாற்றக்கூடிய கோபால்சாமியைத் தொடர்ந்து பார்க்கலாம்.

எல்.கே.அத்வானி(பி.ஜே.பி): சபையில் கோபால்சாமி இல்லாதது பெரிய குறை யாக இருந்தது. கொரில்லா தந்திரத்தோடு போய்வந்துவிட்டார்.

சுக்குமோல்சென்(மார்க்சிஸ்ட்): கோபால்சாமி மீண்டும் திரும்பி வந்ததில் நாங்கள் உற்சாகம் அடைகிறோம்.

நன்றி காணிக்கை

வைகோ : எனது நலனிலும்,பாதுகாப்பிலும் அக்கறைகொண்டு,நான் சபையில் இல்லாத காலத்தில் கவலை தெரிவித்த ஆளும்கட்சி-எதிர்க்கட்சி உறுப்பினர் களுக்கு என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இன்று என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்ற அவைத்தலைவர் அவர்களுக்கும்,ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றியைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்றைய பத்திரிக்கை செய்திகள் 





- தொடரும்


நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment