Saturday, April 27, 2013

தென்பெண்ணையாற்று நீரை தடுக்கும் கர்நாடகா!



சங்கொலி தலையங்கம் 

தமிழக அரசின் இடையறாத சட்டப் போராட்டத்தின் காரணமாக காவிரி நடுவர்
மன்றத்தின் இறுதித் தீர்ப்பை 2013 பிப்ரவரி 19 ம் தேதி அரசிதழில் மத்திய அரசு
வெளியிட்டது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பை முழுமையாக நடைமுறைப் படுத் திட காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Management Board) மற்றும் காவிரி
ஒழுங்குமுறைக் குழு (Cauvery Water Regulation Committee ) ஆகிய அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் சுட்டிக் காட் டப்பட்டது. நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு இரண்டு மாதங் கள் கடந்த பின்னரும், இன்னும் இவ்வமைப்புகளை ஏற்படுத்த மத்திய அரசு
நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர்
ஜெயலலிதா அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

ஆனாலும், மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்காததால், மார்ச் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப் பட்டது. அதில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை மே மாதம் முதல் வாரத்துக்குள் அமைக்க மத்திய அரசுக்கு உத்திரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் மிகவும் வற்புறுத்திய பிறகே, மத்திய அரசு,அரசிதழ் அறிவிப்பை வெளி யிட்டது.ஆனால், அதன்பிறகு, இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.

மேட்டூர் அணையில் மார்ச் 13 இல் 7 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பில் இருந்தது.
தற்போது மேலும் குறைந்துவிட்டது. ஜூன் 12 இல் மேட்டூர் அணை திறக்கப் பட்டு, காவிரி பாசன பகுதிகளுக்கு காவிரி நீர் கிடைக்க வேண்டும் எனில், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தக்கூடிய சுயேச்சை யான தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைத்தால்தான் சாத்தியமாகும். ஆனால், கர்நாடக அரசியல் தலைவர்கள் பிரதமரைச் சந்தித்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், கர்நாடக மாநில சட்டமன்றத்துக்கு நடைபெறும் தேர்தலை கருத்தில் கொண்டும், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் அடாவடித்தனமான அணுகுமுறையால் தமிழகத் தை வறட்சி மாநிலம் ஆக்கிய கர்நாடக மாநிலம், தற்போது தென்பெண்ணை யாற்று தண்ணீரையும் தடுத்து, வட மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் அழித்துவிடத் துடிக்கிறது.

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் உற் பத்தியாகும் தக்ஷணபினாகினி நதி, தொட்டபெலாபுரா, ஒசகோட்டா என பல வழிகளைக் கடந்து பெங்களூர் புறநகர் பகுதியான வர்த்தூர் ஏரியை வந்தடை கிறது. பின்னர் இங்கிருந்து ஒசூர் அருகே கொடியாளம் என்ற இடத்தில் தென் பெண்ணையாறு என்ற பெயரில் தமிழக எல்லைக்குள் நுழைகிறது. தமிழகத் தில் ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் இந்த நீர், பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி அணை, தர்மபுரி வழியாகச் சென்று திருவண்ணா மலை மாவட்டம் சாத்தனூர் அணையைச் சென்றடைகிறது. தொடர்ந்து விழுப் புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக சுமார் 391 கிலோ மீட்டர் தூரம் பயணித் து, கடலூர் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து
மாவட்டங்களில் சுமார் 4 இலட்சம் ஏக்கருக்கு மேல் தென்பெண்ணையாற்று நீரை நம்பித்தான் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இதேபோல், இப் பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமும் இதுதான்.குறிப்பாக ஒசூரில் உள்ள பெரும் பாலான தொழிற்சாலைகள் இந்த நீராதாரத்தைக் கொண்டுதான் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு தென்பெண்ணை ஆற்று நீர் வரும் வழியில் அதை உறிஞ்சி விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை கர்நாடக அரசு வகுத்துள்ளது. இதற்காக கர்நாடகப் பகுதியில் தத்த னூர் என்ற இடத்தில் தென்பெண்ணை ஆற்றோரமாக இராட்சத குழாய்களைப் பதித்து நீர் உறிஞ்சப்படுகிறது.

முதல் கட்டமாக இந்தத் திட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் 24 மணி நேர மும் தண்ணீர் உறிஞ்சி முகளூரில் தரைமட்ட கீழ் தொட்டியில் தண்ணீரைத் தேக்கி அங்கிருந்து மண்ணுக்கு அடியில் குழாய் பதித்து, 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. மாலூர் தொகுதியில் 175 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் லக்கூர் ஏரியில் குழாய் மூலம் வரும் நீர் சேகரிக்கப்படுகிறது. பின்னர்,அங்கிருந்து மேலும் 130 ஏரிகளுக்கு தென் பெண்ணையாற்று நீரைக் கொண்டுசென்று விவசாயிகள் பயன்பெறும் வகை யில் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தை செயற்படுத்தி வருகிறது கர்நாடக அரசு.

இதற்காக ஆற்றோரம் தத்தனூரில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து 16 கி.மீ தூரமுள்ள லக்கூர் ஏரிக்கு நீர் கொண்டு செல்வதற்காக 250 எம்.எம். அளவுள்ள இராட்சத குழாய்கள் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளது. மாலூர் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணா ரெட்டி தலைமை யில் மார்ச் 11 ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நாள் தோறும் தென்பெண்ணை ஆற்றிலிருந்து நீரை குழாய் மூலம் உறிஞ்சி லக்கூர் ஏரியில் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

தென்பெண்ணை ஆற்று நீரை கர்நாடகா உறிஞ்சத் தொடங்கிவிட்டதால், தமி ழகத்திற்கு தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து குறைந்து வருகிறது. தென் பெண்ணையாறு மூலம் ஒசூர், கெலவரப்பள்ளி அணைக்கு, மழை இல்லாத
காலத்தில், சராசரியாக, 300 கன அடியும், மழைக்காலத்தில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கன அடியும் தண்ணீர் வரத்து இருக்கும். கர்நாடகா தென்பெண்ணை ஆற்றில் நீர் உறிஞ்சுவதால், நீர் வரத்து 120 கன அடியாகக் குறைந்துவிட்டது.

இதனால், இந்த ஆற்றை நம்பி உள்ள 5 மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி,
அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவர். வற்றாத ஜீவநதியாக இருக்கும் தென்பெண்ணை ஆற்றை நம்பி உள்ள விவசாய நிலங்கள் பயிரிடமுடியாத நிலைக்கு தள்ளப்படும். தென்பெண்ணை ஆற்றில் தடுப்பு அணைகள் கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது மாற்று வழிகளில் தண்ணீரை தடுக்கும் முயற்சியில் கர்நாடக மாநி லம் இறங்கி உள்ளது.

பெண்ணையாற்று நீரை கர்நாடகம் குறுக்கு வழியில் திருடுவதால், ஒசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் கடும் குடிநீர்ப் பிரச்சினை ஏற்படும். நெல், கரும்பு, வாழை, ராகி உள்ளிட்ட பயிர்கள் அழிந்துவிடும். ஒசூர் மற்றும் சுற்றுப்பகுதி களில் இருந்து முட்டை கோஸ், காலி பிளவர், கேரட், குடை மிளகாய், உள் ளிட்ட காய்கறிகள், ரோஜா மலர்கள் அதிகளவில் வெளிமாநிலங்களுக்கு விற் பனைக்குச் செல்கிறது. இதுவும் பாதிக்கப்பட்டு பொருளாதார அளவில் விவசா யிகள் பெரும் இடர்ப்பாடுகளைச் சந்திக்க நேரிடும்.

தென்பெண்ணையாற்றில் நீர் உறிஞ்சும் திட்டத்தை மார்ச் 11 ஆம் தேதி ஆளும்
பா.ஜ.க., மாலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண ரெட்டி, தொடங்கி வைத்து பேசுகையில், “கர்நாடக அரசு இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

காவிரி பிரச்சினையில் காவிரி ஒப்பந்தத்தை மீறி அணைகள் கட்டி, காவிரி நீரை ஏகபோகமாக அனுபவித்துவரும் கர்நாடகா, அதே முறையை தென் பெண்ணை ஆற்றிலும் கடைபிடிக்கிறது.

1802 ஆம் ஆண்டு, சென்னை மாகாண அரசு மற்றும் மைசூர் அரசுகளுக்கிடை யே ஒரு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. இரு மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளின் நீரை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பது பற்றிய உடன் பாடே அது என்பதும்,அந்த உடன்பாட்டில் இரண்டாவது பிரிவில் பின் வருமாறு கூறப்பட்டுள்ளது என்பதும் முக்கியமானவையாகும்.

சென்னை மாகாண அரசின் ஒப்புதல் இல்லாமல், மைசூர் அரசு எத்தகைய புதிய அணைகளையோ நீர்த் தேக்கங்களையோ அமைக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.எந்தெந்த ஆறுகளில் இவ்வாறு செய்யக்கூடாது என்பதற் கான பட்டியலில் 15 முக்கிய ஆறுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் தென் பெண்ணையாறும் இடம் பெற்றிருக்கிறது. பாலாறும் இடம் பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை கர்நாடகம் மதிக்கத் தயாராக இல்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பையே உதாசீனப்படுத்தும் கர்நாடக மாநிலம் விடுதலைக்கு முந்தைய ஒப்பந்தங்களை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என்பதை காவிரிப் பிரச்சினையில் அறிய முடிந்தது.தற்போது பெண்ணையாற்றிலும் கர்நாடகம் தனது அடாவடி வேலையில் இறங்கி உள்ளது.

காவிரி, முல்லைப் பெரியாறு, வைப்பாறு, அமராவதி, பவானி, நெய்யாறு இடதுகரை வாய்க்கால் போன்ற நதிநீர் சிக்கல்களில் பெண்ணையாறும் இணைந்துவிட்டது.இன்னொரு போராட்டக் களம் நமக்குக் காத்திருக்கிறது.

No comments:

Post a Comment